Thursday, December 13, 2007

வன்னிய சமுதாயத்தைத் தண்ணியைக் கொடுத்து கெடுக்கிறதா அரசு?!



தெருவில் இரண்டுபேர் சண்டை போட்டுக்கொள்ளும்போது சில உண்மைகள் வெளிப்படும். அது அவர்கள் யார்யார் எங்கெங்கு போனார்கள் என்பது உட்பட. அதற்கு நிகரான சண்டைதான் ராமதாஸ்- ஆர்க்காடு வீராசாமி இடையே நடைபெற்று வருகிறது. இவர்களின் சண்டையிலும் பல்வேறு உண்மைகள் வெளிப்பட்டிருக்கிறது.

தெருவில் இருவர் போடுகிற சண்டையில் வெளிப்படுகிற உண்மை தனிப்பட்ட முறையில் அவர்களுடைய அந்தரங்கத்தைப் பற்றியதாக இருக்கும். இதனால் நமக்கு ஒரு பாதிப்பும் இருக்காது. ஆனால் ராமதாஸ்- ஆர்க்காட்டார் சண்டையில் வெளிப்பட்டிருக்கிற உண்மை மக்களை ஏமாற்றுகிற உண்மை. மக்கள் சொத்துகளை கொள்ளையடிக்கிற உண்மை.
தொடர்ந்து அறிக்கை வாயிலாகப் போட்டு வருகிற சண்டையில் கடந்த 13-ந்தேதி வெளியிட்ட ஆர்க்காடு வீராசாமி அறிக்கையைக் கீழே படியுங்கள்:

ராமதாஸ் கல்லூரி நடத்துவதைப் பற்றியோ, அதில் வன்னிய மாணவர்களுக்கு உணவுக் கட்டணம்கூட வசூலிக்காமல் தரமான கல்வியைக் கொடுத்துக் கொண்டிருப்பதிலோ எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

உண்மையில் மிகவும் பின்தங்கிய மக்களாகிய வன்னிய மக்களுக்காவது இலவசக் கல்வியும் இலவச உணவும் கொடுத்து வருவதற்கு மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய அளவுக்கு, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்தக் கல்லூரி அமைந்துள்ள இடம் 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் கரம்பாகத் கிடந்த களர் நிலம் என்று ராமதாஸ் கூறியிருப்பது தவறான தகவல்.

ஒலக்கூர் கீழப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதையும், அந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 1991-ம் ஆண்டு இந்த இடங்கள் கல்லூரி கட்டப்படுவதற்காக வாங்கப்படும் வரை யார்யார் அங்கே என்னென்ன பயிர் செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களும் உள்ளன.
வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய நிலங்களா என்பது குறித்து 5 ஆண்டுகளுக்கு முந்தைய அடங்கல் விவரங்களைப் பார்த்தால் தெரியும்.
அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையும், அந்தப் பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம்.

இந்த ஆதாரங்களில் இருந்து, பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளைநிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுதான் அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது.

விளைநிலங்களில்தான் கல்லூரி கட்டி வருகிறோம் என்பதற்கான ஆதாரங்களைத் தரமுடியுமா எனக் கேட்டார் ராமதாஸ். நான் இப்போது ஆதாரங்களைத் தந்துள்ளேன். தேவைப்பட்டால் இன்னமும் ஏராளமான ஆதாரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன்.
முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை ராமதாஸிடமே விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு ஆர்க்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நியாயமான, நீதியான கேள்விகளையே கேட்பதுபோல எப்போதும் அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கும் ராமதாஸ் இதற்கு நேரடியாகத்தானே பதில் அளிக்க வேண்டும். அவர் பதில் அளிக்கிறார் பாருங்கள்:

புஞ்சை நிலம் என்றும், சவுக்கு பயிரிடப்பட்ட நிலம் என்றும் ஆதாரங்களைத் தேடிப்பிடித்து ஆர்க்காடு வீராசாமி கூறி வருகிறார். எதைஎதை அடித்து, எப்படியெல்லாம் திருத்தி ஆதாரத்தை வெளியிடப் போகிறார்கள் என்பது அவருக்குத் தெரிவதற்கு முன்பே எனக்கு விவரம் சொல்லப்பட்டது.

வேறு பயிர் எதுவும் விளையாது என்ற நிலையில் உள்ள நிலத்தில்தான் சவுக்குப் பயிரிடுவர். இந்நிலையில் அதுவும் கருகிப் போய்விட்டது என்ற நிலையில், நிலத்தின் சொந்தக்காரர்கள் விருப்பப்பட்டு விற்பனை செய்த இடத்தில்தான் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

- என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒரு திருமண விழாவில் பேசியிருக்கும் விவரத்தைக் கேளுங்கள்:

நமது சமுதாயம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. ஆனால் இது பொறுக்காமல், நமது சமுதாயம் முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஒரு சமுதாயம் கெட்டுப்போக வேண்டும் என்றால் அச்சமுதாயத்தினருக்கு கல்வியைக் கொடுக்காமல் சாராயத்தை மட்டும் கொடுத்தால் போதும். இதைத்தான் இந்த அரசு தற்போது செய்து வருகிறது. கல்வியைத் தனியாரிடம் கொடுத்துவிட்ட இந்த அரசு, குடியை மட்டும் தான் ஏற்று நடத்தி வருகிறது.

இதை உணர்ந்துதான் நமது சமுதாய மக்கள் முன்னேற திண்டிவனம் அருகில் கோனேரிகுப்பம் கிராமத்தில் கல்விக்கோயில் கட்டிவருகிறோம்.
ஆனால் இது பொறுக்காமல் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிóட்டுள்ள அறிக்கையின் மூலம் அவரது வயிறு எவ்வளவு எரிகிறது என்பது தெரிகிறது.

இவ்வாறு பேசியுள்ளார்.

அடேங்கப்பா.... எப்படிதான் இப்படியெல்லாம் பேசமுடிகிறதோ...

சாதி கட்சியெல்லாம் இல்லை. இது பாட்டாளிகளின் கட்சி என்று சமீபமாக கூறி வந்தவர்கள், ஏன் திரும்பவும் சாதி என்கிற முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்?

ஆக்கிரமித்தது உண்மையா? இல்லையா? என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் துணைக்குச் சாதியை அழைத்துக் கொள்வது ஏன்?

வன்னிய சமுதாயத்தைத் தண்ணியைக் கொடுத்து கெடுக்கப் பார்க்கிறது இந்த அரசு என்று குற்றம்சாட்டுகிறீர்களே.... அது இத்தனை நாள்களாக உங்களுக்குத் தெரியவில்லையா?

தண்ணியைக் கொடுத்து ஒரு சமுதாயத்தை மட்டும் எப்படிக் கெடுக்க முடியும்? மற்ற சமுதாயத்தினர் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா?

ஆக்கிரமித்தது உண்மையானால் ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்காமல் ஆர்க்காடு வீராசாமி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?

5 comments:

சரவணகுமரன் said...

இந்த குற்றச்சாட்டு மூலம் தான் சார்ந்த சமுதாயத்தை தான் ராமதாஸ் கேவலப்படுத்தி உள்ளார்.

TBCD said...

நீல சாயம் கலைஞ்சுப் போச்சு..டும் டும் டும்.
ராசா வேசம் கலைஞ்சுப் போச்சு..டும் டும் டும்..

pls remove word verification

புரட்சி தமிழன் said...

எப்படியோ ரெண்டுபேரும் உண்மைய ஒத்துக்கிட்டா சரி. இத மக்கள் எலக்சன்வரைக்கும் ஞாபகம் வைக்கனுமே

அரியாங்குப்பத்தார் said...

பிரச்சனைகளுக்கு தீர்வுகானாமல் இருப்பதும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதும் நியாயமான கோரிக்கையைக் கூட அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும், சுயநலத்திற்காக கொள்கை பேசுவதும் அதே சுயநலத்திறக்காக கொள்கையை குழிதோண்டி புதைப்பதும் தி.மு.க. விற்கும் அதில் உள்ளத தமிழின எதிரிகளுக்கும் கைவந்த கலை.

கடலூர் அனல் மின்நிலையம் தொடர்பான கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்காமல் பிரச்சனையை திசைதிருப்பி சாதி பிரச்சனையாக்கியது ஆற்காடு வீராசாமி நாயுடுதான்.

அனல் நிலையத்திற்காகவும், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக நிலங்களை இழப்பது பெருமளவில் வன்னியர்கள்தான். வன்னியர்கள் இந்தமன்னிற்கு சொந்தக்காரர்கள் மட்டுமல்ல அவர்கள் தமிழர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

இன்றைக்கு தமிழர்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயர்கள் தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், சேட்டு மார்வாடிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுத் தருவது தமிழின விரோதச் செயலே. சூடு சொரணை உள்ள இனமானத் தமிழன் இவைகளை நிச்சயம் எதிர்ப்பான்.

த.அரவிந்தன் said...

சாதிக்காக சிந்திக்காமல் சாதிப்பதற்காக சிந்திப்போம்