Thursday, December 6, 2007

நல்லவர் நரேந்திரமோடி சொல்றார் கேட்டுங்கப்பா...!




குஜராத்தில் இந்து தீவிரவாதம் தலைதூக்கி உள்ளதாக மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கோத்ராவில் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலடியாக நரேந்திரமோடி பேசுகிறபோது குஜராத்தில் உள்ள இந்துக்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி காங்கிரஸ் இழிவுப்படுத்துகிறது என்று பேசியுள்ளார்.



யாரும் யாரையும் அவர்களுடைய செய்கையை மீறி இழிவுப்படுத்திவிட முடியாது. செய்கையைக் கொண்டு மனிதனை எடை போடுகிற விஷயத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என்கிற பாகுபாடுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.



திக்விஜய் சிங் இந்துக்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. இந்து தீவிரவாதம்தான் அதிகரித்து இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதுவும் குஜராத் மாநிலத்தைக் குறிப்பிட்டு, நரேந்திரமோடியைக் குறிப்பிட்டுதான் பேசியிருக்கிறார். இது திக்விஜய்சிங் சொல்லித்தான் உலகிற்குத் தெரியவேண்டும் என்கிற அவசியமும் இல்லை.



நரேந்திரமோடியின் கொடுஞ்செயலைக் கண்டு வெறுத்து அமெரிக்காவே அவருக்கு விசா தர மறுக்கிறளவு புகழ் வாய்ந்தவர் அவர். அந்தளவுக்குப் புகழ் வாய்ந்தவருக்கு மேலும் புகழ்(இகழ்) சேர்க்கும் வகையில் தெகல்ஹா ஆங்கில வார இதழ் கோத்ரா ரயில் விபத்தையொட்டி முஸ்லீம் சமுதாய மக்களை எப்படி நரேந்திரமோடியின் ஆதரவில் கொன்று குவித்தனர் என்பதைச் சாட்சியங்களுடன் உலகிற்குத் தெளிவுப்படுத்தி இருக்கிறது.



சங்பரிவார் அமைப்புகளுக்கு மூன்று நாட்கள் அனுமதி கொடுத்து, அந்த மூன்று நாட்களுக்குள் முஸ்லீம்கள் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ கொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நரேந்திரமோடிதான் அனுமதித்தார் என்பதை ஏதோ போகிறபோக்கில் தெகல்ஹா ஏடு சொல்லவில்லை.
முஸ்லீம் சமுதாயத்தினரைக் கொன்று குவித்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களின் சாட்சியங்களுடன் தெகல்ஹா வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ரகசிய காமிரா உதவியுடன் சாட்சியங்களின் பேட்டியை எடுத்து ஒளிபரப்பியிருக்கிறார்கள்.


பஜரங் என்கிற இந்து வெறியர் சொல்கிறார்:


கோத்ரா ரயில் சம்பவத்துக்குப் பழிவாங்கும் வெறியுடன் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரை இருபதுக்கும் மேற்பட்டோர் குழுக்களாகச் சென்று கொன்று குவித்தோம். கண்டந்துண்டமாக அவர்களை வெட்டி வீசினோம். நெருப்பைக் கண்டு பயந்தவர்களை நெருப்பில் தள்ளிக் கொன்றோம். இச்சம்பவத்திற்குப் பிறகு என்னைச் சுட்டுத் தள்ளுவதற்கு போலீஸ் உத்தரவு பிறப்பித்திருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனக்கு நரேத்திரமோடிதான் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றினார். எனக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை. எனக்கு இருக்கும் வெறிக்கு இன்னும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைக் கொன்று குவித்தாலும் ஆத்திரம் தீராது என்று கூறியிருக்கிறார். இதைப்போல ரிச்சார்ட் என்பவர் முஸ்லீம் சமுதாயத்துப் பெண்களைப் பழத்தோடு ஒப்பிட்டு அவர்களைச் சிதைத்ததைச் சொல்லியிருக்கிறார். "உங்கள் முன்னால் பழமிருந்தால் சாப்பிடுவீர்களா? மாட்டீர்களா? எப்படியும் சாகப் போகிற பெண்கள் எப்படிச் செத்தால் என்ன? எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலாத்காரம் செய்தது உண்மைதான். நான் என் மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே சொல்கிறேன். நான் கூட ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்து அவளைக் கொன்று ஊறுகாய்க்கு வெட்டுவதுபோல கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுவிட்டேன்'' என்று சொல்லியிருக்கிறார். இதுபோன்று பல சாட்சிகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது தெகல்ஹா.


இப்படித் திட்டுமிட்டு செயல்பட முதல்வரே துணை போகிறார் என்றால், அவர் இந்து வெறியர் அல்லாமல் வேறு என்ன அர்த்தம்?



தெகல்ஹா வெளிப்படுத்தி இருக்கிற இந்த விஷயத்தை எந்தக் கட்சியுமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. லாலுபிரசாத் யாதவ் மட்டும் கண்டனக் குரல்கொடுத்துள்ளதுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுப்பார் யார்?


இதில் வருகிற தேர்தலிலும் நரேந்திரமோடியே வெற்றிபெறுவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி வந்தால், எத்தனை மனித வெற்றிடங்களை ஏற்படுத்தப் போகிறாரோ?

No comments: