Sunday, December 9, 2007

மெகந்திக்கு மெடல்!


மூன்று பெண்களின் கையில் மெஹந்தி பூசி விட்டதற்காக ஒரு பெண்ணுக்கு மெடல் கிடைக்குமா?ஏன் கிடைக்காது?

பயன்படுத்த வேண்டியதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

வண்ணத்துணிகளைக் கொண்டு வண்ணமுதலைகளை வடித்து குரோக்கடைல் நிறுவனத்திற்குப் புகழ் தேடிக் கொடுத்தவர் எஸ்.பிரியா. இப்போது மெஹந்தி யுக்தியை விளம்பரத்திற்குப் பயன்படுத்தி சர்வதேச கேன்ஸ் விருதே பெற்றிருக்கிறார்! சென்னை எழும்பூர் கிரே வேர்ல்டு வைட் விளம்பர நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருக்கும் இவரிடம் பேசினோம்:

"கற்பனையில் திளைத்துக் கிடப்பதுதான் எனக்குச் சிறுவயதிலிருந்தே இருக்கும் பெரிய பொழுதுபோக்கு. இதன் வடிகாலாக எத்திராஜ் கல்லூரியில் பி.பி.எம் படிக்கிற காலத்தில் கதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பெரியளவில் பத்திரிகைகளில் எல்லாம் என் படைப்புகள் வெளியாகவில்லை. பாத் ரூம் சிங்கர் போல நானே எழுதி நானே படிக்கக் கூடிய ரகம்.
பி.பி.எம். முடித்த பிறகு அலுவலக ரீதியான வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்குத் துளிக்கூட இல்லை. கற்பனைச் சிறகை விரித்து வானவீதியில் பறக்கவே விரும்பினேன். இதற்கு நான் தேர்ந்தெடுத்த துறைதான் விளம்பரத் துறை. கிட்டத்தட்ட எட்டு வருஷமாக இந்தத் துறையில் இருக்கிறேன்.

தற்போது "கிரே வேர்ல்ட்வைட்' விளம்பர நிறுவனத்தின் சென்னை கிளைக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் இந்திய சுற்றுலா கழகத்திற்காக நான் உருவாக்கிய விளம்பரத்திற்குத்தான் சர்வதேச கேன்ஸ் லையன்ஸ் அட்வர்டைசிங் ஃபெஸ்டிவெலில் இரண்டாம் பரிசாக வெள்ளி விருது கிடைத்தது. சினிமா துறைக்கு எப்படி ஆஸ்கர் விருது பெரிதோ; கேன்ஸ் திரைப்பட விருது பெரிதோ; அதைப்போல விளம்பரத்துறைக்கு கேன்ஸ் லையன்ஸ் அட்வர்டைசிங் ஃபெஸ்டிவல் விருதும் மிகப்பெரிய விருது. உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களைப் போட்டிக்கு அனுப்பி வைப்பார்கள். பிரிண்டாகவும் இருக்கலாம். இதில் சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும். எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் பல விளம்பரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் என்னுடையதுதான் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதுமணத் தம்பதிகள் ஹனிமூனுக்கு ஆஸ்திரேலியா, ஹவாய், வெனீஸ் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு இந்திய சுற்றுலா கழகம் என்கிற நிறுவனம் சலுகை அளிக்கிறது என்பதுதான் விளம்பர கான்செப்ட்.

இந்த விளம்பரத்தை நம்முடைய பாரம்பரியத்தை ஒட்டி வடிவமைத்தேன். மெஹந்தி இல்லாமல் எந்தத் திருமணமும் நடைபெறுவதில்லை. எல்லாப் பெண்களின் விருப்பமும் மெஹந்திதான். இதைக் கருத்தில் கொண்டு மூன்று பெண்ணின் கைகளில் மூன்று நாடுகளையும் அதன் பூகோள ரீதியான வடிவில் வரைந்தேன். இதில் அந்தந்த நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். தங்கும் இடங்கள் என எல்லாம் வருகிற வகையில் வடிவமைத்தேன். இதற்குத்தான் விருது கொடுத்திருக்கிறார்கள்.
இந்த விருது கிடைத்ததில் இருக்கக்கூடிய ஒரே வருத்தம் நேரில் சென்று நான் வாங்க முடியாததுதான். விருது கிடைத்த தகவல் எனக்குத் தாமதமாகத்தான் கிடைத்தது. இதனால்தான் என்னால் நேராகச் செல்ல முடியவில்லை. ஆனால் இந்தக் குறையை என்னுடைய சக ஊழியர்கள் போக்கிவிட்டார்கள். உருமி மேளம் கொட்ட, புலி வேஷம் கட்டியவர்களின் அதிரடி ஆட்டத்துடன் சிவப்பு கம்பளம் விரித்து, அதில் நடக்க வைத்து எனக்கு அலுவலகத்தில் அழைப்புக் கொடுத்தனர். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் எனக்குத் தெரியாமலேயே செய்திருந்தனர். வியப்பில் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.

மெஹந்தி விளம்பரத்திற்கு கேன்ஸ் விருது மட்டுமல்லாமல் கோவா விளம்பர விழாவில் வெள்ளி விருதும், "த ஒன் ஷோ' என்கிற விளம்பர விழாவில் தங்க மெடலும் கிடைத்தது. இது யு.கே.வில் உள்ள அமைப்பினர் கொடுத்த விருது.

இந்த விருதுகள் எல்லாம் கிடைத்த பிறகுதான் வருடாவருடம் விருதுகள் வாங்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்தவர்கள் தான் விளம்பரத்துறையில் கொடிக் கட்டி பறக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. கிரியேட்டிவ்க்கு முக்கியத்துவம் கொடுக்கிற துறை இது. இதில் அவரவர்களின் திறமையையும் கற்பனையையும் பொறுத்துதான் வெற்றியும் தோல்வியும் அமையும்.
மும்பையில் விளம்பரங்களைக் கொடுக்ககூடிய நிறுவனங்கள் இருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றலாம். பெண்களையும், ஆபாசத்தையும் மையப்படுத்தித்தான் விளம்பரங்கள் வருகின்றன என்று சொல்லமுடியாது. "வந்தன' என்று சொன்னால் சரியாக இருக்கும். இப்போது அந்த நிலை பெரும்பாலும் மாறி வருகிறது என்று சொல்லலாம். குறைந்த நேரத்தில் ஒரு சிறு நகைச்சுவை கதை போல சொல்கிற பாணிதான் இப்போது இருக்கிறது. நான் கிரியேட் செய்கிற விளம்பரங்களை அப்படித்தான் செய்கிறேன். விளம்பரங்களுக்கு சென்ஸôர் போர்டு நல்லதா கெட்டதா என்பதை நான் இதுவரை சிந்தித்துப் பார்த்தது இல்லை'' என்று விளம்பரச் சிரிப்பு சிரிக்கிறார் பிரியா.

No comments: