Thursday, December 6, 2007

செஞ்சுரி அடித்தும் சீந்துவாரில்லை..!





சச்சினைத் தெரியும்... திருஷ் காமினியைத் தெரியுமா? ராகுல் டிராவிட்டைத் தெரியும்... மித்தாலியைத் தெரியுமா? கிரேக் சேப்பலைத் தெரியும்... சுதாஷாவைத் தெரியுமா?

"கிராண்ட் மாஸ்டர்' பிரதீப்புக்குத் தெரியும்னு எங்களுக்கும் தெரியும்... உங்களுக்குத் தெரியுமா?'

"தெரியல... அறியல்லா... நஹி... ஐ டோன்ட் நோ... என்று வருகிற பதில்கள்தான் இவர்களின் சாபக்கேடு. மற்றபடி பதக்கம் குவிப்பதிலும், சாதனை புரிவதிலும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினருக்குச் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை இந்த இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியினர்.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கலக்கும் கேப்டன் மித்தாலி ராஜ்!
சச்சினைப் போல அதிரடி ஆல்ரவுண்டர் திருஷ் காமினி! (திருஷ் -சென்னை சர்ச் பார்க்கில் ப்ளஸ் டூ படிக்கும் நம்மூர் பெண்.)
அறிவியல் ரீதியான முறையில் வீராங்கனைகளுக்குப் பயிற்சியளிக்கும், இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் சுதாஷா! (இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்) பெண்கள் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்து பல ஆண்டுகளாகியும் பெரியளவில் ரசிகர்களால் பேசப்படாததற்கு, பார்க்கப்படாததற்குக் காரணமென்ன? ஆண்களுக்கு நிகராகப் பெண்களால் சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக விளையாட முடியாதா? எனப் பல கேள்விகளோடு நாம் போய் நின்ற இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம்.

""மித்தாலி... வாட்ச் த பால்''
""ராஜேஸ்வரி... ரன்னிங் இஸ் வெரிவெரி மஸ்ட்''
""டோன்ட் வெயிட் ஃபார் பால்... அட்டாக்கிங் த பால்'' இந்திய பெண் அணியினரை ஃபீல்டிங், பேட்டிங் என பெண்டு எடுத்துக் கொண்டிருந்த சுதாஷாவை பத்து நிமிட "பெப்ஸி'வேளையில் சந்தித்தோம்.

பயிற்சியாளர் சுதாஷா
கணக்கில் கொள்ளப்படாத நோ பாலில் சிக்ஸர் அடிப்பதுபோல, தனித்தனி கேள்விகளாய் இல்லாமல் சுதாஷா அடித்த சிக்ஸர் பதில்கள் மட்டும் இங்கு!
""கிரிக்கெட் ஆர்வம் எனக்குப் பிறக்கும்போதிலிருந்தே இருந்தது என்று சொல்லலாம். என்னுடைய அப்பா ஜெ.பி.ஷா. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினுடைய ஃபவுன்டர் -செகரட்டரி. இதனால் இயல்பாகவே எனக்கு கிரிக்கெட் ஆர்வம் இருந்தது. சென்னை எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ. ஹிஸ்ட்ரி முடிச்சு, தற்போது கனரா வங்கியில் வேலை செய்கிறேன்.
சின்ன வயதிலிருந்தே, கிரிக்கெட்டில் நான் ஆல்-ரவுண்டர் பிளேயர்தான். பெüலிங்கில் ஆஃப் ஸ்பின். முதல்தர பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவிலேயே முதல் செஞ்சுரி அடித்தது நான்தான். 151 பந்துக்கு 115 ரன்கள் அடித்தேன்.

இந்திய அணியில் 1973-ல் இடம் பிடிச்சு 1991-ம் வருஷம் வரைக்கும் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறேன். 75-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்தேன். நான் கேப்டனாக இருந்தபோதும் சரி, பிறர் தலைமையில் விளையாடியபோதும் சரி பல நாடுகளை ஜெயித்திருக்கிறோம். அதைப்போல, கேட்ச் பிடிப்பதில் தனிப்பட்ட முறையில் சாதனைகளும் படைத்திருக்கேன். ஆனால் அவற்றின் பதிவு காட்சிகள் எதுவும் இல்லை. அதற்கு சாட்சி மனசாட்சிதான். ஆண்கள் கிரிக்கெட் பதிவு செய்யப்படுவதுபோல பெண்கள் கிரிக்கெட் அப்போது பதிவு செய்யப்படவில்லை. பெண்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்றாலே அப்போது அபூர்வமாய் பார்த்த காலம். அதனால் பதிவுசெய்வது பற்றி யோசிக்க முடியவில்லை. இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்று சொல்லலாம்.

ஆண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கும் பெண்கள் விளையாடுவதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஓவர்களிலேயோ பேட்டிங்கிலோ கூட எந்த வித்தியாசமும் இல்லை. பாலில் மட்டும்தான் சற்று வித்தியாசம். ஆண்கள் விளையாடக்கூடிய பாலின் எடை ஐந்தரை அவுன்ஸ் என்றால், பெண்கள் விளையாடக்கூடிய பாலின் எடை ஐந்து அவுன்ஸ். இதுதான் வித்தியாசமே தவிர வேறு வித்தியாசமில்லை. பெண்கள் கிரிக்கெட் விறுவிறுப்பாக இல்லை என்பதெல்லாம் பார்க்காதவர்கள் சொல்வது.

பெண்கள் கிரிக்கெட் அவ்வளவாக வளர்ச்சி பெறாததற்கு முக்கிய காரணம் மீடியாக்கள்தான். ஆண்கள் டீம் ஜெயித்தால் பத்திரிகைகள் பெரியளவில் செய்தி வெளியிடும். அதேசமயம் பெண்கள் டீம் ஆஸ்திரேலியாவை ஜெயித்தால்கூட ஒரு மூலையில் சிறியதாய் போடுகிறார்கள். இப்படி ஓரவஞ்சனை செய்வதால்தான் பெண்கள் கிரிக்கெட் வளரவில்லை. இந்தநிலை இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. அங்கு ஆண்கள் டீமுக்கு எப்படி ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்களோ... அதைப்போலத்தான் பெண்கள் டீமிற்கும் கொடுக்கிறார்கள். பயிற்சி கொடுக்கிற விஷயமாகட்டும், வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகட்டும் எல்லா விஷயங்களிலும் ஆண்கள் டீமுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதைப்போலத்தான் பெண்கள் டீமிற்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதுபோன்ற நிலை இங்கு இல்லை.

இந்தியா சார்பில் கிரிக்கெட் விளையாடும் பெண் வீராங்கனைகளுக்கான சம்பளம் எவ்வளவு என்றால், ஒன்டே விளையாடினால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய், டெஸ்ட் விளையாடினால் ஐயாயிரம் ரூபாய். ஆண் கிரிக்கெட்டர்களுக்கு கிடைக்கும் சம்பளம் எவ்வளவு? (ஆண் கிரிக்கெட்டர்களுக்கு கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3 வகை பிரிக்கப்பட்டுள்ளது. சச்சின், டிராவிட், சேவக், கங்குலி போன்றோர் கிரேடு ஒன் பிளேயர்ஸ். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம். கிரேடு 2 -க்கு 35 லட்சம், கிரேடு 3-க்கு 20 லட்சம். இது தவிர டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு ரூ.2.70 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.2.21 லட்சமும் சம்பளம்.) ஆண் கிரிக்கெட்டர்களுக்குக் கொடுப்பதில் சிறிதளவுகூட பெண்களுக்குக் கொடுப்பதில்லை. ஆண் கிரிக்கெட்டர்களுக்குக் கொடுப்பதுபோல் ஏ கிரேடு சம்பளம், பி கிரேடு சம்பளம், சி கிரேடு சம்பளம் என்பதுபோலெல்லாம் வீராங்கனைகளுக்குச் சம்பளம் கொடுப்பதில்லை. எல்லா வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரிதான். நான் கனரா வங்கியில் வேலை பார்க்கிறேன். லாஸ் ஆஃப் பேயில்தான் இந்திய அணி எங்குச் சென்றாலும் சென்று பயிற்சி கொடுத்து வருகிறேன். எங்களுக்குச் சம்பளம் என்பதைவிட பெண்கள் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வம்தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

1999-2000 ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்தேன். இதன் பிறகு 2003-லிருந்து மீண்டும் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்து வருகிறேன். கிரிக்கெட் பிளேயராக இருந்ததால் அப்படியே பயிற்சியாளராக ஆனேன். அதேசமயம் நேஷனல் கோச் அகாடமியில் லெவல் ஒன் லெவல் டூ முடித்துள்ளேன்.
நான் பயிற்சியாளராக ஆன பிறகு அறிவியல் ரீதியாக வீராங்கனைகளுக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன். ஆண்களைவிட பெண்களுக்கு ஸ்டெமினா குறைவாக இருக்கும். கிரிக்கெட்டிற்கு ஸ்டெமினா மிகவும் அவசியம். இதற்காக யோகா போன்ற பயிற்சிகளைக் கொடுக்கிறேன். பயிற்சி கொடுக்கிறபோது பெரும்பாலும் கோபப்படமாட்டேன். ஆனால் சில நேரங்களில் பொசுக்கென கோபம் வந்துவிடும். இதற்காக சேப்பல் மாதிரி என்றெல்லாம் சொல்லக்கூடாது. ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது என்பதே எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல லேடி சச்சின், லேடி லாரா என்ற கம்பேரிஸனும் வேண்டாம். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு திறமை.

வீரர்களின் திறமையை மேம்படுத்துவது என்பது மட்டும்தான் பயிற்சியாளர்களின் இப்போதைய வேலையாக இருக்கிறது. திறமையான வீரர்களைத் தேர்வு செய்கிற பொறுப்பும் பயிற்சியாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். பயிற்சியாளர்களைப் போல கேப்டனையும் வீரர்களைத் தேர்வு செய்கிற குழுவில் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்போதுதான் திறமையான வீரர்களைத் தேர்வு செய்ய முடியும்.
ஆண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ... அதைப்போலத்தான் பெண்கள் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடிக்கவைப்பதுதான் என் இலட்சியம். இந்தியன் வுமன் கிரிக்கெட் அசோசியேஷன் பிசிசிஐயோடு இணைய இருக்கிறது. இனி எங்களுக்கும் எல்லாம் ஜெயமே'' என்கிறார் சுதாஷா.

டக் அவுட்டானோம்!

No comments: