2014-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போது தினமணிக்காக எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், சா.கந்தசாமி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், குடவாயில் பாலசுப்பிரமணியன், இந்திரன், எம்.ஏ.சுசீலா, பழ.அதியமான், அழகியபெரியவன் ஆகியோரிடம் பேட்டி எடுத்தேன்.
சா.கந்தசாமி தவிர்த்து மற்ற அனைவரிடமும் தொலைபேசி வாயிலாகவே கேட்டுப் பெற்றேன்.
தொடக்கநிலை வாசகர்களின் மனவோட்டத்துக்கான கேள்விகளே அனைவரிடமும் எழுப்பப்பட்டன.
ஆனால், எல்லா நிலை வாசர்களுக்குமான பதில்களே கிடைத்தன.
பேட்டி:எஸ்.ராமகிருஷ்ணன்
ஓர் இலக்கியப் படைப்புக்கு நோக்கம் இருக்க வேண்டுமா?
நோக்கம் கட்டாயம் தேவை. அது வெளிப்படையாகவும் இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அனுபவம், அன்பு, உணர்ச்சி, கற்பனை, வரலாறு ஆகியவற்றைப் பகிர்வதுதானே நோக்கம்.
ஓர் எழுத்தாளன் தான் கற்றதை, தான் பார்த்த உலகத்தை இன்னொருவரோடு பகிர விரும்புகிறான். இந்தப் பகிர்வு இல்லாத இலக்கியப் படைப்புகளே இல்லை. அதேசமயம் நோக்கம் என்பதற்கு கூடுதலாக வேறோர் எண்ணமும் இருக்கிறது. ஒரு கருத்தை, தத்துவத்தை, கோட்பாட்டை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விஷேசமான எண்ணமும் எழுத்தாளனுக்கு இருக்கலாம். இதுவும் ஒரு நோக்கம்தான். என்னைப் பொருத்தவரை எந்தப் படைப்புமே நோக்கம் எதுவும் அற்று எழுதப்படுவது இல்லை. சமூகத்தின் மீதான எதிர்வினையை பற்றி எழுதும்போதுகூட ஒரு நோக்கம் வரத்தானே செய்கிறது.
உலகத் தரத்தை தமிழ் நாவல்கள் எட்டிவிட்டன என்று நினைக்கிறீர்களா?
உலகத் தரம் என்ற ஒன்றே இல்லை. எல்லா நாடுகளின் இலக்கியத் தரமும் ஒன்று சேர்ந்துதான் உலகத் தரத்தை உருவாக்குகிறது. இது வணிகச் சந்தையில்லை. ரஷ்ய மக்களுடைய கலாசாரம், சமூகப் பொருளாதாரம், அரசியல் பின்புலங்கள் சார்ந்து படைக்கப்படும் படைப்புகள், அந்நாட்டு இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளாக இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு நாட்டினரும், அவரவர் நாட்டுப் படைப்புகளை முக்கிய படைப்பாகக் கூறுகின்றனர். அந்தப் படைப்புகளுக்கு உலகு தழுவிய வாசகர்களும் கிடைக்கின்றனர். தமிழில் நாவல் என்ற வடிவம் உருவாகி, நூறு வருடங்கள்தான் ஆகின்றன. இந்த நூறு வருடங்களில் கணக்கு எடுத்துக் கொண்டாலே, தமிழின் முக்கியமான நாவல்களாக நாற்பதைக் குறிப்பிட முடியும். தமிழரின் வாழ்க்கையை, தமிழ் உலகை இந்த நாவல்கள் சொல்லியிருக்கின்றன. புனைவு இலக்கியத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளைத் தமிழ் நாவலாசிரியர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். இது பெரிய வெற்றி என்றே கூறுவேன். தமிழ் நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகி, உலக அளவில் வாசிப்பு வரும்போதுதான், உலக அளவில் இந்த நாவல்களுக்கு என்ன இடம் இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.
ஆனால் தமிழ் நாவல்கள் இந்திய அளவில்கூட இன்னும் சரியாகப் போகவில்லை.
உலகின் முக்கியமான 13 மொழிகளில் தமிழ் நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டால்தான், பரந்த வாசிப்புக்கு உள்ளாகும். அந்தத் தளத்துக்குத் தமிழ் நாவல்கள் இன்னும் செல்லவில்லை.
ஜனரஞ்சகப் படைப்புக்கும், இலக்கியத் தரத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டு படைப்புகளைப் படிக்கும்போதும் கண்ணீர் வருகிறதே?
ஜனரஞ்சக எழுத்தின் நோக்கமே பொழுதுபோக்குக்காகவும், படித்து மறப்பதற்காகவும் எழுதுவதாகும். பொழுதுபோக்குகளுக்கு இடையே பாப்கார்ன் சாப்பிடுவதுபோலதான். ஆனால் பாப்கார்னையே உணவாகச் சாப்பிட முடியாது. உணவு என்பதும் தேவைதான். ஆனால் எல்லா நேரத்திலும் உணவை மட்டுமே சாப்பிட முடியாது.
எனவே இரண்டுக்குமான களமே வேறுவேறு. அதேநேரத்தில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்று சொல்ல மாட்டேன். தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு தஞ்சை பெரிய கோயில் ஓர் இடம். அந்த இடத்தைப் பார்த்தவாறே கடந்து போவார்கள். ஆனால் இத்தாலியிலிருந்து விமானம் பிடித்து, அந்தக் கோயிலை நேரில் பார்த்து, கல்வெட்டுகளை ஆராய்ந்து, மெய்சிலிர்த்துப் போகிறவனுக்கு அந்தக் கோயிலின் அருமை தெரியும். இதைப்போலத்தான் மக்களும் எப்போதும் செவ்விலக்கியத்துக்கு இடம் கொடுக்காமலே உள்ளனர். அருமை தெரிந்தவர்களுக்கே, செவ்விலக்கியத்தின் முக்கியத்துவம் தெரியும்.
வாசக மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு எழுத வேண்டுமா?
வாசகன் என்பவன் முகம் தெரியாதவன். அந்த வாசகனுக்கு வயது, பாலினம் போன்றவை கிடையாது. எந்த நிலையில் படிக்கிறான் என்பதும் தெரியாது. ஆனால் அந்த வாசகனுக்கும் எனக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது. புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே, அவன் என்னை நம்பத் தொடங்குகிறான். என்னோடு இணைந்து பயணம் செய்கிறான். பல நேரங்களில் என்னைப் போலவே, அவனும் இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறான். அதனால் வாசகனை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், ஒரு வாசகன் என்பவன் புத்தகத்தினுடைய இணை எழுத்தாளன்.
அவன் வாசித்தலின் வழியாக எழுத்தாளனாகிறான். நான் எழுதுதலின் வழியாக எழுத்தாளனாகிறேன். இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. அதனால் வாசகனைத் தனிப்பட்ட ஆளாகப் பார்க்க முடியாது.
மேலும் என் மனதில் எப்போதும் ஒரு வாசகனைக் கூடவே வைத்துள்ளேன்.
நான் வளரும்போது என்னோடு சேர்ந்து அவனும் வளர்ந்து வருகிறான். இருவரும் இடைவெளியற்று விவாதம் செய்கிறோம். பரஸ்பரம் தெளிவு பெறுகிறோம். எஜமானன், பணியாள் உறவுபோல எழுத்தாளன் வாசகன் இடையே உறவு இருக்க முடியாது.
குற்றம் புரிந்தவன் தன் அனுபவத்தின் வாயிலாகவே திருந்தாதபோது, புத்தக வாசிப்பின் வழியாக மட்டும் திருந்திவிடுவானா?
அனுபவங்கள் என்பது எப்போதும் எல்லோருக்கும் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கும். சந்தர்ப்பம் என்பது வேறு.
தன்னிலையை உணர்தல் என்பது வேறு. பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. இருக்கையில் நானும் அமர்ந்திருந்தேன். ஒரு கை மட்டும் ஜன்னலுக்கு வெளியே நீண்டு, கொய்யா வியாபாரி கூடையில் இருந்து ஒரு பழத்தை எடுத்துவிட்டது. "திருடன்' என்று தொடங்கி,வாயில் வந்ததையெல்லாம் திட்டியபடியே, பேருந்துக்குள்ளே வந்த வியாபாரி அதிர்ந்து போனார். ஏனெனில் கொய்யாவை எடுத்தது, ஒரு நாலு வயது குழந்தை. வியாபாரிக்கு பெரிய குற்ற உணர்ச்சி வந்துவிட்டது.
பஸ்ஸில் இருந்த யாருமே அவரைக் குற்றம் சாட்டவில்லை. உடனே அவரே இன்னொரு கொய்யாவை குழந்தையிடம் வெட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதுதான் தன்னிலை உணர்தல். குழந்தையைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அந்த இடத்தில் பெரிய கைகலப்பு ஏற்பட்டிருக்கும்.
இதை நான் படைப்பில் பதிவு செய்தால், அந்த வியாபாரியின் இடத்தில், வாசிப்பவன் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வான்.
தன் குற்றத்தை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவனும், இந்தப் பதிவின் மூலம் தன் முகத்தையும் அகத்தையும் திரும்பிப் பார்த்துக் கொள்வான். தன்னிலையை உணர்ந்து திருந்துவான்.