Friday, November 30, 2007

தமிழ்ச்செல்வனைக் கொன்றது பிரபாகரனா?

தேநீர் செய்திகள்?தேள் கடி கேள்விகள்!(1.12.2007)
செய்தி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதும், அவர்களுக்கு ஆதரவாகப் பேரணி, கூட்டங்கள் நடத்துவதும் சட்டப்படி குற்றம், அவ்வாறு செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறைத் தலைவர் எச்சரித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் கடந்த சில காலமாக முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகள் தப்பிச் செல்வது, கடல்புலிகள் கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை எல்லாம் கவலையளிக்கின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அல்லாத மற்ற போராளிகளின் தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்ற தமிழர் இயக்க தலைவர்கள் மரணத்திற்கும், கருணா பிரிவுக்கும் காரணம் பிரபாகரன்தான். இந்தவகையில் இப்போது தமிழ்ச்செல்வன் மரணத்திற்கும் பிரபாகரன்தான் காரணம். கடைசிக் காலங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பெயரில் எந்த அறிக்கைகளும் வரவில்லை. தமிழ்ச்செல்வனுக்கு பிரபாகரனுக்கு ஈடாக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவர் அலுவலகத்துக்கு வருகிற நேரமும், செல்கிற நேரமும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நேரமுமாக இருக்கும். அவர் கொல்லப்பட்ட அன்று அதிகாலை ஆறு மணிக்கு முக்கிய தலைவர்களுடன் தமிழ்ச்செல்வன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது இலங்கை ராணுவத்திற்கு எப்படித் தெரியும். அவர் கொல்லப்பட்ட தகவல் வெகு சீக்கிரமே எப்படி வெளியானது. இலங்கை இராணுவம் ஓர் இடத்தில் குண்டு வீசி தாக்கினால் அதனை அவர்கள் ஒப்புக்கொண்டு தகவல் வெளியிடுவார்கள். ஆனால் இதில் அப்படி எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இலங்கை தமிழர்கள் கூற்றுப்படி, எனக்குக் கிடைத்த தகவல்படி அவர் மரணத்திற்குக் காரணம் பிரபாகரன்தான். இதனை ஏதோ வீரமரணம் அடைந்துவிட்டதாகக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தை யார் ஆதரித்தாலும் அதனை ஏற்க முடியாது.
கேள்வி:


தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்வதன் மூலம் பேச்சுரிமையைப் பறிக்கிற செயலை விட்டுத் தள்ளுங்கள்.. பேசக்கூடாது.... பேசக்கூடாது என்று சொல்லிக்கொண்டே அந்த இயக்கங்கள் பற்றி இவர்கள் பேசுவது மட்டும் என்ன நியாயம்?

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்பதற்காகத் தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றி இவர்கள் எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பதும் தவறில்லையா? இயக்கங்களுக்குத் தடைவிதிக்கலாம். ஆனால், இயக்க ரீதியான கருத்துகளைச் சொல்ல... அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் தடை விதிக்க முடியாது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியைப் படித்தால், ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த ஓர் அமைப்பிலிருந்து பேசுவதுபோலவும் அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள சிலரோடு அவருக்குத் தொடர்பு இருப்பது போலவும், அவர்கள் கொடுத்தத் தகவலின்படிதான் தமிழ்ச்செல்வனை பிரபாகரன் கொன்றதாகத் தகவல் தருவதுபோலவும் பேட்டியளித்திருக்கிறார்.

இந்திய அளவிலான விவகாரங்கள் பற்றி பேசுகிறபோது எனக்குத் தகவல் கிடைத்தது என்று ஒருவர் சொன்னால், அந்தத் தகவலை ஒரு தொண்டர் கொடுத்திருக்கலாம். ஓர் அதிகாரி கொடுத்திருக்கலாம். ஒரு மந்திரி கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்டவரே நேரிடையாகச் சென்று பார்த்திருக்கலாம் அல்லது புலனாய்வுக் காவலர்கள் விசாரித்துத் தகவல் தந்திருக்கலாம். இது எதுவுமே இல்லாமல் விடுதலைப்புலிகளுக்கு இடையே நடைபெறும் கலக அரசியல் இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அதுவும் இவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் எதிர்த்துப் பேசி வரக்கூடியவர். தமிழக மக்களோடு புழங்குகிற இலங்கை அரசுக்கே இவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்.ஆர்.பியால் மட்டும் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. பிரபாகரனை எதிரியாகக் கருதுகிற எஸ்.ஆர்.பி. இலங்கை அரசுக்கு உதவ முன்வந்தால் ஓரிரு நாட்களிலேயே பிரபாகரனின் கொட்டத்தை அடக்கிவிடலாம் .

அதேசமயம் எஸ்.ஆர்.பி. அளித்துள்ள பேட்டியில் ஒரு விஷயத்தை மட்டும் எல்லோரும் யோசித்துப் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வன் இருந்த இடம் தேடி குண்டு போட்ட இலங்கை இராணுவம், பிரபாகரன் மீது போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இப்படி நினைத்துப் பார்த்து அடிவயிறு வரை நடுங்கிப் போனவர்கள் எத்தனை பேர்? ஆனால் பிரபாகரனும் தமிழ்ச்செல்வனின் மனைவியும் நடுங்கியதாகத் தெரியவில்லை. தமிழ்ச்செல்வன் இறந்த இடத்திற்கு பிரபாகரன் நேரடியாகவே சென்றார். மரியாதை செலுத்தினார். தமிழ்ச்செல்வனின் மனைவி தன்னுடைய தாலியைக் கழற்றி கணவன் உடல் மீது வைத்து ஒரு போராளியாகவே மரியாதை செலுத்திய புகைப்படம் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்தது.

அந்தப் பெண் போராளியின் கண்களில் கண்ணீர் வந்ததாகத் தெரியவில்லை. அவர் இன்னும் போராளியாகத்தான் அந்த இயக்கத்தில் இருக்கிறார். ஒருவேளை பிரபாகரன், உண்மையில் தமிழ்ச்செல்வனைக் கொன்றிருந்தால் அவரது மனைவி எப்படி அமைதியாக இருக்க முடியும்?

மிரட்டியிருப்பார்கள் என்று குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது. போராளிகள் யாரும் பயப்படுவதில்லை என்பதை விடுதலைப்புலிகள் இயக்கம் உலகிற்குக் காட்டியிருக்கிறது. வெடிகுண்டு உடலில் இறங்கப்போவது என்பது அவர்களுக்குத் திண்ணம் . அது இலங்கை இராணுவக் குண்டாகயிருந்தால் என்ன? விடுதலைப்புலிகளுடைய குண்டாகயிருந்தால் என்ன? என்று தன் கணவன் வஞ்சமாகக் கொல்லப்பட்டிருந்தால் ஒரு மனைவி முடிவு எடுக்கமாட்டாளா என்ன? எஸ்.ஆர்.பி சொல்வதுபோல பிரபாகரன் திட்டமிட்டு கொன்றிருந்தால் நாளை இதுபோல் நாமும் கொல்லப்படலாம் என்று பிரபாகரனின் அருகிலேயே இருப்பவர்கள் அவரைக் கொல்லத் திட்டம் போடமாட்டார்களா என்ன? இது தெரியாமலா போராளிகள் இயக்கம் நடத்துகிறார் பிரபாகரன்?

ஆனால் ஒன்று பிரபாகரன் ஏற்கனவே செய்த பல துன்பியல் சம்பவங்களால்தான் எஸ்.ஆர்.பிக்கு இப்படி வெறும் வாயில் அவல் மெல்லுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

கைப்பேசி வெளிச்சத்தில் பிரசவம்!


தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
1.12.2007


செய்தி:


கைப்பேசி வந்தபிறகு வாய், நாக்கு, காது தவிர்த்து மற்ற உறுப்புகளின் வேலையைப் பறித்துவிட்டது. உடல் ரீதியாக இப்படி ஒரு சுயப் பிரச்சினை என்றால் கைப்பேசியில் பேசிக்கொண்டே போவோரால் ஏற்படக்கூடிய பிரச்சினை என்னென்ன என்பதை நீங்கள் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பயனும் இல்லாத கைப்பேசியால் இப்போது ஒரு பயன் ஏற்பட்டிருக்கிறது. ரஷியாவில் உள்ள ஷெலெகோவ் நகரைச் சேர்ந்தவர் ரிமா பிவோவரோவா. வயது 22. பிரசவத்திற்காக இந்தப் பெண் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இரவு நேரம். மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனை உட்பட நகரே இருளில் மூழ்கியிருக்கிறது. மருத்துவமனையிலிருந்த மின்கொடுப்பான் இயந்திரமும் (ஜெனரேட்டர்) இயங்கவில்லை. இந்நிலையில் பிரசவத்தை எப்படிப் பார்ப்பது என்று யோசித்த மருத்துவர்கள், மருத்துவமனையிலிருந்த பனிரெண்டு பேரின் கைப்பேசி வெளிச்சத்தைக் கொண்டு பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.


கேள்வி:


ஆரம்பத்தில் படிக்கையில் ஆச்சரியமாகத் தெரிந்தாலும் போகப்போக பல அதிர்ச்சிக் கேள்விகளைக் கேட்க வைக்கிறது இந்தச் செய்தி. அவசர மின்விளக்கு ஒன்றுகூடவா இல்லை மருத்துவமனையில்? மெழுகுவர்த்திக்கூடவா கிடைக்கவில்லை? கைப்பேசியை முடுக்கிவிட்டுவிட்டு பிரசவ அறையைவிட்டு யாரும் வெளியில் போயிருக்க முடியாது. ஏனென்றால் சில நொடிகள் இயங்காவிட்டாலும் கைப்பேசி அணைந்துவிடும். அதை அழுத்திக் கொண்டே இருந்தால்தான் வெளிச்சம் கிடைக்கும். அப்படியென்றால் அழுத்திக்கொண்டிருந்த பனிரெண்டு பேர் யார்? மருத்துவர்கள் தவிர்த்து வெளி நபர்கள் பிரசவ அறையில் இருப்பது மருத்துவச் சட்டப்படி குற்றம். தமிழகத்தில் ஒரு மருத்துவரின் பையன் பிரசவம் "பார்த்தது" தவறு என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தனைக் கேள்விகளையும் இந்தச் செய்தி கேட்கிறது. எது எப்படியிருந்தாலும் அந்த ரஷ்ய குழந்தை நன்றாக இருக்கிறது என்பது பெரிய சந்தோஷம்.

ஆய்வாளரின் மனைவியாக இருந்தால்?


தொல்பொருள் ஆய்வாளரின் மனைவியாக இருந்தால்?

கொட்டாவி விரட்டும்
மிட்டாய்கள்.
(30.11.2007)

பிரிட்டீஷ் பிரதமராக இருந்தவர் லாயிட் ஜார்ஜ். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவன் எழுந்து, லாயிட் ஜார்ஜை மட்டம் தட்டும் பொருட்டு, " கழுதை வண்டியை ஓட்டியவர் உங்கள் தாத்தா என்பது நினைவிருக்கிறதா?'' என்றான். கூட்டத்தில் ஒரே சலசலப்பு. லாயிட் ஜார்ஜ் பதற்றப்படவில்லை. கோபப்படவில்லை. சாதாரணமாகச் சொன்னார்: என்னுடைய தாத்தாவின் வண்டி போன இடம் தெரியவில்லை. கழுதை மட்டும் கிடைத்துவிட்டது.''
***
விஞ்ஞானத்துடன் நன்றாக வயலினும் வாசிக்கத் தெரிந்தவர் ஐன்ஸ்டீன். ஒருமுறை தனது நண்பர்களுக்கு மத்தியில் வயலின் வாசித்துக் காட்டினார். ஹங்கேரி நாட்டு நகைச்சுவை நடிகரான மோல்நார் மட்டும் ஐன்ஸ்டீனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தார். வயலின் வாசித்து முடித்த பிறகு ஐன்ஸ்டீன், மோல்நாரைப் பார்த்துக் கேட்டார்: " நான் வயலின் வாசிக்கும்போது சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே... என்றைக்காவது நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப் பார்த்து, நான் சிரித்திருப்பேனா?''
***
"மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் என்ன ஆயுதம் வீசுவார்கள்?'' என்று ஐன்ஸ்டீனிடம் நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன் சொன்னார்: "மூன்றாம் உலகப்போரில் என்ன ஆயுதம் வீசுவார்கள் என்று தெரியவில்லை. நான்காவது உலகப்போரில் வேண்டுமானால் என்ன ஆயுதம் வீசுவார்கள் என்று தெரியும். கல், ஈட்டி, அம்புதான் எறிவார்கள். ஏனென்றால் மூன்றாம் உலகப்போர் நடந்தால் மனிதர்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம். ஆதி வாழ்க்கையிலிருந்துதான் மனித வாழ்வு திரும்பத் தொடங்கும்.''
***
ஆங்கிலத் துப்புறியும் நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி. தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். பத்திரிகையாளர் ஒருவர் அகதா கிறிஸ்டியிடம், "தொல்பொருள் ஆய்வாளரை மணந்து கொண்டதால் நன்மை ஏதும் உண்டா?"" என்று கேட்டார். அதற்கு அகதா சொன்னார்: "எல்லா ஆண்களுக்கும் மனைவிக்கு வயது ஆகஆக அவர் மேல் உள்ள ஆர்வம் போய்விடும். ஆனால் தொல்பொருள் ஆய்வாளர், மனைவிக்கு வயது ஆகஆகத்தான் அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்.''
***

ரஜினியோடு சண்டை போடத் தயாரா?
ரஜினியோடு வாளெடுத்து சண்டை போடுவதற்கு இன்னும் அதிக நாள்கள் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. விரைவிலேயே சத்தம் போடலாம்... அவரோடு யுத்தம் புரியலாம்...

ரஜினியோடு மட்டும்தானா? "சிநேகா... அசின்... த்ரிஷா... பாவனா... நமீதா... ஐஸ்வர்யாராயோடெல்லாம் சண்டை போடமுடியுமா?' என்று ஆண்களும், "விஜய்... அஜித்... மாதவன்... சூர்யா... அர்விந்த்சாமியோடெல்லாம் சண்டை போடமுடியுமா?' என்றுதானே பெண்களும் அடுத்த கேள்வி கேட்கிறீர்கள்? (சரி...சரி... மந்திராபேடியையும் சேர்த்துக்கிறேன்...) கவலையை விடுங்கள். இவர்களென்ன? கமல், ஷாரூக், அமீர், ஜாக்கி ஷெராப், நானா படேகர், அமிதாப், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, பிரித்தி ஜிந்தா என யாருடனும் சண்டை போடலாம்.
உங்களுக்காகவே விரைவில் வர இருக்கிறது நடிகர், நடிகைகள் இடம்பெறும் வீடியோ கேம்ஸ்.

டூ வீலர் ரேஸ், கார் ரேஸ், ப்ளைட் சேஸிங், பேய் தீவுக்குள் பயணம், அலாவுதீன், இண்டியானா ஜோன்ஸ் என லட்சக்கணக்கான வீடியோ கேம்கள் இருக்கின்றன. இந்த கேம்கள்தான் இப்போது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் இனிய உலகம்.

சென்னை நகர் முழுவதும் பரவலாக "வீடியோ கேம்ஸ் பார்லர்கள்' அதிகரித்து இருக்கின்றன. கல்லூரியை "கட்' அடித்துவிட்டு திரையரங்குக்குச் செல்வதுபோல பார்லர்களில் குழுமுகின்றனர்.
"கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் கட் அடித்துவிட்டு வந்து விளையாடுவதைத் தவிர விடியோ கேம்ஸில் ஒரு கெடுதலும் இல்லை. திரைப்படங்கள், சின்னத்திரைகள், பாப் ஆல்பங்கள் என இன்று எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் ஆபாசங்களாகிவிட்டன. விடியோ கேம்களில் அந்தக் கெடுதல்கள், சமுதாயச் சீரழிவுகள் எதுவும் இல்லை. (இப்போது ஆபாசக் காட்சிகள் விடியோ கேம்களிலும் வருவதாகச் குற்றசாட்டுகள் அதிகம் வருகிறது) மனதை ஒருமுகப்படுத்த விடியோ கேம்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இவ்விளையாட்டுகள் இன்று பலமாற்றங்களைக் கண்டிருக்கிறது. எல்லோரையும் கவர்ந்திழுக்கிற வகையில் புதுப்புது விளையாட்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
இப்போது அதிகம் விற்பனையாவது பிரபல விளையாட்டு வீரர்களைக் கொண்டு விளையாடும் விடியோ கேம்கள்தான். டபிள்யூடபிள்யூஎப் வீரர்களான ராக், மைக், ஸ்டீவ் ஆஸ்டின் போன்ற வீரர்கள் விளையாடும் விளையாட்டுகள் அதிகமாக விற்பனையாகின்றன. இதைவிட அதிகம் விற்பனையாவது கிரிக்கெட் கேம்கள்தான். சச்சின், லாராவோடு விளையாடுவது போன்ற விடியோ கேம்களுக்குத்தான் அதிலும் அதிக வரவேற்பு.

சச்சின், லாராவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கே கோடிக்கணக்கான பேர் காத்திருக்கிறார்கள். இதில் அவர்களோடு விளையாடுவது போன்ற அனுபவம் என்றால் சும்மாவா? சச்சினின் அதிரடி சிக்ஸர், ஜாண்டி ரோட்ஸின் டெரிபிக் ஃபீல்டிங், பிராட்னி மார்ஷலின் க்ளோஸப் ஸ்டெம்பிங், முத்தையா முரளிதரனின் புயல்வேகச் சுழற்பந்து வீச்சு, மால்கம் மார்ஷலின் அதிகவேகப் பந்துவீச்சுகள் கவாஸ்கரின் சொதப்பல் பொறுமை என அனைத்தும் ஒருங்கிணைந்த அனுபவத்தை நாம் ஆடுகிறபோது பெறலாம். விளையாட்டு விடியோ கேம்களை அடுத்து த்ரில்லிங் கேம்கள் அதிகம் விற்கின்றன.
ஹாலிவுட் நடிகர்கள் இடம்பெறுகிற ஒருசில விடியோ கேம்கள் இருக்கின்றன. ஆனால் இந்திய நடிகர், நடிகைகள் இடம்பெறுகிற விடியோ கேம்கள் இங்கு இன்னும் வரவில்லை. மொபைல் கேம்ஸில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். விடியோ கேம்களின் உலகம் மிகவும் பிரசித்துப் பெற்று இருப்பதால், நடிகர், நடிகைகள் இடம்பெற்ற விடியோ கேம்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது உருவாக்கப்படுகிற விடியோ கேம்கள் அனைத்துமே அமெரிக்காவில் உருவாக்கப்பபவை. அவர்கள் உருவாக்குகிற அந்த ஒரிஜினல் சி.டி. அதிக விலையாகும். ஆயிரக்கணக்கான ரூபாயாகும். அந்த ஒரிஜினல் சி.டி. இங்கு எங்கும் கிடைப்பதும் இல்லை. யாரும் வாங்குவதற்கும் முன்வரமாட்டார்கள். இங்கு விற்கிற எல்லா சி.டி.களுமே சைனாவிலிருந்து வருகிற சி.டி.க்கள்தான். அமெரிக்காவில் விடியோ கேம்ஸ் சி.டி.க்கள் உற்பத்தியாகிற அதேநேரத்தில் சைனாவில் டூப்ளிகேட் சி.டிக்களும் தயாராகி விடுகின்றன. அதைத்தான் விற்கிறோம். இந்திய நடிகைகளைக் கொண்டு அமெரிக்கர்கள் விடியோ கேம்கள் செய்யமாட்டார்கள். மொபைல் கேம்ஸ்களில் வருவதுபோல இங்கு யாராவது உருவாக்கினால்தான் உண்டு'' என்கிறார் சென்னை ரிச்சி தெருவில் விடியோ கேம்ஸ் பிளேயர், சி.டி விற்கும் கடை வைத்திருக்கும் ரமேஷ்.

விடியோ கேம்ஸ் வருகிறதோ இல்லையோ? இப்போது மொபைல் கேம்ஸில் நடிகைகள் இடம்பெறும் கேம்கள் பிரபலமடைந்து விட்டன. இப்போது இந்த மொபைல் கேம்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பி விளையாடுகிற விளையாட்டாக சமீரா ரெட்டி, மலாய்க்கா அரோரா, பிபாஷா பாசு போன்றோர் தோன்றுகிற கேம்கள் பிரபலமாக இருக்கிறது. இதில் சமீரா ரெட்டியின் கேம்ஸ் மிகவும் த்ரில்லிங்காகவும், விறுவிறுப்பாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப்போல மலாய்க்கா அரோரா தோன்றும் கேம்ஸ் சக்கைப்போடு போடுகிறது. இந்த விளையாட்டுகளைத் தயாரித்திருப்பவர்கள் இந்தியாவின் முதல்தர விளையாட்டு நிறுவனமான "பாரடாக்ஸ்'. இப்போது ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி மொபைல் போன்களிலும் இச் சேவை இருக்கிறது. இந்த ஆட்டம் விளையாடுகிறவர்களில் அதிக ஸ்கோர் பெறுகிற 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிகை சமீரா ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
"நானும் ஒரு வீடியோ கேம் பிரியைதான். இப்படி ஒரு மொபைல் கேமின் முதல் ஹீரோயினாக என்னைத் தேர்வு செய்திருப்பது மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன்.'' என்கிறார் சமீரா.
திரைப்பட ரசிகர்கள்போல இந்த கேம்ஸில் தோன்றுகிற நடிகைகளுக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. படத்தில் வருகிற கேரக்டர்களின் பெயரைக் கொண்டு, "சீயான்' விக்ரம், "காதல்' சந்தியா என்று அழைப்பதுபோல இவர்கள் கேம்ஸ் கேரக்டர்களின் பெயர்களைக் கொண்டு நடிகைகளை அழைக்கிறார்கள். இப்போது வந்துள்ள மொபைல் கேம்ஸில் ரசிகர்களுக்கு மட்டும்தான் கொண்டாட்டம் என்றில்லை. இதில் தோன்றுகிற நடிகைகளுக்கும் லாபம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மொபைல் கேம்களில் தங்கள் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு வருடம் இரண்டு வருடத்திற்கு அனுமதித்து அதற்கு தனியாக நடிகைகள் பணம் கறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. பாலிவுட் நடிகர் நடிகைகளைத் தொடர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு மொபைல் கேம்களில் தோன்றுகிற பாதிப்பு ஏற்படாமல் இருக்கப் போவதில்லை. பெரியதிரையில் தோன்றிய நடிகைகள் யாரும் சின்னத்திரை பக்கமே வரமாட்டார்கள் என்றுதான் முதலில் கருதினோம். வாய்ப்பு கிடைக்காத நடிகர், நடிகைகள் எல்லாம் இப்போது சின்னத்திரைக்குப் படையெடுக்கவில்லையா? சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைக்காத பட்சம், மொபைல் கேம்ஸ், விடியோ கேம்ஸில் தங்கள் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அனுமதிக்கிற நிலைக்கு வரலாம்.

மார்க்கெட் இல்லாத நடிகர், நடிகைகள் எல்லாம் இப்படி இறங்கி வரலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாம் இதற்கு எப்படி அனுமதிப்பார் என்பதுதானே உங்கள் சந்தேகம்?
ரஜினிகாந்த் அவரது மகள் செளந்தர்யா எடுக்கும் "சுல்தான்' என்ற அனிமேஷன் படத்தில் நடிக்கவில்லையா? இதற்கு இறங்கி வந்தவர், அடுத்தகட்டமாக மொபைல் கேம்ஸ் பக்கம் வரமாட்டார் என்பது மட்டும் என்ன நிச்சயம்?

ஷில்பாஷெட்டி - சர்ச்சை ஷெட்டி!
ஷில்பாஷெட்டி - சர்ச்சை ஷெட்டி!
சர்ச்சை என்று பெயரை மாற்றி வைத்துக்கொள்ளலாம் நடிகை ஷில்பா ஷெட்டி. பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் ஜேடேகூடேவுடன் சர்ச்சை; ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கூரே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சர்ச்சை என்று ஆரம்பித்த சர்ச்சைகளே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் கிளம்பிவிட்டது அவர் குறித்து புது சர்ச்சை. இந்த சர்ச்சையும் மையம் கொண்டிருப்பது லண்டனிலேயே. வருகிற டிசம்பர் 12}ந்தேதி, லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில், "மிஸ்.பாலிவுட்' என்னும் பெயரில் மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளார் ஷில்பா. பரதநாட்டியம் கற்றுக்கொண்டு பாலிவுட்டில் நுழையும் பெண், சினிமா நடனக்கலை கற்றுக்கொண்டு, ஐரோப்பிய நாடுகளில் பாலிவுட் நாட்டியத்தைப் பிரபலப்படுத்துகிறார் என்பதுதான் "மிஸ். பாலிவுட்' கதையாம். கிட்டத்தட்ட ஷில்பாஷெட்டியின் கதைபோல். இந்த ஷோ குறித்த அறிவிப்பு வெளியான உடனே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. லண்டன் வாசிகள் டிக்கெட் கிடைக்காத வேதனையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சர்ச்சையைக் கிளப்பி இருப்பவர் வைபவி மெர்ச்சன்ட். இவர் நடனப்பயிற்சியாளர் மற்றும் கதையாசிரியர். "மெர்ச்சன்ட் ஆஃப் பாலிவுட் ' என்கிற பெயரில் கடந்த 2005}ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் மேடை நிகழ்ச்சியின் நடனப்பயிற்சியாளரும் கதையாசிரியரும் இவரே. "மெர்ச்னட் ஆஃப் பாலிவுட்'கதையைத்தான் ஷில்பா திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அவர். "கறுப்பி... நாய்...' என்றெல்லாம் ஜேடே கூடே சொன்னதாக நடந்த சர்ச்சையின்போது லண்டன்வாசிகள் உட்பட உலகமே ஷில்பா பக்கம் இருந்தது. இப்போது ஷில்பா பக்கம் நிற்பவர் யாரோ?

Thursday, November 29, 2007

குரலை நெறிக்காதீர்கள் மலேசிய அமைச்சரே!
குரலை நெறிக்காதீர்கள் மலேசிய அமைச்சரே!தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(30.11.2007)செய்தி:


மலேசியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்கு,
மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "முதல்வர் கருணாநிதி இருப்பது தமிழகத்தில்; மலேசியாவில் அல்ல.
அவருடைய மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி அவர் கவலைப்பட வேண்டும். இங்குள்ள பிரச்சினை
பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை. எனவே இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்து பேசாமல் இருந்தால் போதும்' என்று
நஸ்ரி அஜீஸ் தெரிவித்ததாக "நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.


கேள்வி:

மலேசிய அமைச்சரே, கியூபா புரட்சியாளர்... மன்னிக்கவும் உலகப் புரட்சியாளர் சேகுவேரா புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.
சேவின் பாரம்பரியம் தெரிந்துகொள்ளும் நோக்கோடு ஒருவர் கடிதம் எழுதியிருப்பார். அந்தக் கடிதத்திற்கு சே பதில்
எழுதியிருப்பார்: "இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி
நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்.'' என்று சொல்வார். இந்தக் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ..
சொரணையுள்ள தமிழர்கள் எல்லோருக்கும் கட்டாயம் பொருந்தும். உலகில் எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
சேகுவேராவைப்போல் ஆயுதம் தாங்கிப் போராட முன்வராவிட்டாலும், நியாயத்தை எடுத்துச் சொல்ல தமிழன் தயங்கியதே
இல்லை. அந்தவகையில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். நீங்கள் சொல்லிய
வண்ணம் தமிழகத்தில் பிரச்சினைகள் இல்லையா? என்றால், பிரச்சினையே இல்லாத நாடு, மாநிலம் எது என்று சொல்லுங்கள்
பார்க்கலாம். புத்த மதத்தை அதிகமாகப் போதிக்கிற நாடுகளில் எல்லாம்கூட அளவு கடந்த பிரச்சினைகள்தானே. காய்ச்சல்
கண்டிருக்கிற மகனை விட்டுவிட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகனைத்தானே முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லவேண்டும். கேட்கிற உரிமையைக்கூட வழங்காத உங்கள் ஆட்சி முறையை குறை கூற யாருக்கும் உரிமை உண்டு. கேட்கிற
உரிமையை பறிக்கிற அதிகாரம் உங்களுக்கு மலேசியாவோடு முடியட்டும். கடல் தாண்டியும் அதிகாரப் பரவலாக்கம் செய்ய
விரும்பாதீர்கள். குரலை நெறிக்க வராதீர்கள்... இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லீம் சமுதாயத்தினர் சிறுபான்மை மக்கள். அவர்களுக்கு ஒரு குடையாக கருணாநிதி என்றைக்குமே இருந்து வந்திருக்கிறார். உங்கள் நாட்டில் இப்போது வேறுவிதமான நிலை. அங்கு இந்துக்கள் உங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால், அதில் நியாயம் இருக்கிறபட்சத்தில் குரல் கொடுப்பது தவறில்லை. என்றைக்குமே தமிழன் நீதியின் பக்கம். சிறுபான்மையினர் பக்கம். (கலைஞரைப் பற்றி காரசாரமாக விவாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம். சிறுபான்மை மக்களுக்காக அவர்
என்றைக்குமே குரல் கொடுக்க தயங்கியதே இல்லை.) நீதியை நிலைநாட்டத் தயாரா அமைச்சரே?


பச்சைவளையல் காக்குமா பச்சிளங்களை?தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)செய்தி:
சென்னையில் சில பகுதிகளில் புது பீதி. பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு உடனே பச்சை வளையல் வாங்கிச் அணிவிக்க
வேண்டுமாம். ஒரு டஜன் பச்சை கண்ணாடி வளையல் வாங்கி அதில் பாதியை அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குப்
போடவேண்டுமாம். மீதியை குழந்தை கையில் அணிவிக்க வேண்டுமாம். இல்லையேல் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று
பரவியுள்ளது பீதி. அதுவும் இந்த வளையலைச் சொந்தக் காசு கொடுத்து வாங்கக்கூடாதாம். உறவினர்கள் அல்லாதவர்கள் ஐந்து பேரிடம் ரூபாய் இரண்டு வீதம் பெற்று வளையல் வாங்கவேண்டும் என்பது புரளியில் முக்கியமான விதியாம். இதனால்
சென்னையில் உள்ள வளையல் கடை முழுவதும் ஒரே கூட்டம். இந்தப் புரளியால் பச்சை வளையலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு
உள்ளது.

கேள்வி:


திருந்தவே மாட்டீர்களா? பெரியார் தோன்றிய மண்ணில் இப்படிப்பட்ட புரளிகளை நம்புகிறவர்கள் இருக்கிறீர்களே... எத்தனை
பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதே இல்லையா? மகளுக்குத் தாய் பச்சை புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும். தாய்க்கு
மகள் மஞ்சள் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று முன்பு புடவைக்காரர்கள் புரளி கிளப்பிவிட்டார்கள். எல்லோரும்
புடவை வாங்கிக் கொடுத்தீர்கள். அதைப் பார்த்து இப்போது வளையல்காரர்கள் பச்சை வளையலை வாங்கி அணிய வேண்டும்
என்று புரளியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். அது தெரியாமல் நீங்கள் வளையல் கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒருவேளை கார் நிறுவனத்தார், பேருந்து நிறுவனத்தார், விமானம் விற்பன்னர்கள் யாராவது வெள்ளை நிறத்தில் கார், பேருந்து,
விமானம் வாங்கிவிட்டால் நல்லது என்று புரளியைக் கிளப்பிவிட்டால் உடனே வாங்குவீர்களா? யோசிக்க மாட்டீர்கள். வாங்க
முடிகிற விலையாக இருப்பதால்தானே இப்படிப் புரளியை நம்பி ஓடுகிறீர்கள். அங்கே என்ன ஒரு குரல் கேட்கிறது... பரிகாரம்
செய்துகொள்வோம் என்றுதானே... அடப் போங்கய்யா நீங்க திருந்தவே மாட்டீங்க....
குறைந்தபட்சம் மடமைத்தனம் எனும் குழியில் உங்கள் குழந்தைகளையாவது இறக்காமல் இருக்கப் பாருங்கள்

யானை - குருடர் கதை!


யானை - குருடர் கதை!யானை - குருடர் கதை ஒன்று. குருடர்கள் ஒவ்வொருவராக யானையைத் தடவிப் பார்த்து வெவ்வேறு கருத்துக்களைத்
தெரிவித்தார்கள். யானையின் காதுகளைத் தடவியவர் முறம் என்றார்: வாலைத் தடவியவர் துடைப்பம் என்றார் - எனப் போகும் .
கதை. இந்தக் கதையை வேலையோடும் ஒப்பிடலாம். வேலையை யானையாகக் கருதி கருத்துச் சொல்லும் சில கதாபாத்திரங்களின்
அறிமுகம்:


நண்பர் ஒருவரின் அடையாளம்: அழுக்குச் சட்டை; கோணிப்பை. புதியவர்களிடம் அவர் அறிமுகம் செய்துகொள்ளும் முறை:


"என் பேரு பொறுக்கி சார். ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
எட்டுத்தொகை சார்... நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்...'' என மூச்சிரைக்க வேகமாகச் சொல்வார்.
இறுதியாக "சார்... நான் நெருப்பாற்றில் நீந்திக்கிட்டு இருக்கேன். கோடம்பாக்கம் வரை போகணும். காசு கொடுத்து உதவுனா நல்லா
இருக்கும். வேணும்னா இந்தப் பழைய புத்தகத்தை வைச்சுக்கிட்டுக் கொடுங்க.'' என்று கோணிப் பையிலிருந்து பழைய புத்தகங்களை
எடுத்துக் கொடுப்பார். விரும்பியவர்கள் வாங்கிக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஏமாத்துக்காரர் என்று ஒதுங்கிப் போவார்கள்.
இதே யுக்தியை எல்லோரிடமும் பயன்படுத்தியதினாலோ என்னவோ சாதாரண எழுத்தாளர்கள் தொடங்கி பிரபல எழுத்தாளர்கள்
வரை நண்பருக்கு நெருக்கம்.


இந்த நண்பரிடம் ஒரு நாள் கேட்டேன்: "இப்படி ஏன் கஷ்டப்படுறீங்க... ரெண்டு ரூபா மூணு ரூபா கொடுக்குறாங்க. அதை
வைச்சுக்கிட்டு வாழ்க்கையை எப்படி ஓட்ட முடியும்? எங்கேயாவது ஓர் இடத்தில் வேலை பார்க்கக்கூடாதா?'' என்றேன். அதற்கு
நண்பர் சொன்ன பதில்: "என்னை... என்ன... உங்களை மாதிரி யாரிடமாவது அடிமைத்தொழில் பார்க்கச் சொல்லுறியா?'' என்றார்.


நண்பரின் இந்தக் கூற்றுக்குப் பதில் அளிக்கிறது ஒரு முதியவரின் வாழ்க்கை.


இரயில்வே பாதுகாப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். 75 வயது இருக்கும். வசதி வாய்ப்புக்கும் குறைவில்லை. ஓய்வடைந்த
பிறகும் முதியவரால் வீட்டில் சும்மா இருக்கமுடியவில்லை. வீட்டுக்கருகே உள்ளே ஒரு சிக்னலில் போக்குவரத்துக் காவலர்களோடு
இணைந்து சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். இதனை அவரது மகன்கள் ஏற்கவில்லை. மானம் போவதாகக் கூறி முதியவரோடு
சண்டையிட்டனர். அப்போது முதியவர் மகன்களிடம் சொன்னார்: "ஏதாவது வேலை செஞ்சாத்தான் சாப்பாடே எனக்கு உள்ள
இறங்கும். வெயில்ல நின்னாலும் எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. காசு பணத்துக்காக இதை நான் செய்யவில்லை.'' என்று
சொல்லிவிட்டு மகன்களைப் பிரிந்து தனியாக வசித்து வருவதுடன் சாலை பாதுகாப்பு பணியையும் தொடர்கிறார் முதியவர்.


இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் விடுத்து வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. ஆடு மேய்கிற வேலையானாலும், அரசாங்க
வேலைதான் செய்வேன்'' என்று படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் வயதைக் கடத்திக் கொண்டிருப்பவர்கள் கணக்கில்
அதிகம். அதேசமயம் அரசாங்க வேலையையும் உதறி வந்தவர்களும் உண்டு. - சில விகிதம். எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்க
அலுவலகத்தில் இளநிலை உதவியாளர். திடீரென அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவர் செய்ய தொடங்கியது
விவசாயம். வேலை துறவுக்கு அவர் சொன்ன காரணம்: "வயல்ல ஏதாவது வேலை செஞ்சாதான் எனக்குத் தூக்கமே வரும்.
ஆபீசுக்கும் போயிட்டு விவசாயத்தையும் பார்க்க முடியவில்லை.'' என்றார்.


அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள்போல் வெளிநாட்டில் வேலை செய்வதே சிறப்பெனச் சொல்வோர்
பட்டியலையும் போடலாம். அதற்கு நிகராய் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு, தாய் மண்ணிலேயே தொழில் தொடங்குவோர்
பட்டியலையும் தேடலாம். இத்தோடு "சம்பாதிக்கத்தான் வேலைக்கே சேர்ந்தேன். அரசாங்கம் கொடுக்கிற சம்பளமெல்லாம்
போதலை' எனச் சொல்லி கிம்பளத்துக்கு அலையும் பேய்களையும் காணலாம்: யுத்தக் களத்தில் தந்தையையும், கணவனையும்
நாட்டிற்காகப் பறிகொடுத்துவிட்டு மகனையும் இராணுவத்தில் சேர்க்கத் துடிக்கும் தாய்களையும் காணலாம். இப்படி நல்லதும்
அல்லதுமாய் சொல்லும் கதாபாத்திரங்கள் பல உண்டெனினும் நான் விரும்பும் ஒரு கதாபாத்திரம்.


சென்னை அண்ணாசாலை நடைபாதையில் பிச்சை எடுக்கும் ஒரு முதியவர். யாரிடமும் காசு வலிய கேட்கமாட்டார். தட்டை
ஏந்தியபடி நடைபாதையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார். காசு விழுந்தாலும் சரி, விழாவிட்டாலும் சரி! இவரிடம்,
"ஓரமாக அமர்ந்து பிச்சை எடுக்கலாமே' என்றால், "என்னால் இந்த வயசுல வேறு வேலை செய்யமுடியாது. மெதுவாக நடக்கத்தான்
முடியும். இப்படி நடக்கறததான் நான் செய்யிற வேலையா நினைக்கிறேன். உட்கார்ந்துகிட்டே வாங்கிச் சாப்பிட மனசு வரல.''
என்றார்.


"பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்றார்கள். இவர் பிச்சையெடுப்பது கற்பதற்காக இல்லாவிட்டாலும் , இவரிடம் கற்க
வேண்டியவையாய் நான் கருதுபவை:


1. முடிந்ததைச் செய்கிற முனைப்பு.

2. கடமையைச் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காத குணம்.

3. உள்ளத்திற்கு அடிபணிந்து உண்மையாய் நடக்கிற பாங்கு.

4. "என்னால் முடிந்தால் எந்தப் பணியையும் செய்வேன்' எனச் சொல்லும் நெஞ்சுரத்தின் அடையாளமாய் விபத்துகளுக்கு
அஞ்சாமல், அண்ணாசாலை நடைபாதையிலேயே நடக்கும் தீரம்.


நடைபாதையில் நடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று எண்ணுகிறவர்களுக்கு...


வயதானதால் மட்டுமே வேறு எதுவும் செய்யமுடியாமல், சொந்த பந்தங்களின் உதவியும் இல்லாததால் பிச்சையெடுக்கும் இவர் ஒரு
குருடர்.(நடைவண்டிச் சாலைகள்-11)

குஷ்பு செருப்பு....வருதா வெறுப்பு?குஷ்பு காலு....
குஷ்பு செருப்பு...
உங்களுக்கு எதுக்கு வெறுப்பு?தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)செய்தி:
இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் குருமூர்த்தி மற்றும் அதன் பொறுப்பாளர்கள் இணைந்து கும்பகோணம் 2}வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாபுலால் முன்பு ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளனர். அதில்:"28.11.2007 தேதியிட்ட ஒரு வார இதழைப் படித்தபோது அதில் குஷ்பு முப்பெரும் தேவியர் சிலைகள் மற்றும் முப்பெரும் தேவியரின் திருஉருவங்களுக்கு பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் ஆகியவற்றை அவமதிக்கும் வண்ணம் முப்பெரும் தேவியரின் திரு உருவ விக்கிரகங்களுக்கு அருகில் நாற்காலியில் காலணியுடன் கால்மேல் கால்போட்டு அமர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் அதில் பிரசுரமாகி உள்ளது.குஷ்புவின் இந்தச் செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணமாக அமைகிறது. இந்து கடவுள்களின் திரு உருவ சிலைகள் பூஜிக்கப்படும் இடங்களில் ஆன்மீக சம்பிரதாயங்கள், வேதங்களின்படி அனுசரிக்கப்படவேண்டும்.முப்பெரும் தேவியர் இந்துக்களால் குறிப்பாக தமிழ் மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வங்களாவர். இந்தத் தெய்வ திரு உருவ சிலைகளையும், தெய்வ திருஉருவ சிலைகளுக்கு புனித பொருட்களையும் அவமானப்படுத்துவது இந்து சமயத்தையே அவமானப்படுத்தும் செயலாகும்.இந்தச் செயல்கள் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 295, 295ஏ, மற்றும் 296படி குற்றமாகின்றன.வழிபாட்டுத்தலம், வழிபாட்டுக்குரிய தெய்வ திரு உருவங்களை அவமதிக்கும் வண்ணம் குஷ்பு செயல்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தார் சம்மன் செய்து விசாரித்தும், மனுதாரர் தரப்பு சாட்சிகளை விசாரித்தும் மற்றும் மனுதாரர் தரப்பு ஆவணங்களைப் பரிசீலனை செய்தும் தகுந்த உத்தரவிடவேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.கேள்வி:இந்துக்கள் மனதை அல்ல; எந்த மதத்தினர் உட்பட யாருடைய மனதையுமே புண்படுத்தக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், இந்துக் கடவுளை அவமதித்ததாகச் சொல்லி வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தால், இவர்கள் ஏதோ குஷ்புவைக் கொண்டு புகழ் பெறுவதற்காக வெளியிட்டதாகத் தெரிகிறது. ஏதோ நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கிறார் குஷ்பு. அவர் பின்புறம் தெய்வச்சிலை. இப்புகைப்படம் ஒரு பூஜை நிகழ்ச்சியின்போது எடுத்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது எடுத்து இருக்கலாம். குஷ்பு அமர்ந்திருக்கிற இருக்கைக்கு அருகிலேயே வேறு சில இருக்கைகள் இருக்கின்றன. அதில் அமர இருந்தவர்கள் யார்? ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களை நிகழ்ச்சி நடத்துகிறவர்கள்தான் இருக்கையை ஒதுக்கி விருந்தினர்களை அமர வைப்பார்கள். அப்படித்தான் குஷ்பு அமர வைக்கப்பட்டிருப்பார் என்று அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது. இவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமானால் குஷ்பு தன் கால் மீதுதானே கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அதில்தானே அவரது செருப்பு இருக்கிறது. இந்தப் பூமியை தெய்வம்தான் படைத்தது என்கிறதுபோது தெய்வம் எல்லா இடத்திலேயும்தானே இருக்கிறது. அப்படியானால் செருப்பே போடாமல்தானே இருக்க வேண்டும்? இந்த வாதத்தை பகுத்தறிவு வாதமாக நாத்திக வாதமாக எடுத்துக் கொண்டால்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.கேட்ட வரங்கள் கொடுக்காத வெறியில் ஏறிமிதித்து விநாயகர் சிலையை அடித்து உடைப்பதுபோல் அல்லவா அந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது இருக்கிறது. தூள்தூளாக்கி கடலில் கரைக்கவில்லையா? இப்படி அடித்து உதைத்து விநாயகரைக் கரைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கவில்லையா? இன்றைக்கு அதே நீதிமன்றத்தில் தெய்வத்தை அவமதித்ததாக வழக்கும் தொடருகிறீர்கள்? இருந்தாலும் செருப்பைப் போட்டுக் கொண்டு.... என்று இழுக்கிறீர்களே.... தெய்வ அவதாரமான இராமனே செருப்பு போட்டுக்கொள்ளவில்லையா? அந்தச் செருப்பை கழற்றி வாங்கி இராமன் அமர்ந்து ஆட்சி புரிய வேண்டிய இடத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்யவில்லையா?
(அதற்காக குஷ்பு செருப்பைச் தெய்வச் செருப்பு என்று சொல்லவரவில்லை. குஷ்பு இட்லி என்று சொல்வதற்காகவே அந்த இட்லியை விரும்பிச் சாப்பிடுவதும் இல்லை.)

Wednesday, November 28, 2007

பந்திக்கு இந்தி... நிந்திக்கத் தமிழ்?
தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)

செய்தி:
வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டிருப்பது குறித்து நேற்று பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று அலுவலக மொழிகளுக்கான பாராளுமன்ற சிபாரிசு குழு பரிந்துரை செய்திருப்பதாகக் கூறி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் மையப்பகுதியை நோக்கி விரைந்தனர். அவர்கள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி முன்பாகச் சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினார்கள். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயன்றார். அது பலனளிக்கவில்லை. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இருபது நிமிடம் சபையை ஒத்தி வைத்தார்.

கேள்வி:
இந்திக்குப் பந்தி வைத்துக்கொண்டு மற்ற மொழிகளை நிந்திப்பதை ஆண்டாண்டு காலமாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அண்ணா போட்ட வித்தால் இந்தி எதிர்ப்பை நமது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகவே வைத்திருக்கிறோம். இப்போது நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம் என்று குரலை மாற்றிப் பேச முயற்சித்தாலும், உண்மை ரூபம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஒருவகையில் பார்க்கிறபோது, மொழிகள் எதையும் வெறுக்கக்கூடிய அவசியம் இல்லை. மொழிவளம் மிக்கக் மொழிகளா? என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. மொழிவளமே இல்லாத மொழியாக இருந்தால்கூட ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கு, ஒரு குறிப்பிட்டச் சமுதாயத்தினருக்கு உயிர் கொடுக்கிற மொழியாக: ஒருவரோடு ஒருவரை இணைப்பதாக மொழி இருக்கிறது. இதனால் எல்லா மொழிகளையும் ஆராதிக்க வேண்டியது அவசியம். ஒப்பற்ற ஒன்று அழிகிற நிலையில் இருக்கிறதென்றால் அதைக் காப்பாற்ற எப்படி முயலுவோமோ? அப்படி அழிகின்ற அந்த மொழியைக் காக்க முனைவது தவறொன்றும் இல்லை. நாலைந்து பேர் மட்டுமே பேசி வருகிற மொழிகள் எல்லாம் இருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது தமிழ்மொழி கூட அழிந்து வருகிற பட்டியலில்தான் இருக்கிறது. அழுகிற பட்டியலில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது அவ்வளவுதான். இதனைக் காப்பாற்ற வேண்டியது தமிழராகிய நம் எல்லோரின் கடமை. ஆனால் தமிழர்கள் சிலரே இதற்கு எதிர்ப்பாக இருப்பதுதான் வேடிக்கை. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாட சட்டரீதியாக அனுமதி பெற முயற்சித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நம் தமிழ் பங்காளிகள் எல்லாம் இருக்கிறார்கள். தமிழை வைத்துக்கொண்டு எல்லா நாட்டினரோடு தொடர்பு கொள்ள முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். கட்டுமரத்தில் சென்றானா? அல்லது வெறும் கட்டையைக் கொண்டு சென்றானா? என்றெல்லாம் தெரியவில்லை. பழங்காலத்திலேயே தமிழன் கடல் கடந்து சென்று வணிகம் செய்திருக்கிறான். அப்போது மற்ற மொழிகளை அறிந்துகொண்டுதான் பயணித்திருப்பானா? வாணிபம் செய்திருப்பானா? ஒருவேளையில் இது அந்தக் காலத்தில் பொருந்திருக்கலாம். இப்போது உலகம் முழுவதுமே ஆங்கிலமாகப் போய்விட்டது என்கிறீர்களா? மறுக்கவில்லை. தொடர்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தமிழை மறந்துவிடாதீர்கள். மற்ற மொழிக்காரன் தூற்றுவது இருக்கட்டும். தமிழர்களாகிய நீங்கள் தூற்றுவதை முதலில் நிறுத்துங்கள். உலகிலேயே அதிகமானோர் சாப்பிடுவது மனிதக்குரங்காக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நீங்களும் அதை விரும்பிச் சாப்பிடுவீர்களா என்ன? அடுத்தவருக்காக நீங்கள் எப்போதும் சுவாசிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் மாற்றிக்கொண்டால், இந்திக்குப் பந்தி வைக்கிற வகையில் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளில் இந்தியில் தீர்ப்பு வழங்க சிபாரிசு செய்கிறவர்கள், தமிழில் வாதாட அனுமதி வழங்குவதற்கு யோசிக்கத் தயங்கமாட்டார்கள். தயாரா தமிழர்களே?

அறுபடும் மனிதச்சங்கிலி!

அறுபடும் மனிதச்சங்கிலி!
நடைவண்டிச் சாலைகள் (10)

(28.11.2007

காலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் பேசினேன். மதியம், கியூபா நாட்டு மக்களின் "என்றும் தோழர்' ஃபிடல் காஸ்ட்ரோவிடம் பேசினேன். மாலையில் மேற்கிந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவிடம் பேசினேன். இதுபோன்று ஒருவர் மூச்சுவிடாமல் சொன்னால், பொய்யெனக் கருத வேண்டாம். இவையெல்லாம் எளிய சாத்தியம்.


இன்று உலகின் அகலம் நீளம் எல்லாம் சுருங்கி ஒரு புள்ளியில் குவிந்து கிடக்கிறது. வேற்றுக் கிரகங்கள் பற்றி வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கணினியில் அலசலாம். இணையம் கொண்டு இணைக்க முடியாத இதயங்கள் இல்லை. எவ்வளவு தொலை தூரத்தில் உள்ள மனிதரையும் தகவல் தொடர்புச் சாதனங்கள் எப்போதும் அருகிலேயே வைத்து அழகு பார்க்கிறது. இத்தகைய மறைமுக மக்கள் இணைப்புப் புரட்சியால் முகம் மலரலாம். ஆனால் அகம் மலர முடிவதில்லை. நேர்முகமாக பல துண்டுகளாக மனிதச் சங்கிலி அறுபடுகிற வீழ்ச்சியைத்தான் நாம் காண முடிகிறது.

ஐந்தாயிரம் பேர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடும்பத்தாருக்கு மற்றொரு குடும்பத்தாரை அறியாத அவலம். பத்தடி தூர இடைவெளியில் உள்ள எதிர் வீட்டாரின் பெயர் தெரியாத கேவலம் என வழுக்குப் பாதையில் பலர் வழுக்கி விழுந்து வருகின்றனர். அண்டை அயலாரோடு பழகுவதே பாவம் என்கிற ஓர் எண்ணத்தை மனதில் பதியம் போட்டு வைத்துள்ளனர். இது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சாதி, மதம், வசதி, அரசியல், மொழி போன்றவற்றின் ரீதியாக மனித சமுதாயம் முன்னரே பிளவுப்பட்டுக் கிடக்கிறது. இப்போது மேலும் பிளவு அடைவதற்கான புதிய வழியையும் கண்டுள்ளார்கள். அதற்கு தனிமை (privacy) என்று பெயர் சூட்டியுள்ளனர். தனிமை என்றால் கதவு ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு, சூரிய வெளிச்சத்தைக்கூட உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிவிட்டு தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்வதுதான். வெளியில் இடியே விழுந்தாலும் உள்ளே கேட்டுவிடக்கூடாது. வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டுதான் நம்மை அடிமைப்படுத்தி கொள்ளையடித்துச் சென்றார்கள். இன்றும் நாம் பலவகையில் பிரிந்து கிடக்கிறோம். கொள்ளைக்காரர்கள் இரத்தம் வழிய அடித்துப்போட்டு கொள்ளையடித்துச் செல்கிறார்கள். இது கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அன்றாடம் நடக்கிற நிகழ்வாகிவிட்டது. தன் வீட்டில் கொள்ளை போகிறபோதுதான் கேட்க நாதி இல்லையே என்று அக்கம் பக்கத்து வீட்டாரைக் கோபத்தோடு பார்க்கத் தோன்றும். அதுவரை நாம் நீரோக்களாக இருப்பதுதான் நியாயமா?

இந்தத் தனிமை பிளவால் கொள்ளைகள் மட்டுமல்ல; தற்கொலை, கொலைகளும் அதிகரித்து வருகிறது. வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சோக அலை ஆவேசம் பொங்க அலையும். அந்த அலைகளை எதிர்த்து நீச்சல் போட்டால்தான் கரை சேர முடியும். நீந்த முடியாதவர்களின் முடிவுதான் தற்கொலை. நீந்துவதற்கு உந்துசக்தியாக இருப்பவர்கள்தான் அண்டை அயலார்கள்.

ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு போதி மரம். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல ஒருவரின் சோகத்தைப் போக்கும் மருந்து மற்றொருவரின் பேச்சு. இதை மற்றவரோடு நன்கு பழகி உரையாடுதல் மூலமே உணரமுடியும். கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த காவலர்கள் ஒழுக்கச்சீலர்களாக, கடமை தவறாத கண்ணியவான்களாக, கண்டிப்பானவர்களாக இருந்தாலே போதும் தானே குறைந்துவிடும் என்று பலர் சொல்லக்கூடும். ஒரு பக்கத் தாழ்ப்பாள் கொண்டு இருபக்கக் கதவுகளைச் சாத்திவிட முடியாது. காவலர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அந்த ஒத்துழைப்பு எந்தவித பிளவுகளுக்கும் இடம்தராமல் ஒரு தாயின் பிள்ளைகளாய் இணைந்திருந்து சமுதாயத்தைக் காக்கவேண்டும் என்பதுதான். இராணுவம்தான் நாட்டைக் காக்கின்றதே என்று இதரப் பிரிவு காவலர்கள் தூங்கினால் உள்நாட்டுக் கலவரம் மூண்டுவிடும். இது பகை நாடுகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல வாய்ப்பு ஏற்பட்டு நம் நாட்டைக் கைப்பற்றிவிடும். இதைப்போலவே காவலர்கள் இருக்கிறார்கள் என தூங்குதல் ஆகாது. எனவே நாம் அறுபடும் மனிதச்சங்கிலியாக இல்லாமல் சமுதாயத்திற்கான இராணுவ வீரராக இருப்போம். அப்படி இணைந்திருந்தால்தான் கொலை கொள்ளை மட்டுமல்ல; இயற்கை சீற்றங்களால் நிகழும் விபத்து உட்பட எல்லாவற்றிலிருந்து மீட்டு இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும்.

`மீசையைத் தலையில் கட்டிக்குவேன்!'மீசையின் இரண்டு பக்கமும் மல்லிகை பூவைச் செருகிக் கொண்டு "இம்சை அரசன்' படத்தில் வந்த வடிவேலுவைப் பார்த்து சிரித்தவர்கள் எல்லாம் கோவிந்தராஜன் மீசையைப் பார்த்தால்?
மாங்காயையோ, தேங்காயையோ, பூசணிக்காயையோ மீசையின் இரண்டு பக்கமும் வைத்து அவரைத் தூக்கிக்கொண்டு நடக்கச் சொன்னாலும் சொல்வார்கள்! இப்படிச் சொல்வதால் கோவிந்தராஜனை வைத்து "காமிடி...கீமிடி' செய்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சென்னை தி.நகர். கிருஷ்ணா சுவீட்ஸ் கடையில் செக்யூரிட்டியாக நிற்கும் அவரைப் பார்த்தால் நாங்கள் சொல்வதை உண்மை என நம்புவீர்கள். ஒன்றரை அடி நீளமுள்ள மீசை வைத்திருக்கிறார். இரண்டு பக்கமும் ஏதோ குத்தீட்டி போல விறைத்து நிற்கும். கொஞ்சம் தூரம்... நின்றே அவரிடம் பேசினோம்:
""இப்போது ஐம்பது வயதாகிறது. மீசை வளர்க்கிற ஆர்வம் கடந்த ஆறேழு வருடங்களுக்கு முன்தான் ஏற்பட்டது. அதுவும் எனக்குத் தானாக அந்த ஆர்வம் வந்துவிடவில்லை. திருச்சிதான் என்னுடைய சொந்தவூர். அங்குள்ள ஒரு சலூன் கடையில்தான் எப்போதும் முடிவெட்டுவேன். மீசையை நறுக்கி ஷார்ப்பாக வைத்துக்கொள்வதுதான் என் வழக்கம். அந்தச் சலூன்காரர்தான் முதலில் கடா மீசையை எனக்கு வைத்து நன்றாக இருக்கிறது என்று சொன்னார். ஆரம்பத்தில் கடா மீசை வைத்தது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. "மீசை...மீசை' என்று எல்லோரும் கூப்பிடுவார்களோ என்கிற பயம் வேறு இருந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, "எப்படி மீசையை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்கள் மீசை நன்றாக இருக்கிறது' என்று எல்லோரும் பாராட்டத்தான் செய்தார்கள். இதன் பிறகுதான் மீசை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் வந்தது.
முதலில் நான் கூட இவ்வளவு பெரிய மீசை வளர்ப்பேன் என்று நினைக்கவில்லை. தினமும் காலை எழுந்ததும் மீசையை இரண்டு பக்கமும் சீவி, தேங்காய் எண்ணெய் கொண்டு தடவி விடுவதை மட்டும் செய்துகொண்டிருந்தேன். இப்படிச் செய்யச் செய்ய மீசை கருகருவென வளர்ந்தது. இப்போது ஒன்றரை அடிக்கும் மேல் மீசை வளர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இவ்வளவு நீளத்திற்கு யாரும் மீசை வளர்க்கவில்லை. வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இதைவிட நீளமான மீசை வைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நீளமான மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இந்த இடத்தில் ஓர் உண்மையையும் சொல்லவேண்டும். இதுவரை நீளமான மீசை வளர்ப்போருக்கான போட்டி எதிலும் நான் கலந்துகொண்டதில்லை. முதலில் இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது என்று தெரியாததுடன் எனக்குப் போதுமான நேரமும் இல்லை. என்னுடைய முழுநேரமும் வேலையிலேயே சென்றுவிடுவதால் இதில் கவனம் செலுத்தமுடியவில்லை. இனிமேல் கவனம் செலுத்துவேன்.
மீசை பெரிதாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். எனக்கு அப்படி எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. என்னுடைய வீட்டில் மனைவி, பிள்ளைகள் உட்பட எல்லோருமே என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். சாப்பிடுகிற நேரத்தில் மட்டும் மீசையைப் பின்புறமாக இழுத்து தலையில் கட்டிக் கொள்வேன். மற்றபடி ஒரு பிரச்சினையும் இல்லை. மீசை வளர்ப்பதுபோன்று தாடி வளர்ப்பதில் எனக்கு ஏனோ ஆர்வமே இல்லை.'' என்கிறார் கோவிந்தராஜ்.
"மீசை வளர்த்திருப்பவர்கள் பெரும்பாலும் அதிக கோழைகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் எப்படி?' என்றோம் அவரிடம். முறைத்தார். ஓடிவந்துவிட்டோம்.

Tuesday, November 27, 2007

செய்திகளின் ஆடுபுலி - ஆட்டம்ஆடுபுலி (செய்தி): இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்?
ஆட்டம் (கமெண்ட்): ஓடமாட்டாரான்னு கேட்டீங்களா?
***

ஆடுபுலி (செய்தி): அன்புமணி மந்திரியாக இருப்பதால் மருத்துவக்கல்லூரி மாணவர்களைத் தூண்டிவிடுகிறார்கள் -ராமதாஸ்
ஆட்டம்: (கமெண்ட்): ஆமாங்கய்யா... நமக்குத் தூண்டி விடுறதுன்னாலே என்னன்னு தெரியாது பாருங்க.
***

ஆடுபுலி: தமிழகம் முழுவதும் 1813 ரவுடிகள் கைது.
ஆட்டம்: இனிமேல் சட்டஒழுங்கு சீர்கெட்டால் ரவுடிகள் காரணமில்லையா?
***

ஆடுபுலி: நாட்டுநடப்புகளைத் தெரிந்துகொள்ளவே இலவசத் தொலைக்காட்சி விநியோகம் - கலைஞர்.
ஆட்டம்: ஆமாமாம். குத்தாட்டச் சினிமாவையும், அழுது தொலைக்கிற சீரியலையும் பார்க்காத வாழ்வென்ன வாழ்வு.
***

ஆடுபுலி: திமுக இளைஞரணி மாநாடு வெற்றி பெறும் - ஸ்டாலின்.
ஆட்டம்: சொல்லியாத் தெரியணும். ஐம்பது வயதுடையோர் இளைஞரணி மாநாடு நிச்சயம் வெற்றிபெறும்
***

கலீல் கிப்ரான் கதைகள்

(கொட்டாவியை விரட்டும்
மிட்டாய்கள்) 27.11.2007
நிழல்

புல் ஒன்று, தன்மேல் படர்ந்த நிழலைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னது - "என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அலைந்துகொண்டே இருக்கிறாய்? உன்னால் எனக்கு ரொம்பத் தொந்தரவாக இருக்கு.' நிழல், அமைதியாகப் பதில் சொன்னது : "அசைவது நான் இல்லை. கொஞ்சம் நிமிர்ந்து பார். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம் காற்றில் அசைந்தாடுவதால்தான், வேறு வழி இல்லாமல் நானும் அசைய வேண்டியிருக்கிறது.' இதைக் கேட்ட புல், சந்தேகமாக நிமிர்ந்து பார்த்து, அங்கிருந்த மரத்தைக் கண்டது. "அடடா, என்னைவிட மிகப்பெரிய புல் ஒன்று இங்கே இருக்கிறதே" என்று ஆச்சரியத்துடன் கூவியது. அதன்பின், அந்தப் புல் அதிகம் பேசாமல் அமைதியாகி விட்டது.


கைதிகள்என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன.

ஒரு கூண்டில், அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த ஒரு சிங்கம் அடைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில், ஒரு சிறு குருவி இருந்தது.

தினந்தோறும் பொழுது விடியும்போது, இந்தக் குருவி, வலிமையான அந்தச் சிங்கத்தை கை சொடுக்கி அழைத்து, "என் சக கைதியே, குட்மார்னிங்' என்று சொல்லும்.
சாபம்

வயதான ஒரு கிழவன் கடற்கரையில் வந்து நின்று கடலைப் பார்த்துச் சொன்னான். முப்பது ஆண்டுகளுக்கு முன், என்னுடைய அன்பு மகள் ஒரு மாலுமியுடன் ஓடிவிட்டாள். இந்த உலகத்தில் நான் அதிகம் நேசித்தது என் மகளைத்தான். அவள் போய்விட்ட சோகத்தில் நான் தவித்துப் புலம்பினேன். அந்த வேதனை தாளாமல் அவர்கள் இருவருக்கும் கடுமையான சாபங்கள் கொடுத்தேன்.

அடுத்த சில மாதங்களுக்குள், என் மகளை அழைத்துச் சென்ற அந்த மாலுமியின் கப்பல் ஒரு பயங்கர விபத்தில் சிக்கியது. மூழ்கிய அந்தக் கப்பலில் ஒருவர்கூட உயிர் தப்பவில்லை. அதோடு என் மகளையும் இழந்துவிட்டேன் நான். என் சாபம்தான் அவர்களை அழித்துவிட்டது. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒற்றைச் சாபத்தால் ஒரு பெண்ணையும் இளைஞனையும் கொலை செய்த பாவி நான்.

கடவுள் என்னை மன்னிப்பாரா?

இப்படிச் சொல்லிப் புலம்பிய அந்த மனிதனின் குரலில் சோகத்தோடு ஒரு மெலிதான பெருமையும் கலந்திருந்தது.

தன் சாபத்தின் வலிமையை எண்ணி அவன் இன்னும் கர்வப்படுவதுபோல்.தமிழில்: என்.சொக்கன்

Monday, November 26, 2007

பகை வளர்ப்பதை விடுவாரா விஜய்?

பகை வளர்ப்பதை விடுவாரா விஜய்?


தேநீர் செய்திகள்?
தேள் கடி பதில்கள்!
(27.11.2007)
செய்தி-1 :

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும் பசுமை தாயகம் அமைப்பும், "தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு "
என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதார மந்திரி அன்புமணி கலந்துகொண்டு பேசினார். "சினிமாவில் குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள்
போராட்டத்துக்குப் பிறகு, ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதேபோல் நடிகர் விஜய்யும்
சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும்'' என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மத்திய மந்திரி அன்புமணியின் இந்தக் கோரிக்கையை, நடிகர் விஜய் ஏற்றுக்கொண்டு அளித்த பேட்டி : "மத்திய மந்திரி அன்புமணியின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்திற்கு எதிரான அவருடைய போராட்டம்
ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில்
நடிக்கமாட்டேன். நான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அழகிய தமிழ்மகன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தேன்.
அதில், ஒரு வேடம் கெட்டவன், அவன் கெட்டவன் என்பதைக் காட்டவதற்காகவே, சிகரெட் பிடிப்பதுபோன்ற காட்சியை இயக்குநர்
வைத்திருந்தார். படத்தின் இறுதியில், அவன் திருந்துவதைக் காட்டுவதற்காக, சிகரெட்டைத் தூக்கி எறிவதுபோல்தான் காட்சி
அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக்கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

கேள்வி :

வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால்தான் திருமணத்திற்கு எல்லோரும் வருவார்கள். அதைப்போல் புகைப்பிடிப்பதுபோல்
நடிப்பதை விடவேண்டாம் என்று தன்னையும் தனிப்பட்ட முறையில் சொல்லியிருந்தால் எப்போதே விட்டிருப்பேன் என்பதுபோல்
இருக்கிறது, இனிமேல் சிகரெட் பிடிப்பதுபோல் நடிக்கமாட்டேன் என்று விஜய் கூறியிருப்பது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகப்
பொறுப்பேற்றதிலிருந்து அன்புமணி புகைப்பிடிப்பதற்கு எதிராகப் பேசி வருகிறார். போராடி வருகிறார். இப்போது
தனிப்பட்டமுறையில் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்ததும் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக இதைக் குறைத்தும்
சொல்லமுடியாது. ஆரோக்கியமான விஷயம் எப்போது, எந்த வகையில் ஏற்பட்டாலும் சந்தோஷமே. மூன்று ரூபாய் சிகரெட்டைத்
தூக்கிப் போடு என்றதும் தூக்கிப்போட்டுவிட்ட விஜய், இன்னும் தூக்கிப் போடவேண்டிய சில விஷயங்கள் : ஏய்... ஓய்... என்று காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டு சுயபுகழ்ச்சி வசனங்கள் பேசுவது. அரிவாள் கலாச்சாரத்தைப் பரப்புவது. பகைமை உணர்ச்சி பாராட்டி நடிப்பது. வடுமாங்கா ஊறுதுங்கோ தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ என்று ஆபாச வரிகளுடன்
கதாநாயகிகளின் இடுப்பைத் தடவி கெட்ட ஆட்டம்போடுவது. இதையெல்லாம் விட்டுவிடுவாரா? இது எல்லாம் இல்லாமல்
படமெடுக்க முடியாதே என்று சொல்வாரானால் அவரின் காதலுக்கு மரியாதை படத்தை அவரே ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும்.
இதில் இன்னொன்று விஷயம் அன்புமணி சொன்னதும் ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதுபோல் நடிப்பதை மட்டும்
விட்டுவிட்டார் என்கிறார்கள். அதற்குபிறகு ஒரு படமோ இரண்டு படமோதான் நடித்திருக்கிறார். ஆனால் இனி புகைப்பிடிக்கிற
காட்சி இடம்பெறாது என்று உறுதி வழங்கியிருக்கிறார் ரஜினி. சரி அதெல்லாம் இருக்கட்டும் நிஜத்தில் ரஜினி புகைப்பிடிப்பதை
விட்டுவிட்டாரா?
புட்டிப்பால் குடிக்கமுடியாததால் செத்துப்போன பொறியியல் கல்லூரி மாணவன்!

செய்தி-2 :

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் விது (18). இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர்
பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில்
தங்கியிருந்தார். மாணவர் விது மேல்நிலை பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்றவர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1,023
மதிப்பெண்கள் பெற்று அரசு இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் கல்லூரியில் பாடத்திட்டம்
ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் ஐந்து
பாடத்தில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதனால் விது விரக்தியில் இருந்தார். இந்நிலையில் விது, விடுதியில் உள்ள குளியல்
அறையில் தனது லுங்கியை இரண்டாகக் கிழித்து அதைக் கயிறுபோல் திரித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர் பிணத்தைக் கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். சாவுக்கான காரணம் குறித்து விது ஒரு
கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அதில், "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறுவயதிலிருந்தே தமிழ்வழியில்
பயின்றுவந்தேன். பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆங்கிலத்தில்
படிக்க இயலாததால் தூக்குப் போட்டு இறக்கிறேன்."

கேள்வி :

சில இறப்புகள் வருத்தத்தை வரவழைக்கக்கூடியவை. சில இறப்புகள் வருத்தத்துடன் கோபத்தையும் வரவழைப்பவை. அப்படிப்பட்ட
இறப்புக்காகத்தான் விது இறப்பு உள்ளது. ஆங்கிலம் தெரியாது என்பதற்காகத் தூக்குமாட்டி யாராவது இறந்துபோவார்களா? அதுவும்
பனிரெண்டாம் வகுப்பில் 1,023 மதிப்பெண்கள் எடுத்த மாணவர். இது எப்படியிருக்கிறது என்றால் தாய்ப்பால் குடித்த குழந்தை
புட்டிப்பால் குடிக்க முடியவில்லையே என்று இறந்துபோனால் எப்படியிருக்குமோ அப்படி. ஆங்கில மொழி என்பது நமக்கு அந்நிய
மொழி, இதைத் தெரியாமல் இருப்பது அங்கீகார இழப்பென்றும். தெரிந்திருப்பவர்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று கருதுவதற்கு
இடமே இல்லை. எல்லா மொழிகளிலும் இல்லாத மொழி வளம் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது. தமிழை
அறிந்துகொள்வதற்காக, சங்க இலக்கியங்களைப் படிப்பதற்காக வெளிநாட்டினர் தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிற வேளையில்
ஆங்கிலம் தெரியவில்லை என்று இறந்துபோகிற மாணவர்களை என்னவென்று சொல்வது. பாடத்திட்டங்களைப் புரிந்து
கொள்ளமுடியாமல்தானே மாணவன் இறந்துபோயிருக்கிறான் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். தமிழ் வழியில் படித்துவிட்டு
ஆங்கிலத்தில் படிக்கிறபோது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். முயிற்சியிருந்தால் போகப்போக ஆங்கிலமும் தமிழ்போல
வந்துவிடும் என்பது புரிந்துகொள்வதில்லை இதுபோல் இறக்கும் மாணவர்கள். எப்படியிருந்தாலும் இது சிரமம் என்று
கருதுகிறவர்களுக்காக சில உதாரணங்கள். அப்துல்கலாம் தமிழ் வழிக் கல்வி படித்தவர்தான். அண்ணா பல்கலைக்கழகத்
துணைவேந்தராக இருந்த அனந்தகிருஷ்ணன் தமிழ் வழி கல்வி படித்தவர்தான். இப்படி பல
முன்னுதாரணங்களைஅடுக்கிக்கொண்டே போகமுடியும். இருப்பினும் இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க எல்லாத்துறை
படிப்பையும் தமிழ் வழியில் கொண்டுவர ஆவனச் செய்யவேண்டும். அறிவியல் தமிழ் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே...
அதை எப்போதுதான் முழுமையாக நிறைவேற்ற போகிறீர்கள்?

கலையும் வயிறும் (யான் பெற்ற இன்பம்)

கலையும் வயிறும்


அகிலன்


எழுத்தாளனிடம் கலையும் இருக்கிறது; வயிறும் இருக்கிறது. ஆனால் வயிறு இருக்கிறதே என்ற நினைவோ கவலையோ அவனுக்கு
இருப்பதில்லை. அதனால்தான் அவனுடைய வயிற்றைப் பற்றி கலை உள்ளங்கொண்ட வேறுசிலர் கவலைப்படுகிறார்கள். கலைஞன்
உயிருடன் இருக்கும்போதே அவனுக்கு உதவ நினைப்பதற்கும், அவன் செத்தப்பிறகாவது அவனுடைய குடும்பத்திற்கு ஆதரவு
அளிக்க விரும்புவதற்கும் இதுதான் காரணம்.

இந்த மாதிரி உதவிகளின் நோக்கத்தில் தவறு எதும் இல்லை. ஆனால் இதைக்கொண்டு கலைஞனுடைய கலையை அநுபவிப்பவர்கள்
அவனுக்கு தங்கள் கடமையைச் செய்து விட்டதாகப் பெருமை கொள்வார்களானால் அது பெரும் ஏமாற்றமே. இந்த நிதி திரட்டும்
செயல் அவசியமற்றது என்றுதான் நானும் சொல்கிறேன். மற்றவர்கள் நிதி திரட்டி உதவவேண்டிய நிலையில் ஒரு கலைஞன்
இருந்தானென்றால் அது கலைஞனுடைய தவறல்ல. அவனை அந்த நிலையில் வைத்திருக்கும் சமூகத்தின் தவறு. காசில்லாமல்
கலையை அநுபவித்துவிட்டு, அதை அளிக்கும் கலைஞனைக் காற்றைச் சாப்பிடச் சொல்வது மனிதக் கூட்டத்தின் மன்னிக்க முடியாத
குற்றம்.

எழுத்தாளர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று ஆங்கில எழுத்தாளனும் அண்மையில் பிரதம மந்திரியாக இருந்து வந்தவனுமான
வின்ஸ்டன் சர்ச்சில் சொல்கிறான். "ஆனந்தமயமான கற்பனைகளின் உதவியால் தன் எழுத்துக்களை பத்திரிகையிலோ
புத்தகத்திலோ வெளியிட்டு அதன் மூலம் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா?'' என்று கேட்கிறான். உண்மைதான் கலைப்
பண்பும் மன வளர்ச்சியும் அடைந்த மக்களின் மத்தியில் உள்ள எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை.
ஆனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள்? இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல; துரதிர்ஷ்டசாலிகள்.

எழுத்தாளன் தன்னுடைய இன்பத்திற்காகவே எழுதுகிறான். அவன் அப்படித்தான் எழுதவேண்டும். ஆனால், அவன் எழுத்தை
சமூகம் பயன்படுத்திக் கொள்கிறது. ஒருவனுடைய இன்பத்தில் பிறந்த எழுத்துக்கள், ஊருக்கெல்லாம் இன்பம் தருகின்றன. தனக்காக
அவன் எழுதுவதால் அவனைச் சுயநலவாதி என்பதா? ஒருவனுடைய சுயநலத்தால் பலருடைய பொதுநலம் பெருகும் போது, அந்தப் பலர் இந்த ஒருவனுடைய சுயநலத்தை வளர்க்க வேண்டியது அவசியமல்லவா?

எழுத்துக் கலைக்கும் எழுத்துத் தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டை வாசகர்கள் கவனிக்க வேண்டும். இன்றைக்கு நான் நாவல்
எழுதினால் அது கலை. சினிமாவுக்கு எழுதினால் தொழில். கலைஞன் தன்னுடைய கலையின் மூலமாகவே வாழவேண்டும்.
அப்போதுதான் கலை வளரும். கலைஞர்கள் பெருகுவார்கள். மொழி வளம் சிறக்கும். மனித பண்பில் அழகு மிளிரும்.

இதனால் கலை கலைக்காகவே என்று நான் கூறுவதாக அர்த்தம் இல்லை. அது மக்களுடைய இன்பத்திற்கும் வளர்ச்சிக்கும் உரிய
ஒன்று. ஆனால் ஒருக்காலும் கலை அதிலும் எழுத்துக்கலை தொழிலுக்காக வியாபார நோக்கத்திற்கென்றே உருவாகக் கூடாது.
எழுத்துக் கலையைத் தொழிலாக மாற்ற விரும்புகிறவர்கள், அந்தக் கலைஞனின் நோக்கம் கெடாமல் அழகு குறையாமல் அதைக்
கையாள வேண்டும்.

கடை சரக்காகவே கலை தயாரானால் அதை வாங்கக்கூடிய மக்களின் தரத்தை அறிந்து அவர்களுடைய ருசிக்கேற்ப அதை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போது கலைஞனிடம் கலை இருக்காது. அவன் தனக்காக எழுதாமல் மற்றவர்களுக்காக எழுதுகிறான். கலையை மறந்து வயிற்றுக்காகப் பாடுபடுகிறவன் தன்னுடைய சொந்தக் கருத்தான கற்பனை சிகரத்தில் கம்பீரமாக தலை நிமிர்ந்து உலவாமல் கடைத்தெருவின் புழுதிக்கு இறங்கி வந்து அங்கே கூடி உள்ள சந்தைக்கூட்டத்தினரைத்
திருப்திப்படுத்துவதற்காக எழுத்தை மலிவு பொருளாக மாற்றி விடுகிறான். மனப்பண்பு வளராத நாடுகளில் மலிவு பொருள்களுக்குத்தான் கிராக்கி அதிகம். முட்டாள்களிடம் செய்யும் எந்தத் தாழ்வான வியாபாரமும் எப்போதும் நஷ்டமடைவதில்லை.

எழுத்தாளனுடைய சுயநலம் எழுதவேண்டும் என்ற ஆசை அவனுடைய நெஞ்சைச் சுற்றி வட்டமிட்டால் அது கலை. வயிற்றைச்
சுற்றி வட்டமிட்டால் அது தொழில். கலையே தொழிலாக மாறுகிறது. மாறவும் வேண்டும். ஆனால் கலையின் பிறப்பு பரிசுத்தமாகத்
தொழிலின் லாபநஷ்ட சிறுமைகளுக்கு அடங்காததாக எல்லையற்ற வெளிகளில் கட்டற்று திரியக்கூடியதாக இருக்க வேண்டும்.

எழுத்தை வியாபார நோக்கத்துடன் எழுதுபவர்கள் இருக்கட்டும். இன்னொரு வகையினரைக் கவனிப்போம். இவர்கள் தங்களுடைய
கொள்கைகளின் நிறைவேற்றத்திற்காக எழுத்தை உபயோகிப்பவர்கள். அவர்களுடைய கொள்கைகள் உயர்ந்தவனவாக மனித
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஏற்றனவாக இருக்கலாம். முற்போக்கு அரசியல்வாதிகளை, சமூக சீர்திருத்தக்காரர்கள், ஆன்மீக வளர்ச்சியில் நாட்டங் கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்குக் கருவியாக எழுத்தைக் கையாளுகிறார்கள். இவர்களுடைய நோக்கங்களின் அரிய கருத்துக்கள் பலவற்றை எழுத்துக் கலைஞனுடைய படைப்பிலும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். அதற்காக எழுத்தாளனை அரசியல்வாதியுடனோ, சீர்திருத்தக்காரனுடனோ, ஆன்மீகத்துறையில் உள்ளவனுடனோ ஒப்பிடுவது
சரியல்ல. யார் யாருடைய எந்தெந்தக் கருத்துக்கள் அவனுக்குப் பிடித்திருக்கிறதோ அவற்றை எழுத்தாளன் எடுத்துக் கொள்கிறான்.
அவனுக்கு நல்லதாகத் தோன்றுவதைப் போற்றுவதும், கெட்டதாகத் தோன்றுவதைத் தூற்றுவதும் அவனுடைய இயல்பு.

கலைஞனுடைய சொற்களில் உயிரும் உணர்வும் அழகும் துடிப்பதால் அவனுடைய சொற்களில் தங்களுக்கு வேண்டியவற்றை
அரசியல், சமூக, ஆன்மீகத் துறையில் உள்ளவர்கள் எடுத்துக் கையாளுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும்
தங்களுடைய எல்லாக் கொள்கைகளையும் எழுத்தாளன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இல்லை. அவன்
ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். உலகத்தில், அவன் யாருக்கும் எந்தச் சக்திக்கும் அடிமையல்ல.

இதனால் எழுத்தாளன் எழுத்து வியாபாரி அல்ல என்பதும், குறிப்பிட்ட ஒரு சாதாரண நோக்கத்தைப் பரப்புவதற்காக எழுத்தைக்
கருவியாகக் கொள்பவன் அல்ல என்பதும் தெளிவாகிறது. எழுத்துக்கலை எவனைத் தன்னுடைய அழகையும் உண்மையையும்
வெளிப்படுத்தக் கருவியாகக் கொள்கிறதோ அவனே எழுத்தாளன். வியாபாரி தன் வியாபாரத்தினால் பிழைக்கிறான். அரசியல்வாதியோ, சீர்திருத்தக்காரனோ தன்னைப் பின்பற்றுகிறவர்களால் வாழ்கிறான். எழுத்துக்கலைஞனின் வயிற்றைக் கவனிப்பவர்கள் யார்?

ஒன்று அவன் பத்திரிகைகளுக்கு எழுதும் கதை, கட்டுரைகளைக் கொண்டு வாழ்வை நடத்தவேண்டும். அல்லது புத்தகங்களாக எழுதி
வெளியிட்டு அதன் வருவாயைக் கொண்டு வயிற்றை மறந்து கலையில் ஈடுபடவேண்டும். இந்த இரண்டு வழிகளில் ஒன்றுமே சாத்தியமாகாவிட்டால் எப்படிக் கலை வளரும்? பட்டினிக் கிடக்கும் வயிற்றை வைத்துக்கொண்டு எவனுமே கதை, கட்டுரை, கவிதை எழுதி மற்றவரை மகிழ்விக்க முடியாது.

எழுத்துக்கலையையே, முழுவதும் வயிற்றுக்கு நம்பக்கூடாது என்றும், ஓய்ந்த வேளைகளில் எழுதி கலைத் தொண்டு செய்தால் போதும் என்றும் சொல்பவர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள். காலஞ்சென்ற புதுமைப்பித்தனும், தம்முடைய துன்பம் நிறைந்த அநுபவத்தின் முடிவில் இதைத்தான் சொல்லிப் போயிருக்கிறார். ஆனால் ஓய்ந்த வேளைகளில் எழுதும் எழுத்தாளர்களால் எந்த உருப்படியான இலக்கியமும் உருவாக்க முடியாது. அவர்களுடைய இலக்கியக் கனவில் ஓரளவையாவது அவர்களது வாழ்நாளைக்குள் நனவாக்க முடியுமா என்பது சந்தேகமே. புதுமைப்பித்தன் கதைகளும், கு.பா.ரா.ராவின் கதைகளும் இந்நாட்டிற்குக் கிடைத்திருப்பது அவர்கள் முழுநேர எழுத்தாளர்களாக இருந்ததால்தான். எங்காவது தாலுக்கா ஆபீஸில் அவர்கள் குமாஸ்தாக்களாக இருந்திருந்தால், ஓய்வு நேர இலக்கியப் பணி செய்திருந்தால், இன்றைக்கு நமக்குச் சொல்லிக் கொள்ளக்கூட அந்த இருவரும் அகப்பட்டிருக்க மாட்டார்கள்.

கற்பனைக் கலை கணக்குத் தொழிலைப் போன்றதோ, கட்டிடத் தொழிலைப் போன்றதோ அல்ல. நினைத்த நேரத்தில் நினைத்தபடி
அதை ஆட்டி வைக்க முடியாது. காலத்திற்கும் நேரத்திற்கும் கட்டுப்பட்டு இயந்திர ரீதியில் எழுதிக்கொண்டு செல்பவர்கள்
காகிதங்களை நிரப்பலாம். கற்பனைச் செழிப்பைக் காணுவது அபூர்வம். எழுத்தாளனுக்குக் காகிதம், பேனா, ஓர் ஒதுக்குப்புறம்
இவற்றைத் தவிர வெறெதுவவுமே தேவை இல்லை என்பது பலரது எண்ணம். ஆனால் சிந்திப்பதற்கு பொழுது, சுற்றிலும் நடப்பதைக்
காண நேரம். இதர இலக்கியங்களை அநுபவிக்க அவகாசம் இவ்வளவும் அவனுக்கு மிகவும் தேவை. இவை எல்லாவற்றுக்கும்
மேலாக அவன் கட்டற்றவனாக நினைத்ததை எழுதக்கூடிய சுதந்திரம் உள்ளவனாக இருக்கவேண்டும். கூண்டுக்குயிலின் கீதத்தில்
இயற்கையின் இனிமையை எதிர்பார்க்க முடியுமா?

இதனால் எழுத்தாளன் எந்த நேரத்தையும் தன்னுடைய இலக்கியப் பணிக்குச் செலவிடத் தக்கவனாக யாருக்கும் கட்டுப்பட்டு
வாழ்க்கை நடத்தாதவனாக இருக்கவேண்டியது அவசியம் என்றாகிறது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள உறவு இதுதான். கலைக்கும் வயிற்றுக்கும் மத்தியில்
இழுத்துப் பறித்துக்கொண்டு நிற்கும் மூன்று நான்கு நல்ல பத்திரிகைகள் தவிர, மற்றவை வியாபார நோக்கம் ஒன்றையே
குறிக்கோளாகக் கொண்டவை. இலக்கிய வளர்ச்சியைப் பற்றியோ, கலைப்பணியைப் பற்றியோ அவற்றிற்கு அக்கறை கிடையாது.
இந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்றாற்போல் வாசகர்களும் விசித்திரமாக அமைந்திருக்கிறார்கள். ஒரேமாதிரிக் கதைகளையே எந்தவிதப்
புதுமையும் அழகும் இல்லாமல் வாரா வாரம் அல்லது மாதா மாதம் திருப்பித் திருப்பிப் போட்டாலும் அவர்கள் பொறுமையோடு படிப்பார்கள்! ஆகையால் எழுத்தாளனைப் பற்றிப் பத்திரிகையாளனோ, பத்திரிகையானைப் பற்றி எழுத்தாளனோ தங்கள் தேவைக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது.

"நல்ல கதைகளே எங்களுக்கு வருவதில்லை" என்று பத்திரிகைக்காரர்களும், "நல்ல கதைகளையே எங்களால் படிக்க முடிவதில்லை"
என்று சில வாசகர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நல்ல கதைகளை எழுதக்கூடியவனை நேர்மையான மனத்துடன்
ஊக்குவிப்பதற்கு எத்தனை பத்திரிகையாளர்கள் முன் வருவார்கள்? வாசகர்கள் விழித்துக் கொள்கிற வரையில், அவர்கள் தங்களுடைய கலை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அடங்காத ஆசை கொள்கிற வரையில் பத்திரிகை முதலாளியின் பணப்பெட்டி பத்திரமாக மூடியே இருக்கும். கலைஞனின் வயிறும் காலியாகவே இருக்கும்.

கடைசியாகத் தமிழ் எழுத்தாளன் வாழவேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழியில் இன்று வரையிலும்
முள் நிறைந்து கிடப்பதால் இந்தப் பரந்த தமிழகத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழர்கள் என்று தங்களைச்
சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நிறைந்த உலகத்தில் ஒரே ஒரு எழுத்தாளன் கூடச் சுதந்திரமாக எழுதிப் பிழைக்க முடியவில்லை.
தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவுகிறவன் என்றோ, மிகவும் உயர்ந்த சேவையைச் செய்யும் பெருமகன் என்றோ
எழுத்தாளனைச் சொல்லவில்லை. ஆனால் எழுத்தாளன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல. உயிருள்ள சமூகத்தின் முக்கியமான நாடி
நரம்புகளில் அவனும் ஒன்று.

யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவர்கள், உடலுக்கோ உள்ளத்துக்கோ தீங்கு தரும் தொழிலைச் செய்பவர்கள் குபேரர்களாக
வாழும்போது, பண்பட்ட எழுத்தாளன்கூடத் தன் எழுத்தால் வாழ முடியவில்லை என்றால் அது அவனுடைய பலவீனமல்ல. அவன்
பிறந்த சமூகம் தெரிந்தோ தெரியாமலோ அவனுக்குச் செய்யும் துரோகம்.

இன்றைக்கு உள்ள அந்தக் கடைசி வழி எழுத்தாளன் புத்தகம் எழுதிப் பிழைப்பதுதான். இந்த வழி ஏன் அடைத்திருக்கிறது? எப்படி
அடைத்திருக்கிறது?

சுமார் இரண்டு லட்சம் பேராவது தமிழ்நாட்டில் பத்திரிகை படிக்கிறார்கள். இவர்களில் இருபதில் ஒருவராவது, பத்தாயிரம்
பேர்களாவது புத்தகம் படிக்கிறார்கள். இந்தப் பத்தாயிரத்தில் பத்தில் ஒருவர் கூடப் புத்தகத்தைப் பணம் கொடுத்து வாங்குவது
கிடையாது. இவர்களில் பாதி ஐயாயிரம் பேராவது இரவல் புத்தகம் படிப்பதை நிறுத்திப் புத்தகம் விலைக்கு வாங்க ஆரம்பித்தார்களானால் எழுத்தாளன் மானத்தோடு வாழமுடியும். நினைத்ததை எழுதி நேர்மையைப் பரப்பவும் முடியும்.

புத்தகத்தை விரும்பிப் படிக்கிறவர்கள் எல்லோருமே ஏழைகளல்ல. காசு கொடுத்துக் கலையை ரசிக்க முடியாதவர்கள் தாராளமாக
இரவல் புத்தகம் வாங்கிப் படிக்கட்டும். ஆனால் புத்தகத்தை வாங்குவதற்குப் பணக்காரர்கள் அவசியமே இல்லை. மாதத்தில் மூன்று
ரூபாயோ, ஐந்து ரூபாயோ செலவு செய்ய வழி உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று அர்த்தமா? கன்னியாகுமரி முதல்
வடவேங்கடம் வரையில் உள்ளவர்களில் இம்மாதிரி ஐயாயிரம் பேருக்கா பஞ்சம் வந்துவிட்டது? மண்வெளி பரந்துகிடக்கிறது:
ஆனால் மனவெளியில் பரப்பில்லை. மலைகள் உயர்ந்திருக்கின்றன. ஆனால் மனம் உயரவில்லை. காவேரி பாயும்
மணல்வெளிகளில் தான் செழிப்பைக் காணுகிறோமே தவிர கலைச் செழிப்பும் மனச்செழிப்பும் கொஞ்சமும் இங்கே கிடையாது.

பீடியோ சிகரெட்டோ எந்தப் பெட்டிக்கடைக்காரனும் யாருக்கும் இரவல் தருவதில்லை. சினிமாவுக்கோ, வேறு எந்தப்
பொழுதுபோக்குக் காட்சிக்கோ எவனும் அதற்குரிய காசு கொடுக்காமல் போக முடிவதில்லை. கடற்கரைக்குக் காற்று வாங்க கார்
ஏறிச்சென்றால், அந்தக் கார்காரனுக்குக் காசு கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரே ஒருவனை மட்டும் ஊரெல்லாம் ஏமாற்றலாம். ஒரே
ஒருவனுடைய உழைப்பை மட்டும் ஊதியமில்லாமல் அப்படி ஏமாற்றப்படுபவனும், திருட்டுக் கொடுப்பவனும் எழுத்தாளன்
ஒருவன்தான்!

இந்த ஒரே ஒரு உதாரணத்தைக் கூறி வயிற்றுக்கு வஞ்சனை செய்யும் இந்தக் கலைப்படைப்பை முடிக்கிறேன்.

கூட்டம் நிறைந்த தெருவின் ஓரத்தில் கழைக்கூத்தாடி ஒருவன் தன்னுடைய திறமையைக் காட்டத் தொடங்குகிறான். மூங்கிலின்
உயரத்தில் நின்று பம்பரமாய்ச் சுழலும்போது கூட்டம் அவன் செயலைக் கண்டு வியக்கிறது. கைகொட்டி ஆரவாரம் செய்கிறது.
உயிரைத் திரணமாக மிதித்து அவன் அற்புதம் அற்புதமான வேடிக்கைகளைக் காட்டுகிறான். பந்துபோல் காற்றில் எழும்பியும், கயிறுபோல் உடலை முறுக்கியும், தாவியும் குதித்தும் தன் கலையை வெளிப்படுத்துகிறான். கூட்டம் மெய்மறந்து அவனிடம் ஈடுபடுகிறது.

கடைசியில் அவன் காசு வாங்கும் கட்டத்திற்கு வருகிறான். அந்தக் கூத்தாடியின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

"பையில் காசிருந்தால் ஒரு காலணாப் போடுங்கள்... காசு இல்லாதவர்கள் கூட்டத்தை விட்டுக் கலைய வேண்டாம். இருப்பவர்கள்
போட்டால் போதும். இன்னும் சில வேடிக்கைகள் காண்பிக்கிறேன். இருந்து பார்த்துப் போங்கள்."

கழைக்கூத்தாடி ஒரு கலைஞன், அவனுக்காக போடச் சிலரும் கைதட்ட பலரும் வேண்டும். ஆனால் எல்லோரும் கைதட்டுகிறார்கள்.
காசு வைத்திருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கூட்டத்தை விட்டு கலைந்து போகிறார்களே ஏன்?கழைக்கூத்தாடியின் நிலையில் இன்று எழுத்தாளன் இருக்கிறான். பணம் இல்லாதவர்களை விடப் பணம் உள்ளவர்கள்தான் அவனை ஏமாற்றுகிறார்கள். வெறும் புகழ்மொழிகளால் ஒருவன் வாழமுடியாது. வயிற்றுக்காக ஒருபுறம் அடிமை வேலை செய்துகொண்டும். கலைக்காக இன்னொருபுறம் கிடைக்கும் நேரத்தையெல்லாம் விரயம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. இந்தநாட்டு மக்களின் பண்பில் தேய்வு கண்டுவிட்டதால் கழைக்கூத்தாடிகள் அருகி மறைந்து வருகிறார்கள். எழுத்தாளர்களின் இனம் இன்னும் சரியாகத்
தோன்றவே இல்லை. குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே அதைக் கொல்லக்கூடிய பாவத்தை வாசகர்கள் செய்யமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

மேல்நாட்டு எழுத்தாளன் ஒருவன் சொல்லிய சொல் இது:

புத்தகத்தைப் பணம் கொடுத்து வாங்கிப் படியுங்கள். இரவல் கொடுக்காதீர்கள். கொடுக்க நேரிடும் என்று தெரிந்தால் படித்து முடித்தவுடன் அதை நெருப்பில் போட்டுக் கொளுத்துங்கள். எழுத்துக்கலை அப்போதுதான் வளரும்.

Sunday, November 25, 2007

மலேசிய அரசே...மனதை வாசி!

மலேசிய அரசே....மனதை வாசி!
தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(26.11.2007)
செய்தி:
150 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக
மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இதற்காக
பிரிட்டன் ரூ.16 லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ்
இரட்டைக் கோபுரங்களின் முன்பு, ஹிந்து உரிமைப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடினர். கைகளில்
மகாத்மா காந்தியடிகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு கட்டமாக
பத்தாயிரம் பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றை பிரிட்டிஷ் தூதரிடம் கொடுக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். இது
சட்டவிரோதமானது என்று இந்த அமைப்பினரை மலேசிய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது. போராட்டக்காரர்கள் மீது
கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். இப்போராட்டத்தால் ஐந்து மணிநேரம் அந்தப் பகுதியே ஸ்தம்பித்து போய்விட்டது. இப்பிரச்சினை தொடர்பாக, "கோரிக்கைகளைப் பெறுவதற்குச் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவது சரியான வழி அல்ல. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று
அதிகாரத்துக்கு வரலாம்'' என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் அப்துல்லா படாவி.


கேள்வி:


கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தாமல் கொழுக்கட்டை கேட்டா போராட்டம் நடத்துவார்கள்? கேட்கிற உரிமையைக்கூட கொடுக்காத அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்கமுடியும்? போராட்டம்
நடத்தியவர்கள் மீது நடந்த போலீசார் தாக்குதலைவிட மிகக் கொடுமையானது பிரதமர் அப்துல்லா படாவி தந்துள்ள பேட்டி. "போராட்டம் நடத்துவது சரியான வழி அல்ல. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வரலாம்" என்று அவர் பேட்டியளித்திருப்பதைப் பார்க்கிறபோது இப்போது நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் . இப்போது எங்களுடைய ஆட்சி. இதில் உரிமை கேட்கிற அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதுதான் அர்த்தமா? அப்துல்லாவின் கூற்று இதுதான் என்றால் தெருவுக்கு
ஒரு ரவுடி உருவாகி அந்தத் தெருவை நிர்வகிப்பது சரி என்று சொல்கிறாரா? மக்களுடைய உரிமைகளைக் காக்கக்கூடிய அரசே
நீண்டு நிலைத்திருக்க முடியுமே ஒழிய, மக்களை வருத்தும் அரசை மக்கள் தூக்கி எறிய அதிக நாட்கள் ஆகாது. இந்தப் பிரச்சினையில் 150 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமைக்கு இப்போது நஷ்ட ஈடு கேட்பது நியாயமா? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. பாதிப்பு தொடர்கிறபோது கேட்பதில் தவறென்ன இருக்கமுடியும்? இப்போது அம்மை நோய் பெரும்பாலும் வருவதில்லை என்றாலும் பிறந்த குழந்தைக்கு அம்மை ஊசி குத்துவதில்லையா? அதைப்போல்தான் இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். போராட்டக்குணம் எங்குப் போனாலும் இந்தியருக்குப் போகாது என்பதற்கு இப்போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு. இறுதியாய் ஒன்று மலேசிய வாழ் இந்தியர்களே! நீங்கள் எல்லோரும் வசதியாய், சந்தோஷமாய் இருக்கிறீர்கள் என்றுதான் இங்கு உள்ளோர் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குமா?

கண்ணாடிச் சில்லில் நினைவுகள்

கண்ணாடிச் சில்லில் நினைவுகள்

* குட்டியைச் சுமந்து
காட்டு முட்புதர்களில்
ஓடும்
கங்காருபோல
உன் நினைவுகளோடு
நான்
கண்ணாடிச் சில்லுகளில்

நீயோ
முகத்தில் உமிழ்கிறாய்
செருப்பை நீட்டுகிறாய்
கழுத்தை நெரிக்கிறாய்

உனக்குத் தண்டனை
கட்டாய முத்தம்.

***

* துப்பட்டா உரசல்
தொடர் மின்சாரம்

உன்
இரு விழிகள்
தண்டவாளம்

வெள்ளம்
வரவில்லை
தடம்புரளுது
வாழ்க்கை இரயில்.
***

* இதழில் அறைந்து
உனக்கும்
எனக்கும்
ஏதோ சொல்கிறது
மின்சாரமின்றி
அணைந்த விளக்கு

கூச்சத்தை
உறங்க வை
ஆடை மெத்தையில்

இருளுக்குப் பிடித்த
விளக்காவோம்.

***

(விடாது அலைவோம்)

Saturday, November 24, 2007

தேநீர் செய்திகள்? தேள் கடி கேள்விகள்!

தேநீர் செய்திகள்? தேள் கடி கேள்விகள்!
(25.11.2007)


குவாஹாட்டி ஆதிவாசிகள் புழுக்களா?

செய்தி- 1:

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று ஆதிவாசி மாணவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அந்தஸ்வது வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பெல்தோலா பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பிறகு அனைவரும் திஸ்பூரிலுள்ள மாநில சட்டப்பேரவைக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது பேரவை நடைபெறவில்லை. இப்பேரணியில் போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இந்தப் பேரணியின்போது வன்முறை மூண்டது. பேருந்து உட்பட போக்குவரத்து வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இதனால் திஸ்பூரிலிருந்து பஷிஸ்தா வரை போர்க்களம் போல காட்சியளித்தது. இச்சம்பவத்தில் 12 ஆதிவாசி மாணவர்கள் உயிரிழந்தனர். 230 பேர் படுகாயமடைந்தனர்.

கேள்வி:


" இதோ பாரு பத்து தலை பூச்சி'' என்று இராவணனைப் பிடித்து வாலி அவனது குழந்தைக்கு விளையாட்டு காட்டுவானாம். இப்போது ஆதிவாசிகளை, தாழ்த்தப்பட்டவர்களை பூச்சிகளாய், புழுக்களாய் நினைத்து ஆள்வோர், சமூகத்தில் அதிகார வர்க்கம் செலுத்துவோர் கொல்கிறார்கள். ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினால் மட்டும் எப்படி வன்முறை வெடித்துவிடுகிறது? தலைகள் கொய்யப்படுகிறது. சுதந்திரமான இந்தியா ஒருசிலருக்கு மட்டும் சுதந்திரத்தையும் ஒரு சிலருக்கு விலங்குகளையும் வழங்குகிறபோதுதானே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் போகவேண்டியிருக்கிறது. குவாஹாட்டியில் தாழ்ப்பட்டோர் அந்தஸ்து கேட்டு ஊர்வலம் போயிருக்கிறார்கள் ஆதிவாசி மாணவர்கள். பாம்பு கடிக்கு தேள் கடி பரவாயில்லை என்பதுபோல இந்தக் கோரிக்கை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். சாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் சேர முடியாத ஆதிவாசிகள் எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள்? சாதி ரீதியான அடக்குமுறை, அடிமைமுறை எல்லாம் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு படிக்க வேண்டும் என்று வருகிறவர்களைப் படிக்க வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா? இவர்களைக் கொல்வது எவ்வளவு பெரிய கொடிய செயல். உன்னால் வழங்கமுடியாவிட்டால் சாதிகளே இல்லை என்கிற சட்டத்தைக் கொண்டுவந்துவிடு. சாதிகள் இல்லை எனக் குரல் கொடுத்துக் கொண்டே ஆட்சி அமைப்பதுதான் முறையாக இருக்கிறதே ஒழிய ஆட்சிக்கு வந்தபிறகு சாதியை ஒழிப்பதற்கு எந்த அரசியல்வாதியாவது முன்வந்திருப்பானா? இந்தச் சாதிக்கு இதைச் செய்தோம். அந்தச் சாதிக்கு அதைச் செய்தோம் என்று ஏழு பக்கம் அறிக்கை விடுகிறபோது, கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பேரணி நடத்துவதில் தவறு என்ன இருக்க முடியும்? மேல் சாதிக்காரன் உயிருக்கு ஒரு விலை என்றும் கீழ்ச் சாதிக்காரன் உயிருக்கு ஒரு விலை என்றும் இருக்கும் வரை இதுபோன்ற வன்முறைகள் இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் வரலாறு. சாதியை ஒழிக்க முன் வருவீர்களா அரசியல்வாதிகளே? ஓட்டுகள் வாங்குவதற்கு உங்களுக்கு இதைவிட்டால் சுலபமான வழி ஏது? ஒழிப்பீர்களா என்ன?


யார் நுழைந்தால் என்ன?


செய்தி-2:
போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே கடந்த 19-ந்தேதி சபரிமலையில் ஒரு பெண் நுழைந்து சாமி கும்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய கேரள உள்துறை மந்திரி, போலீஸ் டி.ஜி.பி. ராஜீவனுக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டு நாராயண பணிக்கர் கீழ் தனிப்படை அமைக்கபட்டு விசாரணை நடைபெற்றது. இதில் சபரிமலையில் தரிசனம் செய்தது பெண் அல்ல அரவானியே என்று தெரியவந்தது. அரவானியின் பெயர் செல்வி (35). புதுச்சேரியைச் சேர்ந்தவர்.


கேள்விகள்:


கேலிக்களுக்கே பயன்படுத்தி வந்த திருநங்கைகளுக்கு இப்படி அங்கீகாரம் கொடுத்ததற்காகச் சந்தோஷம். அவர்களை அந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என்பதுபோல பேசி வருவது மகிழ்ச்சியே. அதேசமயம் பெண்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்தால் என்ன? சாமி கோபித்துக்கொண்டு ஓடிவிடுவாரா? எல்லாம் முடிகிற சாமியால் பெண் கோயிலுக்குள் நுழைகிறபோதே ஏன் தடுத்து நிறுத்த முடிவதில்லை. தடுக்க முடியவில்லை என்றால் சாமியும் பெண்களுக்கும் தரிசன வாய்ப்பு வழங்குகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? பெண் நுழைந்துவிட்டதால் கோயிலின் கற்பு, சாமியின் கற்பு போய்விடுகிறது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவர்கள், சாமியைப் போல பெண் வாசனையே இல்லாமல் இருக்க வேண்டியதுதானே? மனைவி மக்களை விட்டு பிரிந்து விடவேண்டியதுதானே? சாமியே இருக்கிறார். நீங்கள் இருப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது?


கொட்டாவியை விரட்டும் மிட்டாய்கள்!கொட்டாவியை விரட்டும் மிட்டாய்கள்!
(24.11.2007)கருதுதல்

வேடர் இருவர் தனி விமானத்தை அமர்த்திக் கொண்டு விமான ஓட்டியிடம், காட்டுப் பகுதிக்குள் கொண்டுவிடுமாறு வேண்டினர். இரண்டு வாரம் கழித்து, அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல, விமானம் வந்தது. விமான ஓட்டி, அவர்கள் வேட்டையாடி உள்ள காட்டெருமைகளைப் பார்த்துவிட்டு, ""இந்த விமானத்தில் ஒரு காட்டெருமையைத்தான் கொண்டு செல்லமுடியும். மற்றொன்றை இங்கேயே விட்டுவிடுங்கள்"" என்றான்.சென்ற ஆண்டு, இரண்டையும் எடுத்துச் செல்ல, அந்த விமான ஓட்டி அனுமதித்ததாகக் கூறினார். விமான ஓட்டிக்குச் சந்தேகமாக இருந்தது. ""அப்படியானால் கொண்டு செல்வோம்"" என்றான். விமானம் மூன்று பேரையும், இரண்டு காட்டெருமைகளையும் சுமந்துகொண்டு புறப்பட்டது.உயரப்பறக்கும் முன்னரே, அது பக்கத்திலுள்ள, குன்றில் வீழ்ந்தது. அந்த வேடர்கள் வெளியே சுற்றுமுற்றும், பார்த்தனர். ஒருவன், மற்றவனிடம், ""நாம் எங்கிருக்கிறோம்?'' என்று கேட்டான். மற்றவன், சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்த்து, ""சென்ற ஆண்டு எந்த இடத்தில் விமானம் நொறுங்கியதோ, அங்கிருந்து இடதுபக்கம், இரண்டு மைல் தூரத்தில் இருப்பதாக நினைக்கிறேன்"" என்றான்.


ஒரு காலுக்கு மட்டுமா?

மருத்துவர்: "உன் கால்வலிக்குக் காரணம் தள்ளாத வயதுதான்."
நோயாளி: " என்னை முட்டாளாக நினைத்து விடாதீர். என் மற்றொரு காலுக்கும் அதே வயதுதான்."

நூல்:தவளையின் வழிபாடு; அந்தோனி டி.மெல்லோ: தமிழில்: பா.ஜெயக்ஷ்மி.

பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம்


பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் (செவ்வியல் - சிறுகதை)
அம்புரோஸ் பியர்ஸ்
24-06-1842 முதல் 11-01-1914.
அமெரிக்காவின் ஒஹியோவில் பிறந்தவர். பத்திரிகையாளர், எழுத்தாளர்.

பழைய மரப்பாலத்தின் மீது அவன் நின்றுகொண்டிருந்தான். அது ரயில் பாலமாகவும் இருந்தது. இருபது அடிக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அவன் பார்வை பதிந்து இருந்தது. அவன் கைகள் பின்புறமாக இறுக்கப்பட்டிருந்தன. சுருக்குக் கயிறு ஒன்று அவன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்தது. அதன் மற்றொரு முனை அவன் தலைக்கு மேலிருந்த ஒரு பருமனான குறுக்குக் கட்டையில் கட்டியிருந்தது. ரயில் பாதையின் தண்டவாள கட்டைகளுக்கு இடையே பலகைகளைப் போட்டுக்கொண்டு அதன் மீது அவனும் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடிய கொலைக்காரர்களும் நின்றிருந்தனர். கொலைக்காரர்கள் இராணுவத்தைச் சேர்ந்த இரு சிப்பாய்கள். ஒரு சார்ஜெண்ட் அவர்களுக்கு உத்திரவு கொடுத்துக் கொண்டிருந்தான். சிறிது தூரத்திற்கு அப்பால் ஒரு இராணுவ மேலதிகாரி ஆயுதங்களுடன் நின்றிருந்தான். பாலத்தின் இருமுனைகளிலும் இரு காவற்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். பாலத்தின் நடுவில் என்ன நடக்கிறது என்பதை அறிவது இவர்களுடைய கடமையாகத் தோன்றவில்லை. ரயில் பாதையில் ஓரத்தில் உள்ள நடைபாதை வழியே பாலத்தில் யாரும் நுழைந்துவிடாமல், பார்த்துக் கொள்வது ஒன்றுதான் அவர்கள் வேலை.ஒரு காவற்காரனுக்கு அப்பால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் தென்படவில்லை. இரயில் பாதை நீண்டு சென்று காட்டிற்குள் வளைந்து மறைந்து விடுகிறது. சிறிது தூரத்திற்கு அப்பால் ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருந்தது. ஆற்றின் மறுகரை திறந்தவெளி. கரையின் மீது ஒரு பீரங்கி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் பாலத்திற்கும் மத்தியில் பார்வையாளர்களாகச் சில சிப்பாய்கள் வரிசையாக நின்றிருந்தனர். அந்த வரிசையின் வலது மூலையில் இன்னொரு இராணுவ அதிகாரி வாளின் முனையைப் பூமியில் குத்தி நிறுத்தி அதன் பிடியின் மீது இருகைகளையும் வைத்திருந்தான். பாலத்தின் மத்தியிலிருந்த நால்வரைத் தவிர மற்றவர்கள் அசையவே இல்லை. அவர்கள் அனைவரும் பாலத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆற்றின் இருகரைகளையும் நோக்கிக் கொண்டிருந்த காவற்காரர்கள் பாலத்தையொட்டி அமைக்கப்பட்ட சிலைகளோ என்பதுபோலத் தோற்றம் அளித்தனர். இராணுவ மேலதிகாரி தன் கீழ் அதிகாரிகள் வேலை செய்வதை மவுனமாகப் பார்த்துக்கொண்டு கைகட்டி நின்றிருந்தான். மரணம் என்பது இயற்கையின் ஒரு பெரிய சக்தி. அது முன்னறிவிப்புடன் வரும்பொழுது, அதனுடன் அதிகமாகப் பழகிறவர்கள்கூட அதைச் சகல மரியாதைகளுடனும் வரவேற்கத்தான் வேண்டும். இராணுவத்தின் மரபுகளின்படி மவுனமும் அசையாமல் இருத்தலும் மரியாதைகளின் அடையாளங்கள்.தூக்கிலிடப்படவிருந்த அந்த மனிதனுக்கு வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம். அவன் இராணுவத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் உடையைப் பார்த்தால் தேயிலை, புகையிலை அல்லது காப்பித் தோட்டத்தின் சொந்தக்காரன்போல் தென்பட்டான். அழகான வாளிப்பான முகம். நீண்ட மூக்கு. உறுதியான உதடுகள். விசாலமான நெற்றி. கருத்து நீண்ட அவன் தலைமயிர் பின்புறமாகவே வாரிவிடப்பட்டு கழுத்துவரை தொங்கியது. மீசையும் கத்தரித்துவிடப்பட்ட தாடியும் வைத்திருந்தான். அகன்ற கருத்த சாம்பல் நிறக் கண்கள். தூக்கில் தொங்கப்போகும் ஒருவன் முகத்தில் அத்தனை கருணை ததும்பும் கண்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. எத்தகைய மனிதர்களையும் தூக்கில்விட இராணுவச் சட்டத்தில் இடமிருக்கிறதல்லவா? பெரும் செல்வந்தர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?முன் தயாரிப்புகள் அனைத்தும் நிறைவேறி விட்டன. இரு சிப்பாய்களும் விலகி தாங்கள் நின்றிருந்த பலகையை இழுத்துவிட்டனர். வாளில் கை தாங்கி நின்றிருந்த அதிகாரி மேலதிகாரி பக்கம் திரும்பி, விறைத்து ததும்பும் சல்யூட் அடித்துவிட்டு அவனுக்குப் பின்னால் போய் நின்றான். அந்த இராணுவ மேலதிகாரி கேப்டனாக இருக்கக்கூடும். அந்தக் கேப்டன் பலகையை விட்டு ஓரடி நகர்ந்தான். இவ்விதம் நகர்ந்ததால் தூக்கிலிடயிருந்தவனும் இன்னொரு அதிகாரியும் ஒரே பலகையின் இருமுனைகளில் நின்றிருந்தனர். அருகே நின்றிருக்கும் இன்னொரு அதிகாரி சார்ஜெண்டாக இருக்கலாம். முதலில் கேப்டனின் கனத்தினால்தான் பலகை நின்றிருந்தது. இப்போது இந்த சார்ஜெண்டின் கனம் அதை விழாமல் வைத்திருந்தது. கேப்டன் கையசைத்த உடன் சார்ஜெண்ட் தன் இடத்திலிருந்து நகர்வான். பலகை ஆற்றில் விழும். அதன் மறுமுனையில் நின்றிருக்கும் கைதி பாலத்தின் கீழே தூக்குக்கயிற்றில் தொங்குவான். இந்த ஏற்பாடு மிகவும் சுலபமாகவும் திருப்திகரமாகவும் அவனுக்குத் தோன்றியது. கைதியின் முகத்தை மூடவோ கண்களைக் கட்டவோ இல்லை. கைதி கீழே சிறு சுழல்களுடன் சுழித்துச் சுழன்று, சிறு அலைகளுடன் கொந்தளித்து ஓடும் ஆற்று நீரில் மிதந்து சுழித்து குதித்துப் போன ஒரு சிறு கட்டையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அது அவன் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அவன் பார்வை அதைத் தொடர்ந்தே சென்றுகொண்டிருந்தது. ஏதோ மொத்த வாழ்க்கை அதில்தான் இருக்கிறது என்பதுபோல பார்த்திருந்தான்.அதன் வாழ்க்கையின் அந்தக் கடைசிக் கணத்தில் தன் மனைவியையும் குழந்தைகளையும் பற்றி நினைத்துப் பார்க்க விரும்பினான் போலிருக்கிறது. அதற்காகவே கண்களை மூடிக்கொண்டான். காலையில் வெய்யிலில் உருக்கிய வெள்ளிப் பாளம் போல மின்னிக்கொண்டிருக்கும் ஆற்று நீர், சற்றே தள்ளி கரையெங்கும் அமைதியாக மூடிக்கொண்டிருந்த பனி, அருகே நின்றிருக்கும் சிப்பாய்கள். நீரில் மிதந்து கொண்டு போன கட்டை எல்லாம் அவன் கவனத்தை பல்வேறு புறமும் அலைக்கழித்தன. இப்பொழுது மற்றொரு புதிய விஷயம் அவன் கவனத்தை ஈர்த்தது. தன்னுடைய எண்ணங்களுக்கு மத்தியில் உலைக்களத்தில் சம்மட்டியால் அடிப்பது போன்ற ஓங்கிய பேரொலி அவனுக்குக் கேட்டது. அது என்ன ஓசையாக இருக்கும் என்று யோசித்தான். தூரத்திலிருந்து கேட்கிறதா, அருகாமையிலிருந்து கேட்கிறதா என்று கவனித்தான். இரண்டு இடத்திலிருந்தும் கேட்பதுபோல்தான் அவனுக்குத் தோன்றியது. நிதானமாக விட்டுவிட்டுக் கேட்ட அந்த ஒலி சர்வநிச்சயமாக சாவுமணி அடிப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு அடியையும் அவன் பொறுமையிழந்து, சந்தேகத்துடன் கவனித்தான். இது ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. ஒரு அடிக்கும் மற்றொரு அடிக்கும் மெüனத்தின் கனம் தாங்க முடியாதபடி கனத்தது. அந்த மெüனம் அவனை உன்மத்தம் பிடிக்க வைத்துவிடும் போலிருந்தது. அந்த ஒலியின் இடைவேளை அதிகரித்துடன் அதன் பலமும் அதிகமாயிற்று. கூச்சலிட்டு விடுவானோ என்று அவனுக்கே பயமாக இருந்தது. அவன் கேட்டது அவனுடைய கடிகாரத்தின் டிக்...டிக் ஓசைதான்!அவன் மறுபடியும் கண்ணைத் திறந்து தண்ணீரைப் பார்த்தான். "" என் கைகளை விடுவித்துக்கொண்டு, தூக்குக் கயிற்றைக் தூக்கி எறிந்துவிட்டு ஆற்றில் குதித்து விட்டால்! வேகமாக நீந்தி, தூப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பிக் கரையேறி, காட்டில் மறைந்து வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்! கடவுள் அருளால் என் வீடு இவர்களுடைய எல்லைக்கு வெளியில்தான் இருக்கிறது. நல்ல வேளையாக என் மனைவியும் குழந்தைகளும் இந்தக் கொடூரர்களிடமிருந்து வெகு தூரத்தில்தான் இருக்கின்றனர்'' என்று ஓடியது அவன் சிந்தனை. அவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்கையில் கேப்டன் தலையசைத்தான். சார்ஜெண்ட் தான் நின்ற இடத்திலிருந்து விலகினான்.பார்க்கர் ஒரு பணக்கார தோட்ட முதலாளி. அந்த நகரத்தில் உள்ள ஒரு கெüரவமான, பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்தவன். அவனிடம் நிறைய அடிமைகள் வேலை செய்தனர். அதன் தென்பகுதிக்காரர்களை ஆதரிப்பவன். சிறுசிறு தடைகளால் அவனால் இராணுவத்தில் சேர முடியவில்லை. ராணுவத்தில் பணி செய்து பெருமையடைய வேண்டுமென்று அவன் மனம் பெரிதும் விரும்பியது. பெருமையடைவதற்கான வாய்ப்பு யுத்த காலங்களில் மற்றவர்களுக்கு வருவதுபோல் தனக்கும் வருமென்று எதிர்பார்த்தான். இதற்கிடையில் தன்னால் முடிந்ததை மட்டும் அவன் செய்து வந்தான். தென்பகுதிக்காரர்களுக்காக தான் செய்யக்கூடிய எந்தச் சேவையையும் அவன் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த அபாயத்தையும் பெரியதாக நினைக்கவில்லை. ""காதலிலும் போரிலும் எல்லாம் நியாயமே'' என்ற கோட்பாட்டில் அதிகம் நம்பிக்கை உள்ளவன் அவன்.ஒரு நாள் பார்க்கரும் அவன் மனைவியும் வீட்டிலிருந்து தோட்டத்திற்குப் போகும் வழியில்தான் சாய்விருக்கையில் அமர்ந்திருக்கையில் காக்கி உடையணிந்த ஒரு சிப்பாய் வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவன் மனைவி தண்ணீர் கொண்டு வருவதற்கு மகிழ்ச்சியுடன் எழுந்து சென்றாள். போர்முனைச் செய்திகள் பற்றி சிப்பாயிடம் பார்க்கர் விசாரித்தான்.""ரயில்பாதைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு தாக்குதலுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒüல்கிரீக் என்னும் நம்மருகேயிருக்கும் பாலத்திற்கு அருகில் வந்துவிட்டார்கள். அதன் மறுகரையில் ஒரு தளம் அமைத்து தடுக்கின்றனர். ரயில்பாதைகள், பாலங்கள், ரயில்கள் இவற்றை ராணுவத்தைச் சேராத யாராவது தொட்டால் உடனே தூக்கிலடப்படுவார்களென ராணுவத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை எல்லா இடங்களிலும் ஒட்டியிருக்கிறார்களே நீங்கள் பார்க்கவில்லையா?'' என்றான் அந்தச் சிப்பாய்.""அந்தப் பாலம் இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?'' என்று கேட்டான் பார்க்கர். ""சுமார் நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.""""ஆற்றின் இந்தப் பக்கம் இராணுவம் முகாமிட்டிருக்கிறதா?''""பாலத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு காவல் சாவடிதான் இருக்கிறது. பாலத்தின் முனையில் ஒரு காவற்காரன் மட்டும் நின்றிருக்கிறான்.""""இராணுவத்தில் சேராத ஒரு சாதாரணக் குடிமகன் அந்த இராணுவச் சாவடியை ஏமாற்றிவிட்டுப் பாலத்தின் அருகே சென்று அந்தக் காவற்காரனையும் முறியடித்து விட்டால் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டான் பார்க்கர்.சிப்பாய் சிறிது யோசித்துவிட்டு, ""நான் ஒரு மாதத்திற்கு முன் அங்கு போயிருந்தேன். முன்பு வந்த வெள்ளத்தில் ஏராளமான கட்டைகள் வந்து பாலத்தின் ஒரு கோடியில் அடைத்துக்கொண்டிருந்தன. அவை இப்பொழுது நன்றாகக் காய்ந்திருக்கும். வெறுமனே ஒரு தீக்கங்கு அல்லது தீயின் ஒரு சிறு பொறிபட்டால்கூடப் போதும் அனைத்தும் பற்றிக்கொள்ளும்"" என்று பதிலளித்தான்.இதற்குள் பார்க்கரின் மனைவி தண்ணீர் கொண்டு வந்து விட்டாள். சிப்பாய் அதை வாங்கிக் குடித்துவிட்டு, அவளுக்கு வழக்கமான முறையில் நன்றி தெரிவித்தான். அவளுடைய கணவனுக்கும் தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத் தன் குதிரை மீது ஏறிக்கொண்டு போய்விட்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மொத்தமாக அனைத்துச் சூழலும் இருட்டிய பின் அவன் வந்த திசையிலேயே திரும்பி வடக்கே சென்றுகொண்டிருந்தான். அவன் ஒரு இராணுவ உளவாளி.பலகை கீழே விழுந்தவுடன் பார்க்கர் தூக்குக் கயிற்றில் தொங்கினான். ஏறக்குறைய முன்பே அவனுக்கு நினைவு தவறிவிட்டிருக்கும். அவன் இறந்து விட்டவன் போலவே காணப்பட்டான். இந்த நிலையிலிருந்து அவனுக்கு எத்தனையோ காலத்திற்குப் பின் அவன் சடாரென நினைவு பெற்றதுபோல் தோன்றியது. கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிற்றின் வலியும், மூச்சு அடைப்பும் ஒரு கணத்தை யுகமாகத் தோன்றும்படியாகப் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தன. கொடிய வலி அவன் கழுத்தில் ஆரம்பித்து உடலின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. அந்த வலி வடிவமைத்த பாதைகள் வழியே மனம் தொடர்ந்து ஓடுவதுபோன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. ரத்தக்குழாய்களுக்குள் எரிமலைக் குழம்பு தொடர்ந்து பாய்ந்தோடுவது போல் இருந்தது அது. அவன் உடலில் சகிக்க முடியாத அளவுக்குச் சூடேறுவது போல் உணர்ந்தான். தலைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்ச்சி. அவன் சிந்தனைக்கும் இந்த உணர்ச்சிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. அவன் அறிவு ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்டுவிட்டது போலிருந்தது. அவனுக்கு வெறும் உடல் உணர்வுகள்தான் இப்போது இருந்தது. அந்த உணர்வு அவனைச் சித்திரவதை செய்தது போலிருந்தது. அதிக வெளிச்ச வெள்ளமான மேகங்களுக்கிடையே நெருப்பினாலாக்கப்பட்ட ஒரு பந்துபோல் வெப்பமாகவும் பிரம்மாண்டமான கடிகாரத்தின் ஊசல்போல் தன்னுடல் ஊசலாடுவதாக அவன் உணர்ந்தான். திடீரென்று அவனைச் சுற்றியிருந்த ஒளி கடுமையான முறையில் மேல் நோக்கிப் பாய்ந்தது. காதில் ஒரு பெரும் சப்தம் கேட்டது. திடீரென்று வெப்பமும் ஒளியும் மறைந்து அவனைச் சுற்றிக் குளிரும் இருளும் படர்ந்திருந்தன. அனைத்தைக் குறித்தும் யோசிக்கும் திறன் அவனுக்குத் திரும்பவும் வந்தது. தூக்குக்கயிறு அறுந்து தண்ணீரில் வீழ்ந்துவிட்டதை அதன் பின்னாகவே அவன் உணர்ந்தான். கழுத்தில் இருந்த சுருக்குக் கயிறு மேற்கொண்டு அதிகமாக அழுத்தவில்லை. அது ஏற்கனவே நன்றாக அழுத்தி, நுரையீரல்களுக்குள் தண்ணீர் புகாமல் தடுத்தது. ஆற்றிற்கடியில் தூக்கிட்டுக்கொண்டு சாவதா? இந்த எண்ணம் அவனுக்கு அபத்தமாகத் தோன்றியது. கண்ணைத் திறந்தான். மேலே ஒளிக்கீற்று தெரிந்தது. ஆனால் அது மிக அதிக உயரத்தில், அவனுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அவன் மேலும்மேலும் மிகமிக அதிக ஆழத்தில், இன்னும் ஆழத்தில் மூழ்கிக்கொண்டே போனான். ஒளி மேன்மேலும் மங்கிக்கொண்டே போயிற்று. என்ன நிகழந்ததென்றே தெரியவில்லை. தான் நீர்மட்டத்திற்கு ஒட்டி வருவதாகவே நினைத்தான். இப்பொழுது அவனுக்குச் சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது. தூக்கிலிடப்பட்டு நீரில் மூழ்குவது அவ்வளவு மோசமான அனுபவமாக அவனுக்குத் தோன்றவில்லை. ""அவர்கள் என்னைச் சுடக்கூடாது. சுடப்படுவதை நான் விரும்பவில்லை. அது ஒருபோதும் நியாயமில்லை"" என்று நினைத்தான்.நான் எவ்வித முயற்சியும் செய்ததாக அவனுக்குத் தோன்றவில்லை. மணிக்கட்டில் மிகக் கடுமையாக வலி ஏற்பட்டது. அதனால் கட்டப்பட்டிருந்த தனது கையை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விஷயம்போல் அதைக் கவனித்தான். என்ன ஆச்சரியம்! அந்தக் கயிறு தளர்ந்து வீழ்ந்துவிட்டது. கைகள் விடுபட்டு மேலே மிதந்தன. அதிகரித்து வரும் ஒளியில் இரு பக்கங்களிலும் கைகள் தெரிந்தன. அவை சுருக்குக் கயிற்றைத் தளர்த்தி எடுத்துத் தூர வீசி எறிந்தன. "" அந்தக் கயிற்றை மறுபடியும் கட்டிவிடு, கட்டிவிடு"" என்று தனக்குத் தானே மறுபடி மறுபடியும் உள்ளுக்குள் கூவுவதுபோல் அவனுக்குத் தோன்றியது. அதுவரை அவன் அனுபவிக்காத பெரும் வேதனை அந்தக் கயிற்றை எடுத்ததால் ஏற்பட்டது. கழுத்து வலி தாங்கமுடியவில்லை. மூளை தீயில் விழுந்ததுபோல் எரிந்து நொந்தது. மெதுவாக அடித்துக்கொண்டிருந்த இதயம் குதித்துத் துடித்துத் ததும்பியது. வாய்வழியாக அது வெளியே வந்துவிடுமோ என்று கூட தோன்றியது. ஆனால் அவன் கைகள் அவன் சொன்னபடி கேட்கவில்லை. அவை தண்ணீரைக் கீழ் நோக்கித் தள்ளி அவனை மேலே கொண்டு வந்தன. சூரியனின் தகிக்கும் வெளிச்சத்தில் கண் குருடாகிவிடும் போல் கூசியது. அவன் மார்பு விரிந்து பெரும் அளவு காற்றை உள்ளுக்கு இழுத்தது. உடனே அவன் மிகப் பெரும் கூச்சலின் மூலம் அதை வெளியே தள்ளிவிட்டான்.இப்பொழுது அவனுக்கு உடல் உணர்வுகள் எல்லாம் வந்துவிட்டன. அந்த உணர்வுகள் மிகவும் கூர்மையாக இருந்தன. இதற்கு முன் உணராதவற்றையெல்லாம் உணர்ந்தான். அவன் முகத்தின் மீது வந்து பட்ட சிற்றலைகளின் ஓசைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே அவனுக்குக் கேட்டன. ஆற்றங்கரையில் இருந்த காட்டைப் பார்த்தான். அதிலிருந்த ஒவ்வொரு மரமும், இலையும் இலையில் ஓடிய ஒவ்வொரு நரம்பும் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் உட்கார்ந்திருந்த பூச்சிகளையும், ஈக்களையும், கிளைக்குக் கிளை கூட்டை அகலமாக விரித்துக் கட்டியிருந்த சிலந்திகளையும் கண்டான். பல்வேறு விதமாக காற்றின் அலைவரிசைகளுக்கேற்ப அசைந்தாடிக்கொண்டிருக்கும் புற்களின் நுனிகளில் இருந்த பனித்துளிகளின் வண்ண இசைவுகளெல்லாம் அவனுக்குத் தெரிந்தன. பூச்சிகளின் சப்தங்களெல்லாம் சங்கீதம்போல் அவனுக்குக் கேட்டன. அவன் கண்ணுக்குக் கீழே ஒரு மீன் பாய்ந்து சென்றது. அது தண்ணீரைப் பிளந்துகொண்டு செல்லும் சப்தம்கூட அவனுக்கு நன்றாகக் கேட்டது.தண்ணீரின் மேல்பரப்புக்கு வந்துவிட்டான். உலகம் தன்னைச் சுற்றி மட்டுமே சுழல்வதுபோல் தோன்றியது. பாலமும் , அதன் மீது சிப்பாய்களும், பீரங்கித் தளமும், காப்டனும் சார்ஜெண்டும் அவனுடைய இரு கொலையாளிகளும் தென்பட்டனர். அவர்கள் நீலவானின் பகைப்புலனில் நிழல் உருவங்களாகத் தெரிந்தனர். அவர்கள் அவனைச் சுட்டிக்காட்டி ஏதோ கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காப்டன் துப்பாக்கியைக் கையில் எடுத்துவிட்டான். ஆனால் சுடவில்லை. மற்றவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. அவர்களுடைய ஆட்டங்கள் கோரமாகவும் கோமாளித்தனமாகவும் இருந்தன. அவர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக இருந்தன.திடீரென்று வேட்டுச் சப்தம் கேட்டது. ஏதோ வந்து அவன் தலைக்கு மிகவும் அருகாமையில் தண்ணீரில் தாக்கியது. அதனால் எழுந்த நீர்த்துளிகள் அவன் முகத்தில் தெறித்தன. மற்றொரு வெடியொலியும் கேட்டது. காவற்காரர்களில் ஒருவனின் துப்பாக்கியிலிருந்து மெல்லிய நீலப்புகை போய்க் கொண்டிருந்ததைக் கண்டான். அவன் கண் சாம்பல் நிறமாக இருந்தது. அது தன் கண்ணையே உற்றுநோக்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். சாம்பல் நிறக் கண் உள்ளவர்கள் குறி பார்ப்பதில் நிபுணர்கள் என்று அவன் எப்பொழுதோ படித்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் இந்தக் குண்டு குறி தவறிவிட்டது.வெள்ளத்தின் சுழல் பார்க்கரைத் திருப்பிவிட்டது. மறுபடியும் ஆற்றங்கரையில் இருந்த காடு தெரிந்தது. பின்னாலிருந்து ஒருபெருங்கூக்குரல் ஒலித்தது. மற்றெல்லா சப்தங்களும் அதில் மறைந்துவிட்டன. சிற்றலைகள் தன் காதின் மீது வந்ததால் ஏற்பட்ட சப்தம்கூட கேட்கவில்லை. கரையில் இருந்த லெப்டினெண்ட் குறி பார்த்துச் சுடச் சொல்லி சிப்பாய்களுக்கு ஆரவாரத்துடன் உத்தரவிட்டான். பார்க்கர் தண்ணீருக்குள் மூழ்கினான். தண்ணீருக்குள் எவ்வளவு ஆழத்திற்குப் போக முடியுமோ அவ்வளவு ஆழத்திற்குப் போனான். தண்ணீர் பெரும் அருவியின் இரைச்சல் போல் காதில் ஒலித்தது. இருந்தாலும் துப்பாக்கி சுடும் சப்தமும் கூடுதலாகக் கேட்டது. மறுபடியும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்தான். தோட்டாக்கள் ஒளி வீசிக் கொண்டு தன்னை நோக்கிப் பாய்ந்து வருவது தெரிந்தது. அவை அவன் கழுத்தில் பாய்ந்தது. அதன் சூடு வேதனையூட்டியது. அதைப் பிய்த்து எறிந்தான்.மூச்சுத்திணற நீர்மட்டத்திற்கு மேலே வந்தான். வெள்ளம் தன்னை வெகு தூரம் அடித்துக்கொண்டு வந்துவிட்டிருந்தது தெரிந்தது. தண்ணீருக்கடியில் தான் வெகு நேரம் இருந்துவிட்டதை உணர்ந்தான். இப்பொழுது அபாயம் குறைந்திருந்தது! சிப்பாய்கள் துப்பாக்கியில் மறுபடியும் தோட்டாவை அடைத்துவிட்டனர். பாலத்தின் மீது காவல் இருந்தவர்கள் அனிச்சையாகச் சுட்டனர். ஆனால் அவர்களுடைய குண்டுகள் அவனைத் தாக்கவில்லை. ஒருபோதும் அவனுடலைத் தீண்டவுமில்லை.""அதிகாரி மறுபடியும் அந்தத் தவறைச் செய்யமாட்டான். இஷ்டப்படிச் சுடச் சொல்லி சிப்பாய்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டிருப்பான். இப்பொழுது அந்தக் குண்டுகளிலிருந்து தப்புவது கஷ்டம். தன்னைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"" என்பதுபோல ஏதேதோ நினைத்தான்.அவனுக்கு மிக அருகில் பெரியதாக ஏதோ ஒன்று வந்து தண்ணீரைத் தாக்கியது. ஒரு பிரம்மாண்ட வெடிச்சப்தம் கேட்டது. அந்த ஒலியால் ஆற்றுத் தண்ணீர் அடிப்பாகம் வரை நடுங்கியது. அந்தப் பொருள் வீழ்ந்த இடத்திலிருந்து தெறித்த தண்ணீர்த் தகடு அவன் கண்ணை மறைத்தது. தன்னைக் கொல்வதில் பீரங்கியும் பங்குக்கொள்ள தொடங்கியருந்ததை அவன் அறிந்தான். துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் கேட்டது. தோட்டாக்கள் தலைக்கு மேல் பறந்துசென்று காட்டுமரங்களைத் தாக்கின.உடனடியாக அவன் பம்பரம்போல் சுழலத் தொடங்கினான். அனைத்துப் பொருள்களும் அதி வேகமாக அவனைச் சுற்றி சுழன்றன. அவற்றின் உருவமே தெரியவில்லை. வண்ணம் மட்டுமே தெரிந்தது. காடு, தூரத்தில் பாலம், பாலத்தின் மீது இருந்த மனிதர்கள், பீரங்கி மேடை எல்லாம் சுற்றிச் சுழன்றன. அவன் ஒரு நீர்ச்சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டான். அவனுக்குத் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. சில விநாடிகளில் வெள்ளம் அவனைத் தென்கரையில் ஒதுக்கியது. பின்னாலிருந்து ஒரு மேடு அவனை கொலையாளிகளின் பார்வையிலிருந்து மறைத்தது. அவன் சுற்றுவது நின்றுவிட்டது. அவன் ஒரு கை மணல் மேட்டில் பட்டதால் அவனுக்கு நினைவு வந்துவிட்டதுபோல் இருந்தது. அவன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். மணலை வாழ்த்தினான். அதை கை நிறைய வாரி தன் மீதே போட்டுக்கொண்டான். அந்தக் கரையோர வெற்று மணல் தங்கமாகவும் வைரமாகவும் நவரத்தினமாகவும் தோன்றியது. அந்த மணலைவிட அழகான பொருள் ஒன்றுமே உலகத்தில் இருந்ததாக அவனுக்குத் தெரியவில்லை. காட்டுமரங்கள் ஒரு அதி அற்புதமான தோட்டத்தின் செடிகள் போல் தோன்றின. அவற்றிற்குள் ஓர் ஒழுங்கு இருப்பதைக் கண்டான். அவற்றின் மலர்களிலிருந்து வந்த மணத்தை முகர்ந்தான். மரங்களின் மீது மிருதுவான ஒளி படர்ந்திருந்தது. அவற்றின் கிளைகளில் உராய்ந்து சென்ற காற்று, இனிய சங்கீதம்போல் ஒலித்தது. தப்பி ஓடவேண்டும் என்ற எண்ணம் கூட போய்விட்டது. அந்த ஆனந்தமான இடத்திலே கூட இருக்கலாம் என்று தோன்றியது. மரங்களில் பாய்ந்த தோட்டாக்களின் சத்தம் அவனைக் கனவில் எழுப்பியது. பீரங்கிக்காரன் கடைசி முயற்சியாக, ""திராட்சைக் குண்டுகளை"' பயன்படுத்தியிருந்திருக்கக் கூடும். அவன் அவற்றிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி குதித்தெழுந்து, சரிவான ஆற்றங்கரை மீதேறி காட்டிற்குள் ஓடி மறைந்தான்.அன்றெல்லாம் வழிநடந்தான். காட்டிற்குள் ஒரு முடிவே இல்லை. எங்கும் ஒரு ஒற்றையடி பாதைக்கூட தென்படவில்லை. அவ்வளவு அடர்ந்த காட்டிற்கிடையில் மட்டுமேதான் இவ்வளவு காலம்தான் வாழ்ந்தது என்பதுகூடத் தெரியாது.சூரியன் மறைவதற்கு அவன் களைத்துப் போய்விட்டான். கால் வலித்தது. மனைவி குழந்தைகளின் ஞாபகம் அவனை இழுத்தது. கடைசியில் ஒரு பாதையைக் கண்டுபிடித்தான். அது சரியான திசையில் போவதாகத் தோன்றியது. நகரத் தெருக்களைப் போல் அது அகன்றும் விரிந்தும் இருந்தது. ஆனால் ஆள் அரவமே இல்லாத பாதை போலும் அவனுக்குத் தோன்றியது. அதன் பக்கத்தில் ஒருபோதும் நிலங்கள் இல்லை. அருகாமையில் வீடுகளே தென்படவில்லை. இருபக்கங்களிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள் சுவர் வைத்ததுபோல் இருந்தன. அவற்றின் தொடர்வரிசை அடிவானம் வரை சென்று மறைந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். மிக ப்பெரிய விண்மீன்கள் ஏதொரு ஒழுங்குமின்றி அணிவகுத்து ஒலி வீசிக்கொண்டிருந்தன. ஆனால் அவற்றிற்குள் இனம்புரியாத ஓர் ஒழுங்கு இருப்பதுபோலத்தான் தோன்றியது. இருபுறத்திலும் உள்ள காடுகளிலிருந்து இனம்தெரியாத சப்தம் வந்துகொண்டிருந்தது. அந்தச் சத்தங்களினூடே யாரோ புரியாத மொழியில் பேசும் குசுகுசுப்பும் அனைத்தையும் மீறி அவனுக்குக் கேட்டது.இந்த வேதனைகளையும் மீறி நடந்துகொண்டிருக்கும்போதே அவன் தூங்கிவிட்டான். சந்தேகமே இல்லை தூங்கத்தான் தூங்கிவிட்டான். இப்பொழுது மற்றொரு காட்சியைக் கண்டான். தன் வீட்டுவாசலில் அவன் நிற்கிறான். தான் வீட்டிலிருந்து புறப்பட்டபொழுது இருந்ததுபோலவே எல்லாம் இருக்கின்றன. இரவெல்லாம் அவன் நடந்திருக்க வேண்டும். தன் அவன் வீட்டின் வெளிவாசலைக் கடந்து தோட்டத்துப் பாதை வழியே செல்லும்போது ஒரு பெண் அணிந்திருக்கும் ஆடைகளின் மெல்லொலி கேட்கிறது. அவன் மனைவி தாழ்வாரத்திலிருந்து மெதுவாகவும், அழகாவும் இறங்கி அவனை வரவேற்க வருகிறாள். அவள் கடைசி படிக்கு வந்து ஆனந்தமான புன்முறுவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இணையற்ற ஒயிலுடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறாள். எவ்வளவு அற்புத அழகுடன் அவள் இருக்கிறாள். இரு கைகளையும் நீட்டிக் கொண்டு தாவுகிறான். அவளைத் தழுவப் போகும் சமயத்தில் பின் கழுத்தில் பலத்த அடி ஒன்று விழுகிறது. கண்ணைக் குருடாக்கும் வெள்ளை ஒலி ஒன்று தன்னைச் சுற்றி பரவுகிறது. பீரங்கியின் முழக்கம்போன்ற ஒரு பிரம்மாண்ட சத்தம். பிறகு ஒரே இருள். ஒரே நிசப்தம்.பார்க்கரின் உயிர் போய்விட்டது. தொங்கிய தலையுடன் அவன் உடல் அந்தப் பழைய பாலத்திற்கு கீழே மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.


மொழிபெயர்ப்பு: துரைபாண்டி.