Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள் (6)


தும்பியைத் துரத்தட்டும்

நாணல்களோடு விளையாடியவாறே நதிகள் சுழித்தோட, காணும் மரங்களெல்லாம் பூத்துச் சிரிக்க, கொத்துக் கொத்தாய் தொங்கும் கனிகளைக் குயில்கள் கொத்தி மகிழ, செல்லுமிடமெங்கும் பசுமை நிறைந்து, நெற்கதிகள் வாசனை மணத்தை வருட-இத்தகைய ரம்மியச் சூழல் நிலவும் காலகட்டத்தை வசந்தகாலம் என்போம். ஆனால் மாணவர்களின் வசந்தகாலம் கோடைகாலம்.பெரியோர்களுக்குத்தான் கோடை வெயில் ஒரு கொடிய மிருகம் போல. மாணவர்கள், இதற்கு மாற்று எண்ணம் உடையவர்கள். அவர்களுக்குக் கொளுத்தும் வெயில் பற்றியோ, உதிரும் இலைகள் பற்றியோ கவலையிராது. பல மைல் தூரம் பாரம் இழுக்கும் மாடுகள் ஓய்வு நேரத்தை எவ்வளவு ஆசையோடு எதிர்கொள்ளுமோ அதைப்போலவே கோடை விடுமுறையை மாணவர்கள் வாஞ்சையோடு வரவேற்கிறார்கள்."காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு-என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா" என முண்டாசுக் கவிஞன் பாரதி பாடினான். ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு மாலை நேரம்மறைவதே தெரிவதில்லை. பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பின்னரும், சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இவை முடிவதற்கே இரவு ஏழு மணியாகிவிடும். பின்னர் மாணவர்கள் எப்படி மாலை நேரத்தை விளையாட்டிற்கெனச் செலவிட முடியும்?
ஒரு திராட்சைப் பழத்தைச் சுமக்கும் காம்புகள் ஆப்பிளைச் சுமக்க நேர்ந்தால், எப்படிக் காம்பு அறுந்து விழுந்துவிடுமோ, அப்படித்தான் மாணவர்களும் சுமக்க முடியாமல் களைத்து விடுகிறார்கள். இந்தக் களைப்பைப் போக்கி, துள்ளித் திரிய வைக்கும் காலமாகத்தான் கோடைக்காலத்தை மாணவர்கள் எண்ணி மகிழ்கிறார்கள். முன்பெல்லாம் கோடை விடுமுறை தொடங்கியதும், தூரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கோ, உறவினர் வீட்டிற்கோ மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் மனித உறவுகள் பலப்பட்டது. இப்போது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்புவது குறைந்துவிட்டது. இதனால் நகரத்து மாணவர்களுக்கு உறவுமுறைகளின் பெயர்கள்கூட தெரிவதில்லை.இந்தக் கோடை மாதத்தையும் படிப்பிற்கெனவே பெற்றோர்கள் செலவிட விரும்புகிறார்கள். விடுமுறை விட்டதுமே, ஏதாவது பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கெனவே பருவகாலத் தொழில் போல கோடைகாலப் பயிற்சிகள் ஏராளம் இருக்கின்றன. முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களை உடனே தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விடுவார்கள். இப்போது தட்டச்சுப் பயிற்சிக்கு மவுசு இல்லை. எல்லாம் கணிப்பொறி மயம். இதனால் முன்றாம் வகுப்பு முதலே, கணிப்பொறிப் பயிற்சி வகுப்பில் சேர்க்கிறார்கள். இதோடு விட்டால் பரவாயில்லை. அடுத்த வகுப்பிற்கான புத்தகத்தையும் இப்போதே படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.மேலும் சில தனியார் பள்ளிகள் விடுமுறை காலமான மே மாதம் முடிவதற்குள்ளாகவே பள்ளியைத் திறந்து விடுகிறார்கள். தங்கள் பள்ளி, கல்விக்கு¢ முக்கியத்துவம் கொடுப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக இப்படிச் செய்கிறார்கள். இந்த ஒரு மாதகால விடுமுறையில் பெரும் கல்வி இழப்பு எதுவும் வந்துவிடப் போவதில்லை. ஒன்பதாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் பதினொன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் மே மாதத்திலேயே சிறப்புப் பயிற்சி தொடங்குகிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட்டு நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களையும் கோடை விடுமுறையிலும் வதைப்பது என்பது தவறு.சில பெற்றோர் மட்டும் கோடை விடுமுறையில் மாணவர்களைப் படிப்பு தொடர்பாக தொந்தரவு செய்வதில்லை. கோடை விடுமுறையிலும் விளையாட அனுமதிக்காவிட்டால், பள்ளி தொடங்கும்போதும் விளையாட்டு நினைவோடே இருந்து படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்திலும் அனுமதிக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்று. எனினும் விளையாட்டு என்பதும் இன்று இயந்திரமயமாகி விட்டது. வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம்ஸோ, கணிப்பொறியிலோ தான் விளையாட அனுமதிக்கிறார்கள். இதையும் மாணவர்கள் விரும்பவில்லை. ஓடி ஆடி விளையாடவே விரும்புகிறார்கள். இதில் தவறேதுமில்லை. மாணவ வயதில் ஓடி ஆடி தும்பியைத் துரத்தட்டுமே, வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து அதன் வண்ணங்களை ரசிக்கட்டுமே, செடிகளோடு பேசட்டுமே.பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதில் தவறில்லை. கோடைவிடுமுறையிலும் இரவு பகலாகப் படிக்கச் சொல்லி வதைப்பதைச் சற்று குறையுங்கள்.விதைகளுக்கு அளவுக்கு அதிகமாகவும், அளவுக்குக் குறைவாகவும் நீர் ஊற்றுவது சிறந்த அணுகுமுறையாகாது.

No comments: