இருட்டாழி
த. அரவிந்தன்
தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தருவின் நினைவுக்கு வந்த இடம் மெரினாவின் கண்ணகிச் சிலை பின்புறம். ஆழிப் பேரலையில் அதிகம் பேர் இறந்துபோயிருந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை. முழுதாய் ஒன்றை நம்புவது அவனுடைய முப்பது வயதில் இதுவே முதல். கடற்கரைக்கு அவன் வந்திருந்த நேரம் அமாவாசை நள்ளிருள்.
இருட்டின் ஆளுகையிலும் தனிமையின் மிரட்டலிலும் அரண்டு கிடந்தன எல்லாம். இரவில் அலையும் பறவைகள்கூட ஒன்றும் காணவில்லை. வேறுவழியின்றி கிடக்கின்ற கட்டுமரங்களும் நடுங்கிக் கிடப்பதுபோலவே கிடந்தன. பயத்தில் குழறுவதுபோல மிதமந்தமாய் கேட்டன இரவில் கேட்கும் சில ஒலிகள். குரைத்தவாறே ஒரு நாய் விரட்டத் தொடங்கியதும் துணை சேர்ந்து எல்லாம் நாய்களும் விரட்டுவதுபோல தொடர் பேரிரைச்சலுடன் கரை மோதி இருட்டை விரட்ட முயன்றன அலைகள். நரிகளின் ஊளையாய் அவ்வப்போது வந்து போனது உப்புக்காற்றின் சத்தம். வேறொரு சூழலாகயிருந்தால் இந்தக் கடலிருட்டில் தருவும் மிரண்டு போனாலும் போயிருப்பான். தற்கொலை செய்துகொள்ள வந்த அவனை எந்த இருட்டு மிரட்ட முடியும்? சுதந்திரமாக உணர்ந்தான்.
தடுப்பதற்கு ஒருவரும் இல்லாததுபோல உடலில் கிடைப்பதற்கும் ஒன்றுமில்லாமல் போனாலும் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். எதையும் விட்டுப்போவதில் அவனுக்கு விருப்பமில்லை. அலைகள் அரித்துக்கொண்டிருக்கும் கடைசிக் காலடிச் சுவடுகளில் நிற்கிற இப்போதுதான் இப்படி முடிவெடுக்கிறான் என்பதில்லை. எப்போதுமே அவன் அப்படித்தான். சுவடுகள் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. இறந்த உயிரை அடக்கம் செய்வதுபோன்ற அக்கறையே சுவடு பதித்தல் என்பான். கடற்கரையில் பதிந்திருக்கும் காலடிச் சுவடுகளைத்தான் ஒவ்வொருமுறையும் உதாரணம் காட்டுவான். "ஆசை, பொறாமை, சாபம், தூபம், தியாகம், ரௌத்ரம், உண்மை, பொய்மை, பழமை, புதுமை, சாதனை, சரித்திரம் என எல்லாவற்றின் சுவடுகளும்தான் பதிந்திருக்கின்றன. இதில் ஒரு சுவடேனும் நிலைத்திருக்கும்? அழிப்பின் இடைவெளி ஒன்றுக்கு ஒன்று தூரமாகுமே தவிர நிலைப்பு என்பது நிதர்சனம் இல்லை. எல்லாச் சுவடுகளையும் காலம் தின்று தீர்த்துவிடும்' என்பான்.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணச் சாட்சிகள் எதையும்கூட விட்டு வைக்காமல்தான் வந்து நிற்கிறான். மனதைப் பாதிக்கிற அளவிலான பெரிய சம்பவங்கள் எதுவும் அவனுக்கு இங்கு வருவதற்கு முன்பு ஏற்பட்டதாய்த் தெரியவில்லை. வாழ்வின் புரிதலின்மை பற்றிதான் தரு எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பான். துயரச் சம்பவங்களின்போது அதிவேக இயந்திரமாய் புரிதலின்மையோடு மல்லு கட்டுவான். தனக்கு நல்லதாய் தெரிகிற ஒன்று எப்படிப் பிறருக்குத் தீயதாய் தெரிகிறது என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடிந்தது இல்லை. எல்லோரிடமும் ஒத்துப்போகுகிற ஒரு நோக்கு பிறிதொரு சமயத்தில் எப்படி மாறிப்போகிறது என்பதும் அவனுக்குப் புரியாத வியப்பு. "புரிதலின்மை.... புரிதலின்மை' என்று குழம்பிக் கிடந்தவன் காற்று வாங்க வருவதுபோல இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டான். புரி கொடுக்காத புத்தகத்தை மூடுவதுபோல வாழ்க்கையை முடித்துக் கொள்ள நிற்கிறான். திருட வருகிறவன் விடுகிற தடயமாய் தூரத்துத் தார்ச்சாலையில் நிற்கிறது அவன் வாகனம்.
கொள்ளிப்போட்டவன் வீடு திரும்புகையில் அழுகையோடு சவக்குழியைத் திரும்பிப் பார்ப்பதுபோல நின்ற இடத்திலிருந்தே வாகனத்தைத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் அது அநாதையாக நிற்பதுபோலப்பட்டது. ஒருவேளை தன்னுடைய உடல் கிடைக்காமல் போனால் எல்லோரும் வாகனத்தைச் சுற்றி நின்றுதான் மாரடித்து அழுவார்களோ? என்று நினைத்தான். தொடர்ந்து எத்தனை நாளைக்குத்தான் அவர்களால் அழ முடியும்? சுனாமியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோன போதுகூட கொஞ்சக் காலத்திற்குத்தானே எல்லாரும் மீன் சாப்பிடாமலிருந்தார்கள்? என்று பதில் சொல்லிக்கொண்டான். தூரத்துச் சாலைகளில் வெளிச்சப் புள்ளிகளாய்த் தெரிந்த மின் விளக்குகளைப் பார்த்தான். நடுங்கி ஒளிர்ந்தன. தான் பார்க்கும் கடைசி வெளிச்சங்கள் என்று சிலிர்த்தான். பெயர் தெரியாத ஒரு மரத்தின் இலைகளை எப்போதோ உருவியபோது அதற்கேற்பட்ட வலி இப்போது அவனுக்குப் புரிந்தது. எச்சிலையும் சளியையும் காறி காறி தரையில் துப்பியதெல்லாம் தன் மேலேயே விழுந்துகொண்டிருந்தெனப் புரிந்தது. காணும் கல், கட்டடங்கள் எல்லாம் தன்னுடையதெனப் புரிந்தது. வெறும் ஆறடிக் குழியில் புதைக்கப்படுவதில்லை. பேரண்டமெனும் பெருங்குழியில் புதைக்கப்படுகிறோம் எனப் புரிந்தது. இந்தப் புரிதல்களோடே இறந்துபோக நினைத்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் இதற்கு எதிர்மறையானப் புரிதல்கள் தோன்றலாம் என்று அவன் அனுபவம் சொன்னது. புரிதலின்மை என்பது புற்றுநோய். அழியாது...அழியாது... அழிக்கும் என்று திரும்பிக் கடலைப் பார்த்தவன் பேரதிர்ச்சியானான்.
இருட்டுக்கும் தனிமைக்கும் பயப்படாமல் இருந்தவனின் கண்களை அசுரவேகத்தில் தள்ளிக்கொண்டு உள்ளே இறங்கியது மிரட்சி. சவுக்குக்கட்டை ஒன்று நுழைந்துவிடுகிறளவு வாய் பிளந்தான். அடைப்புகளை உடைத்துக்கொண்டு சுரபிகள்தோறும் வியர்வை வெளியேறியது. வெளியிருட்டுகளை மிஞ்சுகிற பேயிருட்டு அவன் உடலுக்குள் புலர்ந்து உலுக்கியது. குருட்டு நிலையாய் உள்ளுறுப்புகள் தவித்தன. நுரையீரலின் நுழைவு துவாரம் அடைப்பட்டதுபோல நாடிகள் துடித்தன. நாய்களுக்கு நீந்த தெரியும் என்றாலும் அலைகளில் தூக்கிப் போட்டதும் கரை சேர்வதற்குள் பெரும் பதைப்பதைப்புடன் உயிருக்குப் போராடுவதுபோல வேகமாக இயங்கியது அவன் மூளை. வெளியில் கேட்காவிட்டாலும் அவன் உடலின் பேயிருட்டெங்கும் அலறல் சத்தம் கேட்டது.
"அய்யய்யோ... உள்வாங்கியிருக்கே... கடல் உள்வாங்கியிருக்கே... சுனாமியா இருக்குமோ... தனியா வந்து மாட்டிக்கிட்டேனே... அய்யய்யோ... நிக்கும்போதே எப்ப உள்வாங்குச்சுன்னே தெரியிலயே... ஒருவேள சுனாமியாவே இருந்தா...'} இடறிஇடறி உயிர்போகிற ஓட்டம் ஓடினான்.
நெடுகிலும் வரிசையாய் படுத்துக்கிடந்த பில்லியன் கணக்கான கருநாகங்கள் ஒரேசமயத்தில் பனைமரம் உயரத்திற்குத் தலைகளைத் தூக்கிச் சீறுவதுபோல... பல நாள் பசித்திருந்த லட்சக்கணக்கான கருஞ்சிறுத்தைகள் இரைகளைக் கண்டு கறி கிழிக்கும் நீண்ட நான்கு பற்கள் தெரிய வாய் பிளந்து நிற்பதுபோல... பாதியாய் உடைந்த கறுத்த வானம் தரை தட்டி, கரை பக்கம் சாய்ந்தால் எல்லாமே கடல் மட்டம் ஆகிவிடும் என்பது போல.... கோடானுகோடி கொடும் கொலைவெறிக் கோலமாய் திடீரென ஆழ் கரையில் கொந்தளித்தெழுந்தது ஆழிப் பேரலை." புஸ்...புஸ்...' எனப் பெரும் சத்தங்களோடும், வாய் பிளந்து நின்ற கருஞ்சிறுத்தைகளின் பாய்ச்சலோடும்... ஆழிப் பேரலை மேல் கரை நோக்கி யுத்தத்துக்கு வருவதுபோல பாய்ந்து வந்தது. பூமியே பெயர்ந்து நகர்வதுபோல மணல்வெளியெங்கும் பேரதிர்வு ஏற்பட்டது. மலைகள் உருள்கையில் நசுங்கிற சிறு செடிகொடிகள்போல, எதிர்படுவை மீது பேரலையின் பாய்ச்சல்தான் தெரிகிறது. திமிங்கலத்தின் வயிற்றில்போவதுபோல அவை என்ன ஆகின்றன என்றே புலப்படவில்லை.
தரைகளையும், கட்டுமரங்களையும் விழுங்கியவாறே வந்தது திரும்பித் திரும்பிப் பார்த்து ஓடிக் கொண்டிருந்த தருவின் மேல் பாய்ந்தது. முதலில் பேரலையின் சிறு முகடு மோதியது. காற்றாடி நூலில் சிக்கிய அண்டங்காக்கைபோல அந்தரத்தில் அவன் கை கால்களை உதறியது அரைநொடி நேரம் தெரிந்தது. அடுத்த நொடி சிறு முகடின் இடப்பக்கம் வந்த பேரலையின் உயர முகடு ஒன்று அவன் தலையைப் பிடித்து இழுத்தது. கருநாகங்கள் கொத்துவதுபோலிருந்தது பெரும் சுழற்சியின் பிறழ்சி. அலறுகிற சத்தம்கூட கேட்கவில்லை. இடைப்பட்ட பிறழ்சியில் பேரலையின் எந்த விலங்கு அவனை இழுத்து விழுங்கியது என்றே தெரியாமல் போனான்.
மேகத்தில் தெரிவதுபோல ஒவ்வொரு விலங்கின் உருவமாய்த் தெரிந்துகொண்டிருந்த பேரலை பல்லாயிரக்கணக்கான யானைகளின் கூட்டமாய் உருமாறி ஓடிவரத் தொடங்கியது. மதம்பிடித்த குணத்துடன் வேகம் கிடைத்த தூரம் வரை ஓடிவந்து கரையைக் கடலாக்குகிற வெறியுடன் பேரலை சுழன்றுசுழன்று தாக்குதல் தொடுத்தது. அடிபணிந்து கிடந்தவற்றை தும்பிக்கை அலைகளால் துவம்சம் செய்தது. போதுமானளவு சீரழித்து, சின்னாபின்னமாக்கி, நாசமாக்கிய பிறகு அதன் மதம் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பாகன்களுக்குக் கட்டுப்பட்ட யானைகள்போல அரை மணிநேரம் கழித்து அசைந்து அசைந்து வால்களை ஆட்டிக்கொண்டே ஆக்கிரமித்த கரையைவிட்டு திரும்பிப் போகத் தொடங்கியது. கடலாகிக் கிடந்தது வடிந்து வெள்ளக்காடாகி அதுவும் அலைஅலையாய் இறங்கியது.
வடிந்த பகுதிகள் பேரலை தாக்கப்பட்ட பொழுதைவிட அதிக மிரட்சியைக் கொடுக்கின்றன. எல்லாம் மாறின இயக்கமாய் இருக்கிறது. முன்பைவிட பூதாகரச் சத்தத்துடன் அலைகிறது காற்று. சுடுகாட்டு நாற்றம் வீசுகிறது. யுத்தத்தில் செத்துக் கிடக்கிற மனிதர்கள்போல உடைந்து சிதறிக்கிடக்கின்றன கட்டுமரத்துண்டுகள். எங்கிருந்து வந்தன என்றே தெரியாமல் சில விசித்திரப் பொருள்கள் இறைந்து கிடக்கின்றன. அரையடிக்கு அரையடி ஆமைக் குஞ்சுகள் நகர்கின்றன. நட்சத்திர மீன்கள் செத்துக்கிடக்கின்றன. நாலைந்து கடற்சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டே கரையிலிருந்து கடலுக்குப் போகின்றன . அய்யய்யோ அங்கே... பிண...ங்கள். மனிதப் பிணங்கள். குவியல்குவியலாய்... ஐம்பது ஐம்பது பேராகவோ, நூறுநூறு பேராகவோ ஒரே குழியில் புதைப்பதற்குக் கிடப்பதுபோல இருளில் தெரிந்த தூரத்துக்கும் கிடக்கிறார்கள். எல்லாருமே நிர்வாணமாகக் கிடக்கிறார்கள். பெண்களும் அதிகமாகக் கிடக்கிறார்கள். ஒதுங்கிக் கிடக்கிற மீன்கள்போல அங்கங்கே உடைந்த கைகளும், கால்களும், மார்பகங்களும், சதைகளும் வேறு கிடக்கின்றன. ஒத்தையில்தானே நின்றுகொண்டிருந்தான் தரு... எங்கிருந்து வந்தார்கள் இத்தனை பேர்? அய்யய்யோ... அந்தப் பிணக் குவியலில் ஒருத்தன் மட்டும் சட்டை அணிந்திருப்பது போலத் தெரிகிறான். அவன்தான் தருவா...தருவா... தருவா...? தருவே... தருவே... தருவே தான். பிணங்கள் மேலே கிடக்கும்போதும் அவன் கை ஒன்றில் மெல்லிய அசைவு தெரிகிறது. அய்யய்யோ.... அந்த அசைவு அவனிடமிருந்து மட்டும் வருவதாய் தெரிய இல்லை. வேறு சில குவியலிலும் யார்யாரோஅசைகிறார்கள். அப்படியானால் கிடப்பவர்கள் எல்லோருமே பிணங்கள் இல்லையா? மணலைக் கிளறிக்கொண்டு வருகிற நண்டுகளைப்போல மனித இடிபாடுகளிலிருந்து உருவிஉருவிக் கொண்டு சிலர் எழுந்திருக்கப் பார்க்கிறார்கள். உருவிக்கொள்கிறபோது சிலரின் உடலுறுப்புகள் பிய்ந்து கீழே விழுகின்றன.குப்புறக் கிடக்கிறவாறே உருவி வர தருவும் முயலுகிறான். மேலழுத்த கனத்தால் கைகளைத் தவிர வேறு எதையும் அசைக்க முடியாமல் தவிக்கிறான். அவன் உடலெங்கும் அவசரஅவசரமாய் உணர்ச்சி மேய்கிறது. முதுகில் பற்கள் பதித்தபடி ஒரு முகத்தை உணர்கிறான். கால்களில் மார்பெலும்பின் குத்தல்; உறுப்பு அறியாத முடிகளின் உராய்வுகளை உணர்கிறான். பாதத்தில் ஓர் ஆணுறுப்பை உணர்கிறான். கால் நகங்களில் கழுத்துச் சங்கு தென்படுகிறது. தலையில் ஒரு பிருட்டம் அழுத்துகிறது. மேய்ச்சலைப் பாதியிலே நிறுத்திக்கொண்டு சுளீர்சுளீரென அடிப்பதுபோல மேலும் அவனுக்குப் பயத்தை அதிகப்படுத்துகிறது உணர்ச்சி. அசைவை வேகப்படுத்துகிறான். மேலே கிடந்த உடல்கள் சரிந்து விழுகின்றன. அழுத்தம் குறைகிறது. மெல்லமெல்ல முழுதாய் உருவிக்கொள்கிறான். உறுப்புகள் எதுவும் பிய்ந்து போகவில்லை. ஆடைகள் தாறுமாறாய் கிழிந்திருக்கின்றன. மண்டை உடைந்து இரத்தம் கொட்டுவதை உணர்கிறான். மயக்கப் பூச்சிகள் கண்களில் பறக்க எழுந்தான். சிமிட்டிச்சிமிட்டிப் பார்த்தான். அடுத்தநொடி இரண்டு கடப்பாரைகள் கண்களில் இறங்குவதுபோல பெரும் சத்தத்துடன் அலறினான். மிரட்சி பேரலையாகி அவன் சிறுநீரகப் பையில் தாக்குதல் தொடுத்தது. இருவிழியால் அழுதான். ஒரு வழியால் ஒழுகினான்.
எழுந்தவர்களைப் போல எழாதவர்களும் அதிகம்பேர் இருக்கிறார்கள். கரையில் போட்ட மீன்கள் துள்ளித்துள்ளி உயிருக்குப் போராடுவதுபோல எழுந்த சிலர் எரிச்சல் தாங்க முடியாமல் ஊதியபடியே தங்களுக்குப் போனதற்கேற்ப கையுதறி, காலுதறி, உடலுதறி நிற்கிறார்கள். இரத்தம் கொட்டுவது அவர்கள் உதறுகையில் மேலே படுவதிதிலிருந்து தெரிகிறது. அங்கும் இங்கும் வேகவேகமாக ஓடிஓடி பலர் இறைந்து கிடக்கிற உறுப்புகளில் அவர்களுடைய உறுப்புகளைத் தேடுகிறார்கள். எடுக்கிறார்கள். இரவு அவர்களை வேண்டிய மேனிக்கு அலையவிடுகிறது. கை என்று எடுத்தது மரக்கட்டையாக இருக்கிறது. இழந்த விரல்கள், காதுகள் போன்ற சின்னச்சின்ன உறுப்புகளைத் தேடி எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். உறுப்பு கிடைத்தவர்கள் அதைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். கீழே வைத்துவிட்டு அதன் அருகிலேயே காவலிருக்கின்றனர். யாராவது அதை அவர்களுடையதாகக் கருதி எடுக்க வருகிறபோது எடுத்து வைத்திருப்பவர்கள் தங்கள் உறுப்புகளோடு பொருத்திக் காட்டுகிறார்கள். ஒன்றுமறியாததுபோல வந்துபோகத் தொடங்கியிருந்த அலையில் சில உறுப்புகள் அடித்துப் போவதும் ஒதுங்குவதுமாய் இருக்கின்றன. சிக்கியும் சிக்காமலும் அலைகழித்த அவற்றைப் பிடிக்க முடியாமல் விழுவதும் எழுவதுமாகச் சிலர் தவிக்கிறார்கள் . நகரக்கூட முடியாதவர்களுக்கும், பெண்களுக்கும் இயன்றவர்கள் உதவி செய்கிறார்கள். ஒவ்வோர் உறுப்புகளாய் எடுத்துவந்து "இதுவா..அதுவா' என்று காண்பிக்கிறார்கள். தன்னுடையது என்று பட்டதை வாங்கிக் கொள்கிறார்கள். கிடைக்காதவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்வையால் தேடி, "அதை எடுத்துவாங்க... இதை எடுத்து வாங்க' என்று காட்டுகிறார்கள். ஒழுகினச் சூட்டோடு ஒவ்வொருவரின் பயங்கரக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே தரு நொண்டி நொண்டி நடந்தான். அவன் உடலுள் அப்பியிருந்த பேயிருட்டு பாறாங்கல்லைப்போல கனமான ஒன்றாக மாறிப்போனது. பாறையிருட்டைச் சுமக்க முடியாமல் வேகமூச்சுவிட்டு அழுதான். பத்தொரு நொண்டலுக்குப் பின் அவனுடைய சத்தம் மட்டும் தனிமையில் கேட்பதாய் உணர்ந்தான். அதிர்ந்து அலறுவதை நிறுத்திக்கொண்டான். உறுப்புகளை இழந்தவர்களிடமிருந்து எரிச்சலுக்கு ஊதிக்கொள்வதைத் தவிர சிறு அலறல்கூட வராதது மட்டுமல்ல; அவனிடமிருந்து அவர்கள் முற்றிலும் வேறுபட்டிருப்பதாய் உணர்ந்தான். அது அவனுக்கு பேரலை தாக்கிய பொழுதைவிட அதிக நடுக்கத்தைக் கொடுத்தது."தனியாகத்தானே நின்றிருந்தேன்... இங்கிருக்கிறவர்களில் நான் மட்டுமே தனித்து இருக்கிறேன். நான் மட்டுமே ஆடை போட்டிருக்கிறேன். சாதாரணமாக மண்டை உடைந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பெரிதாய் இழப்பில்லை. இருமடங்காய் மும்மடங்காய் எல்லோரும் என்னைவிட ஊதிப்போயிருக்கிறார்கள். பல வருடத் தாடியோடு, தலைமுடியெல்லாம் கொட்டிப்போய் ஆண்கள் எல்லோரும் ஒன்றுபோலத் தோன்றுகிறார்கள் . சிலருக்கு நாலைந்து தலைமுடிகள் மட்டும் தாடிக்கு நிகராக நீண்டிருக்கிறது. நான் கடக்கிறபோது மட்டும் பெண்கள் கைகளினாலோ, உட்கார்ந்தோ, குப்புறப்படுத்தோ நிர்வாணத்தை மறைக்க முற்படுகிறார்கள். என்னிடம் மட்டும் அவர்கள் வெட்கப்படுவதற்கான காரணம் என்ன? உறுப்புகளைத் தேடுகிற உணர்ச்சி இருக்கிறது. உறுப்புகளை இழந்த வலியுணர்ச்சி எப்படி இல்லாமல் போகும்? யாரிடமாவது பேச வேண்டும். பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. தனியாகத்தானே நின்றிருந்தேன்... தனியாகத்தானே நின்றிருந்தேன்... ' அனிச்சையாய் அவன் நாடிகள்தோறும் ஒலித்து வலித்தன. உடைந்த மண்டையைத் தடவிக்கொண்டே மிரட்டாத முகமாய்த் தேடித் தூரத்துக்கும் நொண்டினான். இடையில் தட்டுப்பட்ட உறுப்புகளைத் தாண்டித்தாண்டித் தேடினான். உயிரோடு காணுகிற ஒன்றாகவே அவனுக்கு எதுவும் தெரியவில்லை.வதைத்துக்கொண்டு இடுப்பாலே நகர்ந்துநகர்ந்து எதிரில் ஒருவர் வந்தார். தோள்களில் இரண்டு கால்களை வைத்து கைகளால் பிடித்திருந்தார். தருவின் அருகில் வந்ததும் கால்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்கத்தில் இறக்கி வைத்தார். உடைந்த கால்களைத் தூக்குவதற்குப் பயந்து உதவாமலே மரண அழுகையை மீண்டும் தரு தொடங்கினான் . நகர்ந்து வந்தபோது பெருங் காயங்களில் மணல் பிறாண்டி பிறாண்டி , இரத்தம் கொட்டி வலி அவர் உயிரை நெறிக்கவேண்டும். கண்களை மூடி, முகத்தை இறுக்கி வலியை அடக்க முயன்றார் . கழுத்து நரம்புகள் புடைப்பது தெரியாதளவு தாடி மறைத்திருக்கிறது. தாங்கமுடியாமல் அப்படியே மணலில் சாய்ந்தார். பேசுவதற்கு வாய் அசைத்தார். செத்த ஓசைகளாகவே வெளிவந்தன. அவரின் எந்த ஓசையையும் அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் எல்லாவகையான ஒப்பாரிகளை வைத்தான் தரு. ""அய்யோ... இந்தக் கொடுமைய என்னால பாக்கவே முடியலயே... பாக்கவே முடியலயே... எப்டிய்யா உங்களாலயெல்லாம் தாங்க முடியுது... நகம் கீறுனாலே உசுருபோனாப்போல இருக்குமேய்யா... எப்டிய்யா உங்களாலயெல்லாம் தாங்க முடியுது... ஒருத்தரு கூட அழுவுறா மாதிரி தெரியிலயே... ஒத்தையிலதான நின்னுக்கிட்டிருந்தேன்.... எங்கிருந்து வந்து இத்தன பேரு மாட்டினிங்களோ.... தெரியலையே... '' சுழற்காற்று சங்குகோசையாக எழும்பி அவன் ஒப்பாரியை அழிப்பதும் விடுவதுமாக கடந்துசென்றுகொண்டிருந்தது. காலிழந்தவருக்கு நீண்ட ஒப்பாரி வெறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். படுத்தவாறே மணலை வாரி இரண்டு கைகளாலும் இறைத்தார். ஒப்பாரியை நிறுத்தி அவரைப் பேயதிர்ச்சியாய் பார்த்தான். இறைப்பதை நிறுத்தி அவனை அருகில் சைகையால்அழைத்தார். குனிந்து அவர் அருகில் உட்காரப்போனான். உடைந்த கையொன்றைத் தூக்கிக்கொண்டு குறுக்காக ஒருவர் ஓடினார். தூக்கியோடிய கையின் விரல்கள் தருவின் மேல் உராய்ந்தது. இதயத்தைப் பிடுங்கியதுபோல அப்படியே நின்றான். மீண்டும் அவனை அவர் அழைத்தார். இடுப்புக்கு அருகில் உட்காருவதற்குப் பயந்துகொண்டு அவருடைய தலைக்கு அருகில் போய் உட்கார்ந்தான்.
"அழு...ற நேர...மில்ல...இது...'' பாதி செத்தும்; பாதி பிழைத்தும் உயிர் போகிற தருணத்தில் வருவதுபோல மெதுவாக அவரிடமிருந்து வார்த்தைகள் வந்தன." கை, கால்....ன்னு கண்ட....கண்ட உறுப்....பெல்லாம் போனாலும் உசிரும் ஓரளவு உடம்பும் கிடைச்....சுதேங்குற சந்தோஷத்துல இருக்கோம் தம்பி... உங்க உதவி கொஞ்...''""கையும் காலுமாய்யா கண்டகண்ட உறுப்பு..?''. காலிழந்தவர் படுத்தபடியே முதுகைத் தூக்கி தரையில் இடித்துஇடித்து வலிபொறுத்தார். எரிச்சலுடன் காயங்களில் விடாமல் கொசுக்கள் கடிக்கவேண்டும். இரண்டு கைகளால் கால்பெயர்ந்த இடுப்பு பகுதிகளில் விசிறிக்கொண்டார்." உசரக் காப்பாத்திக்க நாங்க எவ்வளவு போராடியிரு....க்கோம்னு எங்களுக்குத்தானே தம்பி... தெரியும்... இங்க இருக்கிறதுல நீங்க மட்டும்தான் எங்க ஆளு இல்லை. ''""இந்த நிலையிலுமாய்யா... உங்க ஆளு... எங்க ஆளுன்னுட்டு...'' சிறிய கோபம் தருவுக்குள் எட்டிப்பார்த்துவிட்டுப் போனது.மூன்று பேர், ஒரு கை, கால், ஒரு காதைக் கொண்டு வந்து படுத்திருந்தவர் அருகில் வைத்துவிட்டு பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு வேறு யாருக்கோ தேடப் போனார்கள். இரண்டு பேர் நொண்டிப் போனார்கள். ஒருவர் ஊர்ந்தார்."தம்பி... ஒரு பெரிய அலையில அடித்துப் போனவங்க நாங்க...''""உங்கக் கூடத்தானய்யா... நானும் சுனாமியல தப்பிச்சிப் பேசிட்டு இருக்கேன்''""இந்த அலைய சொல்லல தம்பி... இதுக்கு முன்னாடி ஒரு பெரிய அலையில அடிச்சிட்டுப் போனவங்க நாங்க... நாள் கணக்கு... வருஷக் கணக்கு... பகல் கணக்கு... இரவு கணக்கு.. எல்லாம் தெரியில தம்பி. லைட் அவுஸ்ல பாதி இருக்கும்... ஒரு பெரிய அலை... இழுத்துட்டு போச்சு... அந்த அலையில இருந்து இப்பதான் படாதபாடு பட்டு நாங்கத் தப்பி வரமுடிஞ்சுது... இப்ப வந்த அலை நாங்க கரை சேருவதற்காக வந்த அலை... நாங்க சிக்குன அலையோட வாந்தி...''பேரலை தாக்குதலில் அவருக்கு மூளை குழப்பிவிட்டது என்று தரு நினைத்தான். இருவர் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்போல பிருட்டப் பகுதியில் சதை பெயர்ந்திருந்த ஒருவரும், மணிக்கட்டோடு கை பெயர்ந்த ஒருவரும் அருகில் வந்து, படுத்திருந்தவரின் இடுப்புப் பக்கமாக நின்று ""அந்த அலையால எங்கள செரிக்க முடியவில்லை'' என்றனர். எல்லோருக்குமா மூளை குழம்பும்? அப்படிக் குழம்பினாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவாகப் பதில் சொல்வார்கள்?""முன்னாடி... லட்சம் பேர் செத்துப்போனாங்களே... அந்தச் சுனாமியிலா...?'' தடுமாறி தடுமாறி கேட்டான்.""சுனாமியோ... என்னவோ'' மூன்று பேரும் ஒரே சமயத்தில் பேசத்தொடங்கி, பிருட்டம் பெயர்ந்தவர் தொடர்ந்தார் ""எதுக்கு முன்னாடின்லாம் தெரியில... ஒரு பெரிய அலை... எங்களப் போல பல பேரை இழுத்துட்டுப் போச்சு... அவுங்க எல்லாம் என்ன ஆனாங்கன்னு தெரியல... நாங்க மட்டும் ஒரு குழுவா இருந்து தப்பிச்சிருக்கோம்... செத்த பொணம் மாதிரி உடம்பு ஊதி ஏதேதோ கடிச்சி... கை கால்ன்னு கண்டகண்ட உறுப்பெல்லாம் போனாலும் உசிரும் ஓரளவு உடம்பும் கிடைச்சதேங்குற சந்தோஷத்துல இப்ப இருக்கிறோம்..'' ""இப்ப பேசிக்கிட்டு இருக்கிற நேரமும் இல்லை... அவசரமாக உங்க உதவி எங்களுக்குத் தேவை...'' குறுக்கிட்டார் மணிக்கட்டு வரை பெயர்ந்தவர். இழந்த அவரவர் உறுப்புகளோடு வந்து அதிகம் பேர் கூடினர். பெண்கள் மறைந்து நின்று பார்த்தனர். சிலர் வலியில் கையுதறினார்கள். காலுதறினார்கள்.""நீங்க சொல்றது எனக்கு எதுவுமே புரியலை... குழப்பமாக இருக்கு... நம்பவே முடியாதபடி இருக்கு. சுனாமியில நான் தப்பிச்சதைவிட பெரிய அதிர்ச்சியா இருக்கு. கொஞ்ச நாளு தண்ணிக் குடிக்காம வீட்டுல இருந்தாலே மனுஷன் செத்துப் போயிடுறான்... நீங்க சொல்ற சுனாமி வந்து பல வருஷம் ஆகுது... இத்தன வருஷம் கடல்ல இவ்வளவு பேரு உயிரோடு இருந்திருக்கீங்கன்னு சொன்னா எப்படி நம்ப முடியும். எத்தனை கப்பல்... படகு போய்க்கிட்டு வருது... இவ்வளவு பேரு காணாம போயிருந்தீங்கன்னா எப்படித் தெரியுமா போகும்... உங்கச் சொந்தக்காரங்க எல்லாம் தேடியிருக்க மாட்டாங்களா... சுறாவோ... திமிங்கலமோ உங்கள கடிச்சித் தின்னிருக்காதா... அலையே அழுத்தி மூச்சை நிறுத்தியிருக்காதா.. உப்பு தண்ணியைக் குடிச்சே செத்து போயிருக்க மாட்டீங்களா... குளிர்ல உறைஞ்சு செத்துப் போயிருக்க மாட்டீங்களா... ஓராயிரம் வழியில செத்துப் போயிருப்பீங்க... அலை தாக்குனதுல உங்க எல்லோருக்கும் குழம்பியிருக்கு... அதான் கை போய் கால் போய் கூட வலிய காட்டாம வேற ஏதேதோ பேசுறீங்க...'' முழுதாய் எட்டிப் பார்த்த கோபத்தில் அவன் கத்தினான். இவன் சத்தத்தைக் கேட்டு தேடுவதை விட்டுவிட்டு வந்து படுத்திருந்தவனின் இடுப்புப் பக்கமாகவே எல்லோரும் ஒருசேர கூடி நின்று அவனைப் பார்த்திருந்தனர். முடியாத சிலர் படுத்துக் கொண்டனர். தனியாக மாட்டிக்கொண்டதைபோல பெரும் தவிப்பு தருவுக்கு ஏற்பட்டது. எல்லோரும் சேர்ந்து அடித்தே கொன்றுவிடுவார்களோ என்று பயந்தான். தலைப்பக்கம் ஓடிவிடலாமா என்று பார்த்தான்.
"இந்த உலகத்துல உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சா... புரியாததுன்னு ஒண்ணுமே இல்லையா?'' கூட்டத்திலிருந்து ஒரு பெண் வெளியில் வந்து அழுகிற குரலில் கேட்டாள். அவளுடைய மார்பகம் ஒன்று பெயர்ந்து போயிருந்தது. அடுத்தநொடியே வெட்கப்பட்டு கூட்டத்தில் கலந்து மறைந்துகொண்டாள்.
"புரியாதது' என்ற வார்த்தையைக் கேட்டதுமே தரு நிலைகுலைந்து போனான். பெரிதாய் குழம்பினான். சந்தேகக் கேள்விகள் எல்லாம் மறைந்துபோனது. கோபப்பட்டுவிட்டதற்காக அவனுடைய பாவப்படுகிற குணம் அவமானத்தில் குறுகியது. கைகளை இழந்த ஒரு பெண் நிர்வாணத்தைப் பற்றி கவலைப்படாமல் கூட்டத்தைவிட்டு வெளியில் வந்து முதல்முறையாகச் சத்தம்போட்டு அழுதபடியே சொன்னாள்.
"இந்த நிலைமையில பொய் யாராவது சொல்லுவாங்களா... எங்களாள தாங்க முடியல... உதவி செய்யுங்க... இங்க இருக்கிற கூட்டத்தை வைச்சு பாக்குறப்ப... இந்த இருட்டுல நீங்க ஒருத்தர் மட்டுமே பீச்ல நின்னிருந்திருக்கீங்க... நாங்க எல்லாம் பெரிய அலையோட வாந்தியிலிருந்து வந்து விழுந்தவங்க என்பதற்கு இது ஒண்ணு மட்டுமே போதும்... உங்கக்கூட நின்னவங்க யாராவது இங்க நிக்கிறாங்களாப் பாருங்க... இதையும் நம்பாம வேற எங்கிருந்தாவது அடிச்சிக்கிட்டு வந்து விழுந்திருப்போம்னு எங்க ஊதின உடம்பைப் பார்த்து விதண்டா வாதம் பேசினீங்கனா எங்களால ஒண்ணுமே செய்யமுடியாது... கருணை பண்ணுங்க... கருணை பண்ணுங்க....'' ""உதவி செய்யுங்க..''""உதவி செய்யுங்க...''""தயவு பண்ணுங்க...'' எல்லோரும் இரக்கமாய் கெஞ்சினார்கள். அந்தக் குரல்கள் அவன் உயிரை உலுக்கியது.
""என்ன செய்யணும்... முடிஞ்சவங்க முதல்ல ஆஸ்பத்திரிக்குப் போகலாவோம் வாங்க...''""எங்க ஆளுங்க ஒவ்வொருத்தரா மயக்கம் தெளிஞ்சுக்கிட்டு இருக்காங்க... எல்லோருடைய உழைப்பும் தேவைப்பட்டிருக்கிறது நாங்க உயிர்பிழைக்கிறதுக்கு... அதனால அவுங்கள்ல ஒருத்தர்கூட எழுந்திருக்காம நாங்க எங்கேயும் வரமாட்டோம். நிர்வாணம் எங்களுக்குள்ளேயே பழகிப் போய்விட்டது. அடுத்தவரைப் பார்க்கிறபோதுதான் வெட்கமாக இருக்கிறது. நீங்க ஆண்தான் என்றாலும் உங்களோடு பேசுகிறபோதுகூட கொஞ்சம் வெட்கப்பட்டுக்கிட்டுத்தான் பேசுகிறேன். பெரிய அலையை சுனாமிங்கிறீங்களே... அதிலிருந்து நாங்க மீண்டு வந்ததை நீங்க வியப்பா பார்ப்பதுபோல எங்களுக்கு நாங்களே வியப்பாகப் பார்த்துக் கொள்கிற ஒரு விஷயம் ஒரு சிலவற்றைத் தவிர பலவற்றை எப்படி மறந்துவிட்டோம் என்பதுதான். பெரிய அலையில் அடித்துபோனதுபோல சில விஷயங்கள் மட்டுமே எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. எங்கள் குடும்பங்கள்... உறவினர்கள் எல்லாம் யார் என்றே எங்களுக்கு ஞாபகம் இல்லை. எங்களைக் கண்டறிந்து உறவினர்களே ஏற்றுக்கொண்டால்தான் உண்டு. இந்த நிலையில் எங்களை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. போகப் போக உறவினர்களின் நினைவு எங்களுக்கு வருமா என்றும் தெரியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள். ஒருவேளை எல்லாருமே மயக்கம் தெளிந்துவிட்டாலும் எங்கள் எல்லோராலும் நிர்வாணத்தோடு வெளியில் வரமுடியாது. ஆண்கள் வந்தாலும் பெண்கள் வரமாட்டார்கள். அப்படியே நாங்கள் வெளிவந்தாலும் வழி தெரியாமல் போய் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்துபோய் விடுவோமோ என்கிற பயம் இருக்கிறது. அப்படி ஒருவேளை பிரிந்துவிட்டால் எங்களின் பயங்கரக் கோலத்தைப் பார்த்து பயந்து போய் மக்கள் எங்களை அடித்தே கொன்றுவிடுவார்களோ என்கிற பயமும் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடைகள் தேவை. ஒரு நப்பாசையில் இழுந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து வைத்திருக்கோம். உடனே சிகிச்சை செய்து இதையெல்லாம் முடிந்தவரை பொருத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். எங்களை எல்லோரும் மருத்துவனையில் சேர்க்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் ஒருவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும் எழுநூறு பேருக்கும் மேலே நாங்கள் இருக்கிறோம். மக்களைத் திரட்டிக் கொண்டு ஆடையை வாங்கி வாருங்கள்... மருத்துவமனையில் சேருங்கள்... உதவியாக இருக்கும்... பெரிய அலையில கஷ்டப்பட்டு தப்பிச்சி இங்கு வந்து செத்துடப் போறோம்... உதவி செய்யுங்க...'' இரண்டு கால்களை இழந்திருந்தவன் படுத்தபடியே சொல்லிச் சத்தம்போட்டு கதறத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து எல்லோருமே அழத்தொடங்கினர். அதற்குமேல் தருவால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை.""அழைச்சிட்டு வரேன்'' - ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு இருட்டைத் தள்ளிக்கொண்டு மணலில் நொண்டிநொண்டி ஓடினான். கடற்கரையை ஒட்டிய சாந்தோம் குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியிருப்போரை எழுப்பினால் போதும் என்று நினைத்தான். சுனாமியில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் உதவுவார்கள் என்று அவன் உள்மனம் சொன்னது. இங்கே இருப்பவர்களில் அவர்களது சொந்தகள்கூட யாராவது இருக்கலாம் என்று ஓடினான். திடீரென அவனது இரண்டு சக்கர வாகனம் ஞாபகம் வந்தது. அது இருக்கிறதோ இல்லையோ எனத் திரும்பிப் பார்த்தான். நின்றுகொண்டிருந்தது. வந்தது உண்மையில் சுனாமி இல்லை போலிருக்கிறது. அவர்கள் சொல்கிறபடி இது பழைய சுனாமியின் வாந்தியாகத்தான் இருக்கவேண்டும். சுனாமியாக இருந்தால் வண்டியும் இருக்க முடியாது. நாமும் தப்பித்திருக்க முடியாது. வாகனத்தை எடுத்துச் சென்றால் விரைவாக மக்களை அழைத்து வந்துவிடலாம் என்று திரும்பி வாகனத்தை எடுக்க ஓடினான். மக்களை அழைத்து வருவான் என்கிற நம்பிக்கையில் மீண்டும் கலைந்து உறுப்புகளைத் தேடித் தொடங்கியவர்கள் அந்தந்த இடத்தில் நின்றவாறே அவனைத் திகைத்துப் பார்த்தனர். வண்டி எடுத்துப் போவதாகச் சைகையிலேயே காட்டினான். மூச்சிரைக்க ஓடி வண்டியை அடைந்தான். அலை அதிர்வில் வண்டி ஓட்டாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு சந்தேகம் வந்தது. பதற்றத்தில் தவறிதவறி உதைத்தான். வண்டியை இயங்கியது. மேடு ஏறி முக்கிய சாலை வழியாகப் போனால் ஒருத்தர் இரண்டு பேர்தான் கிடைப்பார்கள். பெரும் மக்கள் தேவை. இந்தக் கடற்கரை சாலை வழியாகச் செல்வதே சரி. வேகக்காற்றில் உடைந்த மண்டை பகுதிகள் சில்லிட்டு எரிந்தது. பாரதிதாசன் சிலை பின்புறம் போகிறபோது இருட்டில் பெரிய கல் இருப்பது தெரியாமல் அதில் ஏற்றி தடுமாறி விழுகிற நேரத்தில் சமாளித்து விரைந்தான். காந்தி சிலை பின்புறப் பகுதியில் விரைகிறபோது கடற்கரையைத் திரும்பிப் பார்த்தான். சுனாமி வந்ததற்கான அறிகுறியோ மனித குவியலோ இல்லாததைக் கண்டு அவர்கள் சொன்னது உண்மை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். சுனாமியாக இருந்தால் கடற்கரையிலேகூட குறிப்பிட்ட இடத்தை மட்டும்தான் தாக்குமா? அதுவும் நான் நிற்கிற கண்ணகிச் சிலை பின்புறம் மட்டும்தான் தாக்குமா? வந்தது அவர்கள் தப்பித்து வருவதற்கான அலைதான். கடற்கரையையொட்டி வீடுகள் இருக்கிற சாந்தோம் திருப்பத்தில் போகத் தொடங்கியபோதே நாய்கள் விரட்டுவதும் விடுவதுமாக இருந்தது. தெரு விளக்குகள்கூட எரியாமல் இருட்டாகக் கிடந்தது. கொஞ்சம் தூரம் வந்தபோது பிய்ந்து பறந்த அவனது காலாடையின் துணியைப் பிடித்து இழத்தது விரட்டி வந்த ஒரு நாய். நிலைதடுமாறி விழப்போகிற நேரத்தில் திடீரென வண்டியை நிறுத்தினான். நாய்கள் சிதறி ஓடியது. அப்படியே ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மக்களை எழுப்பலாம் என்று பார்த்தான். எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். யாரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் முழித்தான். நாய்கள் விடாது குறைத்துக் கொண்டே இருந்தன. "உதவிக்கு வாங்க... உதவிக்கு வாங்க... சுனாமியில அடிச்சிட்டுப் போனவங்க தப்பிச்சி வந்திருக்காங்க... உதவிக்கு வாங்க...' என்று சத்தம் போட்டு கத்த நினைத்தவன் யாராவது ஒருத்தரை எழுப்பினால் அவர் எல்லோரையும் அழைத்து வந்துவிடுவார். தெரியாத இடத்தில், அதுவும் இந்த இருட்டில் ஒவ்வொருவராக கூப்பிடமுடியும் என்று ஒரு குடிசை வீட்டின் கதவைத் தட்டினான். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே மின் விளக்கு எரிந்தது. கொட்டாவி விட்டிபடியே கதவைத் திறந்து, கைகளைச் சொறிந்துகொண்டே, ""யாரது'' என்றாள் அந்தக் குடிசைப் பெண். அவளுக்கு நாற்பது வயதிருக்கும். ""சுனாமியில...'' என்று தரு ஆரம்பிப்பதற்குள்.... ""சுனாமி... சுனாமி...'' என்று அங்கிருந்த பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் இடிந்துவிழுகிறளவு சத்தம் எழுப்பிப்படியே அவனைக் கடந்து ஓடினாள். அவள் "யாரது' என்று கேட்கிறபோதே சுவரில் ஒரு புகைப்படத்திற்கு மாலை போட்டிருப்பதை தரு கவனித்தான். ஒருவேளை சுனாமியில் தப்பி வந்தவர்களில் யாராவது ஒருவர் இந்தப் புகைப்படத்தில் உள்ளவராக இருப்பாரோ என்று குடிசைக்குள் குனிந்து நுழைந்து பார்த்தான். கூடவே அவனும் ஓடி வராமல் வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டு சுனாமி சத்தத்தை விட்டுவிட்டு, ""திருடன்... திருடன்...திருடன்... திருடன்'' என அடுக்குமாடிகளை இடித்தாள் அவள். நாலாப் புறத்திலிருந்தும் ஆட்கள் ஓடிவரும் சத்தம் "திபுதிபு'வெனக் கேட்டது. புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு எந்தத் தாடிக்காரர்களோடும் அது ஒத்துப்போகவில்லை. பதற்றத்துடன் வெளியில் வர குனிந்தான். கட்டைகள், கற்கள், இரும்புக் கம்பிகள் எல்லாம் சேர்ந்து இறங்கி அவன் உடல் முழுவதும் சல்லடை ஓட்டைகள் போட முயற்சித்தன. ""அய்யோ....அய்யோ...'' என்று அலறியபடியே கீழே விழுந்தான். அவன் அலறஅலற வாயிலேயே உதை விழுந்தது. ""விடுங்கப்பா... செத்துடப்போகுது கசமாளம்'' கூட்டத்தில் ஒருவன் குரல்கொடுத்தான். அவரவர் கைகள் வலிக்கத் தொடங்கிய பிறகு ஓய்ந்தனர். குற்றுயிராய் வெறியோடு நின்றிருந்தவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டபடியே ""சுனாமி..சுனாமி...'' என்றான். ""ஒம்மாள... நடிச்சின பேத்துருவேன்...'' என்று முகத்தில் ஒரு குத்துவிட்டு வயித்தில் இரண்டு உதைவிட்டான் புதிதாக வந்தவன். ""ஓத்தா... ஆம்பள இல்லாத வூடுன்னு க்ரெக்டா தெரிஞ்சுகினு வந்துருக்கான்...''""இல்ல மாமூ... இவன் கணக்கு என்னாமோ திர்ட வந்தா மாதிரி இல்ல... முனியம்மா தனியா இருக்கேன்னுட்டு கணக்கு பண்ணிட்டு வந்திருப்பான் நினைக்கிறேன் மாமூ...''""நம்ம குப்பத்துலியே கை வைக்க வந்திருக்கான்னா... என்ன தில்லு இருக்கும் மாமூ இவனுக்கு...''""சாவு கிராக்கி மாதிரி உங்காந்திருக்கு பாரேன்...''""கல்லைக் கட்டி கடல்ல போட்ருவோமா மாமூ... திருட்டு கசமாளத்த மீன் சாப்பிட்டு போட்டும்...''வலையில் ஏதோ புதிதாக அகப்பட்டதைப் பார்ப்பது சிறுவர் கூட்டத்தின் இடுக்குகளில் நுழைந்து தருவைப் பார்த்தார்கள். அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. கொஞ்சம் திடம்பெற்று, "சுனாமியல ... சுனாமியில தப்பிச்சவங்க...' என்று தரு சொல்லத் தொடங்கினான். ""ஓத்தா கத்துனா செத்துடு... இப்படியே போட்டுவேன்'' என்று மீன்வெட்டுற கத்தியை ஒருவன் தூக்கிக் காட்டினான்.""வெளியூர்ல பயலா இருப்பான் போலிருக்குப்பா... ஏரியா தெரியாம நுழைஞ்சிட்டான் விரட்டி விட்டுடுங்ப்பா...''""ஓத்தா வந்துட்டாருடா டூப்புக்கு... ஒம்மாள திருட வந்திருக்கான்... முனியம்மா வூட்ட கதவ தட்டி நுழைஞ்சிருக்கான்... போன மாசம் கண்ணம்மா வூட்டு கதக்கூட இவதான் தட்டிருப்பான்னு நினைக்கிறேன்...''""சுனாமியல தப்பிச்சவங்க அங்க இருக்காங்க...'' திறன் முழுவதையும் திரட்டி செத்தாலும் பரவாயில்லை என்று கத்தினான் .""கதவைத் திறந்தப்பக்கூட, சுனாமி...சுனாமின்னுதான் கத்துனான். நான் ஏதோ உண்மையாகவே சுனாமிதான் வந்துட்டுன்னு நினைச்சுக்கிட்டு ஓடுறேன். இவன் நைசா வீட்டுக்குள்ள நுழையறான்'' மிரட்சி மறைத்த சிரிப்புடன் முனியம்மா சொன்னாள்."சுனாமியல தப்பிச்சவங்க கண்ணகிச் சிலை பின்புறம் இருக்காங்க... நீங்க வேணா அங்க வந்து பாருங்க...''""எந்தச் சுனாமியில...''""பல வருஷத்துக்கு முந்தி ஒரு சுனாமி வந்துச்சுல... அந்தச் சுனாமியில...''""மாமூ... பய லூசு போலிருக்கு....''. எல்லோரும் சிரித்தனர்.""அவுங்கள நீ பாத்தியா...'' கேலிக்காகவே ஒருவன் கேட்டான்."அவுங்க தப்பிச்ச வந்த வாந்தி அலையில நானும் மாட்டிக் கிட்டேன். என் மண்டைகூட உடைஞ்சிடுச்சி....'' வயிறு குலுங்ககுலுங்க எல்லோரும் சிரித்தனர்.""சிரிக்காதீங்கய்யா... என்கூட வந்து பாருங்க... அம்மா... நீங்களாவது சொல்லுங்கம்மா... வந்து பாருங்கய்யா...'' என்று தரு அழுதான். ""போடான்னா...'' என்று அவனை எல்லோரும் எட்டி உதைத்து விரட்டினர். ""எங் கூட ஒருத்தராவது வந்து பாருங்கய்யா... ஒருத்தராவது வந்து பாருங்கய்யா... நான்கூட முதல் நம்புள... வந்து பாருங்கய்ய்யா...'' என்று கதறினான். ""ஓத்தா போடான்னா...'' என்று மீனவெட்டுகிற கத்தியால் படார் என முதுகில் விழுந்தது. ""அம்மா'' தொண்டை வெடிக்க... வயிறு கிழிய அலறினான். அது அவனுடைய கடைசியை ஓசைப் போலக் கேட்டது. ""பாவம்... விடுங்கடா... செத்துடப்போறான்...'' ஒரு வயதான கிழவி சொன்னாள். கொஞ்சம் நேரம் அழுது புரண்டவன், எழுந்து வண்டியை எடுக்கப் போனான். ""டேய்... வண்டி யாரதுடா...'' "" வண்டி... யாரதுடா... யாரதுடா...'' எல்லோரும் சத்தம் எழுப்பினர். பேசவதற்குத் திராணியற்று மயங்கி விழுகிற கண்களோடு கூட்டத்தினரிடையே தரு சாவியைக் காட்டினான். நழுவிநழுவி சாவியைப் போட்டான். எப்படியோ உதைத்து வண்டியை இயக்கினான். கடைசியாய் ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்று, ""எங்கூட யாராவது ஒருத்தர் அங்க வந்து பாருங்கய்யா... எழுநூறு பேரு சுனாமியில இருந்து தப்பிச்சி வந்திருக்காங்க...'' ""போனாப் போகுதுன்னு கொல்லாம விட்டிருக்கோம் போடான்னா...''வேகமாக வண்டியை இயக்கினான்.""ஓத்தா... பைத்திங்கல்லாம் இப்ப வண்டில கூட வருது...'' என்று ஒரு சொன்னான். கலைகிற கூட்டத்தின் சிரிப்பு சத்தம் தூரத்தில் கேட்டது."ஓத்தா... உண்மைக்கு எங்கடா மதிப்பு இருக்கும்' என்று நினைத்துக்கொண்டே அதே சாலையில் வண்டியை இயக்கினான். நாய்கள் விடாது விரட்டின. நிமிர்ந்து உட்காராமல் குனிந்தபடியே ஓட்டினான். மீன் கவுச்சி நாற்றம் கவனத்தில் கொஞ்சம் வலி மறைந்தது. பட்டிப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பகுதிக்கு அருகில் வந்தது இங்கு முயற்சித்து பார்க்கலாம். எல்லா மக்களும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சமாதானம் செய்துகொண்டான். வீட்டுக் கதவு எதையும் தட்டாமல் வெளியில் இருந்தே கத்தவேண்டும் என்று வண்டியை நிறுத்திவிட்டு, ""சுனாமியில மாட்டுனவங்க உயிரோட வந்திருக்காங்க... சுனாமியில மாட்டுனவங்க உயிரோட வந்திருக்காங்க...'' என்று வேகமாய்க் கத்தினான். பத்தொரு கத்தலுக்குப் பிறகு அங்கங்கே விளக்குகள் எரியத் தொடங்கின. கலைந்த ஆடையோடு அடித்துப் பிடித்து கொஞ்சம் பேர் இறங்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்கு தரு விளக்கத் தொடங்கினான்.""சுனாமியல மாட்டுனவங்க... உயிரோடு வந்திருக்காங்க... எழுநூறு பேரு... அவுங்க ஆஸ்பத்திரியில சேர்க்கணும். உங்க எல்லோரும் உதவியும் தேவைப்படுது... எல்லோரும் நிர்வாணமா இருக்காங்க... உங்கள்ட்ட இருக்கிற பழைய புடவை டிரùஸல்லாம் எடுத்துட்டு வாங்க... முடியாம கஷ்டப்படுறாங்க... மெரீனா கண்ணகி சிலைக்கிட்ட வாங்க..''கூடிநின்றவர்களுக்கு அவன் சொன்னது ஒன்றுமே புரியவில்லை. ""டேய் இங்குயும் வந்துட்டானா... பைத்தியம்பா அவன்... இப்பதான் அங்கே இருந்து விரட்டிவிட்டோம்... தூக்கத்த கெடுத்துட்டான் படுபாவி... திருடன் நெனைச்சிட்டு துவைச்சிட்டோம்... அப்புறம் பாத்தான் தெரியுது பைத்தியம்னு.... சுனாமி செத்தவங்க பொழைச்சிட்டாங்கங்கிறான்... எப்ப வந்த சுனாமிடான்னா பல வருஷத்துக்கு முந்த வந்த சுனாமிங்கிறான்... அடிக்காதீங்கப்பா... பாவம்... விரட்டிவிடுங்க... டேய்... போடா...''""நம்புங்கய்யா.. நம்புங்கய்யா... ஒரு தடவ வந்து பாருங்கய்யா...''""ஒம்மாள அப்புறம் ஒததான்''"நான் இல்லடா பைத்தியம்... நீங்கதாண்டா பைத்தியம்... ஏமாத்துறவன் எவனாவது வந்து சொன்னா உடனே ஏமாந்து போவீங்க... உண்மைய சொல்றவன நம்ப மாட்டீங்க...' உள்ளுக்குள்ளே திட்டிக்கொண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் வண்டியில் ஏறிப் போனான். உண்மையாகவே அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. அய்யய்யோ... எவ்வளவு பேரு... எழுநூறு பேரு... என்ன செய்வாங்களோ... சுனாமியில தப்பிச்சவங்க கரையில வந்து செத்துடப் போறாருங்க... என்னுடைய இயலாமையும் அதுக்கு ஒரு காரணமாக இருந்துடப் போகுது... வண்டியை திருப்பி மாகலிங்கப்புறம் பக்கம் விட்டான். தனியாகப் போனால் இப்படித்தான் பைத்தியக்காரன் என்று அடிப்பார்கள். ஒருத்தர் இரண்டு பேரிடமாவது தெளிவுப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றோமானால் மக்கள் நம்புவார்கள் என்று நம்பினான். தெரு விளக்கு வெளிச்சத்தில் இருட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்தது. தமிழ்நாடு இயல் இசை கல்லூரி அருகே வண்டியை நிறுத்துவிட்டு, ரோட்டில் உட்கார்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தவர் நடந்ததையெல்லாம் சொன்னான். எல்லாம் புரிந்ததுபோல பீடிக்காரர், ""சுனாமி செத்தவங்களுக்கு அந்த ரைட்ல உள்ள இரண்டாவது வீட்டுக்காரரு நிறைய செஞ்சிருக்காரு... ஃபாரின்ல நிறைய பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு... அவரு நீங்க பாத்தீங்கன்னா... அவரே எல்லாத்தையும் செய்துவிடுவாரு... ஏகப்பட்ட பேருக்கு அவரு தொண்டு செய்திருக்காரு...''பைத்தியம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்குத் தோன்றியது. இரண்டாவது வீட்டை அடைந்தபோது மிகப்பெரிய பங்களாவாக இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஓடிப்போய் வாசல் காவலாளியிடம் அவசரஅவசரமாகச் சொன்னான். பலரிடம் சொல்லி... எதைவிட்டோம் எதை சொன்னோம் என்று தெரியாமல் சொன்னான். ஒரு நிமிஷம் என்று காவலாளி ஆட்டத்துடன் வீட்டிற்குள் சென்றான். சிறிதுநேரத்தில் சட்டை போட்டபடியே காவலாளியோடு ஒருவர் வந்தார். வாயைப் பொத்திக்கொண்டபடியே காவலாளி ஓரமாக நின்றுகொண்டான். அந்தத் தொண்டுக்காரரை கண்டதும் தருவுக்கு நம்பிக்கை பிறந்தது. ""ஐயா...'' என்று தரு ஆரம்பிப்பதற்குள், அவரே முந்திக் கொண்டு சிரித்தபடியே சொன்னார், ""காலையிலேயே வந்து கொடுக்கலாமே... இப்ப என்ன அவரசம்... உள்ள வாங்க.... செக்கா கொடுக்கப் போறீங்களா...''கோபம் அவனுக்குத் தலைக்கேறியது. அதைக் காட்டிக்கொள்ளாமல், ""காசு எதுவும் கொடுக்கவில்லை.'' என்று இவரிடமும் எல்லாவற்றையும் சொன்னான். "ஓ... அப்படியா...' என்று சிரித்தபடியே, "இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது... வேணும்னா நீங்க ஒண்ணு பண்ணுங்க... ஒரே குழியில் நூறு பேரை புதைத்த அழுகைச் சத்தம் கேட்குதா கடலம்மா பாட்டு எழுதுன கவிஞரு வீட்டுக்கு.. ம்... அவரு வேணாம்... சுனாமி பத்தி குறும்படம் எடுத்தாரு... ம் அவரு வேணாம்... ஏதாவது ஒரு கட்சி தலைவர பாருங்க... ம்.. அதுவும் வேணாம்... நேரா நீங்க முதல்வரையே பாருங்க... அவராலதான் இவ்வளவு பேரையும் காப்பாத்த முடியும்... எழுநூறு பேரு உயிருன்னா சும்மா.... உடனே போய் பாருங்க...'' சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கும்பிட்டார். இந்த யோசனை அங்கேயே தோன்றாமல் போனதற்காக கொஞ்சம் தன்னைத் தானே வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பினான். ""இனிமே குடிச்சிட்டு வந்த தொலைச்சுப்புடுவேன்'' என்று எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தார் தொண்டுக்காரர்.
வந்தவழியிலே திரும்பி வரும்போது, முதல்வரைச் சந்திக்க விடுவார்களா என்கிற சந்தேகம் வந்தது. அதிகாலை இருள் அவனுக்கு நம்பிக்கை தருவதுபோல இதமாக இருந்தது. நூறு கிலோமீட்டர் வேகத்தில் முறுக்கி கதீட்ரல் சாலை மேம்பாலத்தில் ஏறி இறங்கி சோலா ஓட்டல் யூ திருப்பத்தில் திரும்பி சந்துக்குள் நுழைகிறபோதே, இரண்டு காவலர்கள் அவனைச் சந்தேகத்துடன் விசாரித்தனர். ""முதலவரைப் பார்க்கப் போறேன்... சுனாமியில மாட்டுனவங்க...'' என்று எல்லாக் கதையையும் சொன்னான். ""நாங்க முதல்வர் சொல்லி நடவடிக்கை எடுக்குறோம்... நீங்க... போங்க...'' என்று கேலியாய் ஒரு காவலர் சொன்னார். மற்றவர் வெளிக்காட்டாத சிரிப்பு உதிர்ந்தார். தன்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கிறார்கள் என்று, ""சார்... நான் பைத்தியக்காரன்... இல்ல சார்... பைத்தியக்காரன் இல்ல சார்... கொஞ்சம் சொல்லுறத கேளுங்க சார்...''""இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்த பைத்தியக்கார ஆஸ்பிரித்திக்கு போன் பண்ணித் தூக்கிட்டுப் போகச் சொல்லுவேன்... போடா...'' லத்தியை ஓங்கி மிரட்டினார்.
கடைசி நம்பிக்கையும் இழந்தது செத்து பிணமாகவே வண்டியில் ஏறி மெரீனா பக்கம் ஓட்டினான். முடிந்தவரை காப்பாற்றுவோம் என்று நினைத்துக்கொண்டான். கடற்கரை சாலை அவருகிறபோது, "டி.ஜி.பி ஆபீஸ்ல பக்கத்துல வைச்சுக்கிட்டு எங்கெங்கோ சுத்தியிருக்கோமே... பத்து நிமிஷத்துல முடிஞ்சிருக்கும் வேலை...' என்றபடியே வண்டியை நிறுத்திவிட்டு, துப்பாக்கிய தாங்கியபடி நின்ற போலீஸôரிடம் சொன்னான். இவன் ஆரம்பித்தவுடனே அவர் விரட்டத் தொடங்கிவிட்டார். இங்கதானய்யா... வந்து பாருங்கய்யா... வந்து பாருங்கய்யா... என்று கெஞ்சினான். துப்பாக்கியைத் தூக்கி நெற்றிப்பொட்டில் வைத்து "சுட்டுடுவேன் போடா' என்றான். சில நிமிடங்களுக்கு அவன் மூச்சு நின்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்தவன் முடிந்தால் நாமே காப்பாற்றுவோம்.. இல்லாவிட்டால் அவர்களோடு சேர்ந்து நாமும் சாவோம் என்று கண்ணகிச்சிலை பின்புறத்துக்கு வண்டியை ஓட்டி நிறுத்திவிட்டு பார்த்தான். வெளிச்ச விடியலில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தது. பேரலை வந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மரக்கட்டைகள் எதுவும் சிதறிக்கிடக்கவில்லை. தூரத்தில் ஒரு கும்பல் தெரிந்தது. அவர்களை நோக்கி ஓடினான். சாந்தோம் குடியிருப்பு பகுதியிலிருந்து நாம் சொன்னதைச் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்துவிட்டு எல்லோரும் சேர்ந்து வந்து காப்பாற்றியிருப்பார்களோ என்று அங்கு ஓடினான். இரவில் அவன் பார்த்த ஒருவரும் அங்கு தென்படவில்லை. துண்டாகி அலையில் அடித்துப்போவதும் வருவதுமாக இருந்த ஒரு கையை எல்லாரும் பார்த்தபடியே இருந்தேன். மீண்டும் சுனாமி வந்து அவர்கள் எல்லோரையும் திரும்பவும் அடித்துப் போயிருக்குமோ ஒரே ஒரு கை மட்டும் இங்கு மிதக்குதோ என்று உற்று பார்த்தவன். அது இரவில் அவன் கைகளை நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்று திடமாக நம்பினான். அவர்களுடைய கை எல்லாம் ஊதிப் போன கை. கைகடிகாரம் கட்டியிருக்க அவர் வாய்ப்பே இல்லை. இது அவர்களுடைய கை இல்லை. அய்யய்யோ... நான் வரத் தாமதாகத் தொடங்கியதும் அவர்கள் வழி தெரியாமல் எங்கேயாவது போய்விட்டார்களோ' என்று கரை நெடுகிலும் தேடித் ஓடினான். அவன் பின்னால் கூட்டம் ஓடியது.
வெளியானது: உயிர் எழுத்து