Tuesday, June 24, 2008

பாப்... எப்பவுமே டஃப்?

"பூபாளம், கல்யாணி, ஆனந்தம்' என ராகப் பெயர்களாகக் கொண்ட அந்தக் குடியிருப்பில் மற்றொரு ராகமாய் இருக்கிறார் திரைப்படப் பாடகி ரோஷினி. "பட்டியல்' படத்தில் இளையராஜாவோடு அவர் பாடிய "நம்ம காட்டுல மழை பெய்யது' பாடல் பின்னணியில் ஒலிக்க அவரோடு பேசினோம்.
ரோஷினி பாட்டை மட்டுமல்ல; பேச்சைக் கேட்கிறபோதும் சுதி ஏறுது:

உங்கள் குடும்பம்? படிப்பு?
அப்பா ஜோசப் கலியபெருமாள். லயோலா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். அம்மா லூசி ஜோசப். அக்கா அனிதா ஷாலினி. சொந்தவூரான திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் ஒன்பதாவது வரை படித்தேன். அதன் பிறகு சென்னைக்கு வந்தோம். இங்கு குட்ஷெப்பர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பும் ப்ளஸ் டூவும் படித்தேன். மதுரவாயலில் உள்ள ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் பி.இ. இந்த வருடம் முடித்தேன்.

இசைப் பின்னணி கொண்ட குடும்பமா?
இல்லை. அக்கா அனிதா ஷாலினி நன்றாகப் பாடுவார். எப்போதும் வீட்டில் சினிமா பாட்டு பாடிக்கொண்டே இருப்பார். அவரைப் பார்த்துதான் நான் பாடத் தொடங்கினேன். எங்கள் ஆர்வத்தைப் பார்த்து அப்பா கர்நாடகச் சங்கீதம் கற்க வைத்தார். திருச்சியில் ஆறு வருடங்கள் கீதா என்பவரிடமும், சென்னையில் சகுந்தலா என்பவரிடமும் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்.

முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
ஒன்றாவது இரண்டாவது படிக்கிறபோதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறேன். நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். அந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார். நான் பாடியதைக் கேட்டு பாராட்டினார். சென்னைக்கு வரும்படி அழைத்தார். அப்போது உடனே வரமுடியவில்லை. மே மாத விடுமுறையில் என்னுடைய சித்தி வீட்டிற்கு வந்தேன். சென்னை வந்தபோது ஸ்டூடியோவுக்குப் போய் வித்யாசாகரைப் பார்த்தேன். அப்போது, "ஆஹா என்ன பொருத்தம்' பாடல் பதிவு நடந்துகொண்டிருந்திருக்கிறது. அது எனக்குத் தெரியாது.
போனதும், "கானாங்குருவிக் கூட்டுக்குள்ள கால நீட்டிப் படுக்க வா' என்ற வரி உட்பட பாடலில் இடையில் வரும் சில வரிகளை மட்டும் பாடச் சொன்னார். குரல் தேர்வுக்காகத்தான் பாடச் சொல்கிறார் எனப் பாடினேன். பாடி முடித்ததும் சொல்கிறேன் என அனுப்பி வைத்துவிட்டார். படம் வந்தபிறகுதான் பார்த்தேன். நான் பாடியது அப்படியே பதிவு செய்யப்பட்டிருந்தது. என் குரலுக்கு அந்தப் படத்தில் ஒரு பையன் பாடுவதுபோல காட்சியில் வந்தது. எனக்கு அதைப் பார்த்தபோது சிரிப்பாக இருந்தது. என்னுடைய முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்தது. உண்மையில் அந்த முழுப் பாட்டை பாடியவர் அனுராதா ஸ்ரீராம். நான் பாடியபோது அவரும் அங்கு இருந்தார். என்னை ஊக்கப்படுத்தி அவர்தான் பாட வைத்தார்.

அந்தப் பாடலுக்குப் பிறகு தொடர்ச்சியாய் வாய்ப்புகள் வந்தனவா?
திரும்பவும் திருச்சிக்கு வந்துவிட்டேன். வாய்ப்புகளும் வரவில்லை. ஒரு நிகழ்ச்சியில் நான் பாடுவதைக் கேட்ட பாக்யராஜ், அவருடைய "வேட்டியை மடிச்சுக்கட்டு' படத்தில் இசையமைப்பாளர் தேவாவிடம் சொல்லி ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதில் "கிச்சுகிச்சு தாம்பாளம்' என்கிற பாடலை முழுமையாகப் பாடினேன். இதைப்போலத்தான் ஒவ்வொரு வாய்ப்பாகக் கிடைத்தன. ஓவியன் இசையமைப்பில் "தாயுமானவன்' படத்தில் திப்புவோடு சேர்ந்து "புயலைக் கண்டேனே' பாடினேன். ஜெயா டிவியில் வந்த ராகமாலிகா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதைப் பார்த்து ஸ்ரீகாந்த் தேவா அழைத்து குரல் தேர்வு நடத்தி வாய்ப்பு கொடுத்தார்.
அது "குத்து' படத்தில் "போட்டுத் தாக்கு' பாடல். அதையும் பாடிவிட்டு காசெட்டில் கேட்கிறபோதுதான் சிம்புவோடு பாடியிருக்கிறேன் என்று தெரிந்தது. டூயட் பாட்டாக இருந்தாலும் தனித்தனியாகத்தான் பாட வைக்கிறார்கள். அதனால்தான் தெரியவில்லை. இதற்கடுத்து யுவன்ஷங்கர்ராஜா இசையில் இளையராஜாவோடு சேர்ந்து "பட்டியல்' படத்தில் "நம்ம காட்டு மழை' பெய்யுது பாடல் பாடினேன். இதுவும் இளையராஜா சாரோடு சேர்ந்துதான் பாடுகிறேன் எனத் தெரியாமல்தான் வந்தது. இதனைத் தொடர்ந்து "தாமிரபரணி' படத்தில் "கருப்பான கையால என்ன பிடிச்சான்' உட்பட பல ஹிட் பாடல் பாடியிருக்கிறேன். தொடர்ந்து பாடி வருகிறேன்.
அதிரடியான பாடல்கள் பாட விருப்பமா? மெலடி பாடல்கள் பாட விருப்பமா?
மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்திருக்கிறேன். திருச்சி பள்ளியில் படிக்கிறபோது சிலரோடு சேர்ந்து 37 மணிநேரம் தொடர்ச்சியாகப் பாடி கின்னஸ் சாதனையும் செய்திருக்கிறோம். மேடையில் பாடுகிறபோது மெலடியும் பாட வேண்டி இருக்கும் அதிரடியான பாடல்களையும் பாட வேண்டி இருக்கும். அதைப்போல எந்தவகையான பாடல் கொடுத்தாலும் பாடுவேன்.
ஆடிக்கொண்டே பாடுவதுதான் இப்போது பாடகர்களின் ஸ்டைலாக இருக்கிறது. நீங்கள் எப்படி?
பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதனால் ஆடுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. பாடுகிறபோது பெரும்பாலும் நான் ஆடுவதில்லை. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. மக்கள் மத்தியில் நிகழ்ச்சிகள் செய்கிறபோது ஆடிக்கொண்டே பாடினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். இதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.
கர்நாடக இசையும் கற்றிருக்கிறீர்கள். எந்தவகையான பாடல் பாட சிரமம்?
கர்நாடக இசை, திரைப்படப் பாடல் இரண்டுமே நம் இரத்ததோடு கலந்ததுபோல. அதனால் எளிதாகப் பாடிவிடலாம். பாப் பாடல்களை அப்படிச் சொல்ல முடியாது. நம்மோடு எந்தவகையிலும் தொடர்பு இல்லாமல் இருப்பதால் அதைப் பாடுவதில் சிரமம் இருக்கிறது. இதில் பிரத்யேகப் பயிற்சி பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.
மும்பை பாடகர், பாடகிகளையே இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்களே?
திறமையாளர்களை யாரும் மறைத்துவிட முடியாது. திறமை எங்கிருந்தாலும் பயன்படுத்துவதிலும் தவறு இல்லை. எதிர்காலம்?
என்னுடைய இசை ஆர்வத்தைப் பாதிக்காத வகையில் ஐ.டி. கம்பெனிகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

Monday, June 2, 2008

பாவம் மூலம் பாடம்!""கலைக்குச் சேவை செய்யவே கலையைக் கற்றுக் கொள்கிறேன் என்பதில் எனக்கு மாறான கருத்து உண்டு. இதர வகையிலும் பயன்பாட்டுக்கு உரியவையாய் கலை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
வெறும் வார்த்தைகளுக்காக அவர் இப்படிச் சொல்லவில்லை. கடந்த 89-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார். பரதம், கர்நாடக சங்கீதம், நாடகம் மூலம் உடற்குறைப்பாடு, மன வளர்ச்சிக் ன்றியவர்களுக்குப் பாடம் நடத்தும் "ரமண சுன்ரித்யா ஆலயம்' பள்ளியை சென்னை அபிராமபுரத்தில் நடத்தி வருகிறார்.

நாட்டியப் பாவம் மூலம் பாடம் சொல்லும்
அம்பிகா தொடர்கிறார்:

""பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில். என்னுடைய ஐந்து வயதிலேயே கர்நாடகச் சங்கீதம் கற்கத் தொடங்கினேன். என்னுடைய அம்மா சுலோச்னா நடராஜன், எஸ்.ராமநாதன், ருக்மணி ராஜகோபாலன், டி.கே.பட்டம்மாள் ஆகியோரிடம் கற்றேன். அதைப்போலவே சின்னவயதிலேயே பரதநாட்டியமும், குச்சிப்புடியும் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை மீனாட்சி, நரேந்திர ஷர்மா உட்பட பலரிடம் கற்றுக்கொண்டேன். ஏழு வயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகள் செய்து வருகிறேன்.

உடற்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது பெங்களூரில்தான். என்னுடைய உறவினர் ஒருவர் பார்வையற்றோர் பள்ளி ஒன்று நடத்தினார். அந்தப் பள்ளியில்தான் நாட்டியம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாட்டியப் பாவங்களையும் தொடுஉணர்ச்சி மூலமாகத்தான் அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எளிதில் புரிந்துகொண்டு ஆச்சரியப்படுத்தியதுடன் நாட்டியத்தில் அபாரத் திறமையும் காட்டினார்கள். இதன்பிறகுதான் இதில் ஆழமாக இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினேன்.

சென்னை வந்தபிறகு, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பள்ளிகளில் நாட்டியம் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். உடற்குறைபாடு குழந்தைகளுக்கு நாட்டியம் கற்பிப்பதில் முதுமுனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்கிறேன். அதன்பிறகு நாமே இது போன்றவர்களுக்கான பள்ளி நடத்தினால் என்ன என்று தொடங்கி நடத்தி வருகிறேன்.

ஐந்து வயதில் இருந்து 50 வயது உள்ளவர்கள்வரை என் பள்ளியில் படிக்கிறார்கள். மொத்தம் 110-க்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள். இதில் பெரும்பாலோர் ஸ்பெஷல் கேர் குழந்தைகள். வீட்டிலிருந்து நாங்களே அழைத்து வந்து இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஸ்பெஷல் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினை இருக்கும். மனக் குறைப்பாட்டுடன் ஒரு குழந்தைக்கு கை தூக்க முடியாமல் இருக்கும். ஒரு குழந்தைக்கு எழுத முடியாமல் இருக்கும். பேச முடியாமல் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான பயிற்சி கொடுப்பேன். அது நாட்டியம் மூலமாக, இசை மூலமாக எப்படித் தேவைப்படுகிறதோ அப்படிக் கொடுத்துக் குணப்படுத்துகிறோம். போதுமான அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்கு எங்களைப் போல் சொல்லிக் கொடுப்பதற்காகப் பலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.

நாட்டியம், இசை, நாடகம், ஓவியம், கிராஃப்ட்ஸ் போன்றவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அதன் மூலம் எப்படியெல்லாம் ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதில் படிக்க எல்லோரும் நாட்டியம் கற்றிருக்க வேண்டும். வேறு ஏதாவது கலைகள் தெரிந்து இருந்தாலும் சேர்ந்து பயிற்சிப் பெறலாம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி ஸ்பெஷல் குழந்தைகளுக்குச் சேவை செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற கலைகளை பள்ளி, கல்லூரிகளிலும் பாடத் திட்டமாக வைத்து பயிற்றுவித்தால், ஸ்பெஷல் கேர் பிள்ளைகளே இல்லை என்கிற நிலைக்குக் கொண்டு வரலாம். அதற்கான முயற்சிகளில்தான் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
ஸ்பெஷல் அம்மா!