Friday, September 17, 2010

இடுக்குப் பாதையிலொரு பயண எத்தனம் - யூமா.வாசுகி

'உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்' என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் யூமா.வாசுகி எழுதியுள்ள விமர்சனம்

அரவிந்தன்,


உங்கள் சேகரங்களில் ஒன்றை அணுகும்போது அது ரத்தம் ஊறிக் குளிர்ந்திருக்கிறது. ஓடும் பேருந்தில் கருக் கலைந்து கட்டிக் கட்டியாக வெளியேறியதன் தடம் அது. அது முகிழ்த்த கனலில் என் மரத்தின் இலைகள் கருகிச் சுருள்வதை நான் வெறித்திருந்தேன். நுரை நுரையாகப் பொங்கி நொதிக்கிறது அந்தக் கருப் பிண்டங்களின் உயிர். இந்த நவீனக் கோர்வையின் படிகளில் ஏறிப் பார்க்கையில், தன்னைத்தானே முடிச்சுகளிட்டுக் கொண்டு நீண்டிருக்கும் நாகம் போன்ற நதி கிடக்கிறது கீழே. தன் சுயம் ஒளித்து; மேனி பளபளப்பு காட்டி ஈர்க்கிறது அது. பிறப்பித்தது நீங்களேயாயினும் என்னைப் போலவே நீங்களும் அதனொரு முடிச்சில் சிக்கி, போக்கு மறந்து, துயரின் முடிவிலியைத் தியானித்திருப்பீர்கள் என்று அறிவேன்.


அந்த உள்நாக்கு. அகம்புறமென்ற எதிரெதிர் நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பயணிப்பது. நகைச்சுவையின், குறியீட்டின் உதடுகளுக்கிடையே இருந்து பிதுங்கும்
அதன் பற்கள் பதியுமிடத்திலிருந்து கசிகின்றன விசாரணைகள், பரிசீலனைகள்...
அறியாப் புதுச் சருமம் எடுத்த கற்பனை விசித்திரம், "இருட்டாழி' கதையைப் போல.


மரணச் சுவை ஒழுகுகிறது, பற்றிக்கொள்ள உங்களுக்குக் கிடைத்த காமத்தின்
விழுதுகளிலிருந்து. அதன் அசைவில் முத்தங்கள் மேலும் கீழுமென உதிர்கின்றன.
மண் கொண்டவை மலர்கள். விண் பெற்றவை நட்சத்திரங்கள். அன்புறவின் மலரிதழில் பனிக் கண்ணீர். அத்துளியில் பிரதிபலிக்கின்றன நட்சத்திர மினுக்கங்கள்.
"சொற்புணர்ச்சியின் சொற்திரள்' - சொற் கடக்கும் இடுக்குப்பாதையில் எத்தனிக்கிறது.


இப்படியாக,


இந்நூலை வாசித்த மனநிலையின் அடிப்படையில்-தலைமுறை இடைவெளியின்
பாதாளத்திலிருந்து எண்ணமிடும் முதியவரின் நிராதரவுப் பழங்கனவின் மூலமாக, அறுபட்டு இன்னும் துடித்துக் கொண்டிருக்கும் அவரது வேர்களின் வலியில்,
யதார்த்தத்தின் அனாயாச சித்தரிப்புகளின் வழி ஸ்தாபித்திருக்கும் மதி எனும்
மனிதனின் நிகழ்காலப் பொருத்தம் மூலமாக, "நடந்துகொண்டே நாவலைச்
சொல்பவன்' வழியே வைக்கும் விமர்சன அவதானிப்பின் மூலமாக, "மன்னியுங்கள் தோழர்களே' கதையில் சொல்லப்பட்டிருக்கும் மறுக்க முடியாத அந்தக் கோணம்
மூலமாக, ஒவ்வொருவர் முகத்திற்கு முன்னாலும் தன் கண்ணாடிப் பரப்பை ஏந்தும் "மூடுமணல்' கதையின் மூலமாக உங்கள் வரவு முதிர்ந்திருக்கிறது என்று
என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது.


நிர்வாணத்தின் உள்ளாழத்தில் இயங்குகிற குணாம்சத்தின் இழை பேதங்களை,
உங்களிடமுள்ள சிகிச்சைக் கத்தி வேறு பிரித்தறிய முயற்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கத்தி கொண்டு படைத்த சிற்பங்களாகவே இக்கதைகளின் உருத்தோற்றங்களையும் கணிக்கலாம். சொல்லலின் பழகிய நிறங்களை நிர்தாட்சண்யமாக உதறிப் போக்க மேற்கொண்ட பாடுகள் அவற்றின் அடையாளங்களைத் தேக்கியிருக்கின்றன.


உங்கள் சேகரங்களைச் சுமந்து வருகிறீர்கள். சுதந்திரத்தின் வீச்சு நடை. நீர் வழியைத் தாண்டுதல். சரிவுகளிலே மெல்லோட்டம். ஏற்றத்தில் மெது நடை... கட்டு தளர்கிறது.
சில உதிரவும் செய்கின்றன. அறியாது உதிர்வதன் கணக்கீடுகளை நீங்கள் உணரவும் இல்லை. அது படைப்பியற்கையின் சமன்பாட்டோடு சேர்ந்தது.


உங்கள் நிறுத்தத்தை அருகே அமைத்துக் கொள்ளவில்லை என்பதுதான், உங்கள் காலடிகள் விரிந்த பரப்பின் மாறுபட்ட பல இடங்களில் பட்டுப் பட்டெழுந்து தொடர்வதற்குக் காரணம். ஏற்ற இடம் நின்று சுமையைக் கீழிறக்கும்போது காத்திருந்த
நான் கட்டுப் பிரித்துப் பார்க்கிறேன். ஆமாம். என் சமையலுக்கானவை இவை. தொலைவான உழைப்பின் வழியே கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.


யூமா. வாசுகி

நூலில் என் முன்னுரை
--------------------குற்றமும் தண்டனையும்


ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் நாயகன் ரஸ்கோல்னிகோவ் அவனுடைய
உளக் காய்ச்சலை முழுமையாக என்னிடம் தந்துவிட்டது போன்ற மனநிலையே இப்போது எனக்கு மிகுதியாக இருக்கிறது. அது } "மதிப்புக் கூட போட முடியாத குப்பைப் பொருள்களை அடகுக்குக் கொண்டு செல்லும் காய்ச்சலா?' அல்லது "அல்யோனா இவானோவ்னாவையும், லிஸôவெதா இவானோவ்னாவையும் கோடரியால் அடித்துக் கொன்றதற்குப் பிறகான ரஸ்கோல்னிகோவினின் காய்ச்சலா?' என்றும் எனக்குப் புரியவில்லை.


ரஸ்கோல்னிகோவ்வாவது இரு கொலைகளோடு நிறுத்திக்கொண்டான். நானோ, என் மன ஆழத்திலிருந்து கதையின் முதல் வார்த்தையை எடுத்து கணினியில் அடிக்கத் தொடங்கியதிலிருந்தே கோடரியை உபயோகிக்கத் தொடங்கி மொத்தம் பத்துக் (சிறுகதை) கொலைகளைச் செய்துவிட்டதைப் போன்று நடுங்குகிறேன்.


கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் உங்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அதை மறைப்பதற்குத் தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகமான உளக் காய்ச்சலால் கதையின் வரிகள் எதுவும் எனக்குப் பொருள் கொடுக்காமல் செத்துக் கிடக்கத் தொடங்கி, எண்ண மூட்டம் மட்டும், "இதை
நீக்கியிருக்கலாமோ; அதைச் சேர்த்திருக்கலாமோ; இதை இப்படி எழுதியிருக்கலாமோ' என்று தொடர்ந்து சொல்லிக்
கொண்டே இருக்கிறது.


இந்தக் காய்ச்சலான சமயத்திலும் எனக்கு உதவி புரிபவராக ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியே இருக்கிறார். ஃபியோதரின் மனைவி அன்யா தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கைக் குறிப்புகளில் இடம்பிடித்துள்ள சில வரிகள் :


""குடும்பச் சுமையும், கடன் சுமையும் அவரை அழுத்தின; அன்றாட வாழ்க்கையை எப்படிக் கழிப்பது என்ற பிரச்சினை அவரை எப்பொழுதும் வாட்டிக் கொண்டேயிருந்தது... பல சமயங்களில் கீழ்காணும் நிலை ஏற்பட்டதுண்டு. அவரது நாவலின் முதல் மூன்று அத்தியாயங்கள் அச்சில் வந்திருக்கும்; நான்காவது அத்தியாயம் அச்சகத்தில் இருக்கும். ஐந்தாவது அத்தியாயம் பத்திரிகை ஆசிரியரை நோக்கித் தபாலில் சென்று கொண்டிருக்கும். அதற்குப் பிந்திய அத்தியாயங்களை எழுத முடியாதபடி பணத் தொல்லைகளும் கவலைகளும் அவரை வாட்டும். எனவே பாக்கியுள்ள அத்தியாயங்கள் அவர் மனத்திலேயே தங்கிவிடும். அவரது நாவலின் அச்சான அத்தியாயம் ஒன்றை அவர் படிப்பார்; அதிலுள்ள குறையைத் திடீரென்று கண்டுபிடிப்பார்; அந்தக் குறை என் நாவலைக் கெடுத்து
விட்டதே என்று துயரத்தில் மூழ்கி விடுவார். "அந்த அத்தியாயத்தைத் திருத்தி எழுத முடியுமானால்!' என்று ஏங்குவார். "அந்த அத்தியாயம் அச்சாகவில்லையானால் நான் அதைத் திருத்தியிருப்பேன்! அதில் என்ன குறை என்பதும், அதை ஏன் தொடர்ந்து எழுத முடியவில்லை என்பதும் இப்பொழுதுதான் தெரிகிறது. இந்தத் தவறால், சொல்ல வந்த விஷயத்தையே நான் கொன்றுவிட்டேன்!' என்று வருந்துவார். தனது பிழையைக் கண்டுபிடித்துவிட்டு ஆனால், அதைத் திருத்த முடியாது அவதிப்படுகிற கலைஞனின் உண்மையான துயரம் அது.''


அன்யா தஸ்தயேவ்ஸ்கியின் இந்தக் குறிப்புகளில் குடும்பச் சுமை, கடன் சுமை போன்ற அம்சங்களை எல்லாம் வசதியாய் மறந்துவிட்டு, / இந்தத் தவறால், சொல்ல வந்த விஷயத்தையே நான் கொன்றுவிட்டேன்/ என்பதை மட்டும்
குறித்துக் கொண்டு மாபெரும் கலைஞன் தஸ்தயேவ்ஸ்கியே இச்சிக்கலைச் சந்தித்திருக்கும்போது "நீ என்ன வெகு சாதாரணம்' என்பதாய் எடுத்துக் கொள்கிறேன். இதையே வேறொரு கோணத்தில் தஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் கண்ட தவறுகளை வாசிப்பவர்களும் கண்டார்களா? வாசிப்பவர்கள் கண்ட தவறுகளை விமர்சகர்களும்
கண்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி தொடர்ந்து விவாதித்துக்கொண்டே செல்லவும் முடியும்
என்று நினைக்கிறேன்.


"குற்றமும் தண்டனை'யை வாசிக்கிறவர்கள், ரஸ்கோல்னிகோவ் செய்த கொலை குற்றத்தை அப்படியே விட்டுவிட்டு அவரவரும் தங்கள் சொந்த வாழ்வில் செய்த குற்றங்களைச் சுமந்துகொண்டு வேறு திசைகளில் பயணிப்பதுபோல } தவறுகளும் - வெவ்வேறு மனநிலையில்; வெவ்வேறு வேடமிட்டு காட்சியளிக்கக் கூடியதாக இருப்பதால், அதன் இறுதி எல்லை என்ற ஒன்றைத் தொடவே முடியாதோ என்று கருதிய நிலையிலேயே; திருத்துவதை நிறுத்திக்
கொண்டு இத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்.


இது என் முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிற பார்வையற்று எந்தளவுக்கும் விமர்சித்து எழுதுங்கள்.


"விமர்சிப்பதெல்லாம் அடுத்தக் கட்டம். தஸ்தயேவ்ஸ்கியோடு பொருத்திப் பார்த்த குற்றத்திற்குத்தான் முதலில் உன்னைத் தண்டிக்க வேண்டும்' என்கிறளவுக்கு யாரேனும் கோபப்படுவீர்கள் என்றால், உங்கள் கோபத்தின்
நியாயத்தை நான் உணராதவன் இல்லை என்பதை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.


த. அரவிந்தன்

Saturday, September 4, 2010

வலையுலக நண்பர்களுக்கு
'உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்
' - என்ற தலைப்பில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் பத்து சிறுகதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவசியம் வாங்கிப் படித்துப் பாருங்கள். வாங்க இயலாதவர்கள் விரும்பாதவர்கள் என் வலைப்பூவிலேயே கதைகளைத் தேடிப் படிக்கலாம்.ஆனால் வலைப்பூவில் உள்ளவற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்தே நூலில் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் நாவல் ஒன்று வெளியான உடனேயே போலிப் பிரதிகள் அச்சடித்து கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதாம். உடனே மார்வெஸ் என்ன செய்தாராம் நாவலொன்றில் புதிதாக ஓர் அத்தியாயம் சேர்த்து புதிதாக அச்சாக்கம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்தாராம். இதன் மூலம் வாங்குபவர்கள் கள்ளப் புத்தகத்தை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பது மார்க்வெஸ் எண்ணம். அத்தியாயம் சேர்க்கப்பட்டதற்கும் போலி புத்தகங்கள் வந்தனவா என்று தெரியவில்லை
இந் நிகழ்வுக்கும் நூலில் என் சிறுகதைகள் மாற்றயமைக்கப்பட்டதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

நூல் பெறவிரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

அருந்தகை
E-220
12-தெரு
பெரியார்நகர்
சென்னை - 82

பேசி 9282441778

பக்கம் 240 ரூ.165