Sunday, February 27, 2011

சந்திர யானை22தும்பிக்கையை மேலே தூக்கி; காற்றை உள்ளிழுத்து; தட்பவெப்பநிலையை வழக்கம்போல்தான் அன்றும் ஆராய்ந்தது அந்தக் காட்டு யானை. ஆனால் அதன் இழுவிசையில் சந்திரன் பெயர்ந்து வந்து தும்பிக்கைக்குள் ஓடிப்போய் வாய்க்குள் வந்துவிட்டது. அதிர்ச்சியோ ஆச்சரியமோ கொள்ளாமல் அந்த யானை சந்திரனைக் கடித்துக்கடித்து ஒளிநீராக்கி தும்பிக்கையை மேலே உயர்த்திப் பீய்ச்சியடித்தது. ஒளியூற்று மிகவும் பிரகாசமாக நீண்ட தூரம் மேலே போய் மீண்டும் தரைக்கு வந்தது. இதில் அதீத மகிழ்ச்சிக்கு ஆட்பட்டு அது மீண்டும்மீண்டும் ஒளிநீரை உறிஞ்சியும் மேலே பீய்ச்சியடித்தும் ரசித்தது. ஓயாத ரசிப்பின் ஒரு நிலையில் வழக்க பழக்கத்தில் ஒளிநீரை உறிஞ்சி அதன் முதுகின் மேலேயே பீய்ச்சிக் கொண்டது. முதுகெங்கும் வழிந்த ஒளிநீரை மீண்டும் அது உறிஞ்ச முனைந்தபோது உருண்டு திரண்டு சேர்ந்திருந்த சந்திரன் யானை முதுகில் பாகனைப்போல உட்கார்ந்துகொண்டு அதனை விரட்டியது. மிரண்டு மேலேமேலே சென்ற அந்தப் பெரிய கறுப்பு யானை முகத்தையும் வாலையும் மறைத்துக் கொண்டு இன்றும் பாகனைச் சுமந்து அந்தரத்தில் அலைகிறது.

Thursday, February 24, 2011

எரிப்பு
21


மூட்டப்பட்டிருந்த தீயில் அவர்கள் போட்டப் பனம்பழங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்கள் எவருக்கும் தீயில் எரிவது பனம்பழங்கள்போலவே தெரியவில்லை. மனிதத் தலைகள் எரிவதுபோலத் தெரிந்தன. ஆனாலும் அவர்கள் யாரும் யாருக்கும் தாங்கள் பார்த்த காட்சியைப் பற்றிச்
சொல்லிக்கொள்ளவே இல்லை. அதேசமயம் எரிந்த அந்த மனிதத் தலைகளைச் சுட்ட பனம்பழங்கள் என்று சொல்லி தின்றும் முடித்தார்கள்.

Thursday, February 17, 2011

தும்பியின் கண்கள்
20ஒரு புல்லில். அங்கிருந்து வேலியில். அங்கிருந்து செம்பருத்திச் செடியில். அங்கிருந்து மரக்கட்டையில் எனத் தும்பி உட்கார்ந்த இடத்திலெல்லாம் மகன் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் குவித்து வாலைப் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். மகனின் இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அப்பா தும்பியின் பின்னால்
நின்று உள்ளங்கையை விசிறியைப்போல் வீசிப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். புழுவை விழுங்கும் மீன்போல் எளிதாக வித்தையைக் கற்ற மகன், அவன் பிடித்த யானைத் தும்பி, ஊசித் தும்பி, ஹெலிகாப்டர் தும்பி என எல்லாவகை தும்பிகள் வாலிலும் நூலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பறக்கவிட்டு விளையாடினான். ஒரு நாள் தும்பி ஒன்று நூலை அதிகம் இழுத்துப் பறப்பதாக உணர்ந்தபோது அதன் வாலைப் பிய்த்துப் போட்டான். வாலறுந்த தும்பி துடித்து நகர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்தபோது விளையாட்டைவிட வன்முறையில் ரசிக்கத் தக்கவை அதிகம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அன்று முதல் பிடிக்கப்பட்ட எல்லாத் தும்பிகளின் வயிறுகளும் கிழிக்கப்பட்டு குடல்கள் பிதுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. அதில் சலிப்பு தட்டியபோது தலைகள் கிள்ளப்பட்டு அது சிறுநேரம் நீர் சுவடாகத் தெரியும் வரை தரையில் உருட்டி நசுக்கப்பட்டன. அதற்கு மேல் சலிப்பு தட்டி வேறுவகையான வன்முறையில் தும்பியிடம் ஈடுபட புதிய முறை எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை. அதைப்போல அவனால் தும்பியிடம் இன்னொன்றையும் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை தலை கிள்ளும்போதும் தும்பியின் கண்களில் பயத்தைப் பார்க்க அவன் துடிப்பான். அந்தச் சிறுமகன் நேற்று மதியம் புதுவெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருந்த ஆற்றின் கரையில் இலந்தையில் செடியில் உட்கார்ந்த ஒரு தும்பியைப் பிடித்துத் தன் பேரனோடு தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தபோதும் பயத்தைப் பார்க்க முடியவில்லை. எப்போதும்போல் அன்றும் தும்பி அவன் கையைக் கடிக்காமல் விடவில்லை.

Wednesday, February 16, 2011

பேரலறல்19தூக்குப் போட்ட கண்களாக நரம்புகளில் இரத்தங்கள் இறுக்குமளவு அவள் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவளைத் திமிற விடாமல் பிடித்து மூட்டையாகத் தூக்கிக் கொண்டு வந்து, பகலில்கூட யாரும் வராது அந்தப் பாழ் கட்டடத்திற்குள் செடிகள் முளைத்திருந்த தரையில் போட்டார்கள். மூச்சிரைக்க எழுந்தவள் அங்கிருந்து மிரட்சியோடு ஓட முயன்றாள். அவளை எட்டிப் பிடித்த ஒருவன், "விபச்சாரமாடி செய்ற... தேவடியா'' என்று அடித்து நொறுக்கி அவள் புடவையைத் தூக்கி குறியைச் செலுத்தி நின்றவாகிலே இயங்கினான். அவனை
அவள் தள்ள முயற்சித்தபோது இன்னொருவன் பின்னால் வந்து அவள் முதுகு பழுக்க அடித்துப் பிருட்டத்தைப் பிளந்து அவன் குறியைச் செலுத்தி இயங்கினான். இரண்டு காட்டெருமைகளிடம் மாட்டிக்கொண்டதுபோல அவள் திமிறிக் கொண்டிருந்தபோது மற்றொருவன் அவள் இடக்கையையும் வேறொருவன் அவள் வலக்கையையும்
கல்லாலேயே தாக்கி அவர்கள் குறிகளைப் பிடித்துக்கொள்ளச் செய்து இயங்கினார்கள். நால்வரின் வெறிச் சத்தத்தால் ஒதுங்கி நின்ற ஐந்தாமவன் கிளர்ச்சியுற்று உடைந்திருந்திருந்த இரண்டு சுவர் பக்கங்களிலும் கால்களை வைத்து ஏறி வந்து அவள் கன்னத்திலேயே அறைந்தறைந்து வாயைத் திறந்து குறியைச் செலுத்தி இயங்கினான். மிருகக் கழிவை ஒவ்வொருவாய் வெளியேற்றிவிட்டு அவர்கள் கிளம்பியபோது ஒருவன், 'பாவம். போனாப் போகுது' என்று ஓர் ஐம்பது ரூபாய்த் தாளை அவள் முகத்தில் வீசியடித்தான். கீறல் இரத்தங்களைத் துடைத்துக்கொண்டே ஆவேசத்தோடு அந்தத் தாளை எடுத்தவள், "உங்களை நீங்களே ஒழுத்துக்கொண்டதற்கு எனக்கெதற்குக் காசு?'' என்று அதைத் தூக்கியெறிந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பாழ் சுவர்களிலிருந்து கீறிப்பிள்ளை, ஓணான்கள், பல்லிகள் எல்லாம் அதிர்ந்து ஓட ஒரேயொரு பேரலறல்தான் கேட்டது.

Monday, February 14, 2011

எரிநட்சத்திரம்18


இரவில் அவன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது எரிநட்சத்திரம் ஒன்று கடலில் எங்கோ தொலை தூரத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த எரிநட்சத்திரத்தைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற மடத்தனம் வேறெதுவும் இல்லையென அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஓடிப் பாய்ந்தான். இதைப்போல சென்றமுறை அவன் ஓடி பாய்ந்ததில்தான் ஒரு பாறையில் வெட்டுப்பட்டு முன்நெற்றியில் பதினெட்டுத் தையல்களுடன் மருத்துவமனையில் சுயநினைவின்றிக் கிடந்தான்.

Sunday, February 13, 2011

தலைஞாயிறு
17


பனி கொட்டிய அதிகாலை கருக்கலில் அவன் கடப்பாரையோடு வந்தான். ஓரடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் வலப்புறச் சாலையோரமாகப் பள்ளம் தோண்டிக் கொண்டே போனான். கடப்பாரையை ஒவ்வொரு முறை அவன் இறக்கியபோதும் சந்தோஷப் பூரிப்போடு மண் பிளந்துகொண்டு அவனை உற்சாகம் மூட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் கிழக்கு திக்கில் போவதை எதேச்சையாய்க்
கவனித்தேன். சிறு வட்ட நெருப்பாய்ப் புறப்பட்ட சூரியன் மேலே செல்லச் செல்ல பிரம்மாண்டக் கோளமாகி மீண்டும் தூரம் செல்லச் செல்ல சிறுவட்டமாகி கிழக்கு வானை மஞ்சள் ஒளியால் எரிக்கத் தொடங்கி மேற்குத் திக்காக நகரத் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் விடுப்புச் சொல்லிவிட்டு அவனையே பின் தொடர்ந்து சென்று கவனித்தேன். அவனின் ஒவ்வொரு நகர்தலுக்கேற்பவே சூரியனின் நகர்தலுமிருந்தது. உச்சுக்குச் சூரியன் வந்திருந்தபோது ஒரு வீட்டார் அவர்கள் வாசல் பக்கம் பள்ளம் தோண்டக் கூடாது என்று சண்டை போட்டார்கள். அவன் பதிலேதும் சொல்லாமல் கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு ஓர் ஓலைக் குடிசைக்குள் சென்றான். எங்கிருந்தோ திரண்டு வந்த மேகங்கள் அவசரஅவசரமாகச் சூரியனை மறைத்துக்கொண்டன. நீராகாரம் குடித்து முடித்து அவன் வெளியில் வரும்வரை மேகங்கள் தங்கள் உடும்புப் பிடியை விடவே இல்லை. மீண்டும் வந்து அவன் கடப்பாரையை எடுத்து குறுக்காகத் தோண்டிக் கொண்டுபோனபோது அசுர வேகத்தோடு மேகங்கள் கலைந்து போயிருந்தன. குறுக்கில் முடித்து இடப்புறச் சாலையோரமாகக் கடப்பாரையை இறக்கிக் கொண்டிருந்தபோது மேற்குத் திக்கில் சூரியன் சரிந்து நகர்ந்தது. நெடுகத் தெருவெங்கும் தோண்டி முடித்து மாலை கருக்கலில் கடப்பாரையைத் தோளில் தூக்கிக்கொண்டு போனபோது அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அதே கிழிப்பின் இடைப்பட்ட பகுதி வழியே நிலவும் சிறு வெண்ணொளிப் புள்ளியாய்ப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

Saturday, February 12, 2011

மயக்கம்16


எரியும் வெயிலில் சிறுவர்கள் ஓணான் தேடி புதர்புதராய் குச்சிகளால் தட்டிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவர்களைத் தேடி கத்திகளோடும் உருட்டுக் கட்டைகளோடும் வீடுவீடாய்த் தட்டிக்கொண்டிருந்தார்கள். முள் செடியிலிருந்து தப்பியோடிய ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தபோது அவர்களும் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ஓணான் வாயில் புகையிலையைத் திணித்து கீழே விட்டதும் அது மரண மயக்கத்திற்குப் போய் பேயாட்டம் ஆடுவதைச் சிறுவர்கள் ரசித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவன் கணவனின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க மற்றொருவன் கணவனின் தலையைக் கட்டையால் அடித்து நொறுக்கினான். ஆட்டத்திற்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஓணானின் வாலைப் பிடித்து ஒரு சிறுவன் இராட்டினம்போல் சுற்றித் தரையில் அடித்தபோது அவர்கள் அவளிடமிருந்து பச்சிளம் குழந்தையைப் பறித்து சுவரில் அடித்துத் தெறிக்க வைத்தார்கள். இரத்தம் வெளியேறி குடல் பிய்ந்து போயும் ஓணானை விடாமல் கற்பிதங்களால் ஏறியிருந்த வெறியோடு சிறுவர்கள் மிதித்துமிதித்து அதை மண்ணாக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அவள் முகத்தைச் சிதைத்து, முலையைச் சிதைத்து, யோனியையும் சிதைக்க நம்பிக்கையை உருவினார்கள்.

Thursday, February 10, 2011

கரம்14


காவலர்கள் எல்லோரும் அன்று பாதுகாப்பாய் உணர்ந்தார்கள். காலைப் பிடித்துக் கெஞ்சி, பெரியவரைச் (பெரிய ரௌடியைச்) சிறையில் சில நாள்கள் இருக்கச் சம்மதிக்க வைத்த எஸ்.பி. மீது டிஜிபிக்கும் அளவில்லா மரியாதை. சொன்னபடி பெரியவர் நடந்துகொண்டதால், பெரியவர் கேட்ட வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய கடமை காவலர்கள் மேல் விழுந்தது. சாதத்தில் ஒரு கறுப்பு சோறு கிடந்தாலும் வெட்டத் துள்ளும் ஏழெட்டுக் கொலை செய்த ரெüடிகள் எல்லாம்கூட பெரியவர் உள்ளே இருப்பது தெரிந்ததும் சத்தம்போடாமல் அடங்கிப்போனது ஆச்சரியம்தான். அன்றிரவு சரியாகப் பத்தரை மணி. சிறையின் ஒவ்வொரு கதவின் முன்னாலும் நூறு ரூபாய்த் தாளை நீட்டியவாறே ஒரு கரம் வந்தது. 'சல்யூட்' அடித்தபிறகே தாளைப் பெற்றுகொண்டு கதவுகளும் நேர்மையை நிலைநாட்டின. இறுதியாகப் பெரியவர் அறையில் தாளெதுவும் நீட்டாமல் அந்தக் கரம் நுழைந்தபோது அவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். படுக்கும் முன் வீட்டில் விசாரிப்பதுபோல குழந்தைகளைப் பற்றியெல்லாம் நிதானமாக விசாரித்து முடித்து, அந்தக் கரத்திற்குப் பெரியவர் வழக்கம்போல் முத்தமிட்டுத் தொடங்கினார். முனகல் சத்தங்களை அறிந்திராத அங்கிருந்த சுவர் பல்லிகள் ஒருவித நடுக்கத்தோடே இரவு முழுவதும் அலைந்துகொண்டிருந்தன. விடியலுக்குப் பிறகு அறையிலிருந்து வெளியே வந்த அந்தக் கரம், அன்றிரவும் சொல்லியவாறு குரும்பாட்டுக் குழம்போடு வந்து கதவுகளைத் திறந்தது.

Wednesday, February 9, 2011

மூங்கில் நதி13


இரண்டு ஊர்களைப் பிரித்து ஓடிய நதியும், அதே நதியின் குறுக்கே கட்டப்பட்டு இரண்டு ஊர்களை இணைத்து ஓடிய மூங்கில் பாலமும் முன்னொரு காலத்தில் பின்வருமாறு பேசிக்கொண்டன.
மூங்கில் பாலம்: "நதியாக நானும் சுழித்தோடி இருக்கிறேன்.''
நதி: "பொய். என் மீது உள்ள பொறாமையால் அப்படிச் சொல்கிறாய்.''
மூங்கில் பாலம்: "என்னை நம்பு. ஒரு காலத்தில் எனக்குள்ளும் நதி சுழித்தோடியிருக்கிறது. பச்சை நிற நதியாய் எழுந்தெழுந்து வான் தொட்டிருக்கிறேன்.''
நதி: "பச்சை பொய்''
மூங்கில் பாலம்: "தயவு செய்து நம்பு. வெட்டுக் காலத்திற்குப் பிறகுதான் மணல் நிறத்தில் இப்படி வற்றிப் போய்க் கிடக்கிறேன்.''
நதி: "வற்றிப் போயிருக்கிறாய் என்றால் நம்புகிறேன். ஏனென்றால் நானும் வற்றிப் போவது உண்டு. ஆனால் மீண்டும் புதுவெள்ளமாய் நான் பெருக்கெடுத்து ஓடுவேன். நீயும் அதைப் போல் ஓடிக் காட்டு.''
மூங்கில் பாலம்: "என்னால் அப்படியெல்லாம் மீண்டும் ஓடிக் காட்ட முடியாது. ஒரு முறை வற்றினால் வற்றியதுதான்.'' என்றதும் "நீ பொய்யன். உன் குட்டு வெளிப்பட்டுவிட்டது பார்த்தாயா?'' என்று வளையம் வளையமாய்ச் சிரித்த நதி அன்று முதல் மூங்கில் பாலத்தை எங்குப் பார்த்தாலும் "பொய்யன், ஏமாற்றுக்காரன்'' என்று உரக்கக் கேலிப் பேசியவாறே காலம்காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூங்கில் பாலமும் அன்று முதல் அதன் மேல் படும் பாதம் ஒவ்வொன்றிடமும் "கிரீச்... கிரீச்' என்று, அதாவது "சொல்லுங்கள்.... நீங்களாவது சொல்லுங்கள்'' என்று கெஞ்சி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

Tuesday, February 8, 2011

யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்12

இருண்டிருக்கும் பாழடைந்த மண்டபத்தில் வைத்து என்னை அவர்கள் இரத்தம் வழிய கை வேறாக; கால் வேறாக: தலை வேறாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்: "என்னை நீர் வேறாக, நிலம் வேறாக, காற்று வேறாக, நெருப்பு வேறாக, ஆகாயம் வேறாகப் பிரிக்க வேண்டும்' என்று. இயற்கையின் செயற்கையாகவே எல்லாம் பிறக்கின்றன. மடிகின்றன. நானும் இயற்கையின் செயற்கையாலேயே பிறந்தேன். இயற்கையின் செயற்கையாகவேதான் மடிய வேண்டுமா? எந்த இயற்கையின் கலவையாகவும், எந்த இயற்கையின் மாதிரியாகவும் இருக்க எனக்கு விருப்பமில்லை. ஐம்பூதங்களில் தனித்து ஏதாவதொரு பூதமாக வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். என் மாதிரி உடலிலிருந்து எப்பூதமும் கலவாத ஏதாவதொரு பூதத்தைப் பிரித்தெடுக்க யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.

Monday, February 7, 2011

வெளியேற்றம்11


வெண்ணிற மேகத்தை இரண்டு கைகளாலும் பறித்து வந்து அவனும் அவளும் வீட்டிற்குள் விட்டார்கள். கலைந்துபோகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டுக் கூரையையே வானமாக்கிக்கொண்டு மேகம் அலைய ஆரம்பித்தது. வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வாசற் கதவு, சன்னல்கள் என வீட்டிலிருந்த அனைத்துத் திறப்புகளையும் அடைத்தார்கள். பிரபஞ்ச வலமாக முன்னறை, படிப்பறை, படுக்கையறை, சமையலறை என நான்கு அறைகளுக்குளேயே மேகம் மாறிமாறி இரவு பகலாகச் சுற்றி வந்தது. தெருவிற்குப் போக வேண்டிய அவசியத்தில் வாசற் கதவைக் கீறலாய்த் திறந்து ஓர் எலியைப் போல நுழைந்து போய்வர பழகிக்கொண்டார்கள். எதேச்சையாய் ஒரு நாள் வான் மேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வீட்டிலுள்ள மேகத்திலும் ஏற்படுவதைக்
கவனித்தபோது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பல முறை சலிப்பு தட்டாமல் தெருவிற்கும் வீட்டிற்குமாகப் போய்வந்து இரு மேகங்களையும் ஒத்துப் பார்த்தார்கள். மாற்றம் எதையும் கண்டறிய முடியாத சந்தோஷக் களைப்பிலேயே அன்றிரவு அயர்ந்து தூங்கினார்கள். அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் கன மழை கொட்டியது. முழுதாய் நனைந்து அவர்கள் எழுந்தபோது எல்லாப் பொருள்களுமே நனைந்து வீடே வெள்ளத்தில்
மிதப்பதைப் போலக் காட்சியளித்தது. எல்லையில்லா மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டு குதித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் மழை கொட்டியபோதும் மேக வெளியேற கதவையோ, சன்னல்களையோ திறக்காமல் வீட்டிற்குள்ளேயே குடைபிடித்து உட்கார்ந்து சமாளித்தார்கள். ஆனால் மற்றொரு நாள் புயல் வீசியபோது அவர்களால் எதையுமே தடுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Sunday, February 6, 2011

அழி10


குற்ற உணர்ச்சி கொள்வதற்காகவே அவன் குற்றங்கள் புரிபவன். முதன்முதலாய் ஒருவனைத் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய வைத்தபோது, குற்ற உணர்ச்சியால் பல இரவுகள் தூங்காமல் பைத்திய நிலையில் செத்தவனின் நாக்கு தொங்கலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். பிறகு போகப் போக, ஒருவர், இருவரைக் கொன்றதற்காக எல்லாம் உணர்ச்சிக் கொள்ளமுடியாமல் நூறுநூறு பேராய்க் கொன்றபோது கொஞ்சம் உணர்ச்சி கொண்டான். இப்போது அதுவும் போய் இனம் இனமாய் அழித்தும் எதுவும் கொள்ள முடியாமல் உள்ளதனைத்தையும் மொத்தமாய் அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்குக் குற்ற உணர்ச்சிதான் முக்கியம்.

Saturday, February 5, 2011

புனல்9
நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுத்து பெண்ணாக நீந்திப் போகின்றன புனலின் இரு கரைகள். நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டிக் குப்புறப்படுத்து ஆணாக நீந்தி வருகின்றன அதே புனலின் இரு கரைகள். பின்புறமாக நீந்தி பெண் கடலில் விழுகையில் முன்புறமாக நீந்தி ஆண் மலையேறுகிறான். முன்புறமாக நீந்தி பெண் மலையேறுகையில் பின்புறமாக நீந்தி ஆண் கடலில் விழுகிறான். நீரில்லாக் காலங்கள் உண்டு. நீச்சலில்லாக் காலங்கள் இல்லை.

Friday, February 4, 2011

தண்டனை8

இருள் கசிந்த தனியறையின் பகல் மூலையில் நாற்காலி போட்டு அவர் உட்கார்ந்திருந்தார். வரிசையில் தயங்கி நின்ற பெண்களை எல்லாம் பின்னால் போகச் சொல்லிவிட்டு, விற்றுக்கொள்வதில் அனுபவம் வாய்ந்தவள் அவர் முன்னால் வந்தாள். கச்சுக் கொக்கிகளை வேகமாக அவிழ்த்து முலைகளைத் தொங்கவிட்டு, உள்ளாடையையும் உருவிவிட்டு பாவாடையோடு புடவையையும் தூக்கிக்கொண்டு கால்களை அகட்டி நின்றாள். கண்ணாடியைக் கழற்றுவதுபோல இரண்டு கண்களையும் பெயர்த்துக்கொண்டு நெருங்கிச் சென்று நிதானமாக அவர் பார்வையால் மேலும் கீழுமென ஊடுருவினார். பலமுறை அவர் ஊடுருவிப் பயணத்ததின் தடங்களைப் பார்வைகள் நினைவூட்டின. ஆனால், வகுத்துக்கொண்ட விதியை மீறக்கூடாது என்பதற்காக அவர் முழுதாய் ஆராய்ந்து முடித்து அடுத்தப் பெண்ணை வரச் சொன்னார். தப்பிக்கக் கிடைத்த மிக எளிய விதியை விட்டுவிட மற்றப் பெண்களுக்கும் விருப்பமில்லை. மூன்று மணி நேரத் தொடர் ஆராய்ச்சியின் நிறைவுக்குப் பின் எல்லோருமே மன்னிக்கப்பட்டார்கள்.

Thursday, February 3, 2011

பேரிழப்பு7


பேரலை, அந்தக் கடற்கரையை உலகின் மிக நீண்ட சவக்காடாக மாற்றிவிட்டுத் திரும்பியபோது அமைதியாய்ச் சடலங்களை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு எவ்வித சீற்றங்களுக்கும் அங்கு இடமில்லாமல் போனது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு குவிந்திருந்த காவலர்களையெல்லாம் மீறி ஒருவன் அப்புறப்படுத்தினான் ஒரே ஒரு
வாழைக்காய்.

Wednesday, February 2, 2011

ஒப்புதல்6

என் காலை ஆசையாய் நக்கிவிட்டு நாலைந்து அடிகள் போவதற்குள்ளேயே, பூனைக்குட்டியின் கழுத்தைப் பிடித்துத் திருகிப் போட்டுவிட்டான் பூங்காவிற்குள் நுழைந்திருந்த பைத்தியக்காரன். அலறிக்கொண்டே காலை கருக்கலில் அது அடங்கிப்போய்விட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய்ப்பூனை அதன் குட்டிகள் சூழ்ந்து நிற்க, செத்துப்போன குட்டியை நாக்கால் நக்கிக் கொடுத்த படியே 'ஏதாவது செய்... ஏதாவது செய்' என்று என்னை நோக்கி 'மியாவ்...மியாவ்' என அலறியது. எனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. உயிரோடு என்னைக் கொல்வதுபோல இருந்த அலறலால் பைத்தியக்காரனை அடிக்க ஓடினேன். உடல் முழுவதும் அழுக்கு அப்பி, சடை முடியோடு, அட்டக் கரியாய் இருந்தவனை அருகில் பார்த்ததும் மூண்டிருந்த தைரியம் கலைய, பயந்துகொண்டு அடிக்காமல் திரும்பிவிட்டேன். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சிமென்ட் பெஞ்சிலேயே நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒருவன், ''வீணாய் அவனை ஏன் அடிக்கப் போகிறாய்? உன் காலை நக்கியதில் ஏறிய விஷத்தால்தான் குட்டி செத்துவிட்டது'' என்றான். எதிர்க்க எனக்கும் மனம் வரவில்லை. ஒப்புக்கொண்டேன்.

Tuesday, February 1, 2011

மூடல்5


நெஞ்சடைத்துக்கொள்ளும் சந்தோஷ மனநிலையோடு அவன் வீட்டிற்குத் தெரியாமல் சென்றுவிட்டேன். தேநீரால் உபசரித்துவிட்டு உள்ளறைக்குச் சென்றவன், திரும்பி வருகையில் அவன் மண்டையைப் பிளந்து, மூளையைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். கால்பாகத் தேநீர் உள்ளிறங்க மறுத்துவிட்டதால் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பானையிலிருந்து சோற்றைத் துடைத்துப்போடுவதுபோல என்னிடமுள்ள சொற்கள் அனைத்தையும் அவனுக்கே துடைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுபோல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் என்னைப்
பேசவேவிடவில்லை. நெடுநேரம் மூளையாகவே பேசிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கண்களைத் தொடர முடியாததால் அவன் கையிலிருந்த மூளைக்குத் தாவினேன். மூளையின் நரம்புகள் அனைத்தும் அவனால் செப்பணிடப்பட்ட முடிவற்ற சாலையாகவும் அதில் அவனின் அசுர வாகனம் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் இரத்தம் வெள்ளமாக்கியுமே பயணித்தது. என்னால் மரண அலறல்களைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அசுர வாகனத்தை நிறுத்த எனக்கிருந்த ஒரே வழியின்படி நானும் என் மண்டையைப் பிளந்து மூளையைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு என் வாகனத்தை அசுரமாய் ஓட்டினேன். என் வாகன அசுரத்தில் மிரண்டு போனவன் அவசரமாய் அவன் மூளையை வைத்து மண்டையை மூடியபோது என்னையும் அதற்குள் வைத்து
நிரந்தரமாய் மூடினான்.