Sunday, February 27, 2011
சந்திர யானை
22
தும்பிக்கையை மேலே தூக்கி; காற்றை உள்ளிழுத்து; தட்பவெப்பநிலையை வழக்கம்போல்தான் அன்றும் ஆராய்ந்தது அந்தக் காட்டு யானை. ஆனால் அதன் இழுவிசையில் சந்திரன் பெயர்ந்து வந்து தும்பிக்கைக்குள் ஓடிப்போய் வாய்க்குள் வந்துவிட்டது. அதிர்ச்சியோ ஆச்சரியமோ கொள்ளாமல் அந்த யானை சந்திரனைக் கடித்துக்கடித்து ஒளிநீராக்கி தும்பிக்கையை மேலே உயர்த்திப் பீய்ச்சியடித்தது. ஒளியூற்று மிகவும் பிரகாசமாக நீண்ட தூரம் மேலே போய் மீண்டும் தரைக்கு வந்தது. இதில் அதீத மகிழ்ச்சிக்கு ஆட்பட்டு அது மீண்டும்மீண்டும் ஒளிநீரை உறிஞ்சியும் மேலே பீய்ச்சியடித்தும் ரசித்தது. ஓயாத ரசிப்பின் ஒரு நிலையில் வழக்க பழக்கத்தில் ஒளிநீரை உறிஞ்சி அதன் முதுகின் மேலேயே பீய்ச்சிக் கொண்டது. முதுகெங்கும் வழிந்த ஒளிநீரை மீண்டும் அது உறிஞ்ச முனைந்தபோது உருண்டு திரண்டு சேர்ந்திருந்த சந்திரன் யானை முதுகில் பாகனைப்போல உட்கார்ந்துகொண்டு அதனை விரட்டியது. மிரண்டு மேலேமேலே சென்ற அந்தப் பெரிய கறுப்பு யானை முகத்தையும் வாலையும் மறைத்துக் கொண்டு இன்றும் பாகனைச் சுமந்து அந்தரத்தில் அலைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment