Monday, December 31, 2007

லேகா வாஷிங்கடன், கனிஹா, சங்கீதா, தீபா வெங்கட், லிமா ராணி - புத்தாண்டு சபதம்!

"இனிமேல் சபதமே எடுக்கமாட்டேன்' என்பது உட்பட ஒவ்வோர் ஆண்டும்
ஒவ்வொரு சபதம் எடுக்கிறார்கள். எடுத்த சபதத்தை நிறைவேற்றினீர்களா?
என்றால் பெரும்பாலானோரின் பதில் உதடுபிதுக்கல்தான். இப்படித்தான்
நடிகைகளும் உதடுபிதுக்குவார்களா? எடுத்த சபதத்தை முடித்த நடிகைகள்
எத்தனை பேர்? அவர்களின் புது சபதம் என்ன? அவர்களின் புத்தாண்டு
கொண்டாட்டம் எப்படி? சிலர் சொல்கிறார்கள்:

கனிஹா

கடந்த வருடம் என்ன சபதம் எடுத்தேன்னு தெரியலை. நினைத்து நினைத்து
பார்த்தாலும் இப்போது ஞாபகம் வரவில்லை. அதற்காக இந்த வருடம் சபதம்
எடுக்கமாட்டேன்னு அர்த்தமில்லை. என்ன சபதம் எடுக்கவேண்டும் என்று
இப்போதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னோடு படித்த தோழிகள்
எல்லாம் வெளிநாடுகளிலும் மற்ற இடங்களிலும் இருப்பதால் அவர்களோடு
இணைந்து புத்தாண்டைக் கொண்டாட முடிவதில்லையே என்கிற வருத்தம்
உண்டு. அந்த வருத்தத்தை என்னுடைய அக்கா போக்கி வைத்துவிடுவார்.
அவரோடு இணைந்துதான் கேக் வெட்டி கொண்டாடுவேன். வெளியில்
செல்லமாட்டேன். வீட்டிலேயேதான் கொண்டாட்டம்.

லேகா வாஷிங்டன்

எடுத்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறேன். 2007-க்குள் நடிகையாக வேண்டும்
என்று கடந்த வருடம் சபதம் செய்திருந்தேன். "கெட்டவன்' படம் மூலம் அது
நிறைவேறி இருக்கிறது. கடின உழைப்பைச் செலுத்தி இன்னும் நிறைய
படங்கள் நடிக்கவேண்டும் என்பதுதான் இந்தப் புத்தாண்டு சபதம். இதுவும்
நிறைவேறும் என்று எண்ணுகிறேன். என்னுடைய கொண்டாடங்கள்
எப்போதும் எளிமையாகத்தான் இருக்கும். அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய
நண்பர்களோடு வீட்டிலேயேதான் கொண்டாடுவேன்.

சங்கீதா

நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த வருடம் சபதம்
எடுத்தேன். ஆனால் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. இந்த வருடமும்
அதே சபதத்தையே மறுபடியும் எடுத்திருக்கிறேன். நிச்சயம் நிறைவேற்றுவேன்
என்று நம்புகிறேன். அல்லது அடுத்த வருடம் வேறு சபதம் எடுப்பேன்.
என்னுடைய புத்தாண்டு கொண்டாட்ட ஷெட்யூல் எல்லா வருடமும்
ஒரேமாதிரிதான். இரவு பன்னிரண்டு மணிக்கு குடும்பத்தோடு சாமி
கும்பிடுவேன். அதற்குப் பிறகு ஃப்ரெண்டுகளோடு அரட்டை
அடித்துக்கொண்டு வெளியில் ரவுண்ட்.

நீலிமா ராணி

நேற்று, நாளை என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. இன்று
என்பதில்தான் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் சபதம் எடுப்பதில்லை.
வடபழனி விஜயசாந்தி அபார்ட்மெண்ட்ஸில்தான் வசிக்கிறேன். இங்கு 250
குடும்பங்களுக்கு மேல் இருக்கிறது. புத்தாண்டையொட்டி இங்குள்ள
குட்டீஸ்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு கொடுக்கிறோம்.
இதைப்போல பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதில்
குட்டீஸ்களுக்கான நடனப் பயிற்சியை நான்தான் கொடுக்கிறேன்.
வருடாவருடம் குழந்தைகளுடன்தான் என் கொண்டாட்டம்.

தீபாவெங்கட்

சந்தோஷமான ஆரோக்கியமான வாழ்க்கையாகத் தினம் போகவேண்டும்
என்று விரும்புகிறேன். அதற்காகச் சபதங்கள் எல்லாம் எடுத்துக்
கொண்டிருப்பதில்லை. இந்த வருடமும் எந்தச் சபதமும் எடுக்கப்போவதில்லை.
இப்போது சீரியல்களில் பிஸியாக இருக்கிறேன். வருகிற வருடங்களிலும் இது
தொடரும் என்று நினைக்கிறேன். இப்போது கர்நாடக இசையும்
கற்றுவருகிறேன். பாடகி மஹதியின் தந்தை திருவையாறு சேகர்தான் என் குரு.
இதிலும் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. வெற்றிபெறுவேன்
என்று நினைக்கிறேன். புத்தாண்டு பிறக்கிறபோது நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொள்கிறேன். இதனால் வேறு வேறு கொண்டாட்டம் இல்லை.
வீட்டில் இருந்தால் அப்பா, அம்மா, நண்பர்களோடு கேக் வெட்டி
கொண்டாடுவோம்.

Friday, December 28, 2007

காபி பார்களும் காதல் போர்களும்!



சண்டைக்கோழிகளைத் தேடி புறப்பட்டோம். சண்டைக்கோழி என்றதும் உங்கள் மனம் ஒரு மைதானத்தில் போய் நிற்கும். "கூட்டம் கூடி நின்று கரவோஷம் எழுப்பும். கால்களில் கட்டியிருக்கும் கத்திகளோடு கோழிகள் இரண்டு சண்டையிட்டுக் கொள்ளும்.
இறுதியில் ஏதாவது ஒரு கோழி, மற்றொரு கோழியைக் குத்திக் கிழித்துக் கொல்லும். அந்தக் கோழி வென்ற கோழியாகக் கருதப்படும் ' -இப்படி யாரேனும் நினைத்தால் அது சுத்தமா தப்பு. இதுல நாங்க சொல்லுற சண்டைக்கோழிங்களே வேற.... இந்தக் கோழிங்க போடுறது காதல் சண்டை.
காஃபி பார்களும், கடற்கரை ஓரங்களும் இந்தக் கோழிங்க நடத்தும் காதல் போர்களின் காவியக் களங்கள்!

சட்டு சட்டுன்னு நிறம் மாறுற வானம் மாதிரி இந்த இளசுங்க சண்டையிலிருந்து சமாதானத்துக்கும் சமாதானத்தில இருந்து சண்டைக்கும் தாவுதுங்க. நேரிலும் செல்போனிலும் செல்லச் சண்டையின் சிணுங்கல்கள் கொலுசு ஒலிக்கிற மாதிரி கேட்டுக்கிட்டே இருக்குது. எல்லா ஊடலும் எதுக்கு. அது கூடலுக்குத்தானே. ஊடல்தானே காதலுக்கு ஊட்டம் தர்ற எரு.
இப்படி சில சண்டைக்கோழிகளைத் தேடிபோய் இதுங்களின் சண்டை ரகசியங்களைக் கிளறுனோம். தேடிப் போன சண்டைக்கோழிங்க வழக்கம் போல காபி பார்லர்கள்; பீச், இளமை ததும்பும் பிளாசாக்களிலேதான் மாட்டின.
""சண்டைக்கோழி..சண்டைக்கோழி...கொஞ்சம் தடவு உன் சொந்தக் கோழிதான்.''என்று பாடுகிற காதல் இந்தக் கோழிகள் என்ன
சொல்லுதுன்னு கேளுங்களேன்....

எம்.திருசங்கு, வனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பிசினஸ் செய்றேன். மூணு வருஷமாக லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். சண்டையில்லாம காதல் இல்லை. சண்டை இருந்தாதான் காதலே இனிக்கும். எங்களுக்குள்ள சண்டை அடிக்கடி வரும். எங்களுக்குள்ள வர்ற முக்கியமான சண்டைன்னு பார்த்தீங்கனா, அவுங்க பிரண்ட்ஸ்கிட்ட நான் பேசுனா சண்டைப் போடுவாங்க.(ரொம்ப வழிவீங்களாக்கும்), அதே போல என் ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசுனாலும் சண்டை வரும். இது எங்களுக்குள்ள வர்ற சின்ன சண்டை. சில காதலர்களுக்குள்ள பெரிய சண்டையும் வர்றதுண்டு.
முதல்ல என்ன சாதி ன்னு சொல்லாம லவ் பண்ணிடுவாங்க. அப்புறம் ஒவ்வொருத்தரும் வெவ்வேறு சாதி இருக்கிறப்ப..தங்களுடைய சாதியைப் பெரிசா பேசிக்கிட்டு சண்டைப் போட்டுப்பாங்க. இப்படிச் சண்டை போட்டுக்கிட்டாலும், இந்தச் சண்டையெல்லாம் கொஞ்சம் நேரத்துக்குத்தான் நீடிக்கும். ஐந்து நிமிஷத்துல மறந்துபோயிடும். சண்டை வருகிற காதல்தான் உண்மையான காதல்னு நான் நினைக்கிறேன். சண்டையில்லாத காதல் போன்-லெஸ் காதல் போல.

உமாசங்கர்
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
ஒன்பது வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் லவ் செய்யிற பொண்ணு எங்க சொந்தக்கார பொண்ணுதான். ஆனாலும் எங்க ரெண்டு பேரு வீட்டிலையும் ஒத்துகலை. லவ் பண்ணுற பொண்ணு பி.பி.ஏ படிச்சிருக்கு. நான் படிக்கல.
அதனால ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் மேரேஜ் பண்ணனும்னு ஆசை. அவர்கள் சம்மதம் வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறோம். நாங்க காதலிச்சி ஒன்பது வருஷமாகிவிட்டது. பத்தாவது வருஷம் பெத்தவங்க ஒத்துக்கிறாங்களானு பார்ப்போம். இல்லைன்னா நாங்களே கல்யாணம் பண்ணிப்போம். இத்தனை வருஷமா லவ் பண்ணுறோம் எங்களுக்குள்ள சண்டை வர்றாமயா இருக்கும். அடிக்கடி சண்டை வரும். சண்டைதான் காதலை வளர்க்கும். இதுக்குதான் சண்டை வரும்னு சொல்லமுடியாது. சின்ன விஷயத்துக்கும் வரும். சில்லரை விஷயத்துக்கும் வரும். சண்டை எந்த விஷயத்துக்காக வந்தாலும் காதலை வளர்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.

தேவி, கண்ணன்
""சண்டை நான்தான் அடிக்கடி போடுவேன். இவுங்க 4 மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு பஸ்ஸ்டாண்டுல நிக்க சொல்லிடுவாங்க. நான் நிப்பேன் நிப்பேன் 6 மணிக்கு மேலதான் வருவாங்க. இதே லவ் பண்ணுன காலத்தோட ஆரம்பத்துல பார்த்துங்கீன்னா 4 மணிக்கு வர்றேன்னா 3 மணிக்கே வந்து நிப்பாங்க. இப்ப ஏன் லேட்டா வர்றீங்கன்னு கேட்டு வம்பு வளப்பேன். இதுபோல சின்ன சின்னச் சண்டைதான் வருமே ஒழிய பெரிய பெரிய சண்டையெல்லாம் வர்றாது.
நான் சண்டை போட்டாலும், என்னைச் சமாதானம் பண்ணுறதுக்கு, சினிமாவுக்குப் போலாமா? பீச்சிக்கு போலாமா?ன்னு கேட்டாவது அல்லது ஏதாவது ஜோக் அடிச்சாவது சமாளிப்பாங்க. அப்ப கிடைக்கிற சந்தோஷம் இருக்கே. அதைவிட பெரிய சந்தோஷம் இருக்கிறதா எனக்குத்
தெரியல.

காஞ்சனா, ரமேஷ்
சண்டை வர்றாத நாளே இல்லைன்னு சொல்லலாம். இன்னைக்கு வெளியில அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லுவாங்க. ஆனா, வேலை இருக்குன்னு அழைச்சிட்டு போகமாட்டாங்க. அதேசமயம் அவுங்க வீட்டு விஷயமா ஏதாவது போகணும்னா கரெக்ட் டயத்துக்குப் போயிடுவாங்க. சில நேரத்துல லீவு கூட போடுவாங்க. ஆனால எனக் காக ஒரு நாள் கூட லீவு போடமாட்டாங்க. எனக்காக லீவு போடணும்னா அப்பதான் பாஸ் திட்டுவாரு... லீவு எடுக்கமுடியாது..
சம்பளத்தைப் பிடிச்சிருவாங்க...அப்படி இப்படின்னு கதை அளப்பாங்க. இது எனக்குப் பிடிக்காது.
அதுதான் எங்களுக் குள்ள வர்ற சண்டை. கோபமா சண்டைப் போடுறேனே.. அவரா வந்து சமாதானம் செய்வாரா? அது செய்யமாட்டாரு. "உனக்கு அறிவில்ல... உங்க அப்பனா கம்பெனி கட்டி விட்டிருக்கான்னு கேட்டுட்டு' விட்டுடுவாரு.. இப்ப டியே கொஞ்சம் நேரம் போகும். அவர பாக்க பாவமா போயிடும்.
அப்புறம் நானே தான் போயி பேசுவேன்''

Wednesday, December 26, 2007

நீலபத்பநாபனுக்கு சாகித்ய அகாதமி விருது:



முதியோர் இல்லத்தை கதைக் கருவாகக் கொண்டுள்ள நீலபத்மநாபனின் இலை உதிர் காலம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
இவ்விருது 2007-ஆம் ஆண்டுக்கான விருது. இந்நாவல் ஏற்கனவே ரங்கம்மாள் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கவிஞரும் எழுத்தாளருமான நீலபத்மநாபன் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

இவரது பிற நாவல்கள்: தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், பைல்கள், உறவுகள், மின் உலகம், நேற்று வந்தவன், உதய தாரகை, பகவதி கோயில் தெரு, போதையில் கரைந்தவர்கள்.



சிறுகதைகள்:
மோகம் முப்பது ஆண்டு, சண்டையும் சமாதானமும், மூன்றாவது நாள். இரண்டாவது முகம், நாகம்மா, சத்தியத்தின் சந்நிதியில், வான வீதியில்.

அந்த பெங்களூர் போன் கால்! எஸ்.எஸ்.மியூசிக் கிரேக்கோடு ஒரு ஜாலி அரட்டை!



"கிராக் ஜாக்' பிஸ்கட் போல வித்தியாசமானவர் எஸ்.எஸ்.மியூசிக் "விடியோ ஜாக்கி' கிரேக். "பெண்ணைச் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேச்சழகன்'. ரசம், சாம்பார் என எதைப் பற்றியும் ஷோவில் ஜோவியலாய் தமிங்கிலீஷில் பேசுவதுபோலவே இங்கேயும் அவர் மனசைத் திறந்து ஜோதியாய் கொட்டினார்.

உண்மையிலேயே இசையில் ஆர்வம் உண்டா? இல்லை; விதியேன்னு காம்பயர் செய்கிறீர்களா?
மியூசிக் இல்லையென்றால் நான் இல்லை என்று கூட சொல்லலாம். இப்ப யூத் எல்லாருமே மியூசிக் கேட்டுத்தான் வளர்கிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். ஜிங்கில்ஸ், ஆல்பம் உட்பட எல்லாவகையான மியூசிக்கையும் நான் ரசிப்பேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரின் பழைய பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தமிழ்கூட தகராறு செய்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?
முயற்சி செய்கிறேன். வீட்டில் யாருக்கும் தமிழ் தெரியாது. எல்லோரும் இங்கிலிஷ்லேயேதான் பேசுவார்கள். அதனால்தான் தமிழைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஓரளவு நான் இப்போது தமிழில் பேசுவதும் இங்கிலீஷில் யோசித்துத்தான். சில வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாது. இருந்தும் எப்படியோ பேசி சமாளிக்கிறேன். இப்படியே போனால் தமிழில் நன்றாகப் பேசலாம் என்று சொல்கிறார்கள். பார்ப்போம். எனக்கு நம்பிக்கையில்லை.

"என்னை ஞாபகம் இருக்கா' என ரெகுலர் காலர்ஸ் நச்சரிக்கிறபோது உங்களுக்கு எரிச்சலாக இருக்குமா?
எல்லோரும் அப்படிக் கேட்பதில்லை. இரண்டு தடவை, மூணு தடவை என்னிடம் பேசியவர்கள்தான் அப்படிக் கேட்பார்கள். எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்ப்பார்ப்புதான். இரண்டு தடவை பேசியிருக்கிறோமே ஞாபகம் வைத்திருக்கிறானா? என்று சோதித்துப் பார்ப்பார்கள். இது பரவாயில்லை. இரண்டு வருடத்திற்கு முன்பு ஒருமுறை பேசியிருப்
பார்கள். அவர்களும் என்னை ஞாபகமிருக்கா? என்று கேட்பதுதான் வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் எரிச்சல் வருவதில்லை. ஆசையோடும் அன்போடும் வேடிக்கையாகப் பேசுகிறவர்களிடம் கோபப்படலாமா?

தேர்தல் நேரத்தில் மக்களைப் பார்த்ததும் அரசியல்வாதிகள் கையெடுத்துக் கும்பிடத் தொடங்கிவிடுவதுபோல விடியோ ஜாக்கிகள் ஏன் நிகழ்ச்சி தொடங்கியதுமே கத்திப் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்?
சராசரி வாழ்க்கையில் எப்படி இருக்கிறோமோ அதேபோலவே அமைதியாக, சாந்தமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நேரில் பார்க்கிறபோது சுவீட்டான சார்மிங் கேர்ளாக ஷ்ரேயா இருப்பார். அதே ப்ரோகிராம் பண்ணுகிறபோது பாருங்கள். அப்படியே செக்ஸியாக, வாய்ஸ் மாடுலேஷன் உட்பட எல்லாவற்றிலும் டோட்டலாக மாறியிருப்பார். இது வி.ஜே.க்களுக்கு அவசியமான ஒன்று.

விளம்பரங்களில், படங்களில் நடிப்பதற்கு என்று பெண் வி.ஜே.க்கள் பெரியளவில் போய்விடுகிறார்களே? உங்களைப் போன்றோருக்கு இதில் வருத்தம் உண்டா?
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு, விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு என பெண் வி.ஜே.க்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வருவது உண்மைதான். அந்தளவிற்கு ஆண்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் பெண்கள் இதுபோன்ற துறையில் அதிக நாள்கள் நீடிப்பதில்லை. திரைப்படத் துறையையே எடுத்துக் கொண்டால் சிம்ரன், ஜோதிகாவுக்குப் பிறகு நீண்ட நாள்களுக்கு நிலைத்திருக்கும் கதாநாயகியைப் பார்க்க முடியவில்லை. நான்கு படங்கள் நடிப்பதற்குள் ஃபீல்டைவிட்டு ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. திறமையிருக்கிறவரை தொடரலாம். ஆண் வி.ஜே.க்களுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இவர்களை விட்டு புதியவர்களை ரசிக்க ரசிகர்களும் விரும்புவதில்லை. படத்தயாரிப்பாளர்களும் விரும்புவதில்லை.

உங்களுக்கு அதிகளவில் வருகிற லேடீஸ் கால்களைப் பார்க்கிறபோது ஆண்களைவிட பெண்களே அதிகம் வழிவதுபோல தெரிகிறதே?
அப்படிச் சொல்லலாம். ஆனால் எனக்குப் பேசுகிறவர்களில் சில பள்ளி மாணவிகளும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் உண்டு. இவர்களை அந்தவகையில் சேர்க்க முடியாது. ஆரோக்கியமான காலர்களாகவே கொள்ளவேண்டும். அதேசமயம் ஆண்களும் அதிகளவில் பேசுகிறார்கள். "என்ன மச்சி எப்படியிருக்க?' என்றெல்லாம் பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசுவது எனக்கு உண்மையிலே பெருத்த சந்தோஷத்தையே அளிக்கிறது.

எல்லோரையும் கலாய்க்கும் உங்களை யாராவது கலாய்த்திருக் கிறார்களா?
பெங்களூர்ல இருந்து நவீனா என்று ஒரு பெண் பேசுவார். இருபத்தெட்டு வயசு இருக்கும். அவர் பேசினாலே நான் மிரண்டு போவேன். எதையும் நேராக அவர் குரலில் பேசமாட்டார். குழந்தை குரலிலேயே பேசுவார். எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன். அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. என்னை முழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பார். இப்போது அவர் கால் பண்ணுவதில்லை.

உங்கள் டூவிலரின் பின்னிருக்கை இப்போதும் காலியாகத்தான் இருக்கிறதா?
இல்லை. ஆள் இருக்கிறார்கள். அந்த ஆள் பற்றிய விவரத்தை இப்போதைக்குச் சொல்லமாட்டேன்.

கிளையில் தொங்கும் காதலும் - நட்பும்!


'ஜிம்'முக்குப் போகும் குழந்தைகள்!


மி ஸ்.வேர்ல்டு, மிஸ்.யுனிவர்ஸ், மிஸ்டர்.ஏசியா, மிஸ்டர்.இந்தியா பட்டங்களைப் பெறும் கனவோடு சுற்றும் டீன்ஏஜ்கள் "ஜிம்'க்கு படையெடுப்பது அவசியம். ஆறுமாதக் குழந்தைகள் "ஜிம்'க்குப் போக வேண்டிய அவசியமென்ன?

சென்னை மைலாப்பூரில் குழந்தைகளுக்காகவே ஒரு "வெனிலா சில்ட்ரன் ப்ளேஸ்' என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய "ஜிம்' மற்றும் ஷாப்பிங் தொடங்கியுள்ளனர். இதில் குட்டீஸ்களோடு அவர்களின் அம்மாக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனைத் தொடங்கியிருப்பவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இஃபாத் அகாம்.

"மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்திருந்தேன். இங்கு குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மகிழ்ந்து விளையாட ஒரு நிம்மதியான இடம் இல்லை என்று எனக்குப்பட்டது. எங்குப் பார்த்தாலும் ஒரே கூட்டம். நெரித்துக்கொண்டே குழந்தைகளை எடுத்துப் போக வேண்டியிருந்தது. கடைகளுக்குள் நுழையும்போதே தாய்மார்கள் குழந்தைகளை, "இதைத் தொடக்கூடாது. அதைத் தொடக்கூடாது' என்று மிரட்டியபடியே அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகளின் இயல்பு துள்ளித் திரிவது. கண்ணைப் பறிக்கிற வண்ணப் பொருள்களைக் கண்டால் உடனே அதை எடுத்துப் பார்ப்பதுதான்.



இந்தச் சாதாரண இயல்பைக்கூட குழந்தைகள் பெறமுடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த சில்ட்ரன் ப்ளேûஸத் தொடங்கி உள்ளோம். இது குழந்தைகளுக்கானது மட்டும் என்று கருதிவிடக்கூடாது. இங்கு தாய்மார்களும் பயன்பெறுகிற வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய ஓர் இடம் இந்தியாவிலேயே இல்லை. எங்களின் இந்த ஆரோக்கிய ஜிம்மில் உறுப்பினராவதற்கு 200 ரூபாய். ஒருமணிநேரத்திற்கான கட்டணம் 100 ரூபாய்.



குழந்தைகளுக்கு முக்கியமாய் நாங்கள் வைத்திருப்பது வெனிலா "பீன்ஸ்' என்ற பெயரில் விளையாட்டுப் பயிற்சி பெறும் ஜிம். இது பிரத்யேகமாய் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டவை. மலரைப் போன்று மென்மையானவர்கள் குழந்தைகள். இவர்கள் கனமானப் பொருள்களில் விளையாடுகிறபோது, லேசாகத் தடுமாறி விழுந்தால்கூட சிராய்ப்போ அடியோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நாங்கள் அமைத்திருக்கிற ஜிம்மில் குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அடிபடாது. இந்தச் சாதனங்கள் எல்லாம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. பஞ்சு போன்ற மென்மையான பொருட்களால் ஆனவை. உடல்ரீதியான வளர்ச்சி மற்றும் மனரீதியான வளர்ச்சியை இதில் விளையாடும் குழந்தைகள் பெறுவார்கள். நன்கு அறிவு வளர்ச்சி பெற்ற குழந்தைகளாகவும் உருவாகுவார்கள். கண்ணைப் பறிக்கிற வண்ணத்திலே இந்தச் சாதனங்கள் இருப்பதால் குழந்தை
களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இந்தச் சாதனங்களில் குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதற்கும் ஒரு பயிற்சியாளரை வைத்திருக்கிறோம். அந்தப் பயிற்சியாளரும் இஸ்ரேலில் இருந்து வந்தவர்தான்.



இந்த ஜிம்மின் மற்றொரு சிறப்பம்சம். குழந்தைகள் விளையாடுகிறபோது அவர்களின் அம்மாக்களும் அருகில் இருப்பதுதான். வேறு எங்கும் இப்படி அனுமதிப்பது இல்லை. ப்ளே ஸ்கூல்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இங்கு அப்படி முடியாது. தாய்மார்கள் அருகிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதற்காக இது ப்ளே ஸ்கூல் என்று அர்த்தமில்லை.



ஒரே இடத்தில் எப்படி அமர்ந்திருக்க முடியும் என்று சில தாய்மார்கள் கவலைப்படலாம். இது ஒரு பிரச்சினையே இல்லை. குழந்தையை விளையாடவிட்டுவிட்டு, ரிலாக்சாக உங்கள் வேலையைச் செய்யலாம்.
இங்கேயே இன்டர்நெட் வசதி உள்ளது. இதில் உங்கள் பணியைச் செய்யலாம். உணவு விடுதி ஒன்று உள்ளது. இதில் சாப்பிடலாம். மசாஜ் மையம் உள்ளது. மசாஜ் செய்து கொள்ளலாம்.



ஜிம்மைப் போலவே வெனிலா ட்ரீ என்று ஒரு பயிற்சி மையம் உள்ளது. இது தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் குடும்ப இணைப்பை வலுப்படுத்தக்கூடிய அமைப்பாகும். இஸ்ரேல் போன்ற நாடுகளில்தான் இந்த அமைப்பு தேவையாக இருந்தது. இப்போது இந்தியாவிலும் தேவையான ஒன்றாகிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை இங்கேயும் இல்லாமல் போய்வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த மையம் அமைத்திருக்கிறோம்.

இங்கு மியூசிக், நாட்டியம் உட்பட எல்லாம் சொல்லிக்கொடுக்கிறோம். தாயும் பிள்ளைகளும் சேர்ந்து இங்கு பயிற்சி பெறுகிறபோது ஒரு குடும்பப் பிணைப்பு இன்னும் அதிகமாகிறது. தாய்மார்களுக்கும் பல்வேறு வேலை பளுவிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மனரீதியாக அவர்கள் பெரியளவில் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். இதைப்போலவே கர்ப்பிணிப் பெண்களுக்கும் யோகா சொல்லிக்கொடுக்கிறோம். குழந்தை வளர்ப்புக்குத் தேவையான எல்லாப் புத்தகங்களும் வாங்கி வைத்துள்ளோம். அதோடு குழந்தைகளுக்கான விசேஷ ஃபர்னிச்சர்களும் செய்து விற்கிறோம்.



இந்த ஷாப்பிங்கை இன்னும் விரிவாக்கவும் ஆசை உள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான உலகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் கிடைக்கிற வகையில் ஷாப்பிங்கை விரிவுப்படுத்தவும் விருப்பம் உள்ளது. இதைப்போல இந்த மையத்தை இந்தியா முழுவதும் தொடங்கவும் விருப்பமுள்ளது.'' என்கிற இஃபாத் அகாமுக்கு மூன்று குழந்தைகள். "வெனிலா சில்ட்ரன் ப்ளேஸ்' நாலாவது குழந்தை!

ட்ரீட் கொடு... ட்ரீட் கொடு...மாமூ!






"கவிதா ஓ.கே. சொல்லிட்டாளா?.. ட்ரீட் குடு'' என்று கேட்டால் ஏதோ அர்த்தம் இருக்கும். இளமை டிக்ஷனரியில் எப்படி இருக்கும் நேரடியான அர்த்தம்? தலை தரையில் இருக்கவேண்டும் கால் அந்தரத்தில் இருக்கவேண்டும் என்றல்லவா இருக்கும்?

"கவிதா நல்லா காலவாரிவிட்டுட்டாளா..., 4 சப்ஜெக்ட்ல புட்டுக்குச்சா, ஹீரோ ஹோண்டாவுல வேகமா போயி சில்லறை பொறுக்குனியா...ப்ளாக்ல டிக்கெட் எடுக்குறப்ப போலீஸ்கிட்ட மாத்து வாங்குனியா..ட்ரீட் குடு...ட்ரீட் குடு மாமூ.'' என்று ட்ரீட் கேட்பதற்கான அர்த்தங்களே மாறிவிட்டது. இதைவிட இன்னும் சில்லறைத்தனமான விஷயங்களுக்காககூட ட்ரீட் கேட்கும் "வருத்தமில்லா வாலிபர் சங்கம்'.

"முடி வெட்டுனா ட்ரீட், மொட்டை அடிச்சா ட்ரீட், புதுச்சட்டை போட்டா ட்ரீட், புதுச்செருப்பு போட்டா ட்ரீட், பொண்ணு "ஐ லவ் யூ'ன்னாலும் ட்ரீட், "ஐ ஹேட் யூ'ன்னாலும் ட்ரீட், "செல்லமே என் சாமந்தியே'ன்னாலும் ட்ரீட், "செருப்பு பிஞ்ச்சிடும்னாலும்' ட்ரீட், பஸ்ல வித்தவுட் அடிச்சி செக்கர்கள்கிட்ட மாட்டுனாலும் ட்ரீட், செக்கர்களைப் பார்த்ததும், பஸ் பாûஸக் கையில் வைச்சுக்கிட்டே டிக்கெட் எடுக்காததுபோல திபுதிபுன்னு இறங்கி பஸ்ஸ மூணு ரவுண்டு சுத்தி வந்து நிக்கிறப்ப, செக்கர்கள் ஓடி வந்து பிடிச்சிட்டாப்போல நினைச்சுக்கிட்டு "எங்கள்ட்ட தப்பிக்க முடியாதுல்ல...' ன்னு சொல்றப்ப, "நாங்கதான் வைச்சிருக்கோம்ல...கையை எடு ...சும்மா வேண்டுதலு சுத்துனோம்'ன்னு தெனாவட்டா பேசினாலும் ட்ரீட் -இப்படி சில்லறை ட்ரீட்கள் நான்-ஸ்டாப்பா.

இந்த ட்ரீட் விஷயத்தில் "ஆண் என்ன...பெண் என்ன... நீ என்ன...நான் என்ன...எல்லாம் ஓரினம்தான்.'
ஒரே ஒரு வித்தியாசம் ட்ரீட்டில் இடம்பெறும் சாப்பாட்டு ஐட்டங்கள் மட்டும் ஒன்றிரண்டு மாறும்.
என்ன...தண்ணியும், தம்மும்தான். (தண்ணியும், தம்மும் சிலருக்குச் சாப்பாட்டு ஐட்டங்கள்தான்) சதா ஏதோ ஒரு காரணத்திற்காக ட்ரீட் கொடுத்து அசத்திக்கொண்டிருக்கும் ஜென்ட்ஸ் டீம் ஒன்றும், லேடீஸ் டீம் ஒன்றும் நமக்கு சொல்லும் ட்ரீட்-டேட்டா.

ஜென்ட்ஸ் டீம்: கல்லூரி மாணவர்கள் -ஈ.கே.ரமேஷ், சி.எஸ், ராஜேஷ், பி.மகேஷ்.
ஈ.கே.ரமேஷ்: பஸ்ல சீட் கிடைச்சா ட்ரீட், ஒரு நிமிஷம் ஒரு பொண்ணு உத்துப் பாத்தா ட்ரீட்னு ஏகப்பட்ட ட்ரீட் கேட்பாங்க. ஆனா, யாரும் கண்ட விஷயத்துக்கும் ட்ரீட் வைக்கிறதா எனக்குத் தெரியலை.
சி.எஸ்.ராஜேஷ்: எல்லாரும் வைக்கமாட்டாங்க. அதேசமயம், சில பேரு சும்மா ஜாலிக்காக அப்படி ஏதாவது உப்புக்கும் ஆகாத காரணத்தைச் சொல்லிக்கிட்டு ட்ரீட் வைப்பாங்க..
பி.மகேஷ்: டீ குடிக்கப் போறம்னா யாராவது ஒருத்தர் தலையில கட்டணும்ங்கறதுக்காக அப்படி செய்யிறது. மத்தபடி அல்ப விஷயத்துக்காக எல்லாம் நாங்க ட்ரீட் வைக்கமாட்டோம். ஃப்ரெண்ட்ஸ் யாருக்காவது பர்த் டேன்னா...ஏதாவுது முடியாத காரியத்தை செய்தோம்னா நிச்சயம் ட்ரீட் இருக்கும்.
ஈ.கே.ரமேஷ்: ட்ரீட்னா, டிஸ்கோத்தே, தண்ணியெல்லாம் இருக்கும்.
சி.எஸ்.ராஜேஷ்: ட்ரீட்க்குன்னு வீட்டுலயெல்லம் திருடமாட்டோம். வீட்டுல பாக்கெட் மணி கொடுக்குறது வைச்சிருப்போம். ட்ரீட்டுக்கான செலவு 2 ஆயிரம் முதல் மூவாயிரம் வரை ஆகும்.
பி.ரமேஷ்: ட்ரீட்ன்னு சொல்லிட்டு டிஸ்கோத்தே போகுறதனால கெட்டுப் போயிடுவோம்னு சொல்லமுடியாது. கெட்டுப் போகணும்னு நினைச்சா அதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. ட்ரீட்ன்னா சின்னச்சின்ன சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது.
ஈ.கே.ரமேஷ்:ட்ரீட் கொடுக்கிறதுல இருக்கிற ஒரு கருத்து என்ன தெரியுமா? ஏதாவது ஒரு புதுக் காரியத்தை நல்லபடியா செஞ்சி முடிச்சிட்டு ஒரு பையன் ட்ரீட் வைக்கிறான்னா, அதேமாதிரி நாமும் ஏதாவது ஒண்ணு புதுசா செய்யணும்னு தோணும். அதுக்கான முயற்சியிலும் ஈடுபடுவோம். அதுக்குத்தான் ட்ரீட் கொடுக்குறது.
-தத்துவாதிகள்போல பேசிய இந்தப் ஜென்ட்ஸ் டீம் ஸ்பென்சரில் சுற்றிசுற்றி வந்தது பெயர் வைக்காத ஒரு ட்ரீட்டுக்கு.

லேடீஸ் டீம்: கல்லூரி மாணவிகள் -பி.பவ்யா, ஜாஹீரா, மோகனப்ரியா:
பவ்யா: இப்பக்கூட ஜாஹீரா பர்த்டேவுக்குத்தான் காரைக்குடி ஓட்டல் போயி செம கட்டு கட்டிட்டு வர்றோம்.
ஜாஹீரா: வாரத்துல ஏதாவது ஒரு ட்ரீட் கட்டாயம் இருக்கும். இந்த ட்ரீட் நல்லா சாப்பிடுறதுக்குத்தான்.
மோகனப்ரியா:பில் ரேட்டு 500 ரூபாயிலிருந்து ஆயிரம் வரைக்கும் எகிறும். செலவுக்கான காசு எல்லாம் வீட்டிலேயே கொடுப்பாங்க.
பவ்யா: என்னென்ன சாப்பிடணும்னு தோணுதோ... அது எல்லாத்தையும் சாப்பிடுவோம். இதுதான்னு குறிப்பிட்டு சொல்லமுடியாது.
ஜாஹீரா: ட்ரீட் கொடுக்குறப்ப அதிகமாச் சாப்பிடுறதுன்னு பாத்தா நான் இல்லப்பா. வேண்னா நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்.
பவ்யா: இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு. நான்தான் எங்க செட்லேயே அதிகமா சாப்பிடுறது. சாப்பாட்டு விஷயத்துல வஞ்சனையே பார்க்கக்கூடாது.
மோகனப்ரியா: சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் ட்ரீட் கொடுக்குறது ஒண்ணும் தப்பில்லை. சந்தோஷமாக இருப்பதற்கு பல வழிகள் இருக்கு. அதில ஒண்ணுதான் இந்தச் சின்னச்சின்ன ட்ரீட்கள். லேடீஸ் டீமின் ட்ரீட் -டேட்டாவை வாங்கிக்கொண்டு கிளம்பும் நேரத்தில் பவ்யா பொண்ணு பவ்யமாகத்தான் கேட்டது: ""இவ்வளவு நேரம் பேட்டிக் கொடுத்தோம்லே அதுக்கு நீங்க எங்களுக்கு கொடுங்க ட்ரீட்.'' திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடிவந்துவிட்டோம் ஆபிசுக்கு.

Saturday, December 22, 2007

ஒரு 'சில்' சந்திப்பு




"இனி என் எல்லாச் சந்திப்புகளும் சில்லுன்னு ஒரு சந்திப்புதான்'' என்கிறார் நடிகை ஷார்மிளா. விஜய் டி.வி.யில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பு இல்லாத நிலையில் திரைத்துறையில் இருந்து சின்னத்திரைக்குப் பலர் தாவுவது வழக்கம். ஆனால் "இதயதுடிப்பு', "வதம்' உட்பட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிற நிலையிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்துகிறார் ஷார்மிளா. அவருடன் அமைந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு:

வழக்கமான டாக் ஷோ நிகழ்ச்சிகளிலிருந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு' எந்தவிதத்தில் வித்தியாசப்படுகிறது?
இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சாதனையாளர்களையும் அவர்கள் பற்றிய விவரங்களும் எல்லோருக்கும் தெரியும். சாதனையாளர்கள் உருவாவதற்கு ஏணிப்படிகளாய் இருந்தவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? சாதித்த பிறகு எத்தனை பேர் தங்கள் ஏணிப்படிகளை நினைவுகூர்கிறார்கள்? இந்த நிகழ்ச்சி மூலம் ஏணிப்படிகளை நாங்கள் கவுரவிக்க இருக்கிறோம். நடிகர் மாதவன் பேட்டியை ஒளிபரப்புகிறோம் என்றால் அவர் வெற்றிபெறுவதற்கு யார் உறுதுணையாக இருந்தாரோ அவரையும் நிகழ்ச்சியில் வரவழைத்து, எந்தெந்த வகையில் எல்லாம் மாதவன் வெற்றிபெற உதவினார். அவர் பார்வையில் மாதவனின் ப்ளஸ் என்ன? மாதவன் மாற்றிக்கொள்ள வேண்டியது எது என்பதையெல்லாம் அலசுகிறோம்.

சாதனையாளர் என்றால் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமா?
அதுதான் இல்லை. மருத்துவம், பொறியியல் என எல்லாத்துறை சாதனையாளர்களும் இந்த நிகழ்ச்சியில் வருவார்கள். மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.

தொடர்பில்லாத துறைகளைச் சேர்ந்தவர்களோடு கலந்துரையாடுகிறபோது உங்களுக்குச் சிரமமாக இருக்காதா?
சாஃப்ட்வேர் என்ஜினியரிங் படித்துள்ளேன். படிப்பு வாசனையும் எனக்கு உண்டு என்பதால் ஓரளவு எனக்கு அனைத்துத் துறை தொடர்பான விஷயங்களும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தபிறகு, எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறேன். புத்தகத்தைப் படித்தெல்லாம் நிகழ்ச்சியை வழங்குவதால் ஏதோ இறுக்கமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். ஜாலிக்கு ஜாலி... ஜோலிக்கு ஜோலி என்கிற வகையில் இருக்கும்.

இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இதனால் எனக்குப் பொது அறிவு அதிகம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம். இரண்டாவது இயல்பாகப் பழகக்கூடிய ஒரு நடிகையைத் தேடியிருக்கிறார்கள். மூத்த நடிகைகளைப் போடுகிறபோது, வருகிற சாதனையாளர்கள் அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். அதைப்போல நடிகைகளும் அவ்வளவாகச் சாதனையாளர்களோடு இறங்கி பேசமாட்டார்கள். நான் அப்படியில்லை. நடிகை என்கிற பந்தா எனக்குச் சிறிதும் இதுவரை இருந்ததில்லை. இதனாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

வாய்ப்பு இல்லாதபோதுதான் எல்லோரும் சின்னத்திரை பக்கம் வருகிறார்கள். நீங்கள்?
நான் கதாநாயகியாக நடித்த "இதயதுடிப்பு' என்கிற படம் வெளியாக உள்ளது. "வதம்' உட்பட நாலைந்து படங்களில் தமிழில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வரவில்லை. சீரியலுக்கு நடிக்க வந்தால்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். சங்கீதா, கனிஹா போன்றோர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டே சினிமாவில் நடிக்கவில்லையா? அதைப்போல்தான் நானும் வந்துள்ளேன். இன்னொரு வகையில் சினிமாவில் நடிப்பது என்பது கிணற்றுத் தவளை வேலை போல. இந்நிகழ்ச்சியை வழங்குகிறபோது உலக அறிவு நமக்குக் கிடைக்கிறது. இது எனக்குப் பிடித்திருக்கிறது.

சீரியலில் நடிக்கவே மாட்டீர்களா?
க்ளிசரினுக்கு வேலை இல்லாத நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதுவும் இப்போது இல்லை. பெரிய திரையில் ஒரு வலம் வந்துவிட்ட பிறகுதான். நடிப்புக்கு அடுத்ததாக எழுத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆங்கில கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். "திசை' என்கிற ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதினேன். அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன். நடிப்பிற்கு பிறகு கதை வசனம் எழுதி நானே படங்களை இயக்குவேன். இதுதான் என்னுடைய அடுத்த இலக்காக இருக்கும்.

அப்போதாவது க்ளிசரினுக்கு வேலை இல்லாத சீரியல்கள் எடுப்பீர்களா?
மெகா சீரியல்கள் என்னால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுகிறேன். மூன்று நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை எடுக்கக்கூடிய தகுதி மட்டும்தான் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன்.

உங்கள் ஏணிப்படி யார்?
என் அப்பா. என் அம்மாவுக்குக்கூட என்னைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். என் அப்பாவுக்குதான் என்னைப் பற்றி எல்லாம் தெரியும். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் என் அப்பாவே.

பணக்காரருக்காக அழுத அயலான்!


கொட்டாவி விரட்டும் மிட்டாய்கள்.

ஒரு பெண்மணி, யாருமில்லாத மாதாகோயிலில் தன் கைகளால் தலையைத் தாங்கியவாறே உட்கார்ந்திருந்ததைப் பாதிரியார் பார்த்தார்.
ஒரு மணி நேரம் - இரண்டு மணிநேரம் கழிந்ததும் அவள் அப்படியே இருந்தாள்.
அவள் ஏதோ துன்பத்திலிருப்பதாக எண்ணி, அவளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவளிடம், "நான் ஏதாவது உதவி செய்யக்கூடுமா'' என்று கேட்டார்.
"வேண்டாம் நன்றி! எனக்குத் தேவையான உதவியெல்லாம் நீங்கள் வரும் வரை கிடைத்து வந்தது'' என்றாள்.
****

பேருந்தில் ஏறிய கணேசன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவனைப் பார்த்தான். அவன் ஒரு காலில் மட்டும் செருப்புப் போட்டிருந்தான்.
"ஒரு கால் செருப்பைத் தொலைத்து விட்டாயோ?'' என்று கேட்டான் கணேசன்.
"இல்லை... இல்லை... எனக்கு ஒரு செருப்புதான் கிடைத்து'' என்றான் அவன்.

****

நெடுநேர வாக்குவாதத்திற்குப் பிறகு கணவன் மனைவியைப் பார்த்து "நாம் ஏன் நம் இரண்டு நாய்கள் போல சண்டை போடாமல் சமாதானமாக வாழக்கூடாது'' என்று கேட்டான்.
அவன் மனைவி, "உண்மைதான். இரண்டையும் கட்டிப்போடுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்'' என்றாள்.

****

பணக்காரர் ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறும்போது அயலான் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். பாதிரியார் அவனை நெருங்கி, "நீங்கள் அவருக்கு உறவினரா?'' என்று கேட்டார்."இல்லை" என்றான்."பின் ஏன் அழுகிறீர்?'' என்றார்."உறவினராக இல்லையே என்றுதான் அழுகிறேன்'' என்றான்.
****

மாடலிங் செய்வது சிரமமான வேலையா?



பஞ்சாப் நதியோரத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது இந்த அழகுக்கிளி. இதன் பெயர் ப்ரீத்தி புதானி. இவர் தன் தேவதை இறக்கையை விரித்து பறந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து "வுட்'களிலும் கூடு கட்டியிருக்கிறார். சில கேள்விகளை அவரிடம் எறிந்தோம்... உதிர்ந்த கனிகள்:


உங்கள் குடும்பம்?


அப்பா ஏர்போர்ஸில் இருக்கிறார். அம்மா டீச்சர். அப்பாவும் அம்மாவும் ரொம்பக் கண்டிப்பானவர்கள். சினிமா என்றாலே வெறுக்கக்கூடிய குடும்பம்தான். படிக்கிற காலத்தில் எனக்கும் சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற எண்ணங்கள் எல்லாம் இருந்ததில்லை. வணிகவியல் துறையில் படித்து பெரியாளாக வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.


பின் எப்படிச் சினிமா பக்கம் வந்தீர்கள்?


நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற எந்தக் கலைநிகழ்ச்சியும் நான் இல்லாமல் நடந்ததில்லை. டெல்லியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேடை நாடகங்ளில் எல்லாம் நடித்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்து மாடலிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. படித்துக் கொண்டே மாடலிங் செய்து கொண்டிருந்தேன். சினிமாவை வெறுத்த எனது குடும்பத்தார் மாடலிங்கில் எனக்குக் கிடைத்த பாராட்டைப் பார்த்து என்னை ஊக்கப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதன் பிறகு மும்பை வந்தேன்.
அங்கு தனுஷா சந்திராவின் இரண்டு குறும்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தக் குறும்படங்கள்தான் நடிப்பில் நான் அதிகம் ஈடுபட உந்துதலைக் கொடுத்தது என்று சொல்லலாம். இதற்கிடையில் பிரபல கதக் கலைஞரான சித்ரா தேவியின் மகள் ஜெயந்தி மாலாவிடம் கதக் நடனத்தை முறையாகக் கற்றுக்கொண்டேன். இந்தக் காலகட்டத்தில் சரத் கபூரின் "ஜானி துஷ்மன்' படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்ததற்கு மிகப் பெரியளவில் பாராட்டு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்தன.



மாடலிங் செய்வது சிரமமான வேலையா? சினிமாவில் நடிப்பது சிரமமான வேலையா?
இரண்டு வேலையுமே சிரமமானதுதான். கிடைக்கிற பாராட்டுகளில்தான் இரண்டும் வேறுபடும். ஆனால் ஒன்று, மாடலிங்கில் எப்போதும் அழகாய் வரவேண்டும். சினிமாவில் அழகு ஓர் அம்சம் மட்டும்தான்.
தற்போது என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ராஜ்பால் யாதவின் "லேடீஸ் டெய்லர்' என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் ஃப்ளோரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய கதாபாத்திரம் இது. இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைப்
பெற்று தரும் என்று நம்புகிறேன். இதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. தமிழில் கஸ்தூரி ராஜாவின் "இது காதல் வரும் பருவம்' படத்திலும், அர்ஜுனுடன் "மருதமலை' படத்திலும் நடித்திருக்கிறேன்.



மருதமலைக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லையா? கோலிவுட் உங்களை மறந்துவிட்டதா? அல்லது கோலிவுட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
இரண்டுமே இல்லை. நல்ல கதாபாத்திரத்திற்காகக் காத்திருக்கிறேன்.



எல்லா மொழி படங்களிலும் நடிக்கிறீர்களே? உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
எனக்கு ஆங்கிலமும், பஞ்சாபியும்தான் தெரியும். வேறு எந்த மொழியும் தெரியாது. எந்த மொழிப் படங்களிலும் நடிப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது. நடிப்புத் திறமை இருந்தால் எந்த மொழிப் படங்களிலும் சாதிக்கலாம்.


எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய்மொழியான பஞ்சாபி மொழியில் ஒரு படம் கூட நடிக்கவில்லை போலிருக்கிறதே?
அதைப் பற்றி இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை. அப்படி நடிக்கக்கூடிய வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.



உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்?
கமல். அடுத்து அஜீத், சூர்யா. அப்கோர்ஸ் நான் முதலில் அர்ஜுனுடன் நடித்திருக்கிறேன். அவரை பிடிக்காமல் போகுமா?



கோலிவுட் படங்களில் நடிப்பதற்கும் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
கோலிவுட்டைச் சேர்ந்தவர் தொழிலை பயபக்தியாகச் செய்கிறார்கள். நேரத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை பாலிவுட்டில் எதிர்பார்க்க முடியாது.



சினிமாவைத் தவிர்த்து வேறு எதில் ஆர்வம்?
எல்லாவற்றிலும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஓவியம் வரைவேன். பாட்டுப் பாடுவேன். புத்தகங்கள் படிப்பேன்.



காதல் கதவு திறந்துகொண்டதா? உங்கள் பாய் ஃபிரண்ட் யார்?
இதுவரை யாரும் என்னைச் சலனப்படுத்தவில்லை. தற்போது என்னுடைய பாய் ஃபிரண்ட் என்னுடைய தொழில்தான்.

சிங் சாங் சூ-வின் சிறப்பு பேட்டி!



கன்னிமாரா நூலக அலமாரிகளிடையே கண்டோம் படத்தில் நீங்கள் காணும் சிங் சாங் சூவை! காதல் கவிதைத் தொகுப்புகளாகத் தேடிக்கொண்டிருந்தது அந்தக் கவிதை!

ஓட்டைஉடைசலுடன் கூடிய காதல் கவிதைத் தொகுப்புகளையும் தேடித்தேடி ஒரு சைனீஸ் பொண்ணு படிக்கக் காரணம்?

நம்மூர் பசங்க போட்ட தூண்டிலில் சிக்கிக்கொண்டதா?

நெருங்கிப் போய் பார்த்தால் காட்சிப்பிழை! அது சைனீஸ் பொண்ணு இல்லை. விஜய் டிவியில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கவிதாதான் அந்த அழகு கவிதை!

"பிறகு ஏன் சிங் சாங் சூ-வா?'

பார்ப்பதற்கு சைனீஸ் மாதிரியே இருப்பதால் கவிதாவை அவர்கள் வீட்டிலேயே "சிங் சாங் சூ' என்றுதான் அழைப்பார்களாம்.


"காதல் தொகுப்பாகப் படிக்கக் காரணம்? காதல்... கீதல்?''
"இல்லை... இல்லை... எல்லா வகையான புத்தகமும் படிப்பேன். இப்போது கொஞ்சம் காதல் கவிதைத் தொகுப்புகளாகத் தேடிப் படிக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக "மோதல்... காதல்...சாதல்' என்றெல்லாம் அர்த்தமில்லை.'' எனும் "கவி'தாவுடனான உரையாடல்!

"கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு முன்பிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா?
புத்தகம்தான் எனக்கு எல்லாமே! எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன். பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம், கன்னிமாரா நூலகம் இந்த இரண்டிலும்தான் பெரும்பாலும் இருப்பேன். புத்தகம் படிக்கிறபோது கிடைக்கிற அமைதியைவிட நூலகங்களில் நிலவும் அமைதியை நான் இன்னும் விரும்பி ரசிக்கிறேன். இதுபோன்ற அமைதியை வேறு எங்கும் பெறமுடியாது. இந்தக் காரணத்திற்காகவும் நான் நூலகம் சென்று படிக்கிறேன்.

உங்கள் குடும்பம்?
சொந்தவூர் ஊட்டி. இப்போது இருப்பது சென்னை. அப்பா டி.எஸ்.பி. அம்மா. ஒரு அண்ணன்.
கொளுத்தும் சென்னை வெயிலில் ஊட்டியிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா?
அப்படியெல்லாம் இல்லை. எல்லா இடங்களையுமே நான் ரசிக்கிறேன். ஊர் சுற்றுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சும்மாவாகவே ரயிலில் ஏறி பீச் டூ தாம்பரம் வரை போய் வருவேன். ஒரு காரணமும் இருக்காது. காலியான பெட்டியாக இருந்தால் இன்னும் கூடுதல் சந்தோஷம். இதேபோல வெளி மாநிலங்களுக்கும் போவதுண்டு. போகிறபோது வெறுமனே அந்த இடத்தின் அழகை மட்டும் ரசித்துப் பார்த்துவிட்டு வருபவள் இல்லை நான். அந்தப் பகுதி மக்களுடைய வாழ்க்கை முறை, கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்துகொள்வதுடன் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதேபோல கொஞ்ச நாள்கள் வாழ்ந்து பார்த்துவிட்டுதான் வருவேன். உடுத்துகிற உடை, உண்ணுகிற உணவு என எல்லாமே அவர்கள்போல பழகிப் பார்த்துவிட்டு வருவது மனதுக்கு பெரிய திருப்தி. விரைவில் சிம்லா செல்ல இருக்கிறேன்.

படிக்கிற காலத்திலிருந்து இந்தத் துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா?
திருச்சி பாரதிதாசன் யுனிவர்சிட்டியில பி.பி.ஏ முடித்தேன். முதல் வருஷம் யுனிவர்சிட்டிக்குப் போனேனான்னு எனக்கே சந்தேகமாக இருக்கு. அந்தளவுக்கு கல்ச்சுரல் ப்ரோகிராம் அதுஇதுன்னு சுற்றிக்கொண்டு இருந்தேன். டான்ஸ் பிரமாதமாகப் பண்ணுவேன். என்னுடைய டான்ஸ்க்குன்னே யுனிவர்சிட்டியில ஃபேன்ஸ் நிறைய பேர் இருந்தார்கள். பிரத்யேகமாக டான்ஸ் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. சின்ன வயதில் பரதமும், கர்நாடக சங்கீதமும் கொஞ்ச நாள்கள் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர முடியவில்லை. அப்பாவுடைய வேலை காரணமாக இடம் மாறி இடம் மாறி போக வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் எல்லாம் டிவிக்குப் போகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருக்கவில்லை. போகப்போகத்தான் ஆர்வம் வந்தது.

உங்களுடைய அப்பாபோல காவல்துறை பக்கம் செல்லாமல் தொகுப்பாளினியாக வந்தது ஏன்?
காவல்துறை பக்கம் பெண் வரவேண்டாமே என்று பெற்றோர்கள் கருதியிருக்கலாம். இதனால் காவல்துறை பக்கம் எனக்கு நாட்டத்தை ஏற்படுத்தாமல் அவர்கள் விட்டிருக்கலாம். காவல்துறை பக்கம் போகலாமா? வேண்டாமா? என்பது பற்றி நானும் யோசித்துப் பார்த்தது இல்லை. ஆனால் அம்மா மட்டும் எப்போதாவது சொல்வார்கள். உங்க அப்பா உனக்கு சல்யூட் அடிக்கிறளவுக்கு வளரணும் என்று சொல்லுவார்கள். அதேபோல வேறொரு துறையையும் குறிப்பிட்டு இந்தத் துறைக்குத்தான் போகணும் என்றும் அவர்கள் என்னை வலியுறுத்தியதில்லை. உன் விருப்பம் எதுவோ அதில் சிறப்பாகச் செயல்படு என்று மட்டும்தான் அடிக்கடிச் சொல்வார்கள். எனக்கு இந்தத் துறை பிடித்து இருந்தது. அதனால் வந்தேன்.


கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஆனது எப்படி?
தொகுப்பாளினியாக ஆவது என்று முடிவு எடுத்த பிறகு எந்த டிவிக்குப் போக வேண்டும் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. போனால் விஜய் டிவிக்குத்தான் போக வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். என் நண்பர்கள் சிலர் வேறு தொலைக்காட்சிகளுக்குத் தொகுப்பாளினியாகப் போன நிலையிலும் நான் காத்திருந்தேன். இந்தச் சமயத்தில்தான் கடந்த ஒன்றரை வருஷத்துக்கு முன்பு "ரெடி ஜூட்'ன்னு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி. திடீரென ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக வேண்டும். அங்கு நடித்துக்கொண்டிருக்கிற ஒரு நடிகரை எப்படியாவது கன்வின்ஸ் செய்து மொரிஷியஸ் தீவுக்கு அழைத்துச் செல்லவேண்டும். இதில் என்னவென்றால் தயாரிப்பாளரிடமோ நடிகரிடமோ முன் அனுமதியெல்லாம் பெற்றிருக்கமாட்டார்கள். நாமேதான் எல்லாமும் செய்ய வேண்டும். எல்லாம் இரண்டு மணி நேரத்திற்குள். கன்வின்ஸ் செய்கிறவர் ஏர்போர்ட் வரைதான் செல்வார்கள். அழைத்துப் போகும் வி.ஜ.பிதான் ஒரு வாரம் மொரிஷியஸில் தங்கி வருவார்கள். என்னைப்போல மூன்று பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எனக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதன்பிறகு ஐ.க்யூ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இந்த ப்ரோகிராம் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம் போல என்பதால் எனக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை. ஜாலியாகப் போனது. இதனையடுத்துதான் "கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நூலகத்திற்கு வேறு தினமும் போறீங்க... இதுக்குப் பின்னால "கிராண்ட் மாஸ்டர்' ஆகணும்ங்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது உண்மைதானே?
அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவர் மேதாவி. அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. நான் என்ன சும்மா... அவரோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதையே பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எப்போதும் புதுப்புது தகவல்களை, கருத்துகளை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்.

இப்படி "பிளேடு' போடுறாரேன்னு வெறுத்து ஓடியதுண்டா?
அப்படிப் பேசக்கூடியவர் அல்ல அவர். எந்த விஷயத்தையும் நகைச்சுவையுடன் சொல்லக்கூடியவர்.

மொழிகளின் காதலி என்று உங்களைச் சொல்கிறார்களே?
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்ச் தெரியும். இத்தனை மொழிகள் எனக்கு தெரிவதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பா அடிக்கடி இடம்மாறி பணியாற்றியதுதான்.

விதவிதமான சேலை கட்டுவதுடன், கட்டுகிற முறையிலும் விதவிதமாக கட்டி வந்து நிகழ்ச்சியில் கலக்குகிறீர்களே? உங்களுக்கு உண்மையிலேயே சேலை கட்ட ஆசை உண்டா?
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வித வாசனை உண்டு என்பது உண்மை. சேலை கட்டும்போது பெண்மையின் இன்னொரு வடிவமாக பெண்கள் மாறுகிறார்கள் என்பது என் கருத்து. விதவிதமான ஸ்டைலில் சேலையை யாரும் கட்டுவதில்லை. ஒன்றிரண்டு முறைகளில் கட்டுவார்கள். நாங்கள் புதுப்புது ஸ்டைலை அறிமுகப்படுத்துகிறோம். இதற்கான ஐடியாவை எங்கள் டிசைனர் செய்வார். சில நேரங்களில் நான் செய்வதும் உண்டு.

கவர்ச்சிக்காக பெண்களைத் தொகுப்பாளினியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே?
அழகு எங்கிருந்தாலும் அதனை ஆராதனை செய்யவேண்டும். மென்மையும் அழகும் சேர்ந்தது பெண்மை. இதனால்தான் பெண்களை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதில் தவறெதுவும் இல்லை.

சினிமாவுக்குப் போகிற எண்ணம் உண்டா?
சினிமா பக்கம் போகமாட்டேன். இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான். மாடலிங் வேண்டுமானால் செய்வேன். ஒரு சில விளம்பரங்களுக்கு மாடலிங்கும் செய்திருக்கிறேன்.

உங்கள் ரோல்மாடல்?
இந்த மீடியாவுக்கு, நான் "நியூ பார்ன் பேபி'. எனக்கு ரோல்மாடல் என்று யாரும் இல்லை. செய்வதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதைத்தான் கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறேன்.

Friday, December 21, 2007

பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சையா?


இலங்கை விமானப்படை கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காயம் அடைந்ததாக இலங்கை அரசு கூறியுள்ளது.
பிரபாகரன் பதுங்கு குழிக்குள் இருந்தபோது இந்த தாக்குதலால் காயம் அடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், பிரபாகரன் வசித்து வரும் இடம் பற்றி, விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடலி எழுதிய புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
'தி வில் டூ ப்ரீடம்' என்ற அந்த புத்தகத்தில் அடலி எழுதி இருப்பதாவது :
இலங்கையின் வடபகுதியில் அலம்பில் பகுதியில் உள்ள காட்டுக்குள் ஒரு பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார். அவரது வீடாகவும், அலுவலகமாகவும் அது இருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் பாறைகளை குடைந்து இந்த பாதாள அறை உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பாதாள அறைக்கு விடுதலைப்புலிகள் என்னை அழைத்துச் சென்றனர். படிகளில் இறங்கி கீழே சென்றோம். 40 அடி ஆழத்தில் நிறைய அறைகள் கட்டப்பட்டு இருந்தன. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. பாதாள சுரங்கமாக காட்சி அளித்தது. நடமாடுவதற்கு ஏற்ற வகையில் எங்கள் அறை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
எங்களை அறையை விட, பிரபாகரன் அறை இன்னும் ஆழத்தில் இருந்தது. அது கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இருந்தது. கான்கிரீட்டை விட வலிமையாக இருந்தது. பாதாள அறைக்கு மேலே தாழ்வான கூரை அமைக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் வழிந்து ஓடுவதற்காக கால்வாய் வெட்டப்பட்டு இருந்தது. அதனால்தான், பாதாள அறைக்குள் மழை நீர் பாயாமல் வழிந்தோடியது.கனமழையை தாங்கும் வகையில் பாதாள அறை கட்டப்பட்டு இருந்தது. அதனால்தான் காட்டின் மற்ற பகுதிகள், மழையால் சேறும் சகதியுமாக காட்சி அளித்தபோது கூட, பாதாள அறை பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.சூரிய வெப்பம் தாக்காத அளவுக்கு ஆழத்தில் இருந்ததால், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருந்தது. குளிரில் நான் நடுங்கியபடி இருந்தேன். எப்படி தாங்கப் போகிறேனோ என்று நினைத்தேன். ஆனால் நல்லபடியாக எந்த பாதிப்பும் இன்றி சமாளித்து விட்டேன்.
இவ்வாறு அடலி கூறியுள்ளார்.
இந்த பாதாள அறைக்குள் இருக்கும்போது விமான குண்டு வீச்சில் பிரபாகரன் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று ராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், தனது இயக்கத்தினரை சந்திப்பதற்காகவோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவோ அவர் பாதாள அறையை விட்டு வெளியே வந்தால், குண்டு வீச்சில் அவர் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் 'தி டெய்லி நியூஸ்' பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி :
கிளிநொச்சியில் உள்ள ஜெயந்தி நகரில் நவம்பர் 26-ம் தேதி மாலை 5.25 மணிக்கு இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.அப்போது பிரபாகரனுக்கு பாதுகாப்பாக உடன் இருந்த 200 பேரில் 116 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதலில் காயம் அடைந்து உள்ளே சிக்கிக் கொண்ட பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அங்கே குவிந்து கிடந்த இடிபாடுகளை விடுதலைப்புலிகள் உடனடியாக அகற்றினர்.நீரிழிவு நோயாளியான பிரபாகரனின் நிலைமை, காயம் ஏற்பட்டதை அடுத்து தற்போது மேலும் மோசமாகிவிட்டது.
சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வது எப்படி என்பதை விடுதலைப்புலிகள் ஆராய்ந்து வருகின்றனர்.பிரபாகரனுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு பிரபாகரனை கொண்டு செல்ல புலிகள் முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
ஆனால், இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் மறுத்து வருகிறார்கள்.

அமெரிக்கா மீது புதின் சாடல்!


அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகைக்கு ரஷிய அதிபர் புதின் மனம் திறந்து அளித்த பேட்டி :

இராக் போன்ற சிறிய நாட்டை தாக்கி அழித்தது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மோசமாக இருக்கின்றன. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா தனது படைகளை இராக்கிலிருந்து திரும்பப் பெறுவதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

மாறி வரும் உலக சூழ்நிலையில் ரஷியா, அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். சர்வதேசப் பிரச்சினைகளில் தனது திட்டங்களை மற்ற நாடுகள் மீது அமெரிக்கா திணித்தால் அதற்கு நிச்சயம் எதிர்ப்பு இருக்கும். ரஷியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. அதேபோல அமெரிக்காவின் உதவி ரஷியாவுக்குத் தேவைப்படுகிறது. உலக நாடுகளில் பெரும் மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழ்ந்து வருகின்றன. அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் நிகழும். இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலுவடைந்து வருவதால், புதிய அரசியல் செல்வாக்கு மையங்கள் உருவாகும்.

'மற்ற நாடுகள் வலுப்பெற்று வருவது நல்லதா கெட்டதா என்று நான் சொல்ல விரும்பவில்லை. எதிர்கால உலகம் வித்தியாசமாக இருக்கும். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் ரஷியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த உண்மையை உணர்ந்து செயல்படும் இரு நாடுகளின் தலைவர்களும் வெற்றி பெறுவார்கள், மதிக்கப்படுவார்கள்' .

வெற்றிகரமாக இருப்பதற்கு மற்றவர்களுடன் பேச்சு நடத்தி சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. சமரசம் செய்து கொள்வது, ராஜதந்திரம் மட்டுமல்லாமல், மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் இருக்கும்.
'நேட்டோ' (வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்) அமைப்பானது, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் நடந்த மறைமுகப் போரினால் செத்த பிணமாகக் காட்சியளிக்கிறது என்றார் அவர்.

அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை, யார் அதிபராக வந்தாலும், ரஷியா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் நல்ல ஒத்துழைப்புடன் செயல்படுவர் என்று பதில் அளித்தார் புதின்.

அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் நிறுத்தி விட்டது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ரஷியாவின் நிலைப்பாட்டை இது நியாயப்படுத்துகிறது என்றார் அவர்.

நாம் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் அமெரிக்க நிர்வாகத்திலும் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை சமாளிக்க ஈரான் தன்னை தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்க ஈரானை திசைத் திருப்புவதற்காக இதுபோல சிஐஏ அறிவித்திருந்தால், அது மிகவும் ஆபத்தானதாக முடியும். ஏனெனில் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரிய தவறாகிவிடும் என்றார் புதின்.

கவர்ச்சி 'கண்ணா' க்கள்..!


"ஆடை கூட பாரம்' எனச் சொல்லும் இந்தி கவர்ச்சி நடிகைகள் மேக்னா நாயுடு, ராக்கி சாவந்த். பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் விரும்பி அணியும் ஆடைகள்கூட, பிறரை வெட்கப்பட வைக்கும் ஆடைகள்தான். இதனால்தானோ என்னவோ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த்துக்கு பிரபல பஞ்சாபி பாடகர் தலேர் மெகந்தியின் தம்பி மைகா "இறுக்கிப் பிடிச்சு உம்மா கொடுக்க', காவல் நிலையம் வரை போயிருக்கிறது, இந்தப் பஞ்சாயத்து. இந்நிலையில் இவர்கள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிராக நூதனப் போராட்டம் நடத்தியிருக்கிறது உத்திரபிரதேச மாநிலம் காசியைச் சேர்ந்த ஓர் இளைஞர் அமைப்பு. என்ன போராட்டம் தெரியுமா?
"மேக்னா நாயுடுவுக்கும், ராக்கி சாவந்துக்கும் கட்டிக்க சேலை இல்லையாம். நீங்க கொடுக்க விருப்பப்பட்டா இலவசமாக கொடுங்க'ன்னு காசி நகரில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியிருக்கிறார்கள். நடிகைக்குக் கேட்டால் கொடுக்காமல் இருப்பார்களா நம்முடைய கொடை வள்ளல்கள்? நிறைய புடவைகள் கிடைத்திருக்கின்றன. இந்தச் சேலைகளை இரு நடிகைகளுக்கும் கூரியரில் பட்டுவாடா செய்திருக்கிறது அந்த இளைஞர் பட்டாளம்.'

-இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. இதைப் படித்து சிரிக்கும் ஆண்களுக்கு இன்னொரு கேள்வியும் எழும். நடிகைகள் மட்டும்தான் கவர்ச்சி ஆடைகள் அணிகிறார்களா? காலேஜ் கேர்ள்ஸ் தொடங்கி எல்லா டீன்ஏஜ் பெண்களும்தான் கவர்ச்சி ஆடைகள் அணிகிறார்கள் என்று சொல்லக்கூடும். ஆனால் சில பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கேட்டால் ஓடிவிடுவீர்கள்! "லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற உடைகளைப் போட்டு ஆண்கள்தான் கவர்ச்சி காட்டுகிறார்கள்! என்கிறார்கள்.
"ஏன்டியம்மா இப்படி அநியாயத்துக்கு பொய் சொல்லுறீங்களே...'என்று பல ஆண்கள் கதறும் சத்தம் நன்றாகவே நம் காதில் விழுகிறது. சில பெண்களின் மனக்குரலைக் கேட்போம். ஏற்பு குரலும் உண்டு; மறுப்பு குரலும் உண்டு.

ரபிகா

"இப்ப பெரும்பாலான ஜென்ட்ஸ் செக்ஸியாதான் டிரஸ் பண்ணுறாங்க. ஆனா, சொசைட்டியில ஏதோ பெண்கள் மட்டும்தான் செக்ஸியா டிரஸ் பண்ணுறதுபோல ஒரு மாயை இருக்கு. செக்ஸியா ஜென்ட்ஸ் டிரஸ் பண்ணுறத பத்தி எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. அவுங்களுக்குப் பிடிச்ச டிரûஸ அவுங்க போட்டுக்கிறாங்க. எங்களுக்குப் பிடிச்ச டிரûஸ நாங்க போட்டுக்கிறோம். இதுல ஏதோ பெண்கள் போடுற டிரஸôலத்தான் சமுதாயமே கெட்டுப் போகுறது போல பாக்குறதுதான் பெரிய தப்பு. நடிகர்கள்ல செக்ஸியா டிரஸ் போடுறதுன்னா சல்மான்கான்தான். செக்ஸியா டிரஸ் போடுறாருன்னு கூட சொல்றது தப்பு. அவரு சட்டையே போடுறதில்லை. எனக்கு ஜென்ட்ஸ் டிரஸ் எப்படிப் போட்டா பிடிக்கும்னு கேட்டா, அந்தந்த நேரத்துக்கு காலத்துக்கு தகுந்தாற்போல நீட்டா சுத்தமா டிரஸ் போட்டாதான் பிடிக்கும்.''
தீபா

"செக்ஸியா ஜென்ட்ஸ் டிரஸ் போடுறாங்கன்னு சொல்லுறத நான் ஒத்துக்கவே மாட்டேன். அது பாக்குறவங்களோட கோளாறு. அதேசமயம் லேடீஸ் செக்ஸியா டிரஸ் போடுறாங்கன்னு சொல்லுங்க, அதுல எனக்கு நூறு சதவீதம் சம்மதம். நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு அதுபடித்தான் நடக்கணும். அதவிட்டுட்டு கண்டபடி டிரஸ் போடுறது தப்பு. லேடீஸ் செக்ஸியாக டிரஸ் பண்ணுறாங்கன்னு சொல்லுறதால ஜீன்ஸ் பேண்ட்டை போட்டாலே செக்ஸியா டிரஸ் பண்ணுறாங்கன்னு அர்த்தம் இல்லை. புடவையைவிட பெண்களுக்கு பேன்ட் சர்ட்தான் கூடுதல் பாதுகாப்புங்கிறது என் கருத்து. ஸ்லீவ் லெஸ், சார்ட்ஸ், உடம்பு முழுக்க தெரியிற மாதிரி டிரஸ் பண்ணுறதுதான் செக்ஸியான டிரஸ். நடிகர்கள்ல டிரஸ் ஒழுங்கா பண்ணுறதுன்னா அது விஜய்தான்.''

ஹபிப்

""லேடீஸவிட ஜென்ட்ஸ்தான் செக்ஸியா டிரஸ் பண்ணுறாங்கனு சொல்லுறதுல எனக்கு முழு சம்மதம். லோ ஹிப் சர்ட், பேன்ட், உடம்பு முழுசா தெரியிற மாதிரி பனியன் போட்டுக்கிட்டு சுத்துறாங்க. பெண்கள் மட்டும்தான் செக்ஸியா டிரஸ் போட்டுக்கிட்டு சுத்துறாங்க என்பதை நான் ஒத்துக்கமாட்டேன். புடவை கட்டிக்கிட்டு இருந்தா மட்டும்தான் குடும்பப் பாங்கான பொண்ணுங்க என்பதெல்லாம் இல்லை. புடவையிலதான் உடம்பு முழுக்கத் தெரியும். பேன்ட் சர்ட் போட்டா ஒண்ணுமே தெரியாது. ஆனா, ஜென்ட்ஸ் பார்வையில பேண்ட், சர்ட் போட்டுப் போனாலே கவர்ச்சியா டிரஸ் பண்ணுறதா தோணுனா நாங்க அதுக்குப் பொறுப்பாக முடியாது. உண்மையா பார்த்தீங்கன்னா ஜென்ட்ஸ்தான் மேல்சட்டையே போடாம சுத்துறாங்க. ஆனா நாங்க கவர்ச்சியா டிரஸ் போடுறதா சொல்லுறாங்க. இதை எப்படி ஏத்துக்க முடியும்?''

பெண்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆண்கள் சார்பாக கல்லூரி மாணவர் தீபக்:
"ஆரம்பத்திலிருந்து ஜென்ட்ஸ் எப்படி டிரஸ் போட்டிருந்தாங்களோ அப்படித்தான் இப்பவும் டிரஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்பதான் ஜென்ட்ஸ் மேல் சட்டையே போடாம இருக்காங்களா? ஆனால் பெண்கள் அப்படியில்லை. புடவையில் வந்த பெண்கள் எல்லாம் இப்ப பேருக்கு டிரஸ் போட்டுக்கிட்டு வெளியில் வருகிறார்கள். ஏதோ அழகா டிரஸ் பண்ணுறதா நினைச்சுக்கிட்டு அநாகரிகமா டிரஸ் பண்ணுறாங்க. இதுதான் தப்புன்னு சொல்றோம். திரைப்படங்களில் கவர்ச்சியா டிரஸ் பண்ணுறப்ப சமுதாயத்தில் ஏற்படுகிற விளைவுகளைவிட, செக்ஸியா டிரஸ் பண்ணிக்கிட்டு ரோட்டுல பெண்கள் நடந்து வருவதால் ஏற்படுகிற விளைவுகள் அதிகம்தான்.''

-கவர்ச்சியாக ஆண்கள் ஆடை அணிகிறார்கள் என்ற பெண்களின் குற்றசாட்டு உலகம் முழுவதும் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவ்வப்போது பெண்கள் திறந்த மார்பகத்தோடு வந்து போராட்டம் நடத்துவார்கள். அவர்களிடம் காவல்துறையினர் இப்படியெல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினால், "ஏன் ஆண்கள் மட்டும் மேலாடை போடாமல் வரலாமா?'' என்று கேட்பார்கள். அதுபோல இங்கும் குரல் எழுப்பாமல் இருந்தால் சரி!

Thursday, December 20, 2007

லைட்டுகளை நசுக்க சிறப்பு பாதுகாப்பு படை!


!
ஆடுபுலி-ஆட்டம்

ஆடுபுலி(செய்தி): நீதி விசாரணைக்குத் தயார்: திமுகவுக்கு ராமதாஸ் பதில்.
ஆட்டம்(ஹி...ஹி): நாம பாக்காத நீதி விசாரணையா தலைவரே!

ஆடுபுலி(செய்தி): நகஸ்லைட்டுகளை நசுக்க சிறப்புப் பாதுகாப்பு படை-பிரதமர் மன்மோகன்சிங்.
ஆட்டம் (ஹி...ஹி): லைட்டுகளை நசுக்க என்று தப்பா வந்துடுச்சா?

ஆடுபுலி(செய்தி): திமுக அரசுக்கு ஆலோசனை தொடரும் - ராமதாஸ்.
ஆட்டம்(ஹி..ஹி): அப்ப விடுற மாதிரி இல்லையா... இப்பவே கண்ண கட்டுதே.

என்னத்தைக் கிழித்துவிட்டார் விஜயகாந்த்?



சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர்த்து காங்கிரசுடன் தேமுதிகவும் சேர்ந்து 3-வது அணி உருவானால் அது பெரும்பான்மையான மக்களின் பேராதரவைப் பெறும் என்று தெரியவந்துள்ளதாம்.
அதைப்போல விஜயகாந்த் கட்சி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 47.9 சதவிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனராம்.
இந்த ஆய்வை எத்தனை பேரிடம் நடத்தியிருக்கிறார்கள் தெரியுமா?

பல்வேறு கிராமங்கள், நகரங்களில் 3,281 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு? 10 கோடியை நெருங்குகிற நிலையில் இருக்கிறது. இதில் ஒரு தெருவில் இருக்கிற ஜனத்தொகை அளவில் கருத்துக்கணிப்பை நடத்திவிட்டு விஜயகாந்திற்குச் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றே எடுத்துக் கொள்வோம். கருத்துக் கணிப்பு நடத்திய நபர்கள் சந்தித்த பெரும்பாலானோர் விஜயகாந்த் கட்சியாகவே இருந்துவிட்டால்? விஜயகாந்த் ஜெயிக்கத்தானே செய்வார்.

அரசியலில் இருக்கிற நடிகர்களில் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் பேர் விஜயகாந்த் நல்லவர் வல்லவர் என்று சொல்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

அப்படி இருப்பதற்கான காரணம் என்ன? விஜயகாந்தை நல்லவர் வல்லவர் என்று சொல்வதற்கு காரணம் என்ன?

விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பாக எந்தப் பிரச்சினைக்காக தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியிருக்கிறார் சொல்லுங்கள்?
சரி... கட்சி தொடங்கிய பிறகு மட்டும்தான் புதிதாக என்ன சாதித்துவிட்டார்?
ஒரே குட்டையில் ஊறின மட்டைபோல வழக்கமாக அரசியல்வாதிகள் விடும் விதண்டாவாத அறிக்கைதானே விட்டுக்கொண்டிருக்கிறார்.
அதைவிடுங்கள்... இவருடைய தொகுதியில்தான் மற்ற அரசியல்வாதிகளைவிட என்ன புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து மக்களுக்குச் சேவை செய்து வருகிறார்.?

ஆட்சி பொறுப்பில் இருந்தால் செய்வார் என்றுதானே சொல்கிறீர்கள்?
இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளுவோம். அப்படியானால் விஜயகாந்த் ஒன்றுமே செய்யாமல் அவரை எப்படி நல்லவர், வல்லவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?

சினிமாவில் நடிக்கும்போதே விஜயகாந்த் ஏழைபாழைகளுக்கு நிறைய செய்திருக்கிறார் என்பீர்கள். அப்படித்தானே? சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதை எப்போதுதான் மறக்கப்போகிறீர்களோ?... தெருவில் பிச்சைக்காரருக்கு நீங்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போடுவீர்களா? மாட்டீர்களா? போடாதவனை விட்டுவிடுங்கள். போடுவீர்கள்தானே. அது உங்கள் வருமானத்துக்கு உட்பட்டு செய்வது. விஜயகாந்துக்கு வருமானம் அதிகம். அவர் அதற்குத் தகுந்தாற்போல் செய்திருப்பார் அவ்வளவுதானே... (இதற்கும் மனசு வேண்டுமே என்று சொல்லக்கூடிய நபராக இருந்தால் நீங்கள் ஒரு ரூபாய் கூட பிச்சைக்காரனுக்குப் போடாத நபராக இருக்க வேண்டும்.) எனவே பத்து ரூபாய் கொடுத்தார். இருபது ரூபாய் கொடுத்தார் என்பதை வைத்து மனிதரை எடை போடாதீர்கள். செயல்பாடுகள் மூலம் எடைபோடுங்கள்.
செயல்பாட்டை எப்படி எடை போடுவது? வாய்ப்பு கொடுத்தால்தானே எடை போடமுடியும்?

நியாயமான கேள்விதான். மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடிய ஓர் இளைஞன் கட்சியைத் தொடங்கி எனக்கு ஆதரவு தாருங்கள் என்று சொன்னால், அது நியாயமாக இருக்கும். நீங்களும் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். அதைவிட்டு, தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை சினிமாவில் நடித்து சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்துவிட்டு, எல்லாத் தேவைகளும் நிறைவேறிய பிறகு கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க ஆசைபடுகிறவருக்கு ஆட்சி பொறுப்பை விட்டுக் கொடுப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்போல ஆட்சியில் இல்லாத போதே ஓரளவு செய்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இன்னும் செய்வார் என்றுதானே சொல்ல வருகிறீர்கள். சரி ஒத்துக்கொள்ளுவோம். இந்த ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்போல அவருடைய இப்போதைய செயல்பாடுகளையும் பார்க்க வேண்டாமா?

ஊழல்வாதிகளுக்கு என் கட்சியில் இடம் இல்லை என்றார்... இப்போது எத்தனைபேர் அவருடைய கட்சியில் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள் தெரியுமா? (நீதிமன்றம் தீர்ப்பு வழங்காதவரை... குற்றவாளிகள் மீது யாரும் குற்றம் சாட்டாதவரை யாரையும் ஊழல்வாதிகள் என்று சொல்லமுடியாது என்று விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகப் பதில் தரலாம்.)

வாரிசு அரசியல் என்கிறோம்... விஜயகாந்த் கட்சியை இப்போது நிர்வகித்துக் கொண்டிருப்பது யார். அவர் சொந்தங்கள் பந்தங்கள்தானே......?

எனவே, செம்மறியாட்டு கூட்டம்போல் யார் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்காதீர்கள்.... இவன் சொன்னால் அவன் சொன்னான் என்பதற்காக எவரையும் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.....
(இது என் கருத்து. மாற்று கருத்துக்கும் இடம் உண்டு.)

உலகம் முழுவதும் 110 பத்திரிகையாளர்கள் கொலை!


ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அடங்கிய தன்னாட்சி அமைப்பு ஒன்று பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.



ஆய்வு முடிவின் படி பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதன்மை நாடாக இராக் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இங்கு 50 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2003-ம் ஆண்டில் இராக்கில் போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை மொத்தம் 250 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



இரண்டாவது நாடு சோமாலியா.



மூன்றாவதாக வரும் நாடு இலங்கை. கடந்த ஆண்டில் இலங்கையில் 4 பத்திரிகையாளர்களும், இந்த ஆண்டில் 7 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.



நாலாவதாக வரும் நாடு பாகிஸ்தான். இந்த ஆண்டில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



காங்கோ, எரித்ரியா, குவாடி, மாலா ஆகிய நான்கு நாடுகள் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது இடங்களில் வருகிறது. இந்தியா ஒன்பதாவது இடத்தில் வருகிறது. இந்த நாடுகளில் எல்லாம் 2 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 96.



இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 110.



கொடுமை...கொடுமை.... கொடுமை........ கொடுமைகளுக்கெல்லாம் பெருங் கொடுமை!

இப்படி வார்த்தைகளால் தினம்தினம் துகிலுரியப்பட்டு...

வென்றவர்கள்.... சொல்கிறார்கள்
ஒரு மனிதனால் குதிரையைத் தண்ணீர்த் துறைக்கு அழைத்துப் போகமுடியும். ஆனால், நூறு பேர் சேர்ந்தாலும் அக்குதிரையைத் தண்ணீர் குடிக்கவைக்க முடியாது. குதிரைக்கு முதலில் தாகம் இருக்கவேண்டும். அந்தத் தாகத்தில்தான் தண்ணீரின் பயன் முழுமையாக இருக்க முடியும். வாசிப்புப் பழக்கம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டிய தார்மிகத் தாகம்!
-அசோகமித்திரன், எழுத்தாளர்.

பார்வையற்ற ஒருவர் வீதியில் போனால், கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போக உங்கள் நல்ல மனசு முன்வருகிறது. கால் ஊனமான ஒருவர் நடந்து போவதைப் பார்த்ததும் கண்களில் கருணை பொழிய உங்கள் டூ-வீலரில் இடம் தருகிறீர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். மிகமிகப் பாராட்டுதலுக்குரிய விஷயம் இது. ஆனால்... "ஏய்...ஒம்போது!' "ஹே, உஸ் வருதுடா..!' -இப்படி வார்த்தைகளால் தினம்தினம் துகிலுரியப்பட்டு அவமானத்துக்கு ஆளாகும் அரவாணிகளைப் பற்றி எப்போதேனும் உங்கள் மனிதாபிமான மனம் சிந்தித்திருக்கிறதா?
-ஆஷாபாரதி, தலைவர், தமிழ்நாடு அரவாணிகள் சங்கம்.

எனக்கு 62 வயதாகிறது. 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறேன். வழி தவறுவதற்கான எத்தனையோ வாய்ப்புகள் கண்ணுக்கெதிரில் காத்துக்கிடந்த நாட்கள் நிறைய. பணம், புகழ், மது, மாது என மனித ஒழுக்கத்துக்குச் சவால்விடும் எல்லா அம்சங்களும் அருகில் இருந்த சூழலிலும், "ஒழுக்கமாக வாழ்ந்திருக்கிறேன்' என்கிற மனநிறைவுதான் இன்னும் என்னைக் கிழவனாக்காமல் வைத்திருக்கிறது. ஓடுகிற பேருந்தில் ஓடிப்போய் ஏறுகிற உடல் பலத்தைத் தந்திருக்கிறது.
-சிவகுமார், நடிகர்.

"அணுகுண்டுக்கும் புத்தகத்துக்கும்
ஒரேயொரு வித்தியாசம்தான்!
அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்.
புத்தகம் திறக்கிறபோதெல்லாம் வெடிக்கும்'
ஆம், வேறு எந்த கலைப் படைப்பாளியைவிடவும் இலக்கியப் படைப்பாளிக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்பு உண்டு. எழுதுபவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்பது என் கருத்து. பிகாúஸôவின் ஓவியங்களைவிட, பீத்தோவனின் இசைக் கோலங்களைவிட, ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல், மக்களை ஆட்டிப்படைத்துவிடும்.
-ஜெயகாந்தன், எழுத்தாளர்.

"நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்கிற உன் உரிமையைக் காக்க, நான் என் உயிரையும் தருவேன்' என்கிற வால்டேரின் கருத்தே, கருத்துரிமைக்கான அடிப்படை! பிறக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கும் ரேகைகளைப்போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வெறு விதமான கருத்துகள் இருக்கும். தாயின் கருவறையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும்கூட ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. கருத்துரிமை என்பது மனிதனின் பிறப்புரிமை.
-பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

நன்றி: நூல்: தமிழ்மண்ணே வணக்கம்

இலக்கணத்தை உடைப்பதே இலக்கு - ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!





"கேட்ட முதல் நாளே' -எல்லார் மனதையும் கொள்ளையடிக்கும் பாடல்களைத் தருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
"இருக்கிறவர்களில் இவர் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. இவர் இசையமைப்பதே சிறப்பு' என்று சொல்லத்தக்க சினிமா இசையமைப்பாளர்களில் ஒருவர்.
"மின்னலே' படம் தொடங்கி "வேட்டையாடு விளையாடு' படம் வரை, இவர் இசையமைத்த பாடல்கள், படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி.
மேற்கத்திய இசையிலும் மெல்லிசைப் பாடல்கள்; துள்ளலிசையிலும் வார்த்தைகளை விழுங்காத லாவகங்கள் -இவர் வெற்றியின் ரகசியம்!
"ஒரு மாலை இளவெயில் நேரம். அழகான இசைக்குயில்கள்
பாடும்' -இடம்: கே.கே.நகரில் உள்ள ஹாரிஸ் ஸ்டுடியோ! அங்கு அவரைச் சந்தித்தோம்.
பேட்டியில்: "கண்ணும்கண்ணும் நோக்கியா' பாடல் போல -அதிரடியும் உண்டு.
"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?' பாடல் போல -ஆர்ப்பாட்டமும் உண்டு.
"வசீகரா என் நெஞ்சினிக்க' பாடல்போல -அசத்தும் வசீகரமும் உண்டு.

இசையால் எப்போது ஈர்க்கப்பட்டீர்கள்?

இசைக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தை எஸ்.எம். ஜெயக்குமார். கிடார் இசைக் கலைஞர். சினிமாவில் பல இசை அமைப்பாளர்களுக்குக் கிடார் இசைத்திருக்கிறார். இப்போது கிறித்துவப் போதகராக இருக்கிறார். இதனால், இயல்பாகவே சிறு வயதிலிருந்தே இசை மீது எனக்குத் தணியாத தாகம். உலக இசைகள் பலவற்றைக் கேட்டேன். மேற்கத்திய இசை உட்பட சிலவற்றைக் கற்றேன். இவை என் ஆர்வத்தை மேலும் தூண்டியதால் இப்போது நான் சினிமா இசையமைப்பாளர்.

இசையமைப்பாளர் ஆவதற்கான உங்களின் போராட்டம்?

போராட்டம் என்பதெல்லாம் இல்லை. முதலில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை. இசைக்கலைஞனாக வரவேண்டும் என்பதுதான் என் அப்போதைய ஆசை. கீபோர்டு பலருக்கு வாசித்துக்கொண்டிருந்தேன். கடவுளின் கிருபையால் தற்செயலாய் கிடைத்தது "மின்னலே' படத்திற்கான வாய்ப்பு. இசையமைப்பாளரானப் பிறகு என்னை அடையாளப்படுத்திக்கொள்ள எனக்கென உருவாக்கிக் கொண்டேன் தனிபாணி.

திகட்டாமல் கொடுக்க வேண்டும் என்பதற்குதான் அதிகப் படங்களுக்கு ஒத்துக்கொள்வதில்லையா?
மூன்று படங்களுக்கான உழைப்புதான் என்னுடைய ஒரு படம். ஒரு படத்துக்கான உழைப்புதான் என்னுடைய ஒரு பாடல். நேரம், உழைப்பு போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்கிறேன். இதனால்தான் கிடைக்கிறது வெற்றி. திகட்டாமல் கொடுக்கவேண்டும் என்பதற்காக தாமதிப்பதில்லை. முப்பத்தைந்து படங்களுக்கு இசைக்கக் கூடிய வாய்ப்பு வந்தால், அதில் இரண்டு மூன்று படங்களுக்குத்தான் சொல்கிறேன் சம்மதம்.
எந்தவகையான படங்களுக்கு உங்களின் சம்மதம்?
நல்ல கதையம்சம். விருப்பம்போல் இசையமைப்பதற்கான வாய்ப்பு இருந்தால் சம்மதிக்கிறேன். பாடல்களை ரசிகர்கள் கேட்டு ரசிக்கிறார்கள். படத்தைக் கேட்டும் பார்த்தும் ரசிக்கிறார்கள். இதனால் என்னோடு பணியாற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் முக்கியமான ஒன்று. இயக்குனர் யார்? மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே சம்மதிக்கிறேன். இதற்கே எனக்கு வருஷக்கணக்கில் ஆகிறது. 2008-ல் வரவுள்ள படத்துக்கு இப்போது சம்மதம் சொல்லியுள்ளேன். கடந்த ஆண்டு "அந்நியன்', "கஜினி'க்கு இசையமைத்தேன். இந்த ஆண்டு "வேட்டையாடு விளையாடு'. மூன்றுமே மெகா ஹிட். எனக்கு முக்கியமானது பணமல்ல; தரம்.

படங்களைத் தேர்வு செய்வதே நீங்கள்தான் என்கிறபோது, கிராமச்சூழலுடனான படங்களை ஏன் தேர்வு செய்வதில்லை?
கிராமச்சூழலுடன் பலர் கதை சொல்கிறார்கள். ஆனால் அவை சரியானக் கதைகளாக இருப்பதில்லை. நல்ல கதையுடன் வந்தால் கண்டிப்பாக இசைப்பேன். இப்போது பெரும்பாலும் நகர்ப்புறக் கதைதான் படமாக்கப்படுகிறது. கிராமத்துக் கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பும் இல்லை.

மேற்கத்திய இசை அமைத்தாலும் உங்கள் ரசனை மெலடியின் பக்கமே இருக்கிறதே?
மேற்கத்திய இசை என்பதே தவறான விஷயமல்ல. அதிலும் நான் இசைக்கிற எல்லாமே மேற்கத்திய இசை அல்ல. எந்த இசை வடிவத்துக்குள்ளும் என் இசை சிக்குவதில்லை. ஜனரஞ்சகமான, சினிமாத்தனமானதே என் இசை. தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய இசைக்கு எப்போதுமே வரவேற்பு இருந்ததில்லை. மேல்தட்டு மக்களிலும் சிலர்தான் ரசிப்பார்கள். "வசீகரா' பாடல் மேற்கத்திய இசை என்று சொல்ல முடியாது. அது இன்னிசை. "சுட்டும் விழி சுடரே' வேண்டுமானால் புதுச் சத்தமாக இருக்கலாம். அதற்கு பெயர் சொல்லத் தெரியாமல் மேற்கத்திய இசை என்கிறார்கள்.
மேற்கத்திய இசையிலும் சில பாடல்கள் இசைத்திருக்கிறேன். இசைக்கவில்லை என்று சொல்லமாட்டேன். எந்த இசையாக இருந்தாலும்,
என்னுடைய விருப்பமாக எப்போதும் இருப்பது மெலடி வகையான பாடல்கள்தான். படத்தின் கடைசிக்கட்டக் காட்சிகளில் யாரும் மெலடிப் பாடல்களைப் போடமாட்டார்கள். நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை. இலக்கணங்களை உடைப்பது என்பதுதான் என் இலக்கு. கடைசிக் காட்சிகளிலும் மெலடிப் பாடல்களை வைத்திருக்கிறோம். வெற்றி பெற்றிருக்கிறது. "வெண்மதிவெண்மதியே நில்லு' மின்னலே படத்தின் கடைசிக் கட்டக் காட்சியில் வரும் பாடல்தான்.

"ஒமஹசியாஓஹீயாஹா' போன்ற வித்தியாசமான ஓசைகளைப் பாடல்களுக்கு முன்னால் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களே?
இந்த ஓசைகளுக்கு மொழி கிடையாது. அர்த்தம் கிடையாது. அது என்னுடைய உருவாக்கும். பாடலுக்கு நான் போடுகிற கையெழுத்துப் போல். என் பாடல்கள் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக வித்தியாசமான ஓசைகளைக் கொடுக்கிறேன். "அந்நியனி'ல் "ரண்டக்க ரண்டக்க' ஓசை. அதற்கும் அர்த்தம் கிடையாது. இதுபோல வந்தால் சின்னக்குழந்தைகள் கேட்டவுடனே பாடுவார்கள். எல்லாரும் தலை வாரி வந்திருக்கிற இடத்தில், ஒருவர் மட்டும் தலைகலைஞ்சி வந்தால், யாரைப் பார்ப்போம்? தலைகலைஞ்சி இருப்பவரைத்தானே?. அப்படித்தான் இந்த வித்தியாசமான ஓசைகள்.

பாடல்கள் மட்டுமே இசை என்பதுபோல திரைத்துறையில் நிலைமை மாறி வருகிறதே?
இசையமைப்பாளர்களுக்கான அறிமுகத்தைக் கொடுப்பதாக இருப்பது பாடல்கள். கதைகளில் சில குறைகள் இருந்தாலும் பாடல்களால் வெள்ளிவிழா கண்ட படங்கள் உண்டு. இதனால், திரைப்படங்களில் பாடல்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை.

கே.வி.மகாதேவனுக்கு ஒரு "சங்கராபரணம்', எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஓர் "அபூர்வ ராகங்கள்' இளையராஜாவுக்கு ஒரு "சிந்து பைரவி' போல, இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு முழுக்க முழுக்க இசையால் பெயர் வாங்கித் தரக்கூடிய படங்கள் வராதது ஒரு துரதிருஷ்டம்தானே?
இசையை மட்டும் மையமாகக் கொண்டவை அல்ல நீங்கள் சொன்ன படங்கள். இசையுடன்கூடிய கதையை மையமாகக் கொண்டுள்ள படங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இசையை மையமாகக் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. வெற்றிதான் பெறவில்லை. இசை என்பது கலை. கலையை மட்டும் வைத்து படமெடுத்தால் போரடிக்கும். கதையோடு பொருந்தினாலே இசை வெற்றிபெறும். அப்படிப்பட்ட படத்திற்கு இசையமைக்க நிச்சயம் எனக்கு வாய்ப்பு வரும்.

நிசப்தங்கள்கூட சில நேரங்களில் இசையாவது உண்டு. ஹாலிவுட் படங்களில்கூட இந்த மாதிரியான யுக்திகள் பயன்படுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நல்ல விஷயம்தான் நிசப்தம். அதற்காக நிசப்தமாகவே கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடே செய்தால் தப்பாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், முன்பு வந்த படங்களில் பின்னணி இசை இல்லாமல்கூட படத்தை ஓட்டலாம். கதை கட்டமைப்பு வலுவாக இருந்தது. நடிப்பும் அப்படி இருந்தது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பின்னணி இசைக்கு வருகிறபோதே படம் திருப்திகரமான நிலையில் வருவதில்லை.
படம் வெளியாவதற்கு முன் கடைசியாகச் செய்கிற வேலை இந்தப் பின்னணி இசை. படத்தை மெருகேற்றுகிறவராக இசையமைப்பாளர் முன்பு இருந்த நிலைபோய், இன்றைக்கு பல திருப்தியில்லாத விஷயங்களை "ரிப்பேர்' செய்கிறவராக இருக்கவேண்டியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் நான் நிசப்தத்தைக் கையாண்டேன் என்றால், படம் பார்ப்பவர்கள் எழுந்து போய்விடுவார்கள். எந்தப் படமாக இருந்தாலும் அதில் உள்ள ஓட்டையை அடைப்பதற்கான வழியைத்தான் என் இசை மூலமாகச்

செய்கிறேன்.

வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்புக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
என் இசையில் எண்பது சதவிகித பங்களிப்பு அவர்களுடையதுதான்.

விஜய் டிவியில் "சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி மூலமாகத் தேர்வானவருக்கு எந்தப் படத்தில் பாட வாய்ப்பு அளிக்கிறீர்கள்?
"ஜூலைக் காற்று', "சிலந்தி', "சென்னையில் ஒரு மழைக்காலம்', "பீமா' போன்ற படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படங்களில் எந்தப் படத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாடுகிற மாதிரியான வாய்ப்பு வருகிறதோ, அதில் கண்டிப்பாகப் பாடவைப்பேன்.

பல இசையமைப்பாளர்கள் பாடி வருகிறார்கள். உங்களுக்கு விருப்பமில்லையா?
எனக்குப் படங்களுக்கு இசையமைப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் நான் பாடுவது பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்கு மனரீதியாகவும் தயாராகவில்லை. எனக்குத் தெரிந்து நான் ஒரு நல்ல பாடகரும் இல்லை. ஒருவேளை நான் மனரீதியாகத் தயாரானால் பாடுவேன்.

"வசீகரா' பாடல் தொடங்கி, இப்போது "பார்த்த முதல் நாளே' பாடல் வரை தொடர்ந்து எல்லாப் படங்களிலும் பாடுவதற்கு பாம்பே ஜெயஸ்ரீக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன்?
வசீகராவுக்குப் பயன்படுத்தியபோது அந்தக் குரல் கேட்காத குரல். வித்தியாசமான குரல். இதைத் தொடர்ந்து "மஜ்னு'வில் "முதல் கனவே'வுக்கும் வாய்ப்பு கொடுத்தேன். இப்போது இயக்குநர்களும் தொடர்ந்து அவருக்கு ஒரு பாட்டாவது கொடுக்கச் சொல்கிறார்கள். ஒரு பாடலின் வெற்றி என்பது நல்ல இசை, நல்ல பாடல் வரிகள் என்பது மட்டுமல்ல. நல்ல பாடகியைத் தேர்வு செய்வதிலும்கூட இருக்கிறது. பாம்பே ஜெயஸ்ரீ விஷயத்தில் "பார்த்த முதல் நாளே' வரை அது சரியாகவே இருந்திருக்கிறது.

இளையராஜா, "திருவாசக'த்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், "குணங்குடி மஸ்தான் சாகிபு' பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார். உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது உள்ளதா?
சின்ன வயதிலிருந்தே ஓர் ஆசை உண்டு. கிறித்துவப் பாமாலைகளுக்கு இசை அமைக்கவேண்டும் என்று. விரைவிலேயே செய்வேன்.

இசையில்லாது வேறு எதில் ஆர்வம்?
நகைச்சுவையான மேடை நாடகங்கள் மிகவும் பிடிக்கும்.
இசைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று நீங்கள் வைத்திருக்கும்


எதிர்காலத் திட்டம்?
ஒன்றும் இல்லை. நாளை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி யோசிப்பதே இல்லை. யோசிப்பது புத்திசாலித்தனம் என்றும் தோன்றவில்லை. இன்றைக்கு செய்வதைச் சரியாகச் செய்கிறேன்.

Wednesday, December 19, 2007

ரஜினிகாந்தின் ஒரு கோடி ரூபாய் என்னாச்சு?





தி நீர் தொடர்பான பிரச்சினை வருகிறபோதெல்லாம் எல்லோரும் சொல்கிற ஒரு தீர்வு நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்பது.


யார் இணைக்க வேண்டாம் என்று சொன்னது? எத்தனை ஆண்டுகள்தான் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டப்போகிறீர்கள்?


தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 54-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகிறபோது, "நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவிப்பதோடு அதை நிறைவேற்றவதற்கும் காலம் நிர்ணயிக்கப்பட்டு அட்டவணை வெளியிட வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் இன்னும் காலதாமதம் செய்தால் அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்'' என்று பேசியுள்ளார்.


இப்படிக் கருணாநிதி வலியுறுத்திப் பேசுவது அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே நிகழ்கிற ஒன்று. அதற்கு முன்பிருந்தே இந்த வலியுறுத்தல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான தொடக்கப் பணியைத்தான் இன்னும் யாரும் தொடங்கி வைக்கவில்லை.



இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு நிறைய சிக்கல்கள், மாநில தகராறுகள் இருக்கின்றன என்பது உண்மை. எந்தத் திட்டத்தில்தான் பிரச்சினைகள் இல்லை. மாநில அரசியல் என்கிற கண்ணோட்டத்தை விட்டு தேசியம் என்கிற எண்ணத்தோடு இந்தத் திட்டத்தை அணுகிறபோது இத்திட்டம் வெற்றிபெறும். அதுவரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.


காவேரி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது நடிகர், நடிகைகள் எல்லாம் நெய்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் இருந்த நேரம். நெய்வேலி போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். கருணாநிதியின் ஆலோசனைபடிதான் இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியதாகச் சொல்லப்பட்டது.


உண்ணாவிரதம் பெரும் வெற்றிபெற்ற மிதப்பில் ரஜினிகாந்த் இறுதியாகப் பேசுகிறபோது, தேசிய நதிகளை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் மாநில சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசி, நதி இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டால் தான் ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். (ஒரு படத்தில் நடித்து ரஜினிகாந்த் எத்தனை கோடி சம்பாதிக்கிறார் என்பது யாருக்குமே வெளிச்சமில்லை.) அதற்குப் பிறகு மூச்சு பேச்சே இல்லை. இந்தத் திட்டம் தொடங்கவே மாட்டார்கள் என்கிற எண்ணத்துடன்தான் ரஜினிகாந்த் அறிவித்தாரா என்று தெரியவில்லை.


இந்த முறையாவது திட்டத்தை நிறைவேற்ற முனைகிறார்களா? என்று பார்ப்போம்.

ஒரு வெள்ளைக்கார அழகியின் கன்னத்தில்











வென்றவர்கள் .... சொல்கிறார்கள்


ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன்னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர்களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. "செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்துகிறது' என்றார் வெள்ளைக்காரக் கவிஞர். "வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்பனைப் போல இருக்கிறது அந்த மச்சம்' எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
-ஆர். நல்லக்கண்ணு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.





தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளிலிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை. முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந்திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மகனுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய்யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார்கள். "கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்'' என்று கேட்கிறார்கள்.
-வசந்திதேவி,கல்வியாளர்.





பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம்மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. "தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு' என்று தாய்மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல்லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
-தமிழருவி மணியன்.





இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் "ஆம்லெட்' என்று சிரிக்கிறது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை "ஓங்கில்' என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது "கொடிய விலங்கு புலி' என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைகளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? "கொடூரக் காடு' என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதாசிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந்துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
-தியோடர் பாஸ்கரன்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்.


பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது "ஆண்கள்-பெண்கள்' என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன்றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.
-நீதிபதி சந்துரு.


தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசாமல் "இடியட் பாக்ஸ்' என்று அழைக்கிறோம். புத்திசாலித்தனமான அந்த அறிவியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந்தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குகளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

நன்றி: தமிழ்மண்ணே வணக்கம் நூல்

"அதிக அழகு; அதிக ஆபத்து' - நடிகை சங்கீதா



"காசுமழை' கேம் ஷோவைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடிப்பீர்களா?
அப்படி எண்ணம் இல்லை.

காசுமழையைத் தொகுத்து வழங்காமல் நீங்கள் போட்டியில் கலந்துகொண்டால் அதிகப் பணம் அள்ளுவீர்கள்தானே?
இந்த ஆட்டத்திற்கு அதிர்ஷ்டம்தான் முக்கியம். நானாக இருந்தாலும் கையில் கிடைப்பதைத்தானே அள்ள முடியும்?!

குடும்பப்பாங்கான முகம் என்பதாலேயே முதன்மை இடத்திற்கு வரமுடியவில்லையா?
முதன்முறையாக நீங்கள்தான் "குடும்பப்பாங்கு' என்று என்னைச் சொல்லுகிறீர்கள். எப்போதும் நான் மாடர்ன் டிரஸ்úஸ போடுவதால் யாரும் அப்படிச் சொல்லுவது கிடையாது. முதன்மை இடத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

"அதிக அழகு; அதிக ஆபத்து' என்று சொல்வது உண்மையா?
அதிக அழகும் ஆணவமும் இருந்தால்தான் ஆபத்து. அதிக அழகும் அடக்கமுமிருந்தால் ஆபத்தில்லை!

நெகட்டிவ் கேரக்டர்களாகவே நடிப்பது ஏன்?
நெகட்டிவ் கேரக்டரே நான் நடிக்கவில்லை. உயிர் படத்தில் மட்டும்தானே நடித்தேன். பிதாமகன் வேறுமாதிரியான கேரக்டர். நெகட்டிவ் கேரக்டர்தான் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு நடிப்பதில்லை. கேரக்டர் பிடித்திருந்தால் நடிக்கிறேன்.

சேலை கட்டியே பெரும்பாலான படங்களில் நடிக்கிறீர்கள். உங்களுக்கு மாடர்ன் டிரஸ்தானே விருப்பம்?
போகிற இடத்தைப் பொறுத்துதான் நான் டிரஸ்ûஸத் தீர்மானிக்கிறேன். கோயிலுக்குப் போகிறபோது மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு போக முடியாது. பார்ட்டிகளுக்குப் போகிறபோது சேலையோடு போக எனக்கு விருப்பமில்லை.

நடிகைகளின் நடிப்பு ஆயுள் குறைவாகவே இருப்பதற்குக் காரணம்?
உடலழகை மெயின்டெயின் செய்தால் நீடித்து இருக்கலாம். ஐஸ்வர்யாராய்க்கு 34 வயதுக்கு மேல் இருக்கும். அவர் இன்னும் டாப் லிஸ்டில் இருக்கிறார். திருமணம் முடிந்த பிறகும்கூட இந்தியில் ஸ்ரீதேவிக்கு இன்னும் மவுசு இருக்கத்தானே செய்கிறது?

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பவர்கள் இல்லையே என்கிற கோபம் உண்டா?
கோபப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களாக வந்து இப்போதுதான் வரவில்லை என்றால் கவலைப்படலாம். கோபப்படலாம். எப்போதுமே ஹீரோ சப்ஜெக்ட் கதைகளாகத்தானே வருகிறது.

நடிப்பதற்கே வந்திருக்கத் தேவையில்லை என்று என்றாவது நினைத்ததுண்டா?
பலமுறை நினைத்ததுண்டு. சில கம்பெனி படங்களில் நடிக்கபோய் திட்டு வாங்குகிறபோது ஏன்டா நடிக்க வந்தோம்; படித்துவிட்டு வேலைக்குப் போய் இருக்கலாமே என்று தோன்றும்.

காமிராவைத் தவிர்த்து வெளியில் நடித்த அனுபவம்?
சரியான வால் நான். எதையுமே முகத்துக்கு நேராகப் பேசக்கூடியவள். அதனால் காமிரா இல்லாமல் நான் நடிக்கவேண்டிய அவசியமில்லை!

Tuesday, December 18, 2007

கிரிக்கெட் வீரர்களுக்குச் சம்பளம் குறைக்கலாமா?



பெண் கிரிக்கெட்டர் திருஷ் காமினியிடம் சில கேள்விகள்

லேடீஸ் கிரிக்கெட் மேட்ச் பிரபலமாகாததற்கு யாரும் சரியாக விளையாடா ததுதானே காரணம்?
ஸ்லோவான ஆட்டத்தை பெண்கள் வெளிப்படுத்துவதால் இருக்கலாம். ஃபோரும், சிக்ஸமாக மாறிமாறி அடிக்கத் தொடங்கினால் லேடீஸ் ஆட்டத்தையும் ரசிப்பார்கள்.

ஆணாகப் பிறந்திருந்தால் கிரிக்கெட் டீமில் இடம்பெற்றிருப்பீர்களா?
லேடீஸ் டீமில் எப்படி இடம்பெற்றிருக்கிறேனோ; அதேபோல ஜென்ட்ஸ் அணியிலும் இடம்பெற்றிருப்பேன்.

சச்சின், டிராவிட் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். யார் வீட்டிற்குப் போவீர்கள்?
நோ சாய்ஸ். சச்சின்.
கிரிக்கெட் வீரர்களுக்குச் சம்பளம் குறைத்தால் நன்றாக விளையாடுவார்கள் என்று சொல்கிறார்களே?
எந்த நிலையிலும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, சம்பளத்தைக் குறைத்து ஊனப்படுத்தக்கூடாது.

கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிற விளம்பரங்களைப் பார்த்தால்
எங்களுக்குச் சிரிப்பு வரும். உங்களுக்கு?
விளம்பரம் என்பது வேறு; ஆட்டம் என்பது வேறு. ஸ்பைடர்மேன் செய்கிற சாகசங்களை எல்லாம் எப்படி ரசிக்கிறோமோ அப்படித்தான் இதையும் ரசிக்க வேண்டும்.

டக் அவுட்டாவது அதிக வருத்தமா? போல்டாவதுமா அதிக வருத்தமா?
டக்-அவுட்.

உங்களுடைய ஆட்டத்தை நீங்களே விமர்சனம் செய்வதுண்டா?
விமர்சித்துக் கொள்வது உண்டு. பிளஸ், மைனஸ் தெரிந்தால்தானே நிலைக்க முடியும்.

வெயிலில் ஃபீல்டிங் பண்ணுகிறபோது, "இந்தக் கஷ்டம் எப்ப
முடியுமோ'ன்னு நினைத்ததுண்டா?
வயதானவர்களுக்குத் தோன்றலாம். எனக்குத் தோன்றியதில்லை.

படிப்பில் உங்கள் ரன் ரேட்டிங்?
85 சதவிதம்.