Tuesday, December 4, 2007

'ரீல் லவ்' -'ரியல் லவ்'


'ரீல் லவ்' -'ரியல் லவ்'


ரோஜாவுக்கு முட்கள்போல, ஒரு மேட்டருக்கு முன்னுரை பின்னுரை எழுதுவது. சில நேரம் பேட்டிக் கொடுத்தவரைக் குத்தும். சில நேரம் பேட்டி எடுத்தவரை குத்தும். இது முட்கள் இல்லாத ரோஜா. மேட்டரைப் படித்து நீங்களே படைத்துக்கொள்ளுங்கள் சுய உரை!


கான்செப்ட்?


'ரீல் லவ்' -'ரியல் லவ்'


ரீல் லவ்வுக்கு உலகளவில் நடக்கும், மாறிவரும் சில லவ்(?)ஸ்ஸ குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டினோம்... அதாங்க "டெஸ்க்'!


ரியல் லவ்வுக்கு சில காதலர்களைத் தேடி எடுத்தோம் ரிஸ்க்! மேகங்கள்போல உடனே கூடி உடனே கலைகிறவர்கள்போல் அல்ல இவர்கள்! உலக காவியக் காதலர்களை மிஞ்சுகிறவர்களாகவும் இவர்கள் இருக்கலாம். அது படிப்பவர்களின் பார்வையைப் பொருத்து!


ரீல் லவ் -1


உறைய வைக்கும் உண்மைக் கதை. எவரும் எதிர்பாராத க்ளைமேக்ஸ்.


"ஆர் யூ ப்ரீ. சாட் வித் மீ'' என்று சாதாரணமாகத்தான் தொடங்கியது அவர்கள் நட்பு. எவ்வளவு திக்கான துணியாகத் திரை போட்டு வைத்திருந்தாலும் பஞ்சும் நெருப்பும் பற்றதானே செய்யும்! ஆணாக இருந்துகொண்டு பெண் என்றதையும், பெண்ணாக இருந்துகொண்டு ஆண் என்றதையும் நாட்கள் நகரநகர பரஸ்பரம் யார் ஆண் என்றும் யார் பெண் என்றும் ஒப்புக்கொண்டார்கள். ""ஒயிட் ஹவுஸ்ல நம்ம ராஜ்யம்தான். ஜார்ஜ்புஷ் என்னைக் கேட்காம எதையுமே செய்யமாட்டார்'' என்று விட்ட சரடுகளும் கட். பற்றியெரிந்த நெருப்பில் இங்கேயும் காதலுக்குக் கண்ணில்லாமல் போனது. முகத்தழகு தேவையில்லாமல் போனது. முகவரி தேவையில்லாமல் போனது. மொழி, அந்தஸ்து, நாடு எதுவும் தேவையில்லாமல் போனது. கேட்கவும் தோன்றாமல் போனது. சாட்டிங் சந்திப்பையே உணவாய், உயிராய் மொழிந்தனர். வழிந்தனர். இரவென்றும் பகலென்றும் இல்லாத வாழ்வானது. எல்லா விருப்பங்களையும்போல இதற்கும் வெறுப்பு என்கிற ஓர் எல்லை வந்தது. நேராகச் சந்திக்கத் துடித்தனர். நாள், இடம், நேரம் குறிக்கப்பட்டது. சந்தித்த இருவரும் அவர்கள் மேல் ஏதோ பொக்ரான் குண்டு வெடித்ததுபோல சிதறி பதறி கூனிக்குறுகி நின்றனர். இருவரும் அக்கா, தம்பி. (வெளி நாட்டில் நிகழ்ந்தது)

ரீல் லவ் -2


உரிமை கேட்கும் "உன்னத'க் காதல். க்ளைமேக்ஸ் சாபம்!


"பெப்ஸி அழகனே. உன்னை எவரையும் "சிப்' பண்ண விடமாட்டேன்'' என்றாள் அவனை அவள் கவிதை(?)யாய்! ஆண்மகன் சும்மா இருப்பானா? "கோககோலா அழகி. உனக்காக உருகி... தினம் சாகிறேன் கருகி'' என்றான் அவளிடம் அவன் "காதல்' போதையில்! இருவரும் ஊர் சுற்றி பறவைகள் ஆனார்கள். சுற்றத்தாருக்குத் தெரியாதென எங்கும் சிறகு விரித்தனர். முடிவு: வீட்டிற்கு, ஊருக்கு, உலகத்திற்குத் தெரிந்து இவர்கள் காதலுக்குக் கிளம்பியது பெரும் எதிர்ப்பு. என்றும் தோற்பதில்லை காதல். பெற்றோர் உற்றார் எதிர்ப்புகளை மீறத் தொடங்கினர். "எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் உரிமையைப் பறிக்காதீர்கள்' என்று கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இவர்கள் உணர்வு கோர்ட்டுக்குப் புரிந்தது. காதலர்கள் திருமணம் முடித்தனர். இப்போது சந்தோஷமாய் வாழ்கின்றனர். வாழ்க... திருமணம் முடித்த ராஜேஷ், "முகேஷ்'. (முகேஷ் என்ற பெயரை இப்போது அவன் ஸாரி.. அவள் முகேஷி என்று மாற்றிக் கொண்டாள். இந்தியாவிலும் வேகமாய் பரவி வரும் காதல் இது.)

ரீல் லவ் -3

சென்டிமென்ட் காதல். வித்தியாசமான "புரட்சி' முடிவு!


க்ளைமேக்ஸ் சுபத்திலிருந்தே தொடங்கும் கதை. சீனாவைச் சேர்ந்தவர் லீயூ யே. இவர் திருமணம் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இது கைகூடிய காதல் திருமணம். நெருக்கமான நூறுபேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது அழைப்பிதழ். இந்தத் திருமணத்திற்கு பின் உள்ள ஒரு கதை: 39-வயதைக் கடக்கிற வரை யாரிடமும் காதல் வயப்படாமல்தான் இருந்தார் லீயூ யே. திருமணம் செய்துகொள்ள சொல்லி அவர் தாயார் தொடர் நச்சரிப்பு. இறுதியில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். யாரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்? என்பவர்களுக்காக அவரின் "திரு'வாக்கு: "யதார்த்த நிலை மீது எனக்கு அதிருப்தி உள்ளது. திருமணம் பற்றிய என் பார்வை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன்.''
(மணமகள் உடை உடுத்திய தன்னுடைய கட்-அவுட்டை வைத்து மணம் முடித்தார் லீயூ யே.)


ரீலில் நம்மூர் முட்டுச் சந்தோடு முடிந்த காதல், பஸ்ஸில் ஏறி இறங்குவதற்குள் முடிந்த காதல் போன்ற காதல்களை விட்டுவிடவில்லை. அவை உங்கள் கற்பனைக்கு! இனி... பீ சீரியஸ்! ரியலுக்கு வாருங்கள். ரியல் காதலர்கள் அவர்கள் இயல்பு மொழியிலேயே பொழி...இல்லை..இல்லை... பொளிகிறார்கள்!




ரியல் லவ்-1


பாஸ்கர் - பத்மா


ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர் பாஸ்கர். விபத்தொன்றில் கால்களை இழந்து வேலைக்குச் செல்லமுடியாமல் ஊனமாகி கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது இவர் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் இவருக்குக் கால்களாக இருக்க வந்தது காதல். இவரைக் காதலித்து இன்றைக்கும் இவருக்கு உதவும் கால்களாய் இருப்பவர் பத்மா. காலம் சுழற்றிப் போட்ட சூறாவளியில் இன்றைக்கு இவர்கள் சென்னை எழும்பூர் மியூசியம் அருகில் வருவோர் போவோரிடம் பெறுவது யாசகம்.
"ஆட்டோ ஓட்டிக்கினு ஜம்னுதான் வாள்க்க போயிகினு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தாண்ட சவாரி போயிகினு இருந்தேன். எதுத்தாப்ல வந்த லாரி மோதி ஆட்டோவோட நானும் தூக்கி எறிய... ஆஸ்பத்திரியில தூக்கிட்டுப் போயி போட்டாங்க. ஆளு பொழைச்சேன். காலு போயிடுச்சு. வீட்டுலேயே முடங்கி கிடந்தேன். அம்மா ஆதரவா இருந்தாங்க. சம்பாதிக்காததால அண்ணன்ங்க எவனும் மதிக்கல. இந்த நேரத்துல கால் ஊனமா ஆனதைப் பத்தியெல்லாம் வெசனப்படாம காதலிச்சுது, சொந்தக்காரப் பொண்ணு. என் கால் இல்ல. இந்தப் பொண்ணு நல்லா இருந்துச்சி. தயங்கிதயங்கி ஒத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு எவ்வளவோ வாள்க்கையில பிரச்சினை. இன்னக்கி மியூசியத்துக்கு வர்ற நம்ப ஜனங்களையும், ஃபாரினர்களையும் நம்பித்தான் வாள்க்க ஓடுது. சில நாள்ல 100 ரூபாக் கூட கிடைக்கும். சில நாள் ஒண்ணுமே கிடைக்காது. புதுப்பேட்டை கூவத்தாண்ட உள்ள குடிசயில வாடக்கி இருக்கோம். இருநூறு வாடக. தனியாக கரண்ட் பில். ஒரு புள்ள இருக்கான். எம்மாம் சோதனை வந்தாலும் நான் இப்பவும் சரி அப்புவம் சரி சந்தோஷமாகத்தான் இருந்திருப்பதாக நினக்கிறேன். அதுக்குக் காரணம் எம்மேல பாசத்த கொட்டும் இவதான்.'' என்கிறார் பாஸ்கர்.


ரியல் லவ் -2


சீனிவாசன் - ராஜேஸ்வரி

"ஏடிஎம் கார்டு கவரே, சி.டி. கவரே' -என்று ஓடும் ரயிலில் வியாபாரம் செய்யும் சீனிவாசன் பார்வையற்றவர். பி.ஏ. ஹிஸ்டிரி முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் இந்த வேலை செய்து வருகிறார். இவர் காதல் மனைவி ராஜேஸ்வரி. "கண்பார்வையற்ற ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என்ற சபதத்துடன் இவரை விரும்பி திருமணம் செய்திருக்கிறார். இவரும் மங்கலான பார்வையுடையவர். இவர் வழிகாட்டுதலுடனே பயணிக்கிறது இவர்கள் குடும்பம்.
"பி.ஏ. படிச்சிருக்கிறேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கண் பார்வையற்றோருக்குக் கொடுக்க வேண்டிய பணியை சமீபகாலமாகத் தருவதில்லை. தந்தால் நன்றாக இருக்கும். படித்தும் அதற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதற்காக முடங்கி இருக்க முடியுமா? அதனாலத்தான் இந்த வேலை செய்துக்கிட்டு இருக்கிறோம். பீச் டூ தாம்பரம் வரை போகிற ரயிலில் உள்ள பயணிகளை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை. இதில் எங்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கிறது. என் பெண்ணுக்கு நன்றாகப் பார்வை தெரிகிறது. படித்து முடித்த பிறகு அவளுக்காவது வேலை கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிற சீனிவாசனிடம் உங்கள் திருமணம் பற்றிச் சொல்லுங்கள், என்றதும் ராஜேஸ்வரி தொடர்ந்தார்.

"ஒன்பதாவது வரைக்கும் படித்திருக்கிறேன். வீட்டுப்பாடம் முடிக்காததற்காக டீச்சர் ஒருவர் நோட்டைத் தூக்கி அடித்துவிட்டார். அதனாலோ என்னவோ என் கண் பாதிக்கப்பட்டு, பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அதற்கு பிறகு படிக்க முடியாமல் போய்விட்டது. என் அப்பா எவரெடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். என்னைத் திருமணம் செய்து கொடுக்க மாப்பிள்ளை பார்த்தார்கள். வந்தவர்கள் எல்லாம் என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து, என் தங்கைகளையே திருமணம் செய்ய விரும்பி கேட்டார்கள். அன்றைக்கு ஒரு முடிவு எடுத்தேன். "கண் பார்வையற்ற ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று. அந்த நேரத்தில்தான் இவரை ஓரிடத்தில் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. இவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். என் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களை மீறி இவரைக் கல்யாணம் செய்துகொண்டேன். இன்றைக்கு எங்கள் வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறது. எங்களுக்குள் சின்னச்சின்ன குடும்பச் சண்டைகள் வரும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எங்களுக்குள் இருக்கிற அன்பு மாத்திரம் குறைந்ததே இல்லை.'' என்கிறார் ராஜேஸ்வரி.
இந்த மேட்டருக்கு முடிவுரையா?
வணக்கம்... வந்தனம்!

No comments: