தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(3.12.2007)
(3.12.2007)
செய்தி:
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எம்.பி.க்கள் முறை தவறி நடந்து கொண்டார்கள் என்பதை எப்படி முடிவு செய்வது? இதை முடிவு செய்வதற்காகவே நாடாளுமன்ற உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் எம்.பிக்களுக்கும் கேள்விகளை அனுப்பியுள்ளது. இக்குழுவின் தலைவர் காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திரதேவ், இக்கேள்விகளை பலமுறை அனுப்பியுள்ளார். முறைதவறி நடந்து கொண்டார்கள் என்ற சொல்லுக்குச் சரியான அர்த்தம் என்ன? என்று தெரிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார். ஒரு எம்.பி. முறை தவறி நடந்து கொண்டதாகத் தெரிய வந்தால், அவரை எம்.பி. பதவியில் இருந்து விலகுமாறு கேட்க அவர் சார்ந்துள்ள கட்சிக்குக் கட்டாயம் ஏதும் உள்ளதா என்று கருத்து தெரிவிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். எந்தெந்த செயலையெல்லாம் முறை தவறிய செயல் என்று வகைப்படுத்த வேண்டும் என்று இக்குழு கேட்டுள்ளது. ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ செய்யும் எல்லாத் தவறுகளையும் முறை தவறிய செயல் என்று முத்திரைக் குத்தி விடமுடியாது என்றும் கூறியுள்ளார் கிஷோர் சந்திரதேவ். ஒரு எம்.பி. வாகனத்தில் வரும்போது போக்குவரத்துச் சிக்னலை மீறிச் சென்றால் அது முறைகேடு அல்ல என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு எம்.பி. செய்தால் அதுவும் அவரது முறைகேடான செயல் என்று முடிவு செய்யலாமா? என்று கேட்டுள்ளார் தேவ்.எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை ஒரு எம்.பி. தவறாகப் பயன்படுத்தி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வதையும், மற்ற விதமான குற்றங்களை அவர் செய்வதையும் வேறுபடுத்தலாமா? என்றும் அவர் கேட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கியதாக புகாருக்கு ஆளான 11 எம்.பிக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி புலன்விசாரணை நடத்துமாறு போலீஸôருக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 எம்.பிக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாகும்.இதேபோல எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுமதியின்றி அழைத்துச் சென்றதற்காக குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பாபுபாய் கட்டாரா மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில்தான் எம்.பிக்கள் முறைகேடாக நடந்துகொண்டார்கள் என்பதை எப்படி முடிவு செய்வது என்று அறிய நாடாளுமன்ற உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு எம்.பி. செய்தால், நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகுதான், அவர் முறை தவறி நடந்து கொண்டதற்காக நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்று இந்தக் குழு கேட்டுள்ளது.
கேள்வி :
முறை தவறி நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே பல சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. இது உயர்ரகக்காரர்களின் முறைதவறி. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பது அவர்களுக்கு மறந்தேபோய்விட்டதால் உயர்ரகக்காரர்கள் என்று தங்களுக்குத் தாங்களே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இவர்கள் முறைதவறி நடந்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டினால், அது எந்தவகையிலான முறைதவறி என்பதை நிர்ணயிக்க குழு அமைத்திருக்கிறார்கள். சட்டம் என்பது சாமான்யன் முதல் சகலருக்கும் ஒரே நீதியைச் சொல்லக்கூடியது என்பதும் இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. முறைதவறி நடந்துகொண்டால் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? என்பதையெல்லாம் முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தலைவர் ஒரு காங்கிரஸ் எம்.பி. இவர் தலைமையிலான குழு இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கிறது. இருக்கிற சட்டத்தின்படி தண்டனைகளை வழங்காமல் புதிய முறையை அறிய முற்படுகிறவர்கள் கருத்துக்களை யாரிடம் கேட்க வேண்டும்? அந்தக் குழுவுக்கு யாரை தலைவராக நியமிக்கவேண்டும்? ஓர் ஓய்வுபெற்ற தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம்..... ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாம். மக்கள் உட்பட எல்லோரின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யலாம். அதைவிட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மட்டும் கேட்டுவிட்டு, ஒப்புக்கு கல்வியாளர் உட்பட சிலரிடம் கேட்பது எப்படி நியாயமாக இருக்கும்? குழு எடுக்கிற முடிவு எந்தவகையிலும் தங்கள் அதிகாரத்தைப் பாதித்துவிடக்கூடாது என்கிற தெளிவான எண்ணத்துடனே காங்கிரஸ் எம்.பி. தலைமையில் குழு அமைத்திருக்கிறார்கள் என்றால் எதற்கு இந்த நாடகம்? குழுவே அமைக்காவிட்டாலும் உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஒருவேளை யாரும் எதிர்பாரா வண்ணம்... குழு நியாயமாகவே கருத்துக் கேட்டு... அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் சட்டம்கொண்டு வந்துவிட்டாலும்..... சட்டத்துக்குள் ஓட்டைப் போடவா உங்களுக்குத் தெரியாது?
No comments:
Post a Comment