Tuesday, June 30, 2009

போகாத சாலையின் அழைப்பு

வழக்கமாய்
போய் வருகிற
சாலைகளுக்கு
அப்பாலும் இருக்கின்றன
பல சாலைகள்

போகாத சாலைகள்
எப்போதும்
தங்கள் வசீகரங்களால்
அழைக்கின்றன

இயலாமை
வெயிலாகவும்
ஆசை
வாடைக் காற்றாகவும்
என்னிலிருந்து
நீங்கிப் போய்
பரவுகிறது
போகாத சாலைகளில்

ஏதோவொரு சாலையில்
ஏதோவொரு வனப்பில்
எதேச்சையாய்
வந்து சேர்வதுண்டு
தொலைந்த கண்கள்.

நன்றி: உயிரோசை

Thursday, June 25, 2009

டோரா, புஜ்ஜி, குழந்தைகள், அம்மாக்கள்

மதியம் 12.30 மணிக்கு
டிவிக்குள்ளிலிருந்தவாறே புஜ்ஜியோடு டோரா
வீட்டிலிருக்கும் எல்லாக் குழந்தைகளையும் கைதட்டி அழைக்கிறாள்.
டோராவுக்கு
அவள் வீட்டிற்குப் போவதற்கே வழி தெரிவதில்லை.
'நான்தான் மேப்... மேப்' என்று பாடியவாறே வந்து
ஒரு மேப் வழி சொல்கிறது:
'அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு
சொல்லுங்க
அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு.'
வீட்டை எதுக்கு இதையெல்லாம் தாண்டிப் போய்
கட்டி வைத்தீர்களெனக் கேட்காமல்,
'நாம எங்க போறோம்... டோராவோட வீட்டுக்கு
நாம எங்க போறோம்.... டோராவோட வீட்டுக்கு' - கைதட்டி பாடி அடர்க்காட்டில் டோராவோடு குழந்தைகளும் பயணிக்கிறார்கள்.
கொஞ்சத் தூரத்தில் 'உங்க கண்ணுக்கு ஏதாவது தெரியுதா' என்கிறாள் டோரா. புஜ்ஜி உள்பட எல்லோரும் பயப்படுகிறார்கள்.
குள்ளநரி ஒண்ணு மறைந்து மறைந்து வருகிறது.
'குள்ளநரி திருடக் கூடாது...
குள்ளநரி திருடவே கூடாது' - எல்லோரும் கெஞ்சுகிறார்கள்.
'என்ன.... நான் திருடுறேன்னா' என்று ரோசக்கார நரி திரும்பி ஓடுகிறது.(தாமதிச்சா பையிலிருக்கும் எல்லாத்தையும் திருடித் தூக்கிப்போட்டுவிடும்.)காட்டைக் கடக்கிறார்கள்.
அடுத்து தொங்குப்பாலம்.
அதை எப்படிக் கடப்பதெனத் தெரியாமல் தவிக்கிறார்கள்.
டோரா யோசனை சொல்கிறாள்.
'இப்படிக் கயித்தைப் பிடிச்சுக்கிட்டு எல்லோரும் சொல்லுங்க
ஜம்ப்.. ஜம்ப்.. ஜம்ப்...ஜம்ப்..'
தாண்டி முடித்து வீடு சேரும்போது
எல்லோரையும் வரவேற்று டோரா அம்மா 'ஹாய்' சொல்ல
குழந்தைகளுக்கு நன்றி சொல்லி
'நாம ஜெயிச்சிட்டோம்... ஜெயிச்சிட்டோம்' என்று டோரா பாட
வீடுகளின் உள்ளறைகளிலிருந்து வரும் அம்மாக்கள்
குழந்தைகளைவிட வேகமாக கைதட்டி ஆடுகிறார்கள்
அரை மணி நேரம் எந்தத் தொந்தரவுமின்றி
துணி துவைக்க முடிந்ததற்காக... சமைக்க முடிந்ததற்காக.
நன்றி: உயிரோசை

Wednesday, June 24, 2009

படிவம்


மணல்வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்

ஒரு விண்ணப்பப் படிவத்தில்
பெயரில்லாத
ஒரு பெயரை
தகுதியில்லாத
ஒரு தகுதியை
நிரந்தரமில்லாத
ஒரு முகவரியை
நம்பிக்கையாய்
ஒருவன் பூர்த்தி செய்கிறான்

மணல்வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
நன்றி: உயிரோசை

Wednesday, June 17, 2009

13 ஸ்தனங்கள்


1. ஒரு தும்பியாகி
அவள் விழிகளை நோக்கி
அவன் பறக்கையில்
வாலைப்
பிடித்துப்
பிடித்து
இழுக்கின்றன
அவள் ஸ்தனங்கள்.
2. பருத்த ஸ்தனங்கள்
எப்போதும்
அதிகம் பிசையப்படுகின்றன
அதிகக் கண்களால்.
3. வீட்டிற்கு வந்து
கண்களிலிருந்து
உதிர்த்த
பல நூறு ஸ்தனங்கள்
கருநாகங்களாகி
அவனைக் கொத்தின.
4. பழகிய கைகளுக்கும்
பழகிய ஸ்தனங்களுக்குமான
கிளர்ச்சித் தூரம்
வெகுவாக
விலகி
விலகி
விலகிப்
போய்க் கொண்டேயிருக்கிறது.
5. ஸ்தனங்களிலிருந்தும்
அல்குலிலிருந்தும்
ஊற்றெடுத்து
மின்சாரம் பாய்ச்சி
நரம்பெங்கும் ஓடுகிறது
இன்பநதி
ரெட்டைக் காலையும் தூக்கி
தவமிருக்கிறது இரவு
உறுருசிக்கு.
6. தகிக்க இயலா உணர்ச்சியில்
அல்குலைக்
காட்டிக் கொடுத்துவிட்டு
வேடிக்கை பார்க்கின்றன
ஸ்தனங்கள்.
7. அல்குலைப்போல்
வீங்கிச்
சாட்சிச் சொல்வதில்லை
அவளாகச் சொல்லாத வரை
ஸ்தனங்கள்.
8. வெப்பத்தில் காம மேகம்
அலைந்தலைந்து
இன்ப நிலைகளில் சேகரித்ததை
ஸ்தனங்களில் வைத்து
அலைகிறது
ஒரு நாள் பொழிய...
9. எப்படியேனும்
சுரக்க
பழக்க வேண்டுமென
தலைமுறை
தலைமுறையாய்
பசும்பாலை
தலையில்
ஊற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்
எப்போதும்போல்
தொங்கா ஸ்தனங்களோடே
விறைப்பாய் நிற்கின்றன
கற்சிலைகள்.
10. மூன்று ஸ்தனங்கள்
நான்கு ஸ்தனங்கள்
கொண்டவள்
எந்தத் தேசத்திலிருந்தாலும்
' சாட்' செய்யவும்.
11. பருத்து தளும்பும்
மேல் சதையிடம்
கற்பு பேசுகின்றன
நடிகையின்
ஸ்தனக் காம்புகள்.
12. கட்டுகிறாள்
எடுப்பாய் இல்லை
துகிலுறித்துக் கொள்கிறாள்
கட்டுகிறாள்
எடுப்பாய் இல்லை
துகிலுறித்துக் கொள்கிறாள்
ஸ்தனங்கள் இல்லாவிட்டால்
சரியான
ஒத்துழைப்பு கொடுப்பதில்லை
சேலைகளும்.
13. கொழுத்த ஸ்தனங்களை
ருசிக்க
ரூ.நூறு கேட்டு
கைப்பிடித்து அழைக்கும்
இரவோரத் தோழிகளில்
ஒருத்தி
அறுவைச் சிகிச்சையில்
ஒரு ஸ்தனத்தை இழந்தவள்.
நன்றி: உயிரோசை

Monday, June 15, 2009

புகைவண்டிக் கன்றுக்குட்டிகள்
நாலரை மணிக்குத்தான் வரும்
எனில்
நாலு இருபதுக்கே

யானை குளத்தோரத் தண்டவாளங்களில்

புகைவண்டியைச் சுவாசிக்கும் கன்றுக்குட்டிகளாய்

துள்ளிக் குதித்து குழைவோம் அந்நாள்களில்


கால்சட்டை அணியும் லதாவும்

சிவப்பு ரிப்பன் பின்னலிட்ட சடைமுடி முரளியும்

ஒத்த தண்டவாளத்தில்

பிடிமானம் இல்லாமல் நடந்து பந்தயமிடுவார்கள்

கீழே கால் படாமல்

அதிக தூரம் நடந்து

லதாவே எப்போதும் ஜெயிப்பாள்


வாயோசையில் ஓடும் என் புகைவண்டியின்

கால் சக்கரங்கள்

தண்டவாளத்தின் ஒவ்வொரு நடு கட்டை

நிலையத்திலும் நின்று

பத்து கட்டைகளுக்குள்

திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறைக்குப் போய்ச் சேர்ந்து

திரும்பி வரும்


அக்குளுக்குள் உள்ளங்கையை அழுத்திக் கொண்டு

தோள்பட்டையைத் தூக்கித்தூக்கியடித்து

அழுக்குச் சத்தம் எழுப்பும் சிங்காரம்

வண்டி வருமோசை கேட்டதும்

சின்ன செங்கல் துண்டையும்

காய்ந்த களிமண் உருண்டையையும்

தண்டவாளத்தில் இடைவெளிவிட்டு வைத்து

எல்லோரையும் தூர வந்து நிற்கச் சொல்லி கத்துவான்

ஓட்டுநரின் கரிகட்டை வீசலுக்கு நடுங்கி


தூரத்தில் அதிராது வருவது

நெருக்கத்தில் வந்ததும்

திடீரென மோதி கிழிக்கிற சத்தத்தால்

எங்கள் தோல்களைக் கிழித்துக்கொண்டு

நரம்புகளைத் தண்டவாளமாக்கி

தடதடத்து அதிரப் புகுந்து வளைந்து போகும்


ஞாபக மூலையில் கடைசிப் பெட்டியும்

போய்ச் சேர்ந்ததும்

அரைக்கப்பட்டிருக்கும் திருநீறு குங்குமத்தை

சூடாயெடுத்து வந்து பூசிவிடுவாள் சத்தியவாணி


தடம்புரண்டு தொலைக்காட்டில் தொலைந்து

இருபது வருடங்களுக்குப் பிறகு

நேற்றைய பனிக் காலையில்

ஊரில் என்னைக் கண்டெடுத்துக்கொண்ட

முதல் பார்வையில்

லதாவைப் பார்த்தேன்


சேர்ந்த வாழ்க்கையின்

மனம் ஒத்த தண்டவாளத்தில்

குறைந்த தூரமே நடந்து

முரளியால் தோற்கடிக்கப்பட்ட

நடையைச் சொன்னாள்


நேற்று மாலை

நாலு இருபதுக்கு

இரண்டாம் முறையாக

லதாவைப் பார்த்தேன்

வசூலில்லாத ஈர்ப்பால் அதிகாரப் பறவைகள்

நிரந்தரமாகப் பெயர்த்தெடுத்துப் போயிருந்த

தண்டவாளங்களை நினைத்து

ஏங்கி வீங்கி புல்முளைத்து

நீண்டு போகும் மண்சுவடுகளில்

என் புகைவண்டியை ஓட்டத்தொடங்கியபோது...

நன்றி: வார்த்தை

Friday, June 12, 2009

நிலவோடு நண்டுநிலவுக்கும்

மூன்று லட்சத்து
எண்பத்தி நாலாயிரத்து
நானூற்று மூன்று கி.மீ.
தூ
மி
ரு
க்
கு
ம்

நண்டுக்கும்
இடையேயிருப்பது
பகையா?
உறவா?

நிலவு பூரணமாயிருக்கையில்
இது சதையிலாது கூடாக மேய்கிறது
நண்டு முழுதாய்க் கொழுத்து அலைகையில்
அது பிறையுமிலாது இருளாய்க் கரைகிறது

ஆளுகைக்கு வருகையில்
மாறிமாறி அழித்துக்கொள்கின்றனவா?
அல்லது..
ஆபத்துக் காலங்களில்
சிபி சக்கரவர்த்திபோல தங்களை
அறுத்து கொடுத்துக் கொள்கின்றனவா?

இரண்டிற்குமிடையில்
ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும்
என் விருப்பம்
பௌர்ணமியில் நிலவு
அமாவாசையில் நண்டு
நன்றி: நவீன விருட்சம்

Thursday, June 11, 2009

நீர்மாலை

நிசி விறைத்த பனியில்
மூழ்கிக்கிடந்தது
வேலிக்கம்பிகளுக்குள் காலி மனை
அதில் சற்றுமுன் முளைவிட்ட
நெல்விதையொன்று
உள் பரவும் காற்றில்
தன் சகங்களின் வாடையை நுகரத் துடித்தது
வேரில் சுழலும் ஊற்றில்
தன் சகங்களின் உறிஞ்சோசையைக் கேட்கத் துடித்தது
ஏதும் உணராததில் சுணங்கி
இருளை நகர்த்தித் தள்ளத் தொடங்கி
துவண்டு
வெளிச்சத்துக்கு வழிவிட இறைஞ்சியது
விடி சிறகோசைகளில்
மேலும் சிறு துளிர்த்த உயரத்திலிருந்து எக்கி
பிஞ்சு பச்சையம் பதற
முன்னும்பின்னுமாக வலமும் இடமுமாக
அசைவற்ற பார்வையால் தேடித்தேடிப்பார்த்து
பெருகின தன் அடர்காடு காணாது தவித்தது
அசை செடி முட்கள்
நெருங்கி வந்துபோன திகைப்பில்
தானேவொரு களையாய் வேரிடுவதாகத் துணுக்குற்றது
அதைச் சீந்தாது கால்கள் கடந்ததும்
தனித்து உயிர்க்காது
சவத்தின் இறுதி நீராடலுக்கு
நிரப்பி வரும் நீர்போல
துளிதுளியாய் ஊற்றை
உள்ளுக்குச் சுமக்கத் துவங்கியது.
நன்றி : வடக்கு வாசல்

Tuesday, June 9, 2009

எல்லாம் காற்றுவாழ்வனவே...

காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்
தோள் மாட்டி பை முழுவதும்
எண்ணிறாத பறவைகளின்
வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன
காற்றில் ஒற்றையில் அலைந்து
இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று
கண்டறிந்ததாய்ச் சொன்னவை:
தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும்
மீன்கள் அதிகம் ருசிக்கும்
வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்
தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்
ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்
ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்
அரச மரத்துக் காற்றால்
மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்
அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம்
அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்
மரங்களில் முட்கள் முளைப்பதற்கு
முரடர்கள் சுவாசக் காற்றே காரணம்
பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு
முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம்
சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை:
பறத்தல் எனும் வினை
தேர்ந்த கண்கட்டு வித்தை
காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன
எல்லாம் காற்றுவாழ்வனவே...
துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன
துடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்களில்
பிரபஞ்ச ரகசியத்தின் பிடிபடலிருக்கும்
களைப்பைப் போக்க
கடலைச் சில்லறைத் துளிகளாக்கி
அதன் ஈரப்பதத்தில் காற்று சாய்வு கொள்ளும்
உயர மிதக்கும் பறவையின் நிழலைக்
காற்று கீழே பிரதிபலிக்கவிடுவதில்லை
ஓரிடத்தில் பறவைகள்
அதிகம் குவிவதால் நேரும் சரிவால் புயல்
பெருமூச்சுகளின் வெப்பம் கூடுவதால்தான் வெக்கை
சுவாசித்தலுறவை முறித்துக் கொள்ளும் எதையும்
காற்று கரைத்து இன்மையாக்கிக் கொள்ளும்.
நன்றி: நவீன விருட்சம்

Monday, June 8, 2009

சீழ்க்கை வளையம்


பனி பூத்த குளத்தில்
கல்லெறிந்து போகிற சிறுமியாக
கருக்கல் தெளிவில்
சீழ்க்கையடித்து பறக்கிறது
முதல் குருவி

கலங்கிய மேகம்
சீழ்க்கையைக் கடத்தி
வானமெங்கும் போகிறது
வளையம்
வளையமாய்.
நன்றி: உயிரோசை

Friday, June 5, 2009

புணர் சிற்பம்


உச்சத்தை எட்ட
நூற்றாண்டு பலவாய்
முடிவுறாத
முயங்கலில் இருக்கின்றன
அச் சிற்பங்கள்

தாங்க முடியாத முனகல்கள்
புறாக்களாகப் பெருகிப் பறக்கின்றன

கிளை பிரிந்து
பரவும் வியர்வைகள்
கரும்பாறைச் சுவரை
சில்லிடும்
மென் மஞ்சமாக்குகின்றன

தரிசனத்துக்கு வருபவர்கள்
இயல்பு உடைந்து
விந்து ஊறும் விழியால்
தொய்வடையா சிற்ப உறுப்புகளை
மேலும் நீவி விடுகிறார்கள்

உருவிக்கொண்டு
தரையிறங்கி வரும் சிற்பங்கள்
இடைஞ்சல் புரியும்
பெருமூச்சுகளைக் களைந்து
புணர்ந்துபோட்டுவிட்டு
மீண்டும் போய்
முயங்கத் தொடங்குகின்றன.
நன்றி: உயிரோசைThursday, June 4, 2009

மாம்பழ எழுத்துகள்


மாம்பழத்திலிருந்து
வடியும் பால்
என்னைப் பார்த்து
ஏதோ ஒன்றை
அழுத்தமாக எழுதுகிறது
உறுதியாய் தெரியும்

அது
என்னைப் பார்த்துத்தான்
எழுதுகிறது

வண்டின் ரீங்காரத்தால்
எப்படியும்
அதைப் படிப்பேன்.
நன்றி: உயிரோசை

Tuesday, June 2, 2009

பூனையின் உலக இலக்கியம்

எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத் தெரியும்

வீட்டிற்கு வரும்
லியோ டால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயா லூயிஸô பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸôதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்

மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
'மழையில் பூனை'* சிறுகதையை
ஒரு குளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்

உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே'

வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.
நன்றி: நவீன விருட்சம்

Monday, June 1, 2009

பல்லியைப் பற்றிய பிபாஷாவின் புகார்கள்


பல்லி பொல்லாதது.
வீட்டில் தனித்திருப்பது தெரிந்ததும்
மேல் தளத்திலிருந்து பக்கவாட்டுச் சுவருக்கு
நகர்ந்து வந்து
சந்தோஷச் சத்தமெழுப்பி அழைக்கிறது.
வராந்தா, வெளியறை, உள்ளறை, சமையலறையென
எங்குப் போனாலும்
பிடிக்க
பின்னாலேயே வருகிறது.
திரும்பிப் பார்த்து முறைத்தால்
போவதுபோல் போய்
அலமாரி, பாத்திரக்கூடை, அஞ்சறைப்பெட்டி, குளிர்பதனப்பெட்டி
மறைவுகளில் நின்று
ஓரக்கண்ணால் உற்றுப் பார்க்கிறது.
அசந்து படுக்கையில்
நேர் மேலாக
தளத்துக்கு வந்து
காற்று துணியை விலக்குகையில்
நாக்கை நீட்டிநீட்டி
சப்புக் கொட்டுகிறது.
காகிதத்தைச் சுருட்டி அடித்தால்
பயந்ததுபோல் ஓடுவது
குளியலறையில்
சோப்பு தேய்த்து குளிக்கிற கணம்
எங்கிருந்தோ வந்து மேலே பாய்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன்