Monday, March 24, 2008

கோபம்... மோகம்... பாகம்!
ஒளியிலே தெரிந்த தேவதையா "இப்படி நடித்துள்ளார்' என்று திகைக்கிறளவு கவர்ச்சியாகத் தோன்றுகிறார் "சிலந்தி' படத்தில் மோனிகா. இதில் அவரின் சில ரசிகர்களுக்குக் கோபம். சில ரசிகர்களுக்கு மோகம்.
இது குறித்து மோனிகா என்ன சொல்கிறார்?

"அழகி' படத்துக்குப் பிறகு "தேவதை' பட்டத்தோடு நீங்கள் வலம் வந்தாலும் அதிக படங்களில் நீங்கள் நடிக்கவில்லையே?
தேவதை பட்டத்தை "அழகி' படம் வாங்கிக் கொடுத்தாலும் அதில் நான் நந்திதாதாஸின் இளவயது பாத்திரத்தில்தான் நடித்திருந்தேன். இதனால் அந்தப் படத்திற்குப் பின் என்னை நடிக்க அழைத்தவர்கள் இரண்டாம் நாயகி பாத்திரங்களில் நடிப்பதற்கே அழைத்தார்கள். இந்த நேரத்தில் "தெலுங்கு' படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அதனால் தெலுங்கு படங்களில் நடித்தேன்.

கதாநாயகியாகவா?
ஆம். சிவராமா ராஜு, ஈ.வி.வி.சத்யநாராயணா ஆகியோரின் படங்கள் உட்பட நாலு படங்கள் நடித்தேன். ஆனால் தெலுங்கில் "தேவதை' பாத்திரங்களில் நடிக்கவில்லை. க்ளாமர் கலந்துதான் நடித்தேன். அங்கும் நல்ல பெயர்தான் கிடைத்தது.

"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் வடிவேலோடு திடீரென இணைந்து நடித்தீர்களே? மன அளவில் வருத்தமாக இருந்ததா?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை யாரார் நடிகர் நடிகைகள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஷங்கர் நிறுவனம். வித்தியாசமான கதை. நிச்சயம் பெரிய வெற்றிபெறும். எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே பெரிய வெற்றி பெற்றது. இங்கு வெற்றி பெற்றது போலவே லண்டனிலும் அமோக வெற்றி பெற்றது. லண்டனில் இப்படம் வெற்றி பெற்றதில் எனக்குதான் கூடுதல் சந்தோஷம்.
என் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் பலர் சேர்ந்து எனக்கு ரசிகர் மன்றம் உருவாக்கி இருப்பதுடன் என் பெயரில் இணையதளம் ஒன்றையும் நடத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இது இந்தப் படத்தில் நடித்ததின் மூலமே சாத்தியமானது.

இதற்குப் பிறகுகூட கதாநாயகியாக சோபிக்காததற்கு காரணம் நீங்கள் தமிழ் நடிகை என்பதாலா?
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பை நடிகைகளாக இருக்க வேண்டும், தமிழ் பேசத் தெரியாதவர்களாக இருக்கவேண்டும் என்கிற மனோபாவம் இங்கு அதிகமாக இருப்பதால் இருக்கலாம்.

"சிலந்தி' படத்தில் நீங்கள் கவர்ச்சியாக நடிப்பதற்கு இதுதான் காரணமா?
"அழகி' படத்தில் நடித்ததற்காக பெரும் சந்தோஷம் அடைகிறபோது எனக்கு ஏற்படுகிற சிறு வருத்தம், தேவதையாக நடித்துவிட்டேன் என்பதுதான். விளம்பரங்களில் நடிக்க அழைக்கிறவர்கள்கூட சேலை அணிந்துகொண்டு தேவதையாக வலம் வருவதுபோலவே நடிப்பதற்கு அழைக்கிறார்கள். இந்தப் பாத்திரம் இப்போது வருகிற படங்களுக்கு அதிகளவில் தேவைப்படாது.
இதன் காரணமாகவே எனக்குக் குறைவான வாய்ப்பு கிடைப்பதாக நினைக்கிறேன். இதன் காரணமாகவும் கவர்ச்சி பாத்திரத்தில் நடிக்கிறேன் எனலாம். கவர்ச்சியாக நடிப்பது ஒன்றும் வெறுக்கத்தக்கது அல்ல. நடிப்பில் அதுவும் ஒரு பாகம். அதற்காக எல்லாப் படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று அர்த்தமில்லை. கதைக்கேற்ற வகையில்தான் நடிக்கிறேன். தெலுங்கு படங்களிலேயே கவர்ச்சியாக நடித்தேன் என்றாலும் "சிலந்தி'யில்தான் அதிக கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். இது கதைக்கு அவசியம் தேவையாக இருந்தது.

சிநேகா போன்று குடும்பப்பாங்கான பாத்திரங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
சில படங்களில் அவரும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். மற்ற மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இது அவரவர் விருப்பம்.

ஒரு படத்தை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
நான் வசதியான குடும்பத்திலிருந்தோ, சினிமா தொடர்புடைய குடும்பத்திலிருந்தோ வரவில்லை. நடுத்தர குடும்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு நடிக்க வந்திருக்கிறேன். எனக்குப் பணம் முக்கியமில்லை. நல்ல நடிகை என்கிற பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்குத் தகுந்தாற்போல் நல்ல கதையுடன் பெயர் கிடைக்கிற வகையிலான கதாபாத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

நடிப்பைத் தவிர சினிமாவில் வேறு எதில் ஆர்வம்?
இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் ஆர்வம் இருக்கிறது. முறையாக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.

வேறு ஏதாவது படத்தில் நடிக்கிறீர்களா?
"வர்ணம்' என்கிற தமிழ் படத்திலும், சிங்களப் படமொன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

Saturday, March 8, 2008

பெண் பெயரில் ஆண் எழுதினால் குழப்பம்! - வெண்ணிலா


கவிதை, கதையில் அதிக ஆளுமை செலுத்தி வரும் வெண்ணிலா இப்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.
ஒன்று: சார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் சமீபத்தில் கவிதை விழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர் வெண்ணிலா. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு அளவில்லா சந்தோஷம்.


இரண்டு: "மீதமிருக்கும் சொற்கள்' என்ற தலைப்பில் வை.மு.கோதை நாயகியம்மாள் முதற்கொண்டு 46 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகள் பல வெளிவந்திருந்தாலும் இதுபோன்று முழுமையான பெரும் தொகுப்பு வந்ததில்லை. இப் பணிக்காக வெண்ணிலா பெரிதும் இலக்கிய வட்டாரத்தில் பாராட்டு பெறுகிறார்.
இரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கும் அவரிடம்
பேசினோம்.
மீதம் அவரது சொற்களில்:


ஒரிசாவில் நடந்த கவிதை திருவிழாவின் சிறப்பு?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்த சார்க் கூட்டமைப்பில் இலக்கிய பிரிவு ஒன்றும் உண்டு. இந்த இலக்கியப் பிரிவு சார்பில் மூன்று நாள் கவிதை திருவிழா ஒரிசாவில் நடைபெற்றது. எட்டு நாடுகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதைப் படித்தனர்.
தமிழகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரும், நானும் கலந்துகொண்டு கவிதைப் படித்தோம். "பின் இருக்கை' என்ற தலைப்பில் கவிதையொன்றை தமிழில் படித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் படித்தேன். என்னுடைய கவிதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழியினரின், பல்வேறு நாட்டினரின் கவிதைகளைப் பரிமாறிக்கொள்கிற வகையில் இப்படி ஒரு விழா நடத்துவதே சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.


கவிதைத் திருவிழாவின் மூலம் நீங்கள் கற்றது?
இங்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்விழாவில் வெறும் கவிதை படிக்கப்பட்டதுடன் ஒரிசா மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கவிதை பற்றிய கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இது என்னளவில் பெரிய மனக்குறையாக இருந்தது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால்தான் மற்ற மொழியினரின் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். படிக்கப்பட்ட கவிதைகளை வைத்துப் பார்க்கிறபோது நவீன தமிழ் கவிதைகளுக்கு நிகரான கவிதை மற்றமொழி கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். சந்தம் வடிவிலான கவிதைகளையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடுபொருள்கள் எல்லாம் நாம் எப்போதோ பாடியதாக இருக்கிறது. தொலைபேசியைப் பற்றியெல்லாம் நாம் எப்போதோ பாடிவிட்டோம். அவர்கள் இப்போதுதான் பாடுகிறார்கள். சிறப்பு என்று கருதி ஒன்று சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் கவிஞர்களைச் சொல்லலாம். அவர்கள் "கஜல்' வடிவிலான கவிதைகளாகப் படித்தார்கள். யுத்தத்தைப் பற்றிய கருப்பொருளாக இல்லாமல் மண் சார்ந்த கவிதைகளாக இருந்தது சிறப்பு.


"மீதமிருக்கும் சொற்கள்' தொகுப்பை எத்தனை ஆண்டுகளாகத் தொகுத்தீர்கள்?
"கனவுப்பட்டறை' சார்பாகத்தான் பெண்ணிய சிறுகதைகளைத் தொகுக்கிற பணியைத் தொடங்கினேன். கடைசியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான் இப்புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்தத் தொகுப்பிற்காகச் செலவிட்டிருக்கிறேன். வரலாற்று ஆவணமாகத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டுத் தேடித் தொகுத்திருக்கிறேன். அதைப்போலவே வந்திருக்கிறது. மொத்தம் எழுபது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்தோம். இதில் 45 பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுதான். உதாரணமாக எஸ்.ரங்கநாயகி என்கிற பெண் எழுத்தாளர். அவர் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். "கலைமகள்' அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளர் அநுத்தமாவைச் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கு விவரம் தெரியவில்லை. இப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.


இத்தொகுப்பைத் தொகுத்ததன் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள்?
புத்தகமே எழுதுகிறளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 1930 முதல் 2004 வரையில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் 60 வரை எழுதிய எழுத்தாளர்களைப் பார்த்தோமானால், எழுதிய எழுத்தாளர்கள் எல்லோருமே மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களாகவே இருக்கின்றனர். 40-க்குப் பிறகே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கிருத்திகா போன்றோர் வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அதிகளவில் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய எழுத்துகள் அவர்களுடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கணவன்-மனைவி சண்டை போன்ற விஷயங்களைப் பற்றியே கதை எழுதியிருக்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய எழுத்துகள் சிலர் சொல்வதுபோல இலக்கியமாகாவிட்டாலும், போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்துகள், பெண் விடுதலைக்காக அவர் எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்தே பலர் எழுதத் தொடங்கினர்.
வை.மு.கோதைநாயகியம்மாள் 115 நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்தை அவர் ஒரு தவமாகக் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரப்போராட்டத்துக்காக அவர் சிறையிலிருந்தபோது அவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பலகார காகிதங்களில்கூட கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதைப்போல குகப்பிரியை, குமுதினி போன்றோர் எழுத்தை நேசித்ததைப் கேட்கிறபோது நமக்கு பிரமிப்பைத் தருகிறது.
இதைப்போல மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல் எம்.எஸ்.கமலாவைப் பற்றியது. இவர் ஒரு சோவியத் மாணவி என்றும், முற்போக்கான கட்டுரைகள் எழுதக்கூடியவர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்படி கமலா எழுதிய கதைகளைத் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாமே குடும்பப் பாங்கான கதைகளாகவே இருந்தன. பிறகுதான் எம்.எஸ்.கமலா என்ற பெயரில் இருவர் இருந்தது தெரிய வந்தது.
பெயர் குழப்பத்தில் நான் சந்தித்த இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், பெண்களின் பெயரில் பல ஆண்கள் எழுதியிருக்கிறார்கள். அது தெரியாமல் நாங்கள் ஆண்கள் எழுதிய கதைகளையும் தேர்வு செய்துவிட்டோம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தான் எங்களுக்கு இதில் உதவினார். ஆண் எழுத்தாளர்களின் கதைகளை நீக்கிக் கொடுத்தார். பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுகிறபோது வரலாற்றுக் குழப்பங்கள் எதிர்காலத்திலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


இப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே?
உண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.


- முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன!

Thursday, March 6, 2008

'விழா'மலே..!


ஃபைவ் ஸ்டார் ஓட்டல். அதிரும் மேற்கத்திய இசைக்கிடையே அங்கு அரங்கேறுகிறது ரேம்ப் ஷோ. அழகழகான ஆண்-பெண் மாடல்கள் கேட்-வாக் போட்டு வந்து அந்தப் பொருளை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மாடலும் வரவர கூடி நிற்கிற "காஸ்ட்லி' கூட்டம் குலுங்கி குலுங்கி கைதட்டி உற்சாகமாக வரவேற்கிறது. கிடைக்கும் வரவேற்பில் கூடுதலாக ஒருமுறை திரும்பி நின்று நளினப் புன்னகையை வாரி இறைத்துவிட்டுப் போகிறார்கள் மாடல்கள்.
ஷோ முடிகிறது. ஒவ்வொரு மாடலாகச் சென்று அவர்களுக்குப் பாராட்டு கிடைக்கச் செய்தமைக்காக ஓரத்தில் நிற்கும் இருபது வயது பிரியங்காவுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அப்படி அவர்கள் நன்றி தெரிவிப்பதற்கு பிரியங்கா, மாடல் கோ-ஆர்டினேட்டரோ, அறிமுகப்படுத்தப்பட்ட பொருளின் முதலாளியோ இல்லை. இந்நிகழ்ச்சியின் மேலாண்மையாளர்.

நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) இப்போது ஒரு கலையாகவே மாறி வருகிறது. இம்மேலாண்மையாளர்கள் இல்லாமல் பெரிய நிகழ்ச்சி எதுவும் இப்போது நடைபெறுவதே இல்லை. இதில் சிறப்புற்று விளங்கும் பிரியங்காவோடு பேசினோம்:

""ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்தேன். கடந்த ஆண்டுதான் முடித்தேன். படிக்கும்போதே அப்பா கிரண் ஜெயினோடு சேர்ந்து பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். பிறகு நானே தனித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இப்போது நிகழ்ச்சி மேலாண்மைக்கு அதிக வரவேற்பு இருப்பதையடுத்து இந்தத் துறைக்கு வந்துவிட்டேன். "ஃப்ரெண்ட்ஸ் கான்செப்ட்' என்று எங்களுடைய நிறுவனத்தின் பெயர். தோழிகள் இருவரோடு சேர்ந்துதான் இந்த நிறுவனத்தை நடத்துகிறேன்.

ஒரு திரைப்படத்திற்கு இயக்குநர் எவ்வளவு முக்கியமான நபரோ அதைப்போல ஒரு நிகழ்ச்சி அழகாக, சுவாரஸ்யமாக நடைபெறுவதற்கு மேலாண்மையாளர் முக்கியமானவர்.
ஒரு பொருளை அறிமுகப்படுத்துகிற நிகழ்ச்சி என்று வைத்துக் கொள்வோம். நிறுவனத்தார் எங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதன்படிதான் நாங்கள் செய்கிறோம். நிகழ்ச்சி நடத்துவதற்கான முழு பொறுப்பையும் எங்களிடம் விட்டால்கூட அதைச் செய்கிறோம்.

எந்தப் பகுதியில், என்ன வகையான பொருளை அறிமுகப்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து அதை நம்முடைய "கிரியேட்டிவிடி'யோடு சேர்ந்து அறிமுகப்படுத்துகிறோம். கிரியேட்டிவ்தான் இத்துறையின் உயிர் போன்றது. கிரியேட்டிவிட்டி இல்லாமல் இத்தொழிலில் நிற்க முடியாது.

பொருள்களை அறிமுகப்படுத்திற நிகழ்ச்சி என்றுதான் இல்லை. அரசு, நிறுவனங்கள், விஐ.பி.களின் குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்தையும் மேலாண்மை செய்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கிரியேட்டிவ் பணியோடு, வந்திருப்பவர்களை கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய சுவாரஸ்ய நிகழ்ச்சிகளும் தேவை. என்ன மாதிரியான சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். எந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்பதை வகுத்துக் கொடுக்கிறோம்.

எயிட்ஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் குஷ்பு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை நாங்கள்தான் மேலாண்மை செய்தோம். நாங்கள் வழங்கிய முறையில் குஷ்புடன் வந்திருந்தவர்களும் கவரப்பட்டு நன்றாக இருந்ததாகப் பாராட்டினார்கள். இதைப்போல தாஜ் கோரமண்டல் ஓட்டலில் "ரேம்ப் ஷோ' ஒன்றை மேலாண்மை செய்தோம். தமிழகத்தின் டாப் மாடல்கள் எல்லாம் இதில் கலந்து கொண்டார்கள். இதை வழங்கிய முறைக்காகவும் நாங்கள் பாராட்டப் பெற்றோம்.

இப்போது தமிழக அளவிலேயே செய்து கொண்டிருக்கிறோம். போகப்போக இந்தியா முழுவதும் இயங்குவதுடன் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இதைப்போல "ஃப்ரெண்ட்ஸ் கான்செப்ட் கிளப்' ஒன்றையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் கிரியேட்டிவ் எண்ணங்கள் உள்ள இளைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமூகத்துக்கு ஏதாவது உதவ வேண்டும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். அது எந்த வகையில்? என்ன வகையில்? என்பதையெல்லாம் இன்னும் திட்டமிடவில்லை'' என்கிறார் பிரியங்கா.

""உங்களுடைய சொந்த விருப்பங்களின் மேலாண்மையாளர் யார்?'' என்று கேட்டால், சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு வருகிற பதில் ""அப்பா, அம்மா''.