Saturday, January 20, 2018கறுப்பு நிழல் தேடும் வீடு


உலகின் முதல் படைப்பு எந்த மனநிலையால் உந்தப்பட்டிருக்கும்?
காதல், காமம், சினம், வீரம், முதல் கண்டடைதல் என எதுவாகவும் இருக்கலாம்.
ஆனால், கறுப்பு இலக்கியம் எனப்படும் கறுப்பின மக்களின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம், துயர மனநிலையிலேயே முதல் படைப்பு கருவாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
கால நிலை ஏற்றங்களில் படைப்பின் பரப்பு உலக அளவில் விரிவடைந்துகொண்டே சென்றாலும், கறுப்பின மக்கள் மட்டும் துயரத்தின் கைவிலங்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

லாங்ஸ்டன் ஹியூஸின், 'உலகில் ஒரு வீடு' எனும் கவிதை:


நான் வீடு தேடிக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகத்தில்
வெள்ளை நிழல்
படியாத ஒரு வீடு
அப்படியொரு வீடு இல்லை
கறுத்த சகோதரர்களே
அப்படியொரு வீடு
எங்குமே இல்லை

வெள்ளை நிழல் எவ்வளவு கொடூர வன்முறை கொண்டது என்பதை சரித்திரத்தின் கண்ணீர்ப் பக்கங்கள் சாட்சியங்களாக உள்ளன. அந்த நிழலின் வன்முறையை நாம் அறியாதவர்கள் அல்ல. அப்படி அறிந்ததை விடுதலையான 60 ஆண்டுகளில் மறந்து போயிருக்கலாம் அல்லது நாம் கறுப்பர்கள் அல்ல எனக் கொள்ளலாம்.
ஆனால், வெள்ளை நிழலாக அறிவித்துக் கொண்டவர்கள் பிற எந்த வண்ணத்தையும் கறுப்பு நிறத்துக்குள் நிறுத்தி ஒடுக்குவதை பொழுதாக்கமாகவே வைத்துள்ளனர். அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நாளும் அவர்கள் முனைந்தது இல்லை.
வெள்ளை நிழல் என்பது நிறத்தை மட்டும் குறிப்பது அல்ல. முதலாளித்துவம்,மதவாதம், ஜாதியவாதம் என அதன் பெயர்களும் வடிவங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், ஒடுக்குதல் என்கிற பொது பண்பை மட்டும் இழப்பதே இல்லை. இந்த உலகை எல்லா நிலைகளிலும் இரண்டாகப் பிளப்பதைத் தடுக்கவே முடியாதா?


லாங்ஸ்டன் ஹியூஸின் மற்றொரு கவிதை:


களைப்பு


உலகம் அழகாக அன்பாக
நல்லதாக மாறிவிடுமெனக்
காத்திருந்து களைத்துப் போய்விட்டேன் நான்.
நீங்கள்?
ஒரு கத்தியை எடுப்போம்
இந்த உலகை இரண்டாகப் பிளப்போம்
விதையைத் தின்றுகொண்டிருக்கும்
புழுக்கள் எவையென்று பார்ப்போம்


- இந்தக் கவிதைகளுடன் லாங்ஸ்டனின் 33 கவிதைகளும், மாயா ஏஞ்சலுவின் 10 கவிதைகளும், எதேல்பர்ட் மில்லரின் 8 கவிதைகளும் அடங்கிய வெள்ளை நிழல் படியாத வீடு என்ற மொழியாக்க கவிதை தொகுப்பு அருமை. ரவிக்குமார் மொழியாக்கம் செய்துள்ளார்.

மாயா ஏஞ்சலுவின் கவிதை, "கடக்கும் காலம்'. கறுப்பு வெள்ளை வேறுபாட்டை உணர்த்தும் துயர வரிகளைக் கொண்டவை அந்தக் கவிதை:


உன்னுடைய தோல் விடியலைப் போன்றது
என்னுடையது அந்தியைப் போன்றது

ஒன்று நிச்சயமான முடிவின் துவக்கம்
மற்றது உறுதியான துவக்கத்தின் முடிவு.
நூல்: வெள்ளை நிழல் படியும் வீடு - கறுப்புக் கவிதைகள்- ரூ.40, வெளியீடு: மணற்கேணி

Monday, January 8, 2018

மகிழ்ச்சியான பனைமரம்


மகிழ்ச்சியான பனைமரம்


மெரீனா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். விழா நாள்களில் லட்சத்துக்கும் அதிகம். அப்படி வருபவர்களில் எவர் கண்களுக்கும் சிக்காமல் ஒரு பனைமரம் நெடுங்காலமாக அங்கு நிற்கிறது. அது மாயவித்தை கற்று, தன்னை மறைத்துக் கொண்டு வேடிக்கை காட்டும் மரம் அல்ல. உயிருள்ள மரம். பனங்காடு செழித்திருந்ததன் அடையாளமாக நிற்கும் ஒற்றை மரம். அவசர யுக வாசிகளுக்கு அந்த மரம் தெரிவதில்லை. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி கண்ணை மறைத்துவிடுகிறது. ஆனால், கவிஞர் வெய்யிலுக்கு அந்த மரம் கவிதையாகத் தரிசனம் தந்துள்ளது.

மெரீனாவிற்கு காவல் நிற்கிறது
ஒற்றைப்பனை
கண்ணகி சிலைக்குச் சற்று பின்னே.
வாசனையெழ
அலைகுடிகளின் அடுப்புகள் புகைகின்றன
அதன் தூரில்
வித்தைக் குரங்குகளின் இடுப்புக்கயிறு
முடிச்சிடப்பட்டிருக்கிறது.
ஈனவே ஈனாத ஆண் பனையது- ஆனாலும்
பார்க்க சில நேரம்
கொற்றவையைப் போல
கொல்கவி ஔவையைப்போல
இருட்டுகிற நேரத்தில்
அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல.

அந்நியத் தேசத்தில் சொந்த சகோதரனை யதேச்சையாக கண்டு ஆரத் தழுவிக் கொண்டதைப்போல பனையும் கவிஞனும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்ட பரவசத் தருணத்தை இந்தக் கவிதையில் நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கவனிப்பாரற்றவை யதேச்சையாகவோ அல்லது தேடுதல் மூலமோ கவனிப்புக்குள்ளாவதே எல்லாப் படைப்பின் ரத்த நரம்புகளாக இருக்கின்றன. இந்தக் கவிதையில் கவனிப்புக்குள்ளாவது பனை மட்டுமல்ல, அந்த மரத்துக்கு அருகில் கரைமணலில் வாழும் நாடோடிகளும். காலத்தால் பின்தங்கிய மக்கள். அவர்களை அலைகுடிகள் என வெய்யில் அழைக்கிறார். கடல் அலை பகுதியில் வாழ்வதால் அவர்களை அப்படி அழைக்கலாம். அல்லது, ஓரிடத்தில் தங்காது அலைபவர்கள் என்பதாலும் அழைக்கலாம். ஆனால், அவர்களும் பனையைப் போல மெரீனாவில் யார் கண்களுக்கும் தென்படாத மக்கள். நெடுநெடுவென வளர்ந்த பனையும், நடமாடும் மக்களுமே கண்களுக்குத் தெரியாதபோது அந்த மரத்தின், அந்த மக்களின் துயரம் மட்டும் எப்படித் தெரியப் போகிறது? ஆனாலும், அந்த மரத்தின் துயரத்தை அப்படியே வெய்யில் தர விரும்பவில்லை. காலம் முழுவதும் காத்திருந்து, அதன் வம்சத்தின் சரிதத்தை வெய்யிலிடம் தெரிவித்துவிட்டதன் மூலமே அந்த மரத்தை மெரீனாவை மகிழ்ச்சியாக காவல் காக்க வைத்துள்ளார். உலகத் துயரத்தை இவ்வளவு எளிதாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்?
/இருட்டுகிற நேரத்தில்/ அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல/ என்பது கவிதையின் கடைசி இரண்டு வரிகள். இந்த வரிகளின் முழுமையான அர்த்தத்தை கண்ணகி சிலை பின்புறம் இரவுகளில் நடைபெறுவதைக் காண்பதன் மூலமே உணர முடியும்.

மெரீனாவுக்கு மட்டுமல்ல, சூரியனுக்கே போனாலும் வெய்யில் எதைப் பார்ப்பார், அங்கு என்ன தேடுவார் என்பதற்கு ஒரு கவிதை.

நிலமிழந்த சிறுவர்கள்
மிச்சமிருக்கும்
ஒரு பனங்கிழங்கை
சூரியனின் மீது வைத்துச் சுடுகிறார்கள்
சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும்
இரு துண்டுகள் ஈயும்
அவர்களை
கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன
ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும்
மாறிமாறி நீந்தும் ஆமைக்கு
அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை.


பூமியிலிருந்தே மனிதனை அப்புறப்படுத்தும் வேலைகளை மனிதர்களே இப்போது மும்முரமாகச் செய்து வருகிறார்கள். பூமிவாசிகளின் சரிதத்தை அறிந்ததாலோ என்னவோ சூரியனும் அதன் நெருப்புக்கோளத்தைத் தாண்டி வரவிடாமல் மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறது. ஒருவேளை, அதையும் தாண்டி மனிதர்கள் சூரியனுக்குப் போனால் என்ன செய்வார்கள் என்பது இருக்கட்டும், கவிஞன் என்ன செய்வான்? பனங்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவான் என்கிறார் வெய்யில். இந்தக் கவிமனமும், நிலமிழப்பினும் சூரியனை எங்களின் அடுப்பாக்கிக் காட்டுவோம் என்கிற துணிவும் இந்த உலகத்து துயரத்தைத் துடைத்து, வேறொன்றைக் காட்டும் சேதிகள்.

யாரும் கவனிக்க விரும்பாத பன்றிகள் தமிழ்க் கவிதைகளில் உலவுவது புதிது இல்லை. குவளைக்கண்ணனின், "பன்றிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை', கல்யாணராமனின், "பன்றி' கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தக் கவிதைகள் எல்லாம் மனித நிலையிலிருந்து பன்றியைத் தூர வைத்து பார்த்து, பிறகு மனிதனையே கேலிக்குள்ளாக்குவதன் மூலம் பன்றியைக் கேலிக்குள்ளாக்கும் கவிதைகள். அவற்றிலிருந்து மாறுபட்ட முறையில் பன்றியை வெய்யில் நிறைய கவிதைகளில் அணுகியுள்ளார். அதில் ஒரு கவிதை:

என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது
அதைப் பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்
தேவையைப் பொறுத்து
அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்
சாந்தமாக இப்படிச் சொல்லும்...
"நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!'
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட
நான் புழக்கடை பக்கம் போய் மெüனமாக நின்றேன்
புரிந்துகொண்டு சிரித்தபடி
வந்து வெட்டு மேசையில் படுத்தது
அதன் காதில் சொன்னேன்
"ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன்
உன் மாமிசம் மகிழம்பூவில் வாசமாயிருக்கும்''
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாக இருக்கவில்லை
மறுநாள் நான் உறங்குகையில்
அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது
"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது
நானதன் விழிகளில்
எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.

இந்தக் கவிதை, /"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது/ என்றாலே முடிந்து விடுகிறது. ஆனாலும், பன்றியின் சிவந்த கண்களைக் கவிஞன் பார்க்க விரும்புகிறான். அது, பன்றியின் கண்கள்தான் என்றாலும் கவியின் கண்கள்தானே!நூல்:
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி - வெய்யில்
ரூ.80
கொம்பு பதிப்பகம்

Tuesday, November 24, 2015

400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள் - சா.கந்தசாமி


புத்தகம் படிப்பது எப்படி?

ஐரோப்பியக் குடும்பங்களின் தின நிகழ்வு இது. குழந்தைகளின் 3 வயதில் இருந்து 12 வயது வரையில் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, தாயோ, தந்தையோ அல்லது பணம் வசதி படைத்தவர்கள் தாதிகளையோ வைத்து புத்தகத்தைப் படித்துக் காட்டுகின்றனர். அது பாடப் புத்தகம் இல்லை. கதை, கட்டுரை, கவிதை போன்ற புத்தங்கள். அதைக் கேட்டுக் கேட்டு படிப்பின் மீது ஒரு ருசியை குழந்தைகள் தங்கள் மனதில் ஏற்றிக் கொள்கின்றனர். 12 வயதுக்கு மேல் அந்தச் சிறுவர்கள் தாமே இதரப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்தப் பழக்கத்தை இங்கும் பின்பற்றினால், புத்தகம் படிப்பது எப்படி என்ற கேள்விக்கு இடம் இருக்காது.


சிறந்த புத்தகத்தைத் தேர்வு செய்வது எப்படி?

ஆரம்பக் காலத்தில் நான் நூலகங்களுக்குச் சென்று, பல புத்தகங்களைப் படித்து, அதன் பிறகே எனக்கான புத்தகத்தைக் கண்டறியத் தொடங்கினேன். கொஞ்சம் சிரமப்பட்டு சில புத்தகங்களைப் படித்துவிட்டால், உங்கள் சொந்த அறிவே சொல்லும் எது சிறந்த புத்தகம், எது தரமில்லாதது என்று.


புத்தகம் புரியாவிட்டால் என்ன செய்வது?

புத்தகம் புரியாமல் இருக்காது. மொழியைத்தான் புரியவில்லை என்கிறீர்கள். ஆனால் உண்மையில் ஒரு புத்தகம் என்பது மொழியிலேயே இல்லை. மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும், புத்தகத்தில் மொழி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உங்கள் அறிவு கண்டுபிடிக்க முடியாதது. அறிவுக்கு மொழியில்லை. மொழியை அறிவு கிரகித்துக் கொள்ளும். மேலும் எந்த மொழியில் இருந்து ஒரு படைப்பு மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும், அந்தப் படைப்பை மனசு மொழிபெயர்த்துக் கொள்வதை நீங்கள் உணரலாம்.
எனினும் படிப்பது கடினமான வேலை. அதில் ருசி உண்டாக்கிக் கொண்டால் போதும். புத்தகம் புரியும்.

வாழ்நாளுக்குள் எல்லாப் புத்தகங்களையும் படித்து விட முடியுமா?

முடியாது.அனைத்தையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.


பாடப்புத்தகத்தை விட, இதரப் புத்தகங்கள் பயனளித்துவிடுமா?

மதிப்பெண் வாங்குவதற்காக நினைவில் இருந்து எழுதுவதுதான் பாடப் புத்தகம். ஆனால் இதரப் புத்தகங்கள்தான் மனதுக்குள் சென்று யோசிப்பதற்குத் தூண்டும். எந்தத் தொழிலிலும் சொந்த அறிவின்படி முடிவு எடுப்பதற்கு இதரப் புத்தகங்களே பயன்படும்.


ஒரு படைப்பு சாகாவரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியமா?

அவசியம் ஒன்றுமில்லை. ஆனால் நல்ல புத்தகம் என்றால் இருக்கும். நம்முடைய முப்பாட்டனார், பாட்டி தற்போது இல்லை. எனினும், நம்முடைய மனைவியாக,பேத்தியாக இருந்துகொண்டே உள்ளனர். பேச்சு அவர்கள் கொடுத்ததுதான். எனவே நல்ல புத்தகம் இருக்கவே செய்யும்.


ஒரே ஒரு புத்தகமாக உங்கள் தேர்வு?

சங்க இலக்கியப் பாடல்கள். குறிப்பாக குறுந்தொகை. அதில் உள்ள 400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள்.

Thursday, November 19, 2015

உக்கிர எழுத்துக்கான தருணம் - அழகிய பெரியவன்


தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர் என்ற வகைமை தேவையா?

பொதுவாகத் தேவை இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் அந்த அடையாளம் எப்போது தேவைப்படுகிறது என்றால், ஒருவரைச் சரியாக அங்கீகரிக்காதபோது, அந்த அடையாளம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், இந்திய அளவிலான இலக்கியத்தில்கூட, தொடக்கக் காலத்தில் இருக்கக்கூடிய இலக்கியப் பதிவுகள் அனைத்துமே மேட்டுக்குடியினரால் எழுதப்பட்டதுதான். அதில் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான, சரியான சித்திரம் இல்லாமல் இருந்தது. தலித்துகளும் இலக்கியம் சார்ந்த விஷயத்தில் அதிகமாக எழுதாமல் இருந்தனர். அந்த அடிப்படையில் தலித்துகளும் தங்கள் சொந்த அனுபவங்களையும் எழுதுவோம் என்று 90-களில் எழுத ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓர் அடையாளப் பூர்வமாகத்தான் தலித் எழுத்துகளைப் பார்க்க முடியும். ஆனால் இதை ஒரு தேவையான வகைமை என்று நான் சொல்லமாட்டேன்.

தலித் படைப்புகள் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயம் ஏற்படுத்த முடியும். இலக்கியம் என்பது அடிப்படையில் மனதோடு உறவாடக்கூடிய ஒன்று. புத்தகத்துக்கும் வாசகனுக்குமான உறவு என்பது மிகவும் அந்தரங்கமானது. தனித்துவமானது. விருப்பு வெறுப்புகள் அற்று, வாசிப்புக்கு என்றுள்ள அரசியல் எல்லாம் அற்று, ஒரு வாசகன் புத்தகத்தை நேர்மையாக அணுகும்போது, நிச்சயம் அந்த வாசகன் மனதில் பெரிய மாற்றத்தைப் படைப்பு ஏற்படுத்தும். எல்லா இலக்கியத்துக்குமே மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு. அது தலித் இலக்கியத்துக்கு உண்டு.

தலித் படைப்புகளை தலித் அல்லாதவர்கள் எழுதுவது சரியா?

தாராளமாக எழுதலாம். ஆனால் அனுபவங்கள் எழுத்தாகும்போது, அது சொந்த அனுபவமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக வெளிப்படும். அந்த வகையில் இந்திய சமூகத்தில் தலித்துகள் படக்கூடிய அவமானங்கள், வன்கொடுமைகளைத் தலித்துகள் எழுதும்போதும்தான் அது சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அது முதல் கை அனுபவம். பார்த்து எழுதுவதற்கும், அனுபவித்து எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. அது மெல்லிய கோடுதான். அதனால் தலித் படைப்புகளை தலித்துகள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறேன். அதேசமயம் தலித்துதான் தலித் படைப்புகளை எழுத வேண்டும் என்று நான் வாதிடவில்லை. தலித் அல்லாதோர் எழுதும் எழுத்துகளை தலித் சார்பு எழுத்துகள் என்று சொல்லலாம்.

தலித்துகள் எழுத்தாளர்களின் படைப்பு என்பது சுயபச்சாதாபம் கொண்ட எழுத்தாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலித்துகள் மிக நீண்ட காலமாகவே தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அது சுயபச்சாதாபமாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ இருக்கலாம். ஆனால் அது நீண்ட காலப் போக்கில் வேறு பல பரிமாணங்களையும் எடுக்கும். எல்லா மனிதர்களையும் போல, தலித்துகளுக்கும் தனித்துவங்கள் இருக்கின்றன. சுயபச்சாதாப படைப்புகள் ஒன்றிரண்டு வரலாம். ஆனால் தற்போது தலித்துகள் தங்கள் எழுத்துகளை மிக உக்கிரத்தோடு வெளிப்படுத்தும் தருணம் கனிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படியான படைப்புகளும் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. எனவே சுயபச்சாதாப எழுத்து என்பது மேலோட்டமான மதிப்பீடாகும்.

பொதுதன்மைக்குள் வராமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி மட்டுமே எழுதுவதை, சிறந்த படைப்பாகக் கருத முடியுமா?

பொது, தனி என்று பிரிக்க முடியாது என்று நினைக்கிறேன். தனி என்று சொல்வது பொதுவுக்குள் அடக்கமாக இருக்கிறது. உண்மையில் பொது என்று நீங்கள் கூறுவதை, அணுகி நெருங்கிப் பார்த்தால் தனியாகத்தான் இருக்கும். எனவே, பொது, தனி என்பதெல்லாம் இல்லை. ஒரு மனிதருக்குக் கையிலோ, காலிலோ அடிபட்டிருக்கிறது என்றால், அது மருத்துவ ரீதியாக தனித்தனியாக இருக்கலாம். ஆனால் அந்த மனிதனுக்கு உடல் முழுவதும்தானே பாதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதரைப் போன்று சிந்தனைவாதி என்ற நிலையிலோ, செயற்பாட்டாளர்கள் என்ற நிலையிலோ தற்போது தலித்துகள் யாரும் முதன்மையான நிலையில் இல்லையே?

எல்லாக் காலகட்டத்திலுமே, அந்தந்த தரப்பு மக்களின் ஒட்டுமொத்த குரலைப் பிரதிபலிப்பதற்கு கட்டாயம் ஒரு தலைவரோ, சில தலைவரோ இருப்பார்கள். இது வரலாற்று நீதி.
ஆனால் அவர்களின் செயல்பாட்டையும், களத்தையும் காலம்தான் தீர்மானிக்கிறது. ஒரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களைக் கொண்டு இன்னொரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களை மதிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

Thursday, November 12, 2015

உணர்வுபூர்வமான கலை மொழியாக்கம் - எம்.ஏ.சுசீலா

நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?

மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?

முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?

படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?

சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?

அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


குற்றமும் தண்டனையும், அசடன் இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?

அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.

Sunday, November 8, 2015

ஒயர் கூடையை இழுக்கும் வீடுஐந்தாவது மாடியிலிருந்து
நரம்புக் கயிற்றில் ஒயர் கூடையைக் கட்டி
கீழே இறக்கி
மேலே இழுக்கிறாள்
மாடு மேய்ந்து
சினை தள்ளி
கன்று ஈன்று
பால் சுரக்கிறது
காபி வேண்டியவருக்குக் காபி
டீ வேண்டியவருக்கு டீ
தயிர் வேண்டியவருக்குத் தயிர்
நெய் வேண்டியவருக்கு நெய்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
செடி முளைக்கிறது
மரம் செழிக்கிறது
அரிசி, பருப்பு, காய், கனி நிறைக்கிறது
புலாவ் கேட்டவர்களுக்குப் புலாவ்
சாம்பார் கேட்டவர்களுக்குச் சாம்பார்
கொழுக்கட்டை கேட்டவர்களுக்குக் கொழுக்கட்டை
கனிச்சாறு கேட்டவர்களுக்குக் கனிச்சாறு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
சகலத்தையும் சுமந்து
செய்தித்தாள் வருகிறது
கொலை விரும்பியவர்களுக்குக் கொலை
கொள்ளை விரும்பியவர்களுக்குக்
கொள்ளை
கற்பழிப்பு விரும்பியவர்களுக்குக்
கற்பழிப்பு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
ரகசியம் சேர்த்து
அஞ்சலில் பொட்டலம் வருகிறது
பரிசு ஆர்வலருக்குப் பரிசு
புத்தக ஆர்வலருக்குப் புத்தகம்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
அட்டைப்பெட்டி நிரம்ப
ஆம்புலன்ஸ் விளக்கு அலற
மாத்திரை வருகிறது
கூடை தேவையுள்ளோருக்குக் கூடை
கயிறு தேவையுள்ளோருக்குக் கயிறு.


நன்றி: சொல்வனம்

Friday, November 6, 2015

மொழியைக் கடத்தும் எழுத்தாளன்! - நாஞ்சில்நாடன்
சங்கப் பாடல்கள் தற்கால வாழ்க்கைச் சூழலுக்கு பொருந்தக் கூடியதா?

வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளைத் தற்காலத்தில் படிப்படியாக இழந்து வருகிறோம்.
அந்த நுட்பமான உணர்வுகளை மீண்டும் மீட்டெடுக்க சங்கப் பாடல்கள் உதவும்.
சங்கக் கால வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. மனிதத்தைப் போதித்தவை.
எனவே மனிதகுல மதிப்பீடுகளைத் தற்காலத்துக்குத் தோதாக அந்தப் பாடல்கள் மூலம் மீட்டெடுக்க முடியும்.
போர்கள் அப்போது நடந்த போதிலும் சங்கக் காலப் புலவன் போருக்கு எதிராகவே பாடியுள்ளான். இந்தக் கருத்தோட்டங்கள் தற்காலத் தமிழனுக்கும் உதவும்; படைப்பாளிக்கும் உதவும்.நவீன படைப்புகளைப் படைக்க விரும்பும் ஓர் எழுத்தாளன், சங்கப் பாடல்களில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமா?
ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு 3 ஆயிரம் வருடத் தொன்மை உண்டு. அந்தத் தொன்மையைச் சுமையாக நினைக்கும் ஆள்கள் தமிழில் இருந்தார்கள். அவர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால் நான் தொன்மையைப் பலமாக நினைப்பவன். தமிழ் மரபுகளையும், செல்வங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரு படைப்பாளி, 3 ஆயிரம் வருடத்துக்கு முன்பான மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்ற அறிவைப் பெற்றிருப்பது முக்கியம். இந்த அறிவையும், பெரும் சொற்செல்வங்களையும் சங்க இலக்கியத்தில் இருந்தே ஒரு படைப்பாளி பெறமுடியும்.
சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டால், அது புரிந்துவிடுகிறது. அதனால் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்கிறோம் என்பவர்கள் பற்றி?
முத்தொள்ளாயிரம் முழுவதையும் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பென்குவின் பதிப்பாக வெளியாகியுள்ளது. சங்க இலக்கியத்தின் 18 நூல்களையும் முழுமையாக மொழிபெயர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். திருக்குறளுக்குப் பல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. இது தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பது சந்தேகமாக உள்ளது. மொழியாக்கம் என்பது தமிழ் தெரியாவர்களுக்காக செய்வதாகும். தமிழகத்திலேயே வாழ்ந்து, தமிழிலே கல்வி கற்ற பின்னும், சங்கப் பாடல்கள் புரியவில்லை என்பவர்கள் ஷெல்லி, பெர்னாட்ஷாவை மட்டும் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?சங்கப் பாடல்களைப் பாடப் புத்தகத்திலாவது படிக்கும் ஒரு தலைமுறை இருந்தது. தற்போது அந்தத் தலைமுறையும் இல்லை என்ற நிலை உள்ளதே?
இதற்கு அரசியல்தான் காரணம். பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெறுகிறவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்புடைய பேராசிரியர்களாகவே உள்ளனர். திராவிட இயக்கம் உள்பட எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாரதிதாசன் முக்கியமான கவிஞராக உள்ளார். அல்லது இயக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். நான் தமிழில் எம்.ஏ. படித்தவன் இல்லை. ஆனால் தமிழை ஒரு மொழியாகக் கற்றவன். நான் படித்தபோது இருந்த மனப்பாடச் செய்யுளான கம்பனோ, தேம்பாவணியோ, சீறாப்புராணமோ, திருவருட்பாவோ, தாயுமானவர் பாடல்களோ தமிழ் மீது ஒரு காதலை உருவாக்கின. இன்றைக்கு அமைக்கப்படும் மனப்பாடப் பாடல்கள் முறையாக பண்டிதத் தமிழ் படித்தவர்களால்கூட மனப்பாடம் செய்ய முடியாதவை. மனப்பாடம் செய்வதற்கு என்று சில வகைகள் உள்ளன. ஆனால் இங்குள்ள மனப்பாடச் செய்யுள்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக உள்ளன. கம்பராமாயணத்தையே எரிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு அரசியல் சார்புடையவர்கள் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யும்போது, மொழிக்குப் பெரிய தீங்கு விளைகிறது.
இதுபோன்ற காரணங்களால்தான் மொழி மீதான கவர்ச்சியை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர். மொழியைச் சுமையாகக் கருதுகின்றனர். அதற்கு நாம்தான் பொறுப்பு. மாணவர்கள் இல்லை.
சங்க இலக்கியத்தால் சாதிக்க முடியாத ஒன்றை, நவீன இலக்கியம் ஏதாவது ஒன்றிலாவது சாதித்துவிட்டது என்று சொல்ல முடியுமா?
அப்படி ஒப்பிடவே முடியாது. 3 ஆயிரம் வருட மரபு கொண்டது நமது இலக்கியம் என்றால் ஒவ்வொரு நூற்றாண்டிலும், அந்த மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு புலவனே கடத்துகிறான். மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்களாகப் படைப்பிலக்கியவாதிகளே உள்ளனர்.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை பாடியவர்கள் அதைத் தொடர்ந்து பதிணென்கீழ் கணக்கு எழுதிய புலவர்கள், ஐம்பெரும் காப்பியங்கள் எழுதிய புலவர்கள், அதைத் தொடர்ந்து வரும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், சிற்றிலக்கியங்கள் படைத்தவர்கள். அதைத் தொடர்ந்து பாரதி என அவரவரும் தன்னுடைய மொழி ஆளுமையால் அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தியுள்ளனர். இப்போது தீவிரமாக எழுதி வரும் எழுத்தாளர்கள், ஏற்கெனவே உள்ள மொழியைத் தக்க வைத்துக் கொள்வதுடன், அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தவும் செய்கின்றனர். இது ஒருவகையில் ரிலே ரேஸ் ஓடுவதுபோல. சங்கப் புலவர்கள் அவர்களால் முடிந்த தூரத்துக்கு ஓடினர். பிறகு அந்தக் கோலைச் சமயக்குரவர்கள் வாங்கிக் கொண்டு ஓடினர். அப்புறம் பாரதி ஓடினார். அதன் பிறகு நவீன எழுத்தாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் மொழி தன் இருப்பையும், உயிரையும் தக்கவைத்துக் கொள்கிறது.
ஆனால் மொழியைக் கடத்தும் படைப்பிலக்கியவாதியை எந்த அரசியல் இயக்கமும் பொருள்படுத்துவதுகூட இல்லை.
மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் படைப்பாளிகள் யாரும் செயல்படவில்லை. ஆனால் எங்கள் செயல்பாட்டின் விளைவுகள் அவை.
எனவே சங்க காலப் புலவனை விட, நவீன இலக்கியவாதிகள் மேம்பாட்டவர்களா என்ற ஒப்பீடு தேவையில்லை.