Friday, November 6, 2015

மொழியைக் கடத்தும் எழுத்தாளன்! - நாஞ்சில்நாடன்
சங்கப் பாடல்கள் தற்கால வாழ்க்கைச் சூழலுக்கு பொருந்தக் கூடியதா?

வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளைத் தற்காலத்தில் படிப்படியாக இழந்து வருகிறோம்.
அந்த நுட்பமான உணர்வுகளை மீண்டும் மீட்டெடுக்க சங்கப் பாடல்கள் உதவும்.
சங்கக் கால வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. மனிதத்தைப் போதித்தவை.
எனவே மனிதகுல மதிப்பீடுகளைத் தற்காலத்துக்குத் தோதாக அந்தப் பாடல்கள் மூலம் மீட்டெடுக்க முடியும்.
போர்கள் அப்போது நடந்த போதிலும் சங்கக் காலப் புலவன் போருக்கு எதிராகவே பாடியுள்ளான். இந்தக் கருத்தோட்டங்கள் தற்காலத் தமிழனுக்கும் உதவும்; படைப்பாளிக்கும் உதவும்.நவீன படைப்புகளைப் படைக்க விரும்பும் ஓர் எழுத்தாளன், சங்கப் பாடல்களில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமா?
ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு 3 ஆயிரம் வருடத் தொன்மை உண்டு. அந்தத் தொன்மையைச் சுமையாக நினைக்கும் ஆள்கள் தமிழில் இருந்தார்கள். அவர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால் நான் தொன்மையைப் பலமாக நினைப்பவன். தமிழ் மரபுகளையும், செல்வங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரு படைப்பாளி, 3 ஆயிரம் வருடத்துக்கு முன்பான மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்ற அறிவைப் பெற்றிருப்பது முக்கியம். இந்த அறிவையும், பெரும் சொற்செல்வங்களையும் சங்க இலக்கியத்தில் இருந்தே ஒரு படைப்பாளி பெறமுடியும்.
சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டால், அது புரிந்துவிடுகிறது. அதனால் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்கிறோம் என்பவர்கள் பற்றி?
முத்தொள்ளாயிரம் முழுவதையும் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பென்குவின் பதிப்பாக வெளியாகியுள்ளது. சங்க இலக்கியத்தின் 18 நூல்களையும் முழுமையாக மொழிபெயர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். திருக்குறளுக்குப் பல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. இது தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பது சந்தேகமாக உள்ளது. மொழியாக்கம் என்பது தமிழ் தெரியாவர்களுக்காக செய்வதாகும். தமிழகத்திலேயே வாழ்ந்து, தமிழிலே கல்வி கற்ற பின்னும், சங்கப் பாடல்கள் புரியவில்லை என்பவர்கள் ஷெல்லி, பெர்னாட்ஷாவை மட்டும் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?சங்கப் பாடல்களைப் பாடப் புத்தகத்திலாவது படிக்கும் ஒரு தலைமுறை இருந்தது. தற்போது அந்தத் தலைமுறையும் இல்லை என்ற நிலை உள்ளதே?
இதற்கு அரசியல்தான் காரணம். பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெறுகிறவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்புடைய பேராசிரியர்களாகவே உள்ளனர். திராவிட இயக்கம் உள்பட எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாரதிதாசன் முக்கியமான கவிஞராக உள்ளார். அல்லது இயக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். நான் தமிழில் எம்.ஏ. படித்தவன் இல்லை. ஆனால் தமிழை ஒரு மொழியாகக் கற்றவன். நான் படித்தபோது இருந்த மனப்பாடச் செய்யுளான கம்பனோ, தேம்பாவணியோ, சீறாப்புராணமோ, திருவருட்பாவோ, தாயுமானவர் பாடல்களோ தமிழ் மீது ஒரு காதலை உருவாக்கின. இன்றைக்கு அமைக்கப்படும் மனப்பாடப் பாடல்கள் முறையாக பண்டிதத் தமிழ் படித்தவர்களால்கூட மனப்பாடம் செய்ய முடியாதவை. மனப்பாடம் செய்வதற்கு என்று சில வகைகள் உள்ளன. ஆனால் இங்குள்ள மனப்பாடச் செய்யுள்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக உள்ளன. கம்பராமாயணத்தையே எரிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு அரசியல் சார்புடையவர்கள் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யும்போது, மொழிக்குப் பெரிய தீங்கு விளைகிறது.
இதுபோன்ற காரணங்களால்தான் மொழி மீதான கவர்ச்சியை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர். மொழியைச் சுமையாகக் கருதுகின்றனர். அதற்கு நாம்தான் பொறுப்பு. மாணவர்கள் இல்லை.
சங்க இலக்கியத்தால் சாதிக்க முடியாத ஒன்றை, நவீன இலக்கியம் ஏதாவது ஒன்றிலாவது சாதித்துவிட்டது என்று சொல்ல முடியுமா?
அப்படி ஒப்பிடவே முடியாது. 3 ஆயிரம் வருட மரபு கொண்டது நமது இலக்கியம் என்றால் ஒவ்வொரு நூற்றாண்டிலும், அந்த மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு புலவனே கடத்துகிறான். மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்களாகப் படைப்பிலக்கியவாதிகளே உள்ளனர்.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை பாடியவர்கள் அதைத் தொடர்ந்து பதிணென்கீழ் கணக்கு எழுதிய புலவர்கள், ஐம்பெரும் காப்பியங்கள் எழுதிய புலவர்கள், அதைத் தொடர்ந்து வரும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், சிற்றிலக்கியங்கள் படைத்தவர்கள். அதைத் தொடர்ந்து பாரதி என அவரவரும் தன்னுடைய மொழி ஆளுமையால் அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தியுள்ளனர். இப்போது தீவிரமாக எழுதி வரும் எழுத்தாளர்கள், ஏற்கெனவே உள்ள மொழியைத் தக்க வைத்துக் கொள்வதுடன், அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தவும் செய்கின்றனர். இது ஒருவகையில் ரிலே ரேஸ் ஓடுவதுபோல. சங்கப் புலவர்கள் அவர்களால் முடிந்த தூரத்துக்கு ஓடினர். பிறகு அந்தக் கோலைச் சமயக்குரவர்கள் வாங்கிக் கொண்டு ஓடினர். அப்புறம் பாரதி ஓடினார். அதன் பிறகு நவீன எழுத்தாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் மொழி தன் இருப்பையும், உயிரையும் தக்கவைத்துக் கொள்கிறது.
ஆனால் மொழியைக் கடத்தும் படைப்பிலக்கியவாதியை எந்த அரசியல் இயக்கமும் பொருள்படுத்துவதுகூட இல்லை.
மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் படைப்பாளிகள் யாரும் செயல்படவில்லை. ஆனால் எங்கள் செயல்பாட்டின் விளைவுகள் அவை.
எனவே சங்க காலப் புலவனை விட, நவீன இலக்கியவாதிகள் மேம்பாட்டவர்களா என்ற ஒப்பீடு தேவையில்லை.

No comments: