Sunday, February 28, 2010

ஆல்பெர் காம்யு - விருந்தாளி - சிறுகதை
ஆல்பெர் காம்யு பற்றி க.நா.சு எழுதியது:

பிரான்ஸ் நாட்டின் சிந்தான வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெறுபவர் ஆல்பெர் காம்யு. ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், "தான் ஒரு கலைஞன்' என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர்.

1913-ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ப்ரெதன் - ஸ்பானிஷ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். முப்பது ஆண்டுகள் அல்ஜீரியா எனப்படும் வட ஆப்பிரிக்காவில் பல்வேறு தொழில்கள் செய்து (அல்ஜீரியர்ஸ் கால்பந்துக் குழுவிற்கு கோல் கீப்பராக இருந்ததும் இதில் அடங்கும்- வாழ்ந்து வந்தார்.

பிரான்ஸில் குடியேறிய பின்னர் ஜெர்மானிய ஆதிக்கத்தின் போது எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்காற்றினார். "Combat' என்ற ரகசிய வெளியீட்டுப் பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் பத்திரிகைத் துறையை விட்டு விலகி முழுதுமாய் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1937}இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்நியன் (þThe outsider 1942) இவரது முதல் நாவல். தொடர்ந்து வீழ்ச்சி (þthe fall) "பிளேக்' (The plague) என்ற நாவல்களும், காலிகுலா (Caligula) முதலிய நாடகங்களும் சிசிபஸின் புராணம் (The myth of sysyphus) புரட்சிக்காரன்(The Rebel) போன்ற தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கியமான படைப்புகளாகும்.

இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பது.

இலக்கியவாதியாகவும், தத்துவவாதியாகவும் வாழ்ந்த காம்யு சிறந்த நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும்கூட. 1940-ல் பாரிஸ் நகரில் அரங்கேறிய பல உன்னத நாடகங்களில் இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

ஆல்பெர் காம்யுவின் மொத்த சிந்தனா அமைப்பையும் புரிந்துகொள்ள நீண்ட தேடல் அவசியம். சில நேரங்களில் முரண்பாடுகளின் உச்சியில் தன் படைப்புகளில் காணக் கிடைக்கும் காம்யு சில நேரங்களில் அவநம்பிக்கை வாதியாகவும் (Pessimist) தோன்றுகிறார். என் பால்ய கால வறுமை எனக்குத் துரதிருஷ்டவசமாக இருந்ததில்லை என்று சொல்லியபோதும் வறுமை காம்யுவின் சிந்தனையைப் பாதித்த ஒரு முக்கியமான வாழ்நிலை உண்மை. இந்த வறுமைதான் அவரை அவநம்பிக்கைவாதியாக நமக்குக் காண்பிக்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி நிற்கும் இவரது தீவிரமான வாழ்வும், கலையும்தாண் இந்த நூற்றாண்டின் "மேற்கத்திய மனசாட்சி'யைப் பிரதிபலிக்கிறது.

- விருந்தாளி -

(THE GUEST
)


தமிழில்: க.நா.சுப்ரமண்யம்


சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் எதுவும் விழவில்லை - ஆனால் குதிரையின் மூச்சுக்காற்று வெண்மையான பனிப்படலமாகத் தெரிந்தது. ஒருவனுக்கு வழி தெரியும்போல இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னரே பனிக்கடியில் பாதை மூடிவிட்டது. எனினும் பாதை தெரிந்தே வந்தனர் அவர்கள். குன்றேறி வர அவர்களுக்கு அரைமணி நேரமாவது ஆகும் என்று எண்ணினார் ஆசிரியர். குளிராக இருந்ததால் உள்ளே போய், தனக்கு அணிந்துகொள்ள ஒரு ஸ்வெட்டர் எடுத்து வந்தார். குளிர்ந்து காலியாக இருந்த வகுப்பறையைத் தாண்டினார். கரும்பலையில் நாலு வர்ணங்களில் ஃபிரான்சு தேசத்து நாலு நதிகளும் மூன்று நாட்களாகக் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதங்களாக மழையோ, மேகமோ இல்லாதிருந்தது - திடீரென்று மூன்று நாட்களுக்கு முன் பனிப்புயல் வீசியது - அக்டோபர் மத்தியில் சுற்று வட்டத்து மலைச்சரிவுகளிலே வசித்த இருபது மாணவர்களும் வருவதையே நிறுத்தி விட்டார்கள். பனி ஓய்ந்த பின் அவர்கள் வருவார்கள். தனக்கு வசிக்க இருந்த ஒரே அறையில் மட்டும் கணப்பு மூட்டி உஷ்ணமாக்கி வைத்திருந்தார் ஆசிரியர் டாரு. வகுப்பறைக்குப் பக்கத்து அறை அது. மலைமேல் போக கிழக்கே வாசல் இருந்தது. வகுப்பறை ஜன்னல்கள் போலவே அவர் அறை ஜன்னல்களும் தெற்கு நோக்கியிருந்தன. பனியில்லாத தெளிவான நாட்களில் மலைத்தொடருக்கப்பால் பாலைவனம் போகும் பள்ளத்தாக்கு தெரியும் - அந்த ஜன்னல் வழியாக.

அறையில் உஷ்ணக் கதகதப்பு ஏறியதும் டாரு முதலில் அந்த இரண்டு மனிதர்களைக் கண்ட ஜன்னலுக்குத் திருப்பினார். அவர்கள் இப்போது கண்ணில் படவில்லை. கடைசிக் குன்று ஏறத் தொடங்கியிருப்பார்கள். வானம் அவ்வளவு இருட்டாக இல்லை - பனி விழுவது சற்றே நின்றிருந்தது. அழுக்குப் படிந்த ஒளியோடு தொடங்கிய காலைப் பொழுது, மேகங்கள் அகன்றும் இருட்டாகவே தான் இருந்தது - ஒளி கூடவில்லை. மாலை இரண்டு மணிக்கும் கூட அப்போதுதான் பொழுது விழுந்ததுபோல இருந்தது. ஆனாலும் முந்திய மூன்று நாட்களையும் விட இது தேவலை. இருளும் அடர்ந்து பனியும் விழுந்து கொண்டிருந்தது அந்த மூன்று நாட்களும். காற்றும் விட்டுவிட்டு விசிறி விசிறி அடித்துக் கொண்டிருந்தது. தன் அறையிலேயே நெடுநேரம் டாரு முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருந்தது - வேறு எதுவும் செய்வதற்கில்லை. அவசியமானால் கணப்புக்குக் கரி கொணரவோ அல்லது கோழிக்குஞ்சுகளுக்குத் தீனி வைக்கவோ போனார் கொட்டகைக்கு. அதிருஷ்டவசமாக டாஜ்டிட்டிலிருந்து சாமான்கள் கொண்டு வரும் ட்ரக் இரண்டு நாட்களுக்கு முன்தான் வந்து போயிருந்தது. வடக்கே அருகிலுள்ள கிராமம் டாஜ்டிட்தான். இன்னும் இரண்டு நாள் கழித்து டிரக் மேலும் தேவையான சாமான்களைக் கொண்டு வரும்.

தவிரவும் அங்கு ஒரு முற்றுகை நேர்ந்துவிட்டால் கூடச் சமாளித்துக் கொள்வதற்கும் போதுமான உணவுப் பண்டங்கள் இருந்தன. மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் காணவில்லை. விளைச்சல் காணாது பட்டினி கிடக்க வேண்டி வந்துவிட்ட அவர் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு என்று பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் தந்திருந்த கோதுமை மூட்டைகள் அந்தச் சின்ன அறையிலே அங்குமிங்குமாக அடைத்துக் கொண்டு கிடந்தன. உண்மையில் அவர்கள் எல்லோருமே ஏழைகள் என்பதனால் பஞ்சத்திலடிக்கப்பட்டவர்கள்தான். ஒவ்வொரு நாளும் டாரு குழந்தைகளுக்குத் தானியத்தை அளந்து - இவ்வளவென்று - தருவார். இந்த மூன்று நாட்களும் அது கிடைக்காததால் அவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். யாராவது பெற்றவனோ, சகோதரனோ தானியம் வேண்டும் என்று மாலையில் வந்தாலும் வருவான். அடுத்த அறுவடை வரையில் அவர்கள் சமாளிக்க வேண்டுமே! கப்பல் கப்பலாக ஃபிரான்சிலிருந்து கோதுமை வந்தது. பஞ்சத்தின் மோசமான நாட்கள் தீர்ந்து விட்டன. ஆனால் அந்தக் கடும் ஏழ்மையை மறப்பது என்னவோ சிரமம்தான். சூரிய ஒளியிலே கந்தலாடை உடுத்தி கண்குழி விழுந்த பட்டினிப் பட்டாளத்தை மறக்க இயலுமா? மழையில்லாமல் தீய்ந்து கருகிய நிலமும், புழுதி எழுப்பிய வயல்களும் காலடியிலே கல்லு கூடப் பொடியாகும் நிகழ்ச்சியும் மறப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆடுகள் இறந்தன. சில மனிதர்களும்தான் -எத்தனை, எங்கே என்று ஒருவருக்கும் தெரியாது.

இந்த ஏழ்மையோடு ஒப்பிடும்போது இத்தனை தனிமையான இடத்தில் பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்த தன்னை ஒரு பிரபு என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குக் கிடைத்தது,இருந்தது போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தார் அவர். இந்தக் கடினமான வாழ்வு அவருக்கு உகந்ததாக இருந்தது. அவர் சுவர்கள் வெள்ளை வைத்திருந்தன. படுத்து உறங்க குறுகிய கட்டில் - வர்ணம் தீட்டாத மர அலமாரிகள் -பின் பக்கத்துக் கிணறு - வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் குடிநீரும் - இதுதான் அவர் வாழ்வு . திடீரென்று பனிபெய்யத் தொடங்கியது - மழை என்கிற சுவடேயில்லாமல். இந்தப் பிராந்தியமே அப்படித்தான். இங்கு வாழ்க்கை மகா கடினமானது. மனிதர்களும் மோசந்தான். அவர்கள் இருப்பதால் இப்பிரதேசத்து வாழ்வு சுலபமாகி விடுவதில்லை. ஆனால் டாரு இந்த வாழ்க்கைக்கே பிறந்தவர் - அவர். மற்றவர்களைத்தான் அந்நியப் பேர்வழிகளாக உணர்ந்தார்; வேறு இடத்துக்குப் போனால் தன்னை அந்நியனாக உணர்ந்தார்.

பள்ளிக் கட்டிடத்து வெளி வராண்டாவில் வந்து நின்றார் அவர். குன்றில் பாதிவழி ஏறி வந்து கொண்டிருந்தனர் இருவரும். குதிரை மேல் வந்தது பால்டுச்சி - போலீஸ்காரன். அவனை வெகுநாட்களாகவே அவருக்குப் பழக்கமுண்டு. இரண்டாவது பேர்வழி ஒரு அராபியன் - அவனைக் கயிற்றில் பிணைத்துக் கயிற்றின் ஒரு கோடியைத் தன் கையில் பிடித்திருந்தான் பால்டுச்சி; அராபியனின் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன; தலை குனிந்தபடியே குதிரைக்குப் பின் நடந்து வந்தான் அவன். டாருவைப் பார்த்துக் கையை ஆட்டினான் போலீஸ்காரன் - அதற்குப் பதில் சைகை செய்யவில்லை அவர். வெளிரிட்ட நீல ஜெல்லாபா சட்டை அணிந்து, காலில் செருப்புகளுடன், ஆனால் கனமான கம்பளி ஸôக்ஸ் அணிந்து தலையில் சேச்சே முண்டாசு கட்டியிருந்த அந்த அராபியனையே பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராக நின்றார் டாரு. அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அராபியனை வேகமாக இழுத்துக் குதிரை துன்புறுத்தாத வண்ணம் அதை அடக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாகவே வந்தான் போலீஸ்காரன்.

கூப்பிடு தூரத்தில் வந்ததும் பால்டுச்சி உரக்கச் சொன்னான். ""எல் அமேரிலிருந்து இந்த மூன்று கிலோ மீட்டர்களையும் கடக்க ஒரு மணி நேரமாயிற்று'' என்று கூவினான். டாரு பதில் தரவில்லை. தடித்த ஸ்வெட்டரை அணிந்துகொண்டு குள்ளமாக, சற்று தூரமாகக் காட்சியளித்தபடி நின்ற அவர் அவர்கள் தன்னை அணுகுவதைக் கவனித்துக் கொண்டே நின்றார். அராபியன் ஒரு தடவை கூடத் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. பள்ளிக் கட்டிட வாசலை அவர்கள் அடைந்ததும், ""ஹலோ'' என்றார் டாரு. ""உள்ளே வாருங்கள். குளிருக்கு அடக்கமாக, கதகதப்பாக இருக்கும்'' என்றார். கையில் பிடித்திருந்த கயிறு முனையை விட்டுவிடாமல் கீழே குதித்தான் பால்டுச்சி. அவன் கால்களில் வலி கண்டிருந்தது போலும். குத்திட்டு நின்ற மீசைக்குக் கீழே அவன் உதடுகள் டாருவைக் கண்டு புன்சிரிப்பால் மலர்ந்தன. பழுப்பேறிய நெற்றிக்குக் கீழே சிறிய இருண்ட கண்கள். முகவாய்க்கட்டை உதடுகளைச் சுற்றி பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தோற்றத்தில் அவன் ஒரு ஆராய்ச்சி மாணவன். புஸ்தகப்புழு என்று கூடச் சொல்லலாம் போல இருந்தது. டாரு குதிரை லகானைப் பிடித்து அதைப் பின்பக்கம் கொட்டகைக்கு இழுத்துச் சென்றார். பிறகு வந்து இருவருடனும் பள்ளியில் அறையில் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர்களைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். ""வகுப்பறையை உஷ்ணமாக்குகிறேன். இதைவிட அது செüகரியமாக இருக்கும் நமக்கு'' என்றார். மீண்டும் அவர் தன் அறைக்குள் வந்தபோது, பால்டுச்சி ஆசனத்தில் வீற்றிருந்தான். அராபியனுடன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருந்தான். அராபியன் கணப்பருகில் குந்தியிருந்தான். அவன் கைகள் இன்னமும் கயிற்றால் கட்டப்பட்டேயிருந்தன. "சேச்சே' முண்டாசை சற்று மேலுக்குச் சாய்ந்தாற் போலத் தள்ளியிருந்தான். ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் டாருவின் கண்களில் பட்டது அவனுடைய தடித்த உதடுகள்தான். வழுவழுப்பாக நீக்ரோ உதடுகள் போலத் தடித்திருந்தன அவை. முண்டாசுக்குக் கீழே இருந்த நெற்றி அவன் பிடிவாதக்காரன் என்பதை அறிவுறுத்தியது. குளிரால் வர்ணம் சற்றுப் போன தடித்ததோல், அவன் முகத்திலே ஒரு அமைதியின்மையும், புரட்சி பாவமும் இருந்தது என்று டாரு கவனித்தார். தன்னை நேருக்கு நேர் நிமிர்ந்து அந்த அராபியன் பார்த்தபோது அப்படித்தான் டாருவுக்குத் தோன்றியது.

""அடுத்த அறைக்குப் போ''.

""நான் உனக்குக் கொஞ்சம் மிண்ட் தேநீர் தயாரித்துத் தருகிறேன்'' என்றார் டாரு.

""தாங்க்ஸ்'' என்றான் பால்டுச்சி. ""என்ன தொல்லை இந்த வேலையிலே? எப்படா ரிடையர் ஆகப் போகிறேன் என்று இருக்கிறது.'' தனது கைதியை நோக்கி அராபிய மொழியில் கூறினான். ""வா! வா! நீயும்தான்'' என்றான்.

அராபியினும் எழுந்தான்; மெதுவாகக் கட்டப்பட்ட தன் கைகளை முன்னால் நீட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் சென்றான். தேநீருடன் டாரு ஒரு நாற்காலியையும் கொண்டு வந்தார். ஆனால் பால்டுச்சி மிகவும் அருகிலிருந்த ஒரு மாணவனுடைய சரிவு மேசையின் மேல் வீற்றிருந்தான் -கணப்பைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். கணப்போ மேஜைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருந்தது. கைதியின் பக்கம் தேநீரை நீட்டுகிறபோது டாரு அவன் கட்டப்பட்ட கைகளைக் கண்டு சற்று தயங்கினார்.

""கட்டை அவிழ்த்துவிடலாமே!''

""அவிழ்த்துவிடலாம். பிரயாணத்தை உத்தேசித்துக் கட்டியதுதான்'' என்றான் பால்டுச்சி.

அவன் எழுந்திருக்க முயன்றான். அதற்குள் டாரு அந்த அராபியன் பக்கத்தில் மண்டியிட்டு, தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்துவிட்டு, கைகளைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டார். ஒரு வார்த்தையும் பேசாமல், ஜுரம் அடித்தவனுடையது போன்ற கண்களுடன் அராபியன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கைகள் விடுவிக்கப்பட்டதும் கட்டின் இறுக்கத்தால் வீங்கியிருந்த மணிக்கட்டுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். தேநீர்க் கோப்பையை எடுத்து சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கினான்.

""நல்லது'' என்றார் டாரு. ""நீ எங்கே கிளம்பினாய்?'' தேநீர்க் கோப்பையிலிருந்து மீசையை வெளியே எடுத்தான் பால்டுச்சி.

""இங்கேதான் ஐயனே!''

""வேடிக்கையான மாணவர்கள்தான்! இரவு இங்கு தங்குவீர்களா?'' ""இல்லை. நான் அல்மேருக்குத் திரும்பிப் போகிறேன். ஆசாமியை நீ டாஜ்டிட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவனைப் போலீஸ் தலைமைக் காரியாலயத்தில் எதிர்பார்க்கிறார்கள்.''

பால்டுச்சி டாருவைப் பார்த்து ஒரு தோழமையுடன் சிரித்தான் ""இது என்ன கதை இது? என்னிடம் விளையாடுகிறாயா நீ?'' என்றார் டாரு.

""இல்லை ஐயனே! எனக்குக் கிடைத்த உத்தரவு இதுதான்.''

""உத்தரவா! யாருக்கு? எனக்கா?'' டாரு தயங்கினார். அந்தக் கிழட்டுக் கார்ஸிகன் போலீஸ்காரனுக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. ""அதாவது, அது என் வேலையில்லையே!''

""என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? யுத்த காலத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதுதான்.''

""யுத்த காலம் வரும் வரையில் நான் காத்திருக்கிறேன்.''

பால்டுச்சி தலையை ஆட்டினான்.

""அது சரி. ஆனால் உத்தரவு இருக்கிறது - உன் அளவிலும்தான். ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தோன்றுகிறது. புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு அம்சத்தில் யுத்த காலம்தான்.''

டாரு இன்னமும் பிடிவாதமாகவே காணப்பட்டார்.

""கேளும் ஐயனே!'' பால்டுச்சி சொன்னான். "" எனக்கு உன்னைப் பிடிக்கும், இருந்தாலும் நீ விஷயத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். எல் அமேரில் நாங்கள் ஒரு டஜன் பேர்வழிகள்தான் இருக்கிறோம். பொறுப்பு பூராவும் எங்களுடையது. ஆகவே நான் அதிகநேரம் அங்கிருந்து அப்பால் போய்விட முடியாது. இந்த மனிதனை உன்னிடம் ஒப்புவித்து விட்டு தாமதமன்னியில் திரும்பச் சொல்லி எனக்கு உத்தரவு. அங்கு அவனை வைத்திருக்க இயலாது - அவன் கிராமத்தவர் அசையத் தொடங்கிவிட்டனர். அவனை விடுவித்துக் கொண்டு போக அவர்கள் தயாராக இருந்தனர். நாளை மாலைக்குள் அவனை டாஜ்டிட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும். உன்னைப் போல பலசாலிக்கு இருபது கிலோ மீட்டர்கள் பற்றிக் கவலை என்ன வந்தது? அதற்குப் பிறகு உன் மாணவர்களை நாடி உன் செüக்கியமான வாழ்வுக்குத் திரும்பிவிடலாம்.''

சுவருக்கு அப்பால் குதிரை கனைப்பதும், பூமியைக் காலால் உதைப்பதும் காதில் விழுந்தது. டாரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். பனி மூட்டம் விலகி, மலைகள் மேல் வெய்யில் ஒளிபடரத் தொடங்கிவிட்டது. பனிப்புயல் அகன்றுவிடும். பனியெல்லாம் உருகிய பின்னர், மீண்டும் சூரியன் ஆட்சி தொடங்கிவிடும். மனிதன் வரமுடியாத பிரதேசமாகி விடும் அது மீண்டும்.

""அது சரி - அவன் என்ன செய்தான்?'' என்று பால்டுச்சியைப் பார்த்துக் கேட்டார் டாரு. ஆனால், போலீஸ்காரன் பதில் சொல்ல வாயைத் திறக்கும்முன், ""அவன் ஃபிரெஞ்சு பேசுவானா?'' என்றார்.
""தெரியாது - ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவனை ஒரு மாதமாகத் தேடிக் கொண்டிருந்தோம். } அவன் கிராமத்தார் அவனை ஒளித்து வைத்திருந்தனர். அவன் தனது உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்டான்.''

""நமக்கு எதிரியா அவன்?''

""இல்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இதெல்லாம் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.''

""எதற்காகக் கொன்றான்?''

""ஏதோ குடும்பத் தகராறு. ஒருவன் மற்றவனுக்குத் தானியம் தர வேண்டுமாம். அப்படி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு அரிவாளால் சீவிவிட்டான் - கழுத்தை வெட்டிவிட்டான். "சதக்' என்று ஆட்டின் கழுத்தைச் சீவுவதைப் போல.''

தன் கழுத்தில் கை வைத்து எப்படி என்று இழுத்துக் காட்டினான் பால்டுச்சி. இதைக் கண்ட அராபியன் கவலையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். டாருவுக்குத் திடுதிப்பென்று கோபம் வந்தது - அழுகிப் போன வஞ்சம் என்றும், சகமனிதனிடம் வெறுப்பு என்றும், ரத்த வெறி கொண்டும் செயல்படுகிற மனிதர்கள் மேல் வெறுப்புத் தோன்றியது.

ஆனால் அடுப்பின் மேலே கெட்டில் பாடியது. பால்டுச்சிக்கு மேலும் தேநீர் தந்தார். சற்றுத் தயங்கி விட்டு அரேபியனுக்கும் மீண்டும் தேநீர் தந்தார். இரண்டாவது தடவை கிடைத்த தேநீரையும் அவசரம் அவசரமாகப் பருகினான் அந்த அராபியன். அவன் கைகளைத் தூக்கியபோது சட்டை விலக, அவனுடைய மெலிந்த தசைநார் வலுவான மார்பு பிரதேசத்தையும் டாரு பார்த்தார்.

""தாங்க்ஸ் ஐயனே! நான் கிளம்புகிறேன் இப்போது'' என்றான் பால்டுச்சி.

எழுந்து அந்த அராபியனை அணுகியபடியே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு கயிரை எடுத்தான்.

""என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார் டாரு அமுத்தலாக. பால்டுச்சி தடுமாறியவனாகத் தன் கையிலிருந்த கயிறைத் தூக்கிக் காட்டினான்.

""வேண்டாம். கட்டாதே.''

""உன் இஷ்டம். உன்னிடம் துப்பாக்கியிருக்கிறதா?''

""என் ஷாட்டுகன் இருக்கிறது.''

""எங்கே?''

""என் பெட்டியில் இருக்கிறது.''

""படுக்கையருகே தயாராக வைத்திருக்க வேண்டும் நீ அதை.''

""எதற்காக? நான் எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?''

""பைத்தியக்காரன் நீ! புரட்சி வந்துவிட்டால் ஒருவரும் ஆபத்தில்லாதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒரு கதிதான்.''

""என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். அவர்கள் அணுகுவதை வெகு தூரத்துக்கப்பாலிருந்தே நான் காண முடியும்.''

பால்டுச்சி சிரிக்க ஆரம்பித்தான். பிறகு தன் மீசையால் தன் பற்களைக் கெட்டியாக மூடிக் கொண்டான். ""நேரம் இருக்குமா?'' அதுசரி. அதைத்தான் சொன்னேன் நானும். நீ அரைப் பைத்தியம். அதனால்தான் உன்னிடம் நான் பிரியம் வைத்திருக்கிறேன். என் மகன் கூட அப்படித்தான் இருந்தான்.''

அதேசமயம் அவன் தன் ரிவால்வரை எடுத்து மேசைமேல் வைத்தான். ""இதை வைத்துக்கொள். இங்கிருந்து எல் அமேர் போவதற்கு இரண்டு துப்பாக்கி எனக்குத் தேவையில்லை.''

கறுப்பு வர்ணம் அடித்திருந்த மேஜை மேல் ரிவால்வர் பளபளத்தது. போலீஸ்காரன் தன் பக்கம் திரும்பியபோது பள்ளி ஆசிரியர் தோல், குதிரை இவற்றின் வாடையை உணர்ந்தார்.

""கேள் பால்டுச்சி'', என்றார் டாரு திடீரென்று, ""இந்த விஷயத்தில் எதுவும் எனக்குக் கசப்புத் தராதது இல்லை. இந்த அராபியனைக் கண்டாலே எனக்குக் கரிக்கிறது. ஆனால் அவனை நான் போலீஸ் காரியாலயத்தில் கொண்டு போய் விடமாட்டேன். சண்டை போட வேண்டுமா - அவசியமானால் போடுகிறேன். அது மட்டும் வேண்டாம், பாவம்!''

கிழட்டு போலீஸ்காரன் அவர் எதிரில் நின்று அவரைக் கடுமையாகப் பார்த்தான்.

""நீ முட்டாள்'' என்றான் மெதுவாக. ""எனக்கு மட்டும் அவனைப் பிடித்து ஒப்படைக்கப் பிடிக்கிறதா? எனக்கும் பிடிக்கவில்லைதான். ஒரு மனிதனைக் கட்டிப் போடுவது என்பது எத்தனை வருஷம் பழக்கமானாலும் பிடிக்காத விஷயம்தான் - வெட்கமாகக்கூட இருக்கிறது. ஆனால் அதற்காக அவர்கள் இஷடப்படி நடக்கவும் விட்டுவிட முடியாதே?''

""நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்'' என்றார் டாரு மீண்டும் ஒரு தரம்.

""அது ஒரு உத்தரவு. நான் திருப்பிச் சொல்கிறேன் உத்தரவை. அவ்வளவுதான்.''

""அது சரி நான் சொன்னதை அவர்களிடம் சொல்லிவிடு; நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்.''

சிந்திக்க முயன்றான் பால்டுச்சி. அராபியனைத் திரும்பிப் பார்த்தான். டாருவைப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ""மாட்டேன். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல மாட்டேன். உன்னைக் காட்டித் தர மாட்டேன். கைதியை இங்கு கொணர்ந்து உன்னிடம் விடச் சொல்லி எனக்கு உத்தரவு. அதை நடத்திவிட்டேன். இதோ இதில் கையெழுத்துப் போட்டுக் கொடு.''

""அதற்கு அவசியமில்லை. நீ உன் உத்தரவை நிறைவேற்றிவிட்டாய் என்பதை நான் மறைக்கவே மாட்டேன்.''

""என்னிடம் கோபித்துக் கொள்ளாதே! நீ உண்மையைச் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். நீ இந்தப் பக்கத்து மனிதன் - அதுவும் ஆண்மகன். ஆனால் கையெழுத்திட்டுத் தா } சட்டம் இதுதான்'' என்றான் பால்டுச்சி.

அதற்கு மேல் ஆட்சேபிக்கவில்லை டாரு. தனது மேஜை டிராயரை இழுத்து ஒரு சதுர உருவமான இங்க் புட்டியை எடுத்து, கையெழுத்து எழுதிக்காட்ட வைத்திருந்த பெரிய பேனாவினால் பர்பிள் மசியால் கையெழுத்திட்டுக் கொடுத்தார். போலீஸ்காரன் பால்டுச்சி அந்தக் கடிதத்தை மடித்துத் தன் தோல் பைக்குள் சொருகிக் கொண்டான். வாசல் பக்கம் நகர்ந்தான்.

""இரு வந்து வழியனுப்புகிறேன்'' என்றா டாரு.

""வேண்டாம்'' என்றான் பால்டுச்சி. ""நீ என்னை அவமதித்துவிட்டாய். இப்போது மட்டும் மரியாதை என்ன வந்தது?''

இருந்த இடத்திலேயே அசையாது கிடந்த அந்த அராபியனை ஒரு விநாடி திரும்பிப் பார்த்தான். முகத்தை சிணுக்கிக் கொண்டே மூக்கை இழுத்தான். வாசல் பக்கம் திரும்பினான். ""வரேன் மகனே'' என்றான். கதவைத் திறந்து சாத்திக் கொண்டு வெளியே போனான். ஜன்னல் வழியாக ஒரு கணம் கண்ணில் பட்டான்; பிறகு மறைந்துவிட்டான். பனி கிடந்த பாதையிலே அவன் காலடிச் சத்தம்கூடக் கேட்கவில்லை. சுவருக்கப்பால் குதிரைக் குளம்பொலி கேட்டது. சில கோழிக்குஞ்சுகள் சிறகடித்து வழியை விட்டுப் பறப்பதும் காதில் விழுந்தது. அடுத்த விநாடி ஜன்னலுக்கு வெளியே பால்டுச்சி மறுபடியும் கண்ணில் பட்டான். குதிரையை லகானால் பிடித்துக் கொண்டு வந்தான். சிறு குன்றுப் பக்கம் குதிரை பின்தொடர நடந்து, ஒரு தரம்கூடத் திரும்பிப் பார்க்காமல் நகர்ந்து விட்டான். உருட்டிவிடப்பட்டு ஒரு பெரிய கல் பாதையிலிருந்து கீழே உருண்டோடுவது காதில் விழுந்தது. டாரு கைதியின் பக்கம் திரும்பி நடந்து அவனை அணுகினார். அவரை விட்டுக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கைதியிடம், ""இரு'' என்று அரபி மொழியில் சொல்லிவிட்டுத் தன் படுக்கையறைக்குள் போனார். கதவைத் தாண்டும்போது வேறு ஒரு யோசனை வரவே திரும்பி வந்து மேஜை மேல் கிடந்த ரிவால்வரை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே போனார். திரும்பிப் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றார்.

சிறிது நேரம் தனது படுக்கையில் படுத்து வானம் இருண்டு வந்து மூடிக் கொள்வதைக் கவனித்தார். மெüனத்தை ரசித்தார். யுத்தத்துக்குப் பிந்திய முதல் நாட்களில் இந்த மெüனம்தான் அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது. பாலைவனத்திலிருந்து உயரமான பீடபூமியைப் பிரிக்கும் பள்ளத்தாக்கு நகர் எதிலாவது உத்தியோகம் வேண்டுமென அவர் கேட்டார். அங்கு பாறையாலான குன்றுகள் வடக்கே பச்சையும், கறுப்புமாக, தெற்கே இளஞ்சிவப்பும் லவண்டருமாக நித்தியமான கோடைக்கு அரண் செய்யும். பீடபூமி மேட்டிலேயே வடக்கே வெகு தூரத்துக்கப்பால் அவருக்கு வேலை உத்தரவாகியது. ஆரம்பத்தில் இந்த வீணான பிரதேசங்களில் பெரும்பாறைகள் தவிர வேறு உயிர்ல்லாத இடத்தில் மெüனமாக இருப்பது சிரமமாக இருந்தது அவருக்கு. சில சமயம் பாறைகள் எங்காவது ஓரிடத்தில் வெட்டப்பட்டிருக்கும் - பயிரிடுவதற்காக அல்ல. வீடு கட்ட ஒருவிதக் கல் அங்கு கிடைத்ததால் வெட்டப்பட்டிருந்தது. இங்கு பயிராவது கற்பாறைகள் மட்டும்தான். சிறுசிறு கிராமத்துத் தோட்டங்களில் மண் வேண்டி மலை சரிவிலே சேர்ந்த கொஞ்ச மண்ணையும் தோண்டி எடுத்துப் போய் விடுவார்கள். இந்தப் பிராந்தியத்துக்குப் போக்கு இதுவே; முக்கால்வாசிப் பகுதியில் கற்கள்தான் நிறைந்திருந்தன. சில நகரங்கள் தோன்றின. சில நாட்கள் வளர்ந்தன. பிறகு மறைந்துவிட்டன. மனிதர்கள் இப்படி அப்படி வந்தவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டார்கள்; பின் இறந்து போனார்கள். அல்லது மறைந்து போனார்கள். தானோ தனது விருந்தாளியோ பற்றி இந்த நாட்டுக்கு பாலைவனத்துக்குச் சிறிதும் கவலை கிடையாது. அவர்கள் எவ்விதத்திலும் முக்கியஸ்தர்கள் அல்ல. இருந்தும்... இருந்தும் இந்தப் பாலைவனத்துக்கு அப்பால், இதற்கு வெளியே அவர்களால் உயிர் வைத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை இதுதான்.

அவர் எழுந்தபோது பள்ளி அறையில் சப்தமேயில்லை. அராபியன் ஓடிப் போயிருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது - கலப்பற்ற மகிழ்ச்சி அது என்று உணர்ந்தார். அவன் ஓடிப்போயிருந்தால் எவ்விதத் தீர்மானமும் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு இராது. ஆனால் கைதி அங்கேயேதான் இருந்தான். மாணவன் மேஜைக்கும், கணப்புக்கும் இடையே கால் நீட்டிக் கொண்டு அவன் படுத்துக்கொண்டிருந்தான். கண்கள் திறந்திருந்தன - அரைக் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிக் கிடந்த அவன் உதடுகள் அதிகமாகக் கவனிக்கத் தக்கவையாகத் தெரிந்தன. கனமான உதடுகள் பிதுங்குகிற மாதிரி இருந்தன. ""வா'' என்று டாரு கூப்பிட்டார். அராபியன் எழுந்து அவர் பின் வந்தான். தன் படுக்கையறையில் ஜன்னலுக்கடியில் இருந்த மேஜையருகில் கிடந்த நாற்காலியை டாரு காண்பித்தார். டாருவை விட்டுக் கண்களை எடுக்காமலே அராபியன் உட்கார்ந்தான்.

""பசிக்கிறதா?''

""ஆமாம்'' என்றான் கைதி.

டாரு இருவருக்கும் மேசை மேல் உணவு எடுத்து வைத்தார். மாவும், எண்ணெயும் எடுத்து வட்டிலில் ஒரு கேக் செய்தார். புட்டியிலிருந்த காஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். கேக் வெந்து கொண்டிருக்கும்போது அவன் பக்கம் கொட்டகைக்குள் சென்று சீஸ், முட்டைகள், பேரீச்சை, கண்டென்ஸ்ட் பால் முதலியன எடுத்து வந்தார். கேக் வெந்ததும் அது குளிர ஜன்னல் படியில் வைத்தார். பாலைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சினார். சில முட்டைகள் உடைத்துப் போட்டு ஆம்லெட் செய்தார். ஒரு சமயம் அவர் கை வலது சட்டைப்பையில் இருந்த ரிவால்வரில் பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை வைத்து விட்டுத் தன் படிப்பு அறைக்குப் போய் ரிவால்வரைத் தன் மேஜை டிராயரில் வைத்துவிட்டு வந்தார். அவர் அறைக்குள் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. விளக்கைப் போட்டு விட்டு, அராபியனுக்கு உணவு எடுத்துக் கொடுத்தார். ""சாப்பிடு'', என்றார். கேக்கில் ஒரு பகுதியை அவசரம் அவசரமாக எடுத்த அராபியன் அதை வாயில் போட்டுக் கொள்ளும்முன் நிதானித்து, ""நீங்கள்?'' என்றான்.

""சாப்பிடு. நானும் உன்னோடு சாப்பிடுவேன்'' என்றார்.

தடித்த உதடுகள் சற்றே திறந்தன - ஏதோ சொல்ல. உடனே மூடின. கேக்கை வாயில் போட்டு மென்றான் அராபியன்.

சாப்பாடு முடிந்ததும், அராபியன் டாருவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்; ""நீங்கள்தான் நீதிபதியா?''

""இல்லை. இல்லை. நான் நாளை வரை உன்னை இங்கு வைத்திருப்பேன். அவ்வளவுதான்.''

""எதற்காக என்னோடு உணவருந்தினீர்கள்?''

""எனக்கும் பசித்தது.''

அராபியன் மெüனமானான். டாரு எழுந்து வெளியே போனார். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலை மேஜைக்கும், கணப்புக்கும் இடையில் போட்டார் - தன் படுக்கையை ஒட்டின மாதிரி ஒரு பெரிய பெட்டியிலிருந்து இரண்டு கம்பளிகளை எடுத்துக் கட்டிலில் விரித்தார். வேறு என்ன? வேறு எதுவும் செய்வதற்கில்லை. தன் படுக்கையில் உட்கார்ந்து கைதியைப் பார்த்தார். அந்த அராபியனின் முகம் கோபத்தால் பெருகி கொலை வெறியால் மாறுவதைக் கற்பனை செய்ய முயன்றார் - பார்த்தபடியே; முடியவில்லை. மிருகத்தின் வாய் போன்ற உதடுகளையும், கறுத்துப் பளபளத்த கண்களையும் தவிர வேறு எதையும் அவரால் காண இயலவில்லை.

""அவனை எதற்காக நீ கொன்றாய்?'' - தன் குரலில் இருந்த அதட்டல் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அராபியன் வேறு பக்கம் பார்த்தான். "" அவன் ஓடி விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்.''

""உனக்குப் பயமாக இருக்கிறதா?''

நிமிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அராபியன்.

""செய்து விட்டது குறித்து வருந்துகிறாயா நீ?''

வாய்ப்பிளக்க அராபியன் அவரையே பார்த்தான். உண்மையில் டாருவினுடைய கேள்வி அவனுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது. டாருவுக்கு எரிச்சலாக இருந்தது - எரிச்சல் வளர்ந்தது. அதே சமயம் இப்படி உட்கார்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது பற்றி வெட்கமாகவும், என்னவோபோலவும் இருந்தது.

""அங்கே படு'' என்றார். ""அதுதான் உனக்குப் படுக்கை.''

அராபியன் அசையவில்லை. அவன் டாருவை, ""எனக்குச் சொல்லுங்கள் ஐயா'' என்றான்.

ஆசிரியர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

""போலீஸ்காரன் நாளை வருவானா?''

""எனக்குத் தெரியாது.''

""நீங்கள் எங்களோடு வருவீர்களா?''

""அதுவும் தெரியாது ஏன்?''

கைதி எழுந்து கம்பளி மேல் படுத்தான். ஜன்னல் பக்கம் அவன் காலிருந்தது. டாருவின் கால்மாட்டில் இருந்தது அவன் படுக்கை. விளக்கு ஒளி அவன் கண்களில் பட்டது. உடனே கண்களை மூடிக்கொண்டான்.

""ஏன்?'', என்று தன் படுக்கையருகில் நின்றபடியே கேட்டார் டாரு.

விளக்கு ஒளி கண்ணில் பட கண்களைத் திறந்தான் அராபியன். கண்ணைச் சிமிட்டாமல் இருக்க முயன்று கொண்டே ""எங்களோடு வந்து விடும்'' என்றான்.

நள்ளிரவு ஆகிவிட்டது. டாருவால் தூங்க இயலவில்லை. துணிகளை எடுத்துப் போட்டு விட்டு வழக்கப்படியே நிர்வாணமாகத் தூங்க முயன்றார் டாரு. நிர்வாணமாக இருப்பது அசெüகரியமாக இருக்குமோ என்று நள்ளிரவில் தயங்கினார். பிறகு எதிரி சண்டைக்கு வந்தால் அவனைத் தோற்கடிக்க ஒரு விநாடியில் தன்னால் இயலும் என்று எண்ணிப் பார்த்தார். துணிகளை அணிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் யோசித்தார். பிறகு அது குழந்தைத்தனம் என்று அந்தச் சிந்தனையிலிருந்து ஒதுங்கி விட்டார். தன் படுக்கையிலிருந்த படியே கைதி கண்களை மூடிக் கொண்டிருப்பதை அவர் காண முடிந்தது. டாரு விளக்கை அணைத்தபோது இருட்டு கவ்விக் கொண்டதுபோல இருந்தது. பின்னர் ஜன்னலில் இரவு உருவெடுத்திருப்பது தெரிந்தது - நட்சத்திரங்களற்ற இரவு மெதுவாகப் புரண்டு கொடுப்பது போல இருந்தது. சிறிது நேரத்தில் காலடிக் கட்டிலில் உருவம் கிடந்தது, டாருவின் கண்களுக்குப் புலனாயிற்று. அராபியன் இன்னும் அசையவில்லை - அவன் கண்கள் திறந்திருந்தன போலும். பள்ளியைச் சுற்றி இலேசாகச் காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காற்று மேகங்களை விரட்டி விடலாம் - சூரியன் மீண்டும் நாளை தோன்றலாம்.

இரவிலே நேரம் ஆக ஆகக் காற்றின் ஊளை வேகம் அதிகரித்தது. கோழிகள் படபடத்து அடங்கின அராபியன் தன் கட்டிலில் டாருவுக்கு முதுகுப்பக்கம் தெரியப் புரண்டு படுத்தான். அவன் லேசாக முனகுவது டாருவின் காதில் விழுந்தது. தன் விருந்தாளியின் தூக்க மூச்சு ஒழுங்காக, கனமாக வருவதைக் கவனித்தார் டாரு. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே தூங்க மாட்டாமல் திணறினார். இந்த அறையில் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக அவர் மட்டுமே தனியாகத் தூங்கித்தான் அவருக்குப் பழக்கம். அராபியன் அருகில் இருப்பது அவரை என்னவோ செய்தது. இந்தக் கால அளவில் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு சகோதரத்தவத்தை அவன் அருகில் இருப்பது தன் மேல் திணிப்பதாக அவர் உணர்ந்தார். ஒரே அறையில் படுத்துறங்க வேண்டிய சகோதரத்தவத்தை அவர் பழக்கப்பட்டவர்தான் - போர் வீரர்கள், கைதிகள் ஒரே அறையில் படுத்துறங்கும்போது, ஒரு கனவுலக, களைப்புலக சகோதரத்தவத்தை ஏற்கின்றனர். டாரு அந்த நினைவுகளிலிருந்து தன்னை உதறி அகற்றிக் கொண்டார். இப்படி நினைப்பது பிடிக்கவில்லை - தூங்குவதும் அவருக்கு அவசியம்.

சிறிது நேரம் கழித்து அராபியன் லேசாக அசைந்த போதும் அவர் தூங்கிய பாடில்லை. கைதி இரண்டாவது அசைவு காட்டியதும் கவனமாக இருந்தார் - உஷாரானார். தூக்கத்தில் நடப்பவன் போல அவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து டாரு பக்கம் தலையைத் திருப்பாமல் ஏதோ கவனித்துக் கேட்பவன் போல உற்றுக் கவனித்தான். டாரு அசையவில்லை; தன் மேஜை டிராயரில் ரிவால்வர் இருந்தது நினைவுக்கு வர டாருவுக்கு உடனே எழுந்து ஏதாவது செய்வது நல்லது என்று தோன்றியது. ஆனாலும் கைதியைக் கவனித்துக் கொண்டே படுத்திருந்தார். சப்தமே செய்யாமல் கைதி காலைக் கீழேவிட்டு எழுந்து நின்று மறுபடியும் கவனித்தான். டாரு குரல் கொடுக்கலாம் என்று எண்ணுகிற விநாடியில், மிகவும் சாவதானமாக, சப்தமே செய்யாமல் அராபியன் நடக்கத் தொடங்கினான். அறைக் கோடியிலிருந்த கொட்டகைக்குள் போகும் கதவுப்பக்கம் நகர்ந்தான். ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்துகொண்டு கதவைத் தனக்குப் பின்னால் மூடித் தாளிட்டு விடாமல் வெளியே போனான். டாரு அசையவில்லை. ""அவன் ஓடிப்போகப் போகிறான்'' என்று எண்ணினார் அவர். ""சனியன் தொலைந்தது.'' இருந்தும் கவனித்துக் கேட்டார். கோழிகள் படபடக்கவில்லை. கைதி குன்றின் மேல் போயிருக்க வேண்டும். ஏதோ நீர் சப்தம் கேட்டது. அது என்ன என்று முதலில் புரியவில்லை. பிறகு கதவு வழியாக அராபியன் சப்தமே செய்யாமல் வருவதைக் கண்ட பிறகுதான் புரிந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு வந்து சப்தமே செய்யாமல் படுத்துவிட்டான் கைதி. பிறகு "டாருவும் திரும்பிப் படுத்துச் தூங்கிவிட்டார். தூக்கத்திலே ஏதோ காலடிச் சப்தம் கேட்டதுபோல இருந்தது. "நான் கனவு காண்கிறேன். நான் கனவு காண்கிறேன்' என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டார்.

அவர் கண் விழிக்கும்போது, வானம் தெளிந்துவிட்டது. ஜன்னல் வழியாகக் காலை ஒளியும், இளஞ் சீரிய கிரணங்களும் உள்ளே வந்தன. அராபியன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வாய் திறந்திருந்தது. கவலை எதுவும் அற்றவன் போலத் தூங்கினான், அவன். ஆனால் டாரு அவனை உலுக்கி எழுப்பியபோது தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. மிகவும் பயந்தவன் மாதிரி, டாரு யார் என்று அறியாதவன் மாதிரி மிரள மிரள விழித்தான். டாரு நாலடி பின் வாங்கி, ""பயப்படாதே. நான் நீ சாப்பிட வேண்டாமா?'' என்றதும் அந்த அராபியன் தலையை ஆட்டினான். ""ஆமாம் சாப்பிட வேண்டும்'' என்றான். அவன் முகத்தில் அமைதி கண்டது. ஆனால் அவன் "பாவம்' ஒரு தினுசாக எதிலும் ஈடுபாட்டில்லாததாகத்தான் இருந்தது.

காபி தயாராகியது. கேக் துண்டுகளை மென்று கொண்டே தங்கள் படுக்கைகளில் உட்கார்ந்தபடியே காபியை அருந்தினர். பின்னர் டாரு அராபியனை கொட்டகைக்குள் அழைத்துச் சென்று குழாய் இருந்த இடத்தைக் காட்டினார். அவன் கழுவிக் கொண்டான். தன்னறைக்குள் போய்க் கம்பளிகளை எடுத்து மடித்து வைத்துவிட்டுத் தன் படுக்கையையும் சீர் செய்தார். வகுப்பறை வழியாக வெளியே திறந்த மேடைக்குச் சென்றார். நீலவானத்தில் சூரியன் தோன்றி உயர ஏறிக் கொண்டிருந்தது. மனித சூன்யமான மேடான பீடபூமியிலே பிரகாசமான ஒளி படர்ந்து கொண்டிருந்தது. குன்றுச் சரிவுகளில் பல இடங்களில் பனி உருகத் தொடங்கிவிட்டது. கற்கள் மீண்டும் தோன்றத் தொடங்கிக் கொண்டிருந்தன. தன் மேடையில் பதுங்கியபடியே மனித சூன்யமான அந்தப் பிரதேசத்தைப் பார்த்தார் டாரு. பால்டுச்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அவனுக்கு வருத்தம் தந்துவிட்டது பற்றி டாரு வருந்தினார். யாருக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. போலீஸ்காரன் விடைபெற்றுக் கொண்டுபோன விதம் அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது அப்படி யாருக்கும் விரோதியாக இருக்க அவர் விரும்பியதேயில்லை. தன்னுள் எதுவும் இல்லாமல் காலியாகிய மாதிரி உணர்ந்தார் அவர். தன்னை யாரோ காயம் பண்ணிவிட்ட மாதிரி உணர்ந்தார். அதே சமயம் உள்ளேயிலிருந்து கைதி இருமுவது காதில் விழுந்தது. தன்னையும் அறியாமலே டாரு அதைக் கவனித்தார். கோபம் கோபமாக வந்தது அவருக்கு. அவருள் கோபம் பிரமாதமாக எழுந்து வளர்ந்தது. ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கை கொண்ட மட்டும் விசிறி எறிந்தார். அது தூரத்தில் போய்ப் பனிச்சகதியில் அமுங்குவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய அசட்டுத்தனமான குற்றம் அவரை எரிச்சல் கொள்ளச் செய்தது - ஆத்திரத்தை அவருக்கு ஊட்டியது. ஆனால் அதற்காக அவனைப் போலீஸôரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் மதிப்பு உகக்காத விஷயம். தன் தாழ்வையும், பலஹீனத்தையும் உணரச் செய்ததும் அந்தக் காரியம் பற்றிய சிந்தனையே. இந்த அராபியனைத் தன்னிடம் அனுப்பி வைத்த தன் மக்களைச் சபித்தார் - அத்துடன் ஒரே மூச்சில் கொலை செய்யத் துணிந்து, தப்பித்துக் கொள்ளாமல் மாட்டிக்கொண்ட அராபியனையும் சபித்தார் டாரு. எழுந்து வளையமாக மேடை மேல் நடந்து வந்தார். பிறகு பள்ளிக் கட்டிடத்திற்குள் சென்றார்.

கொட்டகையில் சிமெண்டுத் தரையில் குனிந்து வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டுப் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் அராபியன். டாரு அவனைப் பார்த்து ""வா'' என்றார். கைதிக்கு முன் நடந்து அறையை அடைந்தார். தன் மேல் ஒரு வேட்டைக்காரன் சட்டையை அணிந்து கொண்டார். நின்றார். அராபியன் தனது "சேச்சே' குல்லாயைத் தலையிலும், செருப்புக்களைக் காலிலும் போட்டுக் கொள்ளும் வரை காத்திருந்தார். வகுப்பறைக்கு இருவரும் சென்றனர். வெளியே போகும் வழியைக் காட்டி, ""போ'' என்றார். அவன் நகரவில்லை. ""நானும் வருகிறேன்'', என்றார் டாரு. அதற்குப் பிறகுதான் கைதி கிளம்பினான். அராபியன் வெளியேறியதும் டாரு தன் அறைக்குள் போய் பிஸ்கெட்டுகள், பேரீச்சம்பழம், சர்க்கரை முதலியவற்றை எடுத்துப் பொட்டலம் கட்டினார். ""அதுதான் வழி'' என்று சுட்டிக் காட்டினார். கிழக்கு நோக்கிக் கிளம்பினார் - கைதி பின் தொடர கொஞ்ச தூரம் போனதும் பார்த்தார். ஏதோ சப்தம் கேட்பதுபோல இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தார். நிர்மானுஷ்யமாகவே இருந்தது. யாரும், எதுவும் கண்ணில் படவில்லை. புரியாதவன் மாதிரி அவரையே கவனித்துக் கொண்டு நின்றான் அராபியன். ""வா, போவோம்'' என்றார் டாரு.

ஒரு மணிநேரம் நடந்திருப்பார்கள். ஒரு செங்குத்தான சுண்ணாம்புக்கல் ஒன்றின் ஓரத்திலே சிறிது நேரம் தங்கி இளைப்பாறினார்கள். பனி அதிவேகமாக உருகி மறைந்து கொண்டிருந்தது } சூரிய வெப்பத்திலே பனி உருகிய ஈரமும், சிறு குட்டைகளும் மிகத் துரிதமாகக் காய்ந்து கொண்டிருந்தன.

மேலான பீடபூமி முழுவதுமே சூரியவொளி தாக்கியது - காற்றைப் போலவே அதிலும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது. அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியபோது, காலடியில் "விண்விண்' என்று கட்டாந்தரையாக ஒலித்தது. ஆனந்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு எப்போதாவது ஒரு பறவை அவர்கள் முன் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. விடியற்காலை ஒளியைப் பார்த்தவாறே டாரு இன்பத்துடன் நகர்ந்தார். பழக்கமான அந்தப் பரப்பிலே ஒரு பரவசம் உண்டாகியது டாருவுக்கு. நீலவான வளைவும் அடியில் மஞ்சள் நிற மணலும், கல்லும் - ஆஹா என்ன அற்புதம்! மேலும் ஒரு மணிநேரம் நடந்தனர் - தெற்கு நோக்கிச் சரிவிலே இறங்கினர். காலடியிலே பொடியான கரளைக்கற்கள் நிறைந்த சம நிலத்தை எட்டினர். அதற்குப்பால் கிழக்கு நோக்கிச் சரிவு இறங்கிற்று. தாழ்ந்த சமவெளி வரும் - அதிலே இலை அதிகமில்லாத முறுக்கேறிய மரங்கள் தோன்றும்; தெற்கே பார்த்தால் ஒரே குழப்பமான சித்திரம் போல கற்கள் காட்சி அளிக்கும்.

டாரு இரண்டு பக்கமும் பார்த்தார். வானத்தைத் தவிர, அடி வானம் பூமியை எட்டும் வரை எந்தப் பக்கத்திலும் யாரும் இல்லை. அராபியனைப் பார்த்தார். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தார். ""எடுத்துக் கொள். அதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குக் காணும். இதோ ஒரு ஆயிரம் பிராங்குகளும் இருக்கின்றன'' - அராபியன் இரண்டையும் வாங்கிக் கொண்டான். ஆனால் அவற்றை என்ன செய்வது என்று அறியாதவன் போல மார்போடு தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.

""இதோ பார்'' என்றார் டாரு. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினார்; ""அதோ அந்தப் பக்கம் போனால் டிங்கியூட் - இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அங்கே நீ போனால் போலீஸ் காரியாலயம், நீதிபதி எல்லாம் இருப்பதைக் கண்டு கொள்வாய். அவர்கள் உன்னை எதிர்பார்க்கிறார்கள்.''

அராபியன் கிழக்கு நோக்கிப் பார்த்தான். அவன் கையில் மார்போடு அணைக்கப்பட்டு டாரு தந்த பணமும், பொட்டலமும் இருந்தன. டாரு அவன் தோள்பட்டையைப் பிடித்து தெற்கு நோக்கி அவன் முகத்தைத் திருப்பினார். குன்றின் அடிவாரத்திலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை தெற்கே ஓடுவது லேசாகத் தெரிந்தது. ""அந்தப் பாதை வழியே நீ பீடபூமியைக் கடக்கலாம். ஒரு நாள் நடந்தாயானால் புல்வெளிகளையும், அராபியர்களையும் சந்திப்பாய் நீ! அவர்கள் நீதிப்படி உன்னை வரவேற்பார்கள்.''

அராபியன் இப்போது "டாரு'வைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களிலே ஒரு பீதி குடி கொண்டிருந்தது தெரிந்தது அவருக்கு. ""கேளுங்கள்'' என்று அவன் ஆரம்பித்தான்.

""சும்மா இரு! நீ சொல்வதை நான் கேட்கப் போவதில்லை'' என்று அவனை அதட்டினார் டாரு. ""பேசாதிரு. நான் உன்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறேன்.''

உடனேயே திரும்பி, இரண்டு நீள எட்டு எடுத்து வைத்தார். அவர்கள் வந்த வழியிலே குழப்பத்துடன் நின்ற அராபியனை சற்றே திரும்பிப் பார்த்தார். மீண்டும் வேகமாகத் திரும்பி வந்த வழியே தன் பள்ளிக்கூடம் நோக்கிக் கிளம்பினார். சில நிமிஷங்கள் வரை அவர் காலடிச் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் கேட்ட போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், இன்னும் ஒரு நிமிஷம் கழித்துத் திரும்பிப் பார்த்தார். அந்த அராபியன் அவர் விட்டு வந்த இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கைகள் பொட்டலம், பணத்துடன் தொங்கவிட அவன் டாருவையே பார்த்துக் கொண்டு நின்றான். "டாரு'வின் தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. ஆனால், பொறுமையற்றவராக உலகையெல்லாம் சபித்துக் கொண்டே, தன் கையைத் தூக்கி ஆட்டிவிட்டு மீண்டும் கிளம்பித் தன் வழி நடந்தார். சிறிது தூரம் போய்விட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது அராபியன் அங்கில்லை - எந்தப் பாதையிலோ நகர்ந்து விட்டான்.

டாரு தயங்கினார். வானத்திலே உச்சியை எட்டி விட்டது சூரியன். சூரிய உஷ்ணம் நேராக அவர் தலையைத் தாக்கியது. முதலில் தயங்கியவராக, மெதுவாகத் திரும்பி நடந்தார். பிறகு வேகமாக நடந்து கைதியை விட்டுவிட்டு வந்த குன்றின் உச்சியை அடைந்தார். மூச்சு வாங்கியது அவருக்கு. நீலவானத்தை முட்டிய கற்குன்றுகள் தெற்கே கிடந்தன. கிழக்கு நோக்கின பாதையிலே. பனிப்படலம் போலவே ஒளிப்படலமும் ஒரு மறைவுத் திரையாகக் கிடந்தது. அந்தப் பாதையிலேயே சிறையையும் நீதிபதிகளையும் போலீஸ்காரனையும் நோக்கித்தான் அராபியன் நடந்துகொண்டிருந்தான் என்று கனக்கும் உள்ளத்துடன் கவனித்தார் டாரு. மெதுவாகவே நடந்துகொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டாரு தன் படிப்பு அறையில், ஜன்னலில் வெளியே பார்த்துக்கொண்டு நின்றார். பீடபூமி பூராவும் சூரியவெளியிலே குளித்துக் கொண்டிருந்தது - அதை அவர் கவனித்தார் என்று சொல்ல இயலாது. ஃபிரான்சு தேசத்து நதிகள் வளைந்து வளைந்து செல்லும், கலர் சாக்கால் எழுதிய நதிகளுக்கிடையே சற்று முன் அவர் படித்த புதிய வார்த்தைகள் காணப்பட்டன. ""நீ எங்கள் சகோதரனைப் போலீஸில் ஒப்படைத்தாய். அதற்கான தண்டனை உனக்குண்டு. நாங்கள் உன்னைக் கவனித்துக் கொள்வோம்'' என்று கோணல்மாணலாக எழுதியிருந்தது. டாரு வானத்தை அண்ணாந்து பார்த்தார்; பீடபூமியை நேராகப் பார்த்தார். கண்ணுக்கெட்டாத பல பிரதேசங்கள் அதற்கப்பால் இருந்தன. இந்தப் பரந்த நிலப்பரப்பிலே அவர் தனியானவர்; ஒருத்தர்.

வெளியீடு: ஞானச்சேரி; வருடம்: 1989


தமிழில் வெளியாகியுள்ள ஆல்பெர் காம்யு நூல்கள்:

1. அந்நியன் - (தமிழில்: வெ.ஸ்ரீராம்) க்ரியா பதிப்பகம்

2. கொள்ளை நோய் - (தமிழில்: ச.மதனகல்யாணி) ஆனந்தா பதிப்பகம், புதுச்சேரி

3. நியாயவாதிகள் (நாடகம்) - சந்தியா பதிப்பகம்

4. மரண தண்டனை என்றொரு குற்றம் - (தமிழில் } வி.நடராஜ்) வெளியீடு: பரிசல்


சிறு குறிப்பு:

இரண்டு முறை இச்சிறுகதையைப் படித்திருந்த நிலையில் என்னுடைய "குழிவண்டுகளின் அரண்மனை' - கவிதை நூலுக்கு மதிப்புரை கேட்டு கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் தயக்கத்துடன், ""நீங்கள் சிறுகதை எழுதியிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். எழுதிக் கொண்டிருந்ததாகவும், ஆல்பெர் காம்யுவின் "விருந்தாளி' சிறுகதையைப் படித்ததில் இருந்து, "எழுதினால் இதைப்போன்றதொரு சிறுகதையை எழுத வேண்டும்' என்று விட்டுவிட்டதாகவும் கூறினார். (ஆல்பெர் காம்யுவின் வேறுபல சிறுகதைகளை ஆங்கிலத்தில் படித்திருப்பதாகவும் சுகுமாரன் கூறினார்.)அன்றிலிருந்து ஆல்பெர் காம்யுவோடு சேர்ந்தவிட்ட பிம்பமாகவே எனக்குள் கவிஞர் சுகுமாரனும் இருந்து வருகிறார். ஆல்பெர் காம்யு பெயரை எழுதுகிறபோதுகூட அவர் நினைவும் வந்துவிடுகிறது. சுகுமாரன் குறிப்பிட்டதற்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்துடன் இந்தச் சிறுகதையைப் படித்து வருகிறேன்.

Saturday, February 20, 2010

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் சிறுகதை


கொலம்பிய எழுத்தாளர், பத்திரிகையாளர். 1955-ல் வெளியான லீப் ஸ்டார்ம் Leaf storm என்ற நாவல் மூலம் எழுத்தாளராக அறியப்பட்டார். 1967-ல் வெளியான One hundred years of solitude என்ற நாவல் சர்வதேச புகழ் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய கூறான Magical Realism இந்த நூலுக்குப் பிறகே அதிக கவனம் பெற்றது. Autumn of the patriarch (1975), chronicle of a Death foretold (1981), love in time of cholera (1985) ஆகியவை இவருடைய மற்ற படைப்புகள். 1982-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றா.


மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன்

An old man with enormous wings
வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் ஒளித் துகள்களாக மின்னிய கடற்கரை மணல், சேறும் அழுகிய சிப்பியின் நண்டுகளும் கலந்த குழம்பாக மாறியிருந்தது. நண்டுகளை எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தபோது நடுப்பகல் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால் முற்றத்தின் பின்பகுதியில் அசைந்துகொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது எது என்று பார்ப்பது கடினமாக இருந்தது. மிக அருகில் போய்ப் பார்த்தபோதுதான் வயதான மனிதன் என்பதை பெலயோ கண்டான். மண்ணில் முகம் பதிய படுத்துக் கிடந்த வயோதிகனால் கடும் முயற்சி செய்தும் எழ முடியவில்லை. அவனுடைய பெரிய சிறகுகள் முயற்சிக்குத் தடையாக இருந்தன.

கோரக்காட்சியால் பயந்துபோன பெலயோ குழந்தையின் காய்ச்சலைக் குறைப்பதற்காக அதன்மீது ஈரத்துணியைப் போட்டு எடுத்துக்கொண்டிருந்த மனைவி எலிùஸண்டாவைக் கூட்டிக்கொண்டு வர ஓடினான். அவளை முற்றத்தின் பின்பகுதிக்கு அழைத்துப் போனான். இருவரும் பேச்சற்ற திகைப்புடன் தரையிலிருந்த உடலைப் பார்த்தார்கள். குப்பை பொறுக்குபவனைப்போல வயோதிகன் உடையணிந்திருந்தான். வழுக்கை மண்டையில் சில வெளுத்த முடிகளும் வாயில் மிகக் குறைந்த பற்களுமே இருந்தன. இருந்திருக்கக்கூடிய பெருமித உணர்வு நனைந்திருந்த குடுகுடு கிழவனின் பரிதாப நிலையால் மறைந்து போய்விட்டது. அழுக்காகவும் பாதி பிடுங்கப்பட்டும் இருந்த பெரிய பருந்துச் சிறகுகள் சேற்றில் சிக்கிக்கொண்டிருந்தன. பெலயோவும் எலிùஸண்டாவும் நீண்ட நேரம் மிக அருகில் பார்த்ததால் சீக்கிரத்திலேயே ஆச்சரியம் நீங்கி சகஜமாகப் பாவிக்க ஆரம்பித்தார்கள். பேசக்கூட முற்பட்டார்கள். மாலுமியின் வலிமையான குரலில் புரிந்துகொள்ள முடியாத மொழி வழக்கில் பதில் சொன்னான். கணவனும் மனைவியும் சிறகுகள் ஏற்படுத்திய அசெüகரிய உணர்வை இப்படியாகத்தான் ஒதுக்கிவிட்டு; சூறாவளியால் உடைந்துபோன வெளிநாட்டுக் கப்பலிலிருந்து வீசியெறியப்பட்டவன் என்று விவேகமாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் வாழ்வையும் சாவையும் பற்றி எல்லாம் தெரிந்த அண்டைவீட்டுப் பெண்ணைக் கூப்பிட்டு அவனைக் காண்பித்தார்கள். ஒரே பார்வையில் அவள் அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்டினாள். ""தேவதூதன். குழந்தைக்காகத்தான் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். வயோதிகம் காரணமாக மழை அவனைக் கீழே வீழ்த்திவிட்டது'' என்று சொன்னாள்.

பெலயோவின் வீட்டில் உயிருடன் தேவதூதன் பிடிபட்டிருக்கும் விஷயம் அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. விண்ணுலக சதியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே அந்த நாளைய தேவதூதர்கள் என்று அபிப்பிராயம் கொண்ட அண்டை வீட்டுப் பெண்ணின் கருத்துக்கு மாறாக வயோதிகனை அடித்துக் கொல்ல மனம் வரவில்லை. மாவட்ட நிர்வாகியின் உதவியாளனான பெலயோ தன் குண்டாந் தடியைக் கையில் பிடித்தபடியே சமையலறையிலிருந்து பிற்பகல் முழுக்க கண்காணித்துக் கொண்டிருந்தான். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக சேற்றிலிருந்து இழுத்துக்கொண்டு போய் கம்பிவலை போட்ட கூண்டுக்குள் கோழிகளோடு அடைத்தான். மழை நடு இரவில் நின்ற பிறகும் பெலயோவும் எலிùஸண்டாவும் நண்டுகளைக் கொன்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து காய்ச்சல் நீங்கிக் கண்விழித்த குழந்தைக்குப் பசித்தது. தோணியில் மூன்று நாளைக்குத் தேவையான குடிநீரும் வைத்து தேவதூதனை ஏற்றி விதிப்படி நடக்கட்டும் என்று பெருங்கடலுக்குள் அனுப்பிவிட கணவனும் மனைவியும் பெருந்தன்மை பொங்கத் தீர்மானித்தார்கள். ஆனால் விடிந்தவுடன் முற்றத்துக்குப் போய் பார்த்தபோது சுற்று வட்டத்தார் அனைவரும் கோழிக்கூண்டுக்கு முன்னால் திரண்டிருந்ததைக் கவனித்தார்கள். கூட்டம் கொஞ்சம் பயமின்றி கம்பிவலை வழியாகத் தின்பண்டங்களை எறிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. தெய்வீக உயிரினம் என்று கருதாமல் சர்க்கஸ் மிருகத்தைப்போல நடத்தினார்கள்.

விசித்திர செய்தியைக் கேள்விப்பட்ட அருட்தந்தை கொன்ஸôகோ பதற்றமடைந்து ஏழு மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தார். இதற்குள் விடியற்காலை வந்த கூட்டத்தைவிட குறைவான விளையாட்டுப் புத்தி கொண்ட பார்வையாளர்கள் வந்து அடைத்து வைக்கப்பட்டவனின் எதிர்காலம் குறித்து பலவகையான யூகங்களில் ஈடுபட்டார்கள். அவர்களிலே மிகவும் எளிமையான ஒருவன் வயோதிகனை உலகின் மேயராக்கவேண்டும் என்று நினைத்தான். இன்னும் கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழிகள் எல்லா யுத்தங்களையும் வெற்றிக் கொள்வதற்காக அவனை ஐந்து நட்சத்திர தளபதியாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். பிரபஞ்ச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கும் சிறகுகள் கொண்ட புத்திசாலிகளின் இனமொன்றை பூமியில் உண்டாக்க அவனைச் சினைக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சில கனவுலவாதிகள் ஆசைப்பட்டார்கள். அருட்தந்தை கொன்ஸôகவோ பாதிரியாவதற்கு முன்பு வீரியம் மிக்க விறகு வெட்டியாக இருந்தவர். கம்பிவலை பக்கத்தில் நின்றபடியே சமயத்துறை வினாவிடைப் புத்தகத்தை சில விநாடிகள் மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு வசீகரமான கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் முதுமையான பெட்டைக் கோழி போலத் தோன்றிய பரிதாபமான வயோதிகனை நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்துவிடச் சொன்னார். விடியற்காலையில் வந்த பார்வையாளர்கள் எறிந்த பழத்தோல்கள் மற்றும் காலை உணவின் மிச்சங்கள் ஆகியவற்றுக்கிடையே மூலையில் படுத்துக்கிடந்த அவன் தன் சிறகுகளைச் சூரிய ஒளியில் உலர்த்திக் கொண்டிருந்தான். பாதிரியார் கூண்டுக்குள் நுழைந்து லத்தீனில் காலை வணக்கம் சொன்னபோது மனிதர்களின் துடுக்குத் தனங்களைப் பற்றி கவலைப்படாத அவன் பழமையான கண்களை மட்டும் உயர்த்தி அவனுடைய மொழியில் ஏதோ முணுமுணுத்தான். கடவுளின் மொழியையோ அவருடைய மதகுருமார்களுக்கு எப்படி வந்தனம் சொல்வது என்பதையோ தெரிந்திராத அவனை மோசடிக்காரன் என்று பங்குத்தந்தை சந்தேகப்பட்டார். மிக அருகில் கவனித்தபோது அதிக மனிதச்சாயல் இருப்பதைப் பார்த்தார். அவனிடம் சகித்துக் கொள்ள முடியாத திறந்தவெளி மணம் ஒன்று. சிறகுகளின் பின்புறத்தை புல்லுருவிகள் அடைத்திருந்தன. பிரதான இறகுகள் அண்டவெளியின் காற்றால் சீர்கெட்டிருந்தன. அவனைச் சார்ந்த எதுவுமே தேவதூதர்களின் பெருமித மேன்மைக்கு ஒத்துவரவில்லை. கோழிக்கூண்டிலிருந்து வெளிவந்த அவர் வயோதிகன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள் கள்ளங்கபடில்லாமல் அவனை நடத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து சிறு பிரசங்கம் செய்தார். சூதுவாது தெரியாதவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த பிசாசு சில கேளிக்கைத் தந்திரங்களைக் கையாளும் என்பதை நினைவுறுத்தினார். பருந்துக்கும் விமானத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் சிறகுகள் முக்கிய அம்சம் இல்லையென்றால் தேவதூதர்களை அடையாளம் காண்பதில் இன்னும் அவை முக்கியத்துவம் குறைந்தவை என்று வாதம் செய்தார். என்றாலும் இதுபற்றி பிஷப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார். பிஷப் அவருடைய தலைமைக் குருவுக்கும் தலைமைக் குரு போப்புக்கும் எழுதி மிக உயர்ந்த மத நீதிமன்றங்களிலிருந்து இறுதித் தீர்ப்பைப் பெற்றுத் தருவார்கள் என்றும் சொன்னார்.

பாதிரியுடைய விவேகம் பாறை மீது தூவப்பட்ட விதை போலானது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவி சில மணி நேரங்களில் பெலயோ வீட்டு முற்றம் சந்தைக்கடையின் ஆரவாரப் பரபரப்பைப் பெற்றது. வீட்டையே தகர்த்துவிடும் அளவுக்குச் சேர்ந்து விட்ட கும்பலைத் துரத்த முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் ஏந்தி துருப்புகளை வரவழைக்க வேண்டியதாயிற்று. கும்பல் எறிந்துவிட்டுப் போன குப்பையைப் பெருக்கித் தள்ளியதால் எலிùஸண்டாவின் முதுகுத்தண்டு முறிந்து போனதைப்போல வலித்தது. தடுப்பு போட்டு தேவதையைப் பார்க்க ஐந்து ùஸன்ட் அனுமதிக் கட்டணமாக வசூலிக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போதுதான் உண்டானது.

மிகத்தொலைவிலிருந்து வித்தை காட்டுபவர்களின் கூட்டம் ஊருக்கு வந்தது. கழைக்கூத்தாடி கூட்டத்தின் மீது "சர்சர்' என்று சில முறை பறந்து போனான். யாருமே அவனைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் சிறகுகள் ஒத்தன தேவதூதனுடையவை அன்றி வெüவாலினதை. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி வந்தார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப்படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன், விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச்செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன், இவற்றைவிட ஆபத்து குறைந்த நேரங்களில் அவஸ்தைப்படும் மற்றும் பலர் வந்தார்கள். பூமியையே நடுங்க வைத்த அந்தக் கப்பல் விநாசம் ஏற்படுத்திய நிர்மூலத்துக்கிடையில் பெலயோவுக்கும் எலிùஸண்டாவுக்கும் சுகக்களைப்பும் உண்டானது. காரணம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்கள் வீட்டின் அறைகளைப் பணத்தால் நிரப்பியதுதான். தேவதூதனைப் பார்க்கக் காத்திருக்கும் யாத்ரீகர் வரிசை தொடுவானத்தையும் தாண்டிப் போயிற்று.

தன்னுடைய நாடகத்தில் தனக்கே பங்கு இல்லாத நபர் தேவதூதன் ஒருவன்தான். கம்பிவலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் விளக்குகளும் புனிதச்சடங்கு சார்ந்த மெழுகுவர்த்திகளும் உண்டாக்கிய தாங்க முடியாத வெப்பத்தால் வெகுவாக அவதிப்பட்டாலும் தன்னுடைய கடன் வாங்கிய கூட்டில் முடிந்த அளவு செüகரியத்தை அடைய முயன்றான். முதலில் அவனை அந்துருண்டைகளைச் சாப்பிட வைக்க முயற்சி செய்தார்கள். தேவதூதர்களுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட உணவு அதுதான் என்று புத்திசாலி அண்டைவீட்டுப் பெண் சொன்னதற்கு ஏற்ப அப்படிச் செய்தார்கள். செய்த தவறுகளுக்குக் கழுவாய் மேற்கொள்பவர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த, போப்பாண்டவர் கொடுத்த, உணவை நிராகரித்ததுபோலவே அந்துருண்டைகளையும் நிராகரித்தான். கடைசியில் கத்திரிக்காய் மசியலைத் தவிர வேறெதையும் சாப்பிடாததற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததாலா வயோதிகனாக இருந்ததாலா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அமானுஷ்யமாக அவனிடம் இருந்த ஒரே நற்குணம் பொறுமைதான். குறிப்பாக சிறகுகளில் பல்கிப் பெருகிய நட்சத்திர மண்டல புல்லுருவிகளைத் தேடி கோழிகள் அவனைக் கொத்திய போதும், உடல் ஊனமுற்றவர்கள் தங்களுடைய ஊனமுற்ற பகுதிகளைத் தொட அவனுடைய சிறகுகளைப் பிடுங்கியபோதும், நிற்க வைத்துப் பார்ப்பதற்காக மேலதிக இரக்க குணம் உடையவர்கள் கூட அவன்மீது கற்களை எறிந்தபோதும் அசாத்திய பொறுமையைக் கடைப்பிடித்தான். ஒரு சமயம் பல மணி நேரங்களுக்கு அசைவற்றுக் கிடந்ததால் இறந்துவிட்டானோ என்று சந்தேகப்பட்டு எருதுக்குச் சூடு போடும் இரும்புக் கம்பியால் விலாவை எரித்தபோதுதான் அவர்களால் அவனை எழுப்ப முடிந்தது. திடுக்கிட்டு எழுந்த அவன் தன்னுடைய மாய உலக மொழியில் அவர்களை வசை பாடினான். கண்களில் நீர் வழிய இரண்டு முறை சிறகுகளை அடித்துக்கொண்டபோது கோழி எச்சமும் நிலாக்கோள தூசியும் கலந்த சூறைக்காற்றும் பீதிப்புயலும் தோன்றின். அவை இந்த உலகைச் சேர்ந்தவையாகத் தோன்றவில்லை. சூடு போட்டதற்கு அவனுடைய எதிர்வினை கோபத்தினாலன்றி வலியால்தான் உண்டானது என்று நிறைய பேர் நினைத்தாலும் அதன் பிறகு அவனைத் தொல்லைப் படுத்தாமலிருப்பதில் விழப்பாக இருந்தார்கள். காரணம், அவனுடைய சாத்வீகம் மாவீரனுக்குரிய சாந்தம் அல்ல, பிரளயத்தின் இளைப்பாறுதல் என்பதைப் பெரும்பான்மையோர் புரிந்துகொண்டதுதான்.

அருட்தந்தை கொன்ஸôகோ வேலைக்காரியின் வக்கணையும் பவ்வயமும் கலந்த வார்த்தைகளை உபயோகித்து தேவதூதனைப் பார்க்க வந்த கூட்டத்தின் துடுக்குத் தனத்தைத் தடுத்து நிறுத்தினார். அதேசமயம் சிறைப்பட்ட தேவதூதனின் தன்மை பற்றிய இறுதித் தீர்ப்பையும் மேலிடத்திலிருந்து எதிர்நோக்கியிருந்தார். ஆனால் ரோமிலிருந்து வந்த கடிதங்கள் எவ்வித அவசரத்தையும் வெளிப்படுத்தவில்லை. கைதிக்கு தொப்புள் இருந்ததா, அவனுடைய மொழி வழக்கு மேற்காசிய மொழி வகையோடு தொடர்பு ஏதும் கொண்டிருந்ததா, குண்டூசியன் தலைக்கு அவனுடைய உடலின் எத்தனை மடங்கு ஈடாகும், அவன் சிறகுகள் கொண்ட வெறும் நார்வேக்காரன்தானா என்பதையெல்லாம் ஆராய்வதிலேயே மேலிடத்தார் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் சிக்கல்களுக்குத் தெய்வீக சம்பவம் ஒன்று முற்றுப்புள்ளி வைக்காமலிருந்திருந்தால் அப்படியான அரைகுறையான கடிதங்களே வந்து போய்க்கொண்டு இருந்திருக்கும்.

அப்போதிருந்த பலவகையான கேளிக்கை ஈர்ப்புகளுக்கிடையே பெற்றோர் சொல்லுக்குக் கீழ்படியாததால் சிலந்தியாக மாற்றப்பட்ட பெண் ஒருத்தியைக் காட்சிப் பொருளாக்கும் குழு ஊருக்கு வந்தது. பார்க்க தேவதூதனை விட அவளுக்குக் கட்டணம் குறைவாக இருந்தது மட்டுமின்றி அவளுடைய அபத்தமான நிலை பற்றி அவளைக் கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவளுடைய கோரத்தைப் பற்றிய உண்மையை யாரும் சந்தேகிக்க அவசியம் ஏற்படாமலிருக்க அவளை முழுக்கத் துருவி ஆராயவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்டுக்கடா அளவுக்கு உருவமும் சோகமான இளம் பெண்ணின் முகமும் கொண்ட பயங்கரமான சிலந்தி அவள். அசாதாரண உருவத்தை விடவும் துயரத்தை விவரங்களுடன் உண்மையான வேதனையுடன் சொன்ன விதம் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது நடனமாடுவதற்காக வீட்டைவிட்டு திருட்டுத்தனமாகப் போனாள். அனுமதியின்றி விடியவிடிய நடனமாடிப் பின் காட்டு வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரமான இடி வானத்தையே இரண்டாகப் பிளந்தது. பிளவின் வழியாக வெளிப்பட்ட கந்தக மின்னல் அவளைச் சிலந்தியாக மாற்றிவிட்டது. தயாள குணமுடைய சிலர் அவளை நோக்கி எறிந்த கொத்துக்கறி உருண்டைகளே அவளுக்குக் கிடைத்த உணவு. மனித அனுபவ மெய்மையும் பயங்கர படிப்பினையும் கொண்ட இப்பெண்ணின் காட்சி, மனிதர்களை அபூர்வமாகவே அன்புடன் பார்க்கும் இறுமாப்பு கொண்ட தேவதூதனின் காட்சியை எளிதாகத் தோற்கடித்தது. மேலும் தேவதூதனால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சில அற்புதங்கள் ஒரு வகையான மனப்பிறழ்வைக் கொண்டிருந்தன. உதாரணமாக, பார்வை திரும்பப் பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது, தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. இதுமாதிரியான கேலிக்கிடமான, ஆறுதல் பரிசு போன்ற அற்புதங்கள் தேவதூதனின் புகழைச் சிதைத்திருந்தன. இப்படியாகத்தான் அருட்தந்தை கொன்ஸôகோவின் தூக்கமின்மை பூரணமாக நீங்கியது. மூன்று நாட்கள் மழை பெய்தபோது இருந்ததைப்போல பெலயோவின் முற்றம் வெறுமை அடைந்தது. படுக்கையறைக்குள் நண்டுகள் நடந்து திரிந்தன.

வீட்டுச் சொந்தக்காரர்கள் கவலைப்பட காரணமேயில்லை. குளிர் காலத்தில் வண்டுகள் நுழையாதபடி இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட ஜன்னல்களும் தோட்டங்களும் இரும்புச் சட்டங்கள் நிர்மாணிக்கப்பட்ட இரண்டடுக்கு மாளிகை ஒன்றையும் சேமித்த பணத்தில் கட்டினார்கள். நகரத்துக்கு அருகில் பெலயோ முயல் பண்ணை அமைத்து வேலையையும் நிரந்தரமாக விட்டுவிட்டான். அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அழகான பெண்கள் அணியும் வானவில் வண்ணங்களைக் காட்டும் பட்டு ஆடைகளையும் குதி உயர்ந்த ஸôட்டின் காலணிகளையும் எலிùஸண்டா வாங்கினாள். கோழிக்கூண்டைப் பற்றி மட்டும் அவர்கள் நினைக்கவேயில்லை. கிருமிநாசினி உபயோகப்படுத்திக் கழுவி அடிக்கடி நறுமணப் பிசினை வைத்து அவர்கள் எரித்தது தேவதூதனை வழிபாடு செய்வதற்கு அல்ல. பூதத்தைப் போல எல்லா இடங்களிலும் பரவி புதிய வீட்டைப் பழையதாக மாற்றிக் கொண்டிருந்த கழிவுக் குவியலின் துர்நாற்றத்தைப் போக்கத்தான். முதலில் குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டபோது கோழிக்கூண்டு அருகில் போகாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் பிறகு பயம் நீங்கி நாற்றத்துக்குப் பழகிப் போனார்கள். இரண்டாவது பல் முளைப்பதற்கு முன்பாக குழந்தை கோழிக்கூண்டுக்குள் நுழைந்து விளையாடினான். கூண்டின் கம்பிகள் இற்று விழ ஆரம்பித்தன. மற்ற மனிதர்களிடமிருந்து ஒதுங்கியிருந்ததைப் போலவே குழந்தையிடம் இருந்தும் தேவதூதன் ஒதுங்கியே இருந்தான். ஆனாலும் ஏற்பட்ட பெருத்த அவமானங்களை மாயத் தோற்றங்களால் மயங்காத நாயின் பொறுமையோடு சகித்துக் கொண்டான். அவனுக்கும் குழந்தைக்கும் ஒரே சமயத்தில் தட்டம்மை வந்தது. குழந்தையைக் கவனித்த டாக்டருக்கு தேவதூதனுடைய இதயத்தின் சப்தத்தைக் கேட்கும் ஆவலை அடக்க முடியவில்லை. இதயத்திலிருந்து விஸில் சப்தத்தையும் சிறுநீரகங்களிலிருந்து பல வகையான சப்தங்களையும் கேட்ட டாக்டருக்கு அவன் இனி உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று பட்டது. அவருக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது சிறகுகள் மனித உருவத்துக்கு மிக இயல்பாகக் பொருந்தியிருந்ததுதான். மற்ற மனிதர்களுக்கும் ஏன் சிறகுகள் இல்லை என்பதைத்தான் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மழையும் வெயிலும் கோழிக்கூண்டை முற்றிலும் சிதைத்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தை பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. மரணத் தறுவாயில் இருக்கும் திக்கற்றவனைப்போல தேவதூதன் இங்கேயும் அங்கேயும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தான். படுக்கையறையிலிருந்து துடைப்பத்தால் அவனை அவர்கள் துரத்திய சில விநாடிகளில் சமையலறையில் இருப்பதைப் பார்ப்பார்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் அவன் இருப்பதைப்போல உணர்ந்த அவர்கள், தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டானோ, தன்னை இனப்பெருக்கம் செய்து கொண்டானோ என்றும் சந்தேகப்பட்டார்கள். எரிச்சலும் மனநலக்கேடும் அடைந்த எலிùஸண்டா தேவதூதர்கள் நிரம்பிய அந்த நரகத்தில் வாழ்வது பயங்கரமானது என்று கத்திச் சொன்னாள். அவனால் அரிதாகவே சாப்பிட முடிந்தது. மூப்புற்ற கண்களில் திரை விழுந்ததால் கம்பங்களில் மோதிக்கொண்டான். இறகுகளே உதிர்ந்து போனதால் நாணற் புல் போன்ற எலும்பமைப்பை சிறகுகள் பெற்றன. பெலயோ இரக்கம் கொண்டு அவன் மீது கம்பளியைப் போட்டு கொட்டகையில் படுத்துத் தூங்க அனுமதித்தான். பிறகுதான் இரவில் அவனுக்குக் காய்ச்சல் வந்ததையும் உச்சரிக்க சிரமமான வார்த்தைகளை அவன் பிதற்றுவதையும் கவனிக்க முடிந்தது. அவர்கள் கலவரமடைந்த சில தருணங்களில் அதுவும் ஒன்று. காரணம் இறந்துவிடப் போகிறான் என்று அவர்கள் நினைத்ததும், இறந்துபோன தேவதூதர்களை என்ன செய்வது என்று புத்திசாலியான அண்டை வீட்டுப் பெண்ணால்கூட சொல்ல முடியாததும்தான்.

இருந்தும் மோசமான குளிர்காலத்துக்கு ஈடுகொடுத்து வாழ்ந்தது மட்டுமன்றி வெயில் காயும் நாட்கள் ஆரம்பித்தவுடன் உடல் ரீதியாக முன்னேறவும் செய்தான். முற்றத்தில் யாரும் பார்க்காத மூலையில் அசைவின்றிப் பல நாட்கள் இருந்தான். டிசம்பர் மாத ஆரம்பத்தில் சிறகுகளில் சோளக் கொல்லைப் பொம்மைக் காக்கையின் இறகுகளைப் போன்ற விரைப்பான இறகுகள் வளர ஆரம்பித்தன. முதுமையின் இன்னொரு துயரமாகத் தோன்றியது. மாற்றங்களுக்கான காரணம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றங்களை யாரும் பார்க்கக் கூடாது என்பதிலும் நட்சத்திரங்களுக்குக் கீழே சமயங்களில் அவன் பாடிய கடலோடிகளின் பாடல்களை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்தான். ஒரு காலையில் எலிùஸண்டா மதிய உணவுக்காக வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்த போது நடுக்கடலிலிருந்து வந்ததைப் போன்ற காற்று சமையலறைக்குள் வீசியது. ஜன்னலருகே போன அவள் பறப்பதாகத் தேவதூதன் செய்த முதல் முயற்சிகளைப் பார்த்தாள். முயற்சிகள் அலங்கோலமாக இருந்ததால் விரல் நகங்கள் காய்கறிப் பாத்தியில் பள்ளத்தை உண்டாக்கின. சிறகடித்து மேலெழும்பி காற்றில் நிலைகொள்ள முடியாமல் கொட்டகையை இடித்துத் தள்ளி விடுபவன்போல திணறினான். ஆனால் விரைவில் உயரே பறக்க முடிந்தது. வயோதிக வல்லூறின் ஆபத்தான சிறகடிப்போடு அவன் கடைசி வீடுகளைக் கடந்து போனதைப் பார்த்த எலிùஸண்டா அவனுக்கும் தனக்குமான நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்தபோது அவனைக் கவனித்தபடியே இருந்தாள். கண் பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்தாள். ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையில் இனிமேல் அவன் தொல்லையாக இல்லாமல் கடலின் தொடுவானத்தில் கற்பனைப் புள்ளியாக மட்டுமே இருக்கப் போகிறான்.


நூல்: பிறமொழிக் கதைகள்; தமிழில் : ஆர்.சிவகுமார்

பதிப்பகம்: யுனைடெட் ரைட்டர்ஸ்

ரூ. 55

Tuesday, February 16, 2010

போர்ஹே சந்திப்பு தொடர்ச்சிகேப்: ஆங்கிலோ - சாக்ஸன் கவிதையின்பால் ஈர்த்தது எது?
போர்ஹே: அர்ஜெண்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமை நூலகராக நான் நியமிக்கப்பட்டபோது, வாசிக்க முடியாதபடி பார்வையை இழந்து விட்டேன். வளைந்து கொடுக்கப்போவதில்லை, பின் வாங்க மாட்டேன், தன்னிரக்கத்திற்கு இடந்தர மாட்டேன் என்றேன். பிறிதொரு விசயத்தை முயன்று பார்த்தேன். அப்போது வீட்டிலே ஸ்வீட்டின் Anglo - saxon reader மற்றும் saxon chronicles இருப்பது நினைவுக்கு வந்தது. ஆங்கிலோ - சாக்ஸனைக் கற்றுப் பார்ப்போம் என்று தொடங்கினேன். கையேடுகள் மூலமாக கற்றேன். இரு வார்த்தைகள் மூலம் இதனுடன் காதல் வயப்பட்டேன். இன்னும் நினைவில் நிற்கின்ற அவ்விரு வார்த்தைகள் london, londonbur hand மற்றும் rome, romeoburh. இப்போது , பழைய ஆங்கிலத்தைக் காட்டிலும் சிறந்த இலக்கியத்தைப் பெற்றிருக்கும் பழைய நோர்ஸ் மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கேப்: இருபதாம் நூற்றாண்டின் தொன்மவியலை, எழுத்தாளர்களுக்குக்கென எவ்விதம் விளக்குவீர்கள்?
போர்னே: அது ஒரு பெரும் கேள்வி.

போர்ஹே: பிரக்ஞைபூர்வமாகச் செய்யப்படக் கூடியதென நான் நினைக்கவில்லை. உடனிகழ் காலத்தவராக இருந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உடன் நிகழ்காலத்தவராகவே இருக்கிறோம். எக்காலத்திலும் உருவாகி வந்து கொண்டிருப்பதே தொன்மவியலில் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கிரேக்க பழைய நோர்ஸ் தொன்மவியலை என்னால் விளக்கக் கூடும்.

சார்லஸ் சிலுவர்: உங்களைப் பாதித்திருக்கும் வகையிலே நீங்கள் மேற்கொண்ட அனுபூதியான - மதத்தன்மையிலான வாசிப்புகள் ஏதேனும் உண்டா என்று வியப்புறுகிறேன்.
போர்ஹே: நிச்சயமாக உண்டு. ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் சூஃபிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். நான் சாவதற்குள் ஸ்வீடன் இயற்கை விஞ்ஞானியான ஸ்வீடன் போர்க் பற்றிய நூலொன்றை எழுதுவதில் என்னால் ஆனதைச் செய்வேன் என எண்ணுகிறேன். எமர்ஸனின் representative மூலமாக அவர் அறிமுகமானார். ப்ளேக்கும் ஒரு அனுபூதியாளரே. ஆனால் ப்ளேக்கின் தொன்மவியல் எனக்குப் பிடிப்பதில்லை; அது மிகவும் செய்கையானது.

போர்னே: 'விட்மனை வாசிப்பவர் விட்மனாகிறார்' என்றீர்கள். நீங்கள் காப்ஃகாவை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் ஏதாவதொரு அம்சத்தில் காஃப்காவாக இருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களோ என ஆச்சரியப்படுகிறேன்.
போர்ஹே: காஃப்காவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். உண்மையில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். செஸ்டர்ன், காஃப்கா, சர் தாமஸ் ப்ரெüன் போன்றோர் முன்னிலையில் நான் வெறும் வார்த்தையே. நான் அவரை விரும்புகிறேன்; பதினேழாம் நூற்றாண்டு ஸ்பானிஷில் மொழிபெயர்தேன். அது நன்றாக வந்தது. urne: Buriall- விலிருந்து ஓர் அத்தியாயத்தை க்யூவெடோவின் ஸ்பானிஷில் மொழிபெயர்த்தோம். அது நன்றாக இருந்தது. அதே காலகட்ட, லத்தீனை வேறொரு மொழியில் எழுதுவது, லத்தீனை ஆங்கிலத்தில் மற்றும் ஸ்பானிஷில் எழுதுவது, என்னும் அதே கருத்துகள் எல்லாம் இருந்தன.

போர்னே: காஃப்காவை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் அவரை மொழியாக்கும்போது சேவையுணர்வு கொண்டிருந்தீர்களா?
போர்ஹே: இல்லை, வால்ட் விட்மனின் song of myself- னை மொழிபெயர்க்கும்போது அவ்வாறு உணர்ந்தேன். " நான் செய்து கொண்டிருப்பது முக்கியத்துவம் கொண்டது' என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். விட்மனை மனப்பாடமாகத் தெரியும்.

போர்னே: நீங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளுள் ஏதாவதொன்று, உங்களது படைப்பினைப் புரிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் உதவியிருப்பதாக, நீங்களே செய்திருப்பவற்றை நியாயப்படுத்துவதாக எப்போதாவது உணர்ந்தீர்களா?
போர்ஹே: இல்லை, என்னுடைய படைப்பு பற்றி நான் எண்ணவில்லை.

போர்னே: நீங்கள் மொழிபெயர்க்கும்போது?
போர்ஹே: இல்லை, ப்யூனஸ் அயர்ஸிலுள்ள என் வீட்டை வந்து பாருங்கள், என் நூலகத்தைக் காட்டுகிறேன். என்னுடையதோ என்னைப் பற்றியோ ஒரு புத்தகம்கூட இருக்காது. இது நிச்சயமானது. என் புத்தகங்களை தெரிவு செய்கிறேன். சர் தாமஸ் ப்ரெü அல்லது எமர்ஸனுக்கு அருகிலே இடம் பிடித்துக்கொள்ள நான் யார்? ஒன்றுமில்லாதவன்.

போர்னே: படைப்பாளர் போர்ஹேயும், மொழிபெயர்ப்பாளர் போர்ஹேயும் முற்றிலும் வேறானவர்களா?
போர்ஹே: ஆமாம், வேறானவர்களே. மொழிபெயர்க்கும்போது அத்துமீறாதிருக்க முயலுகின்றேன். நல்லதொரு மொழியாக்கம் செய்ய, அத்துடன் கவிஞராக இருக்கவும் முயலுகிறேன்.

போர்னே: உங்களது படைப்புகளில் அர்த்தமெதனையும் பொதிந்து வைத்திவிட நீங்கள் முயன்றதில்லை என்றீர்கள்.
போர்ஹே: என்னை ஒரு அறவியல் சார்பாளராகவே கருதிக் கொள்கிறேன். ஆனால் அறநெறிகளை போதிக்க முயலுவதில்லை. என்னிடம் செய்தி கிடையாது. சமகால வாழ்வு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தினசரிகள் எதையும் வாசிப்பதில்லை. அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெறுக்கிறேன். எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.என் அந்தரங்க வாழ்க்கை அந்தரங்கமானதே; புகைப்படத்தையும் விளம்பரத்தையும் தவிர்க்கவே முயலுகிறேன். என் தந்தைக்கும் இதே எண்ணம் இருந்தது. 'நான் வெல்ஸின் புலப்படாத மனிதனாக விரும்புகிறேன்' என்பார். அது குறித்து பெருமிதப்படுவார். ரியோ டி ஜெனிரோவில் என் பெயரை யாரும் அறியார். அங்கே புலப்படாதிருப்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக விளம்பரம் என்னைக் கண்டுகொண்டுவிட்டது. அதுபற்றி நான் என்ன செய்யக்கூடும்? அதனை நான் தேடுவதில்லை. என்னை அது தேடிக் கொண்டது, ஒருவருக்கு எண்பது வயதாகிறது, கண்டறியப்படுகிறார், துப்பறியப்படுகிறார்.
போர்னே: உங்களது படைப்பின் அர்த்தம், அர்த்தமின்மை தொடர்பாக; காஃப்காவின் படைப்பெங்கும் குற்றணர்வு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது படைப்பில் ஒவ்வொன்றும் குற்ற உணர்வைத் தாண்டியதாக இருக்கிறது
.
போர்ஹே: ஆமாம், அது சரிதான் காஃப்காவுக்கு குற்றவுணர்வு இருந்தது. என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் செய்திருப்பவை செய்யப்பட்டுள்ளன.; எனக்காக அல்லது என் மூலமாக. ஆனால் உண்மையிலேயே நான் அதனைச் செய்திருக்கவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, என்னால் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

போர்னே: பஞ்சபூதங்களால் ஆன வரம்புக்குட்பட்ட சேர்க்கை மட்டுமே உண்டு. எனவே கருத்துக்களை உருவாக்குவதென்பது கடந்த காலம் பற்றிய மறு கண்டுபிடிப்பே - என்னும் உங்களது கூற்றுடன் இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாமா?
போர்ஹே: பார்க்கலாம் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலத்துப் புத்தகங்களை மீளவும் எழுதிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனைச் சுற்று வித்தியாசமாக செய்கிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டுவிட்ட கவிதை ஒன்று என்னால் எழுதப்படுகிறது. அதாவது என்னால் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இதுவே என் தார்மீகப் பணி. இலேசான மாறுதல்களையே நாம் செய்கிறோம். ஆனால் மொழியினை ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். அவ்வாறு செய்திட ஜாய்ஸ் முயன்றார். அவர் சில நேர்த்தி மிகு வரிகளை எழுதிய போதும் தோற்றுவிட்டார்.

போர்னே; மீண்டும்மீண்டும் எழுதப்பட்ட இக்கவிதைகளை எல்லாம் புதிர்பாதையில் ஒரே சுவரிடம் வந்து சேருதல் போன்றது என்பீர்களா?
போர்ஹே: அப்படியே, அது நல்ல உருவகம். ஆமாம், நிச்சயமாக.

போர்னே: உள்ளூர் வண்ணத்தைப் பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்; எப்போது சரியாக இருக்காது என்பதற்கான வழிகாட்டு நெறிகளைக் கூறுவீர்களா?
போர்ஹே: தடைப்படுத்தாத விதத்திலே செய்ய முடியுமானால் நல்லது. ஆனால் அழுத்திக் கூறினால், எல்லாம் செயற்கையாகிவிடும். ஆனால் அது பயன்படுத்தப்பட வேண்டும். அது விலக்கப்பட்டதல்ல என்கிறேன். அதனை அழுத்த வேண்டியதில்லை. போனஸ் அயர்ஸில் ஒருவித கொச்சை மொழியினை உருவாக்கியிருக்கிறோம். அதனை எழுத்தாளர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கு அதனால் பயனேதும் கிடையாது. இருபது நிமிடத்திற்கொரு கொச்சை வழக்கில் வார்த்தை ஒன்றினை அவர்கள் கூறலாம். ஆனால் எப்போதும் கொச்சை மொழி பேசிட யாரும் முயலுவதில்லை.

போர்னே: வட அமெரிக்க எழுத்தாளர் யாரேனும் உள்ளூர் வண்ணத்தை திறம்பட கையாண்டுள்ளனரா; அப்பண்பாட்டிற்கு அந்நியர் என்ற முறையிலே உங்களுக்கு அதனை ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருப்பவர் என யாரைக் கருதுகிறீர்கள்?
போர்ஹே: மார்க் ட்வைன். ரிங் லார்ட்னர் சிறிது வழங்கியிருப்பதாக எண்ணுகிறேன். அவரை மிகமிக அமெரிக்கத் தன்மை கொண்டவராக எண்ணுகிறீர்கள் இல்லையா?

போர்னே: மற்றும் நகர்ப்புறத்தன்மை வாய்ந்தவர்.
போர்ஹே: மிகவும் நகர்ப்புறத் தன்மை. மற்ற எழுத்தாளர் யார்? ப்ரெட் ஹார்டியை வாசித்திருக்கிறேன். ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளராக இருந்தார் என எண்ணுகிறேன். ஹெமிங்வேயை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. தவறான முறையிலே கதையைச் சொல்வதும், காலக் கிரமத்தைக் கலந்து போடுவதுமாக இருந்தபோதும் ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளரே.

போர்னே: ஃபாக்னரின் ûwild palms-யை மொழிபெயர்த்தீர்கள்.
போர்ஹே: ஆம், ஆனால் அந்நூல் அவ்வளவாகப் எனக்குப் பிடிக்காது. light in august மிக நல்ல புத்தகம். ஆனால் அது அவருக்குப் பிடிக்காது. sanetuary- குறிப்பிடத்தக்க படைப்பே. அதுவே நான் படித்த முதல் ஃபாக்னர் புத்தகம். பிறகு மற்ற புத்தகங்களைப் படிக்கலானேன். அவரது கவிதையினையும் படித்தேன்.

போர்னே: ஃபாக்னரையும் அவரது உள்ளூர் வண்ணத்தையும் நீங்கள் மொழிபெயர்க்கும்போது, நேரடியான ஸ்பானிஷில் கொண்டு வந்தீர்களா அல்லது உள்ளூர் ஸ்பானிஷ் வகையொன்றில் மாற்றிட முயன்றீர்களா?
போர்ஹே: இல்லை, கொச்சை வழக்கை மொழிபெயர்க்க வேண்டுமாயின், நேரடியான ஸ்பானிஷில்தான் செய்ய வேண்டும். இல்லாதுபோனால் வேறுவிதமான உள்ளூர் வண்ணம் கிடைக்கும். உதாரணமாக El gavcho marti fierro என்றழைக்கப்படும். கவிதை மொழிபெயர்ப்பு எங்களிடமுண்டு. இப்போது அது கெüபாய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தவறு என்பேன். ஏனெனில் இதில் கெüபாய்கள் பற்றித்தான் நினைக்க முடிகிறதேயொழிய, தென் அமெரிக்க இடையர்களை எண்ணிப் பார்க்க இயலவில்லை. மார்ட்டின் ஃபைரோவை என்னால் முடிந்த அளவுக்கு தூய ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்வேன். கெüபாயும், தென் அமெரிக்க இடையரும் ஒரேவித மனிதர்தான் என்றபோதும், அவர்களை வேறுபடுத்தித்தான் எண்ணுகிறோம். உதாரணமாக, கெüபாய் என்றதும் துப்பாக்கிகளை எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், தென்அமெரிக்க இடையனை நினைக்கும்போது குறுவாள்களும், நேருக்கு நேர் மோதல்களுமே நினைவுக்கு வரும். எழுபத்தைந்து அல்லது சற்று அதிகமான வயதுடைய கிழவன், இளைஞன் ஒருவனை நேருக்கு நேர் மோதலுக்கு சவால் விட்டதைப் பார்த்திருக்கிறேன். பயங்கரமாகத் தோன்றும் இரு குறுவாள்களை எடுத்து வந்தான். ஒன்று வெள்ளிப் பிடி கொண்டிருந்தது. ஒன்று மற்றதைவிடப் பெரியதாக இருந்தது. இரண்டும் ஒரே அளவினதாய் இல்லை. அவற்றை மேசை மீது வைத்துவிட்டு, ""சரி இப்போது உன் ஆயுதத்தை எடுத்துக்கொள்'' என்றான். ""நீ பெரியதை எடுத்துக் கொள்ளலாம், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை'' என்ற பொருள் அப்பேச்சில் இருந்தது. அப்போது இளைஞன் மன்னிப்புக் கேட்டான். கிழவனது வீட்டில் பல குறுவாள்கள் இருந்தன. ஆனால் அவை இரண்டையும் வேண்டுமென்றே தெரிவு செய்தான். ""இக்கிழவனுக்கு குறுவாளைக் கையாளத் தெரியும், ஏனெனில் இன்னொன்றை அவனால் தெரிவு செய்ய இயலும்'' என்று அக்குறுவாள்கள் கூறின.

போர்னே: அது உங்கள் கதையை நினைவுபடுத்துகின்றன...
போர்ஹே: அம்மையக் கருத்தை என் கதையில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு நபரின் அனுபவத்தைச் சொல்வதிலிருந்து கதைகள் பிறக்கின்றன.

போர்னே: அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவ்வார்த்தையைக்குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னால் போதுமானது.
போர்ஹே: அதன் பொருள்: அவன் ஒரு போக்கிரி, மோசடிக்காரன். அதே வேளையில் அவனுக்கென்று ஒரு நெறி உண்டு. எச்சரிக்கை இல்லாது யாரையும் தாக்குவது பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஒட்டுமொத்த காரியமும் மிக மெதுமெதுவாக நிகழ்ந்தது. இன்னொருவரைப் புகழ்வதன் வாயிலாக ஒரு தொடங்கலாம். அப்போது, யாருக்கும் சண்டையிடத் தெரியாத பிரதேசத்திலிருந்து வந்தவன் அவன் என்று நாம் சொல்ல விரும்பலாம். ஒருவேளை அவனுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதன்பிறகு மற்றவரை புகழ்ச்சிச் சொற்களால் இடைமறித்து, "தெருவிற்குள் போவோம், உனது ஆயுதத்தைத் தெரிவு செய்துகொள்' என்பது போன்று கூறலாம். ஆனால் இது முழுவதும் மிக மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய விவரிப்பு நழுவிவிட்டதோ என்று ஆச்சரியப்படுகிறேன். இப்போதெல்லாம் துப்பாக்கிகளை, சுழல் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அந்த அறநெறியெல்லாம் போய்விட்டது. தொலைவிலிருந்தே ஒருவரைச் சுட்டுவிடலாம்.

போர்னே: கத்திச்சண்டை மிக நெருக்கமானது.
போர்ஹே: நெருக்கமானது, ஆமாம். அவ்வார்த்தையைப் பயன்படுத்தினேன்; ஒரு கவிதையின் இறுதியிலே அதனைப் பயன்படுத்தினேன், ஒருவனது தொண்டை அறுபட இருக்கிறது. "நெருக்கமாக கத்தி அதன் கழுத்தில் மேல்' என்கிறேன்.

போர்னே: பழைய வடிவங்களையும் ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளரையும்போல் எழுதிப்பார்த்து புது எழுத்தாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.
போர்ஹே: இது நேர்மை சார்ந்த பிரச்னை என்று எண்ணுகிறேன். இல்லையா? எதையாவது புதுப்பிக்க விரும்பினால், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளவற்றை உங்களால் செய்துகாட்ட இயலும் என்று காட்டியாக வேண்டும். புது முயற்சி மூலம் ஆரம்பிக்கவியலாது. உதாரணமாக சுயேச்சையான கவிதை மூலம் தொடங்க முடியாது. சிற்றுணர்ச்சிப் பாடல் ஒன்றை முயன்று பார்க்க வேண்டும், அல்லது வேறுவிதமான செய்யுள் வகையைப் பரீட்சித்து, அப்புறம் புது விஷயங்களுக்குப் போக வேண்டும்.

போர்னே: விலகி வெட்டிச் செல்லும் நேரம் எது? புது முயற்சியில் இறங்குவது எப்போது என்று நீங்கள் உணர்ந்ததை உங்கள் அனுபவத்திலிருந்து கூறுங்களேன்?
போர்ஹே: முடியாது, நான் தவறு செய்துவிட்டேன். சுயேச்சையான கவிதையிலிருந்து தொடங்கினேன். அதனைக் கையாள்வது எப்படி என நான் அறிந்திருக்கவில்லை. மிகச் சிரமமானது, சாஸ்திரிய வடிவங்களை எழுதுவது எளிதானது. ஏனெனில் உங்களுக்கு உதவிடும் வகை மாதிரி அவற்றில் இருக்கிறது என்பதை பின்னரே கண்டுகொண்டேன். ஆனால் சுயேச்சை கவிதையில் உங்களுக்கென ஒருவகை மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கிறது, மற்றும் அதனை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நல்லது, உரைநடை வருவது கவிதைக்குப் பின்னர்தான். உரைநடை மிகச் சிரமமானது. எனக்குத் தெரியாது. உள்ளுணர்வால் எழுதியிருக்கிறேன். பிரக்ஞைபூர்வமாக கவியாக என்னை நான் கருதவில்லை.

போர்னே: மரபார்ந்த வடிவங்களுடன் தொடங்க வேண்டும் என்கிறீர்கள்? இது பார்வையாளர் சார்ந்த பிரச்னை இல்லையா?
போர்ஹே: இல்லை. பார்வையாளரை நான் நினைத்ததேயில்லை. எனது முதல் நூலை அச்சிட்டதும், அதனை புத்தகக் கடைகளுக்கோ, மற்ற எழுத்தாளர்களுக்கோ அனுப்பவில்லை. நண்பர்களுக்குத் தந்துவிட்டேன். 300 பிரதிகளை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். அவை விற்பனைக்காக இருந்ததில்லை. அந்நாட்களில் ஓர் எழுத்தாளர் புகழ்பெறுவது அல்லது வெற்றி } தோல்வி பற்றி யாரும் நினைத்ததில்லை. 1920, 1930- களில் அக்கருத்துக்கள் எங்களுக்குத் தொலைதூரமானவை. வெற்றி, தோல்வி - புத்தகங்களை விற்பது என்ற ரீதியில் யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு அல்லது ஒருவித விதியாக நாங்கள் எண்ணினோம். டிக்வென்ஸியின் சுயசரிதத்தை நான் படித்தபோது, தன்னுடைய வாழ்க்கை இலக்கிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டிருந்தார் எனக் கண்டுகொண்டேன். - மில்டனும், கோல்ரிட் ஜீம் அப்படியே அறிந்திருந்தனர் என எண்ணுகிறேன். தம் வாழ்க்கை இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் எழுதுவதற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதனையறிந்தனர்.

போர்னே: Borges and I என்னும் சிறு கட்டுரையும் The watcher என்னும் கவிதையும் இரட்டை Double- யின் பாலான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது. எழுத்தாளர் அல்லாத போர்ஹேயை சிறிது நேரம் பேசவிட்டு, தான் விரும்பினாலும் விரும்பாது போனாலும் எழுத்தாளர் போர்ஹேயின் மதிப்பீட்டைத் தரச் செய்யலாமா?
போர்ஹே: அவ்வளவாக நான் விரும்புவதில்லை. மூலப் பிரதியைகளே தெரிவு செய்வேன். செஸ்டர்னையும் காஃப்காவையும் தேர்ந்தேடுப்பேன்.

போர்னே: அர்ஜென்டினாவிலுள்ள உங்களது நூலகத்தில் உங்கள் நூல்கள் இடம்பெறாது. எழுத்தாளர் அல்லாதவரின் முடிவென்று நினைக்கிறீர்களா?
போர்ஹே: ஆம், நிச்சயமாக.

போர்னே: அச்சூழலில் தன்னை உணருமாறு செய்து கொண்டாரா?
போர்ஹே: ஆமாம், அவர் செய்துகொண்டார். ஆமாம் என்னைச் சுற்றிலும் அவரின் எந்த நூலையும் காண முடியாது உங்களால். ஏனெனில் நான் நோயுற்றவன், ஓய்ந்து போனவன் என்று அவருக்கு எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரித்தேன். நல்லது போர்ஹே மீண்டும் இங்கே இருக்கிறார். நான் என்ன செய்யக்கூடும்? ஒத்துப் போக வேண்டியதுதான். நான் அனுமானிப்பது போலவே ஒவ்வொருவரும் உணருகின்றனர்.

போர்னே: ழான் பால் சார்த்தரின் ஒரு வாசகம் என்னை எப்போதும் வசீகரிக்கப்படுத்தும். அவர் குறிப்பிட்டார்: Man is wizard unto manó. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக் கொள்கிறீர்களா?
போர்ஹே: Man is wizard ?

போர்னே: கருத்துக்களை இட்டுக் கட்டுகிறான். பிரபஞ்ச விதிகளை உருவாக்குகிறான். சகமனிதர்கள் அவற்றை நம்புமாறு செய்கிறான். அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
போர்ஹே: குறிப்பாக அது கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடியது என்று கருதுகிறேன். இல்லையா? மற்றும் இறைவியலாளருக்கும் பொருந்துவது Trinity பற்றி எண்ணிப் பார்த்தோமானால், அது எட்கர் ஆலன்போவைவிட புதிரானதாய் இருக்கும். பிதா, சுதன், பரிசுத்த ஆவி. அவை ஒன்றாகி விடுகின்றன. மிக மிகப் புதிரானது. ஆனால் யாரும் அதனை நம்புவதில்லை. குறைந்தபட்சம் நான் நம்புவதில்லை.

போர்னே: ஆற்றல் வாய்ந்தவையாக தொன்மங்கள் இருந்திட அவை நம்பவேண்டிய அவசியமில்லை.
போர்ஹே: இல்லை, இருந்தும் வியப்படைகிறேன். உதாரணமாக, நம் கற்பனை centaur- னை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பூனைமுகம் கொண்ட எருதினை ஏற்பதில்லை. இல்லை, அது சரியானது இல்லை, நயமற்றது. ஆனால் momptain, centaurகளை ஏற்றுக்கொள்கிறோம். அவை அழகாயிருப்பதால் , குறைந்தபட்சம் அவை அழகியவை என்று எண்ணுகிறோம். நிச்சயமாக அவை மரபின் அங்கமாயுள்ளன. ஆனால் வரலாற்றுச் சின்னங்களையும் நாணயங்களையும் அறிந்திராத தாந்தே, லத்தீன் எழுத்தாளர்கள் மூலமாக கிரேக்க தொன்மங்களை அறிவார். தாடியுடன் கூடிய மனித முகம் கொண்ட எருதாக minolaur-னை எண்ணினர். மிக அருவருப்பானது, எருதின் முகம் கொண்ட மனிதனாக அவனை நினைத்துக் கொள்ளும்போது, தாந்தேயின் பல பதிப்புகளில் அதுபோன்ற minolaur -னைப் பார்க்கலாம். ஆனால், தாந்தே, பாதி எருதை, பாதி மனிதனை வாசித்திருந்ததால், அவனை அப்படியாக எண்ணினார். நம் கற்பனை அதை ஏற்பதில்லை. ஆனால் பல தொன்மங்களை நாம் எண்ணிடும்போது, மிகவும் கேடான தொன்மம் என்று இருக்கிறது. அது தேசங்கள் பற்றின தொன்மம் நான் ஒரு சிலி தேசத்தவன் அல்ல, உருவகுவே நாட்டவன் அல்ல, அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்று ஏன் நான் நினைத்துக் கொள்ள வேண்டும்? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.நம்மீது நாமே திணித்துக்கொள்ளும் அத்தொன்மங்கள், வெறுப்பையும், யுத்தத்தையும் குரோதத்தையும் உண்டாக்கும் மிகக்கொடியவை. நாளடைவில் அரசாங்கங்களும் தேசங்களும் இல்லாது போய் நாமெல்லோம் சர்வதேசப் பிரஜைகளாகி விடுவோம்.


நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

Wednesday, February 10, 2010

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு
(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)


தமிழில் : சா.தேவதாஸ்


போர்ஹே: முதலில் சொல்லிவிடுகிறேன், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். ஏனெனில் எதிர்காலங்கள் பலவாயும் ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாயும் உள்ளது எனக் கருதுகிறேன்.

டேனியல் போர்னே: அப்படியானால் உங்களது கடந்த காலம், தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.
போர்ஹே: நல்லது, எனக்குக் கிடைத்த தாக்கங்களைப் பற்றிக் கூற முடியுமேயொழிய பிறரிடம் நான் செலுத்தியவைப் பற்றிக் கூற இயலாது. அது பற்றி அறியேன், அது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் முதலாவதாக என்னை ஒரு வாசகனாகவும் அப்புறம் எழுத்தாளனாகவும் கருதிக் கொள்கிறேன். அது அனேகமாகப் பொருத்தமற்றது; என்னை ஒரு நல்ல வாசகனாகக் கருதுகிறேன். பல மொழிகளில் நல்ல வாசகன், குறிப்பாக ஆங்கிலத்தில் - ஏனெனில் கவிதை, ஆங்கிலம் மூலமாகவே என்னை வந்து சேருகிறது. ஸ்வின்பர்ன், டென்னிஸன், கீட்ஸ், ஷெல்லி மீதான என் தந்தையின் நேசத்தால் - என் தாய்மொழி மூலமாக, ஸ்பானிஷ் மூலமாக அல்ல. ஒரு வித மயக்கமாக என்னிடம் வந்தது. அதனைப் புரிந்துகொள்ளவில்லை யெனினும் உணர்ந்து கொண்டேன். தன் நூலகத்தைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என் தந்தை விட்டுவிட்டார். என் சிறுபிராயத்தை எண்ணிப் பார்க்கையில், நான் வாசித்த புத்தகங்களின் ரீதியிலேயே எண்ணிப் பார்க்கிறேன்.

போர்னே: உண்மையிலேயே நீங்கள் புத்தக மனிதர்தான். நீங்கள் நூலகராக இருந்ததும், தொன்மையானவை மீது உங்களுக்கு மோகம் இருப்பதும் சேர்ந்து, புதியவை படைத்தலுக்கு எப்படி உதவியுள்ளன என்று கூற முடியுமா?
போர்ஹே: என் எழுத்தில் புதுமையேதும் உள்ளதா என்று அதிசயிக்கிறேன். அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே என்னை எண்ணிக் கொள்கிறேன். கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில் (1899) பிறந்தேன். சம காலத்து எழுத்தாளர்களையும் படிக்கிறவன் என்றாலும் டிக்கன்ஸ், பைபிள் அல்லது மார்க் ட்வெய்ன் படித்து வளர்ந்தவன். கடந்த காலத்தில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். நம்மால் கடந்த காலத்தை உருவாக்க முடியாது, மாற்ற முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தை இல்லாமல் ஆக்குவது அரிதானது என்ற பொருளில் கூறுகிறேன். ஆனால் கடந்த காலம் என்பது வெறுமனே ஒரு நினைவு, ஒரு கனவு. நினைத்துப் பார்க்கையில் அல்லது எனக்குச் சுவாரஸ்யமானவற்றை வாசித்துக் கொண்டிருக்கையில், என் கடந்த காலம் தொடர்ந்து மாறுவதாகத் தோன்றும். நான் படித்த எழுத்தாளர்களுக்கு அல்லது தமது மொழியின் அங்கமாக, தம் மரபின் அங்கமாக இருந்த எழுத்தாளர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மொழி தன்னளவிலேயே ஒரு மரபாயிருக்கிறது.

ஸ்டீபன் கேப்: உங்களது கவிதையைப் பார்ப்போமா?
போர்ஹே: நானொரு அழையா விருந்தாளி, கவிதை எழுத முயலுகையில் நான் எழுதுவதே இல்லை என்கின்றனர் என் நண்பர்கள். ஆனால் உரைநடை எழுதும் என் நண்பர்கள் உரைநடை எழுத முயலுகையில் நான் எழுத்தாளரே கிடையாது என்கின்றனர். எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடமான மனோநிலையில் இருக்கிறேன்.

கேப்: கேரிஸ்னைடர் என்னும் நவீன கவி riprap என்னும் சிறு கவிதையில் தன் கவிக் கோட்பாட்டை விளக்குகிறார். அவரது கருத்துகள் உங்களது கவிதையுடன் சில அம்சங்களில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையிலுள்ள வார்த்தைகளின் பாலான அவரது அணுகுமுறையை விவரிக்கும் அதன் சிறுபகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

போர்ஹே: சரி. சிறுபகுதியென்ன, பெரிய பகுதியாகவே கூறலாம், இல்லையா? இக்காலைப் பொழுதில் அதனை ரசிக்க விரும்புகிறேன். (riprap - தொகுப்பிலிருந்து கவிதையை கேப் வாசிக்கிறார்.)


கேப்: ரிப்ரேப் என்னும் இத்தலைப்பு. சறுக்கலான மலைப் பகுதியில் குதிரைகள் செல்வதற்காக அமைக்கப்படும் கல்பாதையைக் குறிக்கும்.

போர்ஹே: வெவ்வேறான உருவகங்களுடன் அவர் எழுதுகிறார், நான் அப்படி எழுதுவதில்லை. எளிய முறையில் எழுதுகிறேன். விளையாட அவரிடம் ஆங்கிலமிருக்கிறது. எனக்கு இல்லை.

கேப்: ஒவ்வொரு கல்லும் இருபுறமுள்ள ஒவ்வொரு கல்லையும் சார்ந்திருக்கின்ற, பிணைப்புக் கொண்டுள்ள இப்பாதையுடன், கவிதையில் வார்த்தைகளை இடம்பெறச் செய்வதனை ஒப்பிடுவதாகத் தோன்றுகிறது அவரது கருத்து. கவிதை கட்டுமானத்தில் இவ்வணுகுமுறை உங்களுக்கு ஏற்புடையதா அல்லது பலமுறைகளில் இதுவும் ஒன்றுதானா?

போர்ஹே: 'ஆதிவாசிகளின் பாடல் புனைய அறுபத்தொன்பது வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொன்று சரியானவைதான்' என்று கிப்ளிங் கூறியதுபோல, சரியான முறைகளுள் அதுவும் ஒன்றாகலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் என்னுடைய முறை அது போன்றதல்ல - அது ஒருவித உறவு, இருண்டதான ஒன்று. ஒரு கருத்து எனக்குக் கிடைக்கும்போது அது ஒரு கதையாகலாம், கவிதையாகலாம், எனக்குக் கிடைத்திருப்பது தொடக்கமும் இலக்கும்தான். இடையே நிகழ வேண்டியதை நான் கண்டறிய வேண்டும் - இட்டுக்கட்ட வேண்டும், அப்போது என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறேன். ஆனால் பொதுவாக அது போன்றதொரு உத்வேகம் வரும்போது, அதனைத் தடுத்திட என்னால் ஆன மட்டும் பார்ப்பேன்; அதையும் மீறி நீடித்தால், எப்படியாவது எழுதியாக வேண்டியிருக்கும். ஒருபோதும் விஷயங்களைத் தேடுவதில்லை. டீக்கடையிலோ, தூங்க முயலும்போதோ, தூங்கி எழும்போதோ விஷயங்கள் கிடைத்துவிடும்; போனஸ் அயர்ஸின் வீதிகளிலோ அல்லது வெறெங்கோ எந்த நேரத்திலும் கிடைத்துவிடும். உதாரணமாக ஒரு வாரத்திற்கு முன் ஒரு கனவு வந்தது. தூங்கி எழுந்தபோது அது தீங்கனவாயிருந்தது. அது சொல்லத் தகுதியானதல்ல என்றிருந்தேன்; ஆனால் அதில் ஒரு கதை மறைந்திருப்பதாய் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிய விரும்புகிறேன். அதனைக் கண்டுவிட்டதாக எண்ணும் இப்போது, அயந்து - ஆறு மாதங்களில் எழுதிவிடுவேன். நேரம் எடுத்துக் கொள்வேன். ஆதலின் என்னிடம் வேறுபட்டதான முறை இருக்கிறது எனலாம். நிச்சயமாக ஒவ்வொரு கைவினைக் கலைஞனிடமும் அவனுக்கே உரிய முறையில் உள்ளது; நான் அதனைப் போற்றுவேன்.

கேப்: பகுத்தறிதலின் தலையீடு ஏதுமின்றி, தன் மனநிலையை அப்படியே வாசகனுக்கு மாற்றிட முயலுகிறார் ஸ்டைனர்; உணர்தலை நேரடியாக மாற்றிட விரும்புகிறார். இது சற்று அதீதமாய் உங்களுக்குத் தோன்றுகிறதா?
போர்ஹே: இல்லை. ஆனால் அவர் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட கவியாகத் தோன்றுகிறார். நானோ வயதானவன், கள்ளங்கபடமற்றவன், மனம் போனபடி பிதற்றுகிறேன், என் பாதையை அறிந்திட முயலுகிறேன். உதாரணமாக என்ன செய்தி வைத்திருக்கிறேன் என மக்கள் கேட்கின்றனர்; ஏதுமில்லை என அஞ்சுகிறேன். நல்லது இங்கே கதையொன்று இருக்கிறது. அதன் நீதி என்ன? எனக்குத் தெரியாதென்றே அஞ்சுகிறேன். நான் வெறுமனே கனவு காண்பவன்தான்; அப்புறம்தான் எழுத்தாளன். எனது சந்தோஷகரமான தருணங்கள், நான் வாசகனாயிருக்கும் போதுதான்.

கேப்: விளைவுகள், பொதிந்துள்ளவனாக வார்த்தைகளைக் கருதுகிறீர்களா? அல்லது படிமங்களைத் தாங்கி நிற்பதாகக் கருதுகிறீர்களா?
போர்ஹே: நல்லது ஆமாம். உதாரணமாக, சிற்றுணர்ச்சிப் பாடலொன்றை (sonnet) உருவாக்க குறைந்தது ஸ்பானிய மொழியில் சில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஓரிரு ஒளியியைபுகளே உண்டு. அவற்றை உருவகங்களாக, வினோதமான உருவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சொல்வேன். இது அதிரடி வாசகமே. ஆங்கிலத்தில் MOON லத்தீன் - ஸ்பானிய வார்த்தையான "LUNA' விலிருந்து வேறுபட்டதான சொல்லிலிருந்து உருவாகிறது. "MOON என்னும் சொல் ரீங்காரிக்கும் சப்தமாயுள்ளது, அழகான வார்த்தை. ஃப்ரெஞ்ச் சொல்லும் அழகானதே , "LUNA". ஆனால் பழைய ஆங்கிலச் சொல் "MONA ' இரு அசைவுகளைக் கொண்டுள்ள இது அழகாயில்லை. அப்புறம், கிரேக்க வார்த்தை இன்னும் மோசமானது. மூன்றசை கொண்ட "CELENA'. ஆனால் "MOON" என்பது அழகிய சொல். இச்சப்தத்தை ஸ்பானிய வார்த்தைகளில் காண முடியாது. என்னால் வார்த்தைகளில் சஞ்சரிக்க இயலும்; வார்த்தைகள் உத்வேகம் தருபவை; தமக்கென்று ஜீவன் கொண்டவை.

கேப்: வார்த்தை தனக்கெனக் கொண்டுள்ள ஜீவன், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அது தரும் அர்த்தத்தைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறதா?
போர்ஹே: அர்த்தங்கள் அநேகமாய் பொருத்தமற்றவை என்றே எண்ணுகிறேன். முக்கியமானது எதுவெனில், அல்லது நான் குறிப்பிட வேண்டிய இரு முக்கிய அம்சங்கள், உணர்வும், உணர்விலிருந்து எழும் வார்த்தைகளுமே. உணர்ச்சியற்ற விதத்திலே எழுதக் கூடும் என்று நான் எண்ணவில்லை. அப்படி முயன்று பார்த்தால், அது செயற்கையானதாகயிருக்கும். அது போன்ற எழுத்தை நான் விரும்புவதில்லை. ஒரு கவிதை தன்னைத் தானாகவே எழுதிக் கொண்டது என்று நாம் எண்ணும்போதுதான் உண்மையிலேயே அது உயர்ந்த கவிதை என்று கருதுகிறேன். அது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

கேப்: ஒரு கவிஞரிடமிருந்து இன்னொருவரிடம் போகும்போது ஒருவகையான தொன்மங்கள் இன்னொரு விதமானவற்றால் இடமாற்றம் செய்யப்படக் கூடியவையா, அப்போதும் அதே விளைவு கிடைக்குமா?
போர்ஹே: ஒவ்வொரு கவியும் தனக்கேயான தொன்மவியலைக் கொண்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். அதனை அவன் அறியாதிருக்கலாம். வரிப்புலிகள், கத்திகள், புதிர்ப் பாதைகள் குறித்த தனிப்பட்ட தொன்மவியலை நான் உருவாக்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அது எனக்குத் தெரியாது. என் வாசகர்கள் இதனைக் கண்டறிகின்றனர். ஆனால் அது கவிஞனின் வேலை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவை எண்ணுந்தோறும் அதனை வால்ட் விட்மன் சார்ந்ததாகவே எண்ணுகிறேன். "மன்ஹாட்டன்' என்னும் வார்த்தை அவருக்கென கண்டுபிடிக்கப்பட்டது, இல்லையா?

கேப்: ஆரோக்கியமான அமெரிக்கா குறித்த ஒரு படிமம்?
போர்ஹே: ஆமாம், அதேவேளையில் வால்ட் விட்மனே ஒரு தொன்மம்தான்; மிகவும் துரதிருஷ்டம் வாய்ந்தது. மிகவும் தனிமைப்பட்டு எழுதியவர் குறித்த ஒரு தொன்மம். எனினும், தன்னை ஓர் அழகிய நாடோடியாக ஆக்கிக் கொண்டவர். பூமியில் தன்னை ஒரு தொன்மவியல் மானுடனாக படைத்துக் கொள்ள முடிந்த ஒரே எழுத்தாளன் வால்ட் விட்மின்தான் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். TRINITY- யில் உள்ள மூவரில் ஒருவர் வாசகர்தான். ஏனெனில் நாம் வால் விட்மனை வாசிக்கும்போது நாம் வால்ட் விட்மனாகி விடுகிறோம். அதனைச் செய்து காட்டிய விசித்திரமான நபர் அவர் ஒருவரே. உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறதுதான்; குறிப்பாக நியூ இங்கிலாந்து மாநிலம். ஒதுக்கிவிட முடியாத எழுத்தாளர்களைத் தந்துள்ளீர்கள். உதாரணமாக, போ, விட்மன், மெல்வின், ஹென்றி ஜேம்ஸ் போன்றோர் இல்லாது போனால், நிகழ்கால இலக்கியம் இத்தகையதாக இருக்க இயலாது. ஆனால் தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை, எங்களுக்கும் ஸ்பெயினுக்கும் முக்கியமானதாக நிறைய உண்டு. எஞ்சிய மற்ற உலகத்திற்கு முக்கியமாக இராது. மிக நேர்த்தியானதாகவே ஸ்பானிய இலக்கியம் தொடங்கிற்று என்று கருதவே செய்கின்றேன். பின்னர் எப்படியோ க்யூவெடோ, கோங்கோரா என்னும் எழுத்தாளர்களுடன் எதுவோ விறைத்திருப்பதை உணர்கிறோம். முன்புபோல அம்மொழி ஓடிக்கொண்டிருப்பதில்லை.

போர்னே: 20-ம் நூற்றாண்டுக்கும் இது பொருந்துமா? உதாரணமாக லோர்கா இருக்கிறார்.
போர்ஹே: ஆனால், லோர்காவை நான் அதிகம் விரும்புவதில்லை. இது என்னிடம் உள்ள பலவீனம். காட்சி ரீதியிலான கவிதைகளை நான் வெறுக்கிறேன். அவர் எப்போதும் காட்சி ரீதியிலானவர். விசித்திரமான உருவங்களைத் தேடுபவர். ஆனால் அவர் மிகவும் மதிக்கப்படுவர் என்பதை அறிவேன். தனிப்பட்ட முறையில் அவரை நான் அறிந்தவன்; நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தார். ஓராண்டு இருந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அறிந்து கொள்ளாதது மிக விசித்திரமானது. ப்யூனஸ் அயர்ஸில் ஒரே ஒரு முறையே சந்தித்தேன். அதன்பிறகு அவரது அதிர்ஷ்டம் தூக்கிலிடப்பட்டு விட்டார். கவிஞருக்கு நேரக்கூடிய உயர்ந்த விஷயம், நேரிய சாவு இல்லையா? கச்சிதமான மரணம். பின்னர் அவரைப் பற்றி ஆண்டனியோ முசாரோ அழகான கவிதை எழுதினார்.

கேப்: ஹோபி இந்தியர்கள் பலமுறை உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்தம் மொழியின் தன்மை, அம்மொழியும் சொற்கோவை எவ்விதம் உருப்பெற்றது என்பதன் காரணமாக.
போர்ஹே: அதுபற்றி எனக்குத் தெரியாது. பாம்பாஸ் இந்தியர்கள் பற்றி என் பாட்டி கூறியிருக்கிறார். தன் வாழ்க்கையை ஜீனினில் கழித்தவர்- அது நாகரீகத்தின் மேற்கு முனையாகும் - அவர்களது கணிதம் இப்படிப் போவதாக என்னிடம் கூறினார். ஒரு கையை உயர்த்திக் கொண்டு "பாம்பஸ் இந்தியரின் கணிதத்தைக் கற்றுத் தருகிறேன்'' என்றாள். "எனக்குப் புரியாது'' என்றேன். "உனக்குப் புரியும், என் கைகளை கவனி. 1, 2, 3, 4 பல.'' முடிவின்மை அவள் பெருவிரலில். தூரம் பற்றி மக்களுக்குச் சொற்பமாகவே தெரியும் என்று இலக்கியவாதிகள் கூறுவதையும் கவனித்திருக்கிறேன். அவர்கள் மைல், லீக் ரீதியில் எண்ணுவதேயில்லை.

போர்னே: கெண்டுகியிலிருந்து வரும் நண்பன் ஒருவன் ஒரு மலை, இரு மலைகள் என அவர்கள் தூரத்தைக் குறிப்பிடுகின்றனர் என்றான்.
போர்ஹே: நிஜமாகவா? எவ்வளவு புதிராயிருக்கிறது.

கேப்: ஸ்பானிஷலிருந்து ஆங்கிலத்திற்கும் ஜெர்மனுக்கும் அல்லது பழைய ஆங்கிலத்திற்கும் மாறுவது, உலகை நோக்குவதற்கான வெவ்வேறான வழிமுறைகளைத் தருவதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
போர்ஹே: மொழிகள் ஒரே தன்மையானவையென கருதவில்லை. ஸ்பானிய மொழியில் விஷயத்தை ஓடச் செய்வது சிரமமானது. ஏனெனில், அதன் வார்த்தைகள் மிக நீளமானவை. ஆனால் ஆங்கிலத்தில் 'SLOWLY', 'QUICKLY' என்று குறிப்பிட்டால் அவ்வார்த்தைகள் பொருள் மிக்கதான பகுதியைக் கேட்க முடியும். SLOW-LY, QUICK-LY. SLOW, QUICK- னைக் கேட்கலாம். ஆனால் ஸ்பானிஷில், SEIY LENTAMENTE, RAPIDAMENTE என்கிறோம். கேட்பது என்னவோ - MENTE என்பது. என் நண்பன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் சிற்றுணர்ச்சிப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான். ஒரு ஆங்கிலப் பாடலுக்கு இரு ஸ்பானியப் பாடல்கள் தேவைப்படும் என்றேன் - ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் குறுகியவை, நேரிடையானவை, ஸ்வானிய வார்த்தைகளோ மிக நீளமானவை. ஆங்கிலத்திற்கு பெüதிகப் பண்புமுண்டு. கிப்ளிங்கின் "The Ballad of East And West' - இல் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஆஃப்கானத்து குதிரைத் திருடனைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பார். இருவரும் குதிரை மீதிருப்பர். "தாழ்ந்துவிட்ட நிலவினை அவை விண்ணிலிருந்து ஓட்டிவிட்டன. அவற்றின் குளம்புகள் விடியலை முரசடித்து எழுப்புகின்றன'' என்று கிப்ளிங் எழுதுகிறார். ஸ்பானிஷில் தாழ்ந்துவிட்ட நிலவினை விண்ணிலிருந்து ஓட்டிவிட முடியாது. விடியலை முரசடித்து எழுப்ப முடியாது. அவ்வாறு செய்ய இயலாது. அவன் விழுந்தான், எழுந்து கொண்டான் என்பதுபோன்ற எளிய வாக்கியங்களைக்கூட அப்படியே ஸ்பானிஷில் கூற இயலாது. தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு எழுந்தான் அல்லது இதுபோன்ற கருத்துச் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் கொண்டும் அசைச் சொற்களைக் கொண்டும் நிறைய உண்டாக்கலாம். Dream away your life live upto , something you have to live down என்றெல்லாம் எழுத முடியும். இவை ஸ்பானிஷில் சாத்தியமில்லை. சொல்ல இயலாதவை. அடுத்து, கூட்டு வார்த்தைகள். உதாரணமாக world smith ஸ்பானிஷில் இது பகட்டாரவாரம் கொண்டதாக, நயமற்றதாக un herrero de palabras என்று வரும். ஆனால் ஜெர்மானிய மொழியில் எளிதாய் வரும். ஆங்கிலத்தை விடவும் சிறப்பானதாய் ஜெர்மனியில் இருக்கும். ஏனெனில் ஜெர்மனியில் எப்போதும் வார்த்தைகளை உருவாக்க இயலும். ஆங்கிலத்தில் அவ்வாறு இயலாது. ஆங்கிலோ - சாக்ஸன்கள் பெற்றிருந்த சுதந்திரம் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, úúôþ úsige fole அல்லது victorious people என்னும் பழைய வார்த்தை. பழைய ஆங்கிலத்தில் இவற்றை செயற்கையானதாக கருத இயலாது. ஆனால் ஸ்பானிஷில் இதனைக் குறிப்பிட இயலாது. அழகானவை என ஸ்பானிஷில் நான் கருதுவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது... ஒலிகள் மிகத் தெளிவானவை. ஆங்கிலத்திலோ திறந்த உயிரொலிகள் இல்லாது போய்விட்டன.

(சந்திப்பு தொடரும்)

Tuesday, February 9, 2010

வில்லியம் ஃபாக்னருடனான உரையாடலின் தொடர்ச்சி....கேள்வி : சூசகமாகத் தாங்கள் குறிப்பிடும் அந்த நாவல் எது?

பதில் : The sound and the fury. அந்த நாவலை தனித்தனியாக ஐந்து தடவைகள் எழுதினேன். அதுவரையிலும். வேதனை தந்து கொண்டிருந்த கனவிலிருந்து என்னால் மீளமுடியவில்லை. சீரழிந்து போன இரு பெண்களின் - காஸியும் அவளுடைய மகளும் - சோகக் கதை அது. அதில் வரும் டில்ஸி நான் ரொம்பவும் விரும்பும் கதாபாத்திரங்களில் ஒன்று. அவள் தைரியசாலி; விசால மனசுடையவள். அதே சமயம் அடக்கமான போக்குடையவள். நம்பிக்கைக்கும் உகந்தவள். சொல்லப் போனால் என்னைவிடவும் எத்தனையோ மடங்கு தைரியமும் சத்திய உணர்வும், மிதமான போக்கும் அவளுக்குண்டு.

கேள்வி : படிப்பவருக்கு போதனையூட்டுவதற்கு அனுசரணையான உருவ அமைப்பை வகுத்துக் கொள்வதில் சௌகரியம் ஏதேனுமுண்டா? A fable என்ற தங்கள் நாவலில், விவிலிய நூலின் சாயலில் போதனை உருவம் கைவந்திருக்கிறதே, அதைத்தான் கேட்கிறேன்?

பதில் : ஒரு கொத்தனுக்கு, சம சதுரத்தில் ஒரு கட்டிடத்தை எழுப்ப சமசதுரத்தில் மூலைகள் அமைத்துக் கொண்டால் ஏற்படுகிற சௌகரியம், அதிலும் உண்டு. கட்டடம் தீர்க்க சதுர வடிவமென்றால் மூலைகளும் அதற்கேற்றாப்போல் அமைந்தாக வேண்டும். அதேபோல் A fable என்ற கதையைச் சொல்வதற்கு விவிலிய போதனா உருவமே ஏற்றது என்று எண்ணினேன்.

கேள்வி : கொத்தன் கரண்டியை இரவில் வாங்குவது போல், கலைஞனும் கிருஸ்துவ மதத்தை ஒரு உபகரணமாகக் கொள்ளலாம் என்பதா தங்கள் குறிப்பு?

பதில் : என்னுடைய அர்த்தத்தில் கொத்தன் ஒருநாளும் அந்த கரண்டியை இழந்ததில்லை. கிருஸ்துவ மதம் கழன்று போன நிலையில் எவரும் இருந்ததுமில்லை. நான் கொள்ளும் பொருளையே தாங்களும் கொண்டால் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும். ஒரு தனிமனிதனுக்கு தனிப்பட்ட முறையில் அமைந்த குணாம்சமே அது. இயற்கையின் ஓட்டப்படி சென்று கொண்டிருந்தால்தான் அடைவதைக் காட்டிலும் உயர்ந்த ஒரு மட்டத்தை அடைவதற்காக மனிதன் எடுத்துக்கொள்ளும் பிரயாசையே அதன்பால் மனிதனுக்கு ஏற்படும் நம்பிக்கை. அதன் உருவகம்... அது ஒரு குரிசானாலும் சரி அல்லது ஒரு பிறைக் கீற்று ஆனாலும் சரி, சமூகத்திற்குள் மனிதன் ஆற்றித் தீரவேண்டிய கடமையை அவனுடைய பிரக்ஞைக்கு அது கொண்டு வருகிறது இந்த அடிப்படையில், பல்வேறு அமைப்பு முறைகளில் காட்சி தரும் உபதேசங்கள் அனைத்தும் ஒன்றே; ஒரே சித்திரம். அதை கூர்ந்து நோக்கி மனிதன் தன்னையே அறிந்துகொள்கிறான். "நான் என்பது என்ன என்பதும் அவனுக்கு வெளிச்சமாகிறது. ஆனால் பள்ளிப்பாட புத்தகம் கணக்கைப் புகட்ட முயல்வதுபோல் அதனால் தர்ம அதர்ம வேறுபாடுகளை உணர்த்த முடியாது. ஆனால் அது அவனுக்கு தன்னையே எப்படி அறிந்து கொள்ளுவது என்பதையும், தன்னுள் புதையுண்டு கிடக்கும் சக்திகளுக்கும், ஆசைகளுக்கும் அனுசரணையான வகையில் எப்படி தனக்கே சொந்தமான ஒரு கோட்பாட்டை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்வது என்பதையும் கற்றுக்கொடுக்கும். வேதனை, தியாகம் இவற்றிற்கு மூர்த்திகரமாகத் துலங்கும் ஒரு ஒப்பற்ற உதாரணத்தை அது அவனுக்கு வழங்குகிறது. போதனை உருவ அமைப்பில், தார்மீகச் சிந்தனைகளை சுருதியாகக் கொண்டு, இன்று வரையிலும் எழுத்தாளர்கள் அளித்து வந்திருப்பதும், இனிமேல் அளிக்கப் போவதுமான கதாபாத்திரங்கள் மூன்று முகங்களுக்கும் பிரதிநிதியாக தோன்றுவார்கள். ஒருவன், ஒன்றும் அறியாதவன், இன்னொருவன், அறிந்தும் சிரத்தை செலுத்தாதவன்; மற்றொருவன், அறிந்து கொள்பவனும், சிரத்தைச் செலுத்துபவனுமான ஒருவன். இவர்கள்தாம் அந்த கதாபாத்திரங்கள். அதே மும்முகத்தைத்தான் நீங்கள் A fable -லும் பார்க்கிறீர்கள். அதில் வரும் யூத விமானத் தலைவன் ""இது பயங்கரமானது; வாழ்வையே உதறிவிட நேர்ந்தாலும்கூட இதை நான் கைவிடப் போவதில்லை'' என்கிறான். ""இது பயங்கரமானது; நம்மால் இதைக் கண்ணீர் விட்டபடி தாங்கிக் கொண்டிருக்க முடியும்'' என்கிறான் பிரெஞ்சுப் படைத்தலைவன். இங்கிலீஷ் பட்டாலியன் ரன்னர், ""இது பயங்கரமானது : இதற்காக நான் எதையாவது செய்வேன்'' என்கிறான்.

கேள்வி : உங்கள் படைப்புகளில் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது எந்த அளவு இருக்கிறது?

பதில் : இப்போது என்னால் திட்டமாகச் சொல்ல முடியாது. இன்றுவரை நான் கணக்கெடுத்துப் பார்த்ததும் இல்லை. ஏனெனில் "எந்த அளவுக்கு?' என்பது பிரதானமானதல்ல. ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் மூன்று குணாம்சங்கள் இருந்தாக வேண்டும். அனுபவம், கூர்ந்து நோக்குதல், கற்பனை வளம். இதில் ஏதாவது இரண்டு - சில சமயம் இதில் ஒன்று - மற்றொன்று இல்லாத குறையை நிரப்பிவிடும். எனக்கு ஒரு கருத்திலிருந்தோ, ஒரு சிந்தனைச் சுடரிலிருந்தோ, ஒரு மனச் சித்திரத்திலிருந்தோ கதை பிறக்கிறது. ஒரு கருத்தோ சிந்தனையோ ஏன் பிறந்தது என்பதையும், அதன்மூலம் நேர்ந்த விளைவுகள் என்ன என்ன என்பதையும் விளக்குவதற்காக ஒரு கட்டம் வரையிலும் கதையை நகர்த்திச் செல்வதுதான் நான் செய்கிற ஒரே காரியம். தன்னால் இயன்ற வரையிலும், மனசைத் தொடும்படி நடைமுறை சாத்தியமான காட்சிகளின் துணையால், நம்பத் தகுந்த கதாபாத்திரங்களைப் படைத்துக் காட்டுவதுதான் ஒரு எழுத்தாளனின் வேலை. எழுத்தாளன், அவனுக்குப் பரிச்சயமான பின்னணிகளையும் சூழ்நிலைகளையும் எடுத்தாள எண்ணுவது சகஜம். கலையின் சிகரம் சங்கீதம். கலைஞனின் மனச்சூட்சுமங்களை அதைப்போல் வேறு எந்த உபகரணத்தாலும் உணர்த்த முடியாது. சங்கீதம், வெகு அழகாகவும், லலிதமாகவும் வெளியிடும் உணர்ச்சிபாவங்களை நான் கரடுமுரடான வார்த்தைக்குள் அடக்கப் பாடுபடுகிறேன், நான் சாதிப்பதைவிட அழகாக, எளிமையாக, சங்கீதம் செய்து காட்டும். ஆனால் எனக்கோ வார்த்தைகளிடத்தில் தான் நேசம். பாடுவதையும்விட படிப்பதில் அதிக தாத்பரியம் உள்ளவன் நான். ஓசையை விடவும் அமைதியை மிகவும் விரும்புகிறேன். வார்த்தைகளில் தேக்கப்படும் சித்திரம் அமைதியில் ஜீவகளை பெறுகிறது. அதாவது வசனத்தின் கர்ஜனையும் சரி, சங்கீத இன்பமும் சரி, அமைதியின் விளைவுகளே.

கேள்வி : அனுபவம், கூர்ந்து நோக்கல், கற்பனை இவை ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள்.intuition-ம் அவசியம் அல்லவா?

பதில் : intuition என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. சொல்லக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை.

கேள்வி : தாங்கள் இலக்கியத் துறைக்கு எப்படி வர நேர்ந்தது?

பதில் : அப்போது நான் நியூஆர்லின்ஸில் வசித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஷெர்வுட் ஆண்டெர்ஸனைச் சந்திக்க நேர்ந்தது. மாலையில் இருவரும் கூடிப் பேசுவோம். பக்கத் துணைக்கு ஒன்று அல்லது இரண்டு புட்டி மதுவும் இருக்கும். பிற்பகல் வேளையில் அவரை வெளியே காண முடியாது. ஏகாந்தத்தில் அமர்ந்து வேலையில் முனைந்திருப்பார். மறுநாளும் இதே போலத்தான். அதுதான் ஒரு எழுத்தாளனின் வேலைத்திட்டம் என்றால் அவரைப் போல் நானும் ஒரு எழுத்தாளன் ஆகவேண்டியதுதான் என்னுடைய உடனடித் தேவை என்பதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய முதல் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே எழுத்துத் தொழில் கன குஷியாகப்பட்டது. ஆண்டெர்ஸனை மூன்று வாரங்கள் சந்திக்கவே இல்லை. அந்த விஷயமே மறந்து போய்விட்டது. ஒருநாள் அவரே என் ஜாகை தேடி வந்து சேர்ந்தார். என் இருப்பிடத்திற்கு வந்தது அதுதான் முதல் தடவை. அவர், ""என்ன நீ? கோபமா?'' என்று கேட்டார். ""நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதில் சொன்னேன். "அடகடவுளே!'' என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட்டார். soldiers pay. தான் அந்த நாவல். அதை எழுதி முடித்தபின்னர் ஒருநாள், மிஸில் ஆண்டெர்ஸனை வழியில் சந்தித்தேன் அகஸ்மாத்தாக. எழுத்து வேலை பற்றி விசாரித்தார். முடிந்துவிட்டதாகச் சொன்னேன். அதற்கு அவர், ""ஷெர்வுட் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள சித்தமாயிருக்கிறார். அதாவது கையெழுத்துப்பிரதியை அவர் வாசிக்க நேராது என்றால் அதை அவருடைய வெளியீட்டார்களிடமே ஒப்படைத்து வெளியிடச் செய்யலாம் என்பதே அது'' என்றார். ""ஆட்சேபணை இல்லை'' என்று நானும் சொல்லி வைத்தேன். நான் எழுத்தாளன் ஆன கதை இதுதான்.

கேள்வி : உபாய ஊதியங்களில் என்ன என்ன வேலைகள் பார்த்திருக்கிறீர்கள்?

பதில் : அகப்பட்டதையெல்லாம் ஒரு கை பார்த்திருக்கிறேன். எந்த வேலையையும் சுமாராக ஒப்பேற்றிவிடுபவன்; துடுப்புப் பிடித்திருக்கிறேன்; சாயம் பூசியிருக்கிறேன்; ஏரோப்ளேன் ஓட்டியிருக்கிறேன். நீயு ஆர்லீன்ஸில் வாழ்க்கைச் செலவு வெகு சொற்பம். படுக்க ஒரு இடம், கொஞ்சம் உணவு, புகையிலை, விஸ்கி, இவ்வளவுதானே வேண்டும்? ஒரு மாசச் செலவுக்காகும் பணத்தை இரண்டு தினங்களில் சம்பாதித்துவிடுவேன். சதா சுற்றித் திரிகிற ஒரு சோதாப்பயல் நான். அதுதான் எனது பிறவிக் குணம். வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும் என்றளவுக்கு நிர்ப்பந்தம் என்றும் எனக்கு ஏற்பட்டது கிடையாது. இந்த உலகில் எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியதாகிவிட்டது என்பதை எண்ணும்போதே எனக்கு ஆயாசமேற்பட்டுவிடும். எட்டு மணிநேரம் செய்யக்கூடியது, வேலை ஒன்றுதான். எட்டுமணிநேரம் காதலிக்கவோ, எட்டு மணிநேரம் புசிக்கவோ முடியாது. அதிக வேலையால் அவதிப்படுகிறான் மனிதன்.

கேள்வி : ஷெர்வுட் ஆண்டெர்ஸனுக்கு மிகவும் கடமைப்பட்டவராகவே தாங்கள் இருக்கலாம். இருந்தாலும் ஒரு இலக்கிய ஆசிரியர் என்ற ஹோதாவில் அவரைப் பற்றி தங்களுடைய மதிப்பீடு என்ன?

பதில் : எனது தலைமுறை எழுத்தாளர்களுக்கு அவர் பிதா. எங்களுக்குப் பின்னால் இன்றளவும் எழுதிவருகிற எழுத்தாளர்களின் இலக்கிய மார்க்கத்திற்கு வழிகோலியவரும் அவர்தான். அவரைத் தீர்க்கமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இன்றுவரை வெளிவரவில்லை. ட்ரெயிஸருக்கு அவர் அண்ணன். மார்க்ட்வெயின் இவர்கள் இருவருக்கும் தந்தை.

கேள்வி : தங்கள் காலத்து ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

பதில் : என் வாழ்நாளில தோன்றிய இரண்டு மகான்களில் ஒருவர் ஜேம்ஸ் ஜாயிஸ். மற்றொருவர் தாமஸ்மான். ஒரு மதப் பிரசங்கி பைபிள் பழைய ஏற்பாட்டை அணுகுவதுபோல் பக்தி சிரத்தையுடன் ஒருவன் ஜாயிஸின் "யூலீஸûஸ' அணுக வேண்டும்.

கேள்வி : ஒன்றுக்கு இரண்டு தடவையாகப் படித்துப் பார்த்துங்கூட தங்கள் சிருஷ்டிகள் முற்றும் புரியவில்லை என்று வாசகர்கள் அங்கலாய்க்கிறார்கள். இதற்குப் பரிகாரம் என்ன? பிரத்யேகமாக, அணுகும் முறையேதேனும் சொல்ல முடியுமா?

பதில் : நாலு தடவை படித்துப் பார்க்கட்டும்.

கேள்வி : சமகால எழுத்தாளர்களின் நூல்களை தாங்கள் படிப்பதுண்டா?

பதில் : சின்ன வயசில் நான் படித்த நூல்களையே இன்றளவும் மீண்டும், மீண்டும் படித்து வருகிறேன். பழைய ஏற்பாடு, பைபிள் டிக்கன்ஸ், கான்ராடு, டான்குக்úஸôட் - இந்த நூல்களையெல்லாம் வருடம் தவறாமல் படிக்கிறேன், சிலர் பைபிள் பாராயணம் செய்வதுபோல், ஃபிளாபர்ட்டும், பால்ஸôக்கும் அவர்களுக்கே சொந்தமான ஒரு உலகத்தையே படைத்துக் காட்டியிருக்கிறார்கள். டஸ்டாவஸ்கி, மெல்வில் இவர்களுடைய புத்தகங்களும் அடிக்கடி படிப்பதுண்டு. கவிஞர்களில் மார்லோ, காம்ப்டன், ஜான்ஸன், டான்னிகீட்ஸ், ஷெல்லி இவர்கள் என் மனசுக்கு உகந்தவர்கள். ஹவுஸ்மானின் புத்தகங்களும் அவ்வப்போது படிப்பேன். இவற்றையெல்லாம் நான் கணக்கற்ற தடவைகள் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையுமே பூராவும் படிப்பேன் என்பதில்லை. ஒரு காட்சியையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட கதாபாத்திர சம்பந்தமாக வருகிற பகுதிகளை மட்டுமே படிப்பேன்; ஒருசில நிமிஷங்கள் ஒரு அருமை நண்பனிடம் உரையாடுவது மாதிரி.

கேள்வி : பிராய்டு?

பதில் : நான் நியூ ஆர்லியஸில் இருந்தபோது எல்லோருடைய வாயிலும் அவருடைய பெயர் அடிபடும். ஆனால் நான் அவர் எழுதிய நூல்களைப் படித்ததில்லை. ஷேக்ஸ்பியரும் படித்திருக்க மாட்டாரே! மெல்விலும் படித்திருக்க மாட்டார். மோபி டிக் கண்டிப்பாகப் படித்திருக்க மாட்டான்.

கேள்வி : நாவலின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

பதில் : படித்துப் பார்க்க வாசகர் கூட்டம் இருப்பது வரையிலும் நாவல்கள் தோன்றத்தான் செய்யும். என்னுடைய தீர்மானம் இதுதான். இதையே தலைகீழாகவும் சொல்லலாம். ஆனால் சித்திரப் பத்திரிகைகளின் பெருக்கம் மனிதனின் வாசிக்கும் சக்தியை அழித்து, ஆதிமனிதனின் சித்திரலிபிகளின் காலத்துக்கு இழுத்துச் செல்லாதிருக்க வேண்டும்.

கேள்வி : விமர்சகனின் கடமை என்ன?

பதில் : விமர்சகனின் பேச்சுக்கு காது கொடுக்க கலைஞனுக்கு நேரமில்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்று திட்டம் போடுகிறவர்கள் புத்தக விமர்சனம் படிப்பார்கள். எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறவனுக்கு இதில் அக்கறை செலுத்த அவகாசம் இராது. "கீல்ராய் இங்கே இருந்தான்' என்று சொல்ல முயல்கிறான் விமர்சகன். அவனுடைய பார்வை கலைஞனை நோக்கிப் படிவதில்லை. கலைஞனோ விமர்சகனைவிடவும் ஒருபடி உயர்ந்தவன். காரணம் விமர்சகனின் மனசை நெகிழ வைக்கும் விஷயத்தை அவன் படைத்துவிடுகிறான். கலைஞனைவிட்டு, பிறரை வெகுவாகப் பாதிக்கும் ஒரு விஷயத்தைத்தான் விமர்சகன் சொல்கிறான்.

கேள்வி : தங்களுடைய படைப்புகளை பிறர் சர்ச்சை செய்ய வேண்டும் என்று தாங்கள் ஆசைப்படுவதில்லையா?

பதில் : இல்லை. நான் எழுதுவதில் முனைந்திருக்கிறேன். அது ஒன்றே என்னைத் திருப்தியடையச் செய்துவிடும். நான் ஈடுபட்டிருக்கும் வேலையில் எனக்கு வாசனை இல்லாத வரை பிறருடைய பேச்சு என்னை உருப்படச் செய்யாது. கடுமையாக உழைப்பதன் மூலமே உருப்பட முடியும். நான் ஒரு இலக்கிய ஆசிரியர் அல்ல; ஒரு எழுத்தாளன்தான். சுயவேலைகளைப் பற்றி வம்பளந்து கொண்டிருப்பதில் பயன் ஒன்றுமில்லை.

கேள்வி : "சலனம் சலனம்' என்று அடிக்கடி சொல்லி வருகிறீர்களே? எந்த அர்த்தத்தில் கலைஞன் இந்த அம்சத்துடன் இணைந்து நிற்கிறான்?

பதில் : சலனமே வாழ்க்கை. இந்தச் சலனத்தைத் தடை செய்து அசைவற்றதாக்கி, ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின் அந்த நூலைப் படித்துப் பார்க்கிற ஒரு வாசகனுக்கு "இதுதான் வாழ்க்கை, ஆகவே சலனத்துக்கு ஆட்பட்டிருக்கிறது' என்று உணரும் வகையால் காலத்தைத் தோக்கி வைப்பவனே கலைஞன். மனிதன் மரணத்தால் சரிகிறான். அமரத்துவ நிலையை கலை ஒன்றுதான் சாத்தியமாக்கும். கலைஞனுடைய லட்சியம், சதா ஒலித்துக் கொண்டிருப்பதும், எனினும் மரணத்தால் விழுங்க முடியாததுமான ஒன்றை தனக்கு வாரீசாக விட்டுச் செல்வதுதான்.

கேள்வி : soldiers pay எழுதி முடித்த பின்னர் sartoris எழுதுவதற்கு முன்னால் உங்களிடத்தில் விளைந்த மாற்றம் என்ன?

பதில் : soldiers pay எழுதுகையில், எழுத்து ஒரு ரசமான வேலை என்பதைக் கண்டு கொண்டேன். பின்னால் மற்றொன்றும் எனக்குத் தெரிய வந்தது. ஒரு குறிப்பிட்ட சிருஷ்டிக்கு மட்டுமல்ல, ஒரு எழுத்தாளனின் சிருஷ்டிக்கு அனைத்துக்கும் மொத்தமாக ஒரு design இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாயிற்று. என்னுடைய சின்னஞ்சிறிய கிராமப்புறத்தை அடிப்படையாக வைத்தே எத்தனையோ அரிய படைப்புகளை உருவாக்க முடியும். அத்தனையும் எழுதி முடிப்பது வரையிலும் நான் உயிரோடிக்கப் போவதில்லை. யதார்த்த சம்பவங்களுக்கு மெருகூட்டி, அவற்றை என் சிருஷ்டித்திறனின் சிகரத்தை அடைய வைப்பதற்கு அவசியமான சுதந்திரத்தை என்றுமே நான் பரிபூர்ணமாக அனுபவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முயற்சியெல்லாம், எனக்கே சொந்தமான ஒரு பிரபஞ்சத்தின் திரையை விலக்கிக் காட்டுவதே. என்னுடைய சிருஷ்டிகளில் இடம், காலம் போன்ற பரிமாணங்களில் கதாபாத்திரங்களை தெய்வ அருள் பெற்றவர்களாய் மதித்து அங்கும் இங்கும் புரட்டிப் போட்டிருக்கிறேன். காலம் பிண்ட சொரூபம் அற்றது; அது ஒரு திரவப்பொருள் போன்ற ஓட்டமுடையது என்ற எனது சித்தாத்தங்களை நிரூபிக்கும் பொருட்டு தான் எனது கதாபாத்திரங்களை காலத்தின் ஓட்டத்திற்குள் முன்னும் பின்னும் நகர்த்தியிருக்கிறேன். என்னுடைய அகராதியில் "இருந்தான்' என்று ஒன்றில்லை. "ஆவான்' என்பது மட்டும்தான் உண்டு. இருந்தான் என்ற ஒன்றிருக்குமென்றால் வேதனையேது; சங்கடமேது? நான் படைத்த உலகை இந்தப் பிரபஞ்சத்தின் அடிக்கல்லாக மதிக்கிறேன். அது கடுகத்தனை கொண்டதாயினும் சரி, அதை அகற்றிவிட்டால் இந்த பூலோகமே சிந்திச் சிதறிப் போய்விடும். doomsday book என்பதே என்னுடைய அந்திம சிருஷ்டி. சங்கிலியின் கடைசித் தொடர் அது சொர்ணக் கிரீடம் போன்றது. அதை மட்டும் எழுதி முடித்துவிட்டேன் என்றால், அன்றே பென்சிலை ஒடித்தெறிந்துவிட்டு எழுத்துத் தொழிலிலிருந்து விடுபெற்று, ஓய்வு பெற்றுக் கொள்வேன்.நூல்: வில்லியம் ஃபாக்னர் சிறுகதை

தொகுப்பு: மா.பாலசுப்ரமணியன்

ரூ.30

பதிப்பகம்: வ.உ.சி நூலகம்
ஜி- 1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை } 14
தொலைபேசி: 044 - 28276273