Tuesday, February 9, 2010

வில்லியம் ஃபாக்னருடனான உரையாடலின் தொடர்ச்சி....



கேள்வி : சூசகமாகத் தாங்கள் குறிப்பிடும் அந்த நாவல் எது?

பதில் : The sound and the fury. அந்த நாவலை தனித்தனியாக ஐந்து தடவைகள் எழுதினேன். அதுவரையிலும். வேதனை தந்து கொண்டிருந்த கனவிலிருந்து என்னால் மீளமுடியவில்லை. சீரழிந்து போன இரு பெண்களின் - காஸியும் அவளுடைய மகளும் - சோகக் கதை அது. அதில் வரும் டில்ஸி நான் ரொம்பவும் விரும்பும் கதாபாத்திரங்களில் ஒன்று. அவள் தைரியசாலி; விசால மனசுடையவள். அதே சமயம் அடக்கமான போக்குடையவள். நம்பிக்கைக்கும் உகந்தவள். சொல்லப் போனால் என்னைவிடவும் எத்தனையோ மடங்கு தைரியமும் சத்திய உணர்வும், மிதமான போக்கும் அவளுக்குண்டு.

கேள்வி : படிப்பவருக்கு போதனையூட்டுவதற்கு அனுசரணையான உருவ அமைப்பை வகுத்துக் கொள்வதில் சௌகரியம் ஏதேனுமுண்டா? A fable என்ற தங்கள் நாவலில், விவிலிய நூலின் சாயலில் போதனை உருவம் கைவந்திருக்கிறதே, அதைத்தான் கேட்கிறேன்?

பதில் : ஒரு கொத்தனுக்கு, சம சதுரத்தில் ஒரு கட்டிடத்தை எழுப்ப சமசதுரத்தில் மூலைகள் அமைத்துக் கொண்டால் ஏற்படுகிற சௌகரியம், அதிலும் உண்டு. கட்டடம் தீர்க்க சதுர வடிவமென்றால் மூலைகளும் அதற்கேற்றாப்போல் அமைந்தாக வேண்டும். அதேபோல் A fable என்ற கதையைச் சொல்வதற்கு விவிலிய போதனா உருவமே ஏற்றது என்று எண்ணினேன்.

கேள்வி : கொத்தன் கரண்டியை இரவில் வாங்குவது போல், கலைஞனும் கிருஸ்துவ மதத்தை ஒரு உபகரணமாகக் கொள்ளலாம் என்பதா தங்கள் குறிப்பு?

பதில் : என்னுடைய அர்த்தத்தில் கொத்தன் ஒருநாளும் அந்த கரண்டியை இழந்ததில்லை. கிருஸ்துவ மதம் கழன்று போன நிலையில் எவரும் இருந்ததுமில்லை. நான் கொள்ளும் பொருளையே தாங்களும் கொண்டால் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும். ஒரு தனிமனிதனுக்கு தனிப்பட்ட முறையில் அமைந்த குணாம்சமே அது. இயற்கையின் ஓட்டப்படி சென்று கொண்டிருந்தால்தான் அடைவதைக் காட்டிலும் உயர்ந்த ஒரு மட்டத்தை அடைவதற்காக மனிதன் எடுத்துக்கொள்ளும் பிரயாசையே அதன்பால் மனிதனுக்கு ஏற்படும் நம்பிக்கை. அதன் உருவகம்... அது ஒரு குரிசானாலும் சரி அல்லது ஒரு பிறைக் கீற்று ஆனாலும் சரி, சமூகத்திற்குள் மனிதன் ஆற்றித் தீரவேண்டிய கடமையை அவனுடைய பிரக்ஞைக்கு அது கொண்டு வருகிறது இந்த அடிப்படையில், பல்வேறு அமைப்பு முறைகளில் காட்சி தரும் உபதேசங்கள் அனைத்தும் ஒன்றே; ஒரே சித்திரம். அதை கூர்ந்து நோக்கி மனிதன் தன்னையே அறிந்துகொள்கிறான். "நான் என்பது என்ன என்பதும் அவனுக்கு வெளிச்சமாகிறது. ஆனால் பள்ளிப்பாட புத்தகம் கணக்கைப் புகட்ட முயல்வதுபோல் அதனால் தர்ம அதர்ம வேறுபாடுகளை உணர்த்த முடியாது. ஆனால் அது அவனுக்கு தன்னையே எப்படி அறிந்து கொள்ளுவது என்பதையும், தன்னுள் புதையுண்டு கிடக்கும் சக்திகளுக்கும், ஆசைகளுக்கும் அனுசரணையான வகையில் எப்படி தனக்கே சொந்தமான ஒரு கோட்பாட்டை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்வது என்பதையும் கற்றுக்கொடுக்கும். வேதனை, தியாகம் இவற்றிற்கு மூர்த்திகரமாகத் துலங்கும் ஒரு ஒப்பற்ற உதாரணத்தை அது அவனுக்கு வழங்குகிறது. போதனை உருவ அமைப்பில், தார்மீகச் சிந்தனைகளை சுருதியாகக் கொண்டு, இன்று வரையிலும் எழுத்தாளர்கள் அளித்து வந்திருப்பதும், இனிமேல் அளிக்கப் போவதுமான கதாபாத்திரங்கள் மூன்று முகங்களுக்கும் பிரதிநிதியாக தோன்றுவார்கள். ஒருவன், ஒன்றும் அறியாதவன், இன்னொருவன், அறிந்தும் சிரத்தை செலுத்தாதவன்; மற்றொருவன், அறிந்து கொள்பவனும், சிரத்தைச் செலுத்துபவனுமான ஒருவன். இவர்கள்தாம் அந்த கதாபாத்திரங்கள். அதே மும்முகத்தைத்தான் நீங்கள் A fable -லும் பார்க்கிறீர்கள். அதில் வரும் யூத விமானத் தலைவன் ""இது பயங்கரமானது; வாழ்வையே உதறிவிட நேர்ந்தாலும்கூட இதை நான் கைவிடப் போவதில்லை'' என்கிறான். ""இது பயங்கரமானது; நம்மால் இதைக் கண்ணீர் விட்டபடி தாங்கிக் கொண்டிருக்க முடியும்'' என்கிறான் பிரெஞ்சுப் படைத்தலைவன். இங்கிலீஷ் பட்டாலியன் ரன்னர், ""இது பயங்கரமானது : இதற்காக நான் எதையாவது செய்வேன்'' என்கிறான்.

கேள்வி : உங்கள் படைப்புகளில் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது எந்த அளவு இருக்கிறது?

பதில் : இப்போது என்னால் திட்டமாகச் சொல்ல முடியாது. இன்றுவரை நான் கணக்கெடுத்துப் பார்த்ததும் இல்லை. ஏனெனில் "எந்த அளவுக்கு?' என்பது பிரதானமானதல்ல. ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் மூன்று குணாம்சங்கள் இருந்தாக வேண்டும். அனுபவம், கூர்ந்து நோக்குதல், கற்பனை வளம். இதில் ஏதாவது இரண்டு - சில சமயம் இதில் ஒன்று - மற்றொன்று இல்லாத குறையை நிரப்பிவிடும். எனக்கு ஒரு கருத்திலிருந்தோ, ஒரு சிந்தனைச் சுடரிலிருந்தோ, ஒரு மனச் சித்திரத்திலிருந்தோ கதை பிறக்கிறது. ஒரு கருத்தோ சிந்தனையோ ஏன் பிறந்தது என்பதையும், அதன்மூலம் நேர்ந்த விளைவுகள் என்ன என்ன என்பதையும் விளக்குவதற்காக ஒரு கட்டம் வரையிலும் கதையை நகர்த்திச் செல்வதுதான் நான் செய்கிற ஒரே காரியம். தன்னால் இயன்ற வரையிலும், மனசைத் தொடும்படி நடைமுறை சாத்தியமான காட்சிகளின் துணையால், நம்பத் தகுந்த கதாபாத்திரங்களைப் படைத்துக் காட்டுவதுதான் ஒரு எழுத்தாளனின் வேலை. எழுத்தாளன், அவனுக்குப் பரிச்சயமான பின்னணிகளையும் சூழ்நிலைகளையும் எடுத்தாள எண்ணுவது சகஜம். கலையின் சிகரம் சங்கீதம். கலைஞனின் மனச்சூட்சுமங்களை அதைப்போல் வேறு எந்த உபகரணத்தாலும் உணர்த்த முடியாது. சங்கீதம், வெகு அழகாகவும், லலிதமாகவும் வெளியிடும் உணர்ச்சிபாவங்களை நான் கரடுமுரடான வார்த்தைக்குள் அடக்கப் பாடுபடுகிறேன், நான் சாதிப்பதைவிட அழகாக, எளிமையாக, சங்கீதம் செய்து காட்டும். ஆனால் எனக்கோ வார்த்தைகளிடத்தில் தான் நேசம். பாடுவதையும்விட படிப்பதில் அதிக தாத்பரியம் உள்ளவன் நான். ஓசையை விடவும் அமைதியை மிகவும் விரும்புகிறேன். வார்த்தைகளில் தேக்கப்படும் சித்திரம் அமைதியில் ஜீவகளை பெறுகிறது. அதாவது வசனத்தின் கர்ஜனையும் சரி, சங்கீத இன்பமும் சரி, அமைதியின் விளைவுகளே.

கேள்வி : அனுபவம், கூர்ந்து நோக்கல், கற்பனை இவை ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள்.intuition-ம் அவசியம் அல்லவா?

பதில் : intuition என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. சொல்லக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை.

கேள்வி : தாங்கள் இலக்கியத் துறைக்கு எப்படி வர நேர்ந்தது?

பதில் : அப்போது நான் நியூஆர்லின்ஸில் வசித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஷெர்வுட் ஆண்டெர்ஸனைச் சந்திக்க நேர்ந்தது. மாலையில் இருவரும் கூடிப் பேசுவோம். பக்கத் துணைக்கு ஒன்று அல்லது இரண்டு புட்டி மதுவும் இருக்கும். பிற்பகல் வேளையில் அவரை வெளியே காண முடியாது. ஏகாந்தத்தில் அமர்ந்து வேலையில் முனைந்திருப்பார். மறுநாளும் இதே போலத்தான். அதுதான் ஒரு எழுத்தாளனின் வேலைத்திட்டம் என்றால் அவரைப் போல் நானும் ஒரு எழுத்தாளன் ஆகவேண்டியதுதான் என்னுடைய உடனடித் தேவை என்பதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய முதல் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே எழுத்துத் தொழில் கன குஷியாகப்பட்டது. ஆண்டெர்ஸனை மூன்று வாரங்கள் சந்திக்கவே இல்லை. அந்த விஷயமே மறந்து போய்விட்டது. ஒருநாள் அவரே என் ஜாகை தேடி வந்து சேர்ந்தார். என் இருப்பிடத்திற்கு வந்தது அதுதான் முதல் தடவை. அவர், ""என்ன நீ? கோபமா?'' என்று கேட்டார். ""நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதில் சொன்னேன். "அடகடவுளே!'' என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட்டார். soldiers pay. தான் அந்த நாவல். அதை எழுதி முடித்தபின்னர் ஒருநாள், மிஸில் ஆண்டெர்ஸனை வழியில் சந்தித்தேன் அகஸ்மாத்தாக. எழுத்து வேலை பற்றி விசாரித்தார். முடிந்துவிட்டதாகச் சொன்னேன். அதற்கு அவர், ""ஷெர்வுட் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள சித்தமாயிருக்கிறார். அதாவது கையெழுத்துப்பிரதியை அவர் வாசிக்க நேராது என்றால் அதை அவருடைய வெளியீட்டார்களிடமே ஒப்படைத்து வெளியிடச் செய்யலாம் என்பதே அது'' என்றார். ""ஆட்சேபணை இல்லை'' என்று நானும் சொல்லி வைத்தேன். நான் எழுத்தாளன் ஆன கதை இதுதான்.

கேள்வி : உபாய ஊதியங்களில் என்ன என்ன வேலைகள் பார்த்திருக்கிறீர்கள்?

பதில் : அகப்பட்டதையெல்லாம் ஒரு கை பார்த்திருக்கிறேன். எந்த வேலையையும் சுமாராக ஒப்பேற்றிவிடுபவன்; துடுப்புப் பிடித்திருக்கிறேன்; சாயம் பூசியிருக்கிறேன்; ஏரோப்ளேன் ஓட்டியிருக்கிறேன். நீயு ஆர்லீன்ஸில் வாழ்க்கைச் செலவு வெகு சொற்பம். படுக்க ஒரு இடம், கொஞ்சம் உணவு, புகையிலை, விஸ்கி, இவ்வளவுதானே வேண்டும்? ஒரு மாசச் செலவுக்காகும் பணத்தை இரண்டு தினங்களில் சம்பாதித்துவிடுவேன். சதா சுற்றித் திரிகிற ஒரு சோதாப்பயல் நான். அதுதான் எனது பிறவிக் குணம். வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும் என்றளவுக்கு நிர்ப்பந்தம் என்றும் எனக்கு ஏற்பட்டது கிடையாது. இந்த உலகில் எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியதாகிவிட்டது என்பதை எண்ணும்போதே எனக்கு ஆயாசமேற்பட்டுவிடும். எட்டு மணிநேரம் செய்யக்கூடியது, வேலை ஒன்றுதான். எட்டுமணிநேரம் காதலிக்கவோ, எட்டு மணிநேரம் புசிக்கவோ முடியாது. அதிக வேலையால் அவதிப்படுகிறான் மனிதன்.

கேள்வி : ஷெர்வுட் ஆண்டெர்ஸனுக்கு மிகவும் கடமைப்பட்டவராகவே தாங்கள் இருக்கலாம். இருந்தாலும் ஒரு இலக்கிய ஆசிரியர் என்ற ஹோதாவில் அவரைப் பற்றி தங்களுடைய மதிப்பீடு என்ன?

பதில் : எனது தலைமுறை எழுத்தாளர்களுக்கு அவர் பிதா. எங்களுக்குப் பின்னால் இன்றளவும் எழுதிவருகிற எழுத்தாளர்களின் இலக்கிய மார்க்கத்திற்கு வழிகோலியவரும் அவர்தான். அவரைத் தீர்க்கமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இன்றுவரை வெளிவரவில்லை. ட்ரெயிஸருக்கு அவர் அண்ணன். மார்க்ட்வெயின் இவர்கள் இருவருக்கும் தந்தை.

கேள்வி : தங்கள் காலத்து ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?

பதில் : என் வாழ்நாளில தோன்றிய இரண்டு மகான்களில் ஒருவர் ஜேம்ஸ் ஜாயிஸ். மற்றொருவர் தாமஸ்மான். ஒரு மதப் பிரசங்கி பைபிள் பழைய ஏற்பாட்டை அணுகுவதுபோல் பக்தி சிரத்தையுடன் ஒருவன் ஜாயிஸின் "யூலீஸûஸ' அணுக வேண்டும்.

கேள்வி : ஒன்றுக்கு இரண்டு தடவையாகப் படித்துப் பார்த்துங்கூட தங்கள் சிருஷ்டிகள் முற்றும் புரியவில்லை என்று வாசகர்கள் அங்கலாய்க்கிறார்கள். இதற்குப் பரிகாரம் என்ன? பிரத்யேகமாக, அணுகும் முறையேதேனும் சொல்ல முடியுமா?

பதில் : நாலு தடவை படித்துப் பார்க்கட்டும்.

கேள்வி : சமகால எழுத்தாளர்களின் நூல்களை தாங்கள் படிப்பதுண்டா?

பதில் : சின்ன வயசில் நான் படித்த நூல்களையே இன்றளவும் மீண்டும், மீண்டும் படித்து வருகிறேன். பழைய ஏற்பாடு, பைபிள் டிக்கன்ஸ், கான்ராடு, டான்குக்úஸôட் - இந்த நூல்களையெல்லாம் வருடம் தவறாமல் படிக்கிறேன், சிலர் பைபிள் பாராயணம் செய்வதுபோல், ஃபிளாபர்ட்டும், பால்ஸôக்கும் அவர்களுக்கே சொந்தமான ஒரு உலகத்தையே படைத்துக் காட்டியிருக்கிறார்கள். டஸ்டாவஸ்கி, மெல்வில் இவர்களுடைய புத்தகங்களும் அடிக்கடி படிப்பதுண்டு. கவிஞர்களில் மார்லோ, காம்ப்டன், ஜான்ஸன், டான்னிகீட்ஸ், ஷெல்லி இவர்கள் என் மனசுக்கு உகந்தவர்கள். ஹவுஸ்மானின் புத்தகங்களும் அவ்வப்போது படிப்பேன். இவற்றையெல்லாம் நான் கணக்கற்ற தடவைகள் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையுமே பூராவும் படிப்பேன் என்பதில்லை. ஒரு காட்சியையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட கதாபாத்திர சம்பந்தமாக வருகிற பகுதிகளை மட்டுமே படிப்பேன்; ஒருசில நிமிஷங்கள் ஒரு அருமை நண்பனிடம் உரையாடுவது மாதிரி.

கேள்வி : பிராய்டு?

பதில் : நான் நியூ ஆர்லியஸில் இருந்தபோது எல்லோருடைய வாயிலும் அவருடைய பெயர் அடிபடும். ஆனால் நான் அவர் எழுதிய நூல்களைப் படித்ததில்லை. ஷேக்ஸ்பியரும் படித்திருக்க மாட்டாரே! மெல்விலும் படித்திருக்க மாட்டார். மோபி டிக் கண்டிப்பாகப் படித்திருக்க மாட்டான்.

கேள்வி : நாவலின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

பதில் : படித்துப் பார்க்க வாசகர் கூட்டம் இருப்பது வரையிலும் நாவல்கள் தோன்றத்தான் செய்யும். என்னுடைய தீர்மானம் இதுதான். இதையே தலைகீழாகவும் சொல்லலாம். ஆனால் சித்திரப் பத்திரிகைகளின் பெருக்கம் மனிதனின் வாசிக்கும் சக்தியை அழித்து, ஆதிமனிதனின் சித்திரலிபிகளின் காலத்துக்கு இழுத்துச் செல்லாதிருக்க வேண்டும்.

கேள்வி : விமர்சகனின் கடமை என்ன?

பதில் : விமர்சகனின் பேச்சுக்கு காது கொடுக்க கலைஞனுக்கு நேரமில்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்று திட்டம் போடுகிறவர்கள் புத்தக விமர்சனம் படிப்பார்கள். எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறவனுக்கு இதில் அக்கறை செலுத்த அவகாசம் இராது. "கீல்ராய் இங்கே இருந்தான்' என்று சொல்ல முயல்கிறான் விமர்சகன். அவனுடைய பார்வை கலைஞனை நோக்கிப் படிவதில்லை. கலைஞனோ விமர்சகனைவிடவும் ஒருபடி உயர்ந்தவன். காரணம் விமர்சகனின் மனசை நெகிழ வைக்கும் விஷயத்தை அவன் படைத்துவிடுகிறான். கலைஞனைவிட்டு, பிறரை வெகுவாகப் பாதிக்கும் ஒரு விஷயத்தைத்தான் விமர்சகன் சொல்கிறான்.

கேள்வி : தங்களுடைய படைப்புகளை பிறர் சர்ச்சை செய்ய வேண்டும் என்று தாங்கள் ஆசைப்படுவதில்லையா?

பதில் : இல்லை. நான் எழுதுவதில் முனைந்திருக்கிறேன். அது ஒன்றே என்னைத் திருப்தியடையச் செய்துவிடும். நான் ஈடுபட்டிருக்கும் வேலையில் எனக்கு வாசனை இல்லாத வரை பிறருடைய பேச்சு என்னை உருப்படச் செய்யாது. கடுமையாக உழைப்பதன் மூலமே உருப்பட முடியும். நான் ஒரு இலக்கிய ஆசிரியர் அல்ல; ஒரு எழுத்தாளன்தான். சுயவேலைகளைப் பற்றி வம்பளந்து கொண்டிருப்பதில் பயன் ஒன்றுமில்லை.

கேள்வி : "சலனம் சலனம்' என்று அடிக்கடி சொல்லி வருகிறீர்களே? எந்த அர்த்தத்தில் கலைஞன் இந்த அம்சத்துடன் இணைந்து நிற்கிறான்?

பதில் : சலனமே வாழ்க்கை. இந்தச் சலனத்தைத் தடை செய்து அசைவற்றதாக்கி, ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின் அந்த நூலைப் படித்துப் பார்க்கிற ஒரு வாசகனுக்கு "இதுதான் வாழ்க்கை, ஆகவே சலனத்துக்கு ஆட்பட்டிருக்கிறது' என்று உணரும் வகையால் காலத்தைத் தோக்கி வைப்பவனே கலைஞன். மனிதன் மரணத்தால் சரிகிறான். அமரத்துவ நிலையை கலை ஒன்றுதான் சாத்தியமாக்கும். கலைஞனுடைய லட்சியம், சதா ஒலித்துக் கொண்டிருப்பதும், எனினும் மரணத்தால் விழுங்க முடியாததுமான ஒன்றை தனக்கு வாரீசாக விட்டுச் செல்வதுதான்.

கேள்வி : soldiers pay எழுதி முடித்த பின்னர் sartoris எழுதுவதற்கு முன்னால் உங்களிடத்தில் விளைந்த மாற்றம் என்ன?

பதில் : soldiers pay எழுதுகையில், எழுத்து ஒரு ரசமான வேலை என்பதைக் கண்டு கொண்டேன். பின்னால் மற்றொன்றும் எனக்குத் தெரிய வந்தது. ஒரு குறிப்பிட்ட சிருஷ்டிக்கு மட்டுமல்ல, ஒரு எழுத்தாளனின் சிருஷ்டிக்கு அனைத்துக்கும் மொத்தமாக ஒரு design இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாயிற்று. என்னுடைய சின்னஞ்சிறிய கிராமப்புறத்தை அடிப்படையாக வைத்தே எத்தனையோ அரிய படைப்புகளை உருவாக்க முடியும். அத்தனையும் எழுதி முடிப்பது வரையிலும் நான் உயிரோடிக்கப் போவதில்லை. யதார்த்த சம்பவங்களுக்கு மெருகூட்டி, அவற்றை என் சிருஷ்டித்திறனின் சிகரத்தை அடைய வைப்பதற்கு அவசியமான சுதந்திரத்தை என்றுமே நான் பரிபூர்ணமாக அனுபவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முயற்சியெல்லாம், எனக்கே சொந்தமான ஒரு பிரபஞ்சத்தின் திரையை விலக்கிக் காட்டுவதே. என்னுடைய சிருஷ்டிகளில் இடம், காலம் போன்ற பரிமாணங்களில் கதாபாத்திரங்களை தெய்வ அருள் பெற்றவர்களாய் மதித்து அங்கும் இங்கும் புரட்டிப் போட்டிருக்கிறேன். காலம் பிண்ட சொரூபம் அற்றது; அது ஒரு திரவப்பொருள் போன்ற ஓட்டமுடையது என்ற எனது சித்தாத்தங்களை நிரூபிக்கும் பொருட்டு தான் எனது கதாபாத்திரங்களை காலத்தின் ஓட்டத்திற்குள் முன்னும் பின்னும் நகர்த்தியிருக்கிறேன். என்னுடைய அகராதியில் "இருந்தான்' என்று ஒன்றில்லை. "ஆவான்' என்பது மட்டும்தான் உண்டு. இருந்தான் என்ற ஒன்றிருக்குமென்றால் வேதனையேது; சங்கடமேது? நான் படைத்த உலகை இந்தப் பிரபஞ்சத்தின் அடிக்கல்லாக மதிக்கிறேன். அது கடுகத்தனை கொண்டதாயினும் சரி, அதை அகற்றிவிட்டால் இந்த பூலோகமே சிந்திச் சிதறிப் போய்விடும். doomsday book என்பதே என்னுடைய அந்திம சிருஷ்டி. சங்கிலியின் கடைசித் தொடர் அது சொர்ணக் கிரீடம் போன்றது. அதை மட்டும் எழுதி முடித்துவிட்டேன் என்றால், அன்றே பென்சிலை ஒடித்தெறிந்துவிட்டு எழுத்துத் தொழிலிலிருந்து விடுபெற்று, ஓய்வு பெற்றுக் கொள்வேன்.



நூல்: வில்லியம் ஃபாக்னர் சிறுகதை

தொகுப்பு: மா.பாலசுப்ரமணியன்

ரூ.30

பதிப்பகம்: வ.உ.சி நூலகம்
ஜி- 1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை } 14
தொலைபேசி: 044 - 28276273

No comments: