Tuesday, December 30, 2008

உறங்குவதற்கு மட்டும் வரும் ஜெகதா



இரவுச்சுவர்களைத் தகர்த்துக்கொண்டு

எங்கிருந்தாலும் வந்துவிடுவாள் ஜெகதா

அவனோடு உறங்குவதற்கு மட்டும்

இலவம் பஞ்சுறுத்தாத தளும்புகிற

மெத்தையிலாது போனால்

அவள் இமைகளின் இருள் தாழ்ப்பாள்

தாழிடாது துன்புறுத்தும்

நினைவுகளை விழிகளாக்கி

அழுதழுது அவன்

அந்தச் சதுர அறையைக் குளமாக்குவான்

அதிலும் அலை மலையூதலிலாத

நீர் மெத்தையாகப் பார்த்து

ஒருக்களித்து மெல்லுடல் சாய்ப்பாள்

அவள் தலையணை விருப்பம் அறிந்து

முன்வந்து நெஞ்சு புடைத்துக் காட்டுவான்

துருப்பிடிக்காத பழைய விழிக் குத்தீட்டியை இறக்கி

அவன் இதயத்தைப் பிடுங்கி இரண்டாய் வகுந்து

ஒன்றைத் தலைக்கும்

மற்றொன்றைக் காலிடுக்கிலும் வைத்துக்கொள்வாள்

உள்ளங்கால்களிலிருந்து தலை வரை

நிகழ்நிகழ்வாய் உரித்தெடுத்த அவனின் தீராவலியைப்

போர்வையாக அவளுக்குப் போர்த்தி

கேவல்களால் விரல்களுக்குச் சொடுக்கெடுப்பான்

பிறழ்ந்த அவன் பெருமூச்சுகளின்

ஏக்க மூச்சின் சுகத் தாலாட்டில்

மிதந்துறங்கிப் போகிறவள்

அவள் சுவடுகள் குத்திக் கிழிக்கக் கிழிக்க

பின்னால் நடந்த அவன் கால்களின் வெடிப்புகளில்

ஈர்க்குச்சிகளை நுழைத்துநுழைத்து

ஆழம் பார்த்து கனவில் சிரிப்பாள்

பலவருட புளிப்பேறிய

அவள் பழரசச் சிரிப்பை

மிடறுமிடறாய் விழுங்கி

அவன் போதையில் பிதற்றுவான்.


நன்றி: உயிரோசை



Tuesday, December 9, 2008

நீர்வளையத்தின் நீள் பயணம்



வெந்நீராய்க் கலங்கின மாடஷின் கண்கள். முறையாகக் கலங்கியது குளம் என்று சொல்வதுதான் சரி. சதுரக் கரைகளுக்குள் அதன் இருப்பிற்காக அலையும் குளம், உடலுக்குள் பாய்ந்து அமிழ்ந்து அலைகிறது என்பது அவருக்குள் வெட்டிக்கொண்டது.

முன்பெல்லாம் குளத்தில் குளிக்க இறங்குகையில் சூடாய்க் கரையும் உச்சிச்சூரியன் மீது படித்துறையில் பாசி வழுக்கித் தடுமாறியது போன்று வருத்தம் எழுந்ததுண்டு. குளத்தின் ஆவியை வாங்குது என்று முனகியதாகவும் ஞாபகம்.

மாடசாமி மூழ்குவான். மேற்மட்ட மஞ்சள் வெந்நீர் வெளியைக் கண்கள் திறந்து பார்ப்பான். இன்னும் அமிழ்வான். அடியாழ இருள்நீர் வெளி சூழும். மணற்தரை காலைத் தட்டும். ஆழ் நீரின் குளிர் அவன் முதுகை அழுத்திவிடும். அப்படியே மூச்சடக்கி இருபது காலடித் தூரத்துக்கு அடியாழத்திலேயே நீந்துவான். கொழகொழவென்று களிமண் சேறு காலில் கையில் படத்தொடங்கும். மூச்சு முட்டை மேலெழும்பும் வேகத்தில் உடனே மேலே வருவான். திருகாணியோடு மூக்குத்தியும் விழுந்ததுபோல எங்கோ கழன்று விழுந்திருக்கும் வருத்தம்.

வெந்நீரைக் கட்டுப்படுத்துவதற்கு மாடஷ் எடுத்த ஆயத்தங்கள் அனைத்தும் தண்டு அறுந்து மிதக்கும் தாமரை இலைபோல பயன் இல்லாமலே போயின. ஏறுவெயிலாய் ஏறிக்கொண்டே இருக்கிறது அவர் உடற்குளத்தின் வெப்பம். அடியாழத்தையும் குமிழ்களின் மேல் குமிழ்களாய்க் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் அவரின் பேத்திகள்.

மூத்த பேத்தி ஜாய்ஃபுல் அவள் கல்லூரித் தோழி ஸீ பேர்ட்டிடம் அலைப்பேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். முடித்ததும் சத்தம்போட்டு தரை அதிரக் குதித்து, இளைய பேத்தி ப்ளு ஸ்கையையும் தாத்தா மாடஷையும் கணினி அறைக்குத் தொந்தரவால் இழுத்து வந்தாள். இரு பக்கத்திலும் அவர்களை உட்கார வைத்து கணினியை இயக்கி இணையத்தில் கூகுளுக்குள் நுழைந்தாள். தேடல் கட்டத்தில் வ்வ்வ்.விகிமபியா.org என்ற முகவரியைப் பதித்து நுழைவு பொத்தானை அழுத்தினாள். நீலம், பச்சை, வெள்ளை நிறங்களில் உலக வரைபடம் வந்தது.

"கடைகளில் வாங்கும் காகித வரைபடம் போல் இல்லை இது. பூமி உருண்டையில் எதையும் மிச்சம் வைக்காமல் காட்டும். மிரளாமல் பாருங்க.'' என்று சத்தத்தால் ஜாய் சிரித்தாள் . ப்ளு ஸ்கை சிறகோசை எழுப்பினாள். மாடஷ் உள்ளத்துள் எழுந்த சிரிப்பு உதட்டுக்கரையில் மெலிதாய் மோதித் திரும்பியது. அந்தத் தளத்திலொரு தேடல் கட்டம் இருந்தது. அதில் "இங்கிலாந்து ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம்' என்று பதித்தாள். சிவப்பு நிறத்தில் ஒரு சக்கரம் சுழன்று முடிந்து, வரைபடத்தின் கிழக்கோரப் பகுதியில் ஒரு வெள்ளைத்திரையின் மேல் இங்கிலாந்தின் சில இடங்கள் கி.மீட்டர் விவரங்களுடன் வந்தன. அதில் ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம் என்றும் இருந்தது. அதை அழுத்தி வரைபடத்தைப் பெரிதாக்கினாள். மேல் கோணத்தில் ரயில் நிலையம் தெரிந்தது. அதன் மேலும் கட்டம் கட்டி பெயர் குறிக்கப்பட்டிருந்தது. கொய்யாக்காயின் மீது தன் கால்களை வைத்து ஓர் எலி நகர்த்திக் கொண்டுபோவதுபோல எலி விசையைப் பயன்படுத்தத் துவங்கினாள் ஜாய். 'லண்டன் ஐ' இராட்சத இராட்டினத்தின் உச்சிப்பெட்டியிலிருந்து கீழே பார்ப்பதுபோல மிரட்சியின் கிச்சுக்கிச்சு மூட்டலில் இருந்தன மூவரின் வயிறுகள்.

நிலையத்துக்கு வெளியில் வந்தாள். அகலமான ஈஸ்ட் ஹாம் கடைவீதியில் திரும்பினாள். வீதித் தொடக்கத்திலேயே சாம்பார் மணம் மூக்கின் நரைமுடிகளைக் கடந்து மாடஷுக்குள் காற்றாய் நுழையத் தொடங்கியது. கட்டடப் பிரம்மாண்டங்களின் மேல் நகர்ந்துகொண்டே வந்தாள். பொம்மைப்பெண் கும்பிட்டு வரவேற்கும் ஈழத் தமிழர் துணிக் கடை வந்தது. சுரிதார் எடுத்துப்போட்ட அடலரசுவின் ஓரப்பார்வையைத் திருடி வந்ததை நினைத்து சிரிப்பை முழுங்கிக் கொண்டாள் ப்ளு ஸ்கை. நகைக் கடை, மளிகைக்கடை, சில அடுக்கக வீடுகளைத் தாண்டிப் போனார்கள். தெருவிலிருந்து விலகி நிற்கிற மகாலட்சுமி அம்மன் கோயில் வந்தது. "தொலைந்துபோன என் செருப்பு கிடைக்குமா தாத்தா?'' என்று கோயில் வாசல் பக்கம் சிரித்தபடியே ஜாய்ஃபுல் போய்...போய் வந்தாள். ஒலிப்பேழை கடை, புத்தகக் கடை, சரவணபவன் ஓட்டல், சென்னை தோசா ஓட்டல், லண்டன் அலுவலர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விடுதிகளைக் கடந்ததும் இராட்டினப் பெட்டி கீழிறங்கியதுபோல பெரும் சந்தோஷச் சத்தம் எழுப்பினார்கள் பேத்திகள். "இதுக்குள்ள...இதுக்குள்ளதான் நாம இருக்கோம்'' என்று ஸ்கை கத்தினாள். மென்மையாய் மெய்சிலிர்த்துக்கொண்டு "அப்படியே நம்ம அடுக்ககம்.'' என்று மாடஷ் உற்றுப் பார்த்துச் சொல்லிக்கொண்டார். மாயசால நிமிடங்கள் 'வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கோமா? இணைய வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறோமா?' என்கிற மயங்கிய பொழுதாய் இருந்தது.
வீட்டின் மேல் எலி விசை மூலம் ஒரு பெரிய கட்டம் கட்டி, அப்பா "டேங்க்', அம்மா "மல்லிகா' பெயர்களுடன் அவர்கள் மூவர் பெயரையும் ஜாய் குறித்தாள். அந்த வீதியிலேயே கடைசியாய்ப் பெயர் குறிக்கிறோம் என்பதில் அவளுக்கு மிகப்பெரிய வருத்தம்.

'கொஞ்சக் காலத்திற்குள் உயிர்கள் உட்பட அசையும் சொத்துக்களையும் காட்டத் தொடங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளும் இயல்பாய் இருக்கமுடியாது. ஒவ்வொருவரின் அந்தரங்கம் என்னாகும்?' ஸ்கை யோசித்து முடிப்பதற்குள், 'இங்கிலாந்து தேம்ஸ்' என்று தேடல் கட்டத்தில் ஜாய் பதித்து நதிக்கு வந்தாள்.
எம்பாங்க்மென்ட் படித்துறையிலிருந்து புறப்பட்ட படகில் ஓடிவந்து கடைசியாய்த் தொத்துவதுபோல சேர்ந்துகொண்டாள் ஸ்கை. நதி போக்கில் ஜாய் போனாள். ஆடைகள் நனைந்ததுபோன்று சிலீரிட்டது. வழக்கப் பழக்கத்தில் பிக்பென் கடிகாரம் பார்த்தார்கள். கிழிப்பட்ட நீர்ப்பாதையில் வேகம் கூடியது. கரையிலிருந்த நாடாளுமன்றக் கட்டடம், லண்டன் ஐ இராட்சத இராட்டினம், நீள மூக்கு தூண் எல்லாம் பின்னால் கரைந்தோடின. செயின்ட் பால் தேவாலயம் அருகே வந்ததும் நதி மேலேயே மூவரும் நின்றனர். அங்கு படகு ஒன்று தனித்துக் கிடந்தது. அதன் மேல் கட்டம் கட்டி, 'ஜாய்ஃபுல்' என்று குறித்தாள். தன்னுடைய பெயரையும் அதில் சேர்க்கச் சொல்லி ஸ்கை சண்டை போட்டாள். அதில் கவனம் கொள்ளாமல் மாடஷ் அவருக்குள் ஊறிய ஆசையின் ஊற்றுக்கண்களில் தொய்ந்தார்.

'பொன்வாசநல்லூர் சின்னக் குளமும் இதுபோல் தெரியுமா? அதன் படித்துறை தெரியுமா? சத்தமான மூச்சுக் காற்றில் விலகுகிற அலைகளுடன் பசுக்கள் தண்ணீர் குடிப்பது தெரியுமா? மையக் குளத்தில் மாடஷ் என்று குறிக்க வேண்டும். வேண்டாம். மாடசாமி என்றே... ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் குளிக்கிறபோதே உயிர் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்...'
வேறொரு படகில் பெயர் வைக்கிற சமாதான உடன்படலோடு ஜாய் நதி நகர்த்திப்போனாள். டவர் பாலம் அருகில் எச்.எம்.எஸ்.பெல்ஃபாஸ்ட் என்ற இரண்டாம் உலகப் போர்க் கப்பல் அதன் முதுமையைக் கழித்துக் கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்குள் சுற்றிப் பார்க்க அப்பாவோடு நுழைந்த போது முன்னால் போனவரின் கால் தட்டி விழுந்த நினைவில் ஜாய் விழுந்தாள். அந்தக் கப்பலிலாவது தன்னுடைய பெயரைக் குறிக்குமாறு ஸ்கை எலிவிசையைப் பிடுங்கப் போனாள். 'போர்க் கப்பலில் வேண்டாம். வேறு எதிலாவது வைக்கிறேன்' என்று நதியை விட்டு தனித்து டவர் பாலத்திலேறி ஜாய் போகத் தொடங்கினாள்.

"சின்னக்குளம்'' சிறிதாய்த் தலை தூக்கி நீந்திப் போகிற தண்ணீர் பாம்புபோல மெல்ல தன் விருப்பத்தைத் தெரிவித்தார் மாடஷ்.
"பொறு தாத்தா. பக்கிங்ஹாம் அரண்மனையைப் பார்த்துட்டு வர்றோம்''
"குளம்''"
கோவண்ட் தோட்டம் போறோம்''
"....''"பிக்கடில் போய் பர்லிங்டன் ஆர்க்கேட்டில் சிற்பம் வாங்கப் போறேன்''
"குளம்''
"பிரான்ஸ் ஈபிள் டவர் மேல ஏறணும்''
நண்டு வளை பெரிதாகி கசிவு அதிகமானது. இருக்கையை மாடஷ் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார். துண்டால் கசிவைக் கட்டுப்படுத்தினார். கால்களை இறக்கி, தொப்பை முன் தள்ள இருக்கையில் சரிந்துகொண்டு கண்களை மூடினார். உள்ளுக்குள் நீந்தியபடியே மாடசாமி பேசத் தொடங்கினான்.

'சொல்லிக்கொள்ளாமல் சூரியன் திரும்பிக்கொண்டிருக்கிறது.கடைசி ஈரமாயிருந்த தாத்தாவையும் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டு வந்தவர்கள் ஒவ்வொருவராய் மஞ்சள் மணம் வரும் சின்னக் குளத்தில் இறங்குகிறார்கள். படித்துறை வலப்பக்க சறுக்குச்சுவரில் ஏறி வேகமாய் ஓடிவந்து தொபுக்கடீரெனப் பல்டி அடித்து மூழ்குகிறான் ஐந்தாம் வகுப்பு கருப்பன். நாலாப்பக்கமும் தண்ணீர் தெறித்து சத்தம் எழுந்து நிசப்த்தமாகிறது. மூழ்கியவன் அதே இடத்தில் இருப்பதற்கான குறியீட்டு நீர்வளையம் எதுவும் அங்கு தெரியவில்லை. சலனமற்ற ஐந்து நிமிடங்கள் முடிவுக்கு வந்து நடுக்குளத்தில் எழுந்து "மாடசாமி' என்று கத்துகிறான் கருப்பன். இரண்டாம் வகுப்புக்குரிய உடலைக் கடைசிப்படியில் குப்புறக் கிடத்திக்கொண்டு கால்களைத் தண்ணீரில் நீட்டித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன். கத்தியழைத்த நேரம் மீன் ஒன்று கால் சிரங்கில் கடிக்கிறது. வலி பொறுக்காமல் பதறி உடலோடு விழுந்து மூழ்கி தண்ணீர் குடித்து மூச்சடைத்து தத்தளிக்கிறேன். இறுதி மூச்சு மூழ்கப்போகிற சமயம் தலையின் கொத்து முடி பிடியில் பிழைத்துக்கொள்கிறேன். முடி பிடியின் சொந்தக்காரர் யாரென்று பல வருடங்களாய் யோசித்துப் பார்த்துவிட்டேன். இந்த எண்பதிலா வரப்போகிறது. இப்போது உயிரோடு இருப்பானா கருப்பன்?'

"ஓ...ஓ...ஓ.... தாத்தா இங்க பாரு. சுவிட்சர்லாந்து சுவிஸ் பேங்க். இதுல பணம் கிணம் போட்டு வைச்சுட்டு சொல்லாமக் கொள்ளாமச் செத்துப் போயிடப் போற... '' பின்னால் திரும்பி மாடஷை உலுக்கிச் சிரித்தாள் ஜாய்.
தவளைக் குஞ்சுகளைப் பிடித்துவிட்டு கெண்டைக் குஞ்சுகளைப் பிடித்ததாய்த் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குழந்தைகளைப் போன்று சிரிக்க வைத்துவிட்டதாய்ப் பேத்திகள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாடஷ் உதடுகளை விரித்தார். பேத்திகளுக்கு அவர் சிரித்தாரா என்பதைக்கூட பார்க்க முடியாத உலக அவசரம்.

'மொட்டப்புள்ள, மாக்கான், விடிஞ்சான் சனியன், நான். நான்கு பேரும் சேர்ந்து தாமரை பறிக்க வலப்பக்கக் கரையில் நடந்தோம்.வயலுக்குத் தண்ணீர் பாய்கிற வடிகுழாய்க்கு அருகில் நெருங்கினோம். "அங்க பாரு... வானம்' என்று நீர்க்குமிழ்களைக் காட்டி 'ஒண்ணு.... ரெண்டு ... மூணு' என்று எண்ணினான் மாக்கான். "உடையாத வானத்தை யாரு அதிகமா எண்ணுறாங்களோ... அவுங்கதான் ஜெயிச்சவங்க... ஆனா நான் எண்ணுற பக்கம் எண்ணக்கூடாது. அந்தப் பக்கம் எண்ணுங்க...' என்று வேறு சொன்னான். "என்ன விளையாட்டு இது. யாரு கண்டுபிடிச்ச விளையாட்டு. விதியெல்லாம் யார் வகுத்தது' என்று கேட்பதற்குள் மொட்டப்புள்ள வேறு பக்க வானங்களை எண்ணுகிறான். விடிஞ்சான் சனியன் சுற்றிச்சுற்றிப் பார்த்தான். கருவை மரத்துக்கு அடியில் ஒரு சவுக்காரம் கிடந்தது. சவுக்காரங்கிற வார்த்தையை எவ்வளவு நாளைக்குப் பிறகு நினைக்கிறேன். அதை எடுத்து தண்ணீரில் கரைச்சான். ஏகப்பட்ட வானங்கள். 'என்னுடையதை யாராவது எண்ணினால் அவ்வளவுதான் ...' என்று மிரட்டினான். எனக்குப் பயங்கரக் கோபம். வானத்தைப் பிரதிபலிக்கும் நீர்க்குமிழ்களைத்தான் எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு அதிகம் நேரமாகிவிட்டது. என்ன செய்வது என்று யோசித்தேன்... என்ன செய்தேன் தெரியுமா? ஆ...ஆ...ஆ...ஆ...'

"எப்ப சொன்ன ஜோக்குக்கு எப்ப சிரிக்கிறாரு பாரு தாத்தா... ஜிஸô பிரமிடு எப்படித் தெரியுது பாரேன்... ''

' 'சொய்ங்'ன்னு இப்படியும் அப்படியுமா மூணு பேரோட குமிழ்கள் மேலயும் சிறுநீர் விட்டு, "ஒரு வானம், இரண்டு வானம்' என்று எண்ணத் தொடங்கினேன். கோபம் பொத்துக்கிட்டு மூணுபேரும் துரத்துகிறார்கள். 'அவுனுங்க' என்று சொல்வதா? அவர்கள் என்று சொல்வதா? களிமண் காய்ந்து சின்னச்சின்னக் கட்டிகளாக கிடக்கிற கரையில் வேகமாக ஓடமுடியாது. அப்படியும் ஓடுறேன். சரிவோரப் பகுதியில் கால் வைத்திருப்பேன்போல். சறுக்கிவிட்டது. குளத்தில் விழுவதற்குள் ஓரத்தில் இருந்த தென்னம்பிள்ளையைப் பிடித்து மேலே வந்தேன். கால் முட்டி தோல், கை முட்டி தோல் தேய்ந்து இரத்தம் கசியுது. மூணு பேரும் பயந்துவிட்டார்கள். "சின்ன வாத்தியார்ட்ட சொல்லிடாதடா' என்று கெஞ்சுகிறார்கள். நான் சொல்லமுடியுமா? சிறுநீர் விட்டதற்கு என்னைத்தான் வாத்தியார் அடிப்பார் என்று தெரியும். அதை அவன்களிடம் சொல்லவில்லை. செத்துக்கல் விளையாட வாங்க என்று அழைத்தேன். எப்போதும் கால்சட்டைப் பையில் மெலிதான சல்லி ஓடுகளைத் தயாராய் வைத்திருப்பேன். அங்க இங்க ஓடி மட்டி, ஓடு எடுத்து வந்தார்கள். மாக்கான் மட்டும் வரவில்லை. ஆடு ஓட்டப்போகணும் என்று போய்விட்டான். கீழே விழுவதுபோல சாய்ந்துகொண்டு மட்டியை வீசினான் மொட்டப்புள்ள. காத்து பலமாக இருந்தது. குளத்திலேயே விழவில்லை. விடாது சிரித்தோம். ஓட்டை எடுத்து ஓரளவு சாய்ந்து நின்று வீசினான் சனியன். மீன் கொத்த வந்த குருவியின் கால் பட்டு போவதுபோல செத்துக்கல் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் பட்டுப்போனது. ராஜாதி ராஜ, ராஜக் கம்பீர, ராஜக்குல திலக, ராஜ மார்த்தாண்ட, ராஜக் குலோத்துங்க, ராஜப் பராக்கிரம, தண்ணீர் பிரதேச மகாராஜா பராக்..பராக் பாவனையோடு வந்து எறிகிறேன். 'டொடங்..டொடங்...டொடங்..டொடங்... நாலு'. மொட்டப்புள்ள ஓட ஆரம்பித்துவிட்டான். பிடித்துவந்து பாதி தூரம் அவனையும், பாதி தூரம் சனியனையும் உப்புமூட்டை தூக்க வைத்தேன். தூக்க முடியாமல் கீழே போட்டுவிட்டு சமாளிப்பதற்காக வறுத்து ஊறவைத்த புளியங்கொட்டையைக் கால்சட்டை பையில் இருந்து எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான். எவ்வளவு புளியங்கொட்டை சாப்பிட்டிருக்கேன்? இதுவரை 'டொடங்'- ஐந்து வரை விட்டிருக்கேன். திரும்பத் திரும்ப 'டொடங்...டொடங்' என்று சொல்லவேண்டும் போல் ஆசையாய் இருக்கிறது. ஆறாவது 'டொடங்' விட்டால் எப்படி இருக்கும்? ஓடெடுத்துச் சும்மா இப்படி விடணும்?'

"ம்கும்.. எழுந்திருக்கவே மாட்டேன்... தள்ளாத தாத்தா... ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சி மேல நடக்கப் போறோம்...''

இருக்கையை இன்னும் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார் மாடஷ். கதை கேட்க இறால்கூட்டமும் வந்துவிடட்டும் என்பதுபோல சிறிது நேரம் மாடசாமி அமிழ்ந்து கிடந்தான்.

'நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம்தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்போம். சா... பூ...த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு 'கோட்டான்... கோட்டான்... ஏன் கோட்டான்' என்பது போல ஒரு பாட்டு பாடுவோம். இப்போது அந்தப் பாட்டு ஞாபகம் இல்லை. 'ஜூட்' என்று கத்தியதும் நடுவில் இருப்பவன் பிடிக்க வருவான். வட்டம் அப்படியே கலையும். நான் மட்டும் "கொட்டமிடும் கெலுத்தி... நொட்டம் சொல்லிப் போச்சு... கெட்டப் பையன் யாரு... கிட்ட வந்து கூறு...' என்று கிண்டலாய்ப் பாடுவேன். எல்லோரும் மூழ்கியபடியே குளத்தின் நாலு மூலைகளுக்கும் போவோம். மேல் மட்டத்திலேயே நீந்துகிறபோது வேகமாக நீந்துகிறவர்கள் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள். விரட்டி வருகிறபோது சிலபேர் பிடிப்பட போகிற சமயத்தில் கரையேறிவிடுவார்கள். அப்படி ஏறினால் தோற்றதாக அர்த்தம். கரையேறியவன் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கரையேறுகிறவன் அப்படியே வீட்டிற்குதான் ஓடியிருக்கிறான். மூழ்கியவர்கள் மறுகரை பகுதியில் அடர்ந்திருக்கிற வெங்காயத் தாமரை காட்டுக்குள் மறைந்துகொள்வார்கள். சிலர் வலப்பக்கக் கரையோரம் உள்ள தாமரைக்காட்டுக்குள் மூழ்கிக்கொள்வார்கள். வேகமாக மூழ்கிப்போகக்கூடிய சிலர் இங்கு அங்குமாக நீந்திப் போய்க்கொண்டே திறமை காட்டுவார்கள். எப்போதும் நான் படித்துறையை ஒட்டிய இடப்பக்கக் கரையில் விதைநெல் மூட்டைகள் ஊற வைக்கிற பகுதியில்தான் பதுங்குவேன். அன்றும் விதை மூட்டை பக்கம்போக எண்ணி மூழ்கிக்கொண்டே போனேன். எப்படித் திசை திரும்பியது என்றே தெரியவில்லை. படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த கீதா காலுக்கிடையே புகுந்திருக்கிறேன். எழுந்திருக்க முற்பட பாவாடையில் தலை சிக்கித் தடுமாறுகிறேன். சுளீர்சுளீரெனப் முதுகில் அடிக்கிறாள். நழுவி... வலியோடு அப்படியே மூழ்கி நடுக் குளத்தில் எழுந்திருக்கிறேன். பிடிப்பட்டு நான் கண்டுபிடிக்க வேண்டியவனாகிறேன். "நாய..நாய... நாய்க்குப் பிறந்த நாய... பொம்பள குளிக்கிறது தெரியல...' என்று திட்டிக்கொண்டே கரையேறிப் போகிறாள் கீதா. இப்போதும் சொல்வேன். திட்டமிடலோடு நான் அவள் காலுக்கிடையில் புகவே இல்லை.

உணர்ந்து என் உலகத்தில் மூழ்கத் தொடங்கிய காலம். என் உலகம் என்றுகூட சொல்லக் கூடாது. ஆக்கிரமித்து தனிச் சொத்தாக்கிக் கொள்வதுபோல் இருக்கிறது. வயலை விட்டால் ஊர் மக்களுக்கு ஒரே போக்கு குளம். தெருவுக்குள் நுழையும்போதும், தெருவுக்கு வெளியில் போகும்போதும் படித்துறையில் இறங்கி கால்களை நனைக்காமல் ஒருவரும் போனதாகத் தெரியவில்லை. எல்லோருக்குமான உலகமாகத்தான் அது இருந்தது. அதில் நான் சேற்றிலேயே கிடக்கிற கெளுத்தி மீன்போல அமிழ்ந்து மேய்ந்தேன் என்பதுதான் நியாயம்.

இடப்பக்க நடுக் கரையில் சிறிய வேப்பமரம் இருக்கும். அதற்கு நேரான சரிவில் இறங்கி காலில் அலைபட உட்கார்ந்து கொள்வேன். பொரி உருண்டையோ, நைஸ் ரொட்டியையோ வாங்கி வந்து பிய்த்துப் போடுவேன். காசில்லாத நேரத்தில் எனக்குத் தூக்கிப் போடப்படும் பழைய சாதம். கெண்டைக்குஞ்சுக்கூட்டம் கொசுகொசு என்று அதை மேயும். இடைவிடாமல் தொடர்ந்து போட்டுக்கொண்டே போனால் பாதிக் குளத்தை குஞ்சுகளே ஆக்கிரமித்திருப்பதுபோல தெரியும். அதைப் பார்த்து என்னுடைய நெஞ்சுப்பகுதி எங்கும் கொசகொசவென ஏதோவொரு உருவில் சந்தோஷம் மேய்வதுபோல தாங்கமுடியாத போதையில் தத்தளிப்பேன். இதைப் பார்த்து ஊரே என்னைக் கெண்டைக்குஞ்சு மேய்ப்பவன் என்று சொல்லும். தொட்டியில் சீன வாஸ்து மீன் வளர்க்கும் ஜாய் எனக்குப் புழு போடத் தெரியவில்லை என்று கோபப்படுகிறார்கள்? இங்கிருப்பதெல்லாம் ஒரு மீனா? மினுக்கிக்கிட்டு மேயுது.'

தேசாந்திரிகள் எங்கோ மடகாஸ்கர் தீவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
'ஏப்ரல் இறுதியில் குளிக்க முடியாதளவு குளம் வற்ற குத்தகைக்காரர் முடிந்தவரை மீன்கள் எல்லாவற்றையும் பிடித்து விற்றுவிடுவார். ஊர் கூட்டம் போட்டு மிச்ச மீன்களைப் பிடிக்க ஒரு நாள் குறிப்பார்கள். பெயர் வைக்கப்படாத ஒரு பண்டிகை நாள்போல் அன்று ஊர் அல்லோகலப்படும். இடுப்பில் துணிப் பையைச் சொருகிக்கொண்டு ஊரே குளத்தை உழப்பும். சேறாகவே மாறிவிடும் கால் முட்டியளவு தண்ணீர். யார் அழைப்புக் கொடுப்பார்களோ தெரியாது. வெளிநாட்டு பிரதம பறவைகள் எல்லாம் உள் நாட்டு பறவைகளோடு சேர்ந்து குளத்துக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். அசந்தர்ப்பத்தில் மீன்களைக் கொத்திப் போகும்.

மூங்கில் சிம்புகளால் கட்டப்பட்ட ஊத்தாவை கீழே அழுத்தும் சத்தம் தண்ணீரில் "சல்க்..சல்க்' என்று அங்கங்கே கேட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஆண்கள்தான் ஊத்தா போடுவார்கள். ஒரு கலையாக அவர்கள் அதைக் கையாண்டு பிடிப்பார்கள். "நல்லா கவனமா அழுத்திப் போடு... நழுவிப் போயிடப்போது... ' என்று மகன்களை அதட்டிக் கொண்டே வேறொரு பக்கம் 'சல்க்..சல்க்' என்று சொருகிப் போவார்கள். ஊத்தாவைச் சொருகிய பிறகு பிரிமனை போன்ற மேல்பகுதி வழியாக கையை உள்ளே நுழைப்பார்கள். கவனத்தின் மூலம் கண்களைக் கைகளுக்குக் கொண்டு வந்து தேடுவார்கள். மீன் இருந்தால் கைபட்ட உடனே என்ன மீன் என்று பழகியவர்களுக்குத் தெரிந்துவிடும். கெண்டையோ , கொரவையோ இருந்தால் சாதாரணமாகப் பிடித்து பைக்குள் போட்டுக் கொள்வார்கள். கெளுத்தியாக இருந்தால் கொட்டிவிடும். கடுக்கும். கெளுத்தியைவிட பயங்கரமானது தேளி. இது கொட்டினால் விஷக்கொட்டாய்க் கடுக்கும். அப்படிக் கொட்டிக் கடுத்தாலும்கூட கையை உதறிஉதறிக் கொண்டே மீன்பிடித்துவிட்டுத்தான் கரையேறுவார்கள் சிலர். சேற்றோடு கலந்துதான் கிடக்கும் கெளுத்தி. அதைக் கவனமாக வால் பக்கமாகப் பிடித்துப் போட்டுக்கொள்வார்கள். அப்படிப் போடுவதற்குள் பெரும் போராட்டமாக இருக்கும். பயங்கரமாகத் துள்ளும். நழுவி ஊத்தாக்குள்ளேயும் விழும். வெளியிலும் விழும். வெளியில் விழுந்தால் விட்டவெறியில் வேகவேகமாக அங்கேயும் இங்கேயுமாக ஓடிஓடி சொருகித் தேடிப் பார்ப்பார்கள். கெளுத்தியைப் போலவே ஆரா. இது சேற்றைவிட்டு வரவே வராது. இருப்பது தெரிந்துவிட்டால், இடுப்பில் ஓர் உலுக்கி வைத்திருப்பார்கள். தீட்டிய குடைக் கம்பிதான் உலுக்கி. அதை எடுத்து மீன் மீது சொருகி பைக்குள் போட்டுக் கொள்ளுவார்கள். வெயிலில் பை காய்ந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது சேற்றுத்தண்ணீரை எடுத்து ஊற்றி நனைத்துக் கொண்டே இருப்பார்கள். இடுப்பிலிருந்து பை உருவி விழுந்து சில நேரங்களில் மீன்கள் தப்பியும் போகும். சில பேர் சின்ன வலைகளைக் கொண்டும் பிடிப்பார்கள். அந்த இடங்களில் ஊத்தா போட மாட்டார்கள். அம்மா, பொண்ணு... அக்கா, தங்கைகள் என்று பெண்கள் சேர்ந்து புடவைகளை எடுத்து வந்து தண்ணீரில் அமிழ்த்தித் தூக்கிப் பிடிப்பார்கள். மீன் பிடிக்கிற எல்லோரின் கண்களும் விறாலைத் தேடிச் சப்புக்கொட்டிக்கொண்டே மற்ற மீன்களைப் பிடிக்கும். கிடைத்தவர்கள் ஒவ்வொருவராய் கூப்பிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நண்டு, இறால் மீது யாரும் பெரிதாய் கவனம் செலுத்துவதில்லை. தொழுவா என்று ஒரு மீன் இருக்கிறது. அந்த மீன் பிடித்தால் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். அதைச் சாப்பிடுவதில்லை. இரண்டு மூன்று மணிநேரத்தில் எல்லாப் பக்கமும் விழுந்துவிழுந்து பிடித்து கரை ஏறி சேறாய் வீடு வருகிறபோது எல்லோரின் கையிலும் ஒரு பையோ இரண்டு பையோ மீன் இருக்கும். அதைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டு சாம்பலை மீன் மேல் கொட்டி பெண்கள் அரிவாள்மனையால் ஆய்வார்கள். உயிரோடு இருக்கிற மீன்கள் சாம்பலோடு நழுவுவதும் பிடிபடுவதுமாய் இருக்கும். சிறுபிள்ளைகள் ஈர்க் குச்சியை எடுத்து நழுவுகிற மீன்களை எடுத்துக் குத்திப் பார்ப்பார்கள். விருந்துண்ண போகிற மகிழ்ச்சியில் ஆண்கள் பக்கத்தூருக்கு கள் குடிக்கப் போய் வருவார்கள். அதற்குள் சட்டியில் மீன் குழம்புகள் கொதிக்க ஆரம்பிக்கும். ஊர் முழுவதும் மீன் குழம்பின் வாசம் வீசிக் கொண்டிருக்க அன்று ஒரு நாள் மட்டும் நான் மீன் சாப்பிடுவதில்லை. யானை பெரிசு மீன்களை எல்லாம் வாங்கி இங்கே சமைக்கிறார்கள். சட்டி கொழும்புக்கும் கெண்டைக்குஞ்சு சுவைக்கும் ஈடாகுமா? சட்டிக்குழம்பைப் பற்றிச் சொன்னால் நம்மையைச் "சட்டி...சட்டி' என்று பேத்திகள் அழைக்கிறார்கள்.'

'வெயிலில் தண்ணீர் காய்ந்ததற்குப் பிறகான பத்து நாட்கள் குளம் குழந்தைகளுக்கான உலகம் மாறும். ஈரமான களிமண்ணை எடுத்து பதமாகத் தட்டி கார், பேருந்து என ஏகப்பட்ட வாகனங்கள் செய்துகொடுப்பார் பேருந்து அதிபர் ரமேஷ். எல்லோருக்கும் தயாரித்துக் கொடுப்பார் என்றும் சொல்ல முடியாது. மிகக் குறைந்தபட்சம் உமா பெயரைச் சம்பந்தமே இல்லாவிட்டாலும் அவரோடு பேசுகிறபோது அடிக்கடிச் சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் தாங்கள் கேட்ட விதவிதமான ஒலிகளை எழுப்பிக்கொண்டு பேருந்தாய் ஓடும் பிள்ளைகள். செல்லத்தைப் பொறுத்து ஐந்து பைசா, பத்து பைசா கட்டணத்தை வசூலித்துக் கொண்டு அம்மாக்களை ஏற்றிப் போவார்கள். விபத்தில்லாத போக்குவரத்தை எதிர்பார்க்க முடியாது. மிக அதிகபட்சம் பெண்கள் மீதே பேருந்து மோதும்.'

'மே மாத நடுப் பகுதியில் குளத்திலேயே கீற்றுக் கொட்டகையில் மேடை போட்டு இரவில் அரிச்சந்திரன் நாடகம் நடக்கும். சேத்தூர், மருதாந்தூர், கீழ மருதாந்தூர் எனப் பல கிராமங்களில் இருந்தும் டயரைக் கொளுத்திக் கொண்டு வயல்களின் குறுக்கே பாய் தலையணையோடு நடந்து வந்திருப்பார்கள். எட்டு மணிக்கு ஆரம்பிக்கிறேன் என்று ஒன்பது பத்து மணிவரை இழுத்துவிடுவார்கள். அதுவரை சீட்டாட்டம் அமர்க்களப்படும். வந்தது எல்லாம் தூங்கி தூங்கி விழ ஆரம்பிக்கும். பத்தரை மணி அளவில் ஆர்மோனியமும், தபேலாவும் அலறத் தொடங்கும். 'வந்தனம்...வந்தனம்... வந்தனம்; வந்த சனங்கெல்லாம் குந்தணும்; பாக்கெட்டல கை வுடணும்; பச்ச நோட்ட நீட்டணும்'நாலு வரியோடு பாட்டை நிறுத்தி, "இல்லாட்டி பக்கத்துல இருக்கிறவர் பாக்கெட்டல எடுத்தாவது நீட்டணும்' என்று பப்புன் அனுக்குரகம் கோமாளிச் சேஷ்டையோடு சொல்வார். தூக்கம் களைந்து எழுந்து உட்காரும் கூட்டம். அடுத்த பாட்டு. சந்தோஷ மெட்டில் உள்ளூரின் ஏக்கப் பாட்டு.
'பொம்மானூரு ரோட்டுல காரு போனாத் தேவல; மாயவரம் மராந்தூரு போயி வந்தா தேவல; அத்தை மகப் பேருல ; நான்; அனுக்குரகம் எழுதுல ; அதனாலதான்; இன்னும் காரு கீரு போகல. தர்ராபுர்ரா அண்ணாச்சி தம்பி கதை என்னாச்சி' ரகளையாக இருக்கும் பப்புன் வரும் பதினைந்து நிமிடங்கள். நாடகம் தொடங்கிய பிறகு இளமைக்கு அங்கு என்ன வேலை? வயதானவர்கள் மட்டும் உள்ளூர் நடிகர்களின் நடிப்புக் குறைகளைச் சொல்லிக் கொண்டே பார்ப்பார்கள். லோகிதாசியனைப் புதைப்பதற்கு பணமும், துணியும் , வாய்க்கரிசியும் கேட்டு சந்திரமதியை அரிச்சந்திரன் மிரட்டும் கட்டத்தில் சில பெண்கள் அழுவார்கள். நாடகம் பார்க்கிறபோதெல்லாம் சந்திரமதிக்காக அழுதுகொண்டே இருக்க முடியுமா? பீடியைப் பிடித்து தூங்குகிறவன் வாயில் வைப்பேன். கைலியைத் தூக்கி ரப்பர் பாம்புகளை உள்ளே போடுவேன். சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் ஆண் காலோடு பெண் காலை சணலால் பிணைத்து கட்டிவைப்பேன். கிழவி கால்களில் கட்டப்பட்டவன் பாடுதான் படு திண்டாட்டம். சாபத்தோடு கண்டதையும் குடிக்கச் சொல்லித் திட்டும் கிழவிகள். ஆமாம்... இப்போதுதான் ஞாபகம் வருகிறது. என்னைக்கூட ஒருத்தன் ஏமாற்றியிருக்கிறான். மேலானூரில் நடந்த நாடகத்திற்குப் போனதும் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறேன். சட்டைப் பையில் ஒரு கடிதம். "வேட்டைக்கு அரிச்சந்திரன் செல்லும் நேரம் பேங்க்புள்ள பம்புசெட்டு பக்கம் வரவும். காத்திருப்பேன் - புவனா'. பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதைப் போன்று கொஞ்சம் நாள்கள் நிம்மதியில்லாமல் அலைந்திருக்கிறேன். ஏமாற்றுவதற்காக நண்பர்கள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கவேண்டும். ஏனோ இதுவரையிலும் என் உள்மனம் அதை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது. ஒருவேளை புவனா கூப்பிட்டிருந்தால் என்பதாகத்தான் தோன்றுகிறது. அங்கேயே இருந்திருந்தால் அரிச்சந்திரனாக நடித்தாலும் நடித்திருப்பேன். நாடகங்கள் எல்லாம் இப்போது நடக்கின்றனவோ என்னவோ?'
"அழுதது போதும் ... இந்தியாவில் தாஜ்மஹால் பார்க்கப் போறோம். தமிழ்நாட்டுல உங்க ஊரு எதுன்னு சொல்லுங்க... முதல்ல அதைப் பார்ப்போம்...''

"மயிலாடுதுறை, ஆனந்ததாண்டவபுரம்னு... அடி''

மேல் கோணத்தில் ரயில் நிலையம் வந்தது. அறுபது வருடங்களுக்குப் பிறகு தண்டவாளத்தைக் கடக்கிறபோது சந்தோஷத்தில் கால்கள் வியர்த்தது. நகர்கிற பாதையில் தெரிகிற மாற்றங்களைக்கூட பார்க்கமுடியாமல் ஆனந்த வெட்கம் அவரை முடக்கியது. பேருந்து போக்குவரத்து இருப்பது போலத் தெரிந்து, "அனுக்குரகம் அவர் அத்தை மக பேருல எழுதிட்டாருப் போல... அதான் காரு கீரு போகுதோ...' என்று யோசனையில் சிரித்துக்கொண்டார்.

"நேரா போய்க்கிட்டே இருங்க''

"சொந்தவூர் தைரியத்தில் சத்தமா பேசாத தாத்தா''

வெட்டாறு தாண்டும்போது அவருக்கு உணர்ச்சி கரைபுரண்டது. படித்துறையில் மோதுகிற அலைச் சத்தமாய், "எவ்வளவு காலம் கழித்து வர்றேன்.. எவ்வளவு காலம் கழித்து வர்றேன்' என்று சொல்லிக்கொண்டார். தென்னாப்பிரிக்கா மண்டேலா பகுதித் தெருக்களில் போன சந்தோஷத்தைப் பேத்திகள் முகத்தில் இங்கு பார்க்க முடியவில்லை. பெரிய வளைவு ஒன்று தெரிகிறது. பொன்வாசநல்லூர் வரவேற்பு வளைவாக இருக்க வேண்டும். வளைவு நெருங்கியதும் அவருக்குள் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. புழுக்களை மீன்கள் கூடிக் கடித்துத் தின்பதுபோல வெட்கம் அவரைப் பிடுங்கித் தின்றது. பேத்திகளைத் திரும்பச் சொல்லலாமா? என்று யோசித்தார்.
'வேறு வழி தெரியல.. வேறு வழி தெரியல...மன்னிக்கவும்' என்ற அந்தக் கடிதத்தின் சாராம்ச வரிகள் தண்ணீர் குறைவாக இருக்கிறபோது பல்டி அடித்து மண்டை உடைய காரணமாயிருந்த கற்கள்போல ஞாபகத்துக்கு வந்து குத்துகின்றன. தூக்கிப் போட்ட இதே இடத்தில்தான் கடிதம் கிடந்திருக்குமா? "போதும் பொண்ணு' கடிதத்தைத் திரும்ப எடுத்துச் சென்று அவளிடமே கொடுத்திருப்பாளா?

'எவ்வளவு பெரிய அவமானம்? சுடுகாட்டிற்கு மாடு மேய்க்கப் போன பொண்ணு மறுகரை பக்கம் ஏன் போனான்னு கூட்டாளிகக்கூட எனக்காகக் கேட்கலையே? அப்ப நானே கூட கேட்கலதானே? தைரியமே இல்லாமதான் நின்னிருந்தேன். காட்டாமணிச்செடி கம்பு மாதிரி நான் இருந்துகிட்டு அந்தக் குண்டச்சிய அவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்து கெடுக்கப் போனேனாம். பொங்கலுக்கு வீட்டுக் கதவைக் கழுவறதுக்காக அதைக் கழற்றிக் கொண்டு வந்து படகுல போகுறதுபோல குளத்துல போனப்போதுதான் அந்த யோசனை வந்தது. அவளிடமும் சொன்னேன் . எதிர்பார்த்தது போல் சரி என்று சொன்னாள். மனித நடமாட்டமே இல்லாததுபோல் வயல்வெளி, காடுன்னு ஊர் முழுவதும் இருந்தாலும் நகரம்போல எங்கேயாவது ஒதுங்கி நின்னு பேசமுடியுமா? எத்தனையோ முறை குளத்தில் இறங்கி வெங்காயத் தாமரைக் காட்டுக்குள்ளேயே பதுங்கி நீந்திப் பேசியிருக்கிறோம். அதிகம் கண்கள் சிவக்கக் கூடாது என்பதற்காக கீழே மூழ்காமல் கழுத்துவரை மூழ்கியபடியே கிடப்போம். நீந்திக்கிட்டே ஒரு பொண்ணைக் கெடுக்க முடியுமான்னு தெரியில. முத்தம் கொடுத்திருக்கோம். "கோட்டான் கோட்டான்' விளையாட்டின்போது என் காலுக்கடியில் புகுந்தியே வேணும்னும்தானே அது' என்று அன்றைக்குக் கேட்டாள். அது ஏதோ இப்போது புகுந்து வா பார்க்கலாம் என்பதுபோன்ற கிளுகிளுப்பானக் குரலில் இருந்தது. 'நுழைஞ்சிப் போக முடியாதுன்னு நினைச்சிட்டியா' என்று மூழ்கப் போவதுபோல பாவனை காட்டிக் கொண்டிருந்தபோது, "தே...., ....., ...., ...., ....,' ஒரு கேடுகெட்ட வார்த்தையையும் மிச்சம் வைக்காமல், வைதபடியே வெறியோடு நாலைந்து கருங்கற்களை விட்டெறிந்து அடிக்கிறான் கீதாவின் தம்பி பாண்டி. மிரட்சியோடு மூழ்கிமூழ்கித் தப்பிக்கிறோம். நாலைந்து பேர் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே மூழ்கிப் போய்விடுமாறு கீதா எனக்குச் சைகை செய்துகொண்டே இருக்கிறாள். நான் போகவில்லை. "மேல ஏறிவாங்க.. இறங்குனேன் தொலைஞ்சிங்க...' கீதா சொந்தக்காரன் மாணிக்கம் மிரட்டுகிறார். நாலைந்து பேர் குளத்துக்குள் இறங்க வந்தார்கள். இதற்கு மேல இருந்தால் கூட்டம் கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று மேல ஏறினோம். கரையில் காலை வைத்த உடனே இரண்டு பேருக்கும் உதையும் அடியுமா மாறிமாறி விழுது. எப்படியோ கீதா அப்பாவுக்குத் தகவல் கிடைச்சு ஓடிவந்து அவ வயித்திலேயே ஏறி மிதிக்கிறார். அவள் அலறும்போதுகூட எனக்குப் பாவமாக இருந்தது. ஓடிப்போய் பாண்டி வெட்டருவா எடுத்து வந்து என்னை வெட்டத் துள்ளுறான். நாலைந்து பேர் அவனை மடக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். கப்பிக் கற்கள் ரோட்டில் சைக்கிளில் போய்க்கிட்டிருந்த நாட்டாமைக்காரர் கூச்சலைப் பார்த்து இறங்கி ஓடிவந்து விசாரிக்கத் தொடங்குறதுக்குள், ""என் பொண்ணைக் கெடுக்கப் பாத்தான் நாட்டாமை... என் பொண்ணைக் கெடுக்கப் பாத்தான் நாட்டாமை'' என்று கதறினார் கீதாவின் அப்பா. சோற்றைத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்த என் நாலாங்கால் சொந்தம் வெங்கடேசன் ஓடிவந்து, என் முகத்திலேயே காறித் துப்பி, "மானத்தை வாங்கிட்டியேடா... வீட்டுக்குள்ள கால வைச்ச.... செத்துடுவே.. அநாதை நாய ஊர விட்டு ஓடிப்போயிடு'' என்று கத்தினார். கீதாவிடம் பேசிவிட்டு வந்து நாட்டாமைக்காரர் "மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த பொண்ணைத் தூக்கிட்டு வந்திருக்கான்யா... இதுக்குத்தான் இந்தக் குளத்திலேயே கிடக்குறான்போல... பழகுனதுக்காக உன்ன உயிரோடு விடுறேன்... ஊர விட்டு ஓடிப்போயிடு... இல்ல வெட்டிப் புதைச்சுடுவேன். கேட்குறதுக்கு நாதி கிடையாது....' என்று சரமாரியாக அறைவிட்டார். எனக்கு அப்போது வேறு வழியே இல்லை.'
"இன்னும் எவ்வளவு தூரம் போகணும்... போரடிக்குது தாத்தா'' "பக்கத்துலதான்... எந்தத் தெருவுன்னுதான் தெரியல...இங்க நான் இருந்தப்ப இருபது வயசு. ஒரு தெருவுதான் இருந்தது... இந்தத் தெருவுல....போ... இல்ல... இது இல்ல ... கிழக்குத் தெரு பக்கமாகப் போ.... வேணா...வேணா ம்... மேற்குத் தெரு.... இதுவும் இல்லை.... நேராப் போ.... அந்தத் தெருவுலத் திரும்பு... போ... அதிலேயே... போ..... திரும்பு... அதுக்கிட்டப் போ... நிறுத்து... திரும்பு... அங்கேயே போ.... நிறுத்து...நிறுத்து...''

ஊர்ந்து போய்க்கொண்டிருந்த நத்தை மேல் சிறுவர்கள் கல்லைப்போட செத்துத் தெறிக்கும் தண்ணீர்போல, திடீரென அடுக்ககம் அதிர சத்தம்போட்டு மாடஷ் உடலெங்கும் நடுங்கக் கதறினார். அணை உடைந்ததுபோல வேகவேகமாய் வெந்நீர் வடித்தார். என்ன ஆனதென்றே தெரியாமல் மாடஷோடு சேர்ந்து பேத்திகளும் கதறுகிறார்கள்.

'அதே...அதே... இடம்தான். ஊரைவிட்டு வெளியேறுவதற்காக படித்துறை அருகில் வருகிறேன். என் பொண்ணையாட கெடுக்கப் பாத்த என்று எங்கேயோ போயிருந்த கீதாவின் அம்மா ஓடி வந்து செருப்பைக் கழற்றி என்னைச் சரமாரியாக அடிக்கிறாள். செருப்பில் ஊக்கைக் குத்தி போட்டிருப்பாள் போல. இடப்பக்க கீழ்புற இமைத் தோல் கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. உயிர்போவது போல தரையில் விழுந்து எழுந்து துடிக்கிறேன். தெருவே நின்று வேடிக்கை பார்க்கிறது.'

அதைவிட கனமான வலியை அங்கு எழுந்திருந்த பிரம்மாண்டக் கட்டடம் அவருக்குக் கொடுக்க, கதறிக்கொண்டே இருந்தார்.
நன்றி: வார்த்தை

Wednesday, December 3, 2008

என்னுடனே பிறக்கும் என் பிள்ளைகள்



தன்னையே தனங்களுக்குள் குழைத்தூட்டி
எனக்குள்ளே அம்மா தன்
உயிர்க்கோட்டை நீட்டி வரைந்தபோது
கண்விழிக்காத நாய்க்குட்டிகளைப் போல
உணர்ச்சி விழிக்காத
உடல் விழிக்காத
இதயம் விழிக்காத
என் பிள்ளைகள்
உதிரம் பருகி வெளுத்தன விதைப்பையிலிருந்தவாறே

பரிசோதிக்கப்படும் புதுக்குழாயாக
பொழுதெல்லாம் விழும் வேப்பம்பழங்களைப்போல
அடிக்கடி நான் வெளியேற்றிய
கழிவுகளை வெறுக்காது
அம்மா தூய்மையித்தது
பேரன், பேத்திகளதையும் சேர்த்து

பல்வண்ணப் பந்தொன்று
மைதானத்து மகிழ்வை ஒட்டியோடி வந்து
கபடமற்றதாயிருந்த
என் மென் பாதங்களில் பதுக்கினபோது
உள்வெளி நிழலின் நிழலில்
சுருள் பிரிந்து விரிந்த மைதானம்
முழுதும் நிரம்பிப் பிள்ளைகள்
என் பால்யத்தைப் பிரதியெடுத்து விளையாடின

குறுக்கிட்டு தலைகீறி
கடந்த காகம்போல
மேற்கில் மறையத் தொடங்கிட்ட
என் வளரிளம் பருவத்தென்னை வடுவரை
கணந்தோறும் இயங்கும் உன்னத பயிலகங்களில்
இடித்து அமர்ந்திருக்கும் வாரிசுகளுக்கு
தேர்ந்த ஆசிரியனாகிக் கற்பித்தன
என் வாழ்வின் நிரல்களிலிருந்து பிழிந்து கொண்ட உணர்ச்சிகள்

வெப்பவீர்யத்தால் வெளியேறி வீழ்ந்திறந்த
துருதுரு பிள்ளைகளைத் தவிர்த்திருந்தவர்களில்
தேர்ந்த ஒரு பிள்ளையின் நச்சரிப்பால்
இருபத்தெட்டு வருட இரவுகளைக் கடந்து
ஒரு பகலாகிப்போன நிசியில்
அவளகத்துக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தேன்
அறிவு விருத்திக்காக
அங்கு காத்திருந்த பிள்ளையொன்றை
என் பிள்ளை கவர்ந்து கலந்துலாவி
வெட்கத்தால் அப்படியே வெளிப்படாமல்
பத்துமாதங்களாய் எழுப்பிய வசதியான உருவத்துள்
கற்றவற்றை அவசியமாய் மறைத்து
அடிவயிற்றை உந்தி உதைத்து
தலைநீட்டுகிறது
எங்களைக் கடந்து
காலத்தைத் தொடர்ந்து போக...

நன்றி: புதுவிசை

Saturday, November 15, 2008

என் மகளின் புனித நதி


நிலையான முகவரியில் நில்லாது
என் ஒரு வயது மகள் பெருக்கும்
புனித உப்பு நதியில் மிதக்கிறதென் வீடு
சுழன்றடித்துப் போவதும்
சற்று வற்றித் தரை தட்டிக் கிடப்பதும்
பின்பு பெருக்கெடுத்துப் போவதும் அந்நதியின் விளையாட்டு
நீர் புகுந்தும் மூழ்காது
இழுத்துக் கிளம்புகையிலும் தரை
தட்டுகையிலும் குலுங்கி குதூகலிக்கும் வீட்டில்
தலையணை, படுக்கையிலிருந்து
பொருள்கள் எல்லாமே நதியின் நேசிப்புக்குரியவை
கரை தெரியாதளவு பிரவாகமெடுத்து
என் புத்தகங்களில் ஓடிக்கொண்டிருக்கும்
பல காட்டாறுகள்
எப்போதேனும் மகளின் நதியில்
சங்கமித்துப் புனிதம் பெறுகின்றன
உப்புப் பூத்த ஆடை
உப்பு மொய்த்த சுவாசத்துடன்
வெளியில் போவதற்கு
நான் கவலையுற்றதே இல்லை
பிரத்தியேகக் கவனத்துடனிருந்தாலும்
துள்ளித் தெறித்துவிடுகிற துளிகளின் கலப்
பால் சமையல் சுவை கரித்துப்போவதே இல்லை
முகம்சுளிக்காது காத்திருந்தால்
மிதந்து வரும் என் வீடு
என்றாவது ஒரு நாள்
உங்கள் வீட்டு வாசலில் தரை தட்டலாம்.
நன்றி: ஆனந்தவிகடன்

Friday, November 14, 2008

விரல் மிருகங்கள்


நிழல் மேல் விரையும் வெயிலாக
கள்வமிலாது கடந்து சென்றவை
என் பார்வைகள் என்பதை
உங்களுக்கெப்படிப் புரியவைப்பேன் தாயே...

சீவப்பட்ட குருத்துகளானாலும்
கள் வடியாதவை
என் சிரிப்புகள் என்பதை
உங்களுக்கெப்படி உணர்த்துவேன் தாயே...

இருபுற சிறகுகள் பிய்க்கப்படுகிற பறவையாய்
நீங்கள் துடித்து
மராப்பைத் துணைக்கு இழுத்தபோது
இரத்தணுக்களிலெல்லாம் அவமானம் சொருகிச்சொருகி
நான் கொலையுண்டேன் என்பதை
உங்களிடமெந்தக் காகம் சொல்லும் தாயே...

அழிப்பான்கள் எதனாலும் அழிக்கமுடியாத
நீங்கா நடுக்கத்தையே
நரை நுரைக்கும் பருவச்சுருக்கத்திலும் கொடுக்க
இடிபாடுகளின் அசந்தர்ப்பங்களில்
விரல்களிலிருந்து பாயும் கொடிய மிருகங்களிடமிருந்து
எங்கும்
உங்களையெப்படிக் காப்பேன் தாயே...

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, November 13, 2008


கொதிமழை
------------
காய்கறிகளோடு
மணதார
பழைய நினைவால்
கொதிக்கிறது
குழம்புச் சட்டியில் மழை.
நன்றி: உயிரோசை

தொட்டுக்கொள்ள...
----------------------
பண்டைய மனிதர்கள்
பண்டைக் காலத்தை
பழம் ஜாடியில்
ஊறுகாய்ப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நன்றி: உயிரோசை

Wednesday, November 12, 2008

மீதமிருக்கும் பத்து சொற்கள்
------------------------------------
அறிமுகித்த பத்து நிமிடங்களில்
இருவரும் சலித்து
அறுபது சொற்கள் உதிர்த்தனர்
அதில் பிடிபடலும் தப்பித்தலும்
பிடிபடலும் தப்பித்தலுமாய்
மறதிக்காட்டுக்குள் பூச்சிகளாகி மறைந்துவிட்டன
முப்பத்திரண்டு
ஞாபக வரிசையில்
ஊதாரிகளாய் நிற்கின்றன
பதினெட்டு
மீதமிருக்கும் பத்து சொற்களின்
கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு
வாக்கியங்களின் வழியே
வேக நடையில்
இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள்
இவன் அறியாத அவன் ஊருக்கும்
அவன் அறியாத இவன் ஊருக்கும்

நன்றி: உயிரோசை

Tuesday, November 11, 2008


தந்தைப்பால்
--------------
தளிர் விரல்களால்
குழந்தை வருடி
உடன் திகைத்துப் பின்வாங்குகிறது
சற்று நேரம் கழித்து
திரும்பவும் வந்து தடவி
ஏமாந்து வெறிக்கிறது
திரண்ட இரத்தங்கள் கட்டி
தகப்பனுக்கு
நெஞ்சு வலிக்கிறது.

Friday, October 10, 2008


கடந்து போதல்...
---------------------
பிஞ்சுச் சுவடுகளைக்
கவிதைகளாகப் பதிக்கும்
செல்ல மகள் ஆளுமை பற்றிக் கேட்க
நண்டின் கால்களால் எழுதி
கடற்கரை சொன்னது:
"கடலைக் கடந்ததே கவிதை'

காகிதக் கத்திக்கப்பலில் பயணித்து
அபாய எதிரலைகளில் உருக்கொள்ளும்
வெள்ளைத் தாள்களையெல்லாம்
கிழித்தெழுதி போவதைப்
பார்த்து கடல் சொன்னது:
"ஆகாயம் கடந்ததே கவிதை'

குளிர்ச்சியைப்போல் மழையை
வீட்டிற்குள் அழைத்து
வரமுடியாத கோபத்தில்
ஈசல் உதிர்த்துப் போன சிறகுகளால் பறந்து
வார்த்தைகளைப் பால்வீதியில்
தனித்தனிக் கிரகமாய் மிதக்கவிட
ஆகாயம் சொன்னது:
"சூரியனைக் கடந்ததே கவிதை'

Thursday, October 9, 2008

கவிதை

கற்பனையிடம் கையெழுத்து




வேர் விரித்து, கிளைத்து, பூத்து, காய்த்து, கனிந்த
அந்தக் கவிதை மரத்தை
ஆழ் யோசிப்புக் குழி பற்றுதலில் உயிர்க்கிறவாறே
பெயர்த்தெடுத்துக் காகிதத்தில் நிறையாய் நடமுடிவதில்லை
எனினும்
அதன் சல்லிவேர்கள்
முதல் சுனையாய் என்னை உறிஞ்ச முனைந்ததுமே
செல் சுவர்களால் வளர்ந்த
அதன் பாடுபொருளுக்கு நன்றி நவின்று விழா நடத்துவேன்
பட்டுப்போன பழைய களைப்புற்ற வார்த்தைகள்
கிளை மேடையிலேயே உறங்க
துருதுரு மிளாறு புனைவார்த்தைகள்
உற்சாகப் போதையில் கைதட்டி ஆரவாரிக்கும்
இந்த மரத்தில் இடம்பிடிக்க இயலாத
பழுத்தயிலை வார்த்தைகளை எல்லாம் திரட்டி
பாடுபொருளுக்கு நான் மாலையிடுவேன்
தலைகுனிந்தவாறே ஏற்கையிலது
முந்தைய பாடுபொருள்களில் எல்லாம்
வேடன் நிர்ப்பந்தித்து தரித்த
என் அக்கறை வலையில் அந்நியப்பட்டு
கிளைகளெதிலும் உட்காராமல் போன
ஒரு நிமிடம் நினைத்து வெட்கும்
அகன்று யோசிக்க நேரமளிக்காது
உச்சிப் பொருள்பூவிலிருந்து உருவிய
மகரந்தத் தலைப்பு விருதைக்
காற்றின் சிலிர்ப்பு உணர்ச்சியால்
கொடுத்து விழாவை முடிக்கையில்
என் கற்பனையிடம் கையெழுத்து வாங்க
வேறு சில பாடுபொருள்கள் முட்டிமோதும்.


த.அரவிந்தன்




Tuesday, September 23, 2008

கவிதை

பாரம்
-------

மிதித்தபடியே
இறக்கி வைக்கப்படும்
பலரின் பாரங்களால்
காய்ந்து கருகிவிடுகின்றன
மைதானத்துப் புற்கள்
.

த.அரவிந்தன்



வால்கள் வரையும் இதயம்

-----------------------------------
நீலக் குழைவுநுழைவுகளை
பார்வையில் பறக்கவிட்டு
நெருப்பாய் நெளிந்து
புளிய மரத்தோரம் நிற்பவள்
வருந்தி பார்க்கலானாள்
சேர்மையிலிருந்த இரு தும்பிகளை
பிடிபடலுக்கு நடுங்கி
வேகம் கூட்டி
கிளை மோதி
சுவர் மோதி
மின்கம்பி மோதி
அந்தரத்தில் புணர்ந்தவற்றின் சுற்றலில்
தொடர் ஓட்டங்கள் கிழித்து
காய்ந்திருந்த அவள் காயங்களின் வடுக்கள்
ரணமாகி இரத்தம் கொட்டின

கரும்பாறை அழுத்தலில்
மூச்சு திணறி
பெண்தும்பியின் முதுகெலும்புகள் முறிகிற
ஓசைகளின் பிரமை
காதுகளுள் குதிக்க
அவள் பிண்ட சராசரமும்
வேட்டுகளாய் வெடித்தன

பொறுக்கமாட்டாது
பிரித்துவிட
கல்லெடுத்து குறிபார்த்தவள்
தன் ஒப்புமை கயமைக்காக
அவளையே ஓங்கிஓங்கி இடித்துக்கொண்டு
பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கினாள்
தும்பிகளின் வால்கள் வளைந்து பிணைந்து
வரைந்திருந்த இதயப்பூர்வம் கண்டு.
த.அரவிந்தன்



Monday, August 25, 2008

சிறுகதை

இருட்டாழி
த. அரவிந்தன்
தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தருவின் நினைவுக்கு வந்த இடம் மெரினாவின் கண்ணகிச் சிலை பின்புறம். ஆழிப் பேரலையில் அதிகம் பேர் இறந்துபோயிருந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை. முழுதாய் ஒன்றை நம்புவது அவனுடைய முப்பது வயதில் இதுவே முதல். கடற்கரைக்கு அவன் வந்திருந்த நேரம் அமாவாசை நள்ளிருள்.

இருட்டின் ஆளுகையிலும் தனிமையின் மிரட்டலிலும் அரண்டு கிடந்தன எல்லாம். இரவில் அலையும் பறவைகள்கூட ஒன்றும் காணவில்லை. வேறுவழியின்றி கிடக்கின்ற கட்டுமரங்களும் நடுங்கிக் கிடப்பதுபோலவே கிடந்தன. பயத்தில் குழறுவதுபோல மிதமந்தமாய் கேட்டன இரவில் கேட்கும் சில ஒலிகள். குரைத்தவாறே ஒரு நாய் விரட்டத் தொடங்கியதும் துணை சேர்ந்து எல்லாம் நாய்களும் விரட்டுவதுபோல தொடர் பேரிரைச்சலுடன் கரை மோதி இருட்டை விரட்ட முயன்றன அலைகள். நரிகளின் ஊளையாய் அவ்வப்போது வந்து போனது உப்புக்காற்றின் சத்தம். வேறொரு சூழலாகயிருந்தால் இந்தக் கடலிருட்டில் தருவும் மிரண்டு போனாலும் போயிருப்பான். தற்கொலை செய்துகொள்ள வந்த அவனை எந்த இருட்டு மிரட்ட முடியும்? சுதந்திரமாக உணர்ந்தான்.

தடுப்பதற்கு ஒருவரும் இல்லாததுபோல உடலில் கிடைப்பதற்கும் ஒன்றுமில்லாமல் போனாலும் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். எதையும் விட்டுப்போவதில் அவனுக்கு விருப்பமில்லை. அலைகள் அரித்துக்கொண்டிருக்கும் கடைசிக் காலடிச் சுவடுகளில் நிற்கிற இப்போதுதான் இப்படி முடிவெடுக்கிறான் என்பதில்லை. எப்போதுமே அவன் அப்படித்தான். சுவடுகள் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. இறந்த உயிரை அடக்கம் செய்வதுபோன்ற அக்கறையே சுவடு பதித்தல் என்பான். கடற்கரையில் பதிந்திருக்கும் காலடிச் சுவடுகளைத்தான் ஒவ்வொருமுறையும் உதாரணம் காட்டுவான். "ஆசை, பொறாமை, சாபம், தூபம், தியாகம், ரௌத்ரம், உண்மை, பொய்மை, பழமை, புதுமை, சாதனை, சரித்திரம் என எல்லாவற்றின் சுவடுகளும்தான் பதிந்திருக்கின்றன. இதில் ஒரு சுவடேனும் நிலைத்திருக்கும்? அழிப்பின் இடைவெளி ஒன்றுக்கு ஒன்று தூரமாகுமே தவிர நிலைப்பு என்பது நிதர்சனம் இல்லை. எல்லாச் சுவடுகளையும் காலம் தின்று தீர்த்துவிடும்' என்பான்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணச் சாட்சிகள் எதையும்கூட விட்டு வைக்காமல்தான் வந்து நிற்கிறான். மனதைப் பாதிக்கிற அளவிலான பெரிய சம்பவங்கள் எதுவும் அவனுக்கு இங்கு வருவதற்கு முன்பு ஏற்பட்டதாய்த் தெரியவில்லை. வாழ்வின் புரிதலின்மை பற்றிதான் தரு எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பான். துயரச் சம்பவங்களின்போது அதிவேக இயந்திரமாய் புரிதலின்மையோடு மல்லு கட்டுவான். தனக்கு நல்லதாய் தெரிகிற ஒன்று எப்படிப் பிறருக்குத் தீயதாய் தெரிகிறது என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடிந்தது இல்லை. எல்லோரிடமும் ஒத்துப்போகுகிற ஒரு நோக்கு பிறிதொரு சமயத்தில் எப்படி மாறிப்போகிறது என்பதும் அவனுக்குப் புரியாத வியப்பு. "புரிதலின்மை.... புரிதலின்மை' என்று குழம்பிக் கிடந்தவன் காற்று வாங்க வருவதுபோல இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டான். புரி கொடுக்காத புத்தகத்தை மூடுவதுபோல வாழ்க்கையை முடித்துக் கொள்ள நிற்கிறான். திருட வருகிறவன் விடுகிற தடயமாய் தூரத்துத் தார்ச்சாலையில் நிற்கிறது அவன் வாகனம்.
கொள்ளிப்போட்டவன் வீடு திரும்புகையில் அழுகையோடு சவக்குழியைத் திரும்பிப் பார்ப்பதுபோல நின்ற இடத்திலிருந்தே வாகனத்தைத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் அது அநாதையாக நிற்பதுபோலப்பட்டது. ஒருவேளை தன்னுடைய உடல் கிடைக்காமல் போனால் எல்லோரும் வாகனத்தைச் சுற்றி நின்றுதான் மாரடித்து அழுவார்களோ? என்று நினைத்தான். தொடர்ந்து எத்தனை நாளைக்குத்தான் அவர்களால் அழ முடியும்? சுனாமியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோன போதுகூட கொஞ்சக் காலத்திற்குத்தானே எல்லாரும் மீன் சாப்பிடாமலிருந்தார்கள்? என்று பதில் சொல்லிக்கொண்டான். தூரத்துச் சாலைகளில் வெளிச்சப் புள்ளிகளாய்த் தெரிந்த மின் விளக்குகளைப் பார்த்தான். நடுங்கி ஒளிர்ந்தன. தான் பார்க்கும் கடைசி வெளிச்சங்கள் என்று சிலிர்த்தான். பெயர் தெரியாத ஒரு மரத்தின் இலைகளை எப்போதோ உருவியபோது அதற்கேற்பட்ட வலி இப்போது அவனுக்குப் புரிந்தது. எச்சிலையும் சளியையும் காறி காறி தரையில் துப்பியதெல்லாம் தன் மேலேயே விழுந்துகொண்டிருந்தெனப் புரிந்தது. காணும் கல், கட்டடங்கள் எல்லாம் தன்னுடையதெனப் புரிந்தது. வெறும் ஆறடிக் குழியில் புதைக்கப்படுவதில்லை. பேரண்டமெனும் பெருங்குழியில் புதைக்கப்படுகிறோம் எனப் புரிந்தது. இந்தப் புரிதல்களோடே இறந்துபோக நினைத்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் இதற்கு எதிர்மறையானப் புரிதல்கள் தோன்றலாம் என்று அவன் அனுபவம் சொன்னது. புரிதலின்மை என்பது புற்றுநோய். அழியாது...அழியாது... அழிக்கும் என்று திரும்பிக் கடலைப் பார்த்தவன் பேரதிர்ச்சியானான்.

இருட்டுக்கும் தனிமைக்கும் பயப்படாமல் இருந்தவனின் கண்களை அசுரவேகத்தில் தள்ளிக்கொண்டு உள்ளே இறங்கியது மிரட்சி. சவுக்குக்கட்டை ஒன்று நுழைந்துவிடுகிறளவு வாய் பிளந்தான். அடைப்புகளை உடைத்துக்கொண்டு சுரபிகள்தோறும் வியர்வை வெளியேறியது. வெளியிருட்டுகளை மிஞ்சுகிற பேயிருட்டு அவன் உடலுக்குள் புலர்ந்து உலுக்கியது. குருட்டு நிலையாய் உள்ளுறுப்புகள் தவித்தன. நுரையீரலின் நுழைவு துவாரம் அடைப்பட்டதுபோல நாடிகள் துடித்தன. நாய்களுக்கு நீந்த தெரியும் என்றாலும் அலைகளில் தூக்கிப் போட்டதும் கரை சேர்வதற்குள் பெரும் பதைப்பதைப்புடன் உயிருக்குப் போராடுவதுபோல வேகமாக இயங்கியது அவன் மூளை. வெளியில் கேட்காவிட்டாலும் அவன் உடலின் பேயிருட்டெங்கும் அலறல் சத்தம் கேட்டது.

"அய்யய்யோ... உள்வாங்கியிருக்கே... கடல் உள்வாங்கியிருக்கே... சுனாமியா இருக்குமோ... தனியா வந்து மாட்டிக்கிட்டேனே... அய்யய்யோ... நிக்கும்போதே எப்ப உள்வாங்குச்சுன்னே தெரியிலயே... ஒருவேள சுனாமியாவே இருந்தா...'} இடறிஇடறி உயிர்போகிற ஓட்டம் ஓடினான்.

நெடுகிலும் வரிசையாய் படுத்துக்கிடந்த பில்லியன் கணக்கான கருநாகங்கள் ஒரேசமயத்தில் பனைமரம் உயரத்திற்குத் தலைகளைத் தூக்கிச் சீறுவதுபோல... பல நாள் பசித்திருந்த லட்சக்கணக்கான கருஞ்சிறுத்தைகள் இரைகளைக் கண்டு கறி கிழிக்கும் நீண்ட நான்கு பற்கள் தெரிய வாய் பிளந்து நிற்பதுபோல... பாதியாய் உடைந்த கறுத்த வானம் தரை தட்டி, கரை பக்கம் சாய்ந்தால் எல்லாமே கடல் மட்டம் ஆகிவிடும் என்பது போல.... கோடானுகோடி கொடும் கொலைவெறிக் கோலமாய் திடீரென ஆழ் கரையில் கொந்தளித்தெழுந்தது ஆழிப் பேரலை." புஸ்...புஸ்...' எனப் பெரும் சத்தங்களோடும், வாய் பிளந்து நின்ற கருஞ்சிறுத்தைகளின் பாய்ச்சலோடும்... ஆழிப் பேரலை மேல் கரை நோக்கி யுத்தத்துக்கு வருவதுபோல பாய்ந்து வந்தது. பூமியே பெயர்ந்து நகர்வதுபோல மணல்வெளியெங்கும் பேரதிர்வு ஏற்பட்டது. மலைகள் உருள்கையில் நசுங்கிற சிறு செடிகொடிகள்போல, எதிர்படுவை மீது பேரலையின் பாய்ச்சல்தான் தெரிகிறது. திமிங்கலத்தின் வயிற்றில்போவதுபோல அவை என்ன ஆகின்றன என்றே புலப்படவில்லை.
தரைகளையும், கட்டுமரங்களையும் விழுங்கியவாறே வந்தது திரும்பித் திரும்பிப் பார்த்து ஓடிக் கொண்டிருந்த தருவின் மேல் பாய்ந்தது. முதலில் பேரலையின் சிறு முகடு மோதியது. காற்றாடி நூலில் சிக்கிய அண்டங்காக்கைபோல அந்தரத்தில் அவன் கை கால்களை உதறியது அரைநொடி நேரம் தெரிந்தது. அடுத்த நொடி சிறு முகடின் இடப்பக்கம் வந்த பேரலையின் உயர முகடு ஒன்று அவன் தலையைப் பிடித்து இழுத்தது. கருநாகங்கள் கொத்துவதுபோலிருந்தது பெரும் சுழற்சியின் பிறழ்சி. அலறுகிற சத்தம்கூட கேட்கவில்லை. இடைப்பட்ட பிறழ்சியில் பேரலையின் எந்த விலங்கு அவனை இழுத்து விழுங்கியது என்றே தெரியாமல் போனான்.
மேகத்தில் தெரிவதுபோல ஒவ்வொரு விலங்கின் உருவமாய்த் தெரிந்துகொண்டிருந்த பேரலை பல்லாயிரக்கணக்கான யானைகளின் கூட்டமாய் உருமாறி ஓடிவரத் தொடங்கியது. மதம்பிடித்த குணத்துடன் வேகம் கிடைத்த தூரம் வரை ஓடிவந்து கரையைக் கடலாக்குகிற வெறியுடன் பேரலை சுழன்றுசுழன்று தாக்குதல் தொடுத்தது. அடிபணிந்து கிடந்தவற்றை தும்பிக்கை அலைகளால் துவம்சம் செய்தது. போதுமானளவு சீரழித்து, சின்னாபின்னமாக்கி, நாசமாக்கிய பிறகு அதன் மதம் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பாகன்களுக்குக் கட்டுப்பட்ட யானைகள்போல அரை மணிநேரம் கழித்து அசைந்து அசைந்து வால்களை ஆட்டிக்கொண்டே ஆக்கிரமித்த கரையைவிட்டு திரும்பிப் போகத் தொடங்கியது. கடலாகிக் கிடந்தது வடிந்து வெள்ளக்காடாகி அதுவும் அலைஅலையாய் இறங்கியது.
வடிந்த பகுதிகள் பேரலை தாக்கப்பட்ட பொழுதைவிட அதிக மிரட்சியைக் கொடுக்கின்றன. எல்லாம் மாறின இயக்கமாய் இருக்கிறது. முன்பைவிட பூதாகரச் சத்தத்துடன் அலைகிறது காற்று. சுடுகாட்டு நாற்றம் வீசுகிறது. யுத்தத்தில் செத்துக் கிடக்கிற மனிதர்கள்போல உடைந்து சிதறிக்கிடக்கின்றன கட்டுமரத்துண்டுகள். எங்கிருந்து வந்தன என்றே தெரியாமல் சில விசித்திரப் பொருள்கள் இறைந்து கிடக்கின்றன. அரையடிக்கு அரையடி ஆமைக் குஞ்சுகள் நகர்கின்றன. நட்சத்திர மீன்கள் செத்துக்கிடக்கின்றன. நாலைந்து கடற்சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டே கரையிலிருந்து கடலுக்குப் போகின்றன . அய்யய்யோ அங்கே... பிண...ங்கள். மனிதப் பிணங்கள். குவியல்குவியலாய்... ஐம்பது ஐம்பது பேராகவோ, நூறுநூறு பேராகவோ ஒரே குழியில் புதைப்பதற்குக் கிடப்பதுபோல இருளில் தெரிந்த தூரத்துக்கும் கிடக்கிறார்கள். எல்லாருமே நிர்வாணமாகக் கிடக்கிறார்கள். பெண்களும் அதிகமாகக் கிடக்கிறார்கள். ஒதுங்கிக் கிடக்கிற மீன்கள்போல அங்கங்கே உடைந்த கைகளும், கால்களும், மார்பகங்களும், சதைகளும் வேறு கிடக்கின்றன. ஒத்தையில்தானே நின்றுகொண்டிருந்தான் தரு... எங்கிருந்து வந்தார்கள் இத்தனை பேர்? அய்யய்யோ... அந்தப் பிணக் குவியலில் ஒருத்தன் மட்டும் சட்டை அணிந்திருப்பது போலத் தெரிகிறான். அவன்தான் தருவா...தருவா... தருவா...? தருவே... தருவே... தருவே தான். பிணங்கள் மேலே கிடக்கும்போதும் அவன் கை ஒன்றில் மெல்லிய அசைவு தெரிகிறது. அய்யய்யோ.... அந்த அசைவு அவனிடமிருந்து மட்டும் வருவதாய் தெரிய இல்லை. வேறு சில குவியலிலும் யார்யாரோஅசைகிறார்கள். அப்படியானால் கிடப்பவர்கள் எல்லோருமே பிணங்கள் இல்லையா? மணலைக் கிளறிக்கொண்டு வருகிற நண்டுகளைப்போல மனித இடிபாடுகளிலிருந்து உருவிஉருவிக் கொண்டு சிலர் எழுந்திருக்கப் பார்க்கிறார்கள். உருவிக்கொள்கிறபோது சிலரின் உடலுறுப்புகள் பிய்ந்து கீழே விழுகின்றன.குப்புறக் கிடக்கிறவாறே உருவி வர தருவும் முயலுகிறான். மேலழுத்த கனத்தால் கைகளைத் தவிர வேறு எதையும் அசைக்க முடியாமல் தவிக்கிறான். அவன் உடலெங்கும் அவசரஅவசரமாய் உணர்ச்சி மேய்கிறது. முதுகில் பற்கள் பதித்தபடி ஒரு முகத்தை உணர்கிறான். கால்களில் மார்பெலும்பின் குத்தல்; உறுப்பு அறியாத முடிகளின் உராய்வுகளை உணர்கிறான். பாதத்தில் ஓர் ஆணுறுப்பை உணர்கிறான். கால் நகங்களில் கழுத்துச் சங்கு தென்படுகிறது. தலையில் ஒரு பிருட்டம் அழுத்துகிறது. மேய்ச்சலைப் பாதியிலே நிறுத்திக்கொண்டு சுளீர்சுளீரென அடிப்பதுபோல மேலும் அவனுக்குப் பயத்தை அதிகப்படுத்துகிறது உணர்ச்சி. அசைவை வேகப்படுத்துகிறான். மேலே கிடந்த உடல்கள் சரிந்து விழுகின்றன. அழுத்தம் குறைகிறது. மெல்லமெல்ல முழுதாய் உருவிக்கொள்கிறான். உறுப்புகள் எதுவும் பிய்ந்து போகவில்லை. ஆடைகள் தாறுமாறாய் கிழிந்திருக்கின்றன. மண்டை உடைந்து இரத்தம் கொட்டுவதை உணர்கிறான். மயக்கப் பூச்சிகள் கண்களில் பறக்க எழுந்தான். சிமிட்டிச்சிமிட்டிப் பார்த்தான். அடுத்தநொடி இரண்டு கடப்பாரைகள் கண்களில் இறங்குவதுபோல பெரும் சத்தத்துடன் அலறினான். மிரட்சி பேரலையாகி அவன் சிறுநீரகப் பையில் தாக்குதல் தொடுத்தது. இருவிழியால் அழுதான். ஒரு வழியால் ஒழுகினான்.
எழுந்தவர்களைப் போல எழாதவர்களும் அதிகம்பேர் இருக்கிறார்கள். கரையில் போட்ட மீன்கள் துள்ளித்துள்ளி உயிருக்குப் போராடுவதுபோல எழுந்த சிலர் எரிச்சல் தாங்க முடியாமல் ஊதியபடியே தங்களுக்குப் போனதற்கேற்ப கையுதறி, காலுதறி, உடலுதறி நிற்கிறார்கள். இரத்தம் கொட்டுவது அவர்கள் உதறுகையில் மேலே படுவதிதிலிருந்து தெரிகிறது. அங்கும் இங்கும் வேகவேகமாக ஓடிஓடி பலர் இறைந்து கிடக்கிற உறுப்புகளில் அவர்களுடைய உறுப்புகளைத் தேடுகிறார்கள். எடுக்கிறார்கள். இரவு அவர்களை வேண்டிய மேனிக்கு அலையவிடுகிறது. கை என்று எடுத்தது மரக்கட்டையாக இருக்கிறது. இழந்த விரல்கள், காதுகள் போன்ற சின்னச்சின்ன உறுப்புகளைத் தேடி எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். உறுப்பு கிடைத்தவர்கள் அதைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். கீழே வைத்துவிட்டு அதன் அருகிலேயே காவலிருக்கின்றனர். யாராவது அதை அவர்களுடையதாகக் கருதி எடுக்க வருகிறபோது எடுத்து வைத்திருப்பவர்கள் தங்கள் உறுப்புகளோடு பொருத்திக் காட்டுகிறார்கள். ஒன்றுமறியாததுபோல வந்துபோகத் தொடங்கியிருந்த அலையில் சில உறுப்புகள் அடித்துப் போவதும் ஒதுங்குவதுமாய் இருக்கின்றன. சிக்கியும் சிக்காமலும் அலைகழித்த அவற்றைப் பிடிக்க முடியாமல் விழுவதும் எழுவதுமாகச் சிலர் தவிக்கிறார்கள் . நகரக்கூட முடியாதவர்களுக்கும், பெண்களுக்கும் இயன்றவர்கள் உதவி செய்கிறார்கள். ஒவ்வோர் உறுப்புகளாய் எடுத்துவந்து "இதுவா..அதுவா' என்று காண்பிக்கிறார்கள். தன்னுடையது என்று பட்டதை வாங்கிக் கொள்கிறார்கள். கிடைக்காதவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்வையால் தேடி, "அதை எடுத்துவாங்க... இதை எடுத்து வாங்க' என்று காட்டுகிறார்கள். ஒழுகினச் சூட்டோடு ஒவ்வொருவரின் பயங்கரக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே தரு நொண்டி நொண்டி நடந்தான். அவன் உடலுள் அப்பியிருந்த பேயிருட்டு பாறாங்கல்லைப்போல கனமான ஒன்றாக மாறிப்போனது. பாறையிருட்டைச் சுமக்க முடியாமல் வேகமூச்சுவிட்டு அழுதான். பத்தொரு நொண்டலுக்குப் பின் அவனுடைய சத்தம் மட்டும் தனிமையில் கேட்பதாய் உணர்ந்தான். அதிர்ந்து அலறுவதை நிறுத்திக்கொண்டான். உறுப்புகளை இழந்தவர்களிடமிருந்து எரிச்சலுக்கு ஊதிக்கொள்வதைத் தவிர சிறு அலறல்கூட வராதது மட்டுமல்ல; அவனிடமிருந்து அவர்கள் முற்றிலும் வேறுபட்டிருப்பதாய் உணர்ந்தான். அது அவனுக்கு பேரலை தாக்கிய பொழுதைவிட அதிக நடுக்கத்தைக் கொடுத்தது."தனியாகத்தானே நின்றிருந்தேன்... இங்கிருக்கிறவர்களில் நான் மட்டுமே தனித்து இருக்கிறேன். நான் மட்டுமே ஆடை போட்டிருக்கிறேன். சாதாரணமாக மண்டை உடைந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பெரிதாய் இழப்பில்லை. இருமடங்காய் மும்மடங்காய் எல்லோரும் என்னைவிட ஊதிப்போயிருக்கிறார்கள். பல வருடத் தாடியோடு, தலைமுடியெல்லாம் கொட்டிப்போய் ஆண்கள் எல்லோரும் ஒன்றுபோலத் தோன்றுகிறார்கள் . சிலருக்கு நாலைந்து தலைமுடிகள் மட்டும் தாடிக்கு நிகராக நீண்டிருக்கிறது. நான் கடக்கிறபோது மட்டும் பெண்கள் கைகளினாலோ, உட்கார்ந்தோ, குப்புறப்படுத்தோ நிர்வாணத்தை மறைக்க முற்படுகிறார்கள். என்னிடம் மட்டும் அவர்கள் வெட்கப்படுவதற்கான காரணம் என்ன? உறுப்புகளைத் தேடுகிற உணர்ச்சி இருக்கிறது. உறுப்புகளை இழந்த வலியுணர்ச்சி எப்படி இல்லாமல் போகும்? யாரிடமாவது பேச வேண்டும். பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. தனியாகத்தானே நின்றிருந்தேன்... தனியாகத்தானே நின்றிருந்தேன்... ' அனிச்சையாய் அவன் நாடிகள்தோறும் ஒலித்து வலித்தன. உடைந்த மண்டையைத் தடவிக்கொண்டே மிரட்டாத முகமாய்த் தேடித் தூரத்துக்கும் நொண்டினான். இடையில் தட்டுப்பட்ட உறுப்புகளைத் தாண்டித்தாண்டித் தேடினான். உயிரோடு காணுகிற ஒன்றாகவே அவனுக்கு எதுவும் தெரியவில்லை.வதைத்துக்கொண்டு இடுப்பாலே நகர்ந்துநகர்ந்து எதிரில் ஒருவர் வந்தார். தோள்களில் இரண்டு கால்களை வைத்து கைகளால் பிடித்திருந்தார். தருவின் அருகில் வந்ததும் கால்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்கத்தில் இறக்கி வைத்தார். உடைந்த கால்களைத் தூக்குவதற்குப் பயந்து உதவாமலே மரண அழுகையை மீண்டும் தரு தொடங்கினான் . நகர்ந்து வந்தபோது பெருங் காயங்களில் மணல் பிறாண்டி பிறாண்டி , இரத்தம் கொட்டி வலி அவர் உயிரை நெறிக்கவேண்டும். கண்களை மூடி, முகத்தை இறுக்கி வலியை அடக்க முயன்றார் . கழுத்து நரம்புகள் புடைப்பது தெரியாதளவு தாடி மறைத்திருக்கிறது. தாங்கமுடியாமல் அப்படியே மணலில் சாய்ந்தார். பேசுவதற்கு வாய் அசைத்தார். செத்த ஓசைகளாகவே வெளிவந்தன. அவரின் எந்த ஓசையையும் அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் எல்லாவகையான ஒப்பாரிகளை வைத்தான் தரு. ""அய்யோ... இந்தக் கொடுமைய என்னால பாக்கவே முடியலயே... பாக்கவே முடியலயே... எப்டிய்யா உங்களாலயெல்லாம் தாங்க முடியுது... நகம் கீறுனாலே உசுருபோனாப்போல இருக்குமேய்யா... எப்டிய்யா உங்களாலயெல்லாம் தாங்க முடியுது... ஒருத்தரு கூட அழுவுறா மாதிரி தெரியிலயே... ஒத்தையிலதான நின்னுக்கிட்டிருந்தேன்.... எங்கிருந்து வந்து இத்தன பேரு மாட்டினிங்களோ.... தெரியலையே... '' சுழற்காற்று சங்குகோசையாக எழும்பி அவன் ஒப்பாரியை அழிப்பதும் விடுவதுமாக கடந்துசென்றுகொண்டிருந்தது. காலிழந்தவருக்கு நீண்ட ஒப்பாரி வெறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். படுத்தவாறே மணலை வாரி இரண்டு கைகளாலும் இறைத்தார். ஒப்பாரியை நிறுத்தி அவரைப் பேயதிர்ச்சியாய் பார்த்தான். இறைப்பதை நிறுத்தி அவனை அருகில் சைகையால்அழைத்தார். குனிந்து அவர் அருகில் உட்காரப்போனான். உடைந்த கையொன்றைத் தூக்கிக்கொண்டு குறுக்காக ஒருவர் ஓடினார். தூக்கியோடிய கையின் விரல்கள் தருவின் மேல் உராய்ந்தது. இதயத்தைப் பிடுங்கியதுபோல அப்படியே நின்றான். மீண்டும் அவனை அவர் அழைத்தார். இடுப்புக்கு அருகில் உட்காருவதற்குப் பயந்துகொண்டு அவருடைய தலைக்கு அருகில் போய் உட்கார்ந்தான்.

"அழு...ற நேர...மில்ல...இது...'' பாதி செத்தும்; பாதி பிழைத்தும் உயிர் போகிற தருணத்தில் வருவதுபோல மெதுவாக அவரிடமிருந்து வார்த்தைகள் வந்தன." கை, கால்....ன்னு கண்ட....கண்ட உறுப்....பெல்லாம் போனாலும் உசிரும் ஓரளவு உடம்பும் கிடைச்....சுதேங்குற சந்தோஷத்துல இருக்கோம் தம்பி... உங்க உதவி கொஞ்...''""கையும் காலுமாய்யா கண்டகண்ட உறுப்பு..?''. காலிழந்தவர் படுத்தபடியே முதுகைத் தூக்கி தரையில் இடித்துஇடித்து வலிபொறுத்தார். எரிச்சலுடன் காயங்களில் விடாமல் கொசுக்கள் கடிக்கவேண்டும். இரண்டு கைகளால் கால்பெயர்ந்த இடுப்பு பகுதிகளில் விசிறிக்கொண்டார்." உசரக் காப்பாத்திக்க நாங்க எவ்வளவு போராடியிரு....க்கோம்னு எங்களுக்குத்தானே தம்பி... தெரியும்... இங்க இருக்கிறதுல நீங்க மட்டும்தான் எங்க ஆளு இல்லை. ''""இந்த நிலையிலுமாய்யா... உங்க ஆளு... எங்க ஆளுன்னுட்டு...'' சிறிய கோபம் தருவுக்குள் எட்டிப்பார்த்துவிட்டுப் போனது.மூன்று பேர், ஒரு கை, கால், ஒரு காதைக் கொண்டு வந்து படுத்திருந்தவர் அருகில் வைத்துவிட்டு பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு வேறு யாருக்கோ தேடப் போனார்கள். இரண்டு பேர் நொண்டிப் போனார்கள். ஒருவர் ஊர்ந்தார்."தம்பி... ஒரு பெரிய அலையில அடித்துப் போனவங்க நாங்க...''""உங்கக் கூடத்தானய்யா... நானும் சுனாமியல தப்பிச்சிப் பேசிட்டு இருக்கேன்''""இந்த அலைய சொல்லல தம்பி... இதுக்கு முன்னாடி ஒரு பெரிய அலையில அடிச்சிட்டுப் போனவங்க நாங்க... நாள் கணக்கு... வருஷக் கணக்கு... பகல் கணக்கு... இரவு கணக்கு.. எல்லாம் தெரியில தம்பி. லைட் அவுஸ்ல பாதி இருக்கும்... ஒரு பெரிய அலை... இழுத்துட்டு போச்சு... அந்த அலையில இருந்து இப்பதான் படாதபாடு பட்டு நாங்கத் தப்பி வரமுடிஞ்சுது... இப்ப வந்த அலை நாங்க கரை சேருவதற்காக வந்த அலை... நாங்க சிக்குன அலையோட வாந்தி...''பேரலை தாக்குதலில் அவருக்கு மூளை குழப்பிவிட்டது என்று தரு நினைத்தான். இருவர் பேசுவதையும் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்போல பிருட்டப் பகுதியில் சதை பெயர்ந்திருந்த ஒருவரும், மணிக்கட்டோடு கை பெயர்ந்த ஒருவரும் அருகில் வந்து, படுத்திருந்தவரின் இடுப்புப் பக்கமாக நின்று ""அந்த அலையால எங்கள செரிக்க முடியவில்லை'' என்றனர். எல்லோருக்குமா மூளை குழம்பும்? அப்படிக் குழம்பினாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவாகப் பதில் சொல்வார்கள்?""முன்னாடி... லட்சம் பேர் செத்துப்போனாங்களே... அந்தச் சுனாமியிலா...?'' தடுமாறி தடுமாறி கேட்டான்.""சுனாமியோ... என்னவோ'' மூன்று பேரும் ஒரே சமயத்தில் பேசத்தொடங்கி, பிருட்டம் பெயர்ந்தவர் தொடர்ந்தார் ""எதுக்கு முன்னாடின்லாம் தெரியில... ஒரு பெரிய அலை... எங்களப் போல பல பேரை இழுத்துட்டுப் போச்சு... அவுங்க எல்லாம் என்ன ஆனாங்கன்னு தெரியல... நாங்க மட்டும் ஒரு குழுவா இருந்து தப்பிச்சிருக்கோம்... செத்த பொணம் மாதிரி உடம்பு ஊதி ஏதேதோ கடிச்சி... கை கால்ன்னு கண்டகண்ட உறுப்பெல்லாம் போனாலும் உசிரும் ஓரளவு உடம்பும் கிடைச்சதேங்குற சந்தோஷத்துல இப்ப இருக்கிறோம்..'' ""இப்ப பேசிக்கிட்டு இருக்கிற நேரமும் இல்லை... அவசரமாக உங்க உதவி எங்களுக்குத் தேவை...'' குறுக்கிட்டார் மணிக்கட்டு வரை பெயர்ந்தவர். இழந்த அவரவர் உறுப்புகளோடு வந்து அதிகம் பேர் கூடினர். பெண்கள் மறைந்து நின்று பார்த்தனர். சிலர் வலியில் கையுதறினார்கள். காலுதறினார்கள்.""நீங்க சொல்றது எனக்கு எதுவுமே புரியலை... குழப்பமாக இருக்கு... நம்பவே முடியாதபடி இருக்கு. சுனாமியில நான் தப்பிச்சதைவிட பெரிய அதிர்ச்சியா இருக்கு. கொஞ்ச நாளு தண்ணிக் குடிக்காம வீட்டுல இருந்தாலே மனுஷன் செத்துப் போயிடுறான்... நீங்க சொல்ற சுனாமி வந்து பல வருஷம் ஆகுது... இத்தன வருஷம் கடல்ல இவ்வளவு பேரு உயிரோடு இருந்திருக்கீங்கன்னு சொன்னா எப்படி நம்ப முடியும். எத்தனை கப்பல்... படகு போய்க்கிட்டு வருது... இவ்வளவு பேரு காணாம போயிருந்தீங்கன்னா எப்படித் தெரியுமா போகும்... உங்கச் சொந்தக்காரங்க எல்லாம் தேடியிருக்க மாட்டாங்களா... சுறாவோ... திமிங்கலமோ உங்கள கடிச்சித் தின்னிருக்காதா... அலையே அழுத்தி மூச்சை நிறுத்தியிருக்காதா.. உப்பு தண்ணியைக் குடிச்சே செத்து போயிருக்க மாட்டீங்களா... குளிர்ல உறைஞ்சு செத்துப் போயிருக்க மாட்டீங்களா... ஓராயிரம் வழியில செத்துப் போயிருப்பீங்க... அலை தாக்குனதுல உங்க எல்லோருக்கும் குழம்பியிருக்கு... அதான் கை போய் கால் போய் கூட வலிய காட்டாம வேற ஏதேதோ பேசுறீங்க...'' முழுதாய் எட்டிப் பார்த்த கோபத்தில் அவன் கத்தினான். இவன் சத்தத்தைக் கேட்டு தேடுவதை விட்டுவிட்டு வந்து படுத்திருந்தவனின் இடுப்புப் பக்கமாகவே எல்லோரும் ஒருசேர கூடி நின்று அவனைப் பார்த்திருந்தனர். முடியாத சிலர் படுத்துக் கொண்டனர். தனியாக மாட்டிக்கொண்டதைபோல பெரும் தவிப்பு தருவுக்கு ஏற்பட்டது. எல்லோரும் சேர்ந்து அடித்தே கொன்றுவிடுவார்களோ என்று பயந்தான். தலைப்பக்கம் ஓடிவிடலாமா என்று பார்த்தான்.

"இந்த உலகத்துல உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சா... புரியாததுன்னு ஒண்ணுமே இல்லையா?'' கூட்டத்திலிருந்து ஒரு பெண் வெளியில் வந்து அழுகிற குரலில் கேட்டாள். அவளுடைய மார்பகம் ஒன்று பெயர்ந்து போயிருந்தது. அடுத்தநொடியே வெட்கப்பட்டு கூட்டத்தில் கலந்து மறைந்துகொண்டாள்.

"புரியாதது' என்ற வார்த்தையைக் கேட்டதுமே தரு நிலைகுலைந்து போனான். பெரிதாய் குழம்பினான். சந்தேகக் கேள்விகள் எல்லாம் மறைந்துபோனது. கோபப்பட்டுவிட்டதற்காக அவனுடைய பாவப்படுகிற குணம் அவமானத்தில் குறுகியது. கைகளை இழந்த ஒரு பெண் நிர்வாணத்தைப் பற்றி கவலைப்படாமல் கூட்டத்தைவிட்டு வெளியில் வந்து முதல்முறையாகச் சத்தம்போட்டு அழுதபடியே சொன்னாள்.

"இந்த நிலைமையில பொய் யாராவது சொல்லுவாங்களா... எங்களாள தாங்க முடியல... உதவி செய்யுங்க... இங்க இருக்கிற கூட்டத்தை வைச்சு பாக்குறப்ப... இந்த இருட்டுல நீங்க ஒருத்தர் மட்டுமே பீச்ல நின்னிருந்திருக்கீங்க... நாங்க எல்லாம் பெரிய அலையோட வாந்தியிலிருந்து வந்து விழுந்தவங்க என்பதற்கு இது ஒண்ணு மட்டுமே போதும்... உங்கக்கூட நின்னவங்க யாராவது இங்க நிக்கிறாங்களாப் பாருங்க... இதையும் நம்பாம வேற எங்கிருந்தாவது அடிச்சிக்கிட்டு வந்து விழுந்திருப்போம்னு எங்க ஊதின உடம்பைப் பார்த்து விதண்டா வாதம் பேசினீங்கனா எங்களால ஒண்ணுமே செய்யமுடியாது... கருணை பண்ணுங்க... கருணை பண்ணுங்க....'' ""உதவி செய்யுங்க..''""உதவி செய்யுங்க...''""தயவு பண்ணுங்க...'' எல்லோரும் இரக்கமாய் கெஞ்சினார்கள். அந்தக் குரல்கள் அவன் உயிரை உலுக்கியது.
""என்ன செய்யணும்... முடிஞ்சவங்க முதல்ல ஆஸ்பத்திரிக்குப் போகலாவோம் வாங்க...''""எங்க ஆளுங்க ஒவ்வொருத்தரா மயக்கம் தெளிஞ்சுக்கிட்டு இருக்காங்க... எல்லோருடைய உழைப்பும் தேவைப்பட்டிருக்கிறது நாங்க உயிர்பிழைக்கிறதுக்கு... அதனால அவுங்கள்ல ஒருத்தர்கூட எழுந்திருக்காம நாங்க எங்கேயும் வரமாட்டோம். நிர்வாணம் எங்களுக்குள்ளேயே பழகிப் போய்விட்டது. அடுத்தவரைப் பார்க்கிறபோதுதான் வெட்கமாக இருக்கிறது. நீங்க ஆண்தான் என்றாலும் உங்களோடு பேசுகிறபோதுகூட கொஞ்சம் வெட்கப்பட்டுக்கிட்டுத்தான் பேசுகிறேன். பெரிய அலையை சுனாமிங்கிறீங்களே... அதிலிருந்து நாங்க மீண்டு வந்ததை நீங்க வியப்பா பார்ப்பதுபோல எங்களுக்கு நாங்களே வியப்பாகப் பார்த்துக் கொள்கிற ஒரு விஷயம் ஒரு சிலவற்றைத் தவிர பலவற்றை எப்படி மறந்துவிட்டோம் என்பதுதான். பெரிய அலையில் அடித்துபோனதுபோல சில விஷயங்கள் மட்டுமே எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. எங்கள் குடும்பங்கள்... உறவினர்கள் எல்லாம் யார் என்றே எங்களுக்கு ஞாபகம் இல்லை. எங்களைக் கண்டறிந்து உறவினர்களே ஏற்றுக்கொண்டால்தான் உண்டு. இந்த நிலையில் எங்களை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. போகப் போக உறவினர்களின் நினைவு எங்களுக்கு வருமா என்றும் தெரியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள். ஒருவேளை எல்லாருமே மயக்கம் தெளிந்துவிட்டாலும் எங்கள் எல்லோராலும் நிர்வாணத்தோடு வெளியில் வரமுடியாது. ஆண்கள் வந்தாலும் பெண்கள் வரமாட்டார்கள். அப்படியே நாங்கள் வெளிவந்தாலும் வழி தெரியாமல் போய் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்துபோய் விடுவோமோ என்கிற பயம் இருக்கிறது. அப்படி ஒருவேளை பிரிந்துவிட்டால் எங்களின் பயங்கரக் கோலத்தைப் பார்த்து பயந்து போய் மக்கள் எங்களை அடித்தே கொன்றுவிடுவார்களோ என்கிற பயமும் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடைகள் தேவை. ஒரு நப்பாசையில் இழுந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து வைத்திருக்கோம். உடனே சிகிச்சை செய்து இதையெல்லாம் முடிந்தவரை பொருத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். எங்களை எல்லோரும் மருத்துவனையில் சேர்க்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் ஒருவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும் எழுநூறு பேருக்கும் மேலே நாங்கள் இருக்கிறோம். மக்களைத் திரட்டிக் கொண்டு ஆடையை வாங்கி வாருங்கள்... மருத்துவமனையில் சேருங்கள்... உதவியாக இருக்கும்... பெரிய அலையில கஷ்டப்பட்டு தப்பிச்சி இங்கு வந்து செத்துடப் போறோம்... உதவி செய்யுங்க...'' இரண்டு கால்களை இழந்திருந்தவன் படுத்தபடியே சொல்லிச் சத்தம்போட்டு கதறத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து எல்லோருமே அழத்தொடங்கினர். அதற்குமேல் தருவால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை.""அழைச்சிட்டு வரேன்'' - ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு இருட்டைத் தள்ளிக்கொண்டு மணலில் நொண்டிநொண்டி ஓடினான். கடற்கரையை ஒட்டிய சாந்தோம் குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியிருப்போரை எழுப்பினால் போதும் என்று நினைத்தான். சுனாமியில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் உதவுவார்கள் என்று அவன் உள்மனம் சொன்னது. இங்கே இருப்பவர்களில் அவர்களது சொந்தகள்கூட யாராவது இருக்கலாம் என்று ஓடினான். திடீரென அவனது இரண்டு சக்கர வாகனம் ஞாபகம் வந்தது. அது இருக்கிறதோ இல்லையோ எனத் திரும்பிப் பார்த்தான். நின்றுகொண்டிருந்தது. வந்தது உண்மையில் சுனாமி இல்லை போலிருக்கிறது. அவர்கள் சொல்கிறபடி இது பழைய சுனாமியின் வாந்தியாகத்தான் இருக்கவேண்டும். சுனாமியாக இருந்தால் வண்டியும் இருக்க முடியாது. நாமும் தப்பித்திருக்க முடியாது. வாகனத்தை எடுத்துச் சென்றால் விரைவாக மக்களை அழைத்து வந்துவிடலாம் என்று திரும்பி வாகனத்தை எடுக்க ஓடினான். மக்களை அழைத்து வருவான் என்கிற நம்பிக்கையில் மீண்டும் கலைந்து உறுப்புகளைத் தேடித் தொடங்கியவர்கள் அந்தந்த இடத்தில் நின்றவாறே அவனைத் திகைத்துப் பார்த்தனர். வண்டி எடுத்துப் போவதாகச் சைகையிலேயே காட்டினான். மூச்சிரைக்க ஓடி வண்டியை அடைந்தான். அலை அதிர்வில் வண்டி ஓட்டாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு சந்தேகம் வந்தது. பதற்றத்தில் தவறிதவறி உதைத்தான். வண்டியை இயங்கியது. மேடு ஏறி முக்கிய சாலை வழியாகப் போனால் ஒருத்தர் இரண்டு பேர்தான் கிடைப்பார்கள். பெரும் மக்கள் தேவை. இந்தக் கடற்கரை சாலை வழியாகச் செல்வதே சரி. வேகக்காற்றில் உடைந்த மண்டை பகுதிகள் சில்லிட்டு எரிந்தது. பாரதிதாசன் சிலை பின்புறம் போகிறபோது இருட்டில் பெரிய கல் இருப்பது தெரியாமல் அதில் ஏற்றி தடுமாறி விழுகிற நேரத்தில் சமாளித்து விரைந்தான். காந்தி சிலை பின்புறப் பகுதியில் விரைகிறபோது கடற்கரையைத் திரும்பிப் பார்த்தான். சுனாமி வந்ததற்கான அறிகுறியோ மனித குவியலோ இல்லாததைக் கண்டு அவர்கள் சொன்னது உண்மை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். சுனாமியாக இருந்தால் கடற்கரையிலேகூட குறிப்பிட்ட இடத்தை மட்டும்தான் தாக்குமா? அதுவும் நான் நிற்கிற கண்ணகிச் சிலை பின்புறம் மட்டும்தான் தாக்குமா? வந்தது அவர்கள் தப்பித்து வருவதற்கான அலைதான். கடற்கரையையொட்டி வீடுகள் இருக்கிற சாந்தோம் திருப்பத்தில் போகத் தொடங்கியபோதே நாய்கள் விரட்டுவதும் விடுவதுமாக இருந்தது. தெரு விளக்குகள்கூட எரியாமல் இருட்டாகக் கிடந்தது. கொஞ்சம் தூரம் வந்தபோது பிய்ந்து பறந்த அவனது காலாடையின் துணியைப் பிடித்து இழத்தது விரட்டி வந்த ஒரு நாய். நிலைதடுமாறி விழப்போகிற நேரத்தில் திடீரென வண்டியை நிறுத்தினான். நாய்கள் சிதறி ஓடியது. அப்படியே ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மக்களை எழுப்பலாம் என்று பார்த்தான். எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். யாரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் முழித்தான். நாய்கள் விடாது குறைத்துக் கொண்டே இருந்தன. "உதவிக்கு வாங்க... உதவிக்கு வாங்க... சுனாமியில அடிச்சிட்டுப் போனவங்க தப்பிச்சி வந்திருக்காங்க... உதவிக்கு வாங்க...' என்று சத்தம் போட்டு கத்த நினைத்தவன் யாராவது ஒருத்தரை எழுப்பினால் அவர் எல்லோரையும் அழைத்து வந்துவிடுவார். தெரியாத இடத்தில், அதுவும் இந்த இருட்டில் ஒவ்வொருவராக கூப்பிடமுடியும் என்று ஒரு குடிசை வீட்டின் கதவைத் தட்டினான். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே மின் விளக்கு எரிந்தது. கொட்டாவி விட்டிபடியே கதவைத் திறந்து, கைகளைச் சொறிந்துகொண்டே, ""யாரது'' என்றாள் அந்தக் குடிசைப் பெண். அவளுக்கு நாற்பது வயதிருக்கும். ""சுனாமியில...'' என்று தரு ஆரம்பிப்பதற்குள்.... ""சுனாமி... சுனாமி...'' என்று அங்கிருந்த பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் இடிந்துவிழுகிறளவு சத்தம் எழுப்பிப்படியே அவனைக் கடந்து ஓடினாள். அவள் "யாரது' என்று கேட்கிறபோதே சுவரில் ஒரு புகைப்படத்திற்கு மாலை போட்டிருப்பதை தரு கவனித்தான். ஒருவேளை சுனாமியில் தப்பி வந்தவர்களில் யாராவது ஒருவர் இந்தப் புகைப்படத்தில் உள்ளவராக இருப்பாரோ என்று குடிசைக்குள் குனிந்து நுழைந்து பார்த்தான். கூடவே அவனும் ஓடி வராமல் வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டு சுனாமி சத்தத்தை விட்டுவிட்டு, ""திருடன்... திருடன்...திருடன்... திருடன்'' என அடுக்குமாடிகளை இடித்தாள் அவள். நாலாப் புறத்திலிருந்தும் ஆட்கள் ஓடிவரும் சத்தம் "திபுதிபு'வெனக் கேட்டது. புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு எந்தத் தாடிக்காரர்களோடும் அது ஒத்துப்போகவில்லை. பதற்றத்துடன் வெளியில் வர குனிந்தான். கட்டைகள், கற்கள், இரும்புக் கம்பிகள் எல்லாம் சேர்ந்து இறங்கி அவன் உடல் முழுவதும் சல்லடை ஓட்டைகள் போட முயற்சித்தன. ""அய்யோ....அய்யோ...'' என்று அலறியபடியே கீழே விழுந்தான். அவன் அலறஅலற வாயிலேயே உதை விழுந்தது. ""விடுங்கப்பா... செத்துடப்போகுது கசமாளம்'' கூட்டத்தில் ஒருவன் குரல்கொடுத்தான். அவரவர் கைகள் வலிக்கத் தொடங்கிய பிறகு ஓய்ந்தனர். குற்றுயிராய் வெறியோடு நின்றிருந்தவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டபடியே ""சுனாமி..சுனாமி...'' என்றான். ""ஒம்மாள... நடிச்சின பேத்துருவேன்...'' என்று முகத்தில் ஒரு குத்துவிட்டு வயித்தில் இரண்டு உதைவிட்டான் புதிதாக வந்தவன். ""ஓத்தா... ஆம்பள இல்லாத வூடுன்னு க்ரெக்டா தெரிஞ்சுகினு வந்துருக்கான்...''""இல்ல மாமூ... இவன் கணக்கு என்னாமோ திர்ட வந்தா மாதிரி இல்ல... முனியம்மா தனியா இருக்கேன்னுட்டு கணக்கு பண்ணிட்டு வந்திருப்பான் நினைக்கிறேன் மாமூ...''""நம்ம குப்பத்துலியே கை வைக்க வந்திருக்கான்னா... என்ன தில்லு இருக்கும் மாமூ இவனுக்கு...''""சாவு கிராக்கி மாதிரி உங்காந்திருக்கு பாரேன்...''""கல்லைக் கட்டி கடல்ல போட்ருவோமா மாமூ... திருட்டு கசமாளத்த மீன் சாப்பிட்டு போட்டும்...''வலையில் ஏதோ புதிதாக அகப்பட்டதைப் பார்ப்பது சிறுவர் கூட்டத்தின் இடுக்குகளில் நுழைந்து தருவைப் பார்த்தார்கள். அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. கொஞ்சம் திடம்பெற்று, "சுனாமியல ... சுனாமியில தப்பிச்சவங்க...' என்று தரு சொல்லத் தொடங்கினான். ""ஓத்தா கத்துனா செத்துடு... இப்படியே போட்டுவேன்'' என்று மீன்வெட்டுற கத்தியை ஒருவன் தூக்கிக் காட்டினான்.""வெளியூர்ல பயலா இருப்பான் போலிருக்குப்பா... ஏரியா தெரியாம நுழைஞ்சிட்டான் விரட்டி விட்டுடுங்ப்பா...''""ஓத்தா வந்துட்டாருடா டூப்புக்கு... ஒம்மாள திருட வந்திருக்கான்... முனியம்மா வூட்ட கதவ தட்டி நுழைஞ்சிருக்கான்... போன மாசம் கண்ணம்மா வூட்டு கதக்கூட இவதான் தட்டிருப்பான்னு நினைக்கிறேன்...''""சுனாமியல தப்பிச்சவங்க அங்க இருக்காங்க...'' திறன் முழுவதையும் திரட்டி செத்தாலும் பரவாயில்லை என்று கத்தினான் .""கதவைத் திறந்தப்பக்கூட, சுனாமி...சுனாமின்னுதான் கத்துனான். நான் ஏதோ உண்மையாகவே சுனாமிதான் வந்துட்டுன்னு நினைச்சுக்கிட்டு ஓடுறேன். இவன் நைசா வீட்டுக்குள்ள நுழையறான்'' மிரட்சி மறைத்த சிரிப்புடன் முனியம்மா சொன்னாள்."சுனாமியல தப்பிச்சவங்க கண்ணகிச் சிலை பின்புறம் இருக்காங்க... நீங்க வேணா அங்க வந்து பாருங்க...''""எந்தச் சுனாமியில...''""பல வருஷத்துக்கு முந்தி ஒரு சுனாமி வந்துச்சுல... அந்தச் சுனாமியில...''""மாமூ... பய லூசு போலிருக்கு....''. எல்லோரும் சிரித்தனர்.""அவுங்கள நீ பாத்தியா...'' கேலிக்காகவே ஒருவன் கேட்டான்."அவுங்க தப்பிச்ச வந்த வாந்தி அலையில நானும் மாட்டிக் கிட்டேன். என் மண்டைகூட உடைஞ்சிடுச்சி....'' வயிறு குலுங்ககுலுங்க எல்லோரும் சிரித்தனர்.""சிரிக்காதீங்கய்யா... என்கூட வந்து பாருங்க... அம்மா... நீங்களாவது சொல்லுங்கம்மா... வந்து பாருங்கய்யா...'' என்று தரு அழுதான். ""போடான்னா...'' என்று அவனை எல்லோரும் எட்டி உதைத்து விரட்டினர். ""எங் கூட ஒருத்தராவது வந்து பாருங்கய்யா... ஒருத்தராவது வந்து பாருங்கய்யா... நான்கூட முதல் நம்புள... வந்து பாருங்கய்ய்யா...'' என்று கதறினான். ""ஓத்தா போடான்னா...'' என்று மீனவெட்டுகிற கத்தியால் படார் என முதுகில் விழுந்தது. ""அம்மா'' தொண்டை வெடிக்க... வயிறு கிழிய அலறினான். அது அவனுடைய கடைசியை ஓசைப் போலக் கேட்டது. ""பாவம்... விடுங்கடா... செத்துடப்போறான்...'' ஒரு வயதான கிழவி சொன்னாள். கொஞ்சம் நேரம் அழுது புரண்டவன், எழுந்து வண்டியை எடுக்கப் போனான். ""டேய்... வண்டி யாரதுடா...'' "" வண்டி... யாரதுடா... யாரதுடா...'' எல்லோரும் சத்தம் எழுப்பினர். பேசவதற்குத் திராணியற்று மயங்கி விழுகிற கண்களோடு கூட்டத்தினரிடையே தரு சாவியைக் காட்டினான். நழுவிநழுவி சாவியைப் போட்டான். எப்படியோ உதைத்து வண்டியை இயக்கினான். கடைசியாய் ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்று, ""எங்கூட யாராவது ஒருத்தர் அங்க வந்து பாருங்கய்யா... எழுநூறு பேரு சுனாமியில இருந்து தப்பிச்சி வந்திருக்காங்க...'' ""போனாப் போகுதுன்னு கொல்லாம விட்டிருக்கோம் போடான்னா...''வேகமாக வண்டியை இயக்கினான்.""ஓத்தா... பைத்திங்கல்லாம் இப்ப வண்டில கூட வருது...'' என்று ஒரு சொன்னான். கலைகிற கூட்டத்தின் சிரிப்பு சத்தம் தூரத்தில் கேட்டது."ஓத்தா... உண்மைக்கு எங்கடா மதிப்பு இருக்கும்' என்று நினைத்துக்கொண்டே அதே சாலையில் வண்டியை இயக்கினான். நாய்கள் விடாது விரட்டின. நிமிர்ந்து உட்காராமல் குனிந்தபடியே ஓட்டினான். மீன் கவுச்சி நாற்றம் கவனத்தில் கொஞ்சம் வலி மறைந்தது. பட்டிப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பகுதிக்கு அருகில் வந்தது இங்கு முயற்சித்து பார்க்கலாம். எல்லா மக்களும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சமாதானம் செய்துகொண்டான். வீட்டுக் கதவு எதையும் தட்டாமல் வெளியில் இருந்தே கத்தவேண்டும் என்று வண்டியை நிறுத்திவிட்டு, ""சுனாமியில மாட்டுனவங்க உயிரோட வந்திருக்காங்க... சுனாமியில மாட்டுனவங்க உயிரோட வந்திருக்காங்க...'' என்று வேகமாய்க் கத்தினான். பத்தொரு கத்தலுக்குப் பிறகு அங்கங்கே விளக்குகள் எரியத் தொடங்கின. கலைந்த ஆடையோடு அடித்துப் பிடித்து கொஞ்சம் பேர் இறங்கி ஓடி வந்தார்கள். அவர்களுக்கு தரு விளக்கத் தொடங்கினான்.""சுனாமியல மாட்டுனவங்க... உயிரோடு வந்திருக்காங்க... எழுநூறு பேரு... அவுங்க ஆஸ்பத்திரியில சேர்க்கணும். உங்க எல்லோரும் உதவியும் தேவைப்படுது... எல்லோரும் நிர்வாணமா இருக்காங்க... உங்கள்ட்ட இருக்கிற பழைய புடவை டிரùஸல்லாம் எடுத்துட்டு வாங்க... முடியாம கஷ்டப்படுறாங்க... மெரீனா கண்ணகி சிலைக்கிட்ட வாங்க..''கூடிநின்றவர்களுக்கு அவன் சொன்னது ஒன்றுமே புரியவில்லை. ""டேய் இங்குயும் வந்துட்டானா... பைத்தியம்பா அவன்... இப்பதான் அங்கே இருந்து விரட்டிவிட்டோம்... தூக்கத்த கெடுத்துட்டான் படுபாவி... திருடன் நெனைச்சிட்டு துவைச்சிட்டோம்... அப்புறம் பாத்தான் தெரியுது பைத்தியம்னு.... சுனாமி செத்தவங்க பொழைச்சிட்டாங்கங்கிறான்... எப்ப வந்த சுனாமிடான்னா பல வருஷத்துக்கு முந்த வந்த சுனாமிங்கிறான்... அடிக்காதீங்கப்பா... பாவம்... விரட்டிவிடுங்க... டேய்... போடா...''""நம்புங்கய்யா.. நம்புங்கய்யா... ஒரு தடவ வந்து பாருங்கய்யா...''""ஒம்மாள அப்புறம் ஒததான்''"நான் இல்லடா பைத்தியம்... நீங்கதாண்டா பைத்தியம்... ஏமாத்துறவன் எவனாவது வந்து சொன்னா உடனே ஏமாந்து போவீங்க... உண்மைய சொல்றவன நம்ப மாட்டீங்க...' உள்ளுக்குள்ளே திட்டிக்கொண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் வண்டியில் ஏறிப் போனான். உண்மையாகவே அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. அய்யய்யோ... எவ்வளவு பேரு... எழுநூறு பேரு... என்ன செய்வாங்களோ... சுனாமியில தப்பிச்சவங்க கரையில வந்து செத்துடப் போறாருங்க... என்னுடைய இயலாமையும் அதுக்கு ஒரு காரணமாக இருந்துடப் போகுது... வண்டியை திருப்பி மாகலிங்கப்புறம் பக்கம் விட்டான். தனியாகப் போனால் இப்படித்தான் பைத்தியக்காரன் என்று அடிப்பார்கள். ஒருத்தர் இரண்டு பேரிடமாவது தெளிவுப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றோமானால் மக்கள் நம்புவார்கள் என்று நம்பினான். தெரு விளக்கு வெளிச்சத்தில் இருட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்தது. தமிழ்நாடு இயல் இசை கல்லூரி அருகே வண்டியை நிறுத்துவிட்டு, ரோட்டில் உட்கார்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தவர் நடந்ததையெல்லாம் சொன்னான். எல்லாம் புரிந்ததுபோல பீடிக்காரர், ""சுனாமி செத்தவங்களுக்கு அந்த ரைட்ல உள்ள இரண்டாவது வீட்டுக்காரரு நிறைய செஞ்சிருக்காரு... ஃபாரின்ல நிறைய பொருள் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காரு... அவரு நீங்க பாத்தீங்கன்னா... அவரே எல்லாத்தையும் செய்துவிடுவாரு... ஏகப்பட்ட பேருக்கு அவரு தொண்டு செய்திருக்காரு...''பைத்தியம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்குத் தோன்றியது. இரண்டாவது வீட்டை அடைந்தபோது மிகப்பெரிய பங்களாவாக இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஓடிப்போய் வாசல் காவலாளியிடம் அவசரஅவசரமாகச் சொன்னான். பலரிடம் சொல்லி... எதைவிட்டோம் எதை சொன்னோம் என்று தெரியாமல் சொன்னான். ஒரு நிமிஷம் என்று காவலாளி ஆட்டத்துடன் வீட்டிற்குள் சென்றான். சிறிதுநேரத்தில் சட்டை போட்டபடியே காவலாளியோடு ஒருவர் வந்தார். வாயைப் பொத்திக்கொண்டபடியே காவலாளி ஓரமாக நின்றுகொண்டான். அந்தத் தொண்டுக்காரரை கண்டதும் தருவுக்கு நம்பிக்கை பிறந்தது. ""ஐயா...'' என்று தரு ஆரம்பிப்பதற்குள், அவரே முந்திக் கொண்டு சிரித்தபடியே சொன்னார், ""காலையிலேயே வந்து கொடுக்கலாமே... இப்ப என்ன அவரசம்... உள்ள வாங்க.... செக்கா கொடுக்கப் போறீங்களா...''கோபம் அவனுக்குத் தலைக்கேறியது. அதைக் காட்டிக்கொள்ளாமல், ""காசு எதுவும் கொடுக்கவில்லை.'' என்று இவரிடமும் எல்லாவற்றையும் சொன்னான். "ஓ... அப்படியா...' என்று சிரித்தபடியே, "இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது... வேணும்னா நீங்க ஒண்ணு பண்ணுங்க... ஒரே குழியில் நூறு பேரை புதைத்த அழுகைச் சத்தம் கேட்குதா கடலம்மா பாட்டு எழுதுன கவிஞரு வீட்டுக்கு.. ம்... அவரு வேணாம்... சுனாமி பத்தி குறும்படம் எடுத்தாரு... ம் அவரு வேணாம்... ஏதாவது ஒரு கட்சி தலைவர பாருங்க... ம்.. அதுவும் வேணாம்... நேரா நீங்க முதல்வரையே பாருங்க... அவராலதான் இவ்வளவு பேரையும் காப்பாத்த முடியும்... எழுநூறு பேரு உயிருன்னா சும்மா.... உடனே போய் பாருங்க...'' சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கும்பிட்டார். இந்த யோசனை அங்கேயே தோன்றாமல் போனதற்காக கொஞ்சம் தன்னைத் தானே வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பினான். ""இனிமே குடிச்சிட்டு வந்த தொலைச்சுப்புடுவேன்'' என்று எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தார் தொண்டுக்காரர்.
வந்தவழியிலே திரும்பி வரும்போது, முதல்வரைச் சந்திக்க விடுவார்களா என்கிற சந்தேகம் வந்தது. அதிகாலை இருள் அவனுக்கு நம்பிக்கை தருவதுபோல இதமாக இருந்தது. நூறு கிலோமீட்டர் வேகத்தில் முறுக்கி கதீட்ரல் சாலை மேம்பாலத்தில் ஏறி இறங்கி சோலா ஓட்டல் யூ திருப்பத்தில் திரும்பி சந்துக்குள் நுழைகிறபோதே, இரண்டு காவலர்கள் அவனைச் சந்தேகத்துடன் விசாரித்தனர். ""முதலவரைப் பார்க்கப் போறேன்... சுனாமியில மாட்டுனவங்க...'' என்று எல்லாக் கதையையும் சொன்னான். ""நாங்க முதல்வர் சொல்லி நடவடிக்கை எடுக்குறோம்... நீங்க... போங்க...'' என்று கேலியாய் ஒரு காவலர் சொன்னார். மற்றவர் வெளிக்காட்டாத சிரிப்பு உதிர்ந்தார். தன்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கிறார்கள் என்று, ""சார்... நான் பைத்தியக்காரன்... இல்ல சார்... பைத்தியக்காரன் இல்ல சார்... கொஞ்சம் சொல்லுறத கேளுங்க சார்...''""இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்த பைத்தியக்கார ஆஸ்பிரித்திக்கு போன் பண்ணித் தூக்கிட்டுப் போகச் சொல்லுவேன்... போடா...'' லத்தியை ஓங்கி மிரட்டினார்.

கடைசி நம்பிக்கையும் இழந்தது செத்து பிணமாகவே வண்டியில் ஏறி மெரீனா பக்கம் ஓட்டினான். முடிந்தவரை காப்பாற்றுவோம் என்று நினைத்துக்கொண்டான். கடற்கரை சாலை அவருகிறபோது, "டி.ஜி.பி ஆபீஸ்ல பக்கத்துல வைச்சுக்கிட்டு எங்கெங்கோ சுத்தியிருக்கோமே... பத்து நிமிஷத்துல முடிஞ்சிருக்கும் வேலை...' என்றபடியே வண்டியை நிறுத்திவிட்டு, துப்பாக்கிய தாங்கியபடி நின்ற போலீஸôரிடம் சொன்னான். இவன் ஆரம்பித்தவுடனே அவர் விரட்டத் தொடங்கிவிட்டார். இங்கதானய்யா... வந்து பாருங்கய்யா... வந்து பாருங்கய்யா... என்று கெஞ்சினான். துப்பாக்கியைத் தூக்கி நெற்றிப்பொட்டில் வைத்து "சுட்டுடுவேன் போடா' என்றான். சில நிமிடங்களுக்கு அவன் மூச்சு நின்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்தவன் முடிந்தால் நாமே காப்பாற்றுவோம்.. இல்லாவிட்டால் அவர்களோடு சேர்ந்து நாமும் சாவோம் என்று கண்ணகிச்சிலை பின்புறத்துக்கு வண்டியை ஓட்டி நிறுத்திவிட்டு பார்த்தான். வெளிச்ச விடியலில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தது. பேரலை வந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மரக்கட்டைகள் எதுவும் சிதறிக்கிடக்கவில்லை. தூரத்தில் ஒரு கும்பல் தெரிந்தது. அவர்களை நோக்கி ஓடினான். சாந்தோம் குடியிருப்பு பகுதியிலிருந்து நாம் சொன்னதைச் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்துவிட்டு எல்லோரும் சேர்ந்து வந்து காப்பாற்றியிருப்பார்களோ என்று அங்கு ஓடினான். இரவில் அவன் பார்த்த ஒருவரும் அங்கு தென்படவில்லை. துண்டாகி அலையில் அடித்துப்போவதும் வருவதுமாக இருந்த ஒரு கையை எல்லாரும் பார்த்தபடியே இருந்தேன். மீண்டும் சுனாமி வந்து அவர்கள் எல்லோரையும் திரும்பவும் அடித்துப் போயிருக்குமோ ஒரே ஒரு கை மட்டும் இங்கு மிதக்குதோ என்று உற்று பார்த்தவன். அது இரவில் அவன் கைகளை நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்று திடமாக நம்பினான். அவர்களுடைய கை எல்லாம் ஊதிப் போன கை. கைகடிகாரம் கட்டியிருக்க அவர் வாய்ப்பே இல்லை. இது அவர்களுடைய கை இல்லை. அய்யய்யோ... நான் வரத் தாமதாகத் தொடங்கியதும் அவர்கள் வழி தெரியாமல் எங்கேயாவது போய்விட்டார்களோ' என்று கரை நெடுகிலும் தேடித் ஓடினான். அவன் பின்னால் கூட்டம் ஓடியது.

வெளியானது: உயிர் எழுத்து

Tuesday, June 24, 2008

பாப்... எப்பவுமே டஃப்?

"பூபாளம், கல்யாணி, ஆனந்தம்' என ராகப் பெயர்களாகக் கொண்ட அந்தக் குடியிருப்பில் மற்றொரு ராகமாய் இருக்கிறார் திரைப்படப் பாடகி ரோஷினி. "பட்டியல்' படத்தில் இளையராஜாவோடு அவர் பாடிய "நம்ம காட்டுல மழை பெய்யது' பாடல் பின்னணியில் ஒலிக்க அவரோடு பேசினோம்.
ரோஷினி பாட்டை மட்டுமல்ல; பேச்சைக் கேட்கிறபோதும் சுதி ஏறுது:

உங்கள் குடும்பம்? படிப்பு?
அப்பா ஜோசப் கலியபெருமாள். லயோலா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். அம்மா லூசி ஜோசப். அக்கா அனிதா ஷாலினி. சொந்தவூரான திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் ஒன்பதாவது வரை படித்தேன். அதன் பிறகு சென்னைக்கு வந்தோம். இங்கு குட்ஷெப்பர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பும் ப்ளஸ் டூவும் படித்தேன். மதுரவாயலில் உள்ள ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் பி.இ. இந்த வருடம் முடித்தேன்.

இசைப் பின்னணி கொண்ட குடும்பமா?
இல்லை. அக்கா அனிதா ஷாலினி நன்றாகப் பாடுவார். எப்போதும் வீட்டில் சினிமா பாட்டு பாடிக்கொண்டே இருப்பார். அவரைப் பார்த்துதான் நான் பாடத் தொடங்கினேன். எங்கள் ஆர்வத்தைப் பார்த்து அப்பா கர்நாடகச் சங்கீதம் கற்க வைத்தார். திருச்சியில் ஆறு வருடங்கள் கீதா என்பவரிடமும், சென்னையில் சகுந்தலா என்பவரிடமும் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்.

முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
ஒன்றாவது இரண்டாவது படிக்கிறபோதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறேன். நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். அந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார். நான் பாடியதைக் கேட்டு பாராட்டினார். சென்னைக்கு வரும்படி அழைத்தார். அப்போது உடனே வரமுடியவில்லை. மே மாத விடுமுறையில் என்னுடைய சித்தி வீட்டிற்கு வந்தேன். சென்னை வந்தபோது ஸ்டூடியோவுக்குப் போய் வித்யாசாகரைப் பார்த்தேன். அப்போது, "ஆஹா என்ன பொருத்தம்' பாடல் பதிவு நடந்துகொண்டிருந்திருக்கிறது. அது எனக்குத் தெரியாது.
போனதும், "கானாங்குருவிக் கூட்டுக்குள்ள கால நீட்டிப் படுக்க வா' என்ற வரி உட்பட பாடலில் இடையில் வரும் சில வரிகளை மட்டும் பாடச் சொன்னார். குரல் தேர்வுக்காகத்தான் பாடச் சொல்கிறார் எனப் பாடினேன். பாடி முடித்ததும் சொல்கிறேன் என அனுப்பி வைத்துவிட்டார். படம் வந்தபிறகுதான் பார்த்தேன். நான் பாடியது அப்படியே பதிவு செய்யப்பட்டிருந்தது. என் குரலுக்கு அந்தப் படத்தில் ஒரு பையன் பாடுவதுபோல காட்சியில் வந்தது. எனக்கு அதைப் பார்த்தபோது சிரிப்பாக இருந்தது. என்னுடைய முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்தது. உண்மையில் அந்த முழுப் பாட்டை பாடியவர் அனுராதா ஸ்ரீராம். நான் பாடியபோது அவரும் அங்கு இருந்தார். என்னை ஊக்கப்படுத்தி அவர்தான் பாட வைத்தார்.

அந்தப் பாடலுக்குப் பிறகு தொடர்ச்சியாய் வாய்ப்புகள் வந்தனவா?
திரும்பவும் திருச்சிக்கு வந்துவிட்டேன். வாய்ப்புகளும் வரவில்லை. ஒரு நிகழ்ச்சியில் நான் பாடுவதைக் கேட்ட பாக்யராஜ், அவருடைய "வேட்டியை மடிச்சுக்கட்டு' படத்தில் இசையமைப்பாளர் தேவாவிடம் சொல்லி ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதில் "கிச்சுகிச்சு தாம்பாளம்' என்கிற பாடலை முழுமையாகப் பாடினேன். இதைப்போலத்தான் ஒவ்வொரு வாய்ப்பாகக் கிடைத்தன. ஓவியன் இசையமைப்பில் "தாயுமானவன்' படத்தில் திப்புவோடு சேர்ந்து "புயலைக் கண்டேனே' பாடினேன். ஜெயா டிவியில் வந்த ராகமாலிகா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதைப் பார்த்து ஸ்ரீகாந்த் தேவா அழைத்து குரல் தேர்வு நடத்தி வாய்ப்பு கொடுத்தார்.
அது "குத்து' படத்தில் "போட்டுத் தாக்கு' பாடல். அதையும் பாடிவிட்டு காசெட்டில் கேட்கிறபோதுதான் சிம்புவோடு பாடியிருக்கிறேன் என்று தெரிந்தது. டூயட் பாட்டாக இருந்தாலும் தனித்தனியாகத்தான் பாட வைக்கிறார்கள். அதனால்தான் தெரியவில்லை. இதற்கடுத்து யுவன்ஷங்கர்ராஜா இசையில் இளையராஜாவோடு சேர்ந்து "பட்டியல்' படத்தில் "நம்ம காட்டு மழை' பெய்யுது பாடல் பாடினேன். இதுவும் இளையராஜா சாரோடு சேர்ந்துதான் பாடுகிறேன் எனத் தெரியாமல்தான் வந்தது. இதனைத் தொடர்ந்து "தாமிரபரணி' படத்தில் "கருப்பான கையால என்ன பிடிச்சான்' உட்பட பல ஹிட் பாடல் பாடியிருக்கிறேன். தொடர்ந்து பாடி வருகிறேன்.
அதிரடியான பாடல்கள் பாட விருப்பமா? மெலடி பாடல்கள் பாட விருப்பமா?
மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்திருக்கிறேன். திருச்சி பள்ளியில் படிக்கிறபோது சிலரோடு சேர்ந்து 37 மணிநேரம் தொடர்ச்சியாகப் பாடி கின்னஸ் சாதனையும் செய்திருக்கிறோம். மேடையில் பாடுகிறபோது மெலடியும் பாட வேண்டி இருக்கும் அதிரடியான பாடல்களையும் பாட வேண்டி இருக்கும். அதைப்போல எந்தவகையான பாடல் கொடுத்தாலும் பாடுவேன்.
ஆடிக்கொண்டே பாடுவதுதான் இப்போது பாடகர்களின் ஸ்டைலாக இருக்கிறது. நீங்கள் எப்படி?
பரதநாட்டியமும் கற்றிருக்கிறேன். இதனால் ஆடுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. பாடுகிறபோது பெரும்பாலும் நான் ஆடுவதில்லை. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. மக்கள் மத்தியில் நிகழ்ச்சிகள் செய்கிறபோது ஆடிக்கொண்டே பாடினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். இதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.
கர்நாடக இசையும் கற்றிருக்கிறீர்கள். எந்தவகையான பாடல் பாட சிரமம்?
கர்நாடக இசை, திரைப்படப் பாடல் இரண்டுமே நம் இரத்ததோடு கலந்ததுபோல. அதனால் எளிதாகப் பாடிவிடலாம். பாப் பாடல்களை அப்படிச் சொல்ல முடியாது. நம்மோடு எந்தவகையிலும் தொடர்பு இல்லாமல் இருப்பதால் அதைப் பாடுவதில் சிரமம் இருக்கிறது. இதில் பிரத்யேகப் பயிற்சி பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.
மும்பை பாடகர், பாடகிகளையே இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்களே?
திறமையாளர்களை யாரும் மறைத்துவிட முடியாது. திறமை எங்கிருந்தாலும் பயன்படுத்துவதிலும் தவறு இல்லை. எதிர்காலம்?
என்னுடைய இசை ஆர்வத்தைப் பாதிக்காத வகையில் ஐ.டி. கம்பெனிகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

Monday, June 2, 2008

பாவம் மூலம் பாடம்!



""கலைக்குச் சேவை செய்யவே கலையைக் கற்றுக் கொள்கிறேன் என்பதில் எனக்கு மாறான கருத்து உண்டு. இதர வகையிலும் பயன்பாட்டுக்கு உரியவையாய் கலை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
வெறும் வார்த்தைகளுக்காக அவர் இப்படிச் சொல்லவில்லை. கடந்த 89-ஆம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார். பரதம், கர்நாடக சங்கீதம், நாடகம் மூலம் உடற்குறைப்பாடு, மன வளர்ச்சிக் ன்றியவர்களுக்குப் பாடம் நடத்தும் "ரமண சுன்ரித்யா ஆலயம்' பள்ளியை சென்னை அபிராமபுரத்தில் நடத்தி வருகிறார்.

நாட்டியப் பாவம் மூலம் பாடம் சொல்லும்
அம்பிகா தொடர்கிறார்:

""பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில். என்னுடைய ஐந்து வயதிலேயே கர்நாடகச் சங்கீதம் கற்கத் தொடங்கினேன். என்னுடைய அம்மா சுலோச்னா நடராஜன், எஸ்.ராமநாதன், ருக்மணி ராஜகோபாலன், டி.கே.பட்டம்மாள் ஆகியோரிடம் கற்றேன். அதைப்போலவே சின்னவயதிலேயே பரதநாட்டியமும், குச்சிப்புடியும் கற்றுக்கொண்டேன். நாட்டியத்தை மீனாட்சி, நரேந்திர ஷர்மா உட்பட பலரிடம் கற்றுக்கொண்டேன். ஏழு வயதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகள் செய்து வருகிறேன்.

உடற்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது பெங்களூரில்தான். என்னுடைய உறவினர் ஒருவர் பார்வையற்றோர் பள்ளி ஒன்று நடத்தினார். அந்தப் பள்ளியில்தான் நாட்டியம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாட்டியப் பாவங்களையும் தொடுஉணர்ச்சி மூலமாகத்தான் அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எளிதில் புரிந்துகொண்டு ஆச்சரியப்படுத்தியதுடன் நாட்டியத்தில் அபாரத் திறமையும் காட்டினார்கள். இதன்பிறகுதான் இதில் ஆழமாக இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினேன்.

சென்னை வந்தபிறகு, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பள்ளிகளில் நாட்டியம் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். உடற்குறைபாடு குழந்தைகளுக்கு நாட்டியம் கற்பிப்பதில் முதுமுனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருக்கிறேன். அதன்பிறகு நாமே இது போன்றவர்களுக்கான பள்ளி நடத்தினால் என்ன என்று தொடங்கி நடத்தி வருகிறேன்.

ஐந்து வயதில் இருந்து 50 வயது உள்ளவர்கள்வரை என் பள்ளியில் படிக்கிறார்கள். மொத்தம் 110-க்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள். இதில் பெரும்பாலோர் ஸ்பெஷல் கேர் குழந்தைகள். வீட்டிலிருந்து நாங்களே அழைத்து வந்து இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஸ்பெஷல் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினை இருக்கும். மனக் குறைப்பாட்டுடன் ஒரு குழந்தைக்கு கை தூக்க முடியாமல் இருக்கும். ஒரு குழந்தைக்கு எழுத முடியாமல் இருக்கும். பேச முடியாமல் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான பயிற்சி கொடுப்பேன். அது நாட்டியம் மூலமாக, இசை மூலமாக எப்படித் தேவைப்படுகிறதோ அப்படிக் கொடுத்துக் குணப்படுத்துகிறோம். போதுமான அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்கு எங்களைப் போல் சொல்லிக் கொடுப்பதற்காகப் பலருக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.

நாட்டியம், இசை, நாடகம், ஓவியம், கிராஃப்ட்ஸ் போன்றவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அதன் மூலம் எப்படியெல்லாம் ஸ்பெஷல் கேர் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதில் படிக்க எல்லோரும் நாட்டியம் கற்றிருக்க வேண்டும். வேறு ஏதாவது கலைகள் தெரிந்து இருந்தாலும் சேர்ந்து பயிற்சிப் பெறலாம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி ஸ்பெஷல் குழந்தைகளுக்குச் சேவை செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற கலைகளை பள்ளி, கல்லூரிகளிலும் பாடத் திட்டமாக வைத்து பயிற்றுவித்தால், ஸ்பெஷல் கேர் பிள்ளைகளே இல்லை என்கிற நிலைக்குக் கொண்டு வரலாம். அதற்கான முயற்சிகளில்தான் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் அம்பிகா காமேஷ்வர்.
ஸ்பெஷல் அம்மா!