Monday, January 31, 2011

பார்வை
4


காட்சிகள் எதனையும் தவறவிடக்கூடாது என்பதற்காக பரந்த வெளியின் கண்கள், பெருவெடிப்பை நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. கீழ்ப்புறமாக வந்திருக்க வேண்டியது; அகண்ட வெளியில் தவறி, பூமியின் மேற்புறமாக வந்தபோது அனைத்துக் கண்களும் அதில் நிலைகுத்தி நின்றன.

Saturday, January 29, 2011

ஒருவன் மட்டும் நடக்கும் சாலை3

ஒருவன் மட்டும் உயிரோடு நடக்கும் சாலையாக அது இருக்கிறது. அந்தச் சாலையின் எல்லையில் நுழையும் எவரும் உயிரற்ற பிணமாகவோ அல்லது பிணம் என்ற தகுதிக்கும் உரிமை கொண்டாட முடியாதவராகவோ மாறித்தான் போய் வரமுடிகிறது. உயிரோடிருக்கும் நானும் ஒவ்வொரு முறையும் அந்த நேர் சாலையில் நுழைந்து வளையும் அதன் முடிவிற்கு வரும் வரை பிணமாக மாறிப் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் பிணத்தை என்னையே பார்க்க வைக்கும் அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டும் உயிரோடு பயணிப்பதையும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். எனக்கு இன்னொன்றும் உறுதியாய்த் தெரியும். தன்னை யாரும் நம்பாதது பற்றி அவன் அக்கறையே கொள்ளாமல் இதே தெருவில்தான் "தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள்' என்று எல்லோர் முன்னிலையிலும் உரக்கக் கத்தியவாறே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்தான்.

Friday, January 28, 2011

மணல்2


வெயில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த கோடை மதியம். மிகவும் சொற்ப விலைக்குப் பேசப்பட்டவளைக் கரையிலிருந்து கீழிறக்கி ஆற்று மணல் வழியாக மூன்று பேர் அழைத்து வந்தார்கள். இரு கரைகளின் மறைவே போதுமென அவள் எந்த இடத்திலும் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் அவர்கள்தான் பயந்துகொண்டு ஒவ்வோர் இடமாகக் கடந்தார்கள். நெடுந்தூரத்திற்குப் பிறகு அவள் நடக்க முடியாமல் துவண்டு, மயக்கத்தோடு நிழல் கீறலாய்
இருந்த இலந்தை செடிக்குக் கீழ் படுத்துக்கொண்டு எழுந்துகொள்ள மறுத்துவிட்டாள். கால்களைக் கொளுத்திய மணற்சூடு அவர்களுக்கும் அந்த இடம் சரியானதே என்று உணர்த்தியபோது வலக் கரையில் ஒருவனும், இடக் கரையில் ஒருவனுமாக ஏறி பாதுகாப்புப் பணியில் ஈடுபட, கீழே நின்றவன் முரடாய் அவளோடு புரண்டான். நெஞ்செலும்புகளோடு ஒட்டிவிட்ட அவள் முலைத் தோல்களையும் விடாமல் வலியெடுக்க வைத்து, விந்தை
வெளியேற்றிவிட்டு பணிக்குத் திரும்பினான். இடக் கரையிலிருந்து கீழிறங்கி வந்தவன் முதலாமவனின் விந்து ஈர அருவருப்பால் கொடுத்த பணப் பங்கிற்காகவாவது புணர வேண்டும் என்ற கதியில் அவசரமாக அவள் குறியில் இயங்கினான். கத்தியைப்போல் அவள் இடுப்பெலும்பு ஒன்று அவன் அடி வயிற்றைக் குத்தியபோது அவளை உற்றுப் பார்த்தான். மூச்சிரைக்க உறங்கத் தொடங்கிவிட்ட அவள் சவம்போல் தோன்றினாள். அதற்குமேல் அவனால் அவளைப் புணர முடியவில்லை. குறியை உருவிக்கொண்டு, கைப்பிடி மணலை அள்ளி அவள் குறியில் கொட்டிவிட்டு மேலேறி வந்தான். முதல் அனுபவம் பெறப்போகும் சந்தோஷம் குறியில் ஒழுக, இறங்கி வந்த வடக் கரைக்காரன் எப்படியோ நிமிர்த்துப் பிடித்து அவள் குறிக்குள் அவனுடையதைச் சொருகி அடித்தான். மணலால் குறிகள் அங்கங்கே கீறி எரிச்சலோடு இரத்தம் கொட்டுகையிலும் அவன் அவளை எழவிடவில்லை. அழுத்திப்
பிடித்து அடித்து முடித்துத்தான் மேலே வந்தான். அவர்கள் மட்டுமான திரும்பின நடையில் கரையின் வெடிப்பொன்றைத் தாண்டுகையில் அவர்களிடம் அவன், "குழியில் ஒரே மணல்' என்றான்.

இடமுடியாத முட்டை1

கொண்டைக் குருவியின் வயிற்றுக்குள்ளிருக்கும் முட்டைக்குள்ளிலிருந்தவாறே நானும் பல வருடங்களாகப் பறந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் என் மனம் பறக்காமல் இங்குதான் அமைதியாய் இருக்கிறது. இந்த இடத்திற்கு நீங்களும் வர ஆசைப்பட்டால் ஒரு புழுவாக மாற உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். புழுவாக மாறாமல் நேராகவே இங்கு வர எத்தனையோ முறை நானும் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன். அலகுகள் திறக்கப்படவே
இல்லை. ஒரு நாள் புழுவாக மாறி வந்து நின்றபோது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல் என்னை அது விழுங்கி முடித்தது. எச்சமாக என்னை வெளியேற்ற முயற்சித்தபோது, பிடிவாதம் பிடித்து அதன் முட்டைகளில் ஒன்றுக்குள் வந்துவிட்டேன். ஒரு நாள் கூடு கட்டி எல்லா முட்டைகளையும் அதில் இட்டபோது என்னையும் இட்டுவிடத்தான் எண்ணியது. நான்தான் வயிற்றுக்குள்ளேயே இருக்க ஆசைப்படுவதாக அடம்பிடித்தேன். என் அடம் அதற்குப் பிடித்து என்னை மட்டும் வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டது. ஒருவகையில் அதுவும் நல்லதாகவே அமைந்தது. இரை தேடிப்போன ஒரு பொழுதில் சிறுவர்கள் கூண்டைப் பிய்த்துப் போட்டுவிட்டு முட்டைகள் அனைத்தையும் எடுத்து, உடைத்தும் விளையாடிவிட்டார்கள். நான் மட்டும் மிஞ்சினேன். இட்டுவிட முடியாத முட்டையாக என்னை எங்கும் அது சுமந்து பறக்கிறது.