Monday, December 28, 2009

தனிவழியில் உருவான கவிதைகள் - சுகுமாரன்

குழிவண்டுகளின் அரண்மனை - என்கிற என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்புக்கு சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரை:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள்.

இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன. நடைமுறையிலிருக்கும் கவிதைக் கண்ணோட்டத்தை உள்ளும்புறமுமாகத் திருப்பிப் போடுவது; காட்சிப் படிமங்களை இடம் மாற்றி வைப்பது; துள்ளலும் விட்டேற்றியான மனநிலையும் கொண்ட மொழியில் வரிகளை உருவாக்குவது என்று தன்னுடைய கவிதை உருவாக்க முறையைக் கையாளுகிறார் அரவிந்தன். ஒரு குழந்தையின் விளையாட்டு அல்லது ஒரு பித்தனின் கைவரிசை போலத் தென்படும் கவிதையாக்க முறையை வசப்படுத்தியிருக்கிறார். குழந்தைத்தனம் மிளிரும் அணுகலும் பைத்தியம் துடிக்கும் வெறுமையும் வெவ்வேறு பார்வைகளாகவும் இடம் பெறவும் செய்கின்றன.

அரவிந்தனின் பார்வைக் கோணத்தில் எதார்த்த உலகம் இன்னொரு உலகமாகப் புரண்டு விடுகிறது. இந்த உலகின் சிறு செயல்கள் அந்த உலகில் அரிய நடவடிக்கைகளாகின்றன. குழிவண்டின் அற்பக் குழி சிறுமியின் அற்புத அரண்மனையாகிறது. அவளை மேலே கொண்டு வர இன்னொரு சிறுமி ஒழுகும் எச்சில் வெள்ளப்பெருக்காக மாறுகிறது. கவிதை விநோதத்தன்மை கொண்டதாகவும் களங்கமற்றதாகவும் உருப்பெறுகிறது. இதே விநோதத் தன்மை பைத்திய நோக்கிலும் செயல்படுகிறது. "நிழல் மின்சாரம்' கவிதையில் "நிழல் கம்பிகளின் மின்சாரம் தாக்கி ஒரு சிறுவன் சாலைக்குத் தூக்கியடிக்கப்படுவதை' பித்தம் ததும்பும் பார்வையில் காண முடிகிறது. இந்த இரட்டைப் பார்வை அரவிந்தனுக்கு மொழிதலில் ஒரு பிரத்யேகச் சலுகையையும் அளிக்கிறது. பாசாங்கான தயக்கங்களோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் கவிதையை உருவாக்கிக் கொள்ளும் சலுகை. இந்த நோக்கில்தான் அவர் இன்றைய கவிஞராகிறார்.

குழந்தைமையும், பித்துநிலையும், வேடிக்கையும், விநோதமும், அதீதக் கற்பனையும் சருமமாகக் கொண்டிருந்தபோதும் அரவிந்தனின் கவிதையாக்கத்தில் அடிப்படையாக இயங்குவது ஒரு துன்பியல்நிலை என்று தோன்றுகிறது. நடைமுறை எதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கங்களையும் ஒப்புக்கொள்ள முடியாத கையறு நிலையிலிருந்து உருவாகும் துன்பியல். அதை ஒரு விசித்திர விளையாட்டாக மாற்றுகிறது கவிதை. "என்னுடனே பிறக்கும் என் பிள்ளைகள்', "தந்தைப்பால்', "பூசணித்தாதி' போன்ற கவிதைகள் இந்த விளையாட்டின் விளைவுகள். இதுவரை சொல்லப்பட்ட கருத்தாக்கங்களை இந்தக் கவிதைகள் தலைகீழாக்குகின்றன. தாய்மையின் நேர் இணை பெண் என்ற கருத்தை இந்தக் கவிதைகள் கேலி செய்கின்றன.

முன்னர் குறிப்பிட்ட இரட்டைப் பார்வைகளை மீறிய கவிதைகளும் அரவிந்தனிடம் உள்ளன. அவற்றிலும் இடத்தையும் இருப்பையும் குலைக்கும் எத்தனிப்பு தென்படுகிறது. மெல்லிய சீண்டலுடனும் முரணுடனும் அவை எழுதப்பட்டிருக்கின்றன. "பூனையின் உலக இலக்கியம்' கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இந்த வகைக் கவிதைகள் எளிமையான தோற்றம் புனைந்து வாசிப்பில் ஏய்த்து விடுகின்றன. "13 ஸ்தனங்கள்' ஓர் உதாரணம். எளிமையாகச் சீண்டிக்கொண்டே நகரும் கவிதை இறுதியில் சீண்டலுக்கு நேர் எதிரான அதிர்ச்சியுடன் முடிகிறது.

இன்றைய கவிதை சிக்கல்கள் நிரம்பியது. வாழ்க்கையை வியாக்கியானம் செய்யும் கோட்பாடுகளின் மறைவு; மனித இருப்புக்குப் பொருள் சேர்க்கும் கருத்தாடல்களின் மீதான நம்பிக்கையின்மை; முன்பு செப்பனிட்டு வைத்திருந்த பாதைகளில் நடக்க விதிக்கப்படும் தடைகள்; மேலோட்டமான படைப்பாக்க மல்யுத்தங்கள் - எல்லாம் வாழ்க்கையையும் அதன் உடன் நிகழ்வாகக் கவிதையையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றன. அந்தச் சிக்கலின் மையத்தைப் பேசுகிற ஒன்றாக இன்று கவிதை ஆகியிருக்கிறது. எல்லாக் காலத்திலும் கவிதை கோரி நின்றது அதைத்தான். இப்போது வேண்டி நிற்பதும் அதைத்தான். முன்னர் எதைச் சொல்வது என்பது கவிதையின் சிக்கலாக இருந்தது. இன்றைய கவிதையில் எதையும் சொல்லலாம். ஆனால், சிக்கல் எப்படிச் சொல்வது என்பதில்தான். அரவிந்தன் அதை எதிர்கொண்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் வெளியாகியிருக்கும் கவிதைகளில் அதற்குரிய சுதந்திரமும் மாற்றுப் பார்வையும் தென்படுகின்றன என்பது வாசிப்பில் துலங்கும்.


பக்கம் : 80
ரூ.40

Monday, December 21, 2009

மௌனப் பொம்மைகள்

மௌனத்தில் சதா புரளும்
மிருகப் பொம்மைகள்
எல்லோர் வீடுகளையும்
அழகால் அலங்கரிக்கின்றன
பேசாத அவற்றோடு
பழகுதல் எல்லோருக்கும் சுலபம்
ஆகாயத்துக்கும் அடிதரைக்கும்
விட்டெறிந்து பிடிக்கையிலும்
விழு வலியற்று
அமைதியாய்ப் பறப்பவை
எட்டி உதைத்து
காதைக் கடித்து
கண்களைக் குழந்தைகள் தோண்டினாலும்
வாஞ்சையாய் வால்களை ஆட்டுபவை
சொல்லப்படுகிற ரகசியங்களால்
முடியுதிர்க்குமே தவிர
தனிமையின் கதவுகளைக்கூட
தட்டிச் சொல்லாதவை
அணைத்துப் பாய்ச்சப்படும்
துர்கனவு வெப்பத்தைச்
முழுதாய்க் கிரகித்து
எவர் மீது உரசாமல்
பூமிக்குள் செலுத்தி செயலிழக்கச் செய்பவை
அத்தோடு
இரத்தம் குடிக்கும்
ஒட்டுண்ணிகளும் இல்லாதவை.

நன்றி: மணல்வீடு

எரியும்


தட்டுப்படும்
விரல்களின் குறிப்புகளுக்கேற்ப
ஏற்றஇறக்கத்துடன்
அவளை
அப்படியே பாடுகிறது
எரிந்து
வறட்டி.
நன்றி: மணல்வீடு

Saturday, December 19, 2009

வலையுலக நண்பர்களுக்கு


'குழிவண்டுகளின் அரண்மனை' என்ற என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பு நானே வெளியிட்ட தொகுப்பாகும். புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் இதற்கும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
த.அரவிந்தன்

தலைப்பு: குழிவண்டுகளின் அரண்மனை
த.அரவிந்தன்
பக்கம்: 80
ரூ. 40

தொகுப்புக்கு சுகுமாரன் அளித்த முன்னுரையின் சிறுகுறிப்பு:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.

(சுகுமாரனின் முழு மதிப்புரையை பின்னர் வெளியிடுகிறேன்)

Monday, October 5, 2009

பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்

சிறுகதை

'பூம்புகாரில் ஏற்பட்டிருப்பது சேற்று எரிமலை. நமக்குத்தான் இது புதிது. பல்வேறு நாடுகளில் இதுபோல் அடிக்கடி தோன்றியிருக்கிறது. 1911-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அருகே உள்ள ஒரு கடற்கரையில் சேற்று எரிமலை தோன்றி, ஒரு குட்டித் தீவையே உருவாக்கியது. சில காலம் கழித்து தீவு மீண்டும் கரைந்து கடலாகவே மாறிவிட்டது. ஈரான் நாட்டுக்கு வடக்கே காஸ்பியன் கடல் ஓரமாக அமைந்த அஜர்பைஜான் நாட்டில் இதுபோன்று இயற்கையாகவே அமைந்த நூற்றுக்கணக்கான சேற்று எரிமலைகள் உள்ளன. இதனைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், மருத்துவக் குணம் உள்ளவை என்று வெளிப்பட்ட சேற்றை எடுத்து பூசிக்கொள்ளவும் செய்கின்றனர். சேற்று எரிமலைகள் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. நிலத்தின் அடி ஆழத்தில் அழுத்தத்தில் எரிவாயு இருக்கும்போது, அதற்கு மேலாக உள்ள நீரும் களிமண்ணும் கரைந்து வெளியே பொங்குவதால் தோன்றுவது ஒன்று. எரிவாயு ஊற்று இருப்பதை அறிவதற்காக நிலத்தில் ஆழமாகத் துளையிட்ட இடங்களில் உருக்குக் குழாய்களை இறக்காமல் விடுதல் போன்ற காரணங்களால் தோன்றுவது இரண்டு. இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவில் ஓரிடத்தில் எரிவாயு ஊற்றைக் கண்டுபிடிப்பதற்காக சில ஆயிரம் அடிகள் துளையிட்டனர். அந்த இடத்திலிருந்து எதிர்பாராத விதமாக ஏராளமான சேறு வெளிப்பட்டு எட்டுக் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் இருநூறு தொழிற்சாலைகள் சேற்றில் புதைந்து கூரைகள் மட்டுமே தெரிந்தன. தினமும் 50 ஆயிரம் கன மீட்டர் சேறு வெளிப்பட ஆரம்பித்தது. குழாய்க் கிணறு தோண்டுவதற்காக துளையிட்ட இடத்தில் குழாய்களைப் புதைக்காவிட்டால் சேறு வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும். பூம்புகாரில் ஏற்பட்டதற்கான காரணத்தை இனிமேல்தான் ஆராய வேண்டும்.'

சேற்று எரிமலையில் பூம்புகார் கடற்கரையையொட்டிய கிராமங்கள் புதைந்து கிடக்கின்றன. பறிகொடுத்தவர்களின் மரண ஓலங்களுக்கிடையில் கையில் கிடைத்த உடைமைகளையும், குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஏகப்பட்டோர் பரிதவித்து ஓடிக்கொண்டிருக்
கிறார்கள். மலைபோல் குவிந்துகிடக்கும் அட்டக்கரி நிறச் சேற்றின் பயங்கரத்தைப் பார்க்கிறபோது மிரட்சியாக இருக்கிறது. அதன் வெறி இன்னும் அடங்காததாகத் தோன்றுகிறது. அதி முக்கிய செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் "இடைஞ்சலில்லாத செய்தி' தொலைக்காட்சியில் இக்காட்சிகள் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க, மண்ணியல் ஆய்வு அதிகாரி ஆல்கின் முதல் பத்தி விளக்கத்தை அளித்துக்கொண்டிருந்ததை தங்கள் கைத்தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதற்றத்தில் அவர் திணறித்திணறிச் சொன்னபோது சற்று கூடுதலாகவே பயந்து போயிருப்பார்கள். ஆனால், பேட்டி முடிந்து சட்டையில் சொருகியிருந்த ஒலிவாங்கியைக் கழற்றிக்கொடுத்துவிட்டு ஒளிபரப்பு நிலையத்திலிருந்து காரில் வேகமாக வீட்டிற்கு வந்து ரகசியக் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைகிறவரை அவரது முகத்தை உற்றவர்களால்தான் அந்தப் பதற்றம் சேற்று எரிமலையால் ஏற்பட்டதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆப்பிரிக்கப் பாறைத் தட்டுக்கு அடியில் ஓடிய கற்குழம்பில் நில மூழ்கிக் கப்பலில் பயணித்தவாறே உயர் சக்திவாய்ந்த கருவி மூலம் தொடர்புக்கு வந்த நாற்பது வயது நுண்மான், ஆல்கினைக் கசந்தமேனிக்குத் திட்டினார். முதலில் தானே தொடர்புகொண்டு, "மன்னித்து விடுங்கள்' என்று தொடங்க வேண்டும் என்று வருகிற வழிகளில் யோசித்து வந்ததெல்லாம் மறந்துபோய், கோபத்தின் நியாயத்தை உணர்ந்தவராய் ஆல்கின் சமாளிக்க முயற்சித்தார். நுண்மான் ஆவேசப் பேச்சை வைத்தே கப்பல் பயணிக்கிற வேகத்தை அவர் மன உள்ளுணர்வுகள் யூகித்துக் கொண்டிருந்தன.

"அந்தக் கைத்தொலைக்காட்சி நிறுவனத்தோடு நாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அவர்கள் எப்போது அழைத்தாலும் பேட்டியளித்துத்தானே ஆகவேண்டும்.''

"இந்த இடைப்பட்ட நேரத்தில் எனக்கோ, நில மூழ்கிக் கப்பலுக்கோ ஏதாவது நேர்ந்திருந்தால்.... பால் வீதி பயணமா இது? ஒன்றும் ஆகாது என்று நினைப்பதற்கு... பூமியைத் துளைத்துக் கொண்டு பயணிக்கிறேன். கப்பல் கதவு திறந்துகொண்டு நான் வெளியில் விழுந்துவிட்டால் கிடைப்பேனா... பாறைத்தட்டின் அழுத்தத்தில் நசுங்கி உரு தெரியாமல் பிசுறுபிசுறாய்ப் போய், இரும்புக் குழம்பில் எரிந்து காணாமல் போயிருப்பேன். நம்முடைய கப்பலைப் போல விஹோலிஷியோனனால் ஆனதா என் உடம்பு? அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு எதிலும் தீ பற்றி எரியாமல் போக..''

ஓயட்டும் என்பதுபோல சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு பிறகு கைத்தொலைக்காட்சியில் பேசுவதுபோன்ற பாவனையிலே ஆல்கின் விளக்கினார்.

"நில மூழ்கிக் கப்பல் என்ற நமது திட்டத்தை விஞ்ஞானிகள் சபையில் நாம் முதலில் வைத்தபோது நம்மைக் கேலி செய்யாதவர்களே கிடையாது. "அரசே, ஒரு நெம்புகோலையும், அதை அந்தரத்தில் ஊன்றிக்கொள்ள ஓர் இடத்தையும் கொடுங்கள். இந்தப் பூமிப் பந்தையே தூக்கி எறிந்து காட்டுகிறேன்' என்று சொன்ன ஆர்க்கிமிடிஸின் பெரிய சறுக்கல்போல்தான் இந்தத் திட்டமும் என்று சிரித்தார்கள். பாறைகளைத் துளைத்துக்கொண்டு கப்பல் ஆழத்திற்குப் போகிறது என்றதுமே பூமியைத் துண்டாக்குகிற செயல்; பூமியை அழிக்கப் பார்க்கிறோம்; மண்ணியல் ஆய்வோடு நிற்கட்டும் நம் பணி என்றனர். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது என்பது இதயத்தைத் துண்டாக்குவது ஆகாது. எரிமலை குழம்புகளை அவிந்த எரிமலைகளாக மாற்றுவதுடன், பூமியின் மேற்புறத் தட்டுகள் மோதுகிற விளிம்புகளில் நிலநடுக்கங்கள் ஏற்படாமல் செய்யலாம். செயற்கைக் கோள்களை அனுப்புவதைப்போல ஒவ்வொரு நாடும் தனித்தனியாக முயற்சிக்கத் தொடங்கினால் ஆபத்தாகிவிடும். உலகம் முழுவதும் ஒருங்கிணைந்து ஐந்தாறு கப்பலை அனுப்பி ஆய்வு செய்வோமானால் எண்ணெய் வளம், தொல்பொருள் ஆராய்ச்சி உள்பட எல்லாவற்றையும் கண்டறியலாம் என்று விளக்கினோம். அறிவு மங்கிகளின் பகல்கனவு என்று நமது திட்டத்தை நிராகரித்துவிட்டனர். இன்று நாம் எந்த விஞ்ஞானிகளுடைய ஒத்துழைப்புமின்றி சாதித்திருக்கிறோம் என்றால், அதற்குப் பலரின் மறைமுக உதவி நமக்குக் கைக்கொடுத்திருக்கிறது. அதுவும் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே உதவிபுரிந்தவர்கள்தான் எல்லோரும். அந்த வகையில் உதவியர்களுள் ஒருவர்தான் நான் பேட்டியளித்த கைத்தொலைக்காட்சி நிறுவனரும். பாறைகளில் துளைத்துப் போகிற தோண்டுக்கருவியைப் பொருத்துவதற்கு நாம் திண்டாடியபோது அவருடைய பெரும் பணம் உதவியிருக்கிறது. இதைக் கருதியே பேட்டிக் கொடுத்தேன். இன்னும் நம்முடைய கப்பல் இயங்குதலை நம்முள்தான் வைத்திருக்கிறோமே ஒழிய, உலகம் அங்கீகரிக்கிற வகையில் நாம் நிரூபணம் செய்துகாட்டவில்லை. நம்மை அங்கீகரிக்க வேண்டியவர்களாக ஆதிக்க நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெளிவாக அறிவோம். அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒருவகையில் இவர்கள் துணையெல்லாம் நமக்குப் பெரிதும் உதவும். அதிலும் நாம் எரிகிற அடுப்பினுடைய தணலைக் குறைப்பதுபோல எரிமலையை அவிந்த எரிமலையாக மாற்றுவதில்தான் இப்போது முழுதாய் வெற்றி பெற்றிருக்கிறோம். நிலநடுக்கத் தடுப்புகளில் இப்போதுதான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ''

புரியாதவருக்குச் சொல்வதுபோல விளக்கிக் கொண்டிருக்கிறோமே என்று ஆல்கின் உணர்ந்தவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
"நான் இல்லை என்கிறேனா? அவசரமாய் பேட்டிக் கொடுக்கிறளவுக்கு அப்படி என்ன அதி முக்கிய செய்தி?''

"பூம்புகார் கடற்கரையில் சேற்று எரிமலை உருவாகி இருக்கிறது.''

"பேட்டியில் நீ என்ன சொன்னாய்?''

"நமக்குத்தான் இது புதிது என்றும், இயற்கையாகவே ஏற்படுகிற சேற்று எரிமலைகளும் உண்டு, எரிபொருள் ஆராய்ச்சி போன்றவையால் ஏற்படுகிற சேற்று எரிமலைகளும் உண்டு என்று சொன்னேன்.''

"என்னோடு ஏன் நீ ஊன்றிப்போக மாட்டேன் என்கிறாய்? செயற்கையாய் ஏற்படக்கூடிய காரணங்களை நீ விளக்கியது நாம் மாட்டிக் கொள்வதற்கு ஒரு துருப்பாக அமைந்துவிடாதா? அந்தப் பகுதியில் சேற்று எரிமலை உருவாவதற்கு நாம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நீ உணரவில்லையா? நில மூழ்கிக் கப்பலை நாம் பயன்படுத்தத் தொடங்கிய புதிதில் பாறைகளைத் துளைத்து கரும்பாறைக் குழம்புகளில் ஊடுருவி போவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தோம். மண் சரிவு, சேற்று எரிமலை பற்றியெல்லாம் அப்போது சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இந்த முறைதானே மண் அடைப்பான் கருவியைப் பொருத்தியிருக்கிறோம். பூம்புகார் கடற்கரையில் இருந்து பூமிக்குள் செல்லுகையில் பாறைத்தட்டு தூரம் குறைவாக இருப்பதுடன் புவிஈர்ப்புவிசை சாதகமாக இருப்பதால்தான் தானே அந்தத் இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். அடைக்காமல் பல முறை சென்று வந்ததால் சேற்று எரிமலை ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?''

"இருக்கலாம். அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாம்தான் செயற்கோள் உள்பட எவற்றாலும் கண்காணிக்க முடியாத, புகைப்படம் எடுக்க முடியாத உயர் தொழில் நுட்பத்தைப் பெற்றிருக்கிறோமே? பின் எப்படி நம்முடைய கப்பல் பூமியைத் துளைத்துப் போனதைக் கண்டுபிடிக்க முடியும்? அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருந்தால் இந்தக் கப்பலை நாம் கட்டமைத்து இயக்குவதற்கு முன்பே பிடிபட்டிருப்போமே? சேற்று எரிமலை பற்றி நான் தெளிவாக விளக்காவிட்டாலும் வேறு யாராவது விளக்கியிருப்பார்கள். அப்படி விளக்கியது ஒருவகையில் நமக்கு நல்லதுதான். தரங்கம்பாடியை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் எரிவாயு இருப்பதைக் கண்டறிய சோதனை நடந்தது என்பதெல்லாம் உண்மைதானே... எல்லோரும் அதையே காரணம் காட்டிப் பேசுவதற்கு அது வழிவகுத்துவிடும் அல்லவா...''

"என்னதான் நீ சமாளித்துப் பேசினாலும், உன் மேல் இருக்கிற கோபம் மட்டும் எனக்குக் குறையவே இல்லை. வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் கப்பலை இயக்கிக் கொண்டிருக்கிறேன். பசிபிக் தட்டு தொடக்க அடியில் வந்துகொண்டிருந்தபோது சக்திமிக்க ஒளிவிளக்குகள் திடீரென அணைந்துவிட்டன. பாறையிருட்டு என்னை மிரட்டத் தொடங்கிவிட்டது. மேற்புறப்பாறைகள் என்னை அழுத்துவது போன்ற பிரமை திடீரென ஏற்பட்டு நடுங்கிவிட்டேன்.''

"தெரிகிறது. உங்களுடைய இதயத்துடிப்பு அதிகரித்திருக்கிற பதிவைக் கட்டுப்பாட்டுத் திரையில் கண்டவுடனே தெரிந்துகொண்டுவிட்டேன். ஏதோ நடந்திருக்கிறது என்று. அவசரத் தேவைக்கான விளக்கை இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டீர்களே..''

"இப்போது சொல். அதை நான் சரி செய்வதற்கு பட்டபாடு இருக்கிறதே... உள்புற இணைப்புகளாகவே இருந்ததால் தப்பித்துக் கொண்டேன். வெளிப்புற இணைப்புகளாக இருந்திருந்தால் என் கதி? முடிவு எடுக்க முடியாத கட்டத்தில் உதவுவதற்கும், உன்னுடைய பேச்சு பெருந்துணையாய் இருக்கும் என்பதற்காகத்தானே உன்னை இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.''

"மன்னியுங்கள்... மன்னியுங்கள். இனிமேல் போகமாட்டேன். பசிபிக் தட்டுகளில் குறை புவிஈர்ப்புவிசை உடைய கிழக்குப் பகுதியில் மொத்தம் நூற்று எண்பத்திரண்டு நெருப்பைக் கக்கும் எரிமலைகள் உள்ளன. இதில் அறுபத்தி நான்கை ஏற்கெனவே அவிந்த எரிமலையாக மாற்றிவிட்டோம். மிச்சம் உள்ள நூற்று பதினெட்டின் நிலைமையை ஆராய்ந்தீர்களா?''

"அந்த இடத்தைக் கடந்துவந்துவிட்டேன். எண்பது அவிந்துவிட்டது. மீதமுள்ளவற்றில் ஹலூட்ரிஹானை அதிகம் பரவிவிட்டிருக்கிறேன் . இனி அங்கு எரிமலை தோன்றுவதற்கு வழியே இல்லை. பசிபிக் தட்டு கடைவிளிம்பு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புவிசை மாற்றம் காரணமாக நான் சுற்றிச் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது. சுற்றி வருகிற வழியில் வடமேற்கு ஆப்பிரிக்கத் தட்டு அடியில் பயணித்தபோது வித்தியாசமான பாறை ஒன்றைக் கண்டேன். அந்தப் பாறையை மேலெழுந்தவாறு வெகுதூரம் துளைத்துக் கொண்டுபோனபோது ஓர் அதிசயம். மாபெரும் கட்டடங்களுடன் கூடிய புதை நகரம்.''

"ஆச்சரியம்... ஆச்சரியம்... அதற்குள் நுழைந்து போனீர்களா?''

"குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் போகவில்லை. பாறைகளைத் துளைக்கிற நம்முடைய கப்பலை அதற்குள் செலுத்துகிறபோது அந்த நகரமே துகள்துகளாகப் போய்விடுகிறது. அதனைத் தோண்டி ஆய்வு மேற்கொண்டோமானால், வரலாற்றைப் புரட்டிப் போடுகிற இடமாக அது அமையும் என்று கருதுகிறேன். குறுக்கு வெட்டாகப் போனபோது ஓரிடத்தில் புதைந்திருந்தவற்றில் கலைப் பொருள் ஒன்றைக் கண்டேன். அது ஓர் அழகிய பெண் சிலை. அசந்து போய்விட்டேன். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கதவைத் திறந்துகொண்டு இறங்கி அந்தச் சிலையை எடுத்துவரவேண்டும் என்கிற உணர்ச்சி நிலைக்கு வந்துவிட்டேன். துணை கிடைத்த சந்தோஷமாக இருந்தது. கடைசியில் சுதாரித்து உன்னிடம் பதிவு செய்ய அழைத்தால் நீ இல்லை என்றால் நான் துடிக்காமல் என்ன செய்வேன்?''

"நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என்னால் இங்கு உட்காரமுடியவில்லை. எங்காவது ஓடிப்போய்விட்டு வந்து உட்கார்ந்தால்தான் சரியாக இருக்கும் போலிருக்கிறது. தொல்பொருள்களை மேலே எடுத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே ஒழிய, அதில் நாம் இன்னும் முனைப்பு காட்டவில்லை.''

"அந்தப் புதை நகரத்தையும், அழகிய கலைப்பொருளையும் பார்த்தபிறகு நானும் அதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நகரைவிட்டு என்னால் நகரவே முடியவில்லை. இயக்கவிசை கதிரை அந்த இடத்தில் உற்பத்திச் செய்துகொள்ள முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு விரைந்துவந்துவிட்டேன். சிறிது நேரம் அமைதியாக இரு. பசிபிக் தட்டு விளிம்புக்கு வந்துவிட்டேன். ஹலூட்ரிஹானையும், துமஹோ மொஹால்ட்ரஹையும் இங்கு கலந்து பரவிட்டு வந்தோமே அதில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்.''

"சீக்கிரம் பாருங்கள்.... என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இதில் நாம் வெற்றிபெற்றால் முழுமையாக வெற்றிப்பெற்றவர்களாக ஆவோம். நிலநடுக்கத்தைத் தடுக்கிற ஆற்றலையும் நாம் பெற்றவர்களாக ஆகிவிடுவோம். சீக்கிரம்...''

"பொறு... பொறு... எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.''

"அய்யோ... அவ்வளவு உழைப்பும் வீணாய்ப் போய்விட்டதா?''

"இல்லை.... இல்லை... என்னால் நம்பவே முடியவில்லை... நம்பவே முடியவில்லை.... ஆல்கின் சாதித்துவிட்டோம்... சாதித்துவிட்டோம்...''

"சொல்லுங்கள்... சொல்லுங்கள்... என்ன ஆயிற்று சீக்கிரம் சொல்லுங்கள். அதிர்ச்சியில் செத்துவிடுவேன் போலிருக்கிறது.''

"ஹலூட்ரிஹான் கலவை வேலை செய்திருக்கிறது ஆல்கின். நிலநடுக்கத்தைத் தடுக்கும் ஆற்றலையும் பெற்றுவிட்டோம். இந்தப் பகுதியில் இனி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. இந்தப் பகுதியில் இல்லை. இனி எந்தப் பகுதியிலும் நிலநடுக்கம் என்பதே இருக்காது. நாம் முறியடித்துவிடுவோம். சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த இடத்தில் நாமே செயற்கையாக நிலநடுக்கத்தை ஏற்படுத்தித் தடுத்துப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது.''

"சந்தோஷம்... சந்தோஷம்... இருவர் பயணிக்கிற கப்பலாகச் செய்து நானும் உங்களுடன் வந்திருக்கக்கூடாதா என்று இருக்கிறது நுண்மான்.''

"சிறிது நேரம் அமைதியாக இரு. மேற்புற தோண்டுக்கருவி செயலிழந்துவிட்டது.''

"கவனமாக மாற்றுங்கள். தவறிழைத்துவிடப் போகிறீர்கள். மையத் தோண்டுக்கருவியும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்...''

" இரு... இரு... மாற்றிவிட்டேன். மையத் தோண்டுக்கருவி சரியாகத்தான் இருக்கிறது. இப்போது சொல். நில மூழ்கிக் கப்பலின் நுட்பங்களை வெளிப்படையாக உலகிற்கு அறிமுகப்படுத்துகிறபோது, நம்மைப் பார்த்து சிரித்தவர்கள் முகங்கள் எத்தனை கோணலாய்ப் போகும்?''

"எண்ணமுடியாதளவுக்குப் போகலாம். இருப்பினும், இப்போது நாம் அவசரப்படத் தேவையில்லை.''

"ஏன்? நாம்தான் முழுதாய் வெற்றிப்பெற்றுவிட்டோமே. இனிமேல் என்ன?''

"வெற்றிபெற்றுவிட்டோம் என்பது உண்மைதான். நம்மை அங்கீகரிக்க வேண்டியவர்களாக ஆதிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாம் சாதித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பூமியைப் பிளக்கிற குற்றவாளிகள் என்பார்கள். கண்டங்கள் வளர்வது; பருவநிலை மாற்றம் உட்பட பூமியில் ஏற்படுகிற அனைத்து இயற்கை கோளாறுகளுக்கும் நாம்தான் காரணம் என்று குற்றம்சாட்டி நம்மை அழிக்கப் பார்ப்பார்கள். நம் நாட்டினரும் அவர்கள் சொல்வதைத்தான் வேதியியல் வாக்காக எடுத்துக் கொள்வார்கள். அதனால் அவசரப்பட வேண்டாம்.''

"இல்லை ... இல்லை.. இனிமேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. உலகிற்குக் கண்டிப்பாக அறிமுகப்படுத்துவேன். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து நம்மால் இப்படி இயங்கிக்கொண்டிருக்க முடியாது. அரசு உதவி நமக்குப் பெரியளவில் தேவைப்படும்.''

"நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இது சரியான தருணம் இல்லை. ஆதிக்க நாட்டை நம் நாடு எல்லாம் வகையிலும் சார்ந்திருக்கிறது. நம்முடைய கண்டுபிடிப்பை அவர்களுடைய அதிகாரத்தால் அழித்து விடுவார்கள்.''

"இல்லை. அறிவித்துவிடுவதுதான் சரி.''

"ஆதிக்க நாடு நம்மை அழிப்பதற்கான முயற்சிகளில் இறங்கும்.''

"ஆதிக்க நாடு... ஆதிக்க நாடு... நம்மை அழிக்கும். நம்மை அழிக்கும்... ஆதிக்க நாட்டை நான் அழிக்கப் போகிறேன்.''

" வேண்டாம்... வேண்டாம்... அந்த முடிவை எடுக்காதீர்கள். நிலநடுக்கத்திலிருந்து, எரிமலைக் குழம்பு பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவேண்டும் என்கிற நல்ல நோக்கத்திற்காகத்தான் இந்தக் கப்பலையே உருவாக்கியிருக்கிறோம். இப்போது நாமே இந்தக் கப்பலைக் கொண்டு ஒரு நாட்டை அழிக்கிற செயலில் ஈடுபடுவோமானால் நம் நோக்கமே தவறாகிவிடும். ஒரு மணிநேரத்தில் அந்த நாட்டையே நம் கப்பலால் அழித்துவிட முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு நாள் நாம் பட்ட சிரமம் வீணாகிவிடும். ''

"எனக்கு ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆதிக்க நாடு அழிவதைத்தான் மற்ற எல்லா நாடுகளும் மறைமுகமாக விரும்புகின்றன. அந்த நாடு அழிந்தால்தான் உலகம் அமைதியாக இருக்கும்.''

"அந்த நாடு அழிந்த பிறகு மற்றொரு ஆதிக்க நாடு உருவாகாது என்பது என்ன நிச்சயம்? நம்முடைய கப்பலைக் கொண்டு அந்த நாட்டை அழித்துவிட்டீர்கள் என்றால் நம்முடைய கப்பலை பற்றி எல்லா நாடுகளும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அப்படித் தெரிந்து கொள்கிறபோது நாமே அதனை தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்திய காரணத்தால் பின் கட்டமைக்கிற நில மூழ்கிக் கப்பல்கள் எல்லாம் அவர்களுடைய இராணுவத் தளவாடங்களில் ஒன்றாகத்தான் பயன்படுத்தப்படுமே தவிர, நிலநடுக்கத்தைத் தடுக்கிற கப்பலாக உருவாகாது என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இப்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். பூமியின் மேற்பரப்புக்கு வாருங்கள். பேசி முடிவு செய்வோம்.''

"இந்த விளக்கங்களை விட்டுவிட்டு ஆதிக்க நாட்டு கட்டடங்கள் பொலபொலத்து விழுவதற்கான காரணத்தை ஏதாவதொரு கைத்தொலைக்காட்சியில் விளக்குவதற்குத் தயாராகிக் கொள். கப்பலை ஆதிக்க நாட்டுப் பக்கம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டரை மணி நேரத்தில் தூள்... தூள்..''

"சொல்வதைக் கேளுங்கள்.. மேற்பரப்புக்கு வாருங்கள்... நம்முடைய நோக்கம் வீணாகிவிடும்.... வாருங்கள்.''

" பேட்டி கொடுக்கத் தயாராகு... ''
நன்றி :வார்த்தை

Monday, September 7, 2009

புதைமனங்களில் புரளும் புழுக்களின் குறியீடுகள்


4.02.2009
சென்னை

குற்றவியலறிஞர் எஸ்.தாமஸ் அவர்களுக்கு,

வணக்கம்.
புதைமனங்களைப் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சிக்கு உதவுகிற வகையில் மேலும் மூன்று கடிதங்களை அனுப்பியிருக்கிறேன். இக் கடிதங்களும் இறந்துபோன ஆனியினுடைய சேகரிப்பில் இருந்து எனக்குக் கிடைக்கப் பெற்றவைதான். 1. ஆனியினுடைய தங்கை பெனீட்டா எழுதிய கடிதம். 2. நீதிபதி கதிரேசன் நாட்குறிப்பு. 3. நீதிபதியின் மனைவி அதிதியின் கடைசிக் கடிதம். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடைசிக் கடிதங்களை முன்பு அனுப்பியபோதே இவற்றையும் சேர்த்து அனுப்பியிருக்க வேண்டும். ஏனோ என் உள்மனம் உத்தரவு வழங்கவில்லை. ஏதாவது ஒரு வகையில் உதவும் என்று உணர்த்தியது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதால் உங்களுக்குப் பயன்படும் என்று அனுப்பி வைக்கிறேன். குற்றமில்லாச் சமுதாயத்தை நினைவில் காணுகிற ஒன்றாய் உங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் மாற்றும் என்பதை முழுதாய் நம்புகிறேன்.

அன்புடன்,
அ.சந்துரு
பின்குறிப்பு : மூன்று கடிதங்களையும் பற்றி நான் தெரிந்துகொண்ட தகவல்களையும், சந்தேகிப்பவற்றையும் தனித்தாளில் எழுதியிருக்கிறேன்.

இறப்புச் செய்தி - 1
நீதிபதி கதிரேசன் நாட்குறிப்பு

27.05.1988
சென்னை
பாவகரமானத் தீர்ப்பு. இருநூற்று இருபது பக்கங்கள். தண்ணீர் குடித்துக்குடித்துப் படிக்கிறேன். ஒவ்வொரு பக்கம் புரட்டும்போதும் கழுத்தில் கயிறு சுற்றுவதுபோல கண்களில் செவ்வரி படர மிரளுது குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பயங்கர மிருகம். தூக்குத் தண்டனை வழங்கலை ஆவலோடு எதிர் நோக்குகின்றன வாத, பிரதிவாதம் கவனித்த மற்ற பதுங்கும் மிருகங்கள்.
ஆறாம் அறிவால் மிருகங்களைக் கொன்றுகொண்டோம் என்கிறார்கள். போகிற சாலையெங்கும் ஒவ்வொருவராய் உற்றுப் பார்க்கிறேன். அணிந்திருக்கிற ஆடை; பயணிக்கிற வாகனம்; வசிக்கிற வீடு எல்லாம் என் பார்வையில் ஓடி ஒளிந்துவிடுகின்றன. கர்ஜிக்கும், உறுமும் முகங்களுக்குரியவை சுதந்திரமாக வெளிவந்து நிற்கின்றன என் எதிரில்.

சிந்தித்தல் எனும் விதியால் சிறப்படைகிறோம் என்றார் எஸ். நிகில் சக்ரவர்த்தி. யாராவது இப்படிச் சொல்கிற போது வாய் வெடிக்கச் சிரிப்பது என் வழக்கம். 18.07.1985 - ஆவலுடன் எல்லோரும் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் இவ் வழக்கு என் முன் வந்த தேதி. என் சகங்கள் இருக்கைகள் உடைப்புத் தினம் வேறு அன்று அனுசரித்தன. சக்ரவர்த்தியிடம் வெடித்தபடியே சொன்னேன். 'குளவி, குருவிகள் முதலில் கூடு கட்டத் தொடங்கினவா? இல்லை முதலில் நீங்கள் வீடு கட்டத் தொடங்கினீர்களா? விமானத்தில் பறந்தது யாரால்? இதுபோன்று எந்தக் கண்டுபிடிப்பின் பின்புலச் சிந்தனையையும் கவனித்துப் பாருங்கள். மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்திருப்பது, வெüவால் மீயொலி எழுப்பியிருப்பது என்று நீங்கள் வரிசையாய்க் கண்டுகொண்டே போகலாம். இயற்கையின் படைப்புகளிலிருந்து உங்களுக்கு ஏற்ற வகையில் எல்லாவற்றையும் மாற்றி பிரதியெடுத்துக் கொண்டு, சிந்திக்கிறோம் எனச் சிறப்பு தகுதி எதிர்பார்க்கிறீர்கள். ஓர் உதாரணத்துக்கு ஏதேன் தோட்டத்து ஆப்பிளிலிருந்து கணக்கெடுக்கத் தொடங்கி நீங்கள் களவாடிய பட்டியலை ஒருவன் எழுதத் தொடங்கினால் அவன் ஆயுள் மட்டும்தான் முடியும்' என்றேன்.
"பூனைகளும் நாய்களும் அதைப்போல் களவாட வேண்டியதுதானே... ஏன் மீன் திருடவேண்டும்?'' புன்முறுவலை நிறுத்திக்கொண்டு இறுக்கமான முகத்துடன் கேட்டார்.

"மிருகங்கள் சிந்திக்கின்றன என்பதன் அடையாளமாக நான் அதைப் பார்க்கிறேன். இடைவிடாக் களவாடலின் முக்கால்வேளையின்போதுதான் கோடானுகோடி உயிர்களை இழந்து இயற்கைச்சீற்றங்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை உங்களால் உணர முடிகிறது. மிருகங்கள் இதை முன்பே உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் அதனுடைய தோலோடே, அதனுடைய இயல்போடே உயிர்ப்பதை மட்டும் உண்டு வாழ்கின்றன. எச்சரிக்கும் கருவியெல்லாம் பொருத்தித்தான் வைத்திருக்கிறீர்கள். இருப்பினும், நிலநடுக்கத்தாலும், எரிமலைக்குழம்புகளாலும் ஏற்படுகிற இழப்புகளை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா? எந்தக் கருவியின் துணையின்றி மிருகங்கள் மட்டும் எப்படி உணர்ந்து தப்பித்துக் கொள்கிறது? இப்படி உணர்கிற ஆற்றல் மனிதன் என்று இறுமாப்பு கொள்ளாமல் நீங்கள் மிருகங்களாகவே இருந்தவரை உணர்ந்த ஒன்றுதானே...'' என்றேன்.உதடு துடிக்கத் தொடங்கிவிட்ட கோபத்தை மறைக்க முயற்சித்தவாறே, ""நாகரிக வரையறைகள் அவற்றிற்கேது?'' என்றார்.

"வரையறைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடத்தலே மிருக நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ளல் என்றால் உயிர் வாழ்வதற்கென்று எல்லாவற்றிற்குமே சில வரையறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு செல் உயிரான அமீபா முதல் யானை வரையிலும் வரையறைகள் இல்லாமல் எதுவும் வாழ்வதில்லை'' என்றேன்.

"ஒருவனுக்கு ஒருத்தி என்கிற வரையறையெல்லாம் அவற்றிற்கேது?'' என்று வெடுக்கெனக் குரைத்தார்.

"இதுவும் சில பறவைகளிடமிருந்தும் சில மிருகங்களிடமிருந்தும் நீங்கள் களவாடிய ஒன்றுதான்'' என்றேன்.

சக்ரவர்த்திக்குள் இருக்கும் மிருகத்தை முழுதாய் வெளிப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற விருப்பம் பேச்சினிடையே எனக்குத் தோன்றியது. வழக்கமாய் என்னிடம் எழுப்பப்பட்டு நான் சொல்கிற பதில்கள்தான் என்பதால் பொறுமையாகவே பதிலளித்து வந்தேன். அது இன்னும் சற்று அதிகமாக மிருகத்தை வெளிப்படுத்தும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

"சிரிக்கிறோமே... வேற எது சிரிக்குது'' என்று அடுத்தத் தெருவில் உள்ளவைக்கும் அழைப்பு விடுப்பது போன்ற குரலில் இரண்டு மூன்று தடவை கேட்டுக்கேட்டுக் குரைத்தார்.

"அணுக்கதிர் வீச்சில்கூட பிழைத்துக்கொள்ளக்கூடிய வகையில் கரப்பான்பூச்சிக்குப் பாதுகாப்பு கவசமாக மேலோடு இருக்கிறது. நம்மிடம் அப்படி ஏதாவது கவசம் இருக்கிறதா? ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு சிறப்பு. சிரிப்பதைப் பெரிதாய்ச் சொல்கிறீர்களே... உதாரணத்துக்கு நீங்கள் ஆப்கானில் வாழ்கிறவராக இருந்து, உங்களிடம் 'கரப்பான் பூச்சியின் பாதுகாப்பு கவசம் வேண்டுமா? சிரிப்பு வேண்டுமா?' என்று யாராவது கேட்டால், சிரிப்பையா கேட்டுக்கொண்டிருப்பீர்கள்? மேலும் பறவைகள், மிருகங்கள் சிரிப்பதாகவும் ஒரு சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன'' என்றதும், "அப்படியானால் என்னையும் மிருகம் என்றுதான் சொல்வீர்களா?'' முழுதாய் மாறியிருந்த அந்த மிருகம் கேட்டது.

"இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? பயிற்சி பெற்ற மிருகங்கள் சாகசம் புரிவதுபோல வரையறைகளின் விதிகளால் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் நாம். நம்மைப் போன்றோரை நான் பதுங்கும் மிருகங்கள் என்றே அழைக்கிறேன். இப்போது மாறியிருக்கிறீர்களே அதைப்போன்றதொரு நாய் தனித்திருக்கும் குழந்தையை, குற்றுயிராய் கடித்து எறிந்துவிடுவதுபோல, மதம் பிடித்து பாகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கும் யானைபோல வெளிப்படுத்திவிடுகிற குற்றவாளிகளை நான் பயங்கர மிருகம் என்று அழைக்கிறேன்'' என்று சொல்லி முடிப்பதற்குள், மேலே விழுந்து நாய் குதறத் தொடங்கியது. யார் யாரோ வந்து தடுத்தார்கள். பிரித்தார்கள். அதோடு முடிந்தது இருவருக்குமான உறவு. ஒரு மிருகம் அளிக்கிற தீர்ப்பாகவே இருக்கிறது நான் அளிக்கிற தீர்ப்புகள் என்று எல்லோரிடமும் என்னைப் பற்றி அது தொடர்ந்து குரைக்கத் தொடங்கியது.

இருபது நிமிடங்கள் அலுவலகத்திற்குக் காலதாமதமாக வந்ததற்காக எம்.சீனிவாசன் என்பவரை வேலையைவிட்டே நீக்கிவிட்ட வழக்கு. கோபம் என் தலைமுடிகளை உதிர வைத்தது. ஒரு மிருகம் ஒரே இடத்தில் அடங்கிக் கிடப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? தட்டச்சு செய்யும் ஆர்.மகிழந்தியைப் பார்த்து பலமுறை யோசித்திருக்கிறேன். எப்படி வாழ வேண்டிய பெண் மிருகம்? நாகரிகப் பெயரால் மூளையை ஓர் அரவை இயந்திரமாய் மாற்றிக்கொண்டு இப்படி உட்கார்ந்திருக்கிறதே என்று பரிதாபப்பட்டிருக்கிறேன். வேதனை சாட்சியாக இதனையே கொண்டு நிறுவன முதலாளி வீ.கரம் கேருக்குத் தண்டனை கொடுத்தேன். முதலில் இதுவும் ஒரு மிருகத்தின் செயல்தானே என்று எச்சரிக்கையோடு விட்டுவிட நினைத்தேன். உணராத மிருகமாக இருக்கிறதே என்று கொடுத்துவிட்டேன். சீனிவாசனை மீண்டும் வேலையில் சேர்த்து அவரது வீட்டிற்குத் தினமும் காலையில் மிகச் சரியாக 6.30 மணிக்கு கரம் கேர் செல்லவேண்டும். அங்கு கையெழுத்து இட வேண்டும். பின்னர் சீனிவாசனை அழைத்துக்கொண்டு 8.00 மணிக்குள்ளாக அவர்களுடைய அலுவலகத்திற்குப் போகவேண்டும். இதைப்போல நான்கு மாதக் காலத்திற்குத் தொடரவேண்டும் என்று கொடுத்தேன். வதை எண்ணம் கொண்ட முதலாளி மிருகம் என்னைப் பார்த்து உறுமியபடியே கூண்டிலிருந்து வெளியேறி சென்றது. வித்தியாசமான தீர்ப்பு சொல்வதாகச் சொல்லிவந்த என் சகங்கள் சக்ரவர்த்தியின் உபஊக்கத்தில் சட்டத்தை நான் மீறுவதாகக் குரைக்கத் தொடங்கியது இந்த வழக்கிலிருந்துதான்.

ஈவ் டீசிங் வழக்கு. காயமுற்ற லெஸி என்கிற அந்தப் பெண் மிருகம் மீது எனக்கு வருத்தம்தான். காதலுற்ற அந்த மூன்று ஆண் மிருகங்களையும் பார்த்தேன். வேறொன்றும் எனக்குப் புதிதாய்த் தோன்றவில்லை. போகிற பசுவின் வால் பகுதியைக் கர்ப்பவாசத்திற்காக முகர்ந்து பார்க்கிற ஒரு காளையின் செயலாகத்தான் அதுபட்டது. விதிகளால் விலங்கிடப்பட்ட நான், பெண்கள் கல்லூரியின் வாயில் பகுதியை ஒரு வருடத்துக்குப் பெருக்க வேண்டும் என்று மூன்று மிருகங்களுக்கும் தண்டனை கொடுத்தேன். இது சரியான தீர்ப்பு இல்லை என்று பலருக்கும் வருத்தம். மகளிர் அமைப்புகள் என் மேல் கோபத்தில் இருப்பதாக வேறு செய்திகள் வந்தன. தலைமை என்னை அழைத்து அறிவுரைத்து அனுப்பியது. விதிகள்தான் நம் இறைவன். அதற்குத் துரோகம் இழைக்காதீர்கள் என்றது. சக்ரவர்த்தி நெருக்கங்களின் ஊதலில் சொல்லப்பட்டதுதான் இதுவும் என்று எனக்குத் தெரியும்.

எண்பத்தாறு பெண்களுடன் தொடர்புடைய வழக்கு. பத்திரிகைகள் எல்லாம் எழுதியதன்படி பார்த்தால் உலகத்துப் பெண்களை எல்லாம் இந்தவொரு பயங்கர மிருகம் மட்டுமே பலாத்காரம் செய்து அதில் பாதிப் பேரைக் கொன்றதைப் போன்ற மாயையை ஏற்படுத்திவிட்டது. பயங்கர மிருகத்துக்கு வயது நாற்பத்தேழு. சாட்சி சொல்லிய பெண்களில் இருபத்தேழு பேருக்கு வயது இருபது. பதினெட்டு வயதில் தாங்கள் காதலித்து பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தற்போது திருமணமாகி கணவர்களோடு வாழ்வதாகவும் ரகசிய வாக்குமூலங்கள் கொடுத்தன. பதினெட்டு வயதில் நடந்தது என்றால் பயங்கர மிருகத்துக்கு அப்போது நாற்பத்தைந்து வயது இருந்திருக்கும். பதினெட்டு வயதுக்கு நாற்பத்தைந்து வயது மிருகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கான சுவை என்ன? வயது பார்த்து, சுவை பார்த்து மிருகங்கள் சேர்வதில்லை என்றாலும்கூட ஒத்துழைப்பின்றி எந்தப் பெண் மிருகத்தையும் பலாத்காரம் செய்ய முடியாது. பலவந்தப்படுத்தி ஒருமுறை பலாத்காரம் செய்திருந்தாலும், அடிக்கடி பலாத்காரம் செய்வது என்பது இயலாத காரியம். ஒருமுறைகூடவா அந்த மிருகத்தைப் புரட்டிப் போட்டு உதைத்து தப்பிக்க முடியவில்லை. ஒரு சிலவை மிருகத்தின் உயிரணுக்கள் படிந்த கறை துணிகளை பல ஆண்டுகளுக்குப் பிறகும் எடுத்து வந்து கொடுத்திருந்தன. திட்டமிட்டுத்தானே அந்தக் கறை துணியை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஒன்றிரண்டு பெண் மிருகங்களோடு உறவு வைத்திருக்கிறபோதே சமாளிக்க முடியாமல் ஆண் மிருகங்கள் சில அலறுகின்றன. வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு இடங்கள் என்று இருந்தாலும் இத்தனை பெண்களை எவ்வளவு பெரிய பயங்கர மிருகமாக இருந்தாலும் சமாளித்திருக்க முடியாது. பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டத்தின்படி, 'பாதிக்கப்பட்டதாகச் சொல்கிற பெண்கள் எல்லோரும் பாலியல் ஒழுக்கத்தை மீறியவர்களாக இருப்பதால் இந்தப் பெண்களுடைய வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியான புனிதத்தன்மை கொண்டது என்று எடுத்துக் கொள்ள முடியாததால் குற்றம் சாட்டப்பட்ட ஜெ.பிரேமை. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' என்றுதான் தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். இதுபோன்ற தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உதாரணத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் என்னால் இந்த வழக்கில் இப்படித் தீர்ப்பளிக்க முடியவில்லை.

காவல்துறையினர் பல குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, ஜெ.பிரேமை மட்டுமே முதன்மையாக்கிக் காட்டிவிட்டனர். இந்த மிருகத்திற்குப் பின்னால் பல மிருகங்கள் இயங்கி இருக்கிறது. அந்த மிருகங்களின் வற்புறுத்தலின்பேரில்தான் பெண் மிருகங்களும் சாட்சியம் அளித்திருக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதல்களுக்கு அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அளிக்கப்பட்ட சாட்சியத்தையும் வழக்கறிஞரின் வாதத்தையும் வைத்துப் பார்க்கிறபோது ஜெ.பிரேமுக்குத் தண்டனை உறுதி என்பதாக மக்கள் மனநிலையை பத்திரிகைகள் வேறு மாற்றி அமைத்துவிட்டனர். இதற்குமேல் எனக்கு வேறு வழியில்லாததால் நெஞ்சடைத்துக் கொண்டே உயிர் போகிறவரை அந்தப் பயங்கர மிருகமான ஜெ.பிரேமைத் தூக்கிலிடத் தீர்ப்பு கொடுத்துவிட்டேன். இந்த வழக்கில் முள்ளை முறிக்கவில்லை. தொடர்ந்து ஒன்றையே செய்கிறபோது அதற்கான உணர்ச்சியே இல்லாமல் போய்விடுகிறது.


இறப்புச் செய்தி - 2
பெனீட்டா கடிதம்

15.08.198௮
சென்னை

அன்புள்ள அக்கா ஆனி,

இழவு வீட்டில் திருடுகிற வேலை செய்கிறேன் என்றால் உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். "சரித்திரத்தைப் புரட்டப்போறா என் பொண்ணு' என்று பத்திரிகையில் நான் சேர்ந்தபோது அம்மா சொன்னது இப்போது உன் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். முதலில் என்னை சென்னை மாநகராட்சி, அரசு பொதுமருத்துவமனை, கே.எம்.சி. மருத்துவமனை மற்றும் ரயில்வே பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். செய்தி சேகரிப்புக்கான அரிச்சுவடியைத் தெரிந்துகொள்கிற பகுதிகள் இவை என்பதில் ஆசிரியர் குழுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அது தெரியாமல் என்னைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்புங்கள் என்று ஆசிரியரிடம் நான் வேண்டுகோள் வைக்க, என்னை இங்கு கேலி செய்து சிரிக்காதவர்களே இல்லை. சிலர் அவர்களுடைய சொத்துக்களை நான் பறிக்கப் போவதுபோலக்கூட கோபப்பட்டார்கள். பள்ளி பாடம் இல்லாமல் கல்லூரிக்குப் போகவே முடியாது என்கிற அவர்கள் உறுதிக்குப் பிறகு இந்த இழவு பகுதிகளையே சுற்றிச்சுற்றி வருகிறேன். இதில் மாநகராட்சி பகுதியை மட்டும் இழவு பகுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. மன்றக் கூட்டங்கள் நடைபெறுகிறபோது வேண்டுமானால் அப்படி ஒருவேளை தோன்றலாமே ஒழிய, எப்போதும் அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

காலை எட்டரை மணிக்கே விடுதியிலிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறேன். கே.எம்.சி.யில் கிடைக்கக்கூடிய விஷேசங்கள் பெரும்பாலும் தீக்குளிப்பு செய்திகள்தான். விஷேசம் என்று சொல்வதற்காக என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே அக்கா. காவலர்களிடம் விசாரிக்கிறபோது 'என்ன விஷேசம்... என்ன விஷேசம்' என்று கேட்கிற பழக்கத்தில் எழுதுகிறேன். கொலை, கொள்ளை என்பதையெல்லாம் இங்கு விஷேசம் என்றே அழைக்கிறார்கள். யாருக்கு விஷேசம் என்பதில் பலவாறு எனக்குக் குழப்பம் இருக்கிறது. அந்த விஷேசமான எரிந்த உடல்களை நீ பார்த்தாயானால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாய். பத்து பதினைந்து நாள்களுக்குச் சாப்பிடக்கூட மாட்டாய். குறிப்பாகப் பெண்கள்தான் அதிகம் கரியாகிறார்கள். பிழைத்துக்கொண்ட சில பெண்களோடு நான் பேசியிருக்கிறேன் . செத்தப் பிறகுகூட ஒருவரால் பேசமுடியும் என்பதற்கு அவர்கள் எல்லாம் சாட்சிகள். அழுதுகொண்டு நிற்கிற பிள்ளைகளுக்காக கணவனைக் காட்டிக்கொடுக்காத தாய்களையும் அங்கு பார்க்கலாம். முழுதாய் எரிந்து செத்துப் போகாததற்காக மருத்துவமனையிலேயே உதைக்கப் போகிற கணவனையும் பார்க்கலாம் .

கே.எம்.சி.யைவிட அதிக விஷேசங்கள் கிடைக்கும் பகுதி அரசு பொதுமருத்துவமனை. உள்ளேயே காவல் நிலையம் இருக்கிறது. விசாரித்தால் அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாக இருக்கக்கூடிய விசேஷங்களை மட்டும் சொல்லுவார்கள். முழுமையான செய்தியை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அமரர் அறை கதவைத் தட்டினால்தான் சரியானத் தகவல் கிடைக்கும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளிவரும் வெளிமாநிலத்தவரை முதலில் வரவேற்பதே பொதுமருத்துவமனையும், மத்திய சிறைச்சாலையாகவும் இருப்பதுபோல, எனது விடியலும் பிணங்களோடே இருக்கிறதே என்ற வருத்தம் அமரர் அறைக்குச் சென்ற ஆரம்பப் பத்து நாள்கள் இருந்தன. அதற்குப் பிறகான நாட்களில் அப்படி நினைத்ததுகூட மறந்துபோய்விட்டது. கொலையுண்ட உடல், தற்கொலை செய்துகொண்ட உடல், விபத்தில் இறந்த உடல், சில நேரங்களில் இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாமல் இங்கு திருப்பி விடப்பட்டு இறந்துபோன உடல்கள் என எல்லாவற்றையும் இங்கு பிடித்துவிடலாம். ராகேஷ் என்றோர் அதிகாரி இருக்கிறார். தகவல்கள் சொல்வார். ஆனால் முழுமையானத் தகவல்களை அரசுப் பொதுமருத்துவமனை பகுதியில் மட்டுமே செய்திகள் சேகரித்து வரும் வேறொரு பத்திரிகையின் மூத்த செய்தியாளர் முத்துவுக்கு மட்டுமே சொல்வார். இருவருக்கும் பிணங்களால் நாற்பது வருட நெருக்கம். பிணத்தைக்கூட எழுப்பி விசாரித்து வந்துவிடுவார் முத்து என்று எல்லோரும் அவரை பெருமையாகச் சொல்வோம். சிரித்து அங்கீகரித்துக் கொள்வார். ஒருமுறை மேயரிடம் முத்துவால் அவமானகரமானப் பேச்சு வாங்கினோம் அக்கா. இந்நாள் வரை அப்படியொரு பேச்சு மேயரிடம் வாங்கினோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஒரு வகையில் தனிப்பட்ட முறையில் முத்துவை மட்டுமே குறிப்பிட்டு மேயர் ஏசினார் என்றாலும் அது எங்களையும் உறுத்தவே செய்தது.

மன்றக் கூட்டம் முடிந்து செய்தியாளர் அறைக்கு வந்து எங்களோடு பேசிக்கொண்டிருந்தார் மேயர். குப்பைகள் வாறாதது பற்றிய பிரச்சினைக்காக மன்ற உறுப்பினர்கள் அன்று குப்பையால் அடித்துக் கொண்டார்கள். மேயர் என்று கூட அழைக்காமல், அவர் பெயரை வலிந்து இழுத்து, நாற்காலியில் கிட்டத்தட்ட படுத்தபடியே, 'மன்றக் கூட்டம் நீங்க நடத்துற முறையே சரியில்லை... 'ஏற்போர் ஆம் என்க'... 'மறுப்போர் இல்லை என்க' என்று கேட்டு, உங்கள் உறுப்பினர்களையே 'ஆம்...ஆம்' என்று சொல்லவைத்து கூட்டத்தை முடித்துவிட்டால் போதுமா...' என்றார் திடுக்கென முத்து. கோபத்தில் மேயர் கன்னம் துடித்தது. சுற்றி நிற்கிற பத்திரிகையாளர்கள் முன்னால் அநாகரிகமாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகவும், எங்களிடம் இறங்கி வந்து பேசியதே தப்பு என்பதுபோலவும் மேயர் அறையைவிட்டு வெளியேறினார். ஐந்தாறு செய்தியாளர்கள் பின்னால் சென்று அவரைச் சமாதானப்படுத்தினோம். பிணங்கள் பின்னாலும், சென்ட்ரல் ரயில் நிலையக் காவலர்கள் பிடிக்கிற திருட்டு வழக்குகள் பின்னாலும் வெயிலில் ஓடிவிட்டு சற்று அமர்ந்து ஓய்வெடுக்கக்கூடிய வகையில் செய்தியாளர் அறை இருக்கிறது. இதையும் கோபத்தில் பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வது என்கிற எண்ணமே எல்லோர் மனதிலும் ஓடியது. "பொணச் செய்தி எடுக்கிற நாய், எனக்குப் புத்திமதி சொல்லுறதா' என்று மேயர் திட்டி விட்டு கதவை அறைந்துகொண்டு உள்ளே போய்விட்டார். மாநகராட்சியையும் சேர்த்து பார்ப்பதால் அது எங்களுக்கான பேச்சு இல்லை என்பதாக எடுத்துக் கொண்டாலும் பல நாட்கள் வலித்தது. மேயர் திட்டியதைப் பற்றிச் சொல்லாமல், "இப்படிப் பேசலாமா' என்று முத்துவிடம் சிலர் கேட்டார்கள். " இவன்
என்ன சின்ன பையன். முதல்வரையே நான் மடக்கினவன் தெரியுமா?' என்று ஏதோ அவருடைய பழைய கதையைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.
செய்தி சேகரிப்புக்காக முத்து, ராகேஷ் கூட்டணியில் சேர பல்வேறு முயற்சிகள் எடுத்தேன் அக்கா. அனைத்தும் தோல்வியிலேயே முடிய, பிறகு பிண அறையிலேயே பணிபுரிகிற கதிரோடு புதிய அணி அமைத்துக் கொண்டேன். கதிர் என்றதுமே என் நினைவுக்கு வருகிற ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கும். பெண் பிணங்களைப் புணர்கிறவனாம் அவன். நானாக இதைச் சொல்லவில்லை. முத்து என்னிடம் திணித்த ஒன்று. புணர்வதைப் பற்றியெல்லாம் ஆண்களோடு அமர்ந்து பேசுகிறேன் என்று உனக்குக் கோபம் வரும். நாம் இருவரும் ஒரே வளர்ப்பு என்பதை மறவாதே. செய்தியாளர் அறையில் நான் நுழைகிறபோது, காதில் விழுந்தது இது. என்னைக் கண்டதும் ஆண் செய்தியாளர்களிடம் சத்தத்தைக் குறைத்து கிசுகிசுத்தார் முத்து. கேளாமைக்காரரின் கிசுகிசுப்பு எப்படி இருக்கும்? முத்து சொல்லிக் கொண்டிருந்ததை அப்படியே சொல்ல வேண்டும் என்றால், தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டாரே ஒரு பிரபல கவர்ச்சி நடிகை. அவரைப் புணர்ந்ததாக கதிர் முத்துவிடம் சொன்னானாம். போதையில் இருப்பதைத் தவிர அவனிடம் எவ்வித தவறான நோக்கமும் நான் கண்டதில்லை. பாம்பு கடியில் செத்தவர் செய்தியைக்கூட அவன் எனக்குச் சொல்லாமல் விட்டதில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் வராத இழவு செய்தி என்னுடைய பத்திரிகையில் வருவதற்கு அவனுடைய பங்களிப்பும் இருக்கிறது. இதில் பொறாமை கொண்ட சிலர் அவனும் நானும் காதலிப்பதாகக் கதை கட்டுகிறார்கள். அதை நான் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுடைய பொறாமைக்கு வேறொரு காரணமும் இருக்கிறது. மற்ற எல்லோரும் மருத்துவமனையில் மட்டும் செய்தியைச் சேகரித்துக் கொடுத்துவிடுவார்கள். நான் அப்படியில்லை. கொலை உட்பட எந்த இழவு செய்தியாக இருந்தாலும் புகைப்படம் இல்லாமல் கொடுப்பதில்லை. புகைப்படத்துடன் வரவேண்டும் என்பது எங்கள் ஆசிரியரின் கட்டளை. மற்ற பத்திரிகைகளிலிருந்து இது தனித்துக் காட்டும் என்று நினைக்கிறார்.
கட்டளையோடு நின்றுவிடுகிறது அவரது பணி. புகைப்படத்தைத் திருடுவதற்குள் நான் படுகிற பாடு இருக்கிறதே கேவலத்துடன் கூடிய பெரும் கஷ்டம். புகைப்படக்கலைஞர்களை அழைத்து செல்லவேண்டியதுதானே என்று கேட்கலாம். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிற இறந்தோர் வீட்டில் புகைப்படக்கருவியை எடுத்ததுமே உடைபட்டுவிடும். போகிற வீடுகள் எல்லாமே ஏதாவது வில்லங்கம் நிறைந்த வீடுகள் என்பதால் திருடுவதைத் தவிர வேறு வழியில்லை. உறவினர்களைப் போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று புகைப்பட ஆல்பங்களைத் தேடி மறைத்து வைத்துக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு சிலர் ஒன்றிரண்டு புகைப்படங்கள்தான் எடுத்து வைத்திருப்பார்கள். அது தெரியாமல் எடுத்து வர நேர்ந்திருக்கும். பத்திரிகையைப் பார்த்துவிட்டு வந்து, 'வேற போட்டோ இல்ல... கொடுங்க... கொடுங்க' வாயிலிலேயே நின்று கொண்டு இறந்தவரின் அப்பாவோ, அம்மாவோ அழுகிறபோது நான் பலமுறை ஒரு கொடூரமானவளாக உணரப்பட்டிருக்கிறேன் அக்கா. கொடூரமானவளாகவே இருந்துவிடலாம்போல. உணரப்படுதல் மோசமான வலியாக இருக்கிறது. பூட்டிக் கிடக்கிற வீடுகளின் கதவுகளைக் கூட உடைத்து நுழைய வேண்டியிருக்கும். ஒரு முறை கதவை உடைத்து பீரோவை உடைத்துத் தேடிக் கொண்டிருக்கிறபோது மாட்டிக் கொண்டேன். அது ஒரு ரவுடியினுடைய வீடு. குண்டாந்தடியாக இருந்த அவன் மனைவியோடு சிலர் சூழ்ந்துகொண்டார்கள். பெண் காவலர் என்று என்னுடைய பத்திரிகை அடையாள அட்டையைக் காட்டிவிட்டே வந்துவிட்டேன். அவர்களுக்குப் படிக்கத் தெரிந்திருந்தால் என் செய்தியை அன்று முத்து எடுத்திருப்பார். கொஞ்சம் திருடுவதில் பயம் விட்டுப்போனப் பிறகு, இறந்து போனோர் எழுதிய நாட்குறிப்பேடு, கடைசிக் கடிதங்களைச்
சேர்த்து திருடத் தொடங்கினேன். கிடைத்த பல கடிதங்களை ஆய்வாளர் ரமேஷுக்குக் கொடுத்திருக்கிறேன். காவல்துறையில் நடக்கக்கூடிய சில ரகசியத் தகவல்களை எனக்கு அவர் சொல்லியிருக்கிறார். அதைப்போல எங்கு கொலை நடந்தாலும் எனக்கு முதல் தகவலாகச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிரதிபலனாகத்தான் கிடைக்கிற தகவல்களை, கடிதங்களைக் கொடுப்பதும். எனக்கு இப்போது இதுவே எதிராக அமைந்துவிட்டது. அப்படி அமைந்தது நான் உனக்குத் துரோகம் இழைத்ததால்கூட இருக்கலாம் என்று பயத்திலிருக்கும் என் மனசு ஆலோசிக்கிறது.
இறந்தோர் எழுதிய கடைசிக் கடிதங்களை எல்லாம் நீ சேகரித்து ஆய்வு செய்து வருகிறாய், அதில்தான் உண்மை இருக்கிறது என்று திடமாய் நம்புகிறாய் என்றும் நான் அறிவேன். ஆனால் உனக்கு உதவுகிற வகையில் நான் திருடியதில் ஒரு கடிதம்கூட அனுப்பியதில்லை. நீதிபதி கதிரேசன், அவர் மனைவி அதிதி பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் பரபரப்பு செய்தியை அறியாமல் இருக்கமாட்டாய் என்று தெரியும். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதிதியோடு பேசினேன். காவலர்களிடம்கூட வாய் திறக்காதவர் என்னிடம் எல்லாவற்றையும் தெளிவாகப் பேசினார். காவல்துறை ஆணையருக்குக் கொடுக்கச் சொல்லி என்னிடம் கடிதம் ஒன்றும் கொடுத்தார். கடிதம் வாங்கிய விவரத்தையும் அவர்களது வீட்டில் நீதிபதியினுடைய ஒரு நாட்குறிப்பேடு ஒன்றைத் திருடிய விவரத்தையும் ரமேஷிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அடுத்த ஒரு மணிநேரம் கழித்து யார்யாரோ என்னை விடுதி தொலைபேசியில் அழைத்து மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லா வழக்குகளையும் போல் இதையும் சாதாரண வழக்கு என்றே நினைத்திருந்தேன். மிரட்டல் வந்தபிறகுதான் இதன் பின்னே மிகப்பெரிய சதி இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்? யாரைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்? கேட்பது நாட்குறிப்பு பக்கங்களையா? அதிதி வாக்குமூலத்தையா? வழக்கை எப்படித் திசை திருப்பப் போகிறார்கள்? உடல் நலம் தேறிவிட்டதாகச் சொல்லி நன்றாகப் பேசிக்கொண்டிருந்த அதிதி எப்படி மருத்துவமனையிலேயே இறந்து போனார்? பின்னணியில் இருப்பது யார்? என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. அதிதியுடைய வாக்குமூலத்தையும் நீதிபதியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு முக்கியமான பகுதியையும் கிழித்து இத்தோடு அனுப்பியிருக்கிறேன். அதிதி சொல்லியிருப்பதைப் பெரும்பாலும் படிப்பதற்குத் தவிர்க்கப் பார். ஒருவேளை படிப்பதாக இருந்தால் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு படி. உன் பழைய வாழ்க்கையை இத்தோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளாதே. கடிதமோ, நாட்குறிப்பேடோ என்னிடம் இல்லை... விளையாட்டுக்குச் சொன்னேன் என்று ரமேஷிடம் அடித்துச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். இதை ரமேஷ் நம்புவதாகத் தெரியவில்லை. நாட்குறிப்பின் மற்ற சில முக்கிய பக்கங்களை கன்னிமாரா நூலகத்தின் ஹிந்திப் பிரிவு அலமாரியில் கறுப்பு மை அடையாளமிட்டு ஒரு புத்தகத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன். ரமேஷ் அதிகம் வலியுறுத்தினால் அவரை இன்னும் நான் நம்புவதுபோல் காட்டிக் கொண்டு நூலகத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ள பக்கங்களை எடுத்துக் கொடுக்கப் போகிறேன். உனக்கு அனுப்பியுள்ள இரண்டையும் பத்திரமாக எங்காவது பதுக்கி வை. எனக்கு இரண்டும் அவசியம் தேவைப்படக்கூடியவை. பத்திரிகை முதலாளியிடம் சொல்வது வீண். கச்சிதமாக வாங்கி அவர்களிடமே கொடுத்துவிடுவார்கள் என்பதை அனுபவத்தில் கற்றிருக்கிறேன். அம்மாவிடம் இந்தத் தகவல்களைத் தயவு செய்து சொல்லாதே. இது என் கடைசிக் கடிதமாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படியிருந்துவிட்டால் என்ன ஆவது என்றுதான் விரிவாக எழுதியிருக்கிறேன். இது உனக்கு என் இறுதிப் பரிசுடன் கூடிய சாட்சியமாகவும் இருக்கலாம்.

அன்புடன்,பெனீட்டா
இறப்புச் செய்தி - 3அதிதியின் கடைசிக் கடிதம்
உயர்திரு. காவல்துறை ஆணையர் அவர்கள்,சென்னை.
வணக்கம்.
நீதிபதி கதிரேசன் மனைவி அதிதி எழுதுகிற கடிதம். என்னுடைய சுயநினைவோடே இக்கடிதத்தை எழுதுகிறேன். பெற்றோர் உறவை முறித்துக்கொண்டு நானாக விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை இது. மனைவி என்கிற உரிமையை அன்பு செலுத்துகிற கணவன் கொடுத்தால் மட்டும் போதும், வைப்பாட்டி, குடும்பம் கெடுத்தவள் என்று சமூகம் எப்படியாவது அழைத்துவிட்டுப் போகிறது என்றுதான் என்னை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் சமூகத்தில் உள்ளவர்களால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னுடைய முகத்துக்கு நேராக யாரும் இதுவரை எதுவும் சொன்னதில்லை. ஒருவேளை எனக்குப் பின்னால் சொல்வார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் கதிரேசன் எனக்குச் செய்தவை; கொடுமைகளுக்கே அடுக்காதவை. வைப்பாட்டியாகவும் வைத்துக்கொள்ளாமல் அதற்கும் கீழாகத்தான் என்னை நடத்தினார். அவர் வழக்கத்தில் சொல்வதானால் மிருகமாய்.
போதைப் பொருளைப் பயன்படுத்துவதுபோல நினைக்கிறபோதெல்லாம் அவருக்கு நான் வேண்டும். அது மாதவிலக்கான நாளாக இருந்தாலும் சரி. மனப் பதற்றத்திலும், வலியோடுகூடிய தொடர் இரத்தப்போக்கிலும் முடியாமல் தவிக்கிறபோதுதான் அவர் அதிகம் தொந்தரவு செய்வார். இரத்தவாடை கிளர்ச்சியை அதிகப்படுத்துகிறது என்பார். அருவருப்பில் நானே நெளிந்துகொண்டிருக்கையில் எப்படித்தான் அவருக்குக் கிளர்ச்சியடைகிற புத்தி வருமோ எனக்குத் தெரியவில்லை.
விருப்பத்திற்கு இணங்காமல் இருக்கமுடியாது. மறுத்தால் உயிர் போகிற அடி விழும். அந்த நேரத்தில் அழவும்கூடாது. அப்படி அழுதாலும் வெளியில் கேட்காமல் அழவேண்டும். அதிகம் கேட்டுவிட்டால் அதற்கு விதவிதமான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். 'சல்லாபிக்க மட்டுமே படைக்கப்பட்ட பெண் மிருகம் நான். அதைத் தாங்குவதற்கான வலிமை இயற்கையாகவே உண்டு. அதனால் அழைக்கிற போதெல்லாம் இணங்க வேண்டும்' என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம் நாகரீக வார்த்தைகளால் சொல்கிறேன். துணிவாக எல்லாவற்றையும் எழுதுகிற மனநிலைக்கு நான் வந்துவிட்டாலும்கூட அவர் பயன்படுத்துகிற கொச்சை வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி எழுதுவதற்கு கூச்சமாக இருக்கிறது. கல்லூரியில் தத்துவவியல் படித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருந்தால் இந்தளவுக்குக்கூட எழுதுவதற்குத் துணிந்திருக்க மாட்டேன். எனக்கேற்பட்ட தனிப்பட்ட வதைகளைக் காட்டிலும் அவருக்கு உடந்தையாக நான் செய்த பாவங்கள்தான் இந்தத் துணிவைக் கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

இதுவரை அவருக்காக ஏழு பிள்ளைகளைக் கொன்றிருக்கிறேன். கருவைக் கலைப்பதை அவர் வேண்டுமானால் கொலையாகப் பார்க்காமல் இருக்கலாம். கருக்கொண்டதுமே, அந்தக் கருவுக்கு ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ ஒரு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து, அதற்குச் சோறு ஊட்டி, அதோடு விளையாடி, பள்ளிக்குக் கொண்டு போய்விட்டு, வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்து, அடம் பிடிக்கிறபோது குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு... என்று வயிற்றைத் தடவிக் கொண்டே கற்பனையில் முழு தாயாக மாறிவிடுகிற உணர்ச்சி சுரக்கப்பெற்ற என்னால் அப்படிச் சொல்ல முடியாது. முதல் கருவைக் கலைத்துவிட அவர் சொன்னபோது முதலில் நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர் மேலிருந்த ஈர்ப்பால் அவர் சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டுமே என்பதற்காக ஒத்துக் கொண்டேன். அப்போது நானும் கொஞ்சம் காலம் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கலாம் என்கிற தவறான திணிப்பில் ஊறிப் போயிருந்தேன் என்பது உண்மைதான். அதற்காக ஏழு பிள்ளைகளையும் நான் பறிகொடுப்பேன் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தாய்மையோடு திளைப்பதும், பறிகொடுப்பதுமாகவே கதறியிருக்கிறேன். என்னுடைய வயிறு சவப்பெட்டியாகவே மாறிவிட்டது போன்ற நினைப்பே அடிக்கடி வருகிறது. ஏழு பிள்ளைகளையும் பறிகொடுக்காமல் அவர் வீட்டை விட்டே வெளியேறி வந்திருக்கலாம். மனம் மாறிவிடுவார் என்கிற நப்பாசையிலேயே அனைத்தையும் இழந்துவிட்டேன். பெற்றோரையும் உதறிவிட்டு வந்தபிறகு எங்கு போவதென்று தெரியவில்லை.
என் மூலமாக அவருக்கு வருகிற இன்னொரு குழந்தையை, உண்மையாகவே அவர் விரும்பவில்லை என்பதை உணர்ந்த பிறகு ஒருகட்டத்தில் நான் இறங்கியும் வந்தேன். குழந்தை வேண்டாம் என்றால் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாம் என்று கூறினேன். என் வகைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் வகைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. இயற்கைக்குத் தடை போடக்கூடாது என்று சொல்லிவிட்டு, மாதவிலக்குக்கு முன் பத்து நாள் பின் பத்து நாள்களில் கருவாகாது என கணக்கு சொல்வார், கணக்கைச் சரியாய்க் கடைப்பிடிப்பவர் போல. கலைப்பது இயற்கைக்குத் தடையில்லையா என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு நான் அனுபவித்த சித்திரவதையை வேறு யாருமே அனுபவித்திருக்க முடியாது.
இந்தச் சித்திரவதைகளுக்கெல்லாம் பழிவாங்குகிற வகையில்தான் உயிர் போகிறவரை அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். திங்கள்கிழமை காலை என் ஏழாவது பிள்ளையைக் கலைப்பதற்குப் போனபோதுகூட அவரைக் கொல்லுகிற எண்ணம் எனக்கு இல்லை. இரண்டு முறைகளுக்கு மேல் எந்த மருத்துவரும் கரு கலைப்பு செய்வதில்லை. ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லித்தான் செய்து வந்திருக்கிறேன். இந்த முறை ஓரிடத்திற்குச் சென்றபோது, அதிக முறை கலைத்திருப்பதை அறிந்த மருத்துவர் ஒருவர் திட்டி விரட்டிவிட்டார். கலைப்பதற்காக வந்த பெண்கள்தான் அங்கு நிரம்பியிருந்தாலும் அந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இறந்துவிட வேண்டும்போல இருந்தது. அழுதுகொண்டே வெளியே வந்துவிட்டேன். பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று அழுது கெஞ்சி அதிக பணம் கொடுத்து சம்மதிக்க வைத்தேன். அந்த மருத்துவரும் இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் செய்தால் உன் உடம்பு தாங்காது என்றும் சொன்னார். சின்ன கருவாக இருப்பதால் மாத்திரையிலேயே கரைக்க முடிவெடுத்தார். முத்தின கருவாகிற வரை நாள் கடத்தாமல் சின்ன கருவாக இருக்கிறபோதே கலைக்க அனுப்புகிற கரிசனம் அவருக்கு உண்டு. வழக்கமாக வீட்டிற்கு வந்து மாத்திரை போட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு கரு கலைந்து இரத்தப்போக்கு அதிகரித்து சதை கட்டிக்கட்டியாக வெளியேறும். இந்த முறை மாத்திரை போட்டு இரண்டு நாள்கள் கடந்தும் இரத்தப்போக்கு இல்லை. எனக்குப் பயம் அதிகமாகிவிட்டது. என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்திலேயே கிடந்தேன். அவரிடம் சொன்னபோது கரு முத்தியிருக்கும் மருத்துவரிடம் போ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிவிட்டார். புதன் கிழமை காலை பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். அலுவலக நேரம் என்பதால் பேருந்தில் ஒரே கூட்டம். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக காரில்கூட அவர் அனுப்புவது கிடையாது. துணைக்கு யாரையும் அழைத்துக் கொள்ளாமல், யாரோபோல் போகவேண்டும். யாருக்கும் தெரியாமல் கலைத்துவிட்டு வரவேண்டும். இரண்டு நிறுத்தங்கள் பேருந்து கடந்திருக்கும். திடீரென எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. பதற்றம் அதிகரித்து உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது. நாப்கின் வைத்திருந்தேன். இருந்தாலும் அது தாங்காது. அடுத்து சதை கட்டிக்கட்டியாக வெளியேறத் தொடங்கும். இரத்தம் கொட்டும். புடவையெல்லாம் இரத்தமாகிவிடும். பேருந்தில் எல்லோர் முன்னும் அசிங்கம்பட வேண்டியிருக்கும் என்று நினைத்து விறுவிறுவென எழுந்து அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இறங்க வேண்டும் என்று பின் படிக்கட்டு பக்கம் போனேன். வெடுக்கென வயிற்றிலிருந்து சதைத் துண்டு கழன்று விழுந்து இரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. இரண்டு கால்களிலும் இரத்தம் ஓடியது. பாவாடை ஊறி மயக்கம் கண்ணை மறைக்கிறது. பேருந்தை நிறுத்த சொல்லி அடிவயிற்றில் இருந்து சத்தம் போட்டேன். அந்த நேரத்தில் என்னைப்போலவே பலரும் நிறுத்தச் சொல்லி கத்தியது மட்டுமே நினைவு இருக்கிறது. பேருந்து நின்றதா அல்லது ஓடிய பேருந்திலிருந்து குதித்தேனா தெரியவில்லை. சாலையின் குறுக்கே ஓடி ஒரு ஆட்டோவில் ஏறி, கையிலொரு துணி இருந்தது அதைப் போட்டு உட்கார்ந்துகொண்டேன். ஆட்டோக்காரர் என்ன புரிந்துகொண்டார் என்று தெரியவில்லை. என்னை எதுவும் கேட்கவில்லை. அழுதுகொண்டே முகவரியை மட்டும் சொல்லிவிட்டு அங்கு தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டேன். நிமிர்ந்து பார்க்கவேயில்லை. வீட்டு வாசலுக்கு வந்ததும் கையிலிருந்த பணத்தை அப்படியே எடுத்து ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிட்டு, எதுவும் சொல்லாமல் வாசல் கதவைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் ஓடி வந்துவிட்டேன். உட்கார்ந்த இடத்தைச் சுற்றி இரத்தம் ஓடிக் கிடந்தது.

பாவம், என்னைப் பார்த்ததும் வேலைக்காரச் சிறுமி அலறிவிட்டாள். 'என்னக்கா...என்னக்கா... இரத்தம்' என்று பதறியடித்துக் கொண்டு வந்தாள். அவளைத் தள்ளிவிட்டு எனது அறைக்குள் ஓடி, கதவைச் சாத்திவிட்டு எல்லாவற்றையும் அவிழ்த்துப்போட்டேன். உடம்பெல்லாம் ஒரே அருவருப்பாக இருந்தது. சதைத் துண்டுகளை கழிப்பறையில் போட்டு தண்ணீரைக் கொட்டவைத்தேன். குமட்டிக்கொண்டு வாந்தி வந்தது. விடாமல் நெஞ்சு வலித்துக் கொண்டே இருந்தது. நாலு முறை இதைப்போல இரத்தத்தோடு சதைத் துண்டுகள் வெளிவந்தது. உடைகளை மாற்றுவதும் குளிப்பதும் மயங்கிக் கிடப்பதுமாகவே இருந்தேன். இரத்தப்போக்கு நிற்காமலேயே இருந்தது. சிறு சதைப் பிசுறு வேறு வெளியில் வராமல் அடைத்துக் கொண்டிருந்தது. அதை எடுப்பதற்கு மீண்டும் மருத்துவமனைக்குத்தான் போகவேண்டும். கொறடா போன்ற ஒன்றை வைத்து முன்பொரு முறை சுரண்டி எடுத்திருக்கிறார்கள். அதைப்போல்தான் இதையும் எடுக்க வேண்டியிருக்கும். என்ன பாடுபட போகிறேனோ என்று நினைத்தபடியே அன்று முழுதும் கிடந்தேன். இரவு வந்தவர், இதையெல்லாம் தாங்கிக் கொள்வாய் என்று சிரித்தபடியே நெருங்கி வந்தார். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்றே தெரியவில்லை. வெறிபிடித்தவள்போல அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினேன். கத்தி ஒன்று கையில் கிடைத்தது. எடுத்து அவரை விரட்டிவிரட்டிக் குத்திக் கொன்றேன். இறந்துகிடந்தவரை பார்க்கப் பார்க்க பயம் அதிகரித்து விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்டேன். மயங்கி விழுந்துவிட்டேன்.
12.08.1988 உண்மையுடன்,இரவு: 12.30 அதிதி
என் குறிப்புகள் :
(i) மூன்று பேரிடம் கடிதங்களைப் படிக்கக் கொடுத்திருந்தேன். மிருக எண்ணம் கொண்டவராக ஒரு நீதிபதி இருப்பார் என்பதை அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதேசமயம் பீஹாரைச் சேர்ந்த நீதிபதியாக இருந்தால் நம்பலாம் என்கிறார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவியிலிருந்த குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கே பிடிவாரண்ட் பிறபித்தவர்களாம்.
(ii) நாட்குறிப்பை இவ்வளவு விரிவாக யாராவது எழுதுவார்களா? என்றார் ஒருவர். உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில்தான் சிலர் நாட்குறிப்பே எழுதுவார்கள். அது மூன்று மாதத்துக்கு ஒருமுறையாகவும் இருக்கலாம்.
ஐந்து மாதத்துக்கு ஒரு முறையாகவும் இருக்கலாம். நிகழ்வைப் பொறுத்து விரிவாகவும் எழுதுவார்கள் என்றார் மற்றொருவர்.
(iii) எனக்குத் தெரிந்து பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கு: நிகழ்ந்தது 1972-ம் வருடம். மகாராஷ்டிரா சந்திரபூர் மாவட்டத்தில். மாதுரா என்ற இளம்பெண் துகாராம் மற்றும் கண்பத் என்ற இரு காவலர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளானாள். அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 1974-வருடம் வழக்கை விசாரித்து, மாதுரா நடத்தை கெட்டவள், அவள் சொல்வதை நம்பமுடியாமல் இருக்கிறது என்று காவலர்களை விடுவித்தது. பிறகு மும்பை நீதிமன்றத்துக்கு வழக்குப் போனது. அங்கு காவலர்களுக்குக் கடுங்காவல் தண்டனை அளித்தது. உடனே காவலர்கள் மேல் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள். அங்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கச் சொல்லப்பட்ட காரணங்களுள் ஒன்று: மாதுரா உடலில் வெளிக் காயங்கள் ஏதும் இல்லை.
(iv) வன்புணர்ச்சி குற்றத்தை நிரூபிக்க பெண் கூச்சலிட்டிருக்க வேண்டும், காயங்கள் இருக்கவேண்டும், நேரடி சாட்சியங்கள் இருக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம் சட்டம் ஆண்கள் பாதுகாப்பில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று அபிலாஷ் என்கிற நண்பர் ஒருவர் கூறுகிறார்.
(v) விருப்பத்தின் காரணமாக நீதிபதி கதிரேசன் கொலை வழக்கு வந்த செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென பழைய பத்திரிகைகளில் தேடினேன். அப்போது 19.08.1988}அன்று பத்திரிகைகளில் வந்திருந்த செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. 'காதல் தோல்வியால்; இளம்பெண் தற்கொலை' என்ற தலைப்பில் விடுதியில் பெனீட்டா தூக்குபோட்டு இறந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறது. கதிரோடு இருந்த காதலை அவரது பெற்றோர் விரும்பவில்லையாம்.
(vi) பெனீட்டா இறப்பு செய்தியைப் படித்தபிறகு ஆனி மீதுதான் எனக்கு முதலில் கோபம் வந்தது. கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஆனி நடவடிக்கை எடுத்திருந்தால் பெனீட்டாவைக் காப்பாற்றியிருக்க முடியும். நடவடிக்கை எடுக்க முடியாதளவுக்கு அப்படி என்ன சூழல் என்றுதான் தெரியவில்லை. சூழல்தானே எல்லாக் குற்றத்துக்கும் காரணியாக இருக்கிறது. (அதிதி கடிதத்தையாவது காவல்துறை ஆணையரிடம் கொடுத்திருக்கலாம். இருவருமே அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் புரியவில்லை.)
(vii) கன்னிமாரா நூலகத்திற்குப் போனபோது கறுப்பு மையிட்ட புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று ஹிந்திப்
பிரிவில் தேடிப் பார்த்தேன். ஒரு புத்தகம் இருந்தது. ஆனால் அது 2004-ல் பிரசுரிக்கப்பட்ட புத்தகம்.
(viii) அதிதி கடிதத்தின் எழுத்து நடையைப் பார்க்கிறபோது, மருத்துவமனையில் அவர் சொல்லியதையெல்லாம் பெனீட்டா எழுதி கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த வரிகளைப் படிக்கிறபோது : /ஒவ்வொரு முறையும் தாய்மையோடு திளைப்பதும், பறிகொடுப்பதுமாகவே கதறியிருக்கிறேன். என்னுடைய வயிறு சவப்பெட்டியாகவே மாறிவிட்டது./
(ix) கருக்கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு மாத்திரை இருக்கிறது, அதைப் பயன்படுத்திருக்கலாமே என்றொரு சந்தேகம் வந்தது. ஒரு மருத்துவரிடம் கேட்டபோது, அது தவறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
(x) நாளமில்லாச் சுரபிகள் சமச்சீரற்ற தன்மையாய் இருக்கிறபோது ஒருவர் குற்றமிழைப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் அதிகம் கோபப்படுவதைக் காணலாம். இரத்தத்திலேயே புரண்டுக் கொண்டிருந்த அதிதிக்கு கொலை செய்கிறளவுக்கு ஆவேசம் வருவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
(xi) எல்லாவற்றிலும் அடிநிலையில் உள்ளவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கார் ஓட்டுநர் பூபதியும் வேலைக்காரச் சிறுமி கோகிலாவும் காவலர்களால் படாதபாடு படுத்தப்பட்டிருப்பார்கள் போலத் தெரிகிறது. 'அந்த அக்கா இரத்தத்தோடு ஓடி வந்ததைப் பார்த்தேன். வேறொண்ணும் எனக்குத் தெரியாது. இரவில் அவர்கள் வீட்டில் தங்குவதில்லை' என்று மட்டும் சொல்லியிருக்கிறாள் அந்தச் சிறுமி.
(xii) அதிதியினுடைய உடலை யாருமே வாங்க முன்வராமல், அனாதை பிணமாகவே அது எரிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி:புதுவிசை

Thursday, September 3, 2009

பிரசவம்


பிரசவத்திற்காக வந்திருக்கிறது
வெள்ளைப் பூனை.
பரண் மேல் ஒண்டியிருக்கும்
அதற்கு
குளிரூட்டப்பட்ட அறையில்
காற்றால் நிரம்பிய
மெத்தையமைத்துக் கொடுக்கலாம்
நாலைந்து மருத்துவர்களை
எப்போதும் உடனிருக்க வைக்கலாம்
பிரசவ வலி தெரியாதிருக்க
அதன்
தலையை, உடலைக் கோதி விடலாம்
ஈன்று சோர்கையில்
பெரிய வஞ்சீர மீனை
உண்ணக் கொடுக்கலாம்
பத்தொரு தாதிகளை நியமித்து
குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும்
பனிக்குட நீரைக் கழுவலாம்
பால் காம்புகளை
சிறு நேரமும் தேட விடாமல்
முதல் பருகலுக்குத் துணை புரியலாம்
நாய்கள்
கழுகுகள்
வாகனங்கள் நுழையாத
கூரை வேய்ந்த மைதானம் அமைத்து
அவற்றை விளையாட விடலாம்
இன்னும்
இன்னும்
என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
அதற்கு முன்-
என் மீதான
அதன் நடுக்கத்தைப் போக்க
என்ன செய்ய?
நன்றி: உயிரோசை

Tuesday, September 1, 2009

வொரு மொற மதி - சிறுகதை1978-ல வொரு மொற மதி
---------------------------------
நாலாம் வகுப்பு படிக்கிறப்ப, வொரு வொற மதி, பள்ளிக்கொடத்துல இருந்து ஆஃப் டேவுலயே வீட்டுக்கு வந்தான் . வந்தவனுக்கு வொரே அதிர்ச்சி. தாத்தா காப்பி குடிச்சிக்கிட்டு உசிரோடு உக்காந்திருந்தாரு. எப்டியாவது தாத்தா செத்திருக்கணும்னு வர்ற வழியெல்லாம் வேண்டிக்கிட்டே வந்துது பலிக்கவே இல்ல. 'ஒக்காளவோழி சாமிங்க'. 'வாத்தி செத்துட்டாரு அதான் லீவு' ன்னு தாத்தாட்ட சொல்லிட்டு பசங்களோடு காட்டாமணிச் செடி காட்டுக்குப் போனான். காய்ஞ்ச பறங்கித் தண்ட பீடியா பிடிச்சுக்கிட்டு யாருக்கும் தெரியாம மறைவுல உக்காந்திருந்தான். பள்ளிக்கொடத்துக்கு டிமிக்கி கொடுத்துதுக்குக் காரணம் கேட்டான் சுப்பீ...பீ. 'பசங்கெல்லாம் என்ன மலர்விழி... மலர்விழினு கூப்பிட்டானுங்க. அட்டனென்ஸ கிழிச்சிப் போட்டுட்டேன். முண்டக்கண்ணு வாத்தி தெரிஞ்சா அடிப்பாரு. அதான் தாத்தா செத்துட்டாருன்னு சொல்லிட்டு வந்துட்டேன்'னான். அட்டனென்ஸýக்கும் மலருக்கும் என்ன கனெக்ஷன்னு கேட்டான் மாக்கான். ஆம்பளைங்க பேரையும், பொம்பளைங்க பேரையும் தனித்தனியா எழுதி வைச்சிருக்கானுங்க. அவவன் பேருக்கு நேரா வர்றது அவவன் செட். எனக்கு மட்டும் அந்தச் சப்ப மூக்கி மலர்விழி பேருன்னான். ஓசிப்புள்ள சும்மா இருக்காம, "மலர்விழி..மலர்விழி'ன்னு மதிய கூப்பிட்டான். விரலை மடக்கி, முறிக்கின கையிக்கு வொரு முத்தம் கொடுத்து, ஓசிப்புள்ள மூஞ்சில மதி ஓங்கி வொரு குத்துவுட்டான். பதிலுக்கு ஓசிப்புள்ளயும் செடி மேலயே மதியப் போட்டு பொரட்டி, டவுசரையும் அவுத்துவுட்டான். பச்சப் பாம்பு வொண்ணு போறத பாத்துட்டு திடீர்னு கருப்பன் கத்துனான். பசங்க அப்டியே திருப்பிக்கிட்டு பாம்ப வெரட்ட ஆரம்பிச்சானுங்க. அரணாக்கயிற டவுசர் மேல இறுக்கிக் போட்டுக்கிட்டு மதியும் பாம்ப அடிச்சிப்போட்டு வீடு வந்தான். செத்துப்போன வாத்தி, தாத்தனோடு உக்காந்திருந்தாரு. வொரே சமயத்தில ரெண்டு பேரயும் சாகடிச்சதற்காக மதிய நைய்ய புடைச்சா அம்மாக்காரி. ஆம்படையான் அவள அடிக்கும் முறையில வொண்ணு மிச்சமிருப்பது நெனவுக்கு வந்துது. அதயும் யோசிச்சு அடிச்சு முடிச்சா. அட்டனென்ஸ கிழிச்சுதுக்கு அடிவாங்க மதி, உடம்பு முழுக்க வெளக்கெண்ண தடவிக்கிட்டு மறு நா பள்ளிக்கொடம் போனான்.

1988-ல வொரு மொற மதி
----------------------------------
'பேரன்களுக்கு நடுவுல வொரு பெரியவரு உக்காந்திருக்காரே .... அவுரு கொஞ்சம் எழுந்திருக்க முடியுங்களா'ன்னு மதிய மரியாதயா எழுப்பாத வாத்திகளை உடனே வீட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு ஏதோ வொரு கல்வி அதிகாரி உத்தரவு போல. எந்த வாத்தியும் அந்த உத்தரவ மீறுறதில்ல. எட்டாம் வகுப்ப நாலு வருஷம் பலமா படிக்கிற மதிக்கு இந்தச் சின்ன மரியாதகூட கொடுக்கலன்னா அநியாயமா இல்லாம பின்ன என்னன்னு அவரு தெருவாசிக மத்தியிலகூட பரவலா பேச்சு. ஆனா, பேரன்கதான் பாவம். பெரியவர வாத்திக எழுப்பும்போது பேரன்க எவனாவது சிரிச்சிப்புடுவானுக. தேன்மிட்டாய் வாங்கிக் கொடுத்தாலும் சிரிச்ச பேரனுகள பெரியவரு விடமாட்டாரு. இன்டர்வெல் நேரத்துல வெரட்டிவெரட்டி அடிப்பாரு . மரியாத தெரியாத பயலுககூட இனி சேர்ந்து படிக்கக் கூடாது. எப்டியாவது எட்டாவது முடிச்சிட்டு ஒன்பதாவது வேற பள்ளிக்கொடத்துல போயி சேர்ந்துடணும்னு இப்பெல்லாம் வெறியோடு படிக்கிறாரு. இன்னிக்கிக்கூட இங்கிலீசு, சைனஸ் வாத்திக கொடுத்த வீட்டுப்பாடம் அத்தனயயும் முடிச்சிட்டு வந்து காட்டி சபாஷ் வாங்கிட்டாரு. அடுத்து மேக்ஸ் பீரியட். பயலுக எல்லாம் சேர்ந்து, "வீட்டுப்பாடம் ஏன்டா செய்யலன்னு டீச்சர் கேட்டா...சொல்லிக்குடுத்துது புரியல டீச்சர். இன்னொரு தடவ சொல்லிக்கொடுங்கன்னு கேட்கணும்'னு முடிவெடுத்தானுக. பெரியவரு வொத்துக்கவே இல்ல. காயத்ரி டீச்சர் வந்து கேட்டாக. எல்லாப் பயலும் புரியலைன்னுட்டானுக. பெரியவரு மட்டும் எல்லாக் கணக்கும் போட்டிருந்தாரு. நோட்ட வாங்கி பாத்து அசந்துட்டாக. இந்த மாதிரி நேரத்துல வொண்ணாம் வகுப்புக்கு ட்யூசன் எடுக்கிற, எட்டாம் வகுப்புல பெயிலாகி, வீட்லயே உக்காந்திருக்கிற டீச்சர் மாதிரிககூட பழமொழி சொல்றது வழக்கம். "பாருங்கடா.. வரவர மாமியாரு துடைப்பக்கட்ட மாதிரி ஆனாருங்கிறது போல நீங்க ஆயிட்டீங்க. பெரியவரு அசத்திட்டாரு பாருங்கடா'. "டீச்சர் தப்பா சொல்றீங்க... கழுத மாதிரி டீச்சர்'. "தெரியும் சும்மா இருங்கடா... பெரியவரே! அப்படியே நீங்க போட்ட கணக்கு எல்லாத்தயும் பசங்களுக்கும் போர்டுல போட்டுக் காட்டிடுங்க. பசங்க கத்துக்கிட்டும்'. பெரியவரு சாக்பீஸ எடுத்துக்கிட்டுப் போய் போர்டுகிட்ட நின்னாரு..நின்னாரு...ரொம்ப நேரம் நின்னாரு. எல்லாம் மறந்துபோச்சு டீச்சர்ன்னாரு. "நோட்டுல நீதான போட்ட ... அதை அப்படியே போர்டுல போடப் போற அவ்வளவுதான். நான் பக்கத்துலயே இருக்கேன். பயப்படாம போடு.' ஊக்கு விக்கிறதுல காயத்ரி டீச்சருக்கு நிகரா வேற்று கிரகத்துலயும் யாரும் இருக்கப் போறதில்ல. "பெரியவரு எங்க டீச்சர் போட்டாரு. வெற்றி நோட்ஸýல போட்டிருந்துது. அத அப்படியே எழுதிட்டு வந்தாரு'ன்னு பாவாடை போட்டுக்கொடுத்துட்டான். அடிக்கவே அடிக்காத டீச்சர் வேலயே போனாலும் பரவாயிலங்கிற ரேஞ்சுக்கு பெரியவர அடிச்சுது. டீச்சர துன்புறுத்துன துயரம் தாங்கமுடியாம அந்தப் பக்கமா போய்க்கிட்டிருந்த ஸ்டைல் வாத்தி உள்ள வந்தாரு. தேம்புன குரலுல டீச்சர் எல்லாத்தயும் சொல்லிச்சு. ஏற்கனவே ஸ்டைல் வாத்திக்கும் பெரியவருக்கும் முன்விரோதம் இருந்துது. ஸ்டைல் வாத்திக்கு "அன்டராயர் ஸ்டேன்ட'ன்னு இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அத பெரியவருதான் வச்சாரு. ஸ்டைல்வாத்திக்குப் பிடிச்சு இங்கிலீசு வார்த்த "அன்டர்ஸ்டேன்ட்'. தமிழ் வாத்தியா இருந்தாலும், "திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்... அன்டர்ஸ்டேன்ட்... அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால்களால் ஆனது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்... 133 அதிகாரமும், 1330 குறள்களும் கொண்டது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்'ன்னு எல்லாத்துக்கும் அன்டர்ஸ்டேன்ட் வார்த்தய சேர்த்து இங்கிலீசு பொலமைய காட்டுவாரு. வொரு வகுப்புல பெரியவரு, வாத்தி அன்டர்ஸ்டேன்னு சொல்ல சொல்ல, வொண்ணு ரெண்டு மூணு போடத் தொடங்கி பசங்க நூறு வந்தப்ப செஞ்சுரின்னு கத்தியும்பூட்டானுவ. கத்தின விவரம் கேட்டுத் தெரிஞ்ச வாத்தி பெரியவர கன்னத்துலயே "பளார்பளார்'ன்னு அறைஞ்சாரு. ஸ்டைல்வாத்தியாரில்லையா எப்பவுமே வித்தியாசமாதான் அடிப்பாரு. தங்கம் மோதரம் வொண்ணு போட்டிருப்பாரு. அதக் கழட்டி மேலே போடுவாரு. கீழ வர்றதுக்குள்ள கன்னத்துல அறைஞ்சிட்டு மோதரத்த பிடிப்பாரு. திரும்பவும் மேல போடுவாரு. அறைவாரு. பிடிப்பாரு. இன்னைக்கும் அப்டித்தான். ஸ்டைல்வாத்தியாரு மோதரத்த கழற்றி மேல போட்டாரு. ஆனா இன்னைக்குப் பெரியவரு மோதரத்த பிடிச்சாரு. ஒக்காளவோழின்னு கத்திக்கிட்டு வாத்தியாரு கன்னத்துல வொரு அறைவிட்டாரு. மோதரத்த பசங்க மேல தூக்கியடிச்சிட்டு, பையத் தூக்கிட்டுப் பள்ளிக்கொடத்த விட்டே போனாரு. போட்டுக்கொடுத்த பாவாட பயத்துல ஒண்ணுக்குக்கெல்லாம் போகாம வகுப்புலயே வயிறு கலங்க உக்காந்திருந்தான். சாங்காலம் பெல்லு அடிச்சதும் கூட்டத்தோடு கூட்டமா யாரயும் திரும்பிப் பார்க்காம வொரே ஓட்டமா வீட்டுக்கு ஓடுனான்.

1991-ல வொரு மொற மதி
------------------------------------
மாண்புமிகு. மதி அவர்கள்
பொதுப்பணித்துறை அமைச்சர்
கேட்கவே எம்மோ ரம்யமா இருக்கு. எப்டியும் ஆகியே தீர்றதுங்கிற நம்பிக்கையோடு வட்டம் ஜனாவோட கடைக்குட்டி அடியாளா இருந்து வர்றாரு மதி. சமீபமா மதி பொலிடிக்கல் கேரியர்ல மிகப்பெரிய சறுக்கல். அவருடைய அரசியல் வாழ்க்கயே சூன்யமானதுபோல இடிஞ்சிப்போயிட்டாரு. அது கொஞ்சம் சீரியஸôன விசயம்தான். மதியோட அரசியல் வழிகாட்டி செண்பகாதேவி. மாநிலக் கட்சி பக்கமா.. கவனம் செலுத்திக்கிட்டிருந்தவர, தேசிய கட்சி பக்கமா இழுத்து வந்ததே செண்பகாதான். கட்சி பக்கமாங்கிறதுல அதிகமா அவுங்க பக்கமாங்கிறதயும் சேத்துக்கணும். செண்பகா நடந்தா எந்தப் பட்டி ரோடாயிருந்தாலும் சும்மா அப்டி ஜிலுஜிலுங்கும். ஆனா செண்பகா வூட்டுக்காரருக்கு அந்த ஜிலுஜிலுப்பு தெரியவேயில. வொறையவிட உலகத்துல ஒசத்தி வொண்ணுமில்லங்றத தெளிவா புரிஞ்சிக்கிட்டவரு. ஆரம்பத்துல மதி மேல சின்னப்பய மீதான பார்வதான் செண்பகாவுக்கு இருந்துது. அது எப்டியோ தெரியல பொசுக்குனு ஒரு நா இராவு பெரிய பயலா தெரிஞ்சான். அதுக்கப்பறம்தான் அடக்கி ஒடுக்குற பெரிய மனுஷனா ஆயிடுவான்ல்ல. மதி வார்த்தக்கிக் கட்டுப்பட்டுத்தான் செண்பகா கொஞ்ச நா குளிக்கக்கூட செஞ்சாங்க. ஆனா, அரசியல் அல யாரயும் விடறதில்ல. கூட மதி இருக்கும்போதே வட்டம் எப்டியோ செண்பகாவ வளைச்சிட்டாரு. விஷயம் தெரிஞ்சு மதி கொதிச்சுப்புட்டாரு. நூல்நூலா அரசியல பிரிச்சி வட்டம் அலசுற எடத்துக்குப் போனாரு. ஏறுறதுக்கு ரெண்டு பக்கமும் படிக உள்ள மாடிக் கட்டடம் அது. பச்சை வெள்ள நிற டவுசர் தெரிய வேட்டிய தூக்கிக்கட்டிக்கிட்டு உக்காந்து, வட்டம் மாடியில சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தாரு. மேல வந்த மதி, "யாரு மேலடா கை வைக்கிற'ன்னு கத்துனாரு. "யார் மேல கை வைக்கிறதுக்கு, யாருட்டடா அனுமதி கேட்கணும்'னு வட்டமும் பதிலுக்குக் கத்துனாரு. அவ வூட்டுக்காரனே சும்மா இருக்கான், நீ யாருடா கேட்குறதுன்னு வட்டம் குத்திக் காட்டுறது தெரிஞ்சதும் மதிக்கு ரோசம் பொத்துக்கிட்டு. அடிக்கப் பாஞ்சாரு. மத்த அடியாளுக வேடிக்க பார்த்துட்டு சும்மா நின்னிருந்தானுக. வட்டம் மிரண்டு போயிட்டாரு. படி வழியா எறங்கி ஓடுனாரு. மதி விடாம வெரட்டுனாரு. கீழிறங்குனவரு இன்னொரு பக்க படி வழியா திரும்பவும் மாடிக்கே வந்தாரு. அரசியல் சமயோசிதம்னா இதான். வெளிய ஓடி எல்லாருக்கும் தெரிஞ்சா கட்சிக்குத்தான கெட்டப் பெயரு. ரெண்டு ரவுண்டு இப்டியே சுத்தி வந்தாக. அப்புறம் அடியாளுக மதிய பிடிச்சி விலக்கிவிட்டானுக. ரெண்டு ரவுண்டு சுத்துனதுல மதிக்கு ரோசம் கொஞ்சம் கொறைஞ்சு போயிருந்துது. "வெளிய வாடா.. உன்ன பெட்ரோல் ஊத்தி கொளுத்தாம விடமாட்டேன்'னு சொல்லிட்டு, மதி எறங்கிப் போயிட்டாரு. வட்டத்துக்கு கொல நடுங்கிடுச்சு. எறங்கிறத பத்தி யோசிக்கவே இல்ல. "வாங்க தலவரே நாங்க இருக்கோம். பாத்துக்குறோம்'ன்னு யார் சொல்லியும் வட்டம் கேட்கல. லூசுப் பய செஞ்சாலும் செஞ்சிப்புடுவான்டான்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்புறம் நாலைஞ்சு மணி நேரம் கழிச்சி, வொண்ணுக்கு ரெண்டு மூணு பேரா கீழ அனுப்பி, பார்த்துட்டு வரச்சொல்லிட்டுத்தான் எறங்கிப் போனாரு. நாலைஞ்சு நா மதியும் தனியாதான் சுத்திட்டிருந்தாரு. பாழாப் போன மனசு கேட்குமா... செண்பகாவ பாக்கப் போனாரு. "வட்டம் சும்மா... வொண்ணுத்துக்கும் லாயிக்கில்ல.. நீதான் எனக்கு எல்லாமும்...நம்ம பொலிடிக்கல் பேக்கிரவுண்டுக்கு ஏதாவது உதவுமே'ன்னு செண்பகா உருகுனதுல மதியும் தணிஞ்சு போனாரு. வட்டத்துக்கிட்ட மதிய திரும்பவும் செண்பகாவே அழைச்சு வந்தாக. வட்டத்துக்கும் வெட்கம். மதிக்கும் வெட்கம். "என்னடா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு சொன்ன'ன்னு வட்டம் இழுத்தாரு. "நான் ஏன் தலைவர உங்கள கொளுத்தறேன். என்ன நானே கொளுத்திப்பேன் தலைவரே'ன்னு மதி சொன்னாரு. உச்சி குளிந்துபோன வட்டம் அட்வைஸô அடுக்க ஆரம்பிச்சிட்டாரு. "தே பாருடா மதி... யானை மேல ஏறுணும்னு ஆசப்பட்டா மட்டும் போதுமா... அதுக்கு தகுந்த நீட்டு வேணா. சரி அத வுடு. வொரு சிட்டு இருக்கு. பேங்ல வேல. மாசம் பதிமூணாயிறம் சம்பளம். வூட்டுக்காரன் அவள வுட்டுட்டு எங்கயோ போயிட்டான். நீ அதுக்கு வொண்ணும் செய்ய வேணாம். அவ உனக்கு எல்லாம் செய்வா. நா தவறாம போயி, நீ ஏறிட்டு மட்டும் வந்தா போதும். என்ன சொல்ற... அவள கட்டிக்கிறியா'ன்னு ரொம்ப கரிசனமா கேட்டாரு. "ஒக்காளி இருடா எனக்கா பொண்ணு பாக்குற. உன் பொண்ண ஏறாம விடுறதில'ன்னு உள்ளுக்குள்ள கறுவிக்கிட்டே "அதலாம் வேணாங்க தலவரே'ன்னு மதியும் பணிவா சொன்னாரு. கட்சிக்கு விசுவாசமா நடந்து வட்டத்தவிட பெரிய போஸ்டிங்கும் வாங்கிடணும்னு மதி சபதமும் எடுத்தாரு. வொரு மொற அருமையான வாய்ப்பு கிடைச்சுது. அவங்க தேசிய கட்சித் தலைவரு திடீர்னு இராவுல செத்துப்போயிட்டாரு. மறு நா காலயில பதினோரு மணிக்கு மேலதான் மதிக்கு விசயமே தெரிய வந்துச்சு. கலாட்டா செய்றதுக்கு ஆளுகள அழைச்சுக்கிட்டு மெயின் சாலைக்கு வந்தாரு. ஒரு பய கட திறக்குல. எல்லா கடயும் பூட்டிக்கிடக்கு. மதி மனம் தளருல. நாம யாருனு காட்டணும். கிடைக்கிறதெல்லாம் இழுத்துப்போட்டு உடைங்கடான்னாரு. வெளியில மாட்டியிருந்த பல்பு, பெயர்பலக எல்லாத்தயும் உடைச்சானுக. மரப் பொருளுகள உடைச்சி கொளுத்திவுட்டானுக. மளிக கடக முன்னால உப்பு மூட்ட கிடந்துது. அதயும் எடுத்து நடு ரோட்டுல கொட்டுனானுக. ரெண்டு பக்கக் ரோட்டயும் மதி திரும்பிப் பார்த்தாரு. எரியுறதும், சிதறிக் கிடக்கிறதுமா பெரிய கலவர கோலமா தெரிஞ்சுது. மதிக்கு வெற்றி பெருமிதம். திரும்பித்திரும்பி பாத்துக்கிட்டே இருந்தாரு. திடீர்னு மதிக்கு காலயில சாப்பிடறப்ப வீட்டுல உப்பு இல்லன்னு சொன்னது நெனவுக்கு வந்துது. உடனே மதி ரோட்டுல கொட்டியிருந்த உப்ப அள்ளி லுங்கியில கட்டிக்கிட்டு வேகமா வீடு வந்து சேர்ந்தாரு.

1992- ல வொரு மொற மதி
----------------------------------
'தமில் இங்கிலீசு ரெண்டுமே நமக்குத் தண்ணிப்பட்ட பாடுதான். இருந்தாலும் தமில்லயே பேசுங்க 'ன்னு எலெக்ஷன் ஆபீசருட்ட மதி சொன்னாரு. "நூறு மீட்டருக்கு அப்புறம்தான் எதுவா இருந்தாலும் வச்சுக்கணும். இது கடைசி வார்னிங். இன்னொரு தடவ இங்க நின்னு சீட்டுக் கொடுத்தா உள்ள வச்சிடுவேன் பார்த்துக்கோ'ன்னு எலக்ஷன் ஆபீசரு சொன்னாரு. "இதுக்கு எதுக்கு இங்கிலீச கோதாவுல எறக்குறீங்க. தமில்யே சொல்லலாம்'லன்னு சொல்லிட்டு, சத்தம் போடாம நூறு மீட்டர கடந்த மதி, "எதுவா இருந்தாலும் நூறு மீட்டருக்கு அப்புறமா வச்சுக்குங்கன்னு சொல்றானே. அவன் பொண்டாட்டியையுமா?'ன்னு கூட இருந்த பசங்கள்ட்ட குதிச்சாரு. "அதயெல்லாம் பெரிசா எடுத்துக்காத மதி, நம்ம கட்சி ஜெளிச்சிடுங்கிற பயத்துல, கோதண்டன் எலக்ஷன் ஆபீசர்ட்ட போட்டுக் கொடுத்திருப்பான்... எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும் சொல்லு'ன்னு மொட்டயன் எடுத்துக் கொடுத்தான். "நம்ம கட்சி ஜெளிச்சிடும்னு என்னம்மா மொட்டயன் ஏத்திவிடுறா'ன்னு மதி உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டாரு. நேத்தே வட்டம் மதி கிட்ட தெளிவா சொல்லிட்டாரு. நம்ம கட்சி தோக்குறதுங்கிறது உலகறிஞ்ச உண்ம. ஆனா நாம தோக்கக் கூடாது. அதான் அரசியல் சாணக்கியம். எம்.எல்.ஏவா எந்த மயிராண்டியாவது வரட்டும். நம்ம கடம என்னான்னா மத்த வட்டத்துல நம்ம கட்சிக்கு விழுற வோட்டவிட நம்ம வட்டத்துல அதிக வோட்டு விழ வைக்கணும். அப்படி விழுந்திடுச்சின்னா... எப்படியாவது மாவட்டமாயிடுவேன். செண்பகா மாவட்ட மகளிரணி தலவி, நீ மாவட்ட இளைஞரணி தலவர் பாத்துக்கோன்னு சொல்லிட்டாரு. வட்டத்தோட அந்த வார்த்தகதான் மதிய இந்தப் போடு போட வைக்குது. பூத்துக்கு வெளிய நின்னுக்கிட்டு பெயரெழுதி நம்பர எழுதி சீட்ட கொடுத்துக்கிட்டே ஆட்டோக்காரங்கள எல்லாத் தெருவுக்கும் வெரட்டிக்கிட்டிருந்தாரு. வொவ்வொரு தெருவா போயி மதி கட்சியாளுக இன்னைக்குப் போறது, நாளைக்குப் போறது, நேத்தே போனதையெல்லாம் பீறாஞ்சி எழுப்பி உக்கார வைச்சி ஆட்டோவுல ஏத்திவிட்டானுக. வர்ற வழியெல்லாம் மதி கட்சி மத்த மாநிலத்துல செஞ்ச நல்லதையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்து எறக்கிவிட்டு வோட்டு போடச் சொல்லிக் கேட்க ஆட்டோகாரங்களுக்கு மதி உத்தரவு போட்டிருந்தாரு. ஆட்டோகாரனுக நேரா மதி கிட்ட வந்து ஆட்டோவ நிறுத்துவானுக, ஆட்டோகாரனும் வோட்டுக் கேட்பான், மதியும் கேட்பாரு. உழைப்பாளிகளோடு அரும தெரிஞ்சவரில்லையா மதி, மதியம் நாலு புரோட்டாவும் குருமாவும் ஆட்டோகாரங்களுக்கு வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருந்தாரு வட்டம். ஆனா மதி எல்லோருக்கும் எட்டு புரோட்டாவும் குருமாவும் வாங்கிக் கொடுத்தாரு. வர்ற வழியில பிரசாரம் செய்றதுக்கும் வட்டத்துக்குத் தெரியாம இருபது ரூபா தனியா தரேன்னும் சொல்லிப்புட்டாரு. ஆனா என்னன்னா எலெக்ஷன் முடியறதுக்கு அஞ்சு நிமிஷம் இருக்கிறப்பதான் தெரியுது ஆட்டோக்காரனுக எல்லோருமே கோதண்டன் ஆளுகன்னு. வர்ற வழியில எல்லாம் கோதண்டன் கட்சி வேட்பாளர் போட்டாவ பாக்கெட்டுல இருந்து எடுத்துக் காட்டி, அவருடைய அரும பெருமகள வாசிச்சி வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கிட்ட வந்ததும் சும்மா மதி கட்சிக்கு வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கட்சியின் உண்மயான விசுவாசி ஒருத்தன் ஆட்டோவுல வந்தப்பதான் உண்மயே தெரிய வந்துச்சு. வட்டமும் மதியும் கொதிச்சிப்புட்டாங்க. ஆட்டோகாரனுகளை எல்லாம் கூலியே கொடுக்காம வெரட்டி அடிச்சாங்க. திரும்பவும் மொட்டயன் எடுத்துக்கொடுத்தான், "எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும்'. செண்பகாவும் கோதண்டன் பக்கம் சாயப்போறதா வொரு சேதி வந்துக்கிட்டிருந்தது. எலெக்ஷன் முடிஞ்சி எல்லாத்தயும் பாத்துக்கலாம்னு இருந்த வட்டத்துக்கு இதலாம் சேந்து கொலை வெறி வந்துச்சு. பயலுகள அழைச்சிட்டுப் போயி கோதண்டத்த தெருவுல ஓடவுட்டுப் வெட்டித் தள்ளிட்டு எல்லோருமா ஜெயிலுக்குப் போனாக. ஆனா எவன் நினைக்கிறதும்தான் எப்பவுமே நடக்காதே. மதி கட்சி அந்தத் தேர்தலுல ஜெளிப்புன்னா ஜெளிப்பு அப்டியொரு ஜெளிப்பு. ஆறே மாசத்துல வெளிய வந்துட்டாங்க. கொல செஞ்ச வீரங்க இல்லையா நெஞ்ச நிமித்திக்கிட்டுத்தான் செட்டு செட்டா எல்லா எடத்துக்கும் போனாங்க. எது வரைக்கும் அப்டிப் போக முடியும்? கோதண்டம் தம்பிக அழகா ஸ்கெட்ச் போட்டாங்க. முதல்ல வட்டத்தயும், ரெண்டாவது மொட்டையனையும் நடு ரோட்டுலேயே ஓட வுட்டு கண்டம்துண்டமாக்கினாங்க. வெளிய போறதயே மதி நிறுத்திட்டாரு. நாலஞ்சு பேரா வெரட்டி வந்து வெட்டுற கனவு வந்துக்கிட்டே இருந்தது. வொரு மொற கட்டையன் அவன் ஆள பாக்க போறதுக்கு மதியையும் கூப்பிட்டான். கடைசி வரை மதி மறுத்திருக்கலாம். ரெண்டு மூணு தெரு போறதுக்குள்ள சுத்துப்போட்டு வெரட்ட ஆரம்பிச்சானுக. கட்டையன் மாட்டிக்கிட்டான். சரமாரியா கத்திய எறக்குனானுங்க. "ஒக்காளவோழிகள உங்கள வெட்டாம விடமாட்டே'னு கைய ஓங்கிக்கிட்டு கட்டையன் எழுந்தான். ஓங்குன கையில கடைசி வெட்டு விழுந்துது. அதுக்கப்புறம் கட்டையன் சத்தம் வெளிய வரவே இல்ல. மதி திரும்பிப் பாக்கவே இல்ல. நேரா கோதண்டன் வீட்டுக்கு ஓடி வந்தாரு. கோதண்டன் வீட்டுல இருந்தவங்க எல்லாமே கொல பயத்துல நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. வெட்ட வந்திருக்கான்னு அவுங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருச்சு. யாரன்னு மட்டும் தெரியல. அததும் அங்கங்க தெறிச்சி ஓடப் பாக்குது. மதி நேரா ஓடி கோதண்டம் பொண்டாட்டி கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு, "மன்னிச்சிடுங்க அண்ணி. அண்ணன நான் கொல்லல. இனிமே நான் பாலிடிக்ஸ்லேயே இருக்கமாட்டேன். வுட்டுடச் சொல்லுங்க அண்ணி... வுட்டுடச் சொல்லுங்க அண்ணி..' ன்னு அழுதாரு. பயந்துபோன கோதண்டம்மாள் ஒத்தக் காலைத் தூக்கி மடக்கி அருள்பாலிக்கிறவர மதி அவ கால விடவே இல்ல.

1995-ல வொரு மொற மதி
----------------------------------
யான கட்டுற சங்கிலி கணக்கா கழுத்துல தங்கச் செயினும், மரப் பலக சைஸýக்கு கையில பிரேஸ்லெட்டும், மொறம் சைஸýக்கு நாலு மோதரமும், வெள்ள வேட்டி சட்டயும் இல்லாம மதி வெளிய வர மாட்டாரு. அதுதான் அவரோட இப்போதய ட்ரேட் மார்க், புரோக்கர் மார்க் எல்லாம். நடமாடும் தங்கமாளிகையா நடந்து வந்து, "ராசியான நம்பர் சார் 36. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டு நம்பரும் 36தான் சார். சரி... அத வுடங்க இந்த ப்ளாட்ட பாருங்க நம்பர் 8. கருணாநிதி கோபாலபுரம் வீட்டு நம்பர் சார். இத வாங்குறீங்களா ராகவவீரா அவென்யூல உள்ள ரஜினிகாந்த வீட்டு நம்பர் 18'ன்னு ஆசக் காட்டுனாருன்னா அவரு நகை அடிக்கிற டாலுலேயே மயங்கிடுவாங்க. இவ்வளவு நகை போட்டிருக்காரு பணத்துக்கு ஏன் ஆசப்பட்டு பொய் சொல்லப் போறாருன்னு எது சொன்னாலும் ஒத்துப்பாங்க. "பகல்ல கொள்ள லாபம். இராவுல கொள்ளாத போத தாகம்'ன்னு ஜோரா போயிக்கிட்டிருந்த அவர் வாழ்க்கயில வொரு சேஞ்ச் வந்துது. அதுவும் அவரோட நடமாடும் தங்கமாளிகையாளதான். வொரு நா இராவு ஒன்பது மணிக்கு வனாந்தரமான பகுதியில தனியா போய்க்கிட்டிருந்தாரு. அந்தப் பகுதியிலிருந்து "உஸ்..உஸ்'ன்னு சத்தம் வரும்னு அவருக்குத் தெரியும். அன்னைக்கும் சத்தம் வந்துது. ரொம்ப நாளா மதிக்கு வொரு ஆச. அரவானிகளுட்ட போயி அவுளுகளுக்கு என்ன இருக்குன்னு பாக்கணும்னு. சரின்னு போயிட்டாரு. நாலைஞ்சு பேரு அங்க இருந்தாக. அதுல குண்டாயிருந்த ஒருத்திய செலக்ட் பண்ணிக்கிட்டு புதருக்குள்ள போயி வேட்டிய அவுத்துட்டு நின்னாரு. அவ வொண்ணும் செய்யாம மதி நகைகளயே பாத்துக்கிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மதி மொகத்துக்கு நேரா அவ மொகத்த கொண்டு போனா. அவ பவுடரு வாசனய இழுத்துக்கிட்டு மதி விறைச்சிக்கிட்டிருந்தாரு. திடீர்னு விநோதமா வொரு சத்தமெழுப்பினா. உடனே மத்த அரவானிகளும் ஓடிவந்தாக. மதிய அடிச்சி உதச்சி தரையில பொரட்டி, அவரு போட்டிருந்த எல்லா நகைகளயும் கழட்டிட்டு ஓடிட்டாங்க. மதிக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. வெளிய சொன்னா மானம் போயிடும்னு பயந்தாரு. அப்புறம் மானமா நகையான்னு யோசிச்சாரு. நகைதான்னு முடிவு பண்ணாரு. நேரா போலீஸýட்டு போயி சொன்னாரு. "கல்யாணத்த கட்டிக்கிட்டு எவளயாவது ஏறாம அவளுகக்கிட்ட ஏன்டா போன'ன்னு ஆரம்பிச்சு போலீஸýகாரங்க வாயில வந்ததையெல்லாம் வார்த்தயா காறித் துப்புனாங்க. அப்புறம் போலீஸýகாரங்களும் மதியும் வொரு வொப்பந்தம் போட்டாக. "நகைய புடிச்சிடலாம். அப்டி புடிச்சா பாதி...பாதி.' மதியும் வொத்துக்கிட்டாரு. மறு நா காலயில அரவானிக இருக்கிற ஏரியாவுக்கு மதிய போலீஸýகாரங்க அழைச்சிட்டுப் போனாக. இராவுல பாத்த முகத்த எடுத்து பலவிதமா ஆல்ட்ரேஷன் பண்ணி பாத்துக்கிட்டே வந்தாரு. வொல்லியா இருந்த அரவானிக எல்லாம் வொரே மாதிரியா இருந்தாக. அதனால குண்டா இருக்கிற அரவானிகளா பாத்து தேட ஆரம்பிச்சாரு. கடைசியா அவள கண்டும்பிடிச்சிட்டாரு. ஆனா அவள காட்டிக் கொடுக்கல. காட்டிக் கொடுக்கத்தான் போனாரு. அதுக்குள்ள அவ நீண்ட நாக்க நீட்டி "லூலூலூ'ன்னு வொரு சைக காட்டுனா பாருங்க. அதலு மதி சாஞ்சுப்புட்டாரு. அதலயும் "அப்புறமா வா எல்லாத்தயும் கொடுத்திர்றே'ன்னு சைக வேறு காட்டுனா. மதியும் யோசிச்சாரு. இப்ப காட்டிக் கொடுத்தா பாதிதான் கிடைக்கும்னுட்டு, "இங்க யாரும் இல்லை'ன்னு திரும்பி வந்துட்டாரு. மதியத்துக்கு மேல அரவானிக ஏரியாவுக்கு அவள தேடிப் போனாரு. பாதி கவரிங் நகையா இருந்துதுக்காக சில அரவானிக மதிய அடிக்க வந்தாக. மதிய சாஞ்சவங்கதான் காப்பாத்தினாங்க. அந்த நொடியிலிருந்து கனகாங்கிற அவுங்கள மதி உசுருக்குஉசுரா நேசிக்க ஆரம்பிச்சிட்டாரு. பிரேஸ்லெட்ட மட்டும் திருப்பிக் கொடுக்க முன்வந்தபோதுகூட வேணவே வேணாம்ன்னு திரும்பி வந்தவரு, கனகாவ பாக்க அடிக்கடி போனாரு. நாளுக்கு நாள் அவுங்க நேசம் கூடிக்கிட்டே போச்சு. ஊரு முழுக்க அந்தச் சேதி தெரிய வந்துச்சு. அவசரஅவசரமா மதிக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு மதியோட அப்பா. கட்டுனா கனகாவதான் கட்டுவேன்னு மதி ரெட்ட கால்லயும் நின்னாரு. மதி சொல்ற எதயும் அப்பா காதுல போட்டுக்கவே இல்ல. உறவுக்காரப் பொண்ணு வொண்ண பாத்து கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சாரு . கல்யாணத்தன்னிக்கு காலையில மதி வாயில குவார்ட்டர் குவார்ட்டரா வாங்கி ஊத்துனாங்க. போதையிலேயே மதி நீலவேணி கழுத்துல தாலி கட்டுனாரு. மாவட்ட மகளிரணித் தலவி செண்பகாதேவி வந்து வாள்த்திட்டு ஐநூத்தி வொண்ணு மொய்யி எழுத்திட்டு போனாங்க.

2005-ல வொரு மொற மதி
-------------------------------------
'எனக்கும் செண்பகாதேவிக்கும் உள்ள நெருக்கம் உங்க எல்லாருக்கும் தெரியும். வொரு ஃபோன் போட்டா போதும். பணத்த கொண்டு வந்து கொட்டிட்டுப் போயிடுவாங்க. ஆனா அது அவ்வளவு மரியாதயா இருக்காது. அதனாலதான் கேட்குல. உங்களுக்குச் சம்பளம் ரெண்டு மூணு மாசம் தராம இருக்கலாம். அதுக்காக தரவே மாட்டேன்லாம் சொல்ல வரல. பேங்ல போட்டா போல நெனச்சுங்க'ன்னு ரொம்ப உருக்கமா அரசியல் மீட்டிங்ல பேசுறா போல மதி பேசினாரு . அவரு எக்ஸ்போர்ட்ல வேல செஞ்ச பத்து பேரும் ரொம்ப நொந்து போயிட்டாங்க. தைக்க துணி வராததால எல்லோரும் மதியமே வீட்டுக்குப் போனாங்க. தனியா உக்காந்து, 'அந்தச் சக்களத்திய விட்டுட்டு வந்தாதான் இனி உங்கூட குடும்பம் நடத்துவே'ன்னு சொல்லிட்டு, ரெண்டு புள்ளைங்களயும் விட்டுட்டு நீலவேணி அவ அப்பா வூட்டுக்கே போனத பத்தி மதி கொஞ்ச நேரம் யோசிக்கிட்டே இருந்தாரு. கனகா வீட்டுக்கே போகலாம்னு எழுந்து எக்ஸ்போர்ட்ட பூட்டிட்டு வெளிய வந்தவரு நேரா அவரு வீட்டுக்கே போனாரு. மூணாம் வகுப்பு படிக்குற மூத்தவன் பள்ளிக்கொடத்துலேர்ந்து சீக்கிரமே வந்திருந்தான். ஏன்டா வந்துட்டேன்னாரு. வாத்தியார் செத்துட்டாருன்னான். பெல்ட உருவுன மதி பையன் தோல உரிச்சாரு.
நன்றி : உயிரோசை

Wednesday, August 19, 2009

பாலை, மழை, காளான்


பார்த்துப் பார்த்து
கால்நகங்களின் அழுக்கு நீங்கத் தேய்த்து
சிலீரிட நன்றாய்க் குளிக்க
எதிர்படுகிறவர்களிடமெல்லாம்
தாராளமாய்ச் சொற்களைக் கொடுத்து வைக்க
வெறிப்பற்களால் குதறிக் கொண்டு
நாய்கள் போடும் சண்டையெதையும்
அலுவலகக் கோப்புகளில் பார்க்காமல் கடக்க
துயரை பின்னால் நிறுத்திக் கொண்டு வராத
மகிழ்ச்சியை விரல் பிடித்து நடக்க
சென்றும் செல்லாமலும்
நிலைகொண்ட காட்சியோடு
வெறித்து, பிதுங்கிக் கிடக்கும்
விபத்துக்கண்களெதையும் வழிகளில் காணாமல் வீடு திரும்ப
அருவியில் குளிக்க வைக்கும் புத்தக வரியிலிருந்து
அப்படியே நெட்டித் தள்ளி பாறையில் சிதறவிடும்
இடையூறற்று வாசித்துக் குளிர
புகார்கள், கோரிக்கைகளால்
புடைத்திருக்காத அவள் புருவங்களைக் காண
அவசரமின்றி பதற்றமின்றி
நெடுநேரம் நொறுங்கிப் புணர
நினைவு வௌவாலெதும் கொத்தி எழுப்பாது
பற்றாக்குறையற்று தூங்க
வாயில் வழுக்கியோடும் அல்வாதுண்டுபோல
புதுச் சூரியனுக்குள் கால் பதித்துப் போக -
என்றாவது வாய்க்கும்
அந்த மழைநாள்களின் வெள்ளத்தில்
எல்லாப் பாலைநாள்களும்
அடித்துப்போய்
காளான்களாய் முளைக்கின்றன.
நன்றி: உயிரோசை

Thursday, August 6, 2009

காட்ஸில்லா முட்டைகள்


மனவீதிகள்
தானே குலைத்துக் கொள்ளும் பொழுதில்
காற்றிலிருந்து வரும் காட்ஸில்லா
அந்த வீதிகளில் ஓடத் தொடங்கும்.
தானே எழுப்பிக்கொண்ட பிரம்மாண்டம்
தானே கற்பித்துக்கொண்ட நியாயம்
தானே கொடுத்துக்கொண்ட கையூட்டு
தானே ரசித்துக்கொண்ட திருட்டு
தானே திறந்து பார்க்கக் கூசும் இரகசியம்
தானே புணர்ந்துகொண்ட உவகை
தானே
தானே
தானே என்று நிர்மாணித்ததெல்லாம்
அதன் வால்பட்டு துகள்துகளாக உடையும்.
வீதிகள்
வளையவளைய
கடும் தோட்டாக்கள் தீரத்தீர
அசுரமாய் புனைதிகைப்பு சுட்டு விரட்ட
திருப்பிக்கொள்ளும் காட்ஸில்லா
வானூர்தியை லாவகமாகப் பிடித்து
கடித்து மென்று துப்பி மறையும்.
ராட்சத பாதச்சுவடைப் பின்தொடர்ந்து வந்து
மறதியை மீன்களாய்க் குவித்து
மறைவெளிகளிலிருந்து வரவழைத்து
ஒரு பொழுதில்
தந்திரங்கள் அதனைச் சுடலாம்
விரட்டி கடலில் விடலாம்.
ஆனால்
காற்றைப் புணரும் காட்ஸில்லாக்கள்
மூர்ச்சையடைவதில்லை.
காற்றெங்கும் முட்டைகளை நிரப்புகின்றன.
நன்றி :உயிரோசை

Thursday, July 16, 2009

கீறல் பெயர்கள்


கருவேலம் மரத்தில் காலம் தள்ளும்
கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள்
சமீபமாய்
பல பிணக்குகள்

பிசினை வழித்து
கீழே தள்ளுவது
யார் வேலை?
கட்டெறும்புகள் மேலேறி வர
யார் காரணம்?
கோடை தொடங்குவதற்குள்ளே
இலையுதிர்க்க
யார் காரணம்?
காக்கா முட்டையை
பச்சப் பாம்புக்கு
காட்டிக் கொடுத்தது ஏன்?
தேனடை கட்ட
அனுமதிக்காதது ஏன்?

உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து
தொங்கியவாறே
கீழே குதித்துவிடப் போவதாக
நேற்று மதியம்
'ள்' பெயர் மிரட்ட
'குதிக்காதே...குதிக்காதே ' என
'ன்' பெயர் கெஞ்சிய பிணக்கு

'உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு
பழுத்த கருவேலங் காய்களை
அதிகமாய் பறித்துப் போட்டாய்
என் பசுக்களுக்குப் போடவே இல்லை.'
நன்றி: நவீன விருட்சம்

Monday, July 13, 2009

வெயிலை உலர்த்தும் இரவு


பகல் வெளியில் பயணிக்கையில்
கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து
வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான்
இரவு படுக்கையில்
போரின் மையத்திலிருந்து
கொத்துக்கொத்தாகப் பிய்த்து
உதறி, பரப்பி
மேலே படுத்துருண்டவாறு
வேக வட்டமடிப்பான்
ஈரமுள்ள வெயில் பக்கம்
சொணை சுள்ளெனடிக்க
அதிகச் சுற்றடிப்பான்
நள்ளிரவு சோர்கையில்
உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி
உறங்கப் போவான்.
நன்றி: நவீன விருட்சம்

Wednesday, July 8, 2009

உயிர்ப்பிக்காத சொற்களின் வதை!


வெண்தாடி வைத்திருப்பவர்களைப் பார்க்கிறபோது, ஒன்றாம் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்த கவிஞர் தம்பி சீனிவாசனின் 'காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம். மாடி மேலே நிற்கும்போதும் தாடி மண்ணில் புரளுமாம்' என்ற பாடலை என் நினைவுகள் பாடும். குருவிகள் கூடு கட்டியிருக்க, தரை புரளும் தாடியுடன் காட்டுப்பாக்கம் தாத்தா வரையப்பட்டிருப்பார். (ஓவியர் பெயர் தெரியவில்லை - மன்னிக்கவும்) அந்த ஓவியத்தோடும் அந்தப் பாடலோடும் கவிஞர் ராஜமார்த்தாண்டனையும் ஒப்புமைப்படுத்தி அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டனின் கண்கள் எல்லோரையும் விட அசல் அந்த ஓவியமாகவே அவரைக் காட்டும். தாடியில் கூடு கட்டிய குருவிகளுக்குப் பதில் அவருடைய கவிதைகளை வைத்து என் கற்பனை வரைகோடுகள் நீண்டிருக்கின்றன.

ராஜமார்த்தாண்டன் பெயரை 97-ம் ஆண்டின் இறுதி மாதங்களில்தான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். துரை என அழைக்கப்படும் கவிஞர் வித்யாஷங்கர் ஆசிரியராக இருந்த "ராஜரிஷி' அரசியல் வார இதழில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாள்களில் தினமணி கதிரில் வெளியான கவிதைகள் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்பட்டன. அக் கவிதைகளைத் தேர்வு செய்பவர் ராஜமார்த்தாண்டன் என்பதை அறிந்திருந்தேன். அதன் காரணமாகவும், அவர் பெயர் வெளிப்படுத்துகிற கம்பீரத்தின் காரணமாகவும் இயல்பாகவே அவரைப் பார்க்காமலேயே அவர் மீது பயம் கலந்த மரியாதை எனக்குள் வந்திருந்தது. அப்போது அவருடைய ஒன்றிரண்டு கவிதைகளை மட்டுமே படித்திருந்தேன். மாதம் போகப்போக "பயம் கலந்த அந்த மரியாதை' மனவோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, ராஜமார்த்தாண்டன் மீது கொஞ்சம் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. இப்போது அவமானமாகக் கருதும் அப்போதிருந்த அந்தக் கோபம் கலந்த வருத்தத்திற்கு இருந்த பெரிய காரணம் என் கவிதைகளை வெளியிடவில்லை என்பதுதான். தொய்வில்லாமல் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பேன். பிரசுரமானதே இல்லை. மாறாக , யூமா வாசுகியின் கவிதைகள் இரு வாரங்களுக்கொரு முறையோ, மூன்று வாரங்களுக்கொரு முறையோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. யூமா வாசுகி மீதும் விடலை மன இயலாமை ஏற்படுத்திய வெகாமை இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் , தலைபிரட்டையைப் பிடித்துவிட்டு மீன்குஞ்சுகளைப் பிடித்ததாய் சந்தோஷப்படும் சிறுவர்கள்போல் ஆத்திர வரிகளால் கவிதை எனக் கட்டமைக்கப்படுகின்ற ஒன்றைத்தான் அப்போது தூங்காமல் பல இரவுகளில் செய்துகொண்டிருந்திருக்கிறேன். இத்தெளிவு 2003-ல் "பூமத்திய வேர்கள்' என்ற தலைப்பில் என் முதல் தொகுப்பை வெளியிட்டதற்குப் பின்னர்தான் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் கவிதை எழுதுகிறேன் என்று வெளியில் சொல்லவே எனக்குப் பயமாக இருந்தது. ராஜமார்த்தாண்டனிடம் இன்னும் அதிகம் பயப்பட வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு 2005-ல் தினமணியில் அதுவும் தினமணி கதிர் இதழில் பணியாற்ற சேர்ந்தேன். ராஜமார்த்தாண்டன் கலக்கம் அதிகரித்தது. திட்டமிடத்தொடங்கினேன். கவிதை, கவிதை சார்ந்த எதையும் பேசுவதில்லை என்கிற முன் தீர்மானத்தோடுதான் அலுவலகத்தில் நுழைந்தேன். ஆனால் சூழலின் மறுபக்க எழுத்துகள் வேறு வகையாக இருந்தன. ராஜமார்த்தாண்டன் பணியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு, கடைசி இரு தினங்கள் மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் விலகலால் காலியான இடத்தை (பத்திரிகையில்) நிரப்பும் முயற்சியிலேயே நானும் சேர்க்கப்பட்டிருந்தேன். முதன்முதலாய் பார்த்தபோது ராஜமார்த்தாண்டன் பெயருக்கேற்ப நான் எழுப்பியிருந்த கற்பனை சரீரம் பொலபொலத்து இறங்கி, காட்டுப்பாக்கம் தாத்தா எனக்குள் வந்தார். அறிமுகம் செய்துகொள்ள என்னிடம் அப்போதும் ஏதும் இல்லாததால் திரையரங்கத்திற்கும் ஆசிரியர் வந்துவிட பதற்றத்தோடு படம் பார்க்கும் மாணவன் போல அவருக்கே தெரியாமல் அவரைப் பார்ப்பதும், அவர் பார்க்கிறபோது திரும்பிக் கொள்வதுமாகவே கடத்தினேன். பழுப்பேறிய வெள்ளை வேட்டி சட்டை, ரப்பர் செருப்பு, தாடி என அலுவலக இயல்புக்கு முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தார். காற்றைப்போல கதவு திறந்து நுழைந்தார். காற்றைப் போல இருக்கையில் அமர்ந்தார். காற்றைப்போல காகிதங்களைப் புரட்டினார். காற்று ஓரிடத்தில் நிற்காது என்பதுபோல சட்டென கதவு திறந்து வெளியில்போய் நண்பர்களைப் பார்ப்பதும் வருவதுமாகவே இருந்தார். அலுவலகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். அலுவலகத்தை விட்டுப் போன பிறகும்கூட நண்பர்களைப் பார்ப்பதற்காகவே பலமுறை வந்திருக்கிறார். நண்பர்கள் மீது அவருக்கு எவ்வளவு பிடிப்பு என்பதற்கு அலுவலகத்தாரால் சொல்லப்படும் ஒரு நிகழ்வு; பலமுறை நடந்துள்ளது: சொல்லாமல் திடுமென விடுப்பு எடுத்துவிடுவாராம். "இப்படி எடுக்கலாமா?' என்று கேட்டால், "ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க இங்றேன் புரிஞ்சுக்கமாட்டேங்கிறீங்களே..' என்பதாகவே இருந்திருக்கிறது.

படைப்பாளி என்பவன் புறவெளியில் பயணிக்கும் அதே நேரம் அகவெளியில் ஆழ்ந்து பல மைல் தூரம் பயணிப்பவனாக இருக்கிறான். அவனுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அவனைப் புரிந்துகொள்ளுதல் என்பது இயலாத ஒன்று. ஒரு படைப்பாளிகூட மற்றொரு படைப்பாளியின் பயணத் திசைகளைக் கண்டறிதல் என்பது இயலாதது. அப்படியிருக்கையில், அலுவலகத்தின் கட்டுப்பாடுகள் பிரசவிக்க இடம் தேடும் பூனைகள்போல அவனை ஓயாமல் அலையவிடுகிறது. சொந்த சூழல் சரியாக இருக்குமானால் அவன் அனைத்தையும் உதறிவிடுவான். அலுவலகம் மட்டுமல்ல; தன் சொந்த வாழ்க்கையிலான விஷயங்களில்கூட அநியாயத்திற்குச் சறுக்கிக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். ராஜமார்த்தாண்டன் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? விடுவித்துக்கொண்டு, பலமுறை அலுவலகம் வந்து போய்க்கொண்டிருந்தவருக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான், அலுவலகத்தின் ஆதாரத்துடன் அவர் கேட்டுப் பெற வேண்டிய மாதாந்திர தொகையின் நினைவோ அல்லது தெரியவோ வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் அது. அலுவலகத்தை விட்டு விலகுகிற அன்றே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுவிடுவார்கள். ஆனால், மூன்று வருடங்கள் கழித்து விண்ணப்பிக்க ராஜமார்த்தாண்டன் வந்தபோது எல்லோருக்கும் ஆச்சர்யம். "இவ்வளவு நாளா வாங்கலையா... இவ்வளவு நாளா வாங்கலையா' என அவரைக் குடைந்தெடுத்தனர். கேட்ட எல்லோருக்கும் மெüனத்தையே அவர் பதிலாக அளித்துக் கொண்டிருந்தார். ராஜமார்த்தாண்டனைப் பார்க்க யூமா வாசுகி அன்று மாலை வந்திருந்தார். அவருக்கும் ஆச்சர்யம். "நீங்கள் மகா கவியாகிவிட்டீர்கள்' என்று இரண்டு மூன்று தடவை கேலியாகச் சொன்னார். இந்தக் காலகட்டங்களில் ராஜமார்த்தாண்டன் மீதான பயம் காணாமல் போய்விட்டாலும் அதிகம் பேசாமலேயே இருந்து வந்தேன். உடனிருந்த நானும் தமிழ்மகனும் சிரித்தோம். ராஜமார்த்தாண்டன் மெüனமாகவே வந்தார். இதன்பிறகு தமிழ்மகன்தான் ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார்.

மெüனத்தைக் கைவசப்படுத்திக் கொள்வது ஓர் அரிய கலை. வெளிப்படுகிற வார்த்தைகளைவிட மெüனங்கள் அதிகம் பேசும். அந்தக் கலையில் ஆழ்ந்தவராக இருந்தார் அவர். பல பேச்சுகளில் அதைக் கவனித்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டன் அறுபதாவது வயதையொட்டி 'உயிர் எழுத்து' ஆகஸ்ட் மாத 2008 இதழை அவரின் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. அதில் என்னுடைய 'இருட்டாழி' சிறுகதையும் வெளியாகி இருந்தது. எனக்கது இனம்புரிந்த மகிழ் சலனத்தை ஏற்படுத்தவே செய்தது. சுகுமாரன், ந.முருகேச பாண்டியன், சுரேஷ்குமார் இந்திரஜித், கரிகாலன், சிபிச்செல்வன், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் ராஜமார்த்தாண்டன் குறித்து கட்டுரை எழுதியிருந்தார்கள். இதில் சிபிச்செல்வன் கட்டுரையில் மட்டும் நான் உணராத ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

'ராஜமார்த்தாண்டன் கவிதைகளில் பசுவய்யா, யூமாவாசுகி ஆகிய கவிகளின் பாதிப்பு இருப்பதைப் பல கவிதைகள் காட்டுவதைப்போலவே, அவருக்குப் பிடித்த புதுமைப்பித்தனின் சில கவிதைகளின் பாதிப்பையும் பார்க்க முடிகிறது' என்று சிபிச்செல்வன் எழுதியிருந்தார்.

பேராற்று பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து பாயக்கூடியவை யூமாவாசுகியின் கவிதை மொழி. வழியினூடே பல குன்றுகள், நறுமணத் தோட்டங்களைக் கடக்கும். இதிலிருந்து மாறானவை ராஜமார்த்தாண்டனுடைய கவிதை மொழி. இடைஇடையே கெண்டைகள் துள்ள சலசலத்து ஓடக்கூடிய ஓடையைப் போன்றது. இதழ் தொடர்பாக சுதீர் செந்திலிடம் தொலைபேசியில் பேசியபோது, 'இதழ் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், சிபிச்செல்வன் எழுதியிருப்பதுபோன்று மட்டும் என்னால் உணர முடியவில்லை' என்று தெரிவித்தேன். அதற்கடுத்ததொரு நாளில் யூமா வாசுகியிடமும் இதைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் திடமாக மறுத்து பாதிப்பை உணரவில்லை என்றே சொன்னார். ராஜமார்த்தாண்டன் இதற்கு ஏதாவது எதிர்வினையாற்றுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளவே அடுத்த செப்டம்பர் மாத உயிர் எழுத்து இதழை அதிக ஆவலுடன் பார்த்தேன். நன்றி தெரிவித்து ராஜமார்த்தாண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் ஒரு பகுதி:

'பாராட்டுவதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, நிறைகளை மட்டுமே குறிப்பிட்டு பாராட்டுவது. இன்னொரு வகை, நிறைகளையும் குறைகளையும் மதிப்பிட்டு விமர்சனபூர்வமாகப் பாராட்டுவது. இரண்டாவது வகையே, பாராட்டப்படுபவனுக்குப் பயன்தரக் கூடியது என்று கருதுகிறவன் நான். ஓர் எழுத்தாளன் இறந்த பிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் அவனுக்குப் எந்தப் பயனும் இல்லை. வாழும்போதே அவன் எழுத்துக்கள் உரிய முறையில் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதே, அவன் தன்னை சுய பரிசீலனை செய்து கொள்ளவும் மேலும் தீவிரமாகச் செயல்படவும் தூண்டுதலாக அமையும்.'

எல்லாப் படைப்பாளிகளுக்கும் இத்தெளிவு இருக்கும் என்று சொல்லமுடியாது. சிபிச்செல்வன் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொண்டு தீவிரமாகச் செயல்பட அவர் நினைத்திருக்கலாம். அதே கடிதத்தில் 'ஓர் எழுத்தாளன் இறந்தபிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் எந்தப் பயனும் இல்லை' என்று எழுதியிருந்தார். ஆனால், உண்மையில் இவ்வளவு விரைவில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

மறைவதற்கு நாலைந்து நாள்களுக்கு முன்பு தினமணி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே ஓய்வூதிய விவகாரம். தேதி குறிப்பிட்டதில் தவறென்பதால் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம். எல்லோரையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்த முறைதான் அவரிடம் சற்று அதிகம் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ்மகன் மூலம் என்னுடைய ஐந்து கவிதைகளை காலச்சுவடு இதழுக்கு அவரிடம் கொடுத்திருந்தேன். அதில் மூன்று கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார். அது எட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் பிரசுரமாகவில்லை. இதைத்தான் கேட்கப் போகிறேனோ என்று அவருக்குப் பேசுவதற்கு முதலில் சிறு தயக்கம் இருந்தது. எனக்குப் பேசுவதற்கு வேறு விஷயங்கள் இருந்தன.

'காலச்சுவடு பெண் படைப்பாளிகள்' தொகுப்பை ராஜமார்த்தாண்டன் தொகுத்து இருந்தார். இதில் காலச்சுவடு மே-2004 இதழில் என் மனைவி பெயரில் (அ.அருந்ததி) நான் எழுதியிருந்த 'இன்னொன்றிலான உலகு' என்ற தலைப்பிலான கவிதையும் தொகுக்கப்பட்டிருந்தது. பெண்கள் பேருந்தில் திருட்டுத்தனமாய் ஏறி அமர்ந்திருக்கும் ஆணைப்போல அப்புத்தகத்தில் என் கவிதை திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த பதிப்பில் இதை நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டேன். 'இந்தப் பிரச்சினைக்காகவே சந்தேகம் வந்த அனைவருக்கும் கடிதம் எழுதிக் கேட்டோம். அருந்ததி என்ற பெயரில் ஈழத்துக் கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் என்று நினைத்து இணைத்துவிட்டேன். இதில் இன்ஷியல் இருப்பதைக் கவனிக்கவில்லை' என்று சொன்னார். பெயரை மாற்றிமாற்றி எழுதுவதால் இப்படியொரு பிரச்னை வரும் நானும் கருதியதில்லை. அதற்கடுத்து பேச்சுகள் மாறி, 'கவிதையில் ஏதாவது சந்தேகம் என்றால் சுகுமாரனிடம் கேட்பேன்; ஒரு கவிதை தொகுப்பு கொண்டு வரவேண்டும்; 'புதுக்கவிதை வரலாறு' நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும்' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் நெடுநாளாய் பழகிய மாலை சங்கம நண்பர்கள் திரண்டுக் கொண்டிருந்தார்கள். அவர் கவனம் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டது. எல்லோரிடம் விடைபெற்றார். அதுதான் இறுதியான விடைபெறல் எனத் தெரியாமலேயே கையசைத்தோம். முத்தையா வெள்ளையன் அவர் இறப்புச் செய்தியைச் சொன்னபோது தாங்க முடியவில்லை. துடித்துவிட்டேன். அலுவலகமே சோகத்தால் உறைந்துபோனது. துக்கத்தைத் தாங்கமுடியாமல் எல்லோர் நாவும் திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது. 'சொல்லிட்டுப் போவதுபோல வந்தார். கடைசி வரை ஓய்வூதியத்தை வாங்கிப் பார்க்கவே இல்லை'.

ராஜமார்த்தாண்டனின் பல கவிதைகள் என்னை மீண்டும் கவிதைக் காடுகளில் பயணிக்க உதவியிருக்கின்றன. 'வால் மனிதன்' என்றொரு அவர் கவிதை. /இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்/ ஏதேனுமொரு வால்/ சிலபோது குரங்கின் வால்/ சிலபோது சிங்கத்தின் வால்/ சிலபோது நரியின் வால்/ சிலபோது குதிரையின் வால்/ சிலபோது எலியின் வால்/ சிலபோது ஆட்டின் வால்/ சிலபோது பன்றியின் வால்/ என்றிப்படி எப்போதும்/ ஏதேனுமொரு வால்/ ஒரு வால் மறைந்த கணம்/ ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்/ விரைவாக/ இப்போதெல்லாம் அரிதாகி வருகின்றன/வாலில்லாமல் அவன்/ நடமாடும் கணங்கள்/ என்று முடியும் அந்தக் கவிதை. பல நண்பர்களிடம் சிலாகித்து இந்தக் கவிதையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரைச் சந்தித்த காலங்களில் அவரிடம் அவர் கவிதை குறித்து ஒரு சொற்கள்கூட உதிர்த்ததில்லை.

'என் கையில் இருந்த பரிசைப் பிரிக்கவில்லை. பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும்போல் இருக்கிறது' என்று தேவதச்சன் அவருடைய "பரிசு' கவிதையில் எழுதியிருப்பார். அந்த வரிகளை நான் பின்பற்றியிருக்கிறேன். பல கவிஞர்களிடம் அவர் கவிதைகள் பிடித்திருந்தாலும் அது பற்றி பேசாமலேயே இருந்திருக்கிறேன். அதைப்போல்தான் ராஜமார்தாண்டனிடமும் இருந்தேன். அப்படி உயிர்ப்பித்துச் சொல்லாத அந்தச் சொற்கள் இப்போது என்னைக் குற்றவாளியாக்கி வதைக்கிறது.
நன்றி: `புதிய புத்தகம் பேசுது'