Monday, February 8, 2010
வில்லியம் ஃபாக்னருடன் ஓர் உரையாடல்
வில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25- ம் தேதி மிஸிஸிபியல் ஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலாசாலையை விட்டு கனடாவின் விமானப் படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து யுனைடெட் ஸ்டேட்ஸýக்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸýக்குச் சென்ற ஷெர்வுட் ஆண்டர்ஸனுடன் தங்கிச் சில கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். நியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப் பிரயாணம் செய்து பின் ஆக்ஸ்போர்டுக்குத் திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களைத் திருத்தி எழுதினார். 1931-ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்குச் சாத்தியமாயிற்று . 1939-ல் அவருக்கு ஓஹென்றி ஞாபகார்த்த முதற் பரிசு கிடைத்தது. தேசீய கலை இலக்கிய கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949-ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துக்களின் மீது திரும்பியது.
(1956-ல் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியானது பேட்டி இது. தமிழில்: சுந்தர ராமசாமி.)
கேள்வி: மிஸ்டர் ஃபாக்னர் பேட்டிகளைத் தாங்கள் விரும்புவதில்லையென்று சற்றுமுன் சொன்னீர்கள் அல்லவா?
பதில்: என்னைப் பற்றி எழும் கேள்விகள் என் கோபத்தைத் தூண்டுவதுண்டு. எனது தொழிலைப் பற்றிக் கேட்கப்பட்டால் நான் பதில் அளிக்க முயற்சிப்பேன். இல்லை, கேள்வி என்னைப் பற்றியது என்றால் நான் பதில் அளித்தாலும் அளிப்பேன். சில சமயம் அளிக்காமலும் இருந்துவிடுவேன். ஒரு கேள்விக்கு இப்போது நான் சொல்லுகிற பதில் ஒன்றாக இருக்கும்; அதே கேள்வி நாளை கேட்கப்பட்டால் அப்போது பதில் மற்றொன்றாகவும் இருந்துவிடக் கூடும்.
கே: ஒரு எழுத்தாளன் என்ற நிலையில் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதேனுமுண்டா?
ப: நான் பிறந்திராவிட்டாலுங்கூட எனது புத்தகங்களை மற்றெவரேனும் எழுதி முடித்திருப்பார்கள். ஹெமிங்வே, டாஸ்டாவ்ஸ்கி... இவர்கள் சம்பந்தமாகவும் இதையே சொல்லிவிடலாம். ஒரு உதாரணம். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் படைப்புரிமைக்கு இன்று மூன்று அவகாசிகள் உண்டு என்பதை நினைவூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று. படைத்தது யார் என்பது முக்கியமல்ல. படைக்கப்பட்டது, அதுதான் முக்கியமானது. ஹாம்லெட், நடுவேனிற் கனவு இந்த சிருஷ்டிகளே பிரதானமானது. கலைஞனுக்கு விசேஷ அந்தஸ்து எதுவும் கிடையாது. எல்லாம் அவனுடைய படைப்புக்குத்தான். ஏனென்றால் ஒருவருக்கேனும் புதிசாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஒரே விஷயத்தைத்தான் ஷேக்ஸ்பியரும், ஹோமரும், ஃபால்ஸôக்கும் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் மேலும் ஒரு இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றால் பிரசுரகர்த்தர்களுக்கு வேறு எவருடைய தேவையும் ஏற்பட்டிராது.
கே: புதிதாக ஒன்று சொல்வதற்கில்லை என்றாலும்கூட கலைஞனின் தனித்துவம் முக்கியமான அம்சம் அல்லவா?
ப: கலைஞனைப் பொறுத்த வரையிலும் அவனுடைய தனித்துவமே அவனுக்கு மிகவும் முக்கியமானது. பிறருக்கு படைப்பைப் பற்றித்தான் அக்கறை: தனித்துவத்தைக் கவனிக்க அவகாசம் இராது.
கே: சமகால எழுத்தாளர்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ப: முழுமைப் பற்றி, பரிபூர்ணமான ஒன்றைப் பற்றி, நாங்கள் வளர்ந்திருந்த கனவுகளை வடித்தெடுப்பதில் எல்லோருமே தோல்வி கண்டிருக்கிறோம். செயற்கரிய பணிகளைச் செய்து முடிப்பதில் நாங்கள் கண்டிருக்கும் முழு தோல்வியின் அடிப்படையிலேயே நான் எங்கள் சிருஷ்டிகளை மதிப்பிடுகிறேன். இரண்டாவது தடவையாக எனது புத்தகங்களை நான் எழுதுவேன் என்றால் இன்னும்கூட செம்மையாக அவற்றை எழுத முடியும் என்றே கருதுகிறேன். இந்நிலை மிகவும் விரும்பத்தக்கது. கலைஞன் விடாது தன் பணியில் மூழ்கியிருக்க காரணமும் இதுதான். மீண்டும் மீண்டும் அவன் முயன்று பார்க்கிறான். ஒவ்வொரு தடவையும், "இம்முறை நன்றாக செய்துமுடித்துவிடுவேன்' என்று நம்புகிறான். ஆனால் ஒரு நாளும் அது கைகூடப் போவதில்லை. எனவேதான் இதை வரவேற்கத்தகுந்த 'அவஸ்தை' என்று கருதுகிறேன். ஒரு தடவை அது காரிய சாத்தியமாகி விட்டது என்றால், கனவுகளை, ஆசைகளை வெற்றிகரமாக கலைஞன் படைத்து முடித்துவிட்டான் என்றால், அவ் வெற்றியின் சிகரத்தில் ஏறி நின்று தன் கழுத்தை அறுத்துக்கொண்டு மறுபக்கம் குதிப்பதைத் தவிர அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. நான் தோல்வியுற்ற கவிஞன். அனேகமாக எல்லா நாவலாசிரியர்களும் முதலில் கவிஞர்கள் ஆகவே ஆசைப்பட்டிருப்பார்கள். அது கைவராது என்று உணர்ந்ததும் சிறுகதை முயற்சியில் ஈடுபடுவார்கள். கவிதைக்கு அடுத்த படி மிகுந்த சிரமத்தைத் தரும் கலை உருவம் இதுவே. அதிலும் அவன் வெற்றிபெறவில்லை என்றால் நாவல் எழுத முயற்படுகிறான்.
கே: ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள் ஏதேனும் உண்டா?
ப: 99 சதவிதம் ருசி. 99 சதவிதம் தன்னைப் பண்படுத்திக் கொள்ளுதல், 99 சதவிதம் உழைப்பு. செய்ததை எண்ணித் திருப்திப்பட்டுவிடக் கூடாது. ஒரு படைப்பேனும் அது எந்தளவுக்கு உன்னதமாக அமைய முடியுமோ அந்த அளவுக்குச் சிறப்பாக அமைந்து விடுவதில்லை. சதாகனவு கண்டுகொண்டிரு: உன்னால் தாண்ட முடிவதற்கு அப்பால் கோட்டைக் கிழி, இலட்சியம் உச்சியில் இருக்கட்டும். சமகால படைப்பாளிகளை விடவோ, வாழ்ந்து மறைந்தவர்களை விடவோ அதிகமாகச் செய்துவிட்டால் போதுமென ஒரு நாளும் எண்ணாதே. உன்னைவிடவும் உன்னை எம்ப வைக்கவே முயற்சிக்க வேண்டும். கலைஞன், ராட்சச சக்திகள் சதா பிடிங்கித் தின்றுக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன். அவன் எதற்காக அவனையே பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் அவனுக்க விளங்காத ஒரு மர்மம். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து திகைப்பில் ஆழ்ந்திருக்கும் அவனுக்குப் பொழுது இல்லை. அவனுடைய வேலை நெருக்கடி அபரிமிதமானது. படைப்புத் தொழிலை ஆற்றுவதற்காக, யாரையாவது கொள்ளையடிக்கவோ, யாரிடமேனும் கையேந்தி பிச்சையெடுக்கவோ, அவனுக்குக் கொஞ்சமும் கூச்சம் கிடையாது. இந்த ஒரு விஷயத்தில் தர்ம அதர்ம நம்பிகைகளுக்கு அப்பாற்பட்டவன்.
கே: ஒரு எழுத்தாளன் தர்ம, அதர்ம வேற்றுமைகளைப் புறக்கணித்துவிட வேண்டும் என்பதா தங்கள் கருத்து?
ப: ஒரு எழுத்தாளன் அவனுடைய சிருஷ்டிக்கு மட்டும்தான் பொறுப்பாளி. ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு தர்ம, அதர்ம வித்தியாசம் சிறிதேனும் இராது. அவன் நெஞ்சில் சதா ஒரு கனவு இருந்து கொண்டிருக்கிறது. அதை எழுத்தில் உருவாக்கிக் காட்டிவிட அவன் முற்படுகிறான். அதை நிறைவேற்றுவது வரையிலும் நிம்மதியில்லை அவனுக்கு. தனது சிருஷ்டியின் வெற்றிக்காக அனைத்தையும் அவன் கூசாது புறக்கணித்து விடுகிறான். மான அவமானம், கவுரவம், அகம்பாவம், வாழ்க்கை நிம்மதி, சுகம், சந்தோஷம் எல்லாவற்றையும்... தான் கொள்ளையடிக்க நேர்ந்தாலும் அவன் பின் வாங்கப் போவதில்லை. கீட்ஸ் எழுதிய ஒரு கவிதை எத்தனையோ கிழவிகளைவிட அதிக மதிப்புடையது.
கே: அப்படியானால் ஜீவனோபாயம், சந்தோஷம், அபிமானம் இவற்றைப் புறக்கணத்திருப்பதும் ஒரு கலைஞனின் சிருஷ்டித் திறனின் ஒரு அம்சமாக கருதுவீர்களோ?
ப: மாட்டேன். அவற்றை இழந்து நிற்பது அவனுடைய மன அமைதியைப் பாதிக்கும். ஆனால் மன அமைதி, திருப்தி, இதெல்லாம் கலைக்கு அப்பாற்பட்டது.
கே: ஒரு எழுத்தாளனுக்குச் சாதகமான சூழ்நிலை எது?
ப: கலைக்கும் சூழ்நிலைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கலை இதையெல்லாம் எண்ணி ஏங்கி நிற்பதுமில்லை. என்னுடைய சொந்தக் கதையைச் சொல்கிறேன். ஒரு விபசாரக் கிடங்கில் காவலாளியாக நான் வேலை பார்த்ததையே எனக்குக் கிடைத்தவற்றில் செüகரியமான வேலை என்பேன். ஒரு எழுத்தாளன் தனது தொழிலைப் பார்க்க திவ்வியமான இடம் அது. அங்கு எனக்குப் பொருளாதார சுதந்தரம் பரிபூரணமாக இருந்தது. யாருக்கும் பயப்படும் அவசியமில்லை. பசியும் இல்லை. தலைக்கு மேல் ஒரு கூரை, ஏதோ அவ்வப்போது சில்லரைக் கணக்குகள் பார்க்க வேண்டியிருக்கும். உள்ளூர் போலீஸýக்கு மாதாந்திரக் கடன் அழுதுவிடுவேன். இதைத் தவிர வேறு வேலைவெட்டி கிடையாது. எழுதுவதற்கு காலைப் பொழுதே ஏற்றது. அந்தச் சமயத்தில் அந்த இடம் பரிபூர்ண அமைதியில் ஆழ்ந்திருக்கும். சாயங்கால வேளைகளில் சமூக உறவாடவும் சந்தர்ப்பம் கிடைக்கும். அந்தஸ்துக்கும் குறைவிராது. என்னைத் தவிர ஒரு பெண்ணும் கணக்கு எழுத அமர்த்தப்பட்டிருந்தாள். எனவே எனக்கு வேலை மிகக் குறைவு. அதோடு தேவை ஏற்பட்டால், சும்மா சோர்ந்து உட்கார்ந்து அசந்து வழியாமல் நானும் கேளிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். இங்கு, தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ஆண்களிடத்தில் அலாதியான மதிப்பு உண்டு. 'ஸôர்' என்று எனக்கு மரியாதை தந்துதான் அழைப்பார்கள். சுற்றுப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கும் நான் 'ஸôர்'தான். போலீஸ்காரர்களை நான் பெயர் சொல்லி அழைக்க முடியும்.
அதிக விலை கொடுக்காமல் அவனால் பெறக்கூடிய அளவுக்கு ஏகாந்தமும், நிம்மதியும் தான் ஒரு கலைஞனுக்கு இன்றியமையாதது. இது இரண்டும் கிடைக்கும் இடம் அவனுக்குச் சொர்க்கம். அவசியமற்ற புறச் சூழ்நிலைகளும் அமோக செüகர்யங்களும் வேண்டுமென்றால் அவனுடைய ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். சோர்விலும், ஏமாற்ற உணர்ச்சியிலும், விருதா சண்டைகளிலும் காலம் விரயமாகும். இதைத் தவிர வேறு பிரயோஜனம் எதுவும் ஏற்படாது. எனக்கு எழுத்தில் ஈடுபட அவசியமானவை புகையிலை, காகிதம், பென்சில், கொஞ்சம் விஸ்கி இவையே. இவற்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.
கே: பொருளாதார நிலையைப் பற்றி பிரஸ்தாபித்தீர்கள். ஒரு எழுத்தாளனுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒன்றல்லவா அது?
ப: அல்ல. ஒரு எழுத்தாளனுக்குப் பணம் அதிகமாகத் தேவையில்லை. அவனுக்குத் தேவையானது பென்சிலும் காகிதமும்தான். 'ஏதோ தாரளமாகப் பணம் இருந்தது. அதனால் பிரமாதமாக எழுதினான்' என்ற பேச்சு இன்று வரையிலும் என் காதில் விழுந்ததில்லை. ஒரு சிறந்த எழுத்தாளன் எந்த ஸ்தாபனத்திற்கும் பணம் உதவி கோரி மனுப் போடமாட்டான். அவன் எழுதுவதிலேயே மூழ்கியிருப்பான். அவன் முதல் தர எழுத்தாளன் அல்லாதவரை, அவகாசமில்லையென்றும், செüகரியமில்லையென்றும், பற்றாக்குறையென்றும் காரணங்கள் கூறி தன்னையே ஏமாற்றிக்கொள்வான். திருடர்கள் கள்ளச் சந்தைக்காரர்கள், குதிரைக் கள்ளர் இவர்களிடமிருந்துங்கூட முதல் தரமான படைப்புக்கள் பிறக்கக்கூடும். எந்த அளவுக்கு கொடிய வறுமையையும் தாங்க முடியாத சங்கடங்களையும் எழுத்தாளனால் அரவம் காட்டாமல் சமாளிக்க முடியும் என்பதை சாதாரண ஜனங்கள் தெரிந்துகொண்டால் அரண்டு போவார்கள். எந்தச் சக்தியாலும் ஒரு தலைசிறந்த கலைஞனை அழிக்க முடியாது. தங்களுடைய சகிப்புத் தன்மையை அனுபவத்தில் கண்டுகொள்ள அவர்களே பயப்படுகிறார்கள். வாழ்க்கை வெற்றி, சம்பாத்தியம் இத்யாதி சிந்தனைகளில் தனது மனதை அலட்டிக் கொள்ள அவனுக்கு நேரமிராது. வெற்றி என்பது ஸ்திர புத்தியில்லாததும் மனச் சஞ்சலம் கொண்டதுமாகும். ஒரு பெண்ணைப் போல. அவள் முன் குனிந்தோம் என்றால் முதுகில் ஏறிவிடுவாள். அவளோடு பழகுகிறபோது புறங்கையைத் தான் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அவள் அநேகமாக கரம் குவித்து வணங்குவாள்.
கே: சினிமாத்துறையில் வேலை செய்வது தங்களுடைய எழுத்து வேலைக்குக் குந்தகமாக இருந்ததுண்டா?
ப: முதல் தர எழுத்தாளனின் சிருஷ்டி வேகத்தை எந்தச் சக்தியாலும் தடை செய்துவிட முடியாது. அவன் முதல் தரமானவன் அல்லாதவரை அவனைத் திருத்தவும் யாராலும் முடியாது. அப்படியானால் நீங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கே இடம் இல்லை. ஒரு நீச்சல் குளத்திற்காக முன்பே அவன் தன்னுடைய ஆத்மாவை விற்றிருக்கிறான்.
கே: திரைக்கதைகளுக்கு எழுதுகிறபோது ஒரு எழுத்தாளன் தன்னை விட்டுக் கொடுத்து சமரஸம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுமா?
ப: ஏற்படத்தான் செய்யும். எப்பொழுதும் நடப்பது அதுதான். படத்தொழில் ஒரு கூட்டு முயற்சி. கூட்டு முயற்சி என்றாலே சமரஸம் என்பதுதான் பொருள். அங்கு கொடுக்கவும் நேரும், கொள்ளவும் நேரும்.
கே: ஒரு கோஷ்டியாக வேலை செய்கையில் தாங்கள் மிகவும் விரும்பிய நடிகர் யார்?
ப: ஹம்ஃபிரி பொகார்ட். அவருடன் வெகு உற்சாகமாக வேலை செய்வேன். To have and to have no, the big sleep போன்ற படங்களில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்.
கே: ஒரு படத்தை வெற்றிகரமாக தயாரிக்க வழி என்ன?
ப: எனது சிறந்த படமொன்றைத் தயாரிக்கும் போது துணிச்சலாக ஒன்று செய்தோம். வசனத்தை அப்படியே தூக்கி தள்ளி வைத்துவிட்டோம். காமிராவை முடுக்குவதற்கு ஒரு சில நிமிஷங்களுக்கு முன்னால், ஒத்திகை வேளையில் காட்சி ஜோடனைகளை அமைத்தோம். திரைப்படத் தயாரிப்புக்கு உரிய மரியாதை நான் கொடுத்திராதவரை, நான் அன்று செய்தது போன்ற வழிவகைகளைப் பின்பற்றிப் பார்க்க எனக்குத் தைரியமில்லாதவரை, என் பேரிலும் திரைக்கலை பேரிலும் நம்பிக்கை வைத்து, நான் அத்துறைக்கு கைகழுவியிருப்பேன். ஆனால் இன்று எனக்கு ஒன்று தெரிந்துவிட்டது. அதாவது என்றும் நான் ஒரு சிறந்த படத் தயாரிப்பாளன் ஆக முடியாது என்பதே. அதற்குக் காரணம் உண்டு. எனது சொந்தத் தொழிலான நாவல் எழுத்தைப்போல் அத்துறை எனக்கு உற்சாகம் தருவதாயில்லை.
கே: சினிமாத்துறையில் நுழைகிறபோது ஒரு எழுத்தாளன் தனக்குப் பாதகமாக சமரஸம் செய்து கொள்ள நேரும் என்று சொன்னீர்கள் அல்லவா? இலக்கியத் துறையில் எப்படி? அவன் தன் வாசகர்களுக்குக் கடன் பட்டிருக்கிறானா?
ப: தன்னால் முடிந்தவரை தனது சிருஷ்டிகளை அழகாகப் படைப்பதே ஒரு எழுத்தாளனின் ஒரே கடமை. இதை மட்டும் அவன் செய்து முடித்துவிட்டான் என்றால் தன்னுடைய பிற கடமைகளை அவன் தன் மனம்போன படி நிறைவேற்றிக் கொள்ளலாம். எனக்கே பொது மக்களின் ஆசை அபிலாஷைகளைப் பற்றிச் சிந்திக்க முடியாத அளவுக்கு வேலை நெருக்கடி இருந்து வருகிறது. யார்யார் எனது நூல்களைப் படிக்கிறார்கள் என்பதை ஆற அமர உட்கார்ந்து யோசனை செய்து பார்க்க எனக்குச் சாவகாசமில்லை. என்னுடைய புத்தகங்களைப் பற்றியோ, அல்லது பிறருடைய புத்தகங்களைப் பற்றியோ அவ்வப்போது ஜாண்டோ கூறும் அபிப்பிராயங்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவதில்லை. "அந்தோணி புண்யவாளனின் புலம்பல்', "பழைய ஏற்பாடு' இவற்றை வாசிக்கையில் என்னுள் எழும் உணர்ச்சியை என்னுடைய நூல்களும் எனக்கு ஏற்படுத்த வேண்டும். எனது மதிப்பீட்டின் அளவுகோல் இதுதான். அதைத்தான் நானும் லட்சியமாக வகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த சிருஷ்டிகள் நன்மையை உணர்த்துகிறது. ஒரு பறவையைக் கூர்ந்து பார்க்கிறபோதும் எனக்கு அதே அனுபவம்தான் ஏற்படும். புனர்ஜென்மம் உண்டென்றால் நான் பருந்தாகப் பிறக்க ஆசைப்படுவேன். யாருக்கும் அதன் மேல் கோபமில்லை. யாருக்கும் பொறாமையும் இல்லை. யாரும் அதை எதிரியாக எண்ணுவதில்லை. அதன் தேவையை ஒருவரும் உணர்வது மில்லை. அதன் மேல் அசூயை இல்லை; அன்பும் இல்லை. எதையாவது எண்ணி அது அலைக்கழிவதுமில்லை. விபத்தில் சிக்கி மாள்வதுமில்லை. அகப்பட்டதைத் தின்று உயிர் வாழவும் முடியும்.
கே: தாங்கள் கூறிவருகிற இலக்கியத்தரத்தை எட்ட ஒரு எழுத்தாளன் என்ன என்ன உத்தி முறைகளைக் கையாண்டு பார்க்க வேண்டும்?
ப: உத்தியில்தான் உங்களுக்கு கவனம் என்றால் தச்சு வேலையிலோ; அறுவை மருத்துவத்திலோ நுழைவது நல்லது. இலக்கிய சிருஷ்டிக்குச் சூத்திரம் கிடையாது. குறுக்குப் பாதையும் இல்லை. ஒரு கோட்பாட்டைப் பின்பற்றுகிற ஆரம்ப எழுத்தாளன் சர்வ முட்டாள். தனக்கு விளைந்த தோல்விகளிலிருந்து படிப்பினை பெற வேண்டும். தவறுகள் இழைப்பதன் மூலமே அவன் அறிந்து கொள்கிறான். உபதேசம் தந்து, தன்னைக் கரையேற்றிவிடக் கூடிய அளவில் ஒரு ஆசான் இந்த உலகில் இல்லையென்பதே அவனுடைய நம்பிக்கை. அவனுடைய அகம்பாவம் கட்டுக்கு அடங்காதது. முன்னால் வாழ்ந்திருந்த எழுத்தாளர்களுக்கு எவ்வளவுதான் அவன் அஞ்சலி செலுத்தவதாகச் சொல்லிக் கொண்டாலும் முடிந்தால் அவர்களையும் தனக்குப் பின்னால் தள்ளிவிடவே அவன் முயன்று பார்ப்பான்.
கே: உத்திகளின் பங்கை தாங்கள் மறுக்கிறீர்களா?
ப: இல்லை. சில சமயம் உத்தி முறைகள் முன் கூட்டியே ஏறி விழுந்து கலைஞனின் கனவை அமுக்கி அலங்கோலப்படுத்திவிடும். கலைஞன் உத்தியை அடக்கி ஆள்வதற்கு முன்னாலேயே உத்தி அவனை தனக்கு அடிமையாக்கிவிடும். உத்திகளுக்கே உரிய அலாதி சாமர்த்தியம் இது. அப்புறம் செங்கல்லை அப்படியே அடுக்கு அடுக்காக தூக்கி வைக்க வேண்டிய ஜோலி ஒன்றுதான் பாக்கியாக இருக்கும். இவனுக்கோ முதல் வார்த்தையில் ஆரம்பிக்கிறபோதே முத்தாய்ப்பு வைக்க வேண்டிய கடைசி வார்த்தையும் தெரிந்திருக்கும். As I lay dying என்ற நாவலை எழுதுகையில் எனக்கும் இதே அனுபவம்தான் ஏற்பட்டது. அதை எழுதுவது அத்தனை சுளுவான காரியமாக இருக்கவில்லை. சிறந்த படைப்பு எதுவும் லேசாக இராது. அவசியமான மூலப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்தபடியால் எழுதுகையில் திணறவில்லை. சுலபமாகவே பட்டது. சக்கைச் சாறாய் நாள்தோறும் 12 மணி நேரம் உழைத்து ஆறு வார காலத்தில் அதை எழுதி முடித்தேன். எடுத்த எடுப்பில் அடுக்கு அடுக்காக சில கதாபாத்திரங்களைப் படைத்து உலாவ விட்டேன். ஜலப் பிரவாகம், தீ விபத்து போன்ற சர்வசாதாரண இயற்கைக் கொடுமைகளுக்கு அவர்களை ஆளாக்கினேன். இயற்கையான தூண்டுதல் ஒன்றையும் கதையின் ஓட்டத்தைக் கருதி ஏற்படுத்திக் கொண்டேன். உத்தி அதன் கழுத்தை நீட்டாதவரையிலும் ஓர் அர்த்தத்தில் எழுத்து வேலை மிகவும் லகுவானது. காரணம், எனது அனுபவத்தைக் கொண்டு சொல்வதென்றால், என்னுடைய நாவல்களில் கதாபாத்திரங்கள் எழுந்து வந்து சுயப் பொறுப்புக்களை மனமுவந்து ஏற்று குறை வேலையை முடித்துத் தந்துவிடுகிற விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு. அனேகமாக இது 275}ம் பக்கத்தையொட்டி நிகழும். 274-ம் பக்கத்தோடு நான் அந்த நாவலை முடிப்பேன் என்றால் எனது கதாபாத்திரங்களுக்கு பின்னால் என்ன நேரும் என்பதை என்னாலேயே கூற முடியாது. ஒரு நூலைக் குறித்து விமர்சிக்கையில் அந்நூல் ஒன்றையே ஆதாரமாக எண்ணிப் பேசுவதும், சுய சிருஷ்டிகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசி ஜம்பம் அடிக்காமல் இருப்பதும், கலைஞனுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணங்கள். நான் மனத்தினுள் சங்கற்பித்துக் கொண்டிருந்த தரத்தை என்னுடைய நூல் ஒன்றேனும் எட்டவில்லை. இதன்படி என்னுடைய சிருஷ்டிகளில் எனக்கு அதிக வேதனையும் அதிக ஏமாற்றத்தையும் தந்தது எது? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் நான் என்னுடைய எழுத்தை விமர்சனம் செய்கிறேன். பெற்றோர்களால் அதிகமாக நேசிக்கப் படுகிறவன் மதப்புரோகிதன் ஆகிவிட்ட பிள்ளையை விடவும் , திருடனோ, கொலைகாரனோ ஆகிவிட்ட பிள்ளைதான்.
(பேட்டித் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Good Post....
நன்றி சங்கவி
Post a Comment