Wednesday, February 10, 2010

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு




(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)


தமிழில் : சா.தேவதாஸ்


போர்ஹே: முதலில் சொல்லிவிடுகிறேன், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். ஏனெனில் எதிர்காலங்கள் பலவாயும் ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாயும் உள்ளது எனக் கருதுகிறேன்.

டேனியல் போர்னே: அப்படியானால் உங்களது கடந்த காலம், தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.
போர்ஹே: நல்லது, எனக்குக் கிடைத்த தாக்கங்களைப் பற்றிக் கூற முடியுமேயொழிய பிறரிடம் நான் செலுத்தியவைப் பற்றிக் கூற இயலாது. அது பற்றி அறியேன், அது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் முதலாவதாக என்னை ஒரு வாசகனாகவும் அப்புறம் எழுத்தாளனாகவும் கருதிக் கொள்கிறேன். அது அனேகமாகப் பொருத்தமற்றது; என்னை ஒரு நல்ல வாசகனாகக் கருதுகிறேன். பல மொழிகளில் நல்ல வாசகன், குறிப்பாக ஆங்கிலத்தில் - ஏனெனில் கவிதை, ஆங்கிலம் மூலமாகவே என்னை வந்து சேருகிறது. ஸ்வின்பர்ன், டென்னிஸன், கீட்ஸ், ஷெல்லி மீதான என் தந்தையின் நேசத்தால் - என் தாய்மொழி மூலமாக, ஸ்பானிஷ் மூலமாக அல்ல. ஒரு வித மயக்கமாக என்னிடம் வந்தது. அதனைப் புரிந்துகொள்ளவில்லை யெனினும் உணர்ந்து கொண்டேன். தன் நூலகத்தைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என் தந்தை விட்டுவிட்டார். என் சிறுபிராயத்தை எண்ணிப் பார்க்கையில், நான் வாசித்த புத்தகங்களின் ரீதியிலேயே எண்ணிப் பார்க்கிறேன்.

போர்னே: உண்மையிலேயே நீங்கள் புத்தக மனிதர்தான். நீங்கள் நூலகராக இருந்ததும், தொன்மையானவை மீது உங்களுக்கு மோகம் இருப்பதும் சேர்ந்து, புதியவை படைத்தலுக்கு எப்படி உதவியுள்ளன என்று கூற முடியுமா?
போர்ஹே: என் எழுத்தில் புதுமையேதும் உள்ளதா என்று அதிசயிக்கிறேன். அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே என்னை எண்ணிக் கொள்கிறேன். கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில் (1899) பிறந்தேன். சம காலத்து எழுத்தாளர்களையும் படிக்கிறவன் என்றாலும் டிக்கன்ஸ், பைபிள் அல்லது மார்க் ட்வெய்ன் படித்து வளர்ந்தவன். கடந்த காலத்தில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். நம்மால் கடந்த காலத்தை உருவாக்க முடியாது, மாற்ற முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தை இல்லாமல் ஆக்குவது அரிதானது என்ற பொருளில் கூறுகிறேன். ஆனால் கடந்த காலம் என்பது வெறுமனே ஒரு நினைவு, ஒரு கனவு. நினைத்துப் பார்க்கையில் அல்லது எனக்குச் சுவாரஸ்யமானவற்றை வாசித்துக் கொண்டிருக்கையில், என் கடந்த காலம் தொடர்ந்து மாறுவதாகத் தோன்றும். நான் படித்த எழுத்தாளர்களுக்கு அல்லது தமது மொழியின் அங்கமாக, தம் மரபின் அங்கமாக இருந்த எழுத்தாளர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மொழி தன்னளவிலேயே ஒரு மரபாயிருக்கிறது.

ஸ்டீபன் கேப்: உங்களது கவிதையைப் பார்ப்போமா?
போர்ஹே: நானொரு அழையா விருந்தாளி, கவிதை எழுத முயலுகையில் நான் எழுதுவதே இல்லை என்கின்றனர் என் நண்பர்கள். ஆனால் உரைநடை எழுதும் என் நண்பர்கள் உரைநடை எழுத முயலுகையில் நான் எழுத்தாளரே கிடையாது என்கின்றனர். எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடமான மனோநிலையில் இருக்கிறேன்.

கேப்: கேரிஸ்னைடர் என்னும் நவீன கவி riprap என்னும் சிறு கவிதையில் தன் கவிக் கோட்பாட்டை விளக்குகிறார். அவரது கருத்துகள் உங்களது கவிதையுடன் சில அம்சங்களில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையிலுள்ள வார்த்தைகளின் பாலான அவரது அணுகுமுறையை விவரிக்கும் அதன் சிறுபகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

போர்ஹே: சரி. சிறுபகுதியென்ன, பெரிய பகுதியாகவே கூறலாம், இல்லையா? இக்காலைப் பொழுதில் அதனை ரசிக்க விரும்புகிறேன். (riprap - தொகுப்பிலிருந்து கவிதையை கேப் வாசிக்கிறார்.)


கேப்: ரிப்ரேப் என்னும் இத்தலைப்பு. சறுக்கலான மலைப் பகுதியில் குதிரைகள் செல்வதற்காக அமைக்கப்படும் கல்பாதையைக் குறிக்கும்.

போர்ஹே: வெவ்வேறான உருவகங்களுடன் அவர் எழுதுகிறார், நான் அப்படி எழுதுவதில்லை. எளிய முறையில் எழுதுகிறேன். விளையாட அவரிடம் ஆங்கிலமிருக்கிறது. எனக்கு இல்லை.

கேப்: ஒவ்வொரு கல்லும் இருபுறமுள்ள ஒவ்வொரு கல்லையும் சார்ந்திருக்கின்ற, பிணைப்புக் கொண்டுள்ள இப்பாதையுடன், கவிதையில் வார்த்தைகளை இடம்பெறச் செய்வதனை ஒப்பிடுவதாகத் தோன்றுகிறது அவரது கருத்து. கவிதை கட்டுமானத்தில் இவ்வணுகுமுறை உங்களுக்கு ஏற்புடையதா அல்லது பலமுறைகளில் இதுவும் ஒன்றுதானா?

போர்ஹே: 'ஆதிவாசிகளின் பாடல் புனைய அறுபத்தொன்பது வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொன்று சரியானவைதான்' என்று கிப்ளிங் கூறியதுபோல, சரியான முறைகளுள் அதுவும் ஒன்றாகலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் என்னுடைய முறை அது போன்றதல்ல - அது ஒருவித உறவு, இருண்டதான ஒன்று. ஒரு கருத்து எனக்குக் கிடைக்கும்போது அது ஒரு கதையாகலாம், கவிதையாகலாம், எனக்குக் கிடைத்திருப்பது தொடக்கமும் இலக்கும்தான். இடையே நிகழ வேண்டியதை நான் கண்டறிய வேண்டும் - இட்டுக்கட்ட வேண்டும், அப்போது என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறேன். ஆனால் பொதுவாக அது போன்றதொரு உத்வேகம் வரும்போது, அதனைத் தடுத்திட என்னால் ஆன மட்டும் பார்ப்பேன்; அதையும் மீறி நீடித்தால், எப்படியாவது எழுதியாக வேண்டியிருக்கும். ஒருபோதும் விஷயங்களைத் தேடுவதில்லை. டீக்கடையிலோ, தூங்க முயலும்போதோ, தூங்கி எழும்போதோ விஷயங்கள் கிடைத்துவிடும்; போனஸ் அயர்ஸின் வீதிகளிலோ அல்லது வெறெங்கோ எந்த நேரத்திலும் கிடைத்துவிடும். உதாரணமாக ஒரு வாரத்திற்கு முன் ஒரு கனவு வந்தது. தூங்கி எழுந்தபோது அது தீங்கனவாயிருந்தது. அது சொல்லத் தகுதியானதல்ல என்றிருந்தேன்; ஆனால் அதில் ஒரு கதை மறைந்திருப்பதாய் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிய விரும்புகிறேன். அதனைக் கண்டுவிட்டதாக எண்ணும் இப்போது, அயந்து - ஆறு மாதங்களில் எழுதிவிடுவேன். நேரம் எடுத்துக் கொள்வேன். ஆதலின் என்னிடம் வேறுபட்டதான முறை இருக்கிறது எனலாம். நிச்சயமாக ஒவ்வொரு கைவினைக் கலைஞனிடமும் அவனுக்கே உரிய முறையில் உள்ளது; நான் அதனைப் போற்றுவேன்.

கேப்: பகுத்தறிதலின் தலையீடு ஏதுமின்றி, தன் மனநிலையை அப்படியே வாசகனுக்கு மாற்றிட முயலுகிறார் ஸ்டைனர்; உணர்தலை நேரடியாக மாற்றிட விரும்புகிறார். இது சற்று அதீதமாய் உங்களுக்குத் தோன்றுகிறதா?
போர்ஹே: இல்லை. ஆனால் அவர் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட கவியாகத் தோன்றுகிறார். நானோ வயதானவன், கள்ளங்கபடமற்றவன், மனம் போனபடி பிதற்றுகிறேன், என் பாதையை அறிந்திட முயலுகிறேன். உதாரணமாக என்ன செய்தி வைத்திருக்கிறேன் என மக்கள் கேட்கின்றனர்; ஏதுமில்லை என அஞ்சுகிறேன். நல்லது இங்கே கதையொன்று இருக்கிறது. அதன் நீதி என்ன? எனக்குத் தெரியாதென்றே அஞ்சுகிறேன். நான் வெறுமனே கனவு காண்பவன்தான்; அப்புறம்தான் எழுத்தாளன். எனது சந்தோஷகரமான தருணங்கள், நான் வாசகனாயிருக்கும் போதுதான்.

கேப்: விளைவுகள், பொதிந்துள்ளவனாக வார்த்தைகளைக் கருதுகிறீர்களா? அல்லது படிமங்களைத் தாங்கி நிற்பதாகக் கருதுகிறீர்களா?
போர்ஹே: நல்லது ஆமாம். உதாரணமாக, சிற்றுணர்ச்சிப் பாடலொன்றை (sonnet) உருவாக்க குறைந்தது ஸ்பானிய மொழியில் சில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஓரிரு ஒளியியைபுகளே உண்டு. அவற்றை உருவகங்களாக, வினோதமான உருவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சொல்வேன். இது அதிரடி வாசகமே. ஆங்கிலத்தில் MOON லத்தீன் - ஸ்பானிய வார்த்தையான "LUNA' விலிருந்து வேறுபட்டதான சொல்லிலிருந்து உருவாகிறது. "MOON என்னும் சொல் ரீங்காரிக்கும் சப்தமாயுள்ளது, அழகான வார்த்தை. ஃப்ரெஞ்ச் சொல்லும் அழகானதே , "LUNA". ஆனால் பழைய ஆங்கிலச் சொல் "MONA ' இரு அசைவுகளைக் கொண்டுள்ள இது அழகாயில்லை. அப்புறம், கிரேக்க வார்த்தை இன்னும் மோசமானது. மூன்றசை கொண்ட "CELENA'. ஆனால் "MOON" என்பது அழகிய சொல். இச்சப்தத்தை ஸ்பானிய வார்த்தைகளில் காண முடியாது. என்னால் வார்த்தைகளில் சஞ்சரிக்க இயலும்; வார்த்தைகள் உத்வேகம் தருபவை; தமக்கென்று ஜீவன் கொண்டவை.

கேப்: வார்த்தை தனக்கெனக் கொண்டுள்ள ஜீவன், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அது தரும் அர்த்தத்தைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறதா?
போர்ஹே: அர்த்தங்கள் அநேகமாய் பொருத்தமற்றவை என்றே எண்ணுகிறேன். முக்கியமானது எதுவெனில், அல்லது நான் குறிப்பிட வேண்டிய இரு முக்கிய அம்சங்கள், உணர்வும், உணர்விலிருந்து எழும் வார்த்தைகளுமே. உணர்ச்சியற்ற விதத்திலே எழுதக் கூடும் என்று நான் எண்ணவில்லை. அப்படி முயன்று பார்த்தால், அது செயற்கையானதாகயிருக்கும். அது போன்ற எழுத்தை நான் விரும்புவதில்லை. ஒரு கவிதை தன்னைத் தானாகவே எழுதிக் கொண்டது என்று நாம் எண்ணும்போதுதான் உண்மையிலேயே அது உயர்ந்த கவிதை என்று கருதுகிறேன். அது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

கேப்: ஒரு கவிஞரிடமிருந்து இன்னொருவரிடம் போகும்போது ஒருவகையான தொன்மங்கள் இன்னொரு விதமானவற்றால் இடமாற்றம் செய்யப்படக் கூடியவையா, அப்போதும் அதே விளைவு கிடைக்குமா?
போர்ஹே: ஒவ்வொரு கவியும் தனக்கேயான தொன்மவியலைக் கொண்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். அதனை அவன் அறியாதிருக்கலாம். வரிப்புலிகள், கத்திகள், புதிர்ப் பாதைகள் குறித்த தனிப்பட்ட தொன்மவியலை நான் உருவாக்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அது எனக்குத் தெரியாது. என் வாசகர்கள் இதனைக் கண்டறிகின்றனர். ஆனால் அது கவிஞனின் வேலை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவை எண்ணுந்தோறும் அதனை வால்ட் விட்மன் சார்ந்ததாகவே எண்ணுகிறேன். "மன்ஹாட்டன்' என்னும் வார்த்தை அவருக்கென கண்டுபிடிக்கப்பட்டது, இல்லையா?

கேப்: ஆரோக்கியமான அமெரிக்கா குறித்த ஒரு படிமம்?
போர்ஹே: ஆமாம், அதேவேளையில் வால்ட் விட்மனே ஒரு தொன்மம்தான்; மிகவும் துரதிருஷ்டம் வாய்ந்தது. மிகவும் தனிமைப்பட்டு எழுதியவர் குறித்த ஒரு தொன்மம். எனினும், தன்னை ஓர் அழகிய நாடோடியாக ஆக்கிக் கொண்டவர். பூமியில் தன்னை ஒரு தொன்மவியல் மானுடனாக படைத்துக் கொள்ள முடிந்த ஒரே எழுத்தாளன் வால்ட் விட்மின்தான் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். TRINITY- யில் உள்ள மூவரில் ஒருவர் வாசகர்தான். ஏனெனில் நாம் வால் விட்மனை வாசிக்கும்போது நாம் வால்ட் விட்மனாகி விடுகிறோம். அதனைச் செய்து காட்டிய விசித்திரமான நபர் அவர் ஒருவரே. உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறதுதான்; குறிப்பாக நியூ இங்கிலாந்து மாநிலம். ஒதுக்கிவிட முடியாத எழுத்தாளர்களைத் தந்துள்ளீர்கள். உதாரணமாக, போ, விட்மன், மெல்வின், ஹென்றி ஜேம்ஸ் போன்றோர் இல்லாது போனால், நிகழ்கால இலக்கியம் இத்தகையதாக இருக்க இயலாது. ஆனால் தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை, எங்களுக்கும் ஸ்பெயினுக்கும் முக்கியமானதாக நிறைய உண்டு. எஞ்சிய மற்ற உலகத்திற்கு முக்கியமாக இராது. மிக நேர்த்தியானதாகவே ஸ்பானிய இலக்கியம் தொடங்கிற்று என்று கருதவே செய்கின்றேன். பின்னர் எப்படியோ க்யூவெடோ, கோங்கோரா என்னும் எழுத்தாளர்களுடன் எதுவோ விறைத்திருப்பதை உணர்கிறோம். முன்புபோல அம்மொழி ஓடிக்கொண்டிருப்பதில்லை.

போர்னே: 20-ம் நூற்றாண்டுக்கும் இது பொருந்துமா? உதாரணமாக லோர்கா இருக்கிறார்.
போர்ஹே: ஆனால், லோர்காவை நான் அதிகம் விரும்புவதில்லை. இது என்னிடம் உள்ள பலவீனம். காட்சி ரீதியிலான கவிதைகளை நான் வெறுக்கிறேன். அவர் எப்போதும் காட்சி ரீதியிலானவர். விசித்திரமான உருவங்களைத் தேடுபவர். ஆனால் அவர் மிகவும் மதிக்கப்படுவர் என்பதை அறிவேன். தனிப்பட்ட முறையில் அவரை நான் அறிந்தவன்; நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தார். ஓராண்டு இருந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அறிந்து கொள்ளாதது மிக விசித்திரமானது. ப்யூனஸ் அயர்ஸில் ஒரே ஒரு முறையே சந்தித்தேன். அதன்பிறகு அவரது அதிர்ஷ்டம் தூக்கிலிடப்பட்டு விட்டார். கவிஞருக்கு நேரக்கூடிய உயர்ந்த விஷயம், நேரிய சாவு இல்லையா? கச்சிதமான மரணம். பின்னர் அவரைப் பற்றி ஆண்டனியோ முசாரோ அழகான கவிதை எழுதினார்.

கேப்: ஹோபி இந்தியர்கள் பலமுறை உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்தம் மொழியின் தன்மை, அம்மொழியும் சொற்கோவை எவ்விதம் உருப்பெற்றது என்பதன் காரணமாக.
போர்ஹே: அதுபற்றி எனக்குத் தெரியாது. பாம்பாஸ் இந்தியர்கள் பற்றி என் பாட்டி கூறியிருக்கிறார். தன் வாழ்க்கையை ஜீனினில் கழித்தவர்- அது நாகரீகத்தின் மேற்கு முனையாகும் - அவர்களது கணிதம் இப்படிப் போவதாக என்னிடம் கூறினார். ஒரு கையை உயர்த்திக் கொண்டு "பாம்பஸ் இந்தியரின் கணிதத்தைக் கற்றுத் தருகிறேன்'' என்றாள். "எனக்குப் புரியாது'' என்றேன். "உனக்குப் புரியும், என் கைகளை கவனி. 1, 2, 3, 4 பல.'' முடிவின்மை அவள் பெருவிரலில். தூரம் பற்றி மக்களுக்குச் சொற்பமாகவே தெரியும் என்று இலக்கியவாதிகள் கூறுவதையும் கவனித்திருக்கிறேன். அவர்கள் மைல், லீக் ரீதியில் எண்ணுவதேயில்லை.

போர்னே: கெண்டுகியிலிருந்து வரும் நண்பன் ஒருவன் ஒரு மலை, இரு மலைகள் என அவர்கள் தூரத்தைக் குறிப்பிடுகின்றனர் என்றான்.
போர்ஹே: நிஜமாகவா? எவ்வளவு புதிராயிருக்கிறது.

கேப்: ஸ்பானிஷலிருந்து ஆங்கிலத்திற்கும் ஜெர்மனுக்கும் அல்லது பழைய ஆங்கிலத்திற்கும் மாறுவது, உலகை நோக்குவதற்கான வெவ்வேறான வழிமுறைகளைத் தருவதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
போர்ஹே: மொழிகள் ஒரே தன்மையானவையென கருதவில்லை. ஸ்பானிய மொழியில் விஷயத்தை ஓடச் செய்வது சிரமமானது. ஏனெனில், அதன் வார்த்தைகள் மிக நீளமானவை. ஆனால் ஆங்கிலத்தில் 'SLOWLY', 'QUICKLY' என்று குறிப்பிட்டால் அவ்வார்த்தைகள் பொருள் மிக்கதான பகுதியைக் கேட்க முடியும். SLOW-LY, QUICK-LY. SLOW, QUICK- னைக் கேட்கலாம். ஆனால் ஸ்பானிஷில், SEIY LENTAMENTE, RAPIDAMENTE என்கிறோம். கேட்பது என்னவோ - MENTE என்பது. என் நண்பன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் சிற்றுணர்ச்சிப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான். ஒரு ஆங்கிலப் பாடலுக்கு இரு ஸ்பானியப் பாடல்கள் தேவைப்படும் என்றேன் - ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் குறுகியவை, நேரிடையானவை, ஸ்வானிய வார்த்தைகளோ மிக நீளமானவை. ஆங்கிலத்திற்கு பெüதிகப் பண்புமுண்டு. கிப்ளிங்கின் "The Ballad of East And West' - இல் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஆஃப்கானத்து குதிரைத் திருடனைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பார். இருவரும் குதிரை மீதிருப்பர். "தாழ்ந்துவிட்ட நிலவினை அவை விண்ணிலிருந்து ஓட்டிவிட்டன. அவற்றின் குளம்புகள் விடியலை முரசடித்து எழுப்புகின்றன'' என்று கிப்ளிங் எழுதுகிறார். ஸ்பானிஷில் தாழ்ந்துவிட்ட நிலவினை விண்ணிலிருந்து ஓட்டிவிட முடியாது. விடியலை முரசடித்து எழுப்ப முடியாது. அவ்வாறு செய்ய இயலாது. அவன் விழுந்தான், எழுந்து கொண்டான் என்பதுபோன்ற எளிய வாக்கியங்களைக்கூட அப்படியே ஸ்பானிஷில் கூற இயலாது. தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு எழுந்தான் அல்லது இதுபோன்ற கருத்துச் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் கொண்டும் அசைச் சொற்களைக் கொண்டும் நிறைய உண்டாக்கலாம். Dream away your life live upto , something you have to live down என்றெல்லாம் எழுத முடியும். இவை ஸ்பானிஷில் சாத்தியமில்லை. சொல்ல இயலாதவை. அடுத்து, கூட்டு வார்த்தைகள். உதாரணமாக world smith ஸ்பானிஷில் இது பகட்டாரவாரம் கொண்டதாக, நயமற்றதாக un herrero de palabras என்று வரும். ஆனால் ஜெர்மானிய மொழியில் எளிதாய் வரும். ஆங்கிலத்தை விடவும் சிறப்பானதாய் ஜெர்மனியில் இருக்கும். ஏனெனில் ஜெர்மனியில் எப்போதும் வார்த்தைகளை உருவாக்க இயலும். ஆங்கிலத்தில் அவ்வாறு இயலாது. ஆங்கிலோ - சாக்ஸன்கள் பெற்றிருந்த சுதந்திரம் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, úúôþ úsige fole அல்லது victorious people என்னும் பழைய வார்த்தை. பழைய ஆங்கிலத்தில் இவற்றை செயற்கையானதாக கருத இயலாது. ஆனால் ஸ்பானிஷில் இதனைக் குறிப்பிட இயலாது. அழகானவை என ஸ்பானிஷில் நான் கருதுவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது... ஒலிகள் மிகத் தெளிவானவை. ஆங்கிலத்திலோ திறந்த உயிரொலிகள் இல்லாது போய்விட்டன.

(சந்திப்பு தொடரும்)

No comments: