Thursday, November 19, 2015

உக்கிர எழுத்துக்கான தருணம் - அழகிய பெரியவன்






தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர் என்ற வகைமை தேவையா?

பொதுவாகத் தேவை இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் அந்த அடையாளம் எப்போது தேவைப்படுகிறது என்றால், ஒருவரைச் சரியாக அங்கீகரிக்காதபோது, அந்த அடையாளம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், இந்திய அளவிலான இலக்கியத்தில்கூட, தொடக்கக் காலத்தில் இருக்கக்கூடிய இலக்கியப் பதிவுகள் அனைத்துமே மேட்டுக்குடியினரால் எழுதப்பட்டதுதான். அதில் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான, சரியான சித்திரம் இல்லாமல் இருந்தது. தலித்துகளும் இலக்கியம் சார்ந்த விஷயத்தில் அதிகமாக எழுதாமல் இருந்தனர். அந்த அடிப்படையில் தலித்துகளும் தங்கள் சொந்த அனுபவங்களையும் எழுதுவோம் என்று 90-களில் எழுத ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓர் அடையாளப் பூர்வமாகத்தான் தலித் எழுத்துகளைப் பார்க்க முடியும். ஆனால் இதை ஒரு தேவையான வகைமை என்று நான் சொல்லமாட்டேன்.

தலித் படைப்புகள் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயம் ஏற்படுத்த முடியும். இலக்கியம் என்பது அடிப்படையில் மனதோடு உறவாடக்கூடிய ஒன்று. புத்தகத்துக்கும் வாசகனுக்குமான உறவு என்பது மிகவும் அந்தரங்கமானது. தனித்துவமானது. விருப்பு வெறுப்புகள் அற்று, வாசிப்புக்கு என்றுள்ள அரசியல் எல்லாம் அற்று, ஒரு வாசகன் புத்தகத்தை நேர்மையாக அணுகும்போது, நிச்சயம் அந்த வாசகன் மனதில் பெரிய மாற்றத்தைப் படைப்பு ஏற்படுத்தும். எல்லா இலக்கியத்துக்குமே மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு. அது தலித் இலக்கியத்துக்கு உண்டு.

தலித் படைப்புகளை தலித் அல்லாதவர்கள் எழுதுவது சரியா?

தாராளமாக எழுதலாம். ஆனால் அனுபவங்கள் எழுத்தாகும்போது, அது சொந்த அனுபவமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக வெளிப்படும். அந்த வகையில் இந்திய சமூகத்தில் தலித்துகள் படக்கூடிய அவமானங்கள், வன்கொடுமைகளைத் தலித்துகள் எழுதும்போதும்தான் அது சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அது முதல் கை அனுபவம். பார்த்து எழுதுவதற்கும், அனுபவித்து எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. அது மெல்லிய கோடுதான். அதனால் தலித் படைப்புகளை தலித்துகள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறேன். அதேசமயம் தலித்துதான் தலித் படைப்புகளை எழுத வேண்டும் என்று நான் வாதிடவில்லை. தலித் அல்லாதோர் எழுதும் எழுத்துகளை தலித் சார்பு எழுத்துகள் என்று சொல்லலாம்.

தலித்துகள் எழுத்தாளர்களின் படைப்பு என்பது சுயபச்சாதாபம் கொண்ட எழுத்தாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலித்துகள் மிக நீண்ட காலமாகவே தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அது சுயபச்சாதாபமாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ இருக்கலாம். ஆனால் அது நீண்ட காலப் போக்கில் வேறு பல பரிமாணங்களையும் எடுக்கும். எல்லா மனிதர்களையும் போல, தலித்துகளுக்கும் தனித்துவங்கள் இருக்கின்றன. சுயபச்சாதாப படைப்புகள் ஒன்றிரண்டு வரலாம். ஆனால் தற்போது தலித்துகள் தங்கள் எழுத்துகளை மிக உக்கிரத்தோடு வெளிப்படுத்தும் தருணம் கனிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படியான படைப்புகளும் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. எனவே சுயபச்சாதாப எழுத்து என்பது மேலோட்டமான மதிப்பீடாகும்.

பொதுதன்மைக்குள் வராமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி மட்டுமே எழுதுவதை, சிறந்த படைப்பாகக் கருத முடியுமா?

பொது, தனி என்று பிரிக்க முடியாது என்று நினைக்கிறேன். தனி என்று சொல்வது பொதுவுக்குள் அடக்கமாக இருக்கிறது. உண்மையில் பொது என்று நீங்கள் கூறுவதை, அணுகி நெருங்கிப் பார்த்தால் தனியாகத்தான் இருக்கும். எனவே, பொது, தனி என்பதெல்லாம் இல்லை. ஒரு மனிதருக்குக் கையிலோ, காலிலோ அடிபட்டிருக்கிறது என்றால், அது மருத்துவ ரீதியாக தனித்தனியாக இருக்கலாம். ஆனால் அந்த மனிதனுக்கு உடல் முழுவதும்தானே பாதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதரைப் போன்று சிந்தனைவாதி என்ற நிலையிலோ, செயற்பாட்டாளர்கள் என்ற நிலையிலோ தற்போது தலித்துகள் யாரும் முதன்மையான நிலையில் இல்லையே?

எல்லாக் காலகட்டத்திலுமே, அந்தந்த தரப்பு மக்களின் ஒட்டுமொத்த குரலைப் பிரதிபலிப்பதற்கு கட்டாயம் ஒரு தலைவரோ, சில தலைவரோ இருப்பார்கள். இது வரலாற்று நீதி.
ஆனால் அவர்களின் செயல்பாட்டையும், களத்தையும் காலம்தான் தீர்மானிக்கிறது. ஒரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களைக் கொண்டு இன்னொரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களை மதிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

No comments: