மெரீனா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். விழா நாள்களில் லட்சத்துக்கும் அதிகம். அப்படி வருபவர்களில் எவர் கண்களுக்கும் சிக்காமல் ஒரு பனைமரம் நெடுங்காலமாக அங்கு நிற்கிறது. அது மாயவித்தை கற்று, தன்னை மறைத்துக் கொண்டு வேடிக்கை காட்டும் மரம் அல்ல. உயிருள்ள மரம். பனங்காடு செழித்திருந்ததன் அடையாளமாக நிற்கும் ஒற்றை மரம். அவசர யுக வாசிகளுக்கு அந்த மரம் தெரிவதில்லை. ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி கண்ணை மறைத்துவிடுகிறது. ஆனால், கவிஞர் வெய்யிலுக்கு அந்த மரம் கவிதையாகத் தரிசனம் தந்துள்ளது.
மெரீனாவிற்கு காவல் நிற்கிறது
ஒற்றைப்பனை
கண்ணகி சிலைக்குச் சற்று பின்னே.
வாசனையெழ
அலைகுடிகளின் அடுப்புகள் புகைகின்றன
அதன் தூரில்
வித்தைக் குரங்குகளின் இடுப்புக்கயிறு
முடிச்சிடப்பட்டிருக்கிறது.
ஈனவே ஈனாத ஆண் பனையது- ஆனாலும்
பார்க்க சில நேரம்
கொற்றவையைப் போல
கொல்கவி ஔவையைப்போல
இருட்டுகிற நேரத்தில்
அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல.
அந்நியத் தேசத்தில் சொந்த சகோதரனை யதேச்சையாக கண்டு ஆரத் தழுவிக் கொண்டதைப்போல பனையும் கவிஞனும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்ட பரவசத் தருணத்தை இந்தக் கவிதையில் நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கவனிப்பாரற்றவை யதேச்சையாகவோ அல்லது தேடுதல் மூலமோ கவனிப்புக்குள்ளாவதே எல்லாப் படைப்பின் ரத்த நரம்புகளாக இருக்கின்றன. இந்தக் கவிதையில் கவனிப்புக்குள்ளாவது பனை மட்டுமல்ல, அந்த மரத்துக்கு அருகில் கரைமணலில் வாழும் நாடோடிகளும். காலத்தால் பின்தங்கிய மக்கள். அவர்களை அலைகுடிகள் என வெய்யில் அழைக்கிறார். கடல் அலை பகுதியில் வாழ்வதால் அவர்களை அப்படி அழைக்கலாம். அல்லது, ஓரிடத்தில் தங்காது அலைபவர்கள் என்பதாலும் அழைக்கலாம். ஆனால், அவர்களும் பனையைப் போல மெரீனாவில் யார் கண்களுக்கும் தென்படாத மக்கள். நெடுநெடுவென வளர்ந்த பனையும், நடமாடும் மக்களுமே கண்களுக்குத் தெரியாதபோது அந்த மரத்தின், அந்த மக்களின் துயரம் மட்டும் எப்படித் தெரியப் போகிறது? ஆனாலும், அந்த மரத்தின் துயரத்தை அப்படியே வெய்யில் தர விரும்பவில்லை. காலம் முழுவதும் காத்திருந்து, அதன் வம்சத்தின் சரிதத்தை வெய்யிலிடம் தெரிவித்துவிட்டதன் மூலமே அந்த மரத்தை மெரீனாவை மகிழ்ச்சியாக காவல் காக்க வைத்துள்ளார். உலகத் துயரத்தை இவ்வளவு எளிதாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்?
/இருட்டுகிற நேரத்தில்/ அற உணர்ச்சியின் செங்குத்து வடிவம்போல/ என்பது கவிதையின் கடைசி இரண்டு வரிகள். இந்த வரிகளின் முழுமையான அர்த்தத்தை கண்ணகி சிலை பின்புறம் இரவுகளில் நடைபெறுவதைக் காண்பதன் மூலமே உணர முடியும்.
மெரீனாவுக்கு மட்டுமல்ல, சூரியனுக்கே போனாலும் வெய்யில் எதைப் பார்ப்பார், அங்கு என்ன தேடுவார் என்பதற்கு ஒரு கவிதை.
நிலமிழந்த சிறுவர்கள்
மிச்சமிருக்கும்
ஒரு பனங்கிழங்கை
சூரியனின் மீது வைத்துச் சுடுகிறார்கள்
சனமிழந்த காகத்துக்கும் நாய்க்கும்
இரு துண்டுகள் ஈயும்
அவர்களை
கடலின் கண்கள் வெறித்துப் பார்க்கின்றன
ஈழத்துக்கும் தனுஷ்கோடிக்கும்
மாறிமாறி நீந்தும் ஆமைக்கு
அந்த ஒரு சேதி இன்னும் சொல்லப்படவில்லை.
பூமியிலிருந்தே மனிதனை அப்புறப்படுத்தும் வேலைகளை மனிதர்களே இப்போது மும்முரமாகச் செய்து வருகிறார்கள். பூமிவாசிகளின் சரிதத்தை அறிந்ததாலோ என்னவோ சூரியனும் அதன் நெருப்புக்கோளத்தைத் தாண்டி வரவிடாமல் மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறது. ஒருவேளை, அதையும் தாண்டி மனிதர்கள் சூரியனுக்குப் போனால் என்ன செய்வார்கள் என்பது இருக்கட்டும், கவிஞன் என்ன செய்வான்? பனங்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவான் என்கிறார் வெய்யில். இந்தக் கவிமனமும், நிலமிழப்பினும் சூரியனை எங்களின் அடுப்பாக்கிக் காட்டுவோம் என்கிற துணிவும் இந்த உலகத்து துயரத்தைத் துடைத்து, வேறொன்றைக் காட்டும் சேதிகள்.
யாரும் கவனிக்க விரும்பாத பன்றிகள் தமிழ்க் கவிதைகளில் உலவுவது புதிது இல்லை. குவளைக்கண்ணனின், "பன்றிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை', கல்யாணராமனின், "பன்றி' கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தக் கவிதைகள் எல்லாம் மனித நிலையிலிருந்து பன்றியைத் தூர வைத்து பார்த்து, பிறகு மனிதனையே கேலிக்குள்ளாக்குவதன் மூலம் பன்றியைக் கேலிக்குள்ளாக்கும் கவிதைகள். அவற்றிலிருந்து மாறுபட்ட முறையில் பன்றியை வெய்யில் நிறைய கவிதைகளில் அணுகியுள்ளார். அதில் ஒரு கவிதை:
என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது
அதைப் பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்
தேவையைப் பொறுத்து
அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்
சாந்தமாக இப்படிச் சொல்லும்...
"நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!'
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட
நான் புழக்கடை பக்கம் போய் மெüனமாக நின்றேன்
புரிந்துகொண்டு சிரித்தபடி
வந்து வெட்டு மேசையில் படுத்தது
அதன் காதில் சொன்னேன்
"ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன்
உன் மாமிசம் மகிழம்பூவில் வாசமாயிருக்கும்''
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாக இருக்கவில்லை
மறுநாள் நான் உறங்குகையில்
அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது
"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது
நானதன் விழிகளில்
எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.
இந்தக் கவிதை, /"கேரட் என்று நினைத்தேன்!'' என்றபடி தலைகுனிந்து நின்றது/ என்றாலே முடிந்து விடுகிறது. ஆனாலும், பன்றியின் சிவந்த கண்களைக் கவிஞன் பார்க்க விரும்புகிறான். அது, பன்றியின் கண்கள்தான் என்றாலும் கவியின் கண்கள்தானே!
நூல்:
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி - வெய்யில்
ரூ.80
கொம்பு பதிப்பகம்
No comments:
Post a Comment