Thursday, December 20, 2007

இப்படி வார்த்தைகளால் தினம்தினம் துகிலுரியப்பட்டு...

வென்றவர்கள்.... சொல்கிறார்கள்
ஒரு மனிதனால் குதிரையைத் தண்ணீர்த் துறைக்கு அழைத்துப் போகமுடியும். ஆனால், நூறு பேர் சேர்ந்தாலும் அக்குதிரையைத் தண்ணீர் குடிக்கவைக்க முடியாது. குதிரைக்கு முதலில் தாகம் இருக்கவேண்டும். அந்தத் தாகத்தில்தான் தண்ணீரின் பயன் முழுமையாக இருக்க முடியும். வாசிப்புப் பழக்கம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டிய தார்மிகத் தாகம்!
-அசோகமித்திரன், எழுத்தாளர்.

பார்வையற்ற ஒருவர் வீதியில் போனால், கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போக உங்கள் நல்ல மனசு முன்வருகிறது. கால் ஊனமான ஒருவர் நடந்து போவதைப் பார்த்ததும் கண்களில் கருணை பொழிய உங்கள் டூ-வீலரில் இடம் தருகிறீர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். மிகமிகப் பாராட்டுதலுக்குரிய விஷயம் இது. ஆனால்... "ஏய்...ஒம்போது!' "ஹே, உஸ் வருதுடா..!' -இப்படி வார்த்தைகளால் தினம்தினம் துகிலுரியப்பட்டு அவமானத்துக்கு ஆளாகும் அரவாணிகளைப் பற்றி எப்போதேனும் உங்கள் மனிதாபிமான மனம் சிந்தித்திருக்கிறதா?
-ஆஷாபாரதி, தலைவர், தமிழ்நாடு அரவாணிகள் சங்கம்.

எனக்கு 62 வயதாகிறது. 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறேன். வழி தவறுவதற்கான எத்தனையோ வாய்ப்புகள் கண்ணுக்கெதிரில் காத்துக்கிடந்த நாட்கள் நிறைய. பணம், புகழ், மது, மாது என மனித ஒழுக்கத்துக்குச் சவால்விடும் எல்லா அம்சங்களும் அருகில் இருந்த சூழலிலும், "ஒழுக்கமாக வாழ்ந்திருக்கிறேன்' என்கிற மனநிறைவுதான் இன்னும் என்னைக் கிழவனாக்காமல் வைத்திருக்கிறது. ஓடுகிற பேருந்தில் ஓடிப்போய் ஏறுகிற உடல் பலத்தைத் தந்திருக்கிறது.
-சிவகுமார், நடிகர்.

"அணுகுண்டுக்கும் புத்தகத்துக்கும்
ஒரேயொரு வித்தியாசம்தான்!
அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்.
புத்தகம் திறக்கிறபோதெல்லாம் வெடிக்கும்'
ஆம், வேறு எந்த கலைப் படைப்பாளியைவிடவும் இலக்கியப் படைப்பாளிக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்பு உண்டு. எழுதுபவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்பது என் கருத்து. பிகாúஸôவின் ஓவியங்களைவிட, பீத்தோவனின் இசைக் கோலங்களைவிட, ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல், மக்களை ஆட்டிப்படைத்துவிடும்.
-ஜெயகாந்தன், எழுத்தாளர்.

"நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்கிற உன் உரிமையைக் காக்க, நான் என் உயிரையும் தருவேன்' என்கிற வால்டேரின் கருத்தே, கருத்துரிமைக்கான அடிப்படை! பிறக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கும் ரேகைகளைப்போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வெறு விதமான கருத்துகள் இருக்கும். தாயின் கருவறையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும்கூட ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. கருத்துரிமை என்பது மனிதனின் பிறப்புரிமை.
-பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

நன்றி: நூல்: தமிழ்மண்ணே வணக்கம்

No comments: