Wednesday, December 5, 2007

குஷ்புவின் ஆபாசப் படம்... ஒரு பார்வை!


செய்தி:

லண்டனில் இருந்து வெளிவரும் மேக்சிம் என்ற பத்திரிகையின் இந்திய பதிப்பில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் ஒன்று வெளியிடப்பட்டது. நீச்சல் உடையில் குஷ்பு தோன்றுவதுபோல் அந்தப் படம் உள்ளது. ஒரு
வெள்ளைக்கார அழகியின் ஆபாச உடலில், குஷ்புவின் முகத்தை கணிப்பொறி உதவியுடன் பொருத்தி வெளியிட்டிருந்தது. படத்திற்குக் கீழ் நூறுக்கு நூறு போலியான படம் என்ற வாசகமும் இருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த குஷ்பு, போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில் கூறியிருந்ததாவது:
2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த மேக்சிம் பத்திரிகையை கடைக்குச் சென்று விலைக்கு வாங்கினேன். அந்தப் பத்திரிகையைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது. என்னுடைய முகத்தின் படத்தை, வேறு ஒரு பெண்ணின் உடலோடு சேர்த்து ஆபாசமாகப் பிரசுரித்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் ஒரு ஓரத்தில் அசிங்கமான வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த ஏராளமான பேர் எனக்குப் போன் செய்தார்கள். ஒரு ஆபாசமான போலியான படத்தை வெளியிóட்டு, என் நன்மதிப்பை பாதிக்கச் செய்துள்ளனர். ஆகவே, பெண்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
குஷ்பு கொடுத்த புகாரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேக்சிம் பத்திரிகை ஆசிரியர் சுனில்மெஹரா, பத்திரிகையின் ஆர்ட் டைரக்டர் அன்ஜண்ட் தாஸ், வெளியீட்டாளர் சேவியர் கொலோக்கா,
சர்குலேஷன் துணை ஜெனரல் மானேஜர் தீபத்பட், தென் பிராந்திய சர்குலேஷன் துணை ஜெனரல் மானேஜர் பசல் உசேன்கான் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்னும் அக்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் என் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பசல்உசேன்கான்,
சென்னை ஐகோர்óட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இவர் சென்னை, கே.கே.நகரில் வசித்து வருகிறார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் மீது கூறப்பட்ட புகாருக்கு முகாந்திரம் இல்லை. தெளிவற்ற புகாராகும். சட்டப்படி, உண்மைப்படி இதுபோன்ற வழக்கை என் மீது தொடர முடியாது. என் மீது தொடர்ந்து வழக்கை நடத்துவது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். அந்தப் பத்திரிகையை விநியோகிப்பதற்கு காரணம் நான்தான் என்று வைத்துக்கொண்டால்கூட எனது நிறுவனத்தின் உத்தரவு அடிப்படையில் செய்த காரியமாகத்தான் அதைக் கருத வேண்டும். இதை வைத்து என் மீது குற்றம் சுமத்த முடியாது. எப்படிப்பட்ட புகைப்படத்தைப் பிரசுரிப்பது என்பதை உரிமையாளர்தான் முடிவு எடுப்பார். இந்த விஷயத்தில் பத்திரிகை கொள்கை முடிவு எடுப்பதில் எனக்கு எந்தவித பங்கும் கிடையாது. ஆகவே, எழும்பூர் கோர்ட்டில் என்மீதுள்ள வழக்கை ரத்து செய்ய
வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எழும்பூர் கோர்ட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் அக்கோர்ட்டில் ஆஜராவதற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி கே.என்.பாஷா நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ரஹமத் அலி ஆஜராகி வாதாடினார். வக்கீல் வாதத்திற்குப் பிறகு இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு அனுமதித்தார். எழும்பூர்
கோர்ட்டு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுதாரர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி விதிவிலக்கு வழங்கினார். இதுபற்றி பதில் தருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும்,
நடிகை குஷ்புவுக்கும் நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

பார்வை :

சர்ச்சைகளுக்கும் குஷ்புவுக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார். பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பதாக இதை எடுத்துக் கொள்ளலாமா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் நடிக்க வந்த காலத்தைவிட இப்போது முதுர்ச்சியுடன் இருக்கிறார். இரண்டாவது இவ்வளவு பிரச்சினைகள் வருகிற போதும், அதைத் தாங்குகிற, சமாளிக்கிற பக்குவம் அவருக்கு இருக்கிறது. மேக்ஸிம் பத்திரிகை விவகாரத்தில் குஷ்பு மேற்கொண்ட நடவடிக்கை சரியான ஒன்று. யாரோ ஒருவரைச் சுகப்படுத்த பத்திரிகைகள் இதுபோன்ற ஆபாசக் கூத்துகளை அரங்கேற்றுகின்றன. கணிப்பொறி உதவியுடன் குஷ்பு உட்பட மற்ற நடிகைகளின் உடலை மாற்றி இணையத்தில், புத்தகத்தில் வெளியிடுவது என்பது ஒருவகையான மன வியாதி உள்ளவர்களின் செயல். உண்மையில் இப்படிச் செய்பவர்கள் குஷ்புவை நிர்வாணப்படுத்தவில்லை. தங்களைத் தாங்களே நிர்வாணப்படுத்திக் கொண்டு அதில் குஷ்புவின் முகத்தை
மற்ற நடிகைகளின் முகத்தை ஒட்டி அனுப்புகிறார்கள். இந்த மனவியாதி செயலைச் சில சினிமா இயக்குநர்களும் செய்கிறார்கள். தணிக்கைப் பிரிவு என்று ஒன்று இல்லாவிட்டால் பெரும்பாலான படங்களில் படுக்கை காட்சியில் விளக்கை அணைக்க வேண்டிய அவசியத்தை விட்டுவிடுவார்கள். இதற்கு இயக்குநர்களை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. எத்தனை நடிகைகள் துணை போகிறார்கள்? நடன அசைவுகள் மூலம் எத்தனை ஆபாசங்களை வெளிப்படுத்துகிறார்கள். இப்படி நடிக்க மாட்டேன் என்று எந்த நடிகையாவது சொல்கிறார்களா? இப்படிச் செய்வதால் மேக்ஸிம் பத்திரிகை
செயலை நியாயப்படுத்திவிட முடியாது. இந்த வழக்கில் விநியோக மேலாளர் தன்னை விடுவிக்கச் சொல்லியுள்ளார். பத்திரிகையில் என்ன வருகிறது என்பதை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு இல்லை என்பது உண்மைதான். அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாவிட்டாலும் அதைப் பரப்புகிற செயல் குற்றச்செயலாகவே பார்க்கப்படும். சட்டம் தெரியாது என்று ஒரு குற்றவாளி எப்படிச் சொல்லமுடியாதோ, அதைப்போலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் உள்ளோர் தண்டிக்கப்படலாம்.
தண்டிக்கப்படாமல் போகலாம். அபராதம் கட்டலாம் அல்லது அபராதம் கட்டாமல் போகலாம். ஆனால் இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால் குஷ்புவின் நிர்வாணப் படத்தை புத்தகத்தில் பார்த்தவர்களைவிட இப்போது நிறைய பேருக்குத் தெரிந்துவிடுகிறது என்பதுதான். ஓர் இளம்பெண்ணைக் கற்பழித்த செய்தி வருகிறதென்றால், அந்தக் குற்றவாளிகளைவிட பத்திரிகைக்காரர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள். அதைவிட ஆபாசமாக அதைப் படிக்கிறவர்கள் ரசித்துப் பேசுகிறார்கள்.... இன்னொரு வகையில் வார்த்தை கற்பழிப்பு இது... பேச்சு கற்பழிப்பு இது..!

No comments: