வென்றவர்கள் .... சொல்கிறார்கள்
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன்னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர்களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. "செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்துகிறது' என்றார் வெள்ளைக்காரக் கவிஞர். "வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்பனைப் போல இருக்கிறது அந்த மச்சம்' எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
-ஆர். நல்லக்கண்ணு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளிலிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை. முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந்திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மகனுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய்யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார்கள். "கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்'' என்று கேட்கிறார்கள்.
-வசந்திதேவி,கல்வியாளர்.
பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம்மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. "தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு' என்று தாய்மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல்லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
-தமிழருவி மணியன்.
இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் "ஆம்லெட்' என்று சிரிக்கிறது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை "ஓங்கில்' என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது "கொடிய விலங்கு புலி' என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைகளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? "கொடூரக் காடு' என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதாசிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந்துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
-தியோடர் பாஸ்கரன்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்.
பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது "ஆண்கள்-பெண்கள்' என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன்றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.
-நீதிபதி சந்துரு.
தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசாமல் "இடியட் பாக்ஸ்' என்று அழைக்கிறோம். புத்திசாலித்தனமான அந்த அறிவியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந்தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குகளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
நன்றி: தமிழ்மண்ணே வணக்கம் நூல்
2 comments:
தாவரம்!
அருமையான தொகுப்பு.
ஓங்கில் இன்றே அறிந்தேன்.இதைக் கடற்பன்றி எனச் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் ஓங்கில் அந்த மிருகம் போல அழகானது. அகராதியிலும் இல்லை. தமிழ் அகராதி
தயாரிப்போருக்குப் பரிந்துரைக்கக் கூடாதா??
குன்றக்குடியார் கவலை எனக்குமுண்டு.மருந்தரைக்கப் பூனைக் குட்டி கட்டிய வைத்தியர் மகன் கதை தான் ஞாபகம் வந்தது.
இந்த வோட் வெரிபிக்கேசனைத் தூக்கி விடக்கூடாதா???
அருமைமையான பதிவு
Post a Comment