அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகைக்கு ரஷிய அதிபர் புதின் மனம் திறந்து அளித்த பேட்டி :
இராக் போன்ற சிறிய நாட்டை தாக்கி அழித்தது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மோசமாக இருக்கின்றன. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா தனது படைகளை இராக்கிலிருந்து திரும்பப் பெறுவதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
மாறி வரும் உலக சூழ்நிலையில் ரஷியா, அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். சர்வதேசப் பிரச்சினைகளில் தனது திட்டங்களை மற்ற நாடுகள் மீது அமெரிக்கா திணித்தால் அதற்கு நிச்சயம் எதிர்ப்பு இருக்கும். ரஷியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. அதேபோல அமெரிக்காவின் உதவி ரஷியாவுக்குத் தேவைப்படுகிறது. உலக நாடுகளில் பெரும் மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழ்ந்து வருகின்றன. அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் நிகழும். இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலுவடைந்து வருவதால், புதிய அரசியல் செல்வாக்கு மையங்கள் உருவாகும்.
'மற்ற நாடுகள் வலுப்பெற்று வருவது நல்லதா கெட்டதா என்று நான் சொல்ல விரும்பவில்லை. எதிர்கால உலகம் வித்தியாசமாக இருக்கும். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் ரஷியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த உண்மையை உணர்ந்து செயல்படும் இரு நாடுகளின் தலைவர்களும் வெற்றி பெறுவார்கள், மதிக்கப்படுவார்கள்' .
வெற்றிகரமாக இருப்பதற்கு மற்றவர்களுடன் பேச்சு நடத்தி சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. சமரசம் செய்து கொள்வது, ராஜதந்திரம் மட்டுமல்லாமல், மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் இருக்கும்.
'நேட்டோ' (வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்) அமைப்பானது, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் நடந்த மறைமுகப் போரினால் செத்த பிணமாகக் காட்சியளிக்கிறது என்றார் அவர்.
அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை, யார் அதிபராக வந்தாலும், ரஷியா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் நல்ல ஒத்துழைப்புடன் செயல்படுவர் என்று பதில் அளித்தார் புதின்.
அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் நிறுத்தி விட்டது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ரஷியாவின் நிலைப்பாட்டை இது நியாயப்படுத்துகிறது என்றார் அவர்.
நாம் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் அமெரிக்க நிர்வாகத்திலும் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதை சமாளிக்க ஈரான் தன்னை தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்க ஈரானை திசைத் திருப்புவதற்காக இதுபோல சிஐஏ அறிவித்திருந்தால், அது மிகவும் ஆபத்தானதாக முடியும். ஏனெனில் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது அமெரிக்காவின் மற்றொரு மிகப்பெரிய தவறாகிவிடும் என்றார் புதின்.
No comments:
Post a Comment