Monday, December 31, 2007

லேகா வாஷிங்கடன், கனிஹா, சங்கீதா, தீபா வெங்கட், லிமா ராணி - புத்தாண்டு சபதம்!

"இனிமேல் சபதமே எடுக்கமாட்டேன்' என்பது உட்பட ஒவ்வோர் ஆண்டும்
ஒவ்வொரு சபதம் எடுக்கிறார்கள். எடுத்த சபதத்தை நிறைவேற்றினீர்களா?
என்றால் பெரும்பாலானோரின் பதில் உதடுபிதுக்கல்தான். இப்படித்தான்
நடிகைகளும் உதடுபிதுக்குவார்களா? எடுத்த சபதத்தை முடித்த நடிகைகள்
எத்தனை பேர்? அவர்களின் புது சபதம் என்ன? அவர்களின் புத்தாண்டு
கொண்டாட்டம் எப்படி? சிலர் சொல்கிறார்கள்:

கனிஹா

கடந்த வருடம் என்ன சபதம் எடுத்தேன்னு தெரியலை. நினைத்து நினைத்து
பார்த்தாலும் இப்போது ஞாபகம் வரவில்லை. அதற்காக இந்த வருடம் சபதம்
எடுக்கமாட்டேன்னு அர்த்தமில்லை. என்ன சபதம் எடுக்கவேண்டும் என்று
இப்போதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னோடு படித்த தோழிகள்
எல்லாம் வெளிநாடுகளிலும் மற்ற இடங்களிலும் இருப்பதால் அவர்களோடு
இணைந்து புத்தாண்டைக் கொண்டாட முடிவதில்லையே என்கிற வருத்தம்
உண்டு. அந்த வருத்தத்தை என்னுடைய அக்கா போக்கி வைத்துவிடுவார்.
அவரோடு இணைந்துதான் கேக் வெட்டி கொண்டாடுவேன். வெளியில்
செல்லமாட்டேன். வீட்டிலேயேதான் கொண்டாட்டம்.

லேகா வாஷிங்டன்

எடுத்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறேன். 2007-க்குள் நடிகையாக வேண்டும்
என்று கடந்த வருடம் சபதம் செய்திருந்தேன். "கெட்டவன்' படம் மூலம் அது
நிறைவேறி இருக்கிறது. கடின உழைப்பைச் செலுத்தி இன்னும் நிறைய
படங்கள் நடிக்கவேண்டும் என்பதுதான் இந்தப் புத்தாண்டு சபதம். இதுவும்
நிறைவேறும் என்று எண்ணுகிறேன். என்னுடைய கொண்டாடங்கள்
எப்போதும் எளிமையாகத்தான் இருக்கும். அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய
நண்பர்களோடு வீட்டிலேயேதான் கொண்டாடுவேன்.

சங்கீதா

நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த வருடம் சபதம்
எடுத்தேன். ஆனால் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. இந்த வருடமும்
அதே சபதத்தையே மறுபடியும் எடுத்திருக்கிறேன். நிச்சயம் நிறைவேற்றுவேன்
என்று நம்புகிறேன். அல்லது அடுத்த வருடம் வேறு சபதம் எடுப்பேன்.
என்னுடைய புத்தாண்டு கொண்டாட்ட ஷெட்யூல் எல்லா வருடமும்
ஒரேமாதிரிதான். இரவு பன்னிரண்டு மணிக்கு குடும்பத்தோடு சாமி
கும்பிடுவேன். அதற்குப் பிறகு ஃப்ரெண்டுகளோடு அரட்டை
அடித்துக்கொண்டு வெளியில் ரவுண்ட்.

நீலிமா ராணி

நேற்று, நாளை என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. இன்று
என்பதில்தான் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் சபதம் எடுப்பதில்லை.
வடபழனி விஜயசாந்தி அபார்ட்மெண்ட்ஸில்தான் வசிக்கிறேன். இங்கு 250
குடும்பங்களுக்கு மேல் இருக்கிறது. புத்தாண்டையொட்டி இங்குள்ள
குட்டீஸ்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு கொடுக்கிறோம்.
இதைப்போல பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதில்
குட்டீஸ்களுக்கான நடனப் பயிற்சியை நான்தான் கொடுக்கிறேன்.
வருடாவருடம் குழந்தைகளுடன்தான் என் கொண்டாட்டம்.

தீபாவெங்கட்

சந்தோஷமான ஆரோக்கியமான வாழ்க்கையாகத் தினம் போகவேண்டும்
என்று விரும்புகிறேன். அதற்காகச் சபதங்கள் எல்லாம் எடுத்துக்
கொண்டிருப்பதில்லை. இந்த வருடமும் எந்தச் சபதமும் எடுக்கப்போவதில்லை.
இப்போது சீரியல்களில் பிஸியாக இருக்கிறேன். வருகிற வருடங்களிலும் இது
தொடரும் என்று நினைக்கிறேன். இப்போது கர்நாடக இசையும்
கற்றுவருகிறேன். பாடகி மஹதியின் தந்தை திருவையாறு சேகர்தான் என் குரு.
இதிலும் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. வெற்றிபெறுவேன்
என்று நினைக்கிறேன். புத்தாண்டு பிறக்கிறபோது நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொள்கிறேன். இதனால் வேறு வேறு கொண்டாட்டம் இல்லை.
வீட்டில் இருந்தால் அப்பா, அம்மா, நண்பர்களோடு கேக் வெட்டி
கொண்டாடுவோம்.

No comments: