"புள்ளிராஜாவைப் பற்றி பள்ளி மாணவ மாணவியரிடம் பேசலாமா? கூடாதா? பாலியல் கல்வியைக் கொண்டு வருவது அவசியமா? அவசியமில்லையா?' என்பது குறித்து இருதரப்பு விவாதங்கள் இந்தியா முழுவதும் மேடையை அலங்கரிக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் கனடாவைச் சேர்ந்த சமீன் முகமது தலைமையிலான மாணவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
மூன்று வயது குழந்தைகளிலிருந்தே பாலியல் கல்வியைச் சொல்லித் தருவதுடன் அது தொடர்பான பிரசாரத்தையும் உலகம் முழுவதும் செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் ஒருகட்டமாக சமீன் முகமது தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. இக்குழுவில் சஷா ஸ்மித், டென்ஸி ஜவார்ஸ்கி, மெலிஷா ஷி என்ற மூன்று பெண்களும், இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எல்லோருமே கல்லூரியில் படிக்கும் மாணவிகள்.
இக்குழுவின் நோக்கம் குறித்து இதன் தலைவர் சமீன் முகமது:
"எச்.ஐ.வி. என்றால் என்ன? எச்.ஐ.வி. எப்படிப் பரவுகிறது? என்பது குறித்த விழிப்புணர்வு படித்தவர்கள் மத்தியிலேயே இல்லை. இதனால் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குப் பதினைந்து வயதிலேயே ஏற்பட்டது.
இதனையடுத்து கனடா அறக்கட்டளை' என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினேன். குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோருக்குமே விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன். என் பணியைப் பார்த்த மாணவ மாணவிகள் பலர் ஆர்வத்துடன் இந்த அமைப்பில் இணைந்தனர். இப்போது கிட்டத்தட்ட 400 பேர் எங்கள் அமைப்பில் வாலண்டரியர்சாக இருந்து சேவை செய்து வருகிறார்கள். இதில் 12 வயது சிறுவர்கள்கூட வாலண்டியர் சாக இருக்கிறார்கள்.
கனடாவின் மக்கள் தொகை 32 மில்லியன். இதில் 55 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேற்கொண்ட பிரசாரத்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது எங்களுக்குப் பெருத்த தன்னம்பிக்கையைக் கொடுத்தது. இதையடுத்து உலகம் முழுவதும் பிரசாரம் செய்யும் எண்ணம் தோன்றியது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டோம். மூன்று வயது குழந்தைகளிடம் தொடங்கி 21 வயது இளைஞர்களிடமும் பிரசாரம் செய்தோம். எச்.ஐ.வி. குணப்படுத்த முடியாத நோய். எச்.ஐ.வி. உள்ளதை எப்படி அறிந்து கொள்ளலாம்? எச்.ஐ.வி எப்படியெல்லாம் வருகிறது? தடுக்கும் வழிகள் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொன்னோம். இறுதியாக நாங்கள் சொன்ன கருத்துகளை பிரசாரத்தில் பங்கேற்ற மாணவர்களை மற்றவர்களுக்குச் எடுத்துச் சொல்லச் சொன்னோம். அது அப்படியே அந்த மாணவர்களால் தென்னாப்பிரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. பிரசாரம் செய்வதோடு மட்டும் எங்கள் பணியை முடித்துக் கொள்வதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் பிரச்சாரம் செய்த இடத்திற்கே சென்று பார்ப்போம். எங்கள் பிரசாரத்தில் பங்கேற்ற மாணவர்களும் எங்களைப் போலவே பிரசாரம் மேற்கொள்கிறார்களா? என்று. இப்படிப் பார்ப்பதும் எங்கள் பிரசாரம் வெற்றிபெறுவதற்கு ஒருவகையில் உதவி இருக்கிறது.
சிறுவர்களுக்குப் பாலியல் கல்வி அவசியமா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அந்தக் கேள்வியே தவறு என்பது எங்கள் கருத்து. பாலியல் உணர்வு என்பது மனித இயல்பு. இதை மீற முடியாது. எனவே பாலியல் குறித்து விழிப்புணர்வை எல்லோரும் பெற வேண்டியது அவசியம். பாலியல் கல்வியைப் பள்ளிகளில் இருந்தே தொடங்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது மட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.
எச்.ஐ.வி. அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. இதில் தமிழ்நாடு முதன்மை இடத்தைப் பெறுகிறது. எனவே விழிப்புணர்வு தீயை இங்கே தொடங்கவேண்டும் என்று திட்டமிட்டோம். இதனையடுத்து இங்கு வந்தோம். இங்கு சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு பள்ளியிலும் ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியிலும் பிரசாரம் மேற்கொண்டோம். இதையடுத்து சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவைவிட இங்குள்ள மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுற கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
இதில் ஒரு விஷயம். இங்கு நாங்கள் பிரசாரத்திற்காக மட்டுமே வரவில்லை. கடந்த காலங்களைவிட இங்கு எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருவாரியாகக் குறைந்திருக்கிறது. இங்கு எப்படிப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இதற்கடுத்து தென் அமெரிக்காவுக்குப் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.
எச்.ஐ.வி. வைரசால் இனி யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு'' என்கிறார் பத்தொன்பது வயது இளைஞர் சமீன் முகமது.
No comments:
Post a Comment