Friday, December 21, 2007

பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சையா?


இலங்கை விமானப்படை கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காயம் அடைந்ததாக இலங்கை அரசு கூறியுள்ளது.
பிரபாகரன் பதுங்கு குழிக்குள் இருந்தபோது இந்த தாக்குதலால் காயம் அடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், பிரபாகரன் வசித்து வரும் இடம் பற்றி, விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடலி எழுதிய புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
'தி வில் டூ ப்ரீடம்' என்ற அந்த புத்தகத்தில் அடலி எழுதி இருப்பதாவது :
இலங்கையின் வடபகுதியில் அலம்பில் பகுதியில் உள்ள காட்டுக்குள் ஒரு பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார். அவரது வீடாகவும், அலுவலகமாகவும் அது இருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் பாறைகளை குடைந்து இந்த பாதாள அறை உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பாதாள அறைக்கு விடுதலைப்புலிகள் என்னை அழைத்துச் சென்றனர். படிகளில் இறங்கி கீழே சென்றோம். 40 அடி ஆழத்தில் நிறைய அறைகள் கட்டப்பட்டு இருந்தன. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. பாதாள சுரங்கமாக காட்சி அளித்தது. நடமாடுவதற்கு ஏற்ற வகையில் எங்கள் அறை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
எங்களை அறையை விட, பிரபாகரன் அறை இன்னும் ஆழத்தில் இருந்தது. அது கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இருந்தது. கான்கிரீட்டை விட வலிமையாக இருந்தது. பாதாள அறைக்கு மேலே தாழ்வான கூரை அமைக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் வழிந்து ஓடுவதற்காக கால்வாய் வெட்டப்பட்டு இருந்தது. அதனால்தான், பாதாள அறைக்குள் மழை நீர் பாயாமல் வழிந்தோடியது.கனமழையை தாங்கும் வகையில் பாதாள அறை கட்டப்பட்டு இருந்தது. அதனால்தான் காட்டின் மற்ற பகுதிகள், மழையால் சேறும் சகதியுமாக காட்சி அளித்தபோது கூட, பாதாள அறை பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.சூரிய வெப்பம் தாக்காத அளவுக்கு ஆழத்தில் இருந்ததால், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருந்தது. குளிரில் நான் நடுங்கியபடி இருந்தேன். எப்படி தாங்கப் போகிறேனோ என்று நினைத்தேன். ஆனால் நல்லபடியாக எந்த பாதிப்பும் இன்றி சமாளித்து விட்டேன்.
இவ்வாறு அடலி கூறியுள்ளார்.
இந்த பாதாள அறைக்குள் இருக்கும்போது விமான குண்டு வீச்சில் பிரபாகரன் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று ராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், தனது இயக்கத்தினரை சந்திப்பதற்காகவோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவோ அவர் பாதாள அறையை விட்டு வெளியே வந்தால், குண்டு வீச்சில் அவர் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் 'தி டெய்லி நியூஸ்' பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி :
கிளிநொச்சியில் உள்ள ஜெயந்தி நகரில் நவம்பர் 26-ம் தேதி மாலை 5.25 மணிக்கு இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.அப்போது பிரபாகரனுக்கு பாதுகாப்பாக உடன் இருந்த 200 பேரில் 116 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதலில் காயம் அடைந்து உள்ளே சிக்கிக் கொண்ட பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அங்கே குவிந்து கிடந்த இடிபாடுகளை விடுதலைப்புலிகள் உடனடியாக அகற்றினர்.நீரிழிவு நோயாளியான பிரபாகரனின் நிலைமை, காயம் ஏற்பட்டதை அடுத்து தற்போது மேலும் மோசமாகிவிட்டது.
சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வது எப்படி என்பதை விடுதலைப்புலிகள் ஆராய்ந்து வருகின்றனர்.பிரபாகரனுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு பிரபாகரனை கொண்டு செல்ல புலிகள் முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
ஆனால், இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் மறுத்து வருகிறார்கள்.

1 comment:

கொழுவி said...

ஏனுங்க... நவம்பர் 26 க்கு பொறவு வந்த டிசெம்பர் 15 இல் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகளில் பிரபாகரன் கலந்து அஞ்சலி செலுத்தும் படங்கள் வந்ததே பார்க்கலையா..

அப்புறம் அடேல் எழுதிய அச்சூழ்நிலை இந்திய ராணுவம் வெளியேறிய காலப்பகுதி..

அதாவது 90களின் தொடக்கம்.

இப்போ வரைக்கும் அலம்பில் பங்களா அப்படியே இருக்குமா.. :)