தலைப்பைப் படித்ததும் "ஐஸ் க்ரீம் டெலிவரி' வீட்டுக்குச் செய்வார்கள் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்! கூலாகக் குழந்தையைப் பிரசவித்தப் பின் ஒரு தாய் உதிர்த்தவைதான் ""ஐஸ் க்ரீம் டெலிவரி!''.
டென்ஷனே இல்லாமல் கூலாகக் குழந்தையைப் பிரசவிக்க முடியுமா?
இது என்னங்க பெரிய விஷயம்?
பிரசவ வார்டில் படுத்துக்கொண்டு வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் பார்த்திருக்கிறார் ஒரு தாய். இன்னொரு தாய் தனக்குப் பிடித்த ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டைச் சாப்பிட்டப்படியே குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.
இதெல்லாம் வெளிநாட்டில்தானே? இல்லை. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "த்வி மெட்டர்னிட்டி ஸ்டூடியோ'வில் பயிற்சி பெறுகிற எல்லாப் பெண்களும் இப்படித்தான் கூலாகப் பிரசவத்தை எதிர்கொள்கிறார்கள்.
பிரசவம் என்பது தாய்க்கு மறு பிறப்புபோல என்பார்கள். இதுதெல்லாம் எப்படிச் சாத்தியம்?
சொல்கிறார் மெட்டரினிட்டி ஸ்டூடியோ நடத்தி வரும் ராக்கி கபூர்.
"பிரசவம் என்றால் என்ன? என்பதைச் சொல்லிக் கொடுக்கக் கூட இங்கு சரியான ஆட்கள் இல்லை என்பதை நான் தாய்மை அடைந்தபோதுதான் உணர்ந்தேன். ஏதோ பயங்கரத்தை எதிர்கொள்வதுபோல மிரட்டுகிறவர்கள் எண்ணிக்கைதான் இங்கு அதிகமாக இருக்கிறது. இந்த ஆதங்கத்தில்தான் இந்த ஸ்டூடியோவையே தொடங்கினேன்.
பிசியோதெரபிஸ்ட் படித்துவிட்டு கவுன்சிலிங் கொடுப்பதற்கும் படித்திருக்கிறேன். இதில் கர்ப்பிணிப் பெண்கள் குறித்த பாடமும் உண்டு. பிசியோதெரபிஸ்ட் என்றால் பொதுவாகப் பக்கவாதநோயால் கை கால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடியவர்கள் என்கிற கருத்துதான் நிலவுகிறது. பெரும்பாலான பிசியோதெரபிஸ்ட்கள் இந்தப் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்பதும் உண்மைதான். நான்தான் மாறுபட்டு கர்ப்பிணிப் பெண்களுக்குப் பயிற்சி கொடுக்கிறேன். இதற்குக் காரணம் நான் பெண் என்பதால்கூட இருக்கலாம்.
எங்கள் ஸ்டூடியோவிற்குப் பயிற்சி பெற வருகிற கர்ப்பிணிப் பெண்கள் உடன் கணவரையும் அழைத்து வரவேண்டும். சில கணவர்கள் எங்களுக்கு வேலை இருக்கிறது எங்களால் வரமுடியாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களை வரவழைத்து பொறுமையாக எடுத்துச் சொல்லுவோம். உங்கள் மனைவிக்கு மட்டும் சொந்தமானதல்ல குழந்தை. உங்களுக்கும் சொந்தம். கருவுற்ற குழந்தைக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கக்கூடாது. தாய்மார்களை நீங்கள் வைத்திருக்கிற முறையில்தான் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் அறிவும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
பிரசவ காலத்தில் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும். அது உங்களிடம் இருந்து கிடைப்பதே பெரியளவில் பக்கபலமாய் தாய்களுக்கு இருக்கும் என்று எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் பயிற்சி கொடுப்போம். கருவுற்ற மூன்று மாதத்திலிருந்து இங்குப் பயிற்சி பெறலாம். மொத்தம் எட்டு வகுப்புகள். இதில் கருவுற்ற காலத்தில் எப்படி இருக்கவேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சுவாசிக்க வேண்டும்? பிரசவ நேரத்தில் உடல் நிலையில் ஏற்படுகிற மாற்றங்கள் என்ன? பிரசவ வார்டில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன? குழந்தை பிறந்த பிறகு எப்படிப் பக்குவமாக வைத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கிறோம்.
இந்த விஷயங்களை எல்லாம் கேட்கிறபோது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் படித்தவர்களுக்கே இதுபோன்ற விஷயங்களில் அறியாமை இருக்கிறது. சாதாரணமாகச் சாப்பாட்டு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கருவுற்றிருக்கும் மூன்று மாதத்தில் பெரும்பாலான பெண்கள் வாந்தி எடுப்பார்கள். அவர்களால் சாப்பிடக்கூட முடியாது. ஆனால் இது யாருக்காவது தெரியுமா? தெரியாது.
"இப்ப ஒரு உயிரா ரெண்டு உயிரு நல்லா சாப்பிடணும்' என்று வயிறு முட்டச் சாப்பிடச் சொல்லி, சாப்பாட்டைத் திணிப்பார்கள். வயிற்றில் ஏற்கனவே குழந்தை வேறு இருக்க, சாப்பாட்டைத் திணித்தால் எப்படி இருக்கும்? சாப்பாடு செரிமானமாகாமல் முழி பிதுங்கித் தவிப்பார்கள். கருவுற்ற பெண்கள் சாப்பிடுவதை வைத்துதான் குழந்தையின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதும் உண்மைதான். அதற்காக ஒரேயடியாகச் சாப்பிடக்கூடாது. கொஞ்சம்கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும். இதைப்போல பல அறியாமைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் போக்குகிறோம். இதைப்போல கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சிகளும் சொல்லிக் கொடுக்கிறோம்.
யூஸ் த்ரோ உலகத்தில் எல்லோரையும் இப்போது ஆட்டிப் படைப்பது எது என்றால் மனச்சோர்வு, உடல் சோர்வு என்று சொல்லலாம். இது வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்குக்கூட இருக்கும். முன்பெல்லாம் மிளகாய் அரைப்பது என்றால்கூட அம்மியில்தான் அரைத்தார்கள்.
இன்றைக்கு எல்லாமே நாம் இயந்திரத்தின் மூலமே செய்து கொண்டிருக்கிறோம். இது உடல்சோர்வுடன் மனச்சோர்வையும் அதிகப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கும். இந்தக் காரணங்களால்கூட சுகப்பிரசவம் ஆகாத நிலை ஏற்படலாம். இதனைப் போக்குவதற்காகத்தான் கர்ப்பிணிப் பெண்களுக்காக உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கிறோம். இது உடல் பலம்பெறுவதுடன், மனதும் திடநம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
இந்தப் பயிற்சிகளைக் கணவர் ஒத்துழைப்புடனே சொல்லிக் கொடுக்கிறோம். உட்காரும் போது உடலமைப்பு எப்படி இருக்க வேண்டும்? இதனால் அடையக்கூடிய பயன் என்ன? என்பதைச் சொல்லிக் கொடுக்கிறோம்.
இந்தப் பயிற்சிகள் எல்லாம் ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் செய்தாலே போதும். ஆரோக்கியமாக இருக்கலாம். சுகப்பிரசவம் அடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் சுகப்பிரசவம் அடைவார்கள் என்று உறுதியாகச் சொல்லமாட்டேன். ஏனென்றால் சில நேரங்களில் தாய் சேய் நலத்திற்கு அறுவைச் சிகிச்சையும் அவசியமான ஒன்று. இதனால் உறுதிப்படுத்திச் சொல்லமுடியாது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அறுவைச் சிகிச்சைகள் அதிகம் நடப்பதற்கு கருவுற்ற பெண்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள்.
வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அறுவைச் சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். மருத்துவர்களும் அவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் மனரீதியாக அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாததுதான். எங்களிடம் பயிற்சி பெறுகிற பெண்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியாது. அந்தளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்துகிறோம். குழந்தை பிறந்த உடன் பிரவசவ வார்டில் இருந்து ஒரு தாய் போன் செய்து "ஐஸ் க்ரீம் டெலிவரி' என்று சொன்னார் என்றால் பாருங்கள்'' என்கிறார் ராக்கி கபூர்.
2 comments:
நல்ல தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி. தமிழ்மாஹனி என்றால்?
Post a Comment