Saturday, December 22, 2007

மாடலிங் செய்வது சிரமமான வேலையா?



பஞ்சாப் நதியோரத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது இந்த அழகுக்கிளி. இதன் பெயர் ப்ரீத்தி புதானி. இவர் தன் தேவதை இறக்கையை விரித்து பறந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து "வுட்'களிலும் கூடு கட்டியிருக்கிறார். சில கேள்விகளை அவரிடம் எறிந்தோம்... உதிர்ந்த கனிகள்:


உங்கள் குடும்பம்?


அப்பா ஏர்போர்ஸில் இருக்கிறார். அம்மா டீச்சர். அப்பாவும் அம்மாவும் ரொம்பக் கண்டிப்பானவர்கள். சினிமா என்றாலே வெறுக்கக்கூடிய குடும்பம்தான். படிக்கிற காலத்தில் எனக்கும் சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற எண்ணங்கள் எல்லாம் இருந்ததில்லை. வணிகவியல் துறையில் படித்து பெரியாளாக வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.


பின் எப்படிச் சினிமா பக்கம் வந்தீர்கள்?


நான் படித்த பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற எந்தக் கலைநிகழ்ச்சியும் நான் இல்லாமல் நடந்ததில்லை. டெல்லியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேடை நாடகங்ளில் எல்லாம் நடித்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்து மாடலிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. படித்துக் கொண்டே மாடலிங் செய்து கொண்டிருந்தேன். சினிமாவை வெறுத்த எனது குடும்பத்தார் மாடலிங்கில் எனக்குக் கிடைத்த பாராட்டைப் பார்த்து என்னை ஊக்கப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதன் பிறகு மும்பை வந்தேன்.
அங்கு தனுஷா சந்திராவின் இரண்டு குறும்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தக் குறும்படங்கள்தான் நடிப்பில் நான் அதிகம் ஈடுபட உந்துதலைக் கொடுத்தது என்று சொல்லலாம். இதற்கிடையில் பிரபல கதக் கலைஞரான சித்ரா தேவியின் மகள் ஜெயந்தி மாலாவிடம் கதக் நடனத்தை முறையாகக் கற்றுக்கொண்டேன். இந்தக் காலகட்டத்தில் சரத் கபூரின் "ஜானி துஷ்மன்' படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்ததற்கு மிகப் பெரியளவில் பாராட்டு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்தன.



மாடலிங் செய்வது சிரமமான வேலையா? சினிமாவில் நடிப்பது சிரமமான வேலையா?
இரண்டு வேலையுமே சிரமமானதுதான். கிடைக்கிற பாராட்டுகளில்தான் இரண்டும் வேறுபடும். ஆனால் ஒன்று, மாடலிங்கில் எப்போதும் அழகாய் வரவேண்டும். சினிமாவில் அழகு ஓர் அம்சம் மட்டும்தான்.
தற்போது என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ராஜ்பால் யாதவின் "லேடீஸ் டெய்லர்' என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் ஃப்ளோரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய கதாபாத்திரம் இது. இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைப்
பெற்று தரும் என்று நம்புகிறேன். இதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. தமிழில் கஸ்தூரி ராஜாவின் "இது காதல் வரும் பருவம்' படத்திலும், அர்ஜுனுடன் "மருதமலை' படத்திலும் நடித்திருக்கிறேன்.



மருதமலைக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லையா? கோலிவுட் உங்களை மறந்துவிட்டதா? அல்லது கோலிவுட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
இரண்டுமே இல்லை. நல்ல கதாபாத்திரத்திற்காகக் காத்திருக்கிறேன்.



எல்லா மொழி படங்களிலும் நடிக்கிறீர்களே? உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
எனக்கு ஆங்கிலமும், பஞ்சாபியும்தான் தெரியும். வேறு எந்த மொழியும் தெரியாது. எந்த மொழிப் படங்களிலும் நடிப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது. நடிப்புத் திறமை இருந்தால் எந்த மொழிப் படங்களிலும் சாதிக்கலாம்.


எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய்மொழியான பஞ்சாபி மொழியில் ஒரு படம் கூட நடிக்கவில்லை போலிருக்கிறதே?
அதைப் பற்றி இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை. அப்படி நடிக்கக்கூடிய வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.



உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்?
கமல். அடுத்து அஜீத், சூர்யா. அப்கோர்ஸ் நான் முதலில் அர்ஜுனுடன் நடித்திருக்கிறேன். அவரை பிடிக்காமல் போகுமா?



கோலிவுட் படங்களில் நடிப்பதற்கும் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
கோலிவுட்டைச் சேர்ந்தவர் தொழிலை பயபக்தியாகச் செய்கிறார்கள். நேரத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை பாலிவுட்டில் எதிர்பார்க்க முடியாது.



சினிமாவைத் தவிர்த்து வேறு எதில் ஆர்வம்?
எல்லாவற்றிலும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஓவியம் வரைவேன். பாட்டுப் பாடுவேன். புத்தகங்கள் படிப்பேன்.



காதல் கதவு திறந்துகொண்டதா? உங்கள் பாய் ஃபிரண்ட் யார்?
இதுவரை யாரும் என்னைச் சலனப்படுத்தவில்லை. தற்போது என்னுடைய பாய் ஃபிரண்ட் என்னுடைய தொழில்தான்.

No comments: