எங்கோ
போகும் மேகம்
உன்
முகவரியில்
மழையைத் தூவுகிறது
முன்பே நீ
சிரபுஞ்சியைச்
சிண்டில் முடிந்திருக்கிறாய்
முட்டைச்சூட்டின்
கதகதப்பைப் பெற
காதலில் மூழ்கு.
***
நிழலை நீட்டி
தவமிருக்கும்
நீளக்கோபுரம்
ஓரமாய்ச் செல்லும்
உன்னிடம்
உறிஞ்சுகிறது
உயர அமைதி.
***
எல்லாச் சுவைகளையும்
பின்னுக்குத் தள்ளிய
முதல் சுவை நீ
நான்
உண்ண
உனக்குப்
பசிக்க வேண்டும்.
தேகம் முழுவதும் வயிறு
தாகம் தீர
போதாது இரவு
தீக்குளிக்க
நீர் அலைபுரளும்.
****
நெடு
தூரத்திலேயே
என்னைத்
துளைத்த நெடியால்
போதை
உன்
பின்னல் கடிகாரத்தில்
போதை வஸ்து
அருகிலேயே
என்னை
அழைத்தத் தீயால்
மரணம்.
உன்
விழிகளில்
கன்னிவெடி.
****
No comments:
Post a Comment