செய்தி :
2.2.2000 அன்று கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தனிகோர்ட்டு ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள் நடைபெற்றன.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் கல்வி சுற்றுலா சென்றுவிட்டு, தர்மபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டி அருகே பேருந்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது வன்முறை கும்பல் பேருந்திற்கு தீ வைத்தது. பேருந்தில் இருந்த மாணவிகள் சிலர் தப்பி ஓடினார்கள். ஆனால், தீயில் சிக்கிய பி.எஸ்.சி., மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்துபோயினர். பல மாணவிகள் காயமடைந்தனர்.
இவ்வழக்குத் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போதே செல்லக்குட்டி என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார். இவர் நீங்கலாக 30 பேர் மீது வழக்கு நடைபெற்றது.
நீதிபதி கிருஷ்ணராஜா இந்த வழக்கை விசாரித்தார்.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நெடு என்கிற நெடுஞ்செழியன் (தர்மபுரி) மாது என்கிற ரவீந்திரன் (தர்மபுரி) சி.முனõயப்பன் (தர்மபுரி) ஆகிய 3 பேருக்கும் தூக்குத் தண்டனையும் ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதுதவிர 25 பேருக்கு சட்டவிரோதமாகக் கூடுதல், வாகனங்களையும் பொதுமக்களையும் செல்லவிடாமல் தடுத்தல், பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தனித்தனியாக ஜெயில் தண்டனை நீதிபதி அளித்தார். ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டு வரை ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நீதிபதி தண்டனை விதித்தார். இந்தத் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதுதவிர 13, ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனால் 25 பேரும் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த வழக்கில் 2 பேரை செசன்சு கோர்ட்டு விடுதலை செய்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேர் உட்பட எல்லோரும் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரித்து நீதிபதிகள் செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம்:
இந்தக் கொடூரக் கொலையை ஆராயும்போது, 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டுமென்று இக்கோர்ட்டு கருதவில்லை. தேவையற்ற அனுதாபம் காட்டுவதும், குறைவாக தண்டனை வழங்குவதும் நீதிமன்றத்தையே காயப்படுத்திவிடும். ஒவ்வொரு வழக்கிலும் இயல்பான தன்மையைக் கருத்தில் கொண்டுதான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரையில், செசன்சு கோர்ட்டு சரியான முறையில் தண்டனை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த உரிமை உள்ளதோ, அதே உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தினருக்கும் உள்ளது. ஆகவே, தேவையற்ற அனுதாபத்தைக் காட்டாமல், தண்டனையைக் குறைத்து வழங்காமல் தீர்ப்பு அளிக்க வேண்டியுள்ளது. கொடூரமான குற்றம் மட்டுமில்லாமல், உண்மை வாழ்க்கையில் நடந்த இந்தக் கொடூரத்திற்காக சரியான தண்டனையை செசன்சு கோர்ட்டு வழங்கியுள்ளது.இந்தக் கொலையை உணர்ச்சி வசப்பட்டு எதிர்பாராதவிதமாக செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதனால் 3 அப்பாவி மாணவிகள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பேருந்தில் முன் கதவு மட்டுமே திறக்க முடியும் என்று தெரிந்தும், வாசல் முன்பு பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து மாணவிகளை கொலை செய்தது கொடூரமானது. விழிப்புடன் இருந்த சிலர் மட்டுமே தப்பித்துள்ளனர். இல்லையென்றால் அவர்களும் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.தண்டனையைக் குறைத்தால் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே இந்த 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்கிறோம். தேவையானதற்கு மட்டுமே மரண தண்டனையைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டங்கள் கூறுகின்றன. இந்த வழக்கை பொறுத்தவரையில் தகுதி வாய்ந்த வழக்காக இருப்பதால், கடுமையான தண்டனை வழங்குவது சரியானது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய போவதாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர்.
பார்வை:
இப்படிப்பட்ட ஒரு கொடுமையைச் செய்துவிட்டோமே என்கிற வருத்தம்கூட இல்லாதவர்களுக்கு தூக்குத் தண்டனை நியாயமானதே என்று ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு குற்றவாளிகள் போகப் போகிறார்களாம். அவர்கள் எந்த கோர்ட்டுக்குப் போனாலும் தண்டனை உறுதியாகும். தண்டிக்கப்பட போவது உறுதி.
ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் இதுபோன்ற விஷயங்களில் இருக்கிற ஈரம் இன்னும் குறைந்தவிடவில்லை. அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்றால் இந்த நீதிமன்றம் அந்த நீதிமன்றம் என்று ஓடி, யாரையாவது ஏமாற்றி, சட்டத்தின் ஏதாவது ஒரு சந்தின் வழியாகத் தப்பித்து வந்துவிடுகிறார்கள். அதிமுக தலைவி ஜெயலலிதா எத்தனை வழக்குகளில் தப்பி வந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதுபோன்ற அக்கிரமச் செயல்களுக்குத் துணை போக விரும்புகிற மரக்கட்டை மனநிலைக்கு யாரும் வரவில்லை. ஒரு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவைப் பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொன்னதுபோல சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையோடு இருப்போம்.
மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது எமது கருத்தாக இருந்தாலும் இதுபோன்ற அநியாய அநீதிகளுக்குத் தருவதில் தவறிóல்லை. அப்படிக் கொடுத்தால்தான் இதுபோன்ற உயிரைப் பறிக்கிற அக்கிரமச் செயலில் யாரும் இறங்கமாட்டார்கள். இதில் குறிப்பிட வேண்டியது இதுபோன்ற குற்றவாளிகளுடைய தலைவர்கள், தலைவிகளையும் வழக்கில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். இவர்களின் தூண்டுதலினால்தான் இப்படிப்பட்ட செயல்கள் நடக்கின்றன. இன்னொன்று குற்றவாளிகள் கொலையே செய்துவிட்டு, வந்துவிட்ட பிóன்பும் கட்சியில் வைத்துக்கொண்டு அவர்களை ஆராதிக்கின்ற செயல் கொடுமையிலும் கொடுமை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அடைக்கலம் கொடுத்தவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் பலர். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தாலும் அவரும் சாதராண மனிதர்தானே. அந்த ஓர் உயிர் போனதற்கே நாம் எப்படித் துடித்துப் போனோம். தர்மபுரியில் போயிருப்பது மூன்று உயிர்கள்.
இவர்களைக் கொன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும் சேர்த்து தண்டிக்கலாமா? கூடாதா?
No comments:
Post a Comment