Saturday, December 1, 2007

வாரே... வா என்ஜினியரே!


இறுதி ஓவர். இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றிபெற்றுவிடும். இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு சிறந்த கேப்டன் எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும்?
வேகப்பந்து வீசுபவர்களையே போடவிட்டாலும் ஸ்லோவாகவே பந்தை வீச வைப்பார்கள். இப்படிப் போட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடுமா? என்றால், கிடைத்திருக்கிறது என்று நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

சிலிர்ப்பை ஏற்படுத்திய ஓர் உதாரணம்.
ஸ்டீவ்வாக் உலகக் கோப்பையை வாங்குவதற்கு காரணமான ஓர் ஆட்டம். தென் ஆப்ரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் மோதின. இரண்டு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? -ஆட்டம். எல்லா அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து துவம்சம் செய்த குளுசனர் மைதானத்தில் நிற்கிறார். அவருடன் டொனால்ட். ஆனால் கடைசி விக்கெட். மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுக்க வேண்டும். "அவ்வளவுதான் ஆஸ்திரேலியா அவுட். பொட்டியைக் கட்டிக்கிட்டு ப்ளைட் பிடிக்க வேண்டியதுதான்' என்று எல்லோருமே கருதிவிட்டனர். ஆனால் ஸ்டீவ்வாக் அப்படிக் கருதவில்லை. அவர்களுக்குக் கொடுக்கயிருந்த ப்ளைட் டிக்கெட்டை தென்ஆப்ரிக்கா அணிக்கே திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டார். இது எப்படி முடிந்தது?

எல்லா வீரர்களையும் முதல் வட்டத்திற்குள் கொண்டு வந்தார். பாதி வீரர்களை மிக குளோஸ்-அப் பீல்டிங் செய்ய வைத்தார். உலகக் கோப்பை முழுவதும் சிங்கம்போல் கர்ஜித்து விளையாடிய குளுசனரே நடுங்க ஆரம்பித்துவிட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்லோவாகப் பந்தை வீசுகிறார். குளுசனர் மெல்லத் தட்டிவிடுகிறார். டொனால்ட் ஓட்டமெடுக்க குளுசனருக்கு அழைப்புக் கொடுக்கிறார். ஓடுகிறார்கள். திக்..திக்.. திருப்பம். ஓடிய பந்தைப் பிடித்து ஒரு வீரர் அடிக்கிறார். ரன் அவுட். "ப்ளைட்டிக்கெட்' விதி திரும்பியது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா இறுதியாட்டத்திலும் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. இதே அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் அனில் கும்பளேவுக்கு கேப்டன் பதவி கொடுத்ததையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகக் கோப்பையை ஸ்டீவ்வாக் பெற்றபோது அவருக்கு வயது 37. டெஸ்ட் ஆட்டத்திற்கு கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிற கும்பளேவுக்கும் வயது 37. அணியில் இடம்பெறுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் கும்பளே. எடுப்பதும் விடுப்பதுமாகவே இருந்தது அவரது நிலை. இக்கட்டான கடைசி ஓவரில் ஸ்லோ பால் போடுவதுபோல கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதுவும் கேப்டன் பதவியை சச்சின் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் கும்பளேவுக்குத் தரப்பட்டது.

அணியிலேயே இடம்பெறமுடியாதவர் எப்படி அணியையே தலைமை தாங்கி நடத்தப் போகிறார் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். தென் ஆப்பிரிக்க கனவை ஸ்டீவ்வாக் தகர்த்ததுபோல பலரின் தவறான நினைப்பை இப்போது கும்பளேவும் தகர்த்துவிட்டார். சிறந்த கேப்டன் ஷிப் என்று பாராட்டாதவர்களே இல்லை என்கிறளவுக்கு சிறப்பாகக் களத்தில் செயல்பட்டார். இந்திய அணியின் பெரும்பாலான தோல்விக்கு முக்கிய காரணமே வீரர்களிடையே இருக்கும் ஈகோதான் காரணம். ஆனால் கும்பளே தலைமையில் வீரர்கள் யாருக்கும் அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை. வீரர்கள் எந்தெந்த வகையில் எந்தெந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்தவகையில் பயன்படுத்த கும்பளேவுக்குத் தெரிந்திருக்கிறது. மூத்த உறுப்பினர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகச் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் அந்த முடிவு பெரிய தொய்வை முதல் டெஸ்ட் பந்தயத்தில் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக கங்குலியை அதிகம் பயன்படுத்தினார். ஆனால் இது அணிக்குப் பலத்தையே கொடுத்தது. மூன்றாம் நாள் கங்குலி எடுத்த ஆட்டத்தில் தொடர்ச்சியாய் எடுத்த இரண்டு விக்கெட்டுகளே அணியின் வெற்றிக்குத் திருப்பமாய் அமைந்தது என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்வார்கள். இதைப்போல சிறப்பாக ஃபீல்டிங் அமைப்பதும், இக்கட்டான கட்டங்களிலும் முடிவு எடுப்பதுதான் கேப்டனின் முக்கியமான பணி. அநுபவ முதிர்ச்சியின் காரணமாக கும்பளே இப்பணியை நேர்த்தியாகவே கையாளுகிறார். இப்படிக் கையாண்டதற்கு அடையாளம் கேப்டன் பதவியேற்ற முதல் ஆட்டமே வெற்றி. அதுவும் ஏழு விக்கெட்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார் கும்பளே.

சுவிட்ச் போடாத மின்விசிறி எப்படிச் சுற்றும்? கேப்டன் பதவி என்கிற சுவிட்சை இப்போது போட்டிருக்கிறார்கள். என்ஜினியர் பட்டம் பெற்ற கும்பளே சுழற்பந்தில் சுழலுது எதிரணி .

No comments: