Friday, December 14, 2007

லேக்கடி.... ஷேக்கடி.... கோக்கடி.... மாக்கடி


வாட்டி வதைக்கிற வெயிலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அந்த வீட்டிற்குள் நுழைந்தால் அங்கொரு 'நாட்டி' வெயில்!
எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் 'பி.சி.ஒ' நிகழ்ச்சி மூலம் தென்னிந்தியாவில் வெப்பமண்டலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் 'விடியோ ஜாக்கி' லேகாதான் அந்த 'நாட்டி' வெயில்!

கேட்காமலேயே நிகழ்ச்சியில் ஒவ்வொரு 'கால்'களுக்கிடையேயும் பறக்கும் முத்தம்; 'டோன்ட் வொர்ரி ஐ அம் நாட் லீவிங் யூ' என்று உரக்கக் கத்தும் 'ஹாட்டீ'யா இது? என வியக்குமளவு நேரில் சமத்துப் பொண்ணாய் இருக்கிறார் லேகா! இப்போது சிம்புவுடன் கெட்டவன் படத்தில் கெட்ட ஆட்டம் போடும் நடிகை.


கூல்டிரிங்ஸாய் அவருடன் அமைந்த உரையாடல்!
சின்ன வயதில் உங்களுக்கிருந்த இலட்சியம்?

அப்பா, அம்மா இரண்டு பேருமே எனக்கு எப்போதுமே முழு சுதந்திரம் கொடுப்பார்கள். சின்ன வயதில் அவர்கள் எனக்குப் போட்டது ஒரே ஒரு கண்டிஷன்தான். "நீ என்னவாக விரும்பினாலும் நாங்கள் அதற்கு மறுப்புச் சொல்ல மாட்டோம். ஆனால் சினிமா பக்கம் மட்டும் போகக்கூடாது" என்று சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதாலோ என்னவோ எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமா மீதுதான் காதல்.

படிப்பு?

ஸ்டெல்லா மாரிஸ்ல ஃபைன் ஆர்ட்ஸ் முடிச்சிருக்கிறேன். அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங்ல படிச்சேன். இந்த இன்ஸ்டிடியூட்டில் சீட் கிடைப்பது என்பது பெரிய விஷயம். எனக்குக் கிடைத்தது. ஃபிலிம் மேக்கிங்தான் இங்கு படிச்சேன். அப்பா, அம்மா ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் முறையாகப் படித்தேன். இப்போது படிப்பெல்லாம் முடிந்து என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக சினிமா பக்கம் வந்திருக்கிறேன்.

காலேஜ் படிக்கிறபோதே நீங்கள் "சேட்டை' பார்ட்டியா?

அய்யய்யோ... இப்ப பாக்குறதுக்கு வேண்டுமானால் அப்படியெல்லாம் தோணலாம். ஆனால் நான் அப்போது சமத்துப்பொண்ணா இருந்தேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் வெட்கமும்படுவேன்.

சினிமாவிற்கு வருவதற்காக எந்தவகையில் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொண்டீர்கள்?

ஸ்பெஷல் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்கூல்ல படிக்கிற காலத்தில் இருந்தே ஸ்டேஜ் டிராமாவுல ஆக்ட் பண்ணிக்கிட்டு வருகிறேன். ஸ்டெல்லா மாரிஸ்ல படிக்கிறப்ப ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்திருக்கிறேன். அகமதாபாத்தில் படித்தபோது "ஹேல்' என்கிற பெயரில் ஒரு நாடகக் குழுவையே உருவாக்கி வைத்திருந்தேன். "ஹேல்'ங்கிறது ஹிந்தி வார்த்தை. "ப்ளே'ங்கிறதுதான் அதனுடைய அர்த்தம். புதுப்புது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி நாடகம் போட்டிருக்கிறேன். என்ன ஒண்ணு ஸ்டேஜ் டிராமாவுக்கு ரசிகர்களும் குறைவு. வருமானமும் குறைவு.

எஸ்.எஸ். மியூசிக்கில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கியக் காரணமாக நீங்கள் கருதுவது?

விடியோ ஜாக்கிக்கு நான் பர்ஃபெக்ட்டான ஆள்னு நினைக்கிறேன். நல்லா பேசுவேன். இன்னொன்னு அவ்வளவு கேவலமா என் முகம் இல்லை.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறபோது "காலர்' யாராவது உங்களை "ராக்' பண்ணியிருக்காங்களா?

"காலர்ஸ்" யாரும் அட்டாக் பண்ணி பேசினது இல்லை. ஆனால் "க்ளாமரா ஏன் டிரஸ் பண்ணுறீங்க"னு கேப்பாங்க. அதுக்கு, "நான் காரணம் இல்லை"ன்னு சொல்லித் தப்பித்துக்கொள்வேன். உண்மையாகவே அதுக்கு நான் காரணமும் இல்லை. என்னை மிகவும் வேதனையடைய வைத்த கமென்ட் என்றால் அது நெட்டில் வந்த கமென்ட்தான். "ஃபேன்ஸ்" க்ளப் என்று இருப்பதுபோல "ஹேட்" க்ளப் என்று ஒன்று இருக்கிறது. அதுல பத்து பேர் இருக்காங்க. "உன்ன பிடிக்கல...நாய் மாதிரி இருக்க....ஏன் கத்துற..." என்றெல்லாம் கமென்ட் அடித்திருந்தார்கள். இதை முதலில் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்புறம் போகப்போக சரியாகிவிட்டது.

ஸ்டைலாகப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? அல்லது உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?

உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. உச்சரிப்பைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தால் என்னால் காமிரா முன்னால் பேச முடியாது. பேசுகிற காலரின் பேச்சை இமிடேட் பண்ணி பேசுவேன். மத்தபடி இயல்பாகத்தான் பேசுவேன்.

உங்கள் பேரென்ன? நல்லா இருக்கீங்களா? காலை டிபன் என்ன? இப்படிக் கேட்டுக்கிட்டே இருக்கிறது போரடிக்கலையா?

நிச்சயமா போரடிக்கும். நான் அதுமாதிரி வழக்கமான கேள்விகளைக் கேட்பதில்லை. சில நேரத்தில் காலரோட பேரைக்கூட கேட்காம பேசிட்டு போயிடுவேன். இதனால்தான் தினமும் ஒரு டாபிக் எடுத்துக்கிட்டு அது தொடர்பாக காலரோடு பேசுகிறேன்.

உங்களுக்குத் தெரிந்த மொழிகள்?

தமிழ் கண்டிப்பா தெரியாது. (தமிழ் சேனலில் பேசுறவங்களைவிட நல்லாவே பேசுறீங்க.) ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ்.

மொரிஷியஸ் தீவில் உள்ள ஒரு சேனலில் "டிராவல் ஷோ" தொகுத்து வழங்கியிருக்கீங்க... அதில் கிடைத்த அனுபவம்?

மொரிஷியஸ் தீவை பத்து நாட்கள் சுற்றிப் பார்த்தது மட்டுமல்லாமல் அங்குள்ள ஒரு சேனலுக்குத் தொகுத்தும் வழங்கினேன். இந்த அனுபவம் ரொம்பவும் "த்ரில்லிங்"காக இருந்தது. இதில் குறிப்பாக சொல்லணும்னா தண்ணீருக்கடியில் டிரைவ் பண்ணுற அட்வெஞ்சர் கேம் ஒண்ணு இருந்தது. இது மொரிஷியஸ் தவிர வேறு எங்கும் இல்லை. சன்னி டுவீலரை ஓட்டுறாப்போலதான் இருக்கும். ஆனால் தண்ணீருக்கடியில் டுவீலர் ஓட்டினா எப்படியிருக்கும்னு நீங்களே நினைச்சிப் பாருங்க. இதைவிட பெரிய "த்ரில்லிங்" டால்பின்களோடு நீந்தியதுதான். பழக்கப்பட்ட டால்பின்களோடு தண்ணீர் தொட்டியில் நீந்தி விளையாடுவதுபோல் அல்ல இது. நடுக் கடல். பழக்கப்படாத டால்பின்கள். கூட்டமாக இருக்கிறது. அந்த இடத்தில் டால்பின்களோடு நீந்தினேன். நான் துள்ளினால் டால்பின்களும் துள்ளுகிறது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கிறது.

என்ன மாதிரியான குறும்படங்கள் இயக்கியிருக்கிறீர்கள்?

இதுவரை 12-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். எல்லாமே கருத்துள்ள படங்கள்தான். "டவுன் சிண்ட்ரோம்" தொடர்பாக எடுத்த குறும்படம் பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்டது.

பொழுதுபோக்கு?

சிற்பங்கள் செதுக்குவதுதான் என்னுடைய பொழுதுபோக்கு என்று சொல்லலாம். இந்தக் கலை எப்படி என்னிடம் வந்தது என்று தெரியவில்லை. இயல்பாகவே என்னிடம் இருக்கிறது. எல்லாவகையான பொருட்களையும் கொண்டு சிற்பங்கள் செய்வேன். ரெசின் கொண்டு சிற்பங்கள் செய்வது சென்னையில் நான் ஒருத்தி மட்டும்தான் என்று நினைக்கிறேன். ரெசின் என்பது பிசின்போல. என்னுடைய சிற்பங்களைக் கொண்டு இதுவரை மூன்று முறை கண்காட்சி வைத்திருக்கிறேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

கிரிக்கெட் ஆர்வம் உண்டா?

உண்டு. பாப் உல்மர் மறைவிற்குப் பிறகு போய்விட்டது. அவர் இறந்த அன்று இரங்கல் தெரிவித்து கிரிக்கெட் ஆட்டத்தை நிறுத்தி வைக்காமல் விளையாடுகிறார்கள். அப்படி எப்படித்தான் விளையாடுகிறார்களோ? அதைப்போல விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. அதை விட்டு விட்டு இந்தியா தோற்றபோது வீரர்கள் வீட்டில் கல்லெறிந்தார்கள். இதெல்லாம் அநாகரீகம். இதுபோன்ற காரணங்களால் கிரிக்கெட்டை ரசிப்பதில் இருந்து இப்போது விலகி இருக்கிறேன்.

"காதல் வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்"ன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?

நிறைய பேர். என் வயசு ஒத்தவங்க சொன்னாங்க... ஏதாவது சொல்லிச் சமாளிச்சிருக்கேன். பாஸ் லெவல்ல உள்ளவங்க சொன்னாதான் சங்கடமா போயிடும். ஆனாலும் இதுபோல பிரச்சினைகள் வராமல் எஸ்கேப் ஆகிடுவேன்.

-தலைப்புக்கான கேள்வியும் பதிலும் மட்டும் காணுமேன்னு தேடித்தேடி சலித்துப் போனவர்களே... அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. லேகாவோட நீண்ட 'பெட்' நேம்தான் அது. லேக்கடி...(ஒரிஜனல் பெயர்) ஷேக்கடி (ஆடுறது)... மாக்கடி... (நான்சன்ஸ்) கோக்கடி... (கிராக்)

No comments: