Monday, December 10, 2007

21 கேள்விகளில்... உலகம்! கிராண்ட் மாஸ்டர் பேட்டி



"யாவர் மனசிலும் அவரு...
அவருக்கு என்ன பேரு?'
-அதான்... அதான்... அவரேதான். விஜய் டிவியின் "கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சி மூலம் நம்மைத் திகைக்க வைக்கும் பிரதீப்தான் அவர்.
"யார் மனசிலே யாரு?
உங்க மனசிலே யாரு?
அவருக்கு என்ன பேரு?' -எனச் சொல்லி, எல்லோர் மனசிலும் இருக்கும் பிரபலத்தின் பெயரைச் சொல்லும் பிரதீப்பின் மனசில் இருப்பது யாரு? (இங்கு ஆம்;இல்லை என்ற பதில் இல்லை)

உங்க குடும்ப-டேட்டா?

சொந்தவூர் திருவனந்தபுரம். பிந்து என்கிற மனைவி. இரண்டு பெண்பிள்ளைகள். அப்பா. இதுதான் என் குடும்பம். அப்பா கல்வி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா தலைமையாசிரியையாக இருந்தவர். எனக்கு பதினாறு வயது இருக்கும்போதே இறந்து போய்விட்டார்.

சிறுவயதில் என்னவாக வேண்டும் என்று நினைத்தீர்கள்?

என்னவாக வேண்டும் என்றெல்லாம் நினைத்தது இல்லை. எனக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் என் அம்மா. அவர்தான் என்னிடம் அடிக்கடி சொல்வார். உன்னுடைய அண்ணன் நல்லா படிச்சி இன்ஜினியரா இருக்கான். நீயும் அதுமாதிரிதான் ஆகணும்ங்கிறதெல்லாம் என் ஆசையில்லை. எல்லோரும் அறிகிற ஆளா நீ வளரணும் என்பார். அதுக்கான முயற்சியிலதான் நான் சின்ன வயசிலிருந்தே ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கேன்.
ஒருவர் மனசுல இருக்கிற பிரபலங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?

டிடெக்டிவ் அனாலிஸஸ் மூலம் ஒருவர் மனசில் இருக்கிற பிரபலத்தைக் கண்டுபிடிக்கிற இந்த அறிவுவிளையாட்டை ஸ்கூல்ல படிக்கிற காலத்தில் இருந்தே விளையாடிக்கிட்டு இருக்கேன். ஒரு சின்ன பாயின்ட் கிடைச்சாகூட போதும் பிடிச்சிடலாம்னு சொல்லமாட்டாங்க...? அதுபோலதான் இதுவும். என்கூட படிச்ச பையன் ஒருத்தன் "எல்லாம் தெரியுங்கிறியே என் மனசுல உள்ள பிரபலத்தின் பெயரைச் சொல்ல முடியுமா'ன்னு கேட்டான். அதுவும் 25 கேள்விக்குள்ள... ஆம், இல்லைங்கிற பதில்தான் சொல்வேன். நீ கண்டுபிடிக்கணும்னு சொன்னான். அன்னைக்கு கண்டுபிடிக்க ஆரம்பிச்சதுதான் இன்றைக்கும் தொடருது.

மனதோடு விளையாடும் இந்த அறிவுவிளையாட்டுக்காக எந்தெந்த வகையில் பயிற்சி பெற்றீர்கள்?

பயிற்சியா? ஆறு மாசமோ ஒரு வருசமோ பயிற்சி பெற்றால் இந்த அறிவு விளையாட்டை விளையாடலாம் என்பதெல்லாம் இல்லை. சின்ன வயதிலிருந்தே இதுக்குப் படிக்கணும். 5 வயதிலிருந்து 16 வயதுவரை எதைப் படித்தாலும் அப்படியே மனதில் பதிந்து விடும். நான் அப்போதிலிருந்தே படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது 33 வயதாகிறது. இப்போதும் இடைவிடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது பைத்தியம். எனக்குப் புத்தகத்தின் மீது.

நீங்கள் mind building exercise செய்வதுண்டா?

மைன்ட் பில்டிங் எக்சர்ஸஸ் செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கோபப்படுகிற ஆள் இல்லை. எப்போதுமே நான் கூலாகத்தான் இருப்பேன்.. நான் கூலாக இருப்பதற்கு என்னுடைய குடும்பத்தினருடைய ஒத்துழைப்புதான் காரணம். வேலை இல்லாத நேரத்தில் மனைவியை லவ் பண்ணுவதுதான் என் வேலை. இன்னொரு காரணம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது. கேரளத்தில் கருத்த மாதத்தில் (ஆடி மாதம்) 21 நாள்கள் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை செய்வோம். இந்தச் சிகிச்சைக்கான பலனை ஓராண்டு தொடர்ந்து அனுபவிக்கலாம்.

Face reading எதாவது ஒருவகையில் இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமா?

பேஸ் ரீடிங் எந்த வகையிலும் இந்த நிகழ்ச்சிக்குத் தேவைப்படாது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் முகத்தைப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. அவர் பதிலோடுதான் என் யுத்தம். அவர்கள் ஆம், இல்லை என்று சொல்லச் சொல்ல கூட்டிக்கழித்து அவர் மனதுக்குள் இருக்கிற பிரபலத்தை நெருங்குகிற முயற்சியிலேயே இருப்பேன். முகத்தைக்கூட சரியாகப் பார்க்கமாட்டேன்.

சில பிரபலங்களைக் கண்டுபிடிக்கமுடியாதபோது உங்களுடயை மனநிலை எப்படி இருக்கும்?

99 சதவிதம் பிரபலங்களைக் கண்டுபிடித்துவிடுவேன். ஒரு சதவிதம்தான் தோல்வி வரும். அந்தத் தோல்வி என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு பிரபலத்தை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததே என்றுதான் சந்தோஷப்படுவேன். அப்படிக் கண்டுபிடிக்க முடியாத பிரபலத்தைப் பற்றி முழுவிவரத்தைச் சேகரித்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன். வேறு யாராவது அந்தப் பிரபலத்தை மனதில் வைத்துகொண்டு வரும்போது அதை நான் எளிதாக கண்டுபிடித்து விடலாமல்லவா?.
கேரள மக்களிடமும் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கீங்க.. இப்ப தமிழக மக்களிடையேயும் நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்கீங்க.. இதில் பிரபலங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களை அதிகம் சிரமப்படுத்துவது யார்?

தமிழக மக்கள் ரொம்ப அறிவாளிகள் என்றுதான் சொல்லவேண்டும். கைரளி டிவியில் 150 எபிசோட் ஆன பிறகுகூட அங்க உள்ளவங்க எங்க நிகழ்ச்சியை நம்பவில்லை. மந்திரம், தந்திரம் போட்டு சொல்றான். கம்ப்யூட்டர் சொல்லுது அப்படி இப்படின்னுயெல்லாம் சொன்னாங்க. பிறகு நாங்க மக்களை நேராக சந்தித்து இந்த நிகழ்ச்சியை நடத்திய பிறகுதான் நம்பினார்கள். அப்புறம் தொடர்ந்து கைரளி டிவியில் 5 வருஷம், 1200 எபிசோடு பண்ணினேன். கேரளத்தின் பல பிரபலங்கள் என்னுடைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அதில் கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனாரும் ஒருவர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 25 எபிசோடு வருவதற்குள்ளாகவே எங்கள் நிகழ்ச்சியை நம்பி ஆதரவு கொடுத்து வர்றாங்க. ஆனால் உண்மையாகவே எனக்கு கண்டுபிடிப்பதற்கு அதிக சிரமம் கொடுப்பது தமிழக மக்களா கேரள மக்களா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

21 கேள்விகளுக்குள் பிரபலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறீர்கள்? 21 கேள்விகளுக்குள் பெண்ணின் மனசில் உள்ளதைக் கண்டுபிடிக்க முடியுமா? குறிப்பா ஒரு பெண் காதலுக்குச் சம்மதம் சொல்கிறாளா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?

நிச்சயமா கண்டுபிடிப்பேன். இப்ப பிரபலங்களைக் கண்டுபிடிப்பதற்கு 21 கேள்விகள் கேட்பதுபோல இதற்கும் 21 கேள்விகள் போதும். பதில் ஆம், இல்லை என்றே சொன்னால் போதும். ஆனால் அந்தப் பெண் ஆம், இல்லை என்று சொல்கிறபோது உண்மையான பதிலைச் சொல்லவேண்டும். மனசில் உள்ள பிரபலங்களை இப்போது கண்டுபிடிக்கிறபோது, நடுவர்கள் இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தவறான பதில் சொல்கிறபோது நடுவர்கள் அதை தவறென குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஆனால் ஒரு பெண் பொய் சொல்வதை நடுவர்களால் கண்டுபிடிக்க முடியாதே.
உலக விஷயங்கள் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறீர்கள்? ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கக் கூடாதா?

என்னுடைய மனைவி வற்புறுத்தல் காரணமாக பிரிலிமினரி எக்ஸôம் எழுதினேன். தேர்ச்சியும் பெற்றேன். அதன்பிறகு மெயின் எக்ஸôம் எழுதவில்லை. நான் எப்போதும் என் மனதுக்குச் சரியென பட்டதை செய்கிறவன். உண்மையாக இருக்கவேண்டும்; சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று கருதுகிறவன். அரசாங்க அலுவலகத்தில் அப்படி என்னால் இருக்க முடியாது என்பதை உணர்ந்துதான் நான் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வே எழுதவில்லை. ஆனால் அதற்காக இப்போது குறை ஒன்றுமில்லை.. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இரண்டு மாத சம்பளத்தை நான் ஒரே மாதத்தில் சம்பாதித்து விடுகிறேன். ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருக்கும் புகழை விட அதிக புகழையும் இப்போது சம்பாதித்துவிட்டேன்.

ஞாபக சக்தியை மாணவர்கள் இம்ப்ரூவ் பண்ணுவதற்கு நீங்கள் தரும் அட்வைஸ் என்ன?

எந்தவொன்றை செய்கிறபோதும் இன்வால்மென்டோடு செய்யவேண்டும். சின்னக் குழந்தையா இருக்கும்போது அம்மானு கூப்பிட்டோம். 90 வயசு கிழவனா ஆகும்போதும் அம்மான்னு கூப்பிடுறோம். எப்படி? அது எமோஷனல் இன்வால்மென்ட். பேப்பர்ல நேத்து ஒரு நாட்டோட பிரதமர் பேரைப் படிக்கிறோம். ஆனால், மறுநாள் கேட்டா மறந்திடுறோம். எப்படி? இன்வால்மென்ட் இல்லாததுனாலதான். எனவே எந்தவொன்றையும் இன்வால்மென்டோட செய்தால் எதுவும் மறக்காது.

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கோமே' என்று என்றைக்காவது உங்களுக்கு ஆணவம் வந்திருக்கிறதா?
நிச்சயமா இல்லை. என்னைப்போல உலகத்துல ஒரு கோடி பேர் இருக்காங்க. எனக்கு எப்படி ஆணவம் வரும்? தன்னுடைய உயிர் போகிற தருவாயிலும் கூட நமது நாட்டுக் கொடியைக் கீழே விழாமல் தாங்கி பிடித்தபடியே இறந்தானே திருப்பூர் குமரன் அவனுக்குத்தான் இருக்கவேண்டும் கர்வம். எனக்கெல்லாம் இருக்ககூடாது. அறிவுப் புரட்சிக்காக என்னால் உயிரைக் கொடுக்கமுடியுமா? முடியாது. ஏதோ என்னால் முடிந்த அளவு அறிவுப் புரட்சிக்கு உதவிப் புரிகிறேன் அவ்வளவுதான்.

எல்லோர் மனசில் உள்ளவர் பெயரையும் சொல்கிறீர்கள்.. உலக அளவிலும், தமிழக அளவிலும் உங்கள் மனசைக் கவர்ந்தவர் யாரு?

வர்மக் கலை கற்றவர்களுக்கு எதைப் பார்த்தாலும் வர்மமாய் தெரியும். குளிக்கப் போனால் குளிக்கமுடியாது. தண்ணீர் வர்மமாய் தெரியும். சோப்பு வர்மமாய் தெரியும். சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடியாது. சாப்பாடு வர்மமாய் தெரியும். அதைப்போல எல்லாப் பிரபலங்களைப் பற்றி தெரிந்து இருப்பதால் எல்லோரும் எனக்கு வர்மமாய் தெரிகிறார்கள். அதனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தமிழகத்தில் சொல்ல வேண்டுமானால் எனக்குப் பிடித்தது தீரன் சின்னமலை. வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவர். அவரே என் மனசில் இருப்பவர்.

No comments: