Wednesday, February 9, 2011

மூங்கில் நதி



13


இரண்டு ஊர்களைப் பிரித்து ஓடிய நதியும், அதே நதியின் குறுக்கே கட்டப்பட்டு இரண்டு ஊர்களை இணைத்து ஓடிய மூங்கில் பாலமும் முன்னொரு காலத்தில் பின்வருமாறு பேசிக்கொண்டன.
மூங்கில் பாலம்: "நதியாக நானும் சுழித்தோடி இருக்கிறேன்.''
நதி: "பொய். என் மீது உள்ள பொறாமையால் அப்படிச் சொல்கிறாய்.''
மூங்கில் பாலம்: "என்னை நம்பு. ஒரு காலத்தில் எனக்குள்ளும் நதி சுழித்தோடியிருக்கிறது. பச்சை நிற நதியாய் எழுந்தெழுந்து வான் தொட்டிருக்கிறேன்.''
நதி: "பச்சை பொய்''
மூங்கில் பாலம்: "தயவு செய்து நம்பு. வெட்டுக் காலத்திற்குப் பிறகுதான் மணல் நிறத்தில் இப்படி வற்றிப் போய்க் கிடக்கிறேன்.''
நதி: "வற்றிப் போயிருக்கிறாய் என்றால் நம்புகிறேன். ஏனென்றால் நானும் வற்றிப் போவது உண்டு. ஆனால் மீண்டும் புதுவெள்ளமாய் நான் பெருக்கெடுத்து ஓடுவேன். நீயும் அதைப் போல் ஓடிக் காட்டு.''
மூங்கில் பாலம்: "என்னால் அப்படியெல்லாம் மீண்டும் ஓடிக் காட்ட முடியாது. ஒரு முறை வற்றினால் வற்றியதுதான்.'' என்றதும் "நீ பொய்யன். உன் குட்டு வெளிப்பட்டுவிட்டது பார்த்தாயா?'' என்று வளையம் வளையமாய்ச் சிரித்த நதி அன்று முதல் மூங்கில் பாலத்தை எங்குப் பார்த்தாலும் "பொய்யன், ஏமாற்றுக்காரன்'' என்று உரக்கக் கேலிப் பேசியவாறே காலம்காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூங்கில் பாலமும் அன்று முதல் அதன் மேல் படும் பாதம் ஒவ்வொன்றிடமும் "கிரீச்... கிரீச்' என்று, அதாவது "சொல்லுங்கள்.... நீங்களாவது சொல்லுங்கள்'' என்று கெஞ்சி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

No comments: