Thursday, February 17, 2011

தும்பியின் கண்கள்




20



ஒரு புல்லில். அங்கிருந்து வேலியில். அங்கிருந்து செம்பருத்திச் செடியில். அங்கிருந்து மரக்கட்டையில் எனத் தும்பி உட்கார்ந்த இடத்திலெல்லாம் மகன் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் குவித்து வாலைப் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். மகனின் இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அப்பா தும்பியின் பின்னால்
நின்று உள்ளங்கையை விசிறியைப்போல் வீசிப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். புழுவை விழுங்கும் மீன்போல் எளிதாக வித்தையைக் கற்ற மகன், அவன் பிடித்த யானைத் தும்பி, ஊசித் தும்பி, ஹெலிகாப்டர் தும்பி என எல்லாவகை தும்பிகள் வாலிலும் நூலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பறக்கவிட்டு விளையாடினான். ஒரு நாள் தும்பி ஒன்று நூலை அதிகம் இழுத்துப் பறப்பதாக உணர்ந்தபோது அதன் வாலைப் பிய்த்துப் போட்டான். வாலறுந்த தும்பி துடித்து நகர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்தபோது விளையாட்டைவிட வன்முறையில் ரசிக்கத் தக்கவை அதிகம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அன்று முதல் பிடிக்கப்பட்ட எல்லாத் தும்பிகளின் வயிறுகளும் கிழிக்கப்பட்டு குடல்கள் பிதுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. அதில் சலிப்பு தட்டியபோது தலைகள் கிள்ளப்பட்டு அது சிறுநேரம் நீர் சுவடாகத் தெரியும் வரை தரையில் உருட்டி நசுக்கப்பட்டன. அதற்கு மேல் சலிப்பு தட்டி வேறுவகையான வன்முறையில் தும்பியிடம் ஈடுபட புதிய முறை எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை. அதைப்போல அவனால் தும்பியிடம் இன்னொன்றையும் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை தலை கிள்ளும்போதும் தும்பியின் கண்களில் பயத்தைப் பார்க்க அவன் துடிப்பான். அந்தச் சிறுமகன் நேற்று மதியம் புதுவெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருந்த ஆற்றின் கரையில் இலந்தையில் செடியில் உட்கார்ந்த ஒரு தும்பியைப் பிடித்துத் தன் பேரனோடு தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தபோதும் பயத்தைப் பார்க்க முடியவில்லை. எப்போதும்போல் அன்றும் தும்பி அவன் கையைக் கடிக்காமல் விடவில்லை.

No comments: