Sunday, February 13, 2011
தலைஞாயிறு
17
பனி கொட்டிய அதிகாலை கருக்கலில் அவன் கடப்பாரையோடு வந்தான். ஓரடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் வலப்புறச் சாலையோரமாகப் பள்ளம் தோண்டிக் கொண்டே போனான். கடப்பாரையை ஒவ்வொரு முறை அவன் இறக்கியபோதும் சந்தோஷப் பூரிப்போடு மண் பிளந்துகொண்டு அவனை உற்சாகம் மூட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் கிழக்கு திக்கில் போவதை எதேச்சையாய்க்
கவனித்தேன். சிறு வட்ட நெருப்பாய்ப் புறப்பட்ட சூரியன் மேலே செல்லச் செல்ல பிரம்மாண்டக் கோளமாகி மீண்டும் தூரம் செல்லச் செல்ல சிறுவட்டமாகி கிழக்கு வானை மஞ்சள் ஒளியால் எரிக்கத் தொடங்கி மேற்குத் திக்காக நகரத் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் விடுப்புச் சொல்லிவிட்டு அவனையே பின் தொடர்ந்து சென்று கவனித்தேன். அவனின் ஒவ்வொரு நகர்தலுக்கேற்பவே சூரியனின் நகர்தலுமிருந்தது. உச்சுக்குச் சூரியன் வந்திருந்தபோது ஒரு வீட்டார் அவர்கள் வாசல் பக்கம் பள்ளம் தோண்டக் கூடாது என்று சண்டை போட்டார்கள். அவன் பதிலேதும் சொல்லாமல் கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு ஓர் ஓலைக் குடிசைக்குள் சென்றான். எங்கிருந்தோ திரண்டு வந்த மேகங்கள் அவசரஅவசரமாகச் சூரியனை மறைத்துக்கொண்டன. நீராகாரம் குடித்து முடித்து அவன் வெளியில் வரும்வரை மேகங்கள் தங்கள் உடும்புப் பிடியை விடவே இல்லை. மீண்டும் வந்து அவன் கடப்பாரையை எடுத்து குறுக்காகத் தோண்டிக் கொண்டுபோனபோது அசுர வேகத்தோடு மேகங்கள் கலைந்து போயிருந்தன. குறுக்கில் முடித்து இடப்புறச் சாலையோரமாகக் கடப்பாரையை இறக்கிக் கொண்டிருந்தபோது மேற்குத் திக்கில் சூரியன் சரிந்து நகர்ந்தது. நெடுகத் தெருவெங்கும் தோண்டி முடித்து மாலை கருக்கலில் கடப்பாரையைத் தோளில் தூக்கிக்கொண்டு போனபோது அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அதே கிழிப்பின் இடைப்பட்ட பகுதி வழியே நிலவும் சிறு வெண்ணொளிப் புள்ளியாய்ப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment