Tuesday, February 1, 2011

மூடல்



5


நெஞ்சடைத்துக்கொள்ளும் சந்தோஷ மனநிலையோடு அவன் வீட்டிற்குத் தெரியாமல் சென்றுவிட்டேன். தேநீரால் உபசரித்துவிட்டு உள்ளறைக்குச் சென்றவன், திரும்பி வருகையில் அவன் மண்டையைப் பிளந்து, மூளையைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். கால்பாகத் தேநீர் உள்ளிறங்க மறுத்துவிட்டதால் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பானையிலிருந்து சோற்றைத் துடைத்துப்போடுவதுபோல என்னிடமுள்ள சொற்கள் அனைத்தையும் அவனுக்கே துடைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுபோல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் என்னைப்
பேசவேவிடவில்லை. நெடுநேரம் மூளையாகவே பேசிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கண்களைத் தொடர முடியாததால் அவன் கையிலிருந்த மூளைக்குத் தாவினேன். மூளையின் நரம்புகள் அனைத்தும் அவனால் செப்பணிடப்பட்ட முடிவற்ற சாலையாகவும் அதில் அவனின் அசுர வாகனம் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் இரத்தம் வெள்ளமாக்கியுமே பயணித்தது. என்னால் மரண அலறல்களைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அசுர வாகனத்தை நிறுத்த எனக்கிருந்த ஒரே வழியின்படி நானும் என் மண்டையைப் பிளந்து மூளையைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு என் வாகனத்தை அசுரமாய் ஓட்டினேன். என் வாகன அசுரத்தில் மிரண்டு போனவன் அவசரமாய் அவன் மூளையை வைத்து மண்டையை மூடியபோது என்னையும் அதற்குள் வைத்து
நிரந்தரமாய் மூடினான்.

No comments: