Tuesday, November 27, 2007

கலீல் கிப்ரான் கதைகள்

(கொட்டாவியை விரட்டும்
மிட்டாய்கள்) 27.11.2007
நிழல்





புல் ஒன்று, தன்மேல் படர்ந்த நிழலைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னது - "என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அலைந்துகொண்டே இருக்கிறாய்? உன்னால் எனக்கு ரொம்பத் தொந்தரவாக இருக்கு.' நிழல், அமைதியாகப் பதில் சொன்னது : "அசைவது நான் இல்லை. கொஞ்சம் நிமிர்ந்து பார். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம் காற்றில் அசைந்தாடுவதால்தான், வேறு வழி இல்லாமல் நானும் அசைய வேண்டியிருக்கிறது.' இதைக் கேட்ட புல், சந்தேகமாக நிமிர்ந்து பார்த்து, அங்கிருந்த மரத்தைக் கண்டது. "அடடா, என்னைவிட மிகப்பெரிய புல் ஒன்று இங்கே இருக்கிறதே" என்று ஆச்சரியத்துடன் கூவியது. அதன்பின், அந்தப் புல் அதிகம் பேசாமல் அமைதியாகி விட்டது.






கைதிகள்



என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன.

ஒரு கூண்டில், அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த ஒரு சிங்கம் அடைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில், ஒரு சிறு குருவி இருந்தது.

தினந்தோறும் பொழுது விடியும்போது, இந்தக் குருவி, வலிமையான அந்தச் சிங்கத்தை கை சொடுக்கி அழைத்து, "என் சக கைதியே, குட்மார்னிங்' என்று சொல்லும்.




சாபம்





வயதான ஒரு கிழவன் கடற்கரையில் வந்து நின்று கடலைப் பார்த்துச் சொன்னான். முப்பது ஆண்டுகளுக்கு முன், என்னுடைய அன்பு மகள் ஒரு மாலுமியுடன் ஓடிவிட்டாள். இந்த உலகத்தில் நான் அதிகம் நேசித்தது என் மகளைத்தான். அவள் போய்விட்ட சோகத்தில் நான் தவித்துப் புலம்பினேன். அந்த வேதனை தாளாமல் அவர்கள் இருவருக்கும் கடுமையான சாபங்கள் கொடுத்தேன்.

அடுத்த சில மாதங்களுக்குள், என் மகளை அழைத்துச் சென்ற அந்த மாலுமியின் கப்பல் ஒரு பயங்கர விபத்தில் சிக்கியது. மூழ்கிய அந்தக் கப்பலில் ஒருவர்கூட உயிர் தப்பவில்லை. அதோடு என் மகளையும் இழந்துவிட்டேன் நான். என் சாபம்தான் அவர்களை அழித்துவிட்டது. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஒற்றைச் சாபத்தால் ஒரு பெண்ணையும் இளைஞனையும் கொலை செய்த பாவி நான்.

கடவுள் என்னை மன்னிப்பாரா?

இப்படிச் சொல்லிப் புலம்பிய அந்த மனிதனின் குரலில் சோகத்தோடு ஒரு மெலிதான பெருமையும் கலந்திருந்தது.

தன் சாபத்தின் வலிமையை எண்ணி அவன் இன்னும் கர்வப்படுவதுபோல்.



தமிழில்: என்.சொக்கன்

No comments: