Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள்! (3)


தண்டவாளங்களின் தகராறு!


மிகையில்லா ஒன்று: "அனுபவம் மிஞ்சியவர்கள் -பாம்புகள்'. "அக்னிக்குஞ்சுகள் -கீரிப்பிள்ளைகள்'.காட்டில் கிடக்கும் பாம்புகளும் கீரிப்பிள்ளைகளும் எப்போதாவது நேராகச் சந்தித்துக் கொள்ளும்போதுதான் மோதிக் கொள்ளும். ஆனால் நாட்டில் வாழும் அனுபவம் மிஞ்சியவர்களும் அக்னிக்குஞ்சுகளும் ஒரே இடத்திலிருந்துகொண்டு எப்போதும் மோதிக்கொள்வர்.இக்காட்சி அலுவலகங்களில் மட்டும் காணக்கூடிய ஒன்றல்ல; கலை, இலக்கியம், அரசியல் என எல்லாவற்றிலும் காணலாம். இம்மோதலுக்கு முதற்சுழி; அனுபவம் மிஞ்சியவர்கள் கொண்டிருக்கும் ஆணவம். அனுபவாதிகள் மீது அக்னிக்குஞ்சுகள் கொண்டிருக்கும் அலட்சியம்.தினவெடுத்த குதிரை ஒன்று. திடீரென யாருக்கும் அடங்க மறுத்தது. பல நாட்டு வீரர்களும் வந்து அடக்க முயன்றார்கள். முடியவில்லை. "நான் அடக்குகிறேன்' எனச் சிறுவன் ஒருவன் முன்வந்தான். கூடி நின்ற வீரர்கள் சிறுவனைக் கேலிச் செய்தார்கள்."நாங்களெல்லாம் எத்தனை அடங்காக் குதிரைகளை அடக்கியிருப்போம். குதிரையின் கால் உயரம்கூட இல்லை. இவரு வந்துட்டாரு அடக்கறதுக்கு...'' என்ற அவர்களின் பேச்சுக்களையெல்லாம் செவிமடுக்காமல் சென்று, குதிரையை அடக்கினான் சிறுவன். உடனே, கூடி நின்றவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "மாயக்காரனகாவோ... மந்திரக்காரனாகவோ இருப்பான்'' என்றனர். அப்போது சிறுவன் மிகச் சாதாரணமாகச் சொன்னான்: ""மந்திரமும் இல்லை. மாயமுமில்லை'. குதிரை அதனுடைய நிழலையே பார்த்து மிரண்டு அடங்காமலிருந்தது. நிழல்படாதவாறு வேறு திசையில் நிறுத்தினேன். குதிரை அடங்கியது'' என்றான். அப்படிச் சொன்ன அந்தச் சிறுவன்தான் மாவீரன் நெப்போலியன். அப்படியானால், அக்னிக்குஞ்சுகள் உயர்வானவர்களா?மண்பானைகள் செய்துகொண்டிருந்த குயவனிடம் இளைஞன் ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். இருபது நாள்களுக்கு மேலாகியும், குயவன் மண் குழைக்கிற வேலையைத் தவிர வேறு வேலையே இளைஞனுக்குத் தரவில்லை. பொறுத்துபொறுத்து பார்த்து வெறுத்துப் போன இளைஞன், "" எத்தனை நாளைக்குத்தான் இந்த மண் குழைக்கிற வேலையே செய்வது? நான் பானை செய்கிறேன்'' என்றான். "உனக்குக் கைப்பக்குவம் வரவில்லை. கொஞ்ச காலம் காத்திரு.'' என்றான் குயவன். இளைஞன் கேட்கவில்லை. விடாப்பிடியாக, "இதெல்லாம் பெரிய வேலையா?'' என்று பானையைச் செய்யத் தொடங்கினான். ஒன்றுக்குப் பல முறை முயற்சித்தும் பானை வரவில்லை. குயவனின் பரிகாசம்தான் வந்தது. இந்நிகழ்வில் அனுபவம் மிஞ்சியவர்களிடம் அக்னிக்குஞ்சுகள் புறமுதுகைக் காட்டி பதுங்கிறார்கள்.இந்த இரு நிகழ்வுகளில் மட்டுமல்ல; எந்த நிகழ்வுகளை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது ஒன்றுதான். இது தனிப்பட்ட மனிதர்களுக்கு வேண்டுமானால், வெற்றியாக இருக்கலாம். ஒரு நிறுவனத்துக்கோ, தலைமைக்கோ இப்படிப் பிரிந்து கிடந்து எவ்வித வெற்றியையும் பெற்று தந்துவிட முடியாது. அது தனிப்பட்ட வெற்றி என்பதும் முழு வெற்றியாக அமையாகாது. வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு மாடுகளில் ஒன்று அனுபவம் வாய்ந்ததாக இருந்து, மற்றொன்று புதியதாக இருந்து இரண்டும் வெவ்வெறு திசையில் இழுத்துச் சென்றால் எப்படிக் குறிப்பிட்ட ஊரைப் போய்ச் சேரமுடியும்?ஓர் இலக்கை அடைய அனுபவம் மிஞ்சியவர்களின் பங்களிப்பு பெருமளவில் இருக்கவேண்டும் என்பது சரியானதுதான். அதேசமயம் அந்த அனுபவாதிகள் அக்னிக்குஞ்சுகளை அரவணைத்து செல்பவர்களாவும் இருப்பது நலம்.இன்றைக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவைப்படுகிறது முத்தின கத்திரிக்காய் வந்தாலும் அந்தக் கத்திரிக்காயை விற்கிறபோது புதுமையைப் புகுத்தி விற்றால்தான் நல்ல விலைபோகும். இதற்கு அக்கினிக்குஞ்சுகளின் கரங்கள் இணைவதும் அவசியம். மேலும் அனுபவம் என்பதற்கு குறிப்பிட்ட எல்லை என்று ஒன்று இல்லை. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு புதிய அனுபவம். அந்த அனுபவத்தோடு புதுமைகளையும் சேர்க்கிறபோது கிடைக்கிற வெற்றியின் மதிப்பே தனிதான். வயதான காலத்தில் நாம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பது இல்லையா? அந்த ஊன்றுகோல்கள்தான் இளைஞர்கள் என்பதை அனுபவம் மிஞ்சியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.பிறந்த உடனேயே எந்தக் குழந்தையும் நடப்பதில்லை. தாயின் கைகளைப் பற்றியோ நடைவண்டியின் உதவியுடன்தான் நடக்கப் பழகிறது. அந்தக் கைகள்தான் நடைவண்டிதான் அனுபவவாதிகள் என்பதை அக்னிக்குஞ்சுகள் உணரவேண்டும். எனவே அனுபவாதிகளும் அக்னிக்குஞ்சுகளும் நிர்வாகம் , தலைமை என்கிற புகைவண்டி பயணிக்க தண்டவாளமாக இருக்க வேண்டுமே ஒழிய தண்டவாளங்களுக்குள் தகராறு கூடாது.

No comments: