Wednesday, November 28, 2007

பந்திக்கு இந்தி... நிந்திக்கத் தமிழ்?




தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)

செய்தி:
வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டிருப்பது குறித்து நேற்று பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்று அலுவலக மொழிகளுக்கான பாராளுமன்ற சிபாரிசு குழு பரிந்துரை செய்திருப்பதாகக் கூறி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் மையப்பகுதியை நோக்கி விரைந்தனர். அவர்கள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி முன்பாகச் சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினார்கள். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயன்றார். அது பலனளிக்கவில்லை. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இருபது நிமிடம் சபையை ஒத்தி வைத்தார்.

கேள்வி:
இந்திக்குப் பந்தி வைத்துக்கொண்டு மற்ற மொழிகளை நிந்திப்பதை ஆண்டாண்டு காலமாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அண்ணா போட்ட வித்தால் இந்தி எதிர்ப்பை நமது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகவே வைத்திருக்கிறோம். இப்போது நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம் என்று குரலை மாற்றிப் பேச முயற்சித்தாலும், உண்மை ரூபம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஒருவகையில் பார்க்கிறபோது, மொழிகள் எதையும் வெறுக்கக்கூடிய அவசியம் இல்லை. மொழிவளம் மிக்கக் மொழிகளா? என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. மொழிவளமே இல்லாத மொழியாக இருந்தால்கூட ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கு, ஒரு குறிப்பிட்டச் சமுதாயத்தினருக்கு உயிர் கொடுக்கிற மொழியாக: ஒருவரோடு ஒருவரை இணைப்பதாக மொழி இருக்கிறது. இதனால் எல்லா மொழிகளையும் ஆராதிக்க வேண்டியது அவசியம். ஒப்பற்ற ஒன்று அழிகிற நிலையில் இருக்கிறதென்றால் அதைக் காப்பாற்ற எப்படி முயலுவோமோ? அப்படி அழிகின்ற அந்த மொழியைக் காக்க முனைவது தவறொன்றும் இல்லை. நாலைந்து பேர் மட்டுமே பேசி வருகிற மொழிகள் எல்லாம் இருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது தமிழ்மொழி கூட அழிந்து வருகிற பட்டியலில்தான் இருக்கிறது. அழுகிற பட்டியலில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது அவ்வளவுதான். இதனைக் காப்பாற்ற வேண்டியது தமிழராகிய நம் எல்லோரின் கடமை. ஆனால் தமிழர்கள் சிலரே இதற்கு எதிர்ப்பாக இருப்பதுதான் வேடிக்கை. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாட சட்டரீதியாக அனுமதி பெற முயற்சித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நம் தமிழ் பங்காளிகள் எல்லாம் இருக்கிறார்கள். தமிழை வைத்துக்கொண்டு எல்லா நாட்டினரோடு தொடர்பு கொள்ள முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். கட்டுமரத்தில் சென்றானா? அல்லது வெறும் கட்டையைக் கொண்டு சென்றானா? என்றெல்லாம் தெரியவில்லை. பழங்காலத்திலேயே தமிழன் கடல் கடந்து சென்று வணிகம் செய்திருக்கிறான். அப்போது மற்ற மொழிகளை அறிந்துகொண்டுதான் பயணித்திருப்பானா? வாணிபம் செய்திருப்பானா? ஒருவேளையில் இது அந்தக் காலத்தில் பொருந்திருக்கலாம். இப்போது உலகம் முழுவதுமே ஆங்கிலமாகப் போய்விட்டது என்கிறீர்களா? மறுக்கவில்லை. தொடர்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தமிழை மறந்துவிடாதீர்கள். மற்ற மொழிக்காரன் தூற்றுவது இருக்கட்டும். தமிழர்களாகிய நீங்கள் தூற்றுவதை முதலில் நிறுத்துங்கள். உலகிலேயே அதிகமானோர் சாப்பிடுவது மனிதக்குரங்காக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நீங்களும் அதை விரும்பிச் சாப்பிடுவீர்களா என்ன? அடுத்தவருக்காக நீங்கள் எப்போதும் சுவாசிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் மாற்றிக்கொண்டால், இந்திக்குப் பந்தி வைக்கிற வகையில் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளில் இந்தியில் தீர்ப்பு வழங்க சிபாரிசு செய்கிறவர்கள், தமிழில் வாதாட அனுமதி வழங்குவதற்கு யோசிக்கத் தயங்கமாட்டார்கள். தயாரா தமிழர்களே?

No comments: