Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள் (4)


சுவை மாறும் நகைச்சுவை

விமானம் ஒன்று பறக்கையில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த பயணிகள் கருகினர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அடர் காட்டு மரக்கிளை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்தான். கீழே விழுந்தால் சிறு எலும்பும் தேறாது. அப்போது அவனுக்கு இறைவனை வேண்டினால் என்ன? என்று ஒரு யோசனை. வேண்டினான். இறைவனும் தோன்றினார். உடனே அதிர்ச்சியுடன் "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்'' என்று கெஞ்சினான். இறைவனும் ""சரி... காப்பாற்றுகிறேன். கிளையிலிருந்து முதலில் கையை விடு'' என்றார். அதற்கு அவன் சொன்னான். ""கை விடுவதற்கு நான் என்ன கிறுக்கனா?'' இந்தக் கற்பனை வடிவிலான நகைச்சுவையைப் படிக்கிறபோது உள்ளத்தில் கல்மிஷம் இல்லாத உவகை.தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாள் முழுவதையும் புதிய கண்டுபிடிப்புகளுக்கே செலவிட்டார். மின்சார விளக்கைக் கண்டுபிடித்தவரும் அவரே. இதைக் கண்டுபிடிக்க, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறை எடிசன் தோல்வியுற வேண்டியிருந்தது. நள்ளிரவு ஒன்றில் அந்த வெற்றி கிடைத்தபோது, எடிசனுக்குச் சந்தோஷம் விண்ணை முட்டியது. யாரிடமாவது சொல்ல வேண்டுமெனத் துடித்தார். உடனே தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவியை எழுப்பிச் சொன்னார். அதற்கு அவர் மனைவி எரிச்சலுடன் "முதல்ல விளக்கை அணைச்சிட்டுப் படுங்க. காலையில் பார்க்கலாம்'' என்றாராம். இது வருத்தத்தை வரவழைக்கக் கூடிய நகைச்சுவை. ஆனாலும், எத்தனை இடைஞ்சல்கள் இடர்ப்பாடுகள் தோல்விகள் வந்தாலும் தங்கள் இலட்சியப் பயணத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டும். இதைப்போல சான்றோர்கள் வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவை கலந்த நாகரிகமான உரையாடல்களைக் கேட்கிறபோது, படிக்கிறபோது உடலில் புது ரத்தம் பாயும். இன்று, இந்தப் பயன்பாட்டிலான நகைச்சுவை புழக்கத்திற்குப் பஞ்சம். புகைமூட்டத்தைத் தவிர்க்க இயலாத பட்டாம்பூச்சி போலவே, நகைச்சுவையும் தத்தளிக்கிறது.ஓரிடத்தில் நாலைந்து நண்பர்கள் குழுமி இருக்கிறார்கள் என்றால் வேட்டுச் சத்தத்தை மிஞ்சுகிற சிரிப்புச் சத்தம் கேட்கும். ஏதோ நோய் தீர்க்கும் மருந்தாக நகைச்சுவை ஏதேனும் சொல்லியருப்பார்கள் என்று காது கொடுத்து கேட்டீர்கள் என்றால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சம். பெண்ணின் அங்க அவயவங்கள் பற்றியோ, தகாத உறவுமுறைகள் பற்றியோ, ஆபாசம் கலந்த அருவருக்கத்தக்க வார்த்தைகளால் நகைச்சுவை சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த "நகைச்சுவையால் எந்த நோய் தீரும்?கலந்துரையாடல்களுக்கு இடையிடையே அவ்வப்போது பழைய சம்பவத்திற்கேற்ற படியோ அல்லது புதிய நிகழ்வுகளை ஒப்பிட்டோ நகைச்சுவை சொல்வதை "டைம்லி விட்ஸ்' என்று சொல்வார்கள். இன்றைய பேச்சுகளிடையே நிகழ்கிற நகைச்சுவைகளோ ஆபாசக் குப்பைக் குவியல்கள்!குறுந்தகவல் சேவை நகைச்சுவை இப்போது பிரபலம். நாளொன்றுக்கு ஒரு நபருக்குப் பத்து, பதினைந்து நகைச்சுகளாவது குறுந்தகவல் சேவை மூலமாக வருகின்றன. அதைப்போல மற்றவர்களுக்கு அனுப்பியும் வைக்கப்படுகின்றன. இந்த நகைச்சுவைகளைப் படித்து பார்த்தீர்களேயானால் 99 சதவீதம் ஆபாச நகைச்சுவைகளே. நகைச்சுவை அனுப்புகிறவர்களில் ஆண், பெண் பேதமில்லை. எல்லாமே கீழ்த்தரம்.இந்தச் சாராம்சடத்துடனே இணையத்தள நகைச்சுவைகளும்! இது ஒருபுறமிருக்க பிளேடு, அறுவை, ரம்பம் போன்ற பெயர்களில் நகைச்சுவை சொல்கிறார்கள். இவற்றுக்குத் தமிழில் முன்பெல்லாம் "ஏ'கடியம் என்று பெயர்.வாய்விட்டுச் சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று சொன்னால், "வாய் விட்..டு எப்பிடிச் சிரிப்பீங்க?' என்பார் ஒருவர். அதற்கு மற்றொருவர் "வாய் "விட் 'டுத்தான் என்பார்."பஸ்ஸ பின்னால தள்ளுனா என்னாகும்?' "பின்னு வளைஞ்சிடும்". இந்த வகையான நகைச்சுவைகள் புதிர் வடிவில் இருப்பதால்கூட, இவற்றை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் சுவைமாறி ஆபாசம் கலந்த நகைச்சுவைகளால் எதிர்வினைப் பயனே விளையும்.ஒரு நோய்க்கு மருந்து சாப்பிடுகிறபோது, அந்த மருந்தாலும் எதிர்விளைவு ஏற்படுவதுபோல வக்கிரப்புத்தியே வளரும். அநாகரீகமாக இல்லாமல் தூய்மையான நகைச்சுவையே இயற்கை மருந்து.

No comments: